அக்னிப்பிரவேசம்-14

This entry is part 18 of 31 in the series 16 டிசம்பர் 2012

yandamuri veerendranath

தெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத்

yandamoori@hotmail.com

தமிழாக்கம்: கௌரி கிருபானந்தன்

tkgowri@gmail.com

இரண்டு ஆண்டுகள் கழிந்துவிட்டன. பிரமஹம்சா எப்போதும் போலவே வந்து போய்க் கொண்டிருந்தான். ரகசியமாய் குடும்பம் நடத்திக் கொண்டுதான் இருந்தான். முன்னைக் காட்டிலும் சாஹிதியிடம் அன்பாய் பழகினான். ஓரிருமுறை எல்லோருமாய் சேந்து வெளியே சாப்பிட்டார்கள். சினிமாவுக்குப் போனார்கள். சாஹிதிக்கு எது வேண்டும் என்றாலும் சுயமாய் அழைத்துக் கொண்டு போய் வாங்கித் தந்தான். ஒருமுறை புத்தகக்கடையில் அவனுடைய நண்பன் தென்பட்டான்.

“என் மகள் சாஹிதி” என்று அறிமுகம் செய்து வைத்தான் பரமஹம்சா. சாஹிதி சந்தோஷத்தால் பூரித்துப் போனாள். அந்த விஷயத்தைச் சொன்னபோது நிர்மலாவின் முகத்தில் தென்பட்ட சந்தோஷத்தை, திருப்தியைப் பார்த்ததும் தன் தியாகத்திற்கு பலன் கிடைத்து விட்டதாய் அகமகிழ்ந்து போனாள்.

அன்று முதல் தேர்வுகள். வழியில் ஏதோ வேலையாய் காரை நிறுத்தி கடைக்குப் போனாள். நல்ல பேனா ஒன்றை வாங்கிக் கொண்டு வெளியே வரும்போது தொலைவில் அறிமுகமான உருவம் ஒன்று தென்பட்டது. அப்பொழுதுதான் சிம்மாசலம் கடைக்குள் நுழைந்து கொண்டிருந்தான்.

“சிம்மாசலம்!”  அவள் அழைததைக் கேட்டு அவன் திரும்பிப் பார்த்தான். ஒருவினாடி நேரம் அவன் முகத்தில் மலர்ச்சி தோன்றி மாயமாயிற்று. அவளைக் கவனிக்காதது போலவே முகத்தைத் திருப்பிக் கொண்டு விட்டான். சாஹிதி அதற்குள் அவனை நெருங்கிவிட்டாள்.

“சிம்மாசலம்? முகத்தை ஏன் திருப்பிக் கொண்டு விட்டாய்? என் மேல் கோபமா?”

“உங்கள் மீது கோபம் கொள்ளும் அளவுக்கு நான் ஒன்றும் பெரிய மனிதன் இல்லை சின்னம்மா.”

“உன்னை வேலை விட்டு நீக்கி விட்டதாய் எனக்குத் தெரியாது சிம்மாசலம். உன்மீது ஆணை! அப்புறமாய் மம்மிதான் சொன்னாள்.”

“சரி போகட்டும் விடுங்க சின்னம்மா. நீ சௌக்கியம்தானே?” அவன் குரலில் பரிவு தென்பட்டது. “பமீலா நல்லா இருக்கா?”

“நல்லா இருக்கு சிம்மாசலம். உன் விஷயம் என்ன? எங்கே வேலை செய்கிறாய்?”

‘ஒரு சேட்டின் வீட்டில் வேலை செய்கிறேன். அங்கே நன்றாய்தான் இருக்கு சின்னம்மா. பரமஹம்சா ஐயா வந்துகிட்டு இருக்கிறாரா?”

“வந்துக்கொண்டிருக்கிறார் சிம்மாசலம். வியாபாரத்தை எல்லாம் அவர்தான் பார்த்துக் கொள்கிறார். ரொம்ப நல்லவர் இல்லையா?”

சிம்மாசலம் அவள் கண்களை உற்றுப் பார்த்தான். “ஆமாம் சின்னம்மா. ரொம்ப நல்லவர். அதான் என்னை வேலையிலிருந்து நீக்கிவிட்டார்.”

“அவர் நீக்குவதாவது? நீதான் சுவாமி அறையில் சுருட்டு புகைத்து தவறு செய்து விட்டாய். அவர் அதையெல்லாம் சகித்துக் கொள்ள மாட்டார் என்று உனக்குத் தெரியாதா?”

“அப்படிச் சொன்னாரா சின்னம்மா உங்களிடம்? விஷயம் அது இல்லை.”

“அப்படி என்றால் வேறு என்ன? உண்மையைச் சொல்லு. அப்போதே நினைத்தேன் வேறு ஏதோ காரணம் இருக்கும் என்று.” பரபரப்புடன் கேட்டாள் சாஹிதி.

“அது இல்லை சின்னாம்மா. எனக்குத் தெரியக்கூடாத விஷயங்கள் தெரிந்துவிட்டது எனது அவருக்குக் கோபம் வந்துவிட்டது.”

அப்பொழுது புரிந்தது அவளுக்கு. பரமஹம்சாவும், நிர்மலாவும் நெருக்கமாக இருந்தது அவன் கண்ணில் பட்டிருக்கும். எதற்கும் நல்லது என்று அவனை வேலையை விட்டு நீக்கியிருப்பார்கள்.

“அந்த ரகசியம் என்னவென்று எனக்குத் தெரியும் சிம்மாசலம். அது தவறு என்று நான் நினைக்கவில்லை. அவர் மம்மியைக் கல்யாணம் பண்ணிக் கொள்வதாய் சொல்லி இருக்கிறார்.” பெருமையாய் சொன்னாள்.

“எத்தனை பேரை பண்ணிக் கொள்வார்? அவருக்குக் கல்யாணம் ஆன விஷயம் உங்களுக்குத் தெரியாதா?”

“தெரியும். இரண்டு மகன்கள் இருப்பதும் தெரியம். ஆனால் மனைவி அவருடன் இருப்பதில்லை. ரொம்ப நாட்களுக்கு முன்பே பிரிந்து போய் விட்டார்கள்.”

“அப்படி என்றால் முதல் முதலில் நடந்த கல்யாணம் ஒன்று மட்டும்தான் உங்களுக்குத் தெரியும் போலிருக்கு. போன வருஷம் அவர் பண்ணிக்கொண்ட இரண்டாவது கல்யாணத்தைப் பற்றி உங்களுக்குத் தெரியாது என்று நினைக்கிறேன்.”

“சிம்மாசலம்! நீ என்ன சொல்கிறாய்? அபாண்டமாய் எதையாவது சொல்லாதே.” கோபமாய் சொன்னாள் சாஹிதி.

“இல்லை சின்னம்மா. இப்போழுதாவாது விழித்துக் கொள்ளுங்கள். அப்பாவோட சொத்து விவகாங்களை கூட அவர்தான் பார்த்துக் கொள்கிறார் என்று தெரிய வந்தது. போன வருடம் லீவு போட்டுவிட்டு என் மகளைப் பார்க்கப் போயிருந்த போது அவர் இன்னொருத்தியைக் கல்யாணம் பண்ணிக் கொண்டதைக் கண்ணால் பார்த்தேன். அந்த விஷயம் எனக்குத் தெரிந்து விட்டது என்றுதான் என்னை வேலையிலிருந்து நீக்கிவிட்டார்.”

காலடியில் பூமி நழுவியது போலவும், தலையில் இடி விழுந்தாற் போலவும் இருந்தது சாஹிதிக்கு. ‘சென்ற வருஷம் என்றால் அம்மாவைத் திருமணம் பண்ணிக் கொள்கிறேன் என்று வாக்களித்த பிறகுதான். முதல் மனைவியிடமிருந்து விவாகரத்திற்கு முயற்சி பண்ணிக் கொண்டு இருப்பதாய் சொன்ன சமயத்தில்தான்..’

“இது உண்மைதானா?” தனக்குள் முணுமுணுத்துக் கொள்வது போல் கேட்டாள்.

“சாமி சத்தியமாய் உண்மைதான் சின்னம்மா. வேண்டுமானால் நீயே கேட்டுக்கொள். அவள் பெயர் ராஜலக்ஷ்மி. நல்ல வசதி படைத்த குடும்பத்திலிருந்து வந்தவள்.”

சாஹிதி தூக்கத்தில் நடப்பவள் போல் வந்து காரில் உட்கார்ந்து கொண்டாள். கார் பரீட்சை ஹாலுக்கு முன்னால் வந்து நின்றது. அதற்குள் எல்லோரும் எழுதத் தொடங்கிவிட்டார்கள். தன்னுடைய பேப்பரை எடுத்துக்கொண்டு சோர்வுடன் எழுத உட்கார்ந்தாள்.

இரண்டரை மணி நேரம் முடிவடைந்து விட்டதாய் மணி அடித்தது. அவளுக்கு முன்னால் வெள்ளைத் தாள் அப்படியே இருந்தது. பரீட்சையில் தோல்வியடைந்து விடுவோம் என்று தெரியும்.

வருத்தப்படவில்லை.

அந்தத் தாளையே தந்துவிட்டு வீட்டிற்குத் திரும்பி வந்தாள். ஏதோ தெரியாத வெறுப்பு! எரிச்சல்!

அந்த எரிச்சல் அவள் அதல பாதாளத்தில் விழுந்து விடுவதற்கு முதல் படியாய் இருந்தது. அந்த வருடம் அவள் ஃபெயில் ஆகிவிட்டாள்.

*******

வீட்டிற்கு வந்ததும் வராததுமாய் தாயின் மடியில் தலையை வைத்துக்கொண்டு ஹோவென்று கதறினாள் சாஹிதி. நிர்மலா கலவரமடந்தவளாய் ‘என்ன நடந்தது? என்னதான் நடந்தது?” என்று கேட்டாள்.

விசும்பிக் கொண்டே தனக்குத் தெரிந்த விஷயத்தை முழுவதுமாக தாயிடம் சொன்னாள் சாஹிதி.

ஆழமான நிசப்தம்!

அந்த நிசப்தத்தைச் சிதறடித்தபடி நிர்மலா மெதுவாய் சொன்னாள். “எனக்கு இந்த விஷயம் தெரியும் சாஹிதி.”

அந்த வார்த்தைகளைக் கேட்டு சாஹிதிக்கு துக்கம் வரவில்லை. ஆச்சரியம் ஏற்படவில்லை.

மாறாக பயம் ஏறபட்டது.

பயந்து போனவளாய் தாயைக் குழப்பத்துடன் பார்த்தாள்.

பரமஹம்சா அவள் கழுத்தில் ரகசியமாக  மூன்று முடிச்சு போட்டுவிட்டு, அதற்குப் பிறகும் அவன் இன்னொரு திருமணம் பண்ணிக் கொண்டிருக்கிறான் என்று தாய்க்குத் தெரியும். ஆனாலும் சும்மா இருந்திருக்கிறாள்.

அதையும்விட முக்கியமான விஷயம்…

இந்த விஷயத்தைத் தன்னிடம் … சொ …ல்ல…வி …. ல்லை.

******

பரமஹம்சா பதினைந்து நாட்களாய் வீட்டிற்கு வரவில்லை. நிர்மலா கவலைப் பட்டுக் கொண்டிருந்தாள்.

சாஹிதிக்குக் கோபம் தணிந்து போய் அதற்குப் பதில் தாயின் மேல் இரக்கமும், என்ன நடந்திருக்கும் என்ற ஆர்வமும் ஏற்பட்டது. பரமஹம்சா அந்த யுக்தியை பலமுறை பயன்படுத்தி இருக்கிறான். பத்து, பதினைந்து நாட்கள் கண்ணில் படாமல் போய் விடுவான். தன் ஊடலை அந்த விதமாய் மறைமுகமாய் காட்டுவான். பிறகு வந்து முறுவலுடன் எதிராளியை மன்னித்து விடுவான்.

சாஹிதி அன்றைக்கு கல்லூரியை விட்டு வெளியே வந்த போது வேலைக்காரன் வரண்டாவில் குடையுடன் காத்திருந்தான்.

சாஹிதியின் மனம் முழுவதும் சந்தோஷத்தால் நிரம்பி விட்டது. மழை வரப் போகிறது என்று குடையைக் கொடுத்து அனுப்பியிருக்கிறாள் தாய். எவ்வளவு பிரச்சனைகள் இருந்த போதிலும் தாய் அவளை மறந்து போகவில்லை. திருமணம் பண்ணிக்கொன்டாலும் தாயின் நினைப்பெல்லாம் அவள் மீதுதான்.

கார் நின்றதுமே பார்ட்டிகொவில் உற்சாகமாய் இறக்கினாள். பக்கத்திலேயே இன்னொரு கார் இருந்தது. புத்தம் புதிய கார்!

“இது யாருடைய கார்?”

“பரமஹம்சா அய்யாவுடையது.”

சாஹிதியின் முகத்தில் இருந்த சிரிப்பு மாயமாகிவிட்டது.

“மம்மி எங்கே?”

“பரமஹம்சாவுடன் அறையில் இருக்காங்கம்மா.”

காபி கோப்பையை அவள் கையில் வைத்துவிட்டுக் கோபமாய் போய் கதவை ஓங்கி தட்டினாள் சாஹிதி. திறந்தே இருத்தது கதவு.

பரமஹம்சா சோபாவில் சரிந்தபடி உட்கார்ந்து இருந்தான். நிர்மலா அவன் காலடியில் உட்கார்ந்து கொண்டு உள்ளங்காலில் மருந்து தடவிக் கொண்டிருந்தாள். எதிர்பாராமல் சாஹிதியைப் பார்த்ததுமே நிர்மலா தடுமாற்ற மடைந்தாள். பரமஹம்சா மட்டுமே லேசாய் சிரித்தான்.

“வாம்மா சாஹிதி! ஏன் அங்கேயே நின்றுவிட்டாய்? ரொம்ப இளைத்துப் போய் விட்டாய்.” அந்த குரலில் பரிவு வழிந்தோடியது.

சாஹிதி அதொன்றையும் போருட்படுத்தாதவளாய் தாய் செய்து கொண்டிருந்த காரியத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு அவன்மேல் ஏன் இவ்வளவு பக்தி? தந்தைக்கு இவ்விதமாய் பணிவிடை செய்து கண்டதே இல்லை.

அவள் எண்ணங்களை உணர்ந்து கொண்டு விட்டாற்போல் “உங்க அங்கிள் செய்த காரியத்தைப் பாரும்மா. புது கார் வாங்கிய பிறகு, திருப்பதிக்குப் போகணும் என்றால் காரிலேயே போகலாம் இல்லையா. நடந்து போனாராம். செருப்புக் கூட போடாமல் மலை ஏறி இருக்கிறார்.” அவள் வார்த்தைகள் தன் செயலுக்கு விளக்கம் தருவது போல் இல்லை. அந்தக் குரலில் அவன்பால் பக்தி உணர்வு மட்டுமே வெளிப்பட்டது

“அங்கேயே ஏன் நின்றுவிட்டே சாஹிதி! அருகில் வாம்மா.” பரமஹம்சா மற்றொரு முறை அழைத்தான்.

“நீங்க செய்த காரியம் எனக்குப் பிடிக்கவில்லை. உங்கள் மீது வெறுப்பாய் இருக்கிறது” என்றாள் சாஹிதி. அவள் என்றுமே அவ்வாறு பேசியது இல்லை. ரொம்ப சாது என்று பெயர் எடுத்திருந்தாள். அப்படிப்பட்டவள் அந்த விதமாய் பெசியதுமே நிர்மலா அதிர்ந்துவிட்டாள்.

“சாஹிதி!” என்று கத்தினாள் கோபமாய்.

“நீ சும்மா இரு நிர்மலா! அவளுடன் நான் பேசுகிறேன். இப்படி வாம்மா. உனக்கு எந்த விஷயத்தில் கோபம் வந்துள்ளது என்று என்னால் புரிந்து கொள்ள முடியும். நடந்தது என்ன என்று சாவதானமாய் கேட்டுவிட்டு, அதற்குப் பிறகும் தவறு என்னுடையதுதான் என்ற முடிவுக்கு வந்தாய் என்றால், எப்படிப்பட்ட தண்டனை கொடுக்கணும் என்று நீயே முடிவு செய்.”

அவன் பேச்சில் இருந்த நேர்மை, அதற்கும் மிஞ்சிய உருக்கமும் அவளைக் கொஞ்சம் அமைதிப் படுத்தியது. ஆனால் இடத்தை விட்டு நகரவில்லை.

“சாஹிதி! அங்கிள் அவ்வளவு அன்போடு கூப்பிடும்போது அங்கேயே நின்று விட்டாயே ஏன்? வேலைக்காரர்களுக்கு முன்னால் என்னை அவமானப்படுத்த துணிந்து விட்டாயா? வந்து அருகில் உட்கார்ந்து என்ன நடந்தது என்று தெரிந்துகொள்.” நிர்மலாவின் குரலில் இருந்த வேதனைக்கு அவள் முற்றிலும் உருகிப் போய்விட்டாள். போய் சோபாவில் உட்கார்ந்து கொண்டாள்.

“காபி குடித்தாயாம்மா?” பரமஹம்சா கேட்டான்.

“இல்லை” என்றாள் மெல்லிய குரலில். அவன் யோசிப்பது போல் மனைவியை நோக்கித் திரும்பினான்.

“அடடா.. மல்லிகா இன்னும் தரவில்லையா? வந்ததுமே தரச் சொல்லி இருந்தேனே? இரு, நானே போய் கொண்டு வருகிறேன்.” நிர்மலா வெளியே போய் விட்டாள், அதுதான் முக்கியமான வேலை என்பதுபோல்.

“சாஹிதி!” அன்பு ததும்பும் குரலில் அழைத்தான் அவன். “என்மீது உனக்குக் கோபமாய் இருக்கலாம். கயவன் என்ற அபிப்பிராயம் ஏற்பட்டுப் போயிருக்கலாம். நீ மட்டுமே இல்லை. உன் நிலைமையில் வேறு யார் இருந்தாலும் சரி, என்னைக் குத்திக் கொன்று போட்டிருப்பார்கள். நீ இவ்வளவு சாதாரணமாக இருக்கிறாய் என்றால் அது அமைதியான உன் சுபாவதைக் காட்டுகிறது. உன் தாயைப் போலவே நீயும் என்னைப் புரிந்துகொள்வாய் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு.” அவன் குரல் தழுதழுத்தது. சாஹிதிக்கு என்ன பேசுவதென்றே புரியவில்லை. தர்மசங்கடமாய் இருந்தது.

அவன் மேலும் சொன்னான். “நான் கல்யாணம் பண்ணிக் கொண்டிருக்கும் ராஜலக்ஷ்மி ரொம்ப துர்பாக்கியசாலி. முப்பத்தைந்து வயது முடிந்து விட்ட போதும் கல்யாணம் ஆகவில்லை. நெருங்கியவர்கள் யாரும் இல்லை. ரொம்ப ஏழைப் பெண். தூரத்து உறவுக்காரர்கள் அவளைத் தொந்தரவு பண்ணத் தொடங்கினார்கள். துன்பம் தாங்க முடியாமல் என்னிடம் வந்தாள். தினமும்  பஜனை நடக்கும் போது கவலையுடன் தென்படுவாள். பக்தி மூலமாய் முக்தியைப் பெறுவது சுலபம் என்று அவளுக்கு நான் எப்பொழுதும் உபதேசம் செய்து கொண்டிருந்தேன். அவளுக்கு என்மீது அபிமானம் இருக்கு என்று தெரியுமே தவிர, அது இன்னொரு கோணத்திலிருந்து வரும் என்று நான் நினைத்திருக்கவில்லை. தன்னைக் கல்யாணம் பண்ணிக்கொள்ளச் சொல்லி அவள் கேட்ட போது ஆச்சரியப்பட்டேன். அப்படி எல்லாம் யோசிப்பது தவறு என்று எடுத்துச் சொன்னேன். அன்றிரவு அவள் தற்கொலை செய்துகொள்ள முயன்றாள். ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த எனக்கு அந்த விஷயம் எப்படித் தெரிந்ததோ எனக்கே தெரியாது. எழுந்து போனேன்.

அவளைக் காப்பாற்ற முடிந்தது. அப்பொழுதுதான் எனக்குப் புரிந்தது, அவளை நான் கல்யாணம் பண்ணிக்கொள்ளணும் என்பது கடவுளின் உத்தரவு என்று. வந்து உங்க மம்மியிடம் சொன்னேன். அவளும் புரிந்து கொண்டு சம்மதித்து விட்டாள். இப்போ சொல்லும்மா. நான் பண்ணியதில் தவறு ஏதாவது இருக்கா?”

சாஹிதி தலை குனிந்தாள். என்ன சொல்வதென்று அவளுக்குப் புரியவில்லை. அவள் கண்முன்னால் ஒரு துர்பாக்கியசாலி தூக்கு போட்டுக் கொள்ளும் காட்சி நிழலாடியது.

அதற்குள் அவன் மேலும் சொன்னான். “அந்த சமயத்தில் என் மனதில் எவ்வளவு போராட்டம் நடந்தது என்று உனக்குத் தெரியாது. ஆனால் அவளுடைய திருப்தியைப் பார்த்த பிறகு நான் பண்ணியது நல்ல காரியம்தான் என்று தோன்றியது. உங்க அம்மாவுக்குத் தெரியாமல் பண்ணியிருந்தால் தவறு. உங்க மம்மிக்கு எல்லா விஷயமும் தெரியும். அவள் எவ்வளவு சந்தோஷமாய் இருக்கிறாள் என்று நீதான் பார்க்கிறாயே?”

அந்த வார்த்தை மட்டும் உண்மை! தந்தை உயிருடன் இருந்த பொழுது இல்லாத சந்தோஷம் இப்பொழுது அவளுடைய முகத்தில் தென்படுகிறது. சாஹிதி முற்றிலும் உருகிப் போய்விட்டாள்.

“சாரி அங்கிள்! தெரியாமல் ஏதேதோ சொல்லிவிட்டேன்” என்று அவரிடம் சொல்லிவிட்டுத் தன அறைக்கு வந்துவிட்டாள். பரமஹம்சா சொல்லும் பொழுது எல்லாம் உண்மைதான், தவறு இல்லை என்று தோன்றியது. ஆனால் பிற்பாடு உண்மைக்கு புறம்பாக ஏதோ இருப்பது போல் வேதனையாய் இருந்தது.

முதல் மனைவியிடமிருந்து விவாகரத்து கிடைக்காதவரையில் திருமணம் பண்ணிக்கொள்ள முடியாது என்றவன், ராஜலக்ஷ்மியை நாலுபேருக்கு முன்னால் பகிரங்கமாய் எப்படித் திருமணம் பண்ணிக்கொண்டான் என்று கேட்க மறந்துவிட்டாள். தாய் அவனுக்குக் கார் வாங்கிக் கொடுத்திருக்கும் விஷயத்தைக் கூட.

(தொடரும்)

Series Navigationவாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள்கனவுகண்டேன் மனோன்மணியே…
author

கௌரி கிருபானந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *