வந்த வழி-

author
1
0 minutes, 32 seconds Read
This entry is part 20 of 26 in the series 9 டிசம்பர் 2012

-முடவன் குட்டி

” வேய்..  கலீல் …வேய்..” –
தெருவில் நின்று கத்தினார், காட்டுவா சாயிபு.
தறி நெய்வதை நிறுத்தி, காக்குழியில் நின்றவாறே, ஜன்னல் வழியே
அவரைப் பார்த்த கலீல் ” வேய் காட்டுவா  நான் என்ன செவுட்டுப் பெயலா..?
ஏன் இப்படி சத்தம் போடுறீரு..? என்றார்.
காட்டுவா மேல் மூச்சு வாங்க, மேலும் தொடர்ந்தார்-சத்தமாகவே.:
“பெரிய தெரு சேயன் வூட்ல, ரஜப் பதினாலுல கல்யாணம்.. ஆறு மாசத்துக்கு
பெறவு இப்பதான் கல்யாணம்  வருது. பெரிய தெருக்காரங்க மாப்ள ஊர்வலத்துக்கு
பாட்டுப் பாட நம்ம சங்கத்தைத் தான் வழக்கமா சொல்வாங்க. நாம அறுதப் பழசா,
பாடுன பாட்டையே திருப்பித் திருப்பி பாடுறமாம். இப்ப ரண்டு மாசத்துக்கு
முன்ன ரிலீசான சிவாஜி படப் பாட்டுக்கு மெட்டுக் கெட்டி கல்யாண ஊர்வலத்துல
பாட, கமாலியா சங்கத்துக்காரங்க   ரெடியா இருக்காங்களாம்.. புதுசா ஒரு
பாட்டுக்கு மெட்டுக் கெட்டி நாம பாடுறதா இருந்தா,  நம்ம சங்கத்தைச்
சொல்வாங்களாம். இல்லைண்ணா கமாலியா சங்கத்துக்கு கை மடக்கு வச்சு பாட்டுப்
பாடச்சொல்லப் போறாங்களாம்…’
அப்போது, வெளியே எங்கோ போய்விட்டு வீட்டுக்குள் நுழைந்தாள்
கலீலின் மனைவி, ஆமினா. வாசலில் நின்ற  காட்டுவாவைப்  பார்த்தாளோ இல்லியோ-
பொங்கி எழுந்து விட்டாள். “ வேய்  தீக்கொளுத்தி ..வந்துட்டியா.. பாட்டு
எழுது.. எழுது-ண்ணு. அந்த மனுஷன் தறி நெய்றத வுட்டுட்டு பீடிச் சனியன
வாயில வச்சிடுவான். ரோசிக்கிறாராம். அவருக்குப் பழய சிட்டையை தேடிக்
கொடுக்கணும். பென்சிலை  எடுத்துக் கொடுக்கணும்.  பீடிய கொளுத்திக்
கொடுக்கணும். தறி ஒரு சுண்டு சுண்டுவார். சட் டுன்ணு
நிப்பாட்டி..சிட்டைக்குள்ள ஒரு மணித்தேரம் கவுந்துடுவார்.
எழுவுராறாம்…. இப்பிடி இருந்தா கந்தூரிக்குள்ள பாவு அடசுறது
(முடிக்கிறது) எப்படி..? தரவன் –ட்ட ரூவா வாங்கி சீவனம் கழிக்கிறது
எப்படி..?”
மூச்சு வாங்க பேசிக்கொண்டேயிருந்த மனைவியை முறைத்த கலீல். ’ஏய்
செத்த சவம்.. புள்ள பள்ளிக்கூடத்திலிருந்து வந்திருக்கு பாரு…  உள்ள
போயி அவளுக்கு சாப்பாடு குடு“ –என்றார். ஆமினா முனகியவாறு உள்ளே போனாள்.
“ இப்படி திடீர்-னு வந்து புதுசா பாட்டு வேணும்-னா எப்பிடி..?
கல்யாணத்துக்கு ரண்டு வாரம்  கூட இல்லியே..? இனிமே பாட்டு எழுதி..
ப்ராக்டீஸ் பண்ணி.. அதுக்கெல்லாம் தேரம் இருக்கா வேய்..?
காட்டுவா தணிந்த குரலில் மெதுவாகச் சொன்னார். ’வேய் கலீல் .புதுப்
படம் ஒண்ணு தென்காசியில ஓடுது.. அந்தப் படத்தோட  பாட்டுப் புஸ்தகத்த
இப்ப சைக்கிள்-ல போயி வாங்கிட்டு வந்து தர்றேன். இண்ணிக்கு புதன் கெழமெ.
உமக்கு  நாலு நாளு டைம். எழுதிக் குடுத்திட்டீர்னா ஞாயித்துக்க்கெழமெ
ராத்திரியே ப்ராக்டீஸ் ஆரம்பிச்சிடலாம்….”
கலீலுக்குக் கோபம் பொத்துக்கொண்டு வந்தது. “வேய் ..ஒரு நாள்-ல எழுது
..ரெண்டு நாள்-ல எழுது-ன்னு, கழுத்த நெரிச்சா  எப்பிடி வேய்..?  எழுத்து
என்ன.. சட.. சட-ண்ணு வேகமா வரவா  செய்யுது..?  மனசுக்குள்ள தான்
எல்லாமும், ரொம்பத் தெளிவா தெரியுது. அத  தொரத்திப் புடிச்சு  எழுத்துல
போடும்போது, தெளிவாத் தெரிஞ்ச எதுவும் அப்புடியே வர மாட்டேங்குது.. ஒண்ணு
கோவிச்சுக்கிட்டு ஓடுது. இன்னொண்ணு கூப்பிடாமலே வருது. வர்றது
இன்னொண்ணயும்  கூடச் சேத்துக்கிட்டு வருது.    உயிரு போவுது….  இந்த
எளவுல, மெட்டுக்கு ஏத்தபடி எழுதணும். பறக்கிற பஞ்சை, தலகாணி உறைக்குள்ள
அமுக்கி, வடிவா சைசா ….’
”வேய் .. கலீல் என்னவெல்லாமோ சொல்றீரு.. ஒண்ணும் புரியல்ல. புது
பாட்ல மெட்டு அமச்சு இந்தக் கல்யாணத்ல பாடுனாத்தான், இனிமே நம்ம சங்கத்த
மதிச்சு  பாட்டுக்கு கை மடக்கு வெப்பான். இல்லைண்ணா இந்த ஊர்ல ஒரு பேலும்
நம்ம சங்கத்த சீந்த  மாட்டான்……..” –என்றார் காட்டுவா.
அழுது கொண்டிருந்த குழந்தையை தர தர –ன்னு இழுத்தவாறு அப்போது
சமையல் கட்டிலிருந்து அங்கே வந்தாள் ஆமினா.  ‘புள்ளயா இது..?  பேய்..யீ.
சோளக்காடி இறங்காதாம்.. சுடு சோறு தான் வேணுமாம்..”.வாசலில் காட்டுவா
இன்னமும் நின்று கொண்டிருப்பதை  பார்த்ததும், பளார்-னு  குழந்தையின்
முதுகில் கூடுதல் வேகத்துடன், ஒரு சாத்து சாத்தினாள்.
பெரிதாக ஆரம்பித்த குழந்தையின் அழுகை டக் கென நின்றது. அம்மாவின்
பிடியை வெடுக் கென உதறி, குடு குடு வென ஓடி, காக்குழியில் இருந்த
வாப்பாவின் பின்னங்கழுத்தை வலது கையால் வளைத்துப் பிடித்து- குனிந்து ஒரு
குட்டித் தாவு தாவி, ஜன்னலோரம் இருந்த பென்சிலை கபாலென எடுத்து,
“ நீந் தான் பென்சிலைக் களவாண்டு, இங்கின ஒளிச்சு வச்சிருக்கியா..? “ என்றாள்.
குழந்தையை அருகே இழுத்து அணைத்தவாறு “வாப்பா பாட்டு எழுதணும்-ல..
அதுக்குத்தான் எடுத்தேன். திருப்பிக் குடுத்தற்ரேன்..”
’சத்தியமா குடுப்பியா..?- குழந்தை.
’சத்தியமா..’ .
’ஆண்டவன் குருவான் ..?’ குழந்தையின் வலது கை நீண்டு  உள்ளங்கை விரிந்தது.
அடிப்பது போல கையை ஓங்கி, குழந்தையின் விரிந்த உள்ளங் கையில் தனது
விரலொன்றை வைத்து வருடினார்.- கலீல்.
’ உனக்குத்தான்  எழுவத் தெரியாதே..கோலா மாலா-ன்னு கிறுக்குவியே.. எங்க
சார்வா, உன் எழுத்தெ பாத்தா முட்ட தான் போடுவாறு..’
– இடமும் வலமும் தலை ஆட, ஏச்சங் காட்டிற்று குழந்தை. ஹோ வெனச்
சிரித்ததார் கலீல். ’நீ தான் எனக்கு எழுவச் சொல்லித் தரணும்.. ‘-
குழந்தையை இரு கைகளிலும் வாரி எடுத்துக்கொண்டார். ஆமினாவுக்கு அடிவயிறு
பற்றி எரிந்தது. ‘சோறு தான் வேணும்-னு, சாப்பிடாம அடம் புடிக்கிற
வெறவாக்கெட்ட மூதிய, நீ என்ன வேய் கொஞ்சிக் கொலாவுற ?.. இப்பிடி செல்லங்
குடுத்து குடுத்துத் தான் அந்தப் புள்ள அவுத்தமாப் போச்சு..” –
சத்தம்போட்டவாறு சமையல் கட்டை நோக்கி  நடந்த ஆமினா பாதி வழியில் திரும்பி
வந்து, வாசலில் நின்ற காட்டுவாவை சபித்தாள்- ‘வேய் தீக்கொளுத்தி .. நீ
நாசமாத் தான் போவ. கந்தூரிக்குள்ள  தறியில கெடக்கிற பாவை  அடசினாத்தான்
, (தறி நெய்து முடித்தால்   தான்) அரிசிக்கார  செட்டியாரம்மாவுக்குத்
தரவேண்டிய பாக்கியில கொஞ்சமாவது கழியும். இப்ப வந்து  -பாட்டு எழுது-
எழுது-ண்ணு –  அதுலயும் மண்ணள்ளி போட்டுட்டீரு…பானையில ஒரு பொட்டு
அரிசி இல்ல. சோறு.. தான் வேணும்-னு அடம்புடிச்சு, ஒண்ணுந்திங்காம, பச்ச
மண்ணு பள்ளிகூடம் போவுது..’- ஆமினாவின் குரல் கம்மிற்று..
வாசலில் நின்ற காட்டுவா சமையல் கட்டை நோக்கி மெதுவாக நடந்தார்.
குமுறி அழுதுகொண்டிருந்த ஆமினாவைப் பார்த்து, ‘சாயந்திரம் மஸ்தான் பெய
கிட்ட , ஒரு பக்கா அரிசி கொடுத்து அனுப்புறேன்….கலீல் மச்சானுக்குத்
தெரிய வேண்டாம்..” என்றவாறு வெளியே வந்தார். காக்குளியில் இருந்த
கலீலிடம்
“ .உம்மால புதுசா ஒன்ணும் எழுத முடியாதாம்.. சரக்கு தீந்து போச்சாம்..
கொள்கையில்லாப் பச்சோந்திங்க கதெயெல்லாம் இதுதானாம்… இப்படி கமாலியா
சங்கத்துக்கு பாட்டு எழுதுற உதுமான் தான் சொல்றான்” –என்றார். சென்றும்
விட்டார்.
ஆனால் அவர் சொல்லிய சொற்கள் தலைக்குள் பற்றி எரிய,  துடித்துப்
போனார் கலீல். சமுதாயக் கட்சியிலிருந்து விலகி இன்னொரு கட்சியில, கலீல்
சேர்ந்ததைத் தான் அந்த உதுமான் பய, குத்திக்காட்டுறான். நாய்க்குப்
பொறந்த பய.  எனக்கா சரக்கு தீந்து போச்சு..? பாக்கிறம்-ல ஒரு கை..”-
கருவினார் கலீல்..
..”ச்சே .. நான் ஏன் இப்பிடிக் கெடெந்து கொதிச்சுக் குமுறணும்..?
அந்த உதுமான் பய சொன்னத இந்தக் காட்டுவா ஏன் எங்கிட்ட சொல்லணும்..?
காட்டுவா மேல சடார்-னு பொங்கிய கோபம்  உடனே அணைந்தும் விட்டது. ”காட்டுவா
சாயிபு.. எப்பேர்ப்பட்ட மனுஷன்…? பாவம். புள்ள குட்டி தான் இல்ல.
அட்டக்குளத்துல அஞ்சு கோட்ட வெதப்பாடு,  தோப்பு தொரவு வீடு-ன்னு இருக்கிற
ஒரு குபேரன், பாட்டு எழுதுண்ணு எங்கிட்ட ஒரு பிச்சைக்காரனப் போல ஏன்
கெஞ்சணும்..? கேட்டா, யாராவது ஒருத்தர் பொறுப்பேத்துச் செஞ்சாத்தான வேய்
பொதுக்காரியம் நடக்கும்-னு சாதாரணமாச் சொல்வார்.
அரை மணி நேரத்தில் கையில் பாட்டுப் புத்தகத்தோட வந்த காட்டுவா ’
நான் போயி மத்தப் பேரு கிட்ட விவரத்தைச் சொல்லியர்றேன். நீரு எழுதி
முடிச்சிடும். அப்புறம் இன்னொண்ணு. பாட்டுப் பாடுறதுக்கு மொத்தம் மூணு
சங்கத்த  சொல்லியிருக்காராம் மாப்பிள்ளை. மூணு சங்கத்ல நம்ம சங்கமும்
கமாலியா சங்கமும் தான் மெயினா பாடப்போறோம். இன்னொரு சங்கம் சும்மா
பேருக்கு’-  சொல்லிச் சென்று விட்டார். பாட்டுப் புத்தகத்தைத் திருப்பிய
கலீல், காக்குளியில் இருந்தவாறே சத்தம் போட்டார் ‘ ஏளா ஆமினா.. இந்தப்
பீடியெப் பத்த வச்சுக் குடு.. மாடாக்குளியில பழைய சிட்டை கெடக்கும்.
எடு..”
*      *        *       *
’கமாலியா சங்கத்துக்காரங்க எந்தப் பாட்டுக்கு மெட்டுக் கெட்டி
பாடப் போறாங்கன்னு நான் எப்படியாச்சும் கண்டு பிடிச்சுச் சொல்லியர்றேன்
மாமா…… உங்க கூடச்சேர்ந்து  பாட்டுப் பாட என்னையும்
சேர்த்துக்குங்க-ன்னு காலுல விழாத குறையா கெஞ்சிக்கேட்டுக்கிட்டே
இருக்கான் மஜீத். காட்டுவாவும் ’பாக்கலாம்-ல. முதல்ல நீ கண்டுபிடிச்சுக்
குடு’ என்றார். ’நாளைக்கே போறேன்’- என்றான் மஜீத்.
’ஏல அது அவ்வளவு லேசு இல்ல.  மாப்பிள்ளை ஊர்வலத்ல தான் என்ன பாட்டு-ன்னு
வெளியில தெரியணும். அப்பதான் அதுக்கு மெளசு. அதனால  எல்லாத்தையும்
ரகஸ்யமா வச்சுக்குவாங்க. அதுவும் கமாலியா சங்கத்துக்காரங்க கள்ளப் பயலுவ.
ராத்திரி பத்து மணிக்கு மேல, சங்கத்து கதவு ஜன்னலையெல்லாம் சிக்குப்
புக்குன்னு பூட்டிட்டு, பின்னால, பெறத்தோடத்தில   இருக்கிற கடைசி ரூம்ல
தான் ப்ராக்டீஸ் பண்ணுவாங்க. நீ போறதுண்ணா, தோடத்து வழியா பின்னால போயி,
மதில் மேல ஏறி உள்ள குதிக்கணும். சத்தம் வராம மெதுவா நடந்தா,
பாட்டுச்சத்தம் கேக்கும். ரூமுக்குள்ள எட்டிப்பாத்தியோ தொலஞ்ச. படியில
நிண்ணு, என்ன பாட்டுன்னு கவனமா கேளு. தெரிஞ்சதும் விருட்-டுன்னு வெளிய
வந்திரு.  அவங்களுக்குத் தெரிஞ்சுதுண்ணா தோல உரிச்சுப்போடுவாங்க.
ஜாக்கிரதை”. அவனை எச்சரித்தார் காட்டுவா.
என்ன பாட்டு-ன்னு துப்பு துலக்கிய செய்தியைக் காட்டுவாவிடம்
சொன்னான் மஜீத்.. அதிர்ந்து  போனார் காட்டுவா.
ஏல.. நீ சொல்றது  நெசமா..? நாம பாடுற பாட்டையா அவங்களும்
பாடுறாங்க..? சிவாஜி பாட்டு –அது- இது-ன்னு கேள்விப்பட்டதெல்லாம்
பொய்யா..? இனிமே புதுசா இன்னொரு பாட்டுக்கு மெட்டு எழுதணுமே.. லேட்
ஆகுமே…..!”

பதட்டத்துடன் கலீலிடம் ஓடினார். ஒண்ணுமே பேசாமல் காட்டுவாவின்
முகத்தையே சிறிது நேரம் பார்த்த  கலீல், அமைதியாகச் சொன்னார்: “ வேய்
காட்டுவா சாயிபு, .. போயி ஆக வேண்டியதெ பாரும். வேற பாட்டுக்கு மெட்டு
எழுதியர்லாம்”
***           ****           ****

எழுதி முடிச்சு, ப்ராக்டீஸ் ஆரம்பிக்க மூணு நாள் பிந்திவிட்டது.
வழக்கமாகப் பாடும் 20 பேரில் ஹமீது மட்டும் வரவில்லை. மத்த எல்லாரையும்
ராத்திரி ஒன்பதரை மணிக்கே கூட்டி வந்து விட்டார் காட்டுவா. ஹமீது தறியில
கெடக்கிறான்.  கந்தூரிக்குள் பாவு அடசணுமாம். அதுவும் நல்லதாப் போச்சு.
இந்த மஜீத் பெயலச் சேத்துகிடலாம். ”ஏல மஜீத் என்ன பாட்டு-ன்னு வெளியில
ஒருத்தருக்கும் தெரியப்படாது..ஞாபகம் வெச்சுக்கோ. நீ புதுசு. வாய்க்குள்ள
பாடுனாப் போதும். எல்லார் மாதிரி சத்தமா பாட வேண்டாம். ராகம்
தப்பிடும்….ஜாக்கிரதை”- அவனை ஒருவர் மாத்தி ஒருவர் எச்சரித்தனர். முதல்
நாள் ப்ராடீஸ் முடிய இரவு ஒண்ணரை மணி ஆகிவிட்டது.

கமாலியா சங்கத்ல தைரா அடித்து பாடப் போறாங்களாம். செய்தி
கேட்டவுடன் எல்லாரும் பயந்து விட்டனர். ”மேலப்பாளயத்துக்காரங்க மாதிரி
இவங்களும் ஆரம்பிச்சுட்டாங்களா..? இது நல்லதுக்கில்லியே..”- முனகினார்
காட்டுவா. ’வேய் காட்டுவா….அந்தப் பேக்கோ கொட்டு அடிக்கட்டும்.. கொழலு
ஊதட்டும்.. நம்ம கலீல் சாயிபு எழுத்தெ  அடிச்சுக்கிட இந்த ஊர்ல எந்தப் பய
இருக்கான் வேய்..? ”அஜ்மீர் வளர் மக ராஜா../அறம் மேவிடும் மறை நேசா../
கெளதுல் ஆலத்தின் சகவாசா-/ கர்த்தனின் ஜிஸ்தி யா ஹாஜா..’-ன்னு (ஓராயிரம்
பார்வையிலே பாட்டுக்கு-மெட்டுக் கெட்டி) பாடுனமே அப்ப கல்யாண மாப்ளயே,
கார்-லயிருந்து இறங்கி ஓடிவந்து கலீலக் கட்டிப் புடிச்சு, தனக்கு விழுந்த
கல்யாண வேஷ்டிய அவர் கழுத்துல போட்டாரே..’-என்றார் மைதீன்.  ’ நான்
எழுதுனதுக்கா போட்டாரு..?  அவரு அசந்து போற மாதிரி  நூல் இழ பெசகாம  நாம
எல்லாரும் பாடியதால போட்டாரு. இந்தத் தடவெ  அதுக்கு மேல பாடிக்காட்டலாம்.
வாங்க இன்னொரு தடவ பாடிப் பாத்தர்லாம்’- சட் டென பேச்சை நிப்பாட்டினார்
கலீல்.
’வேய்.. எல்லாரும் நல்லா கேட்டுக்குங்க.. நாளைக்கு கடைசியா
நாலஞ்சு தடவெ பாடிப் ப்ராக்டீஸ் பண்ணனும்.  நாளைக்கு மறு நாள் கல்யாணம்.
அண்ணைக்கு ராத்திரி ஒன்பதரை  மணிக்கு மாப்ளை வீட்டுக்கு முன்னால
எல்லாரும் கூடிடணும். மாப்பிள வீட்டிலிருந்து- பொண்ணு வீடு வரை-கல்யாண
ஊர்வலம் போவுறது ஒரு தெரு தான். மூணாவது சங்கம் ஒரே  ஒரு பாட்டை சவ்வா
இழுப்பாங்க.  முக்காத்தெரு கடந்துரும். பொண்ணு வீட்டுக்கு முன்னால தான் ,
நம்ம சங்கமும் கமாலியா சங்கமும் புதுப்பாட்டு பாடப் போறோம்’-என்றார்
காட்டுவா.
‘ பொண்ணு வூட்டுக்கு அடுத்த வூடு தான மாஜி மந்திரி மஜீத் வூடு..? ‘ என்றார் மைதீன்.
‘ ஆமா வேய்.. அதச் சொல்ல மறந்துட்டேன். அவரு ஊர்ல தான் இருக்காரு.
கமாலியா சங்கம் அவரு தெருவுல தான இருக்கு.. அதனால அவருக்கு அந்தச்
சங்கத்து மேல தான் ரொம்ப இஷ்டம்….’ -காட்டுவா.
‘அவருக்கும் தெரியட்டும். நல்லாப் பாடப்போறது யாரு-  நாமளா..?
அவங்களா-ன்னு..?-கலீலின் குரல் இறுகிற்று.
*************    *************     *********    *******

கல்யாணப் பந்தலை, அடுத்த  வீடான மந்திரி வீட்டுக்கும் சேர்த்து
பெரிதாய் இழுத்திருந்தார்கள் பெண் வீட்டார். மந்திரி வீட்டின்
அளிப்போட்ட  பெரிய திண்ணையில் சிரிப்பும் கும்மாளமுமாய்
நெருக்கியடித்தவாறு குமரிப் பெண்கள்  நின்றிருந்தனர். அப்போது அவர்களிடம்
மாட்டிக் கொண்டது –தங்கவாளிப் பெத்தம்மா. ’பெத்தம்மா..உனக்கு வேஷ்டி,
சட்டை போட்டு தலைப்பா கெட்டி ஆம்புள மாதிரி சோடிச்சு ,சேக்காளி
வூட்டுக்கு கூட்டி வந்து அங்கவச்சு பெத்தாப்பா உனக்கு தாலி கெட்னாராமே..
நெசமா..?-அப்பாவி போல கேட்டாள் மரியம். அடக்கமாட்டாமெ க்ளுக் கெனச்
சிரித்த ராவியெத்தின் விரலைத் ஒடிப்பது போல் வளைத்தாள் மரியம். கோபத்தில்
மட்டுமல்ல: சாதாரணமா பேசினாக்கூட, சாபம் இடாமல் தங்கவாளிப்
பெத்தம்மாவுக்குப் பேச வராது. ’ கொள்ளி முடிஞ்சு போவ.. எவம்ளா அவ..? வாளா
உனக்கும் வேஷ்டி சட்டை போடுறேன். வேணும்-னா அடுப்புக் கரியால  மீசையும்
போட்டு வுடுறேன். வாசல்-ல நிண்ணுக்கோ. புடிச்சவனக் காட்டு. உங்க ம்மாட்ட
சொல்லி தாலி கட்டி வைக்கிறேன்”.
”பெத்தம்மா.. அவ உம் பேரனக்  காட்டுனாக்  கெட்டி வப்பியா..?-
சாம்புராணி போட்டாள் ராவியத். ’ அட பேதியில போறவள… உனக்கு எம் பேரனா
கெடச்சான்….? உன்னெ  மாதிரி   மூக்கறையையா அவனுக்குக் கெட்டி
வெப்பேன்..?அவனுக்கு ராணி-ல்லா காத்துக்கிட்டிருக்கா..?’-பொரி

ந்து
தள்ளினாள் பெத்தம்மா. அதுவரை அமைதியாக இருந்த பரீதா,  “யேய் சும்மா
இருங்க. மாப்பிள்ளக் கார் வந்தாச்சு..”- என்றாள். இந்தப் பேச்சில்
அக்கறையே இல்லாதது போல, என்னதான்  காட்டிக்கொண்டாலும், அந்தப் பேரனைப்
பத்தி இன்னுங் கொஞ்சம் பேச மாட்டாங்களா-ன்னு தவிக்கவும் செய்தாள் அவள்.
வந்து கொண்டிருந்த மாப்பிள்ளை ஊர்வலத்தில் அவன் முகத்தையே தேடியலந்தவாறு
இருந்தன பரீதாவின் பெரிய கண்கள்: அக்கம்  பக்கத்து வீட்டு திண்ணைகளில்
தூங்கி வழிந்தபடி குழந்தைகளும் பெண்களும்.. ஆண்களும்…மாப்பிள்ளைக் கார்
பார்க்க நின்று கொண்டிருந்தனர்.

”வேய்.. யாரு வேய் அங்க..?  மாப்பிள்ள காரை அங்கினேயே நிப்பாட்டு… ஒரு
பெட்ரொமாக்ஸ் லைட்-ஐ இங்கே கொண்டா..  நோட்டுல எழுதியிருக்கிற பாட்டைப்
பார்த்துப் பாட வெளிச்சம் வேணும். கமாலியா சங்கம் தான் முதல்ல
பாடப்போவுது”- சத்தம் போட்டார் உதுமான்.
‘பெட்ரோமாக்ஸ் லைட்டை அங்க அனுப்பிட்டா மாப்பிள்ளை இருட்டிலையா நிப்பாரு..?’
’வேய் இப்பவே மணி ஒண்ணரை .. பாட்டு பாடுனது போதும்.. மாப்பிள்ளையை
பொண்ணு வூட்ல இறக்குங்க..’
’பெத்தாப்பா… நாங்க பாடுனதுக்கு பெறவு தான் மாப்பிள்ளையை காரிலிருந்து
இறங்க விடுவோம்… டேய் மம்மது.. அடிடா தைரா.- ஏல.. காதர் பல்லவி
பாடுடா..’- கத்தினார் உதுமான்.
சட சட வென கமாலியா சங்கத்தைச் சேர்ந்த 20 பேரும், தெரு அடைக்க, வட்டமாக
நின்று கொள்ள, பெட்ரோமாஸ் லைட்-ஐ சுமந்தவாறு ஒருவன், நடுவில் நின்றான்.
டும் டும்… டும் டும் டும் டும்… தைரா முழங்க, இரவின்  நிசப்தம்
இன்னும் ஆழமானது. ஆங்காங்கே திண்ணையில் அமர்ந்திருந்தவர்கள் எல்லாரும்
பாட்டைக் கேட்கக் கூடி விட்டனர்..
காதர் பல்லவி பாடத்தொடங்கினான்:
‘புனித இறையின் வேதம்../பொருளைப் புரிந்து ஓதும்…./ மனித குலத்தின்
நீதம்../மலரப் பிறந்த போதம்’
( கோரசாக இந்த வரிகளையே எல்லாரும் மீண்டும் பாடினர்):
‘ டேய் வாத்யார் படம் லே ..ஆயிரத்தில் ஒருவன்..  ‘பருவம் எனது பாடல் –
பாட்டுக்கு மெட்டு லே.. ஒரு பொடியன் கிசு கிசுத்தான்.
மீண்டும் காதரின் தனித்த குரல்
’அகில உலகைப் படைத்தாளும்/அவனைத் தவிர எவரேனும்
புகழும் மறைக்கு நிகரான/ பொருளை/ வனைய முடியாது..
(கோரஸ்-எல்லாரும்)
(காதர் மட்டும்)  மனிதா..இந்த உலகில் நீ மனிதனாக வாழ்க/    இதுவே
இறைமறையின் ஒரு  பொதுமையான சாரம்’ (மீண்டும் (கோரஸ்- எல்லாரும்)
(காதர் மட்டும்) மனிதம் மனி தம் மனிதம் மனிதம் மனிதம் மனிதம்  /இதுவே நபி
நாதர் வாழ்வு/எமக்குச் சொன்ன செய்தி….
(கோரசாக எல்லாரும்)
மனிதம் என்ற சொல்லை ஆறு தடவை பாடாமல்,   இத்ரீஸ், அடுத்த வரியை
முந்திப் பாடிவிட்டான்: குழப்பம்: சிரிப்பு;
உதுமான் கையிலிருந்த நோட்டை எதிரே நின்றிருந்த இத்ரீஸ்  மூஞ்சியில்
விசிறியடித்தார்.
’வேய் அடுத்த சங்கம் வாங்க..தேரம்  ஆயிட்டே போவுது.’
ஐக்கிய சங்கம் சடாரென வட்டமாகக் கூடிற்று.   நல்லாப்
பாடக்கூடியவர்கள், அருமையான மெட்டு, ஆழமான கருத்து  -என இந்தச்
சங்கத்துக்குத் தான் ஊரில் கூடுதல் மதிப்பு.
மேகம் விலக்கி, மெல்லக் கீழே பார்த்தது முழு நிலா; பொதிகை மலைக் குளிர்
காத்தும் அழையாமலே வந்து சத்தமின்றி நின்றுகொண்டது:
அடர்ந்த குரலில் மிக அமைதியாகப் பாடினான் ஹாஜா:
’ஏ..தூயோனே..அருள்வாய்..நிதம்../எங்கள்துயர்போக்கி
அருள்வாய்நிதம்../எங்கள்அருளாளனே..எங்கள் அன்பாளனே../ஏகனே இன்னல்
தீர்ப்பாய் நிதம்..
(கோரசாக எல்லாரும் –மீண்டும்)
(இப்போது-ஹாஜாமட்டும்)-:’வாழ்வில்..வல்லோனாய்..வாழ்ந்தாலுமே…/வறுமை..வந்து..சூழ்ந்தாலுமே../ஏழ்மை
நிறைந்தாலுமே ./.ஏற்றம் மறைந்தாலுமே../எங்கள்
வளம்..யாவும்..குறைந்தாலுமே../தாழ்வோம்..உனக்கின்றி..எவர்க்
கென்றுமே../தலை தாழ்த்தாமல் ..காப்பாய் நிதம்…
எங்கள் அருளாளனே…எங்கள் அன்பாளனே..
எல்லாரும் அடுத்த வரி பாட, மஜீத் மட்டும் ’எங்கள் அருளாளனே..எங்கள்
அன்பாளனே என்ற வரியையே, திருப்பித் திருப்பிப்  பாடிக் கொண்டிருந்தான்.
கூட்டம் சத்தமாகவே சிரித்தது.
சிரிப்பையோ கலீலும் காட்டுவாவும் தன்னை அடிக்கப் பாய்ந்து வருவதையோ
அறியாது, எதிர் வீட்டுத் திண்ணையில் நின்று கொண்டிருந்த கூடப்படிக்கும்
ஹமீதாவின் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தான் மஜீத். ’ஐயோ… இவனுக்கு
இப்படி  ஆகிவிட்டதே…..இதற்கு நான் காரணமாகிப் போனேனே’ – தலை சிறிது சாய
,முகத்தில் விழும் மயிர்க்கற்றையைத் தள்ளிச் சரி செய்வது போல, கலங்கிய
கண்ணை  மெல்லத் துடைத்து, சட் டென- உள்ளே ஒதுங்கி   ஓடி மறைந்தது ஹமீதா
என்கிற அந்த அழகு…

அப்போது  யாருமே எதிர்பாராத ஒன்று அங்கே நடந்தது.

கூட்டத்தை தள்ளிகொண்டு  சடா ரென வட்டத்திற்குள் பாய்ந்தார் ஒரு
வயசாளி. கண்கள் பளீர் பளீரென மின்னித் தெரித்தன. முகம் முழுக்க
காட்டுச்செடி போல் முடி அடர்ந்து பரவிக் கிடந்தது . தாடி நெஞ்சு வரை
இறங்கியிருந்தது. இடுப்பில் பாதி கட்டியும் அவுந்துமாய் கைலி ஒன்று
முட்டு வரை தொங்கியது: கைலி கிழிந்தும் நைந்தும் போயிருந்தது- குறைந்த
அந்த வெளிச்சத்திலும் நன்றாகவே தெரிந்தது. தலையைச் சுற்றிக் கட்டியிருந்த
வெள்ளைக் காடாத்துணியையும் மீறி,   தலைமுடி  கொத்துக் கொத்தாய்
பிடறியிலும் தோள்களிலும் பரவிக்கிடந்தது. சட்டையில்லை. ஒரு காலத்தில்
பயில்வானாக இருந்திருக்கவேண்டும். கட்டு மஸ்தான உடம்பு.  அண்ணாந்து
பார்க்கும்படியான உயரம்.
யார் இவர்..? கூர்ந்து அவரைப் பார்தவாறே இருந்தார் கலீல்.
சடாரென – கிழவன் பாட ஆரம்பித்தான்..

“லாயிலாஹா இல்லல்லா லாயிலாஹா இல்லல்லா..”

அ.. மாங்குட்டிப் பெத்தாப்பா..! குரல்தான் யார் எனக் காட்டிக் கொடுத்து விட்டது..!.

மெளலூதுக்கும் துஆவுக்கும் இடையே மாங்குட்டிப் பெத்தாப்பா பாடும்
ஷெய்கனா பாடல்களைக் கேட்க, வட்டாரமே கண்விழித்துக் காத்திருக்கும்.
உயிரையே உருக்கும் குரலில், இறைவன் மேல் உருகி உருகிப் பாடுவார்
பெத்தாப்பா. ஒரு தடவை, பெத்தாப்பா வேறு எங்கேயோ பாடிவிட்டு வரும் வரை,
ஊரின் பெரிய சாயிபு ’துவா’-வையே பிந்தி வச்சுட்டாங்களாம். ’பெரிய
சாயிபுவை எப்படிக் காக்க வைக்கலாம்..? உன் வீட்ல பாட மாட்டே-ன்னு’-பெரிய
சண்டையே போட்டாராம்-பெத்தாப்பா. அப்புறம் சாயிபுவே, பாடச் சொன்னதால,
சமாதானமாகி பாடுனாராம். அவர் பாடுவதைக் கேட்டுக் கேட்டே அம்மாவும் சில
பாடல்களை மனப்பாடம் செய்து பாடுவாள். இவ்விதம் இறைவனை நினைந்து நினைந்தா
வாழ்வென்ற பெருந்துயரை  கடந்தாய் அம்மா……? பெத்தாப்பாவுக்கு ஏற்கனவே
குர் ஆன் மனப்பாடம்: தமிழ் தப்சீர் வெளி வந்தவுடன் குர் ஆனின்
அர்த்தத்தையும் முழுசாக மனப்பாடம் செய்து விட்டார். பாத்திஹா, ஹத்தம்,
யாசீன் என வற்புறுத்தலின் பேரில் எப்பவாவது சில வீடுகளுக்கு ஓதச்
செல்வார். ஒரு வரி குர் ஆன் ஓதுவார்: அதன் தமிழ் அர்த்தத்தையும்
சொல்வார்: பின் அடுத்த வரி-அதன் அர்த்தம். துஆ ஓதுவதும் இப்படித்தான்.
பொருள் கூறி அவர் துஆ கேட்கையில்  அழுதிருக்கிறான் கலீல்.    ஒரு நாள்
பாகப் பிரிவினை சண்டையில், பெத்த மகனே, பெத்தாப்பாவை அலகம்பால் அடித்து
விளாசி தெருவில் தள்ளி விட்டான். அன்று இரவு யாருக்கும் தெரியாமல் ஊரை
விட்டுப் போனவர் தான். பத்துப் பதினைந்து வருடங்கள் கழித்து ..இப்போது..
திடீரென இங்கே……

பெத்தாப்பா தனது கணீர்க் குரலில் பாட ஆரம்பித்தார்.
‘ ” நீ படைக்கின்றவன்.. நீ அழிக்கின்றவன்.. நீயே நிறைந்த
பொருளாய்….இருக்கின்றவன்.. நீ.. இரங்கின்றவன்..நீ இரங்கா
விடிலோ…?….. வாயிருந்தென் செய்யும் ? கையிருந்தென்
செய்யும்..?மனமிருந்தென் செய்யுமோ..? வாணாயிருந்தென்ன..?
ஆணாயிருந்தென்ன..? மதிதான் இருந்தென்ன தான்?….”
-இறைவனின் பேரருளை இரந்து யாசித்தபடி,ஷெய்கனா ஒலியுல்லாவின் பாடலைப் பாட
ஆரம்பித்தார்-பெத்தாப்பா..
இது மனிதக் குரல் தானா….? எந்தக் குருவிடம இதனைக் கற்றான்-.இந்தக்
கிழவன் .? கற்றுப் பழகி வருமோ குரல்..? லட்சத்தில் ஒருவருக்கு வாய்க்குமே
அப்படி ஒரு அருளல்லவா..?- கமாலியா சங்கத்து உதுமானும், கலீலும்
மெய்மறந்து சொக்கி நின்றனர். கூட்டம் ஸ்தம்பித்து நின்றது.
இரண்டு பாராவைப் பாடியதும், டகால்-என இன்னொரு பாட்டை வேறு ராகத்தில்
பாட ஆரம்பித்தார்- பெத்தாப்பா.
”திருப்பதத்தைக் காண எந்தன் சிந்தை மிகவும் நாடுதே.. ஷெய்கே உங்கள்
பையல் நாட்டம் தீர்க்க வாரும் ஆரிபே..கருப்பொதித்த சித்தெனக்கு
காட்டித்தாரும் காமிலே….கருதி வந்தோர் கருமம் தீர்க்கும் கருணையான
நாதிகே’
லாயிலாஹா இல்லல்லா ..லாயிலாஹா இல்லல்லா..

இப்போது, இரண்டு சங்கத்தைச் சேர்ந்த 40 பேரும், கோரசாக லாயிலாஹா
இல்லல்லா வெனப் பாட ,தைரா- டும் டும் டும் மென லயத்துக்கேற்ப
முழங்கிற்று.
ஒரு பாரா பாடி முடித்தவுடன், இன்னொரு பாட்டைப்பாட ஆரம்பித்தார். பின்
இன்னொரு பாட்டு: இப்படியாக, ஒரு பாட்டிலிருந்து சில வரிகள், இன்னொரு
பாடலில் ஒரு பாரா  என -தாவித் தாவி- வேறு வேறு ராகங்களில் பாடலானார்..
”அண்டரண்டமும் புகழுகின்ற ஒருவன் தன்னையும் அறிந்து தெளிந்த மகராசர்/ஒரு
அஹதத் துறும் பொருளை மிக மெய்த்தவம் புரிந்து/ அருள் வரம் பெற்று வரும்
நேசர்”-பாடியவுடன், டக் கென ’மும்மலக் குரோதத்தை விட்டு-ஹவா நபுசு/மோடான
செயலைய்ம்விட்டு/ஜென்மப்பிறவிகளைவிட்டு-திறக்கும்..வஞ்சச்செய்வினை..மதங்களைவிட்டு/ஹக்கனைச்
சந்திக்க வாருங்கோ-தீனோர்களெல்லாம் ஹக்கனைச் சந்திக்க வாருங்கோ” என வேறு
ஒரு பாடலுக்குப் போனார். அரை மணி நேரம்: எள் விழுந்தால் காதில் விழும்
அளவு அமைதி..! கடைசியில்-
’எக்காலமெங்களுக்கு இடையூறு வாராமல்/ தற்காத்து அருள் புரிவாய் தனியே நீ
றஹ்மானே../  பழுதொன்றும் எங்களுக்கு படைத்தோனே அணுகாமல்/ பூரணமாய்க்
கிருபைசெய்வாய் புண்ணியனே றஹ்மானே../-
என அழுத குரலோடு, அவிழ்ந்து விட்ட வெள்ளைக் காடாத் துணியைத் தலையைச்
சுற்றிக் கட்டியவாறு, கூட்டத்தை விட்டும் மெல்ல நழுவினார் பெத்தாப்பா.
’பெத்தாப்பா இந்தப் பாட்டுக்களை யாரு எழுதினா..?- இரைந்தான் ஒரு இளைஞன்:
‘ஷெய்கனா ஒலியுல்லா’-  திரும்பிப் பாராமல்,  சொல்லியவாறே நடந்தார் பெத்தாப்பா.:
‘அவரு யாரு பெத்தாப்பா..? எந்தத் தெரு..?-’ இளைஞனின் அடுத்த கேள்வியில்,
சரேலெனத் திரும்பிப் பாய்ந்தார் பெத்தாப்பா.
அதுவரை குழைந்து பாடி, நெஞ்சில் கரைந்த பெத்தாப்பாவின் இனிமையான குரல்,
சிம்மமாய் உறுமிற்று: ’எந்தப் பெயல அவன்..? ஷெய்கனாவை யாரு-ன்னு
கேக்கிறவன்..? ஏல.. வெக்கங்கெட்ட மூதி. .இந்த மண்-ல பிறந்து, புறண்டு
வளர்ந்த ஒரு அப்பனுக்குப் பொறந்தவன் தான் –ல நீயீ..? உங்க
முப்பாட்டனுக்கு முப்பாட்டனுக்கெல்லாம் அவ்வல் கலிமா-ன்னும்.., தவ்ஹீது
கலிமா-ன்னும்.. நெஞ்சில வெளக்கேத்தி வச்ச அப்பன் தாம்-ல ஷெய்கனா..-’
குரல் தழுக்க தொண்டையெச் செருமினார். அழுகிறாரா-பெத்தாப்பா ..?
‘ போங்கடா போக்கத்த பயல்களா.. வந்த வழி தெரியாத உங்களுக்கு போற வழி எங்கல
தெரியப்போவுது..?
முனகியவாறு  வேகமாய் நடந்து இருளில் மறைந்தார் பெத்தாப்பா.
************     ************    *********
குறிப்பு 1. ஷெ ய்கனா ஒலியுல்லாஹ், 1690 ராம் ஆண்டு கடைய நல்லுரில்
பிறந்தார்கள். இறை ஞானி. படிப்பறிவற்ற எளிய மக்களிடம்- குறிப்பாக கடைய
நல்லூரில் தறி நெசவு செய்து பிழைக்கும் ஏழை எளிய சனங்களிடம் ஓரிறைப்
பாதையை   எடுத்துச் சொன்னார்கள். இறைவனை ஒரு கணமும்  மறந்து போகாத
மனதிற்காகவும் – அவனின் பிரிய சினேகத்துக்கு உரியவராக
ஆகிவிடுவதற்காகவும், வாழ்வு முழுவதையும் அர்ப்பணித்த மகான்.  1770 –ல்,
மறைந்தார்கள்.

குறிப்பு 2: ஷெய்கனா அவர்களின் எழுதிய பாடல்களைத் தொகுத்து
’மெ(ய்)ஞ்ஞானக் கருவூலம்’ என்ற புத்தகமாக பினாங்கு ஐக்கிய முஸ்லிம்
சங்கம் வெளியிட்டிருக்கிறது. ( 1971). இந்தக் கதையில் பெத்தாப்பா  பாடும்
ஷெய்கனா பாடல்கள்  மட்டுமல்ல இன்னும் எத்தனையோ பாடல்கள் எனது ஊர்ப்
பாமரத் தறிகாரன்கள்  பலரின்   நெஞ்சில்  இன்னும் வாழ்கின்றன..
***************          ****************         ***********

Series Navigationசீமைத் தரகர்களும் ஊமை இந்தியர்களும்பாகிஸ்தானில் பாதுகாப்பற்ற கருக்கலைப்பால் நிகழும் மரணங்கள்
author

Similar Posts

Comments

  1. Avatar
    Sivakumar N, New Delhi says:

    மிக அருமையான கதை, கதை என்று கூட சொல்ல முடியாது உணர்வுபூர்வமான ஒரு சம்பவம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *