ஓ! அழக்கொண்ட எல்லாம்?

author
0 minutes, 4 seconds Read
This entry is part 31 of 31 in the series 16 டிசம்பர் 2012

குழல்வேந்தன்

பாலுக்கார கண்ணம்மான்னா  தெரியாதவங்க எங்க எட்டூரு கிராமத்துல 30 வயசுக்கு     மேலானவங்கள்ள ஒருத்தருகூட இருக்கமாட்டாங்க. இதுல ஆம்பிள்ளை பொம்பிள்ளை பேதமேதும் இல்லைங்க. நானு பொய்      சொன்னா அது எங்க ஊரு கொல தெய்வம் பச்சையம்மா சாமிக்கே அடுக்காதுங்கோ.   அட எட்டூரு கிராமம்னா?  அட அதுதானுங்க சக்காரப்பட்டி, சின்னக்காம்பட்டி, கண்ணுக்காரன்பட்டி, பள்ளப்பட்டி, மோட்டுப்பட்டி,  ஆட்டுக் காரன்பட்டி,  அதகபாடி, தடங்கம் என்பவைதான்   அந்த எட்டூரு கிராமங்க.

நம்ம பாலுக்கார கண்ணம்மாவை நாம எப்படி புரிஞ்சிக்கிறது தெரியு முங்களா? அட அதுதாங்க சொல்ல வர்ரேன். ஆயர்ப்பாடி கிருஷ்ணன் இந்த கலியுக காலத்துல நேருல வந்தா நம்ம கண்ணம்மாவோட பால் பொருளுங் களைத்தான் விரும்பி சாப்பிட்டிருப்பாரு. அவளோட பால்  பொருளுங்க அவ்வளவு சுத்தமா   இருக்குமுங்க. அட அந்தக் காலத்துல இருந்ததா சொல்லறாங்களே [அன்னப்பறவை] அந்த பறவைகூட கண்ணம் மாவோட பாலைப் பார்த்தா தெகச்சிப்போயிடுமுங்க {இப்படிகூட பால் இருக்குமான்னு?} நாணயங்களைமட்டுமே சம்பாதிச்சா போதும்னு  நெனைக்கிறவுங்க அதிகமா  இருக்கும் இந்த காலத்துலையும் நாணயத்தோடும் தொழிலிலே நேர்மையோடும் வாழறவதான் நம்ம கதாநாயகி கண்ணம்மாங்க.    ஆடு, மாடு, எருமைனு மூணு வகை கால்நடைகளையும் மேய்க்கிறதும், அதுகள கண்ணுங்கருத்துமா பராமரிக்கிறதும், பால், தயிர், மோர், வெண்ணை, நெய்னு வித்து அந்த பால் பொருளுங்களால வரும் காசை வச்சித்தான் அவளோட ஜீவிதம் நடக்குதுன்னு வச்சிக்கோங்களேன்.       இப்படி கெடைக்கும் காசு பணத்த வச்சித்தான் அவ தன் புள்ளைங்களை  படிக்க வைக்கிறதாம். ”புருஷங்காரனோ?    அடி ஆத்தாடி! மகமாயி, பச்சையம்மா தாயி, நமக்கு அந்த வம்பு தும்பு சமாச்சாரமெல்லாம் வேணாம் தாயி.  அதைப் பத்தியெல்லாம் பெசினா? அப்புறம் பாலுக்காரி நம்ம ரத்தத்தை தன்னோட கால்நடைங்களுக்கு புளிச்சத் தண்ணியா ஊத்திப் புடுவா. எலும்புகளை எண்ணி புண்ணாக்கா அதுகளுக்கு ஊறவச்சிப் போட்டுப்புடுவா.”

அவளோட கதைய கேட்டா அட அரக்கனுக்குகூட இரக்கம் பொறக்குமுங்க. இரும்புகூட உருகிப்புடுமுங்க.  ஆமாங்க. சொல்லறதெல்லாம் நெசந்தானுங்க. சில புள்ளைங்களுக்கு தாய முழுங்கிப்புட்டவன்னு ஒரு காரணப் பெயர சொல்லறதை நீங்க கேட்டிருப்பிங்க. அது உண்மையோ பொய்யோ அதைப்பத்தியெல்லாம் நமக்கு ஒண்ணும் தெரியாதுங்க. ஆனா நம்ம பாலுக்கார அம்மாளுக்கு அந்த பேரு இருந்ததா ஒரு கேள்வி எட்டூரு கிராமத்திலும் உண்டுங்க. ஏன்னா, அவ பெறந்து நாலு நாளைக்கெல்லாம் அவளோட ஆத்தாக்காரி வாந்தி பேதி  வந்து புள்ளைய அனாதையா உட்டுப்புட்டு போய்ச் சேர்ந்துட்டாளாம். அப்புறம் என்ன? நம்ம பாலுக்கார அம்மாளோட அப்பங்காரன்  மூணு மாசம் முடியறதுக்குள்ள புதுப் புருஷன் ஆயிப்புட்டானாம்.  தாயில்லா புள்ளையோட கஷ்டங்களை யாரால ஒணரமுடியும்?  ஒரு தாயில்லா புள்ளையாலையோ அந்த தாய பறிச்சிக்கிட்ட தெய்வத்தாலையோதானே ஒணரமுடியும்.

 

அதுமட்டுமிள்லாம மாத்தான் தாய் கொடும வேற. இளைய குடியா வறுஷந்தவறாம ஒண்ண பெத்துக்கிட்டு நிப்பாளாம். சித்திக்காரி சொல்லற வேலைகளை கவனிப்பதோட  அவளோட வாரிசுகளையும் கவனிக்கவேண்டிய பொறுப்பும் சித்தியோட கொடுமைகளை தாங்கிக்கவேண்டிய துரதிஷ்டமும் இவளுக்கு.  இவ தன் கஷ்ட நஷ்டங்களை எல்லாம் தனக்கு பிடித்த ஒரு ஆட்டுக்குட்டிகிட்டையோ  பசுங்கண்ணுக்குட்டிக்கிட்டையோ சொல்லி அழுவா ளாம். அதுகளும்  இவளுக்கு ஆறுதல் சொல்லறமாதிரி தலையை ஆட்டி வைக்குமாம்.      எதுக்கு சொல்லறதுன்னா நம்ம கதாநாயகிக்கு பொறந்த எடத்துலையும் நிம்மதி இல்ல. வாக்கப்பட்ட எடத்திலையும் … ?

 

அத்தனை துக்கத்தையும் அவளால எப்படி மறக்கமுடியிதுன்னு கேட்டா அவ சொல்றா. இந்த கால்நடைங்கள கவனிக்கிறதுல இருக்கிற ஆனந்தமே தனியானதுன்னு.  கால்நடைகளை மேய்க்கிறதும் பராமரிக்கிறதும் ஆறு வயசுல இருந்தே அவளோட தலையெழுத்துன்னு ஆகிப்போச்சாம்.   கால்நடைங்களுக்கு கூட அறிவும் புத்திசாலித்தனமும் உண்டுங்கிறது நம்ம பாலுக்கார அம்மாளோட தெளிந்த ஞானமுங்க.  இப்படித்தா ஒரு தபா நம்ம அம்மாவுக்கு ஏதோ நோய்நொடின்னு ஆசுபத்திரிக்கு போய் ஒரு வாரம் படுத்த படுக்கையா ஆகிப்புட்டாளாம்.  அந்த ஒரு வாரமும் தான் பாசமா வளத்த ஆடு மாடு எருமைகளையெல்லாம் தன் மகளை பாத்துக்கச் சொல்லி இருந்தாளாம். அன்த ஒரு வாரமா ஆடு மாடுகள பாக்காததால சரியா தூக்கமே இல்லையாம் பால்காரிக்கு.  தன் புள்ளைங்களுக்கு மேலா  இல்ல அவ அந்த கால்நடைங்கள நேசிக்கிறா.

 

ஒரு அளவு ஒடம்புத் தேறி  வீட்டுக்கு வந்து கட்டுத்தறிக்கு இவ போன ஒடனே அதுல இவகிட்ட ரொம்ப பாசமா இருந்த ராணிங்கிற பசுமாடு இவளோட காலடிச்சத்தத்தைக் கேட்டு கண்ணு நெறைய தண்ணி உட்டுப் புடுச்சாம்.  “ராணி நானுதான் உன் ஆண்ட வந்துட்டனில்ல எதுக்காக அழுவுற?” ன்னு கேட்டு தடவிக் குடுக்க தாய்ப் பசு புதுசா போட்ட கண்ணுக்குட்டிய நக்குமுல்ல   அப்படி நக்கி நக்கி தன் பாசத்த காட்டுச்சாம்! ஆறு அறிவு ஜீவன்களைவிட அஞ்சறிவு ஜீவன்களே  மேலுன்னு  அவ்வப்போது பொலம்புவா இந்தப் பாலுக்காரி.

 

புருஷன் அகலக் காலு வச்சி தொழிலையும் விவசாயத்தையும் கவனிக்கமுடியாம பெருங்கடனாளியா ஆயிப்புட்டான். ஊட்டுக்கு கடன்காரங்க வந்தா நம்ம தலைவரு புள்ளைங்க கிட்ட “அப்பா எங்க” னு கேட்டாக்க “ஊருக்கு போயிருக்காரு, வந்துடுவாரு” அப்படின்னு சொல்லுங் கனு சொல்லிப்புட்டு ஊட்டு அட்டத்துமேல போயி ஒளிஞ்சிப்பாராம். இப்படித்தான் ஒரு தபா ஒரு கடங்காரன் வந்து கேட்டப்போ அருமை புள்ளை சத்திவேலு [உத்தமப் புத்திரன்] வந்தவன் ஒரு ஆரஞ்சு மிட்டாயக் குடுத்து “உங்க அப்பன் எங்கடா? உண்மைய சொன்னா உன் கை நெறையா மிட்டாய் தர்ரேண்டா.” என்று கேட்க சின்னப்பிள்ளையல்லவா?இந்தப் பய்யன் “எங்கப்பன் அட்டத்துலதான் இருக்குது. என்கிட்ட ஊருக்கு போயிட்டேன்னு சொல்ல சொல்லுச்சி.”  என்று உண்மையைக் கூற வந்த கடங்காரன் “உன் பொண்டாட்டியோட தாளிய அறுத்துக் குடுடா, நீயெல்லாம் ஒரு ஆம்பிள்ளை.”  என்று கோபமாக பேச   இவோ தான் பால் பொருளுங்களால வந்த வருமானத்தை வச்சி கடனுங்களைக் கொடுத்தாளாம். இப்படி எத்தனை எத்தனையோ கதைங்க நம்ம கண்ணம்மாவோட வாழ்க்கையில.

 

எந்த சம்பவத்தை மறந்தாலும் நம்ம கண்ணம்மாவால மறக்கவே முடியாத சம்பவம் ஒண்ணு உண்டாம். அந்த சம்பவக் கதையைச் சொல்லித்தா தன் குழந்தைகள் இடம் “எந்த கஷ்டம் வந்தாலும், தலை போற நெலமையே வந்தாலும், எவங்கிட்டையும் கை நீட்டி   கடன வாங்கக்கூடாது; நேர் வழியிலி ருந்து குறுக்குவழிக்கு போகக் கூடாது; தண்டுமுண்டு தில்லுமுல்லுக்கு போகாதிங்கப்பா; பிறத்தியாரோட காசுக்கு ஆசைப்படாதிங்கப்பா;   நம்மளோட காச ரெண்டு பேரு ஏமாத்தித் திண்ணாலும் நாம யாரோட காசு பணத்துக்கும் கஷ்ட நஷ்டத்துக்கும் பாவ சாபத்துக்கும் ஆளாகாம பொழச்சிக்கோங்கப்பா.”  என்று சொல்லி தன்னோட  புள்ளைங்களுக்கு தன்  வாழ்க்கைல நடந்த அனுபவக்கதையயும் அடிக்கடி சொல்லுவாள் அந்த தாய்க்காரி.

 

நம்ம தலைவர் அதாவது கண்ணம்மாவோட புருஷரு ஒரு அகலக்கால் பேர்வழிங்க.  அவருக்கு “ஆசை இருக்கு தாசில் பண்ண- அதிர்ஷ்டம் இருக்கு மாடு மேய்க்க.” என்கிற பழமொழிக்கு இலக்கணமுங்க நம்ம  கதாநாயகரு. இப்போ நான் சொல்லப்போற ரகசியத்தை மட்டும் நீங்க தயவு செஞ்சி நம்ம கதாநாயகியம்மாளோட காதுல போட்டுப்பிடாதிங்க. இது எங்க கொல தெய்வம் பத்திரக்காளியம்மாமேல சத்தியம். நம்ம கதாநாயகரு கடன் வாங்கறதுல அந்தக் கால ராஜாங்களோட வீர தீர பராக்கிரமங்களை எல்லாம் மிஞ்சிடறவரு. அதுல வீராதி வீரரு. சூராதி சூரரு. அதுக்காக ஒரு பரணிய ஜெயங்கொண்டாரு இண்ணைக்கு இருந்தா பாடிப்புடுவாரு! அதோட தலைப்புகூட “ஆயிரம் பேருக்கிட்ட கடன் வாங்கின அபூர்வக் கடங்காரன் பரணி” இல்லன்னா “கந்துவட்டிக்கார கந்தசாமிபரணி” னு இருக்ககூடும்.  நம்மாளு கந்து வட்டி, மீட்டரு வட்டி, அஞ்சு வட்டி, பத்து வட்டின்னு வண்டி வண்டியா கடன வாங்குவாரு. வாங்கின கடத்துல பாதிய பொறி மண்டி கடல மண்டின்னு   அவருக்கு தெரிஞ்ச தொழிலுல முதலீடு பண்ணுவாரு. ஆனாமண்டி வேலைகள்ள அவரோட காலு நெலச்சி நிக்காது. அப்புறம்தான் செய்யவேண்டிய அந்த மண்டித் தொழில்களை வேலையாட்கள்கிட்ட விட்டுப்புட்டு அதே நேரத்துல பழக்கடைபீடாக்கடைனு வேறு வேறு கடைகளையும் ஆரம்பிப்பாரு.     இது தவிர, வீட்டுத் தரகு,  எடத்து தரகு இன்னும் என்ன வழிகளிலெல்லாம் பணம் வரும்னு நெனைப்பாரோ எல்லாத்திலும் கடன வாங்கி மொதலீடு போடறது. இப்படி லாப நஷ்டம்  பாக்காம ஒண்ணுத்துல வர வரவை எடுத்து  வேறு ஒண்ணுத்துல போடறது,  லாபம்வரலனாலும் எல்லாத் தொழில்களிலும் விடாம பணத்த அப்படியும் இப்படியுமா போட்டுட்டே இருக்கிறது என்பது  நம்ம கதாநாயகரோட வாடிக்கை.

 

இதுல வேடிக்கை என்னவென்றால் நம்ம கதாநாயகருக்கு சாமியாரு போதை வேற. எந்த சாமியாரு ஊருக்கு வந்தாலும் வீட்டுக்கு கூட்டியாந்து வெள்ளித் தாம்பூலத்துல வெத்தில பாக்கோட அரை காசோ  கால் காசோ வச்சி குருக்களை வணங்கி மரியாதை செய்வாரு. தயவுசெஞ்சு பொய் சொல்லுறதா நெனைக்காதிங்க. காசுன்னா நெசமாவே தங்க காசுதாங்க. தங்கம் விக்கிற வெலைல…. நீங்களே நெனச்சு பாருங்களேன் நம்ம கதாநாயகரோட சாமி பக்தியை!

அண்ணைக்கு ஊருக்கெல்லாம் அவரு ஊட்டுல அன்னதானம் நடக்கும். அதுமட்டுமில்லாம பழனிமலை, சபரிமலை, ஏழுமலை, இப்படி எட்டாத மலைகளுக்கும் போறதுக்கும் செலவழிப்பாரு.  அதுக்கெல்லாம் அவரோட மனசுலையும் நெனப்புலையும் அவருக்கு இருக்கிற குத்த உணர்ச்சிதானுங்க. அது என்ன குத்தமோ? எதுமாதிரியான குத்தமோ?  அதெல்லாம் நம்ம மாரியாத்தாளுக்கும் காளியாத்தாளுக்கும் செல்லியம்மாளுக்குந்தான் தெரியும்.

 

இப்படி இருக்க நம்ம கண்ணம்மா ஒரு நாளு ஊட்டுக்காரர கூப்பிட்டு ”நீரு சம்சாரித்தனம் நடத்தறத ஊரே மெச்சுது மச்சான். அது போதும். அதனால இனி நீங்க நான் சொல்லறமாதிரி பொறுப்பா ஊட்டுக்கும் வாசலுக்குமா நடந்துக்கிட்டு  நிம்மதியா சாப்பிட்டுக்கிட்டு புள்ளைகல பள்ளிக்கூடத்துக்கு உட்டுட்டு கூட்டியாறது, அதுங்களுக்கு உமக்கு தெரிஞ்ச நாலு எழுத்த சொல்லிக்குடுக்கிறதுன்னு இருங்க அது போதும்”னு சொல்லிப்பிட்டு    கடன் கொடுத்தவங்கல்ல பல பேர பதவிசா சமாளிக்கவேண்டிய பொறுப்பெல்லாம் பாலுக்காரம்மாவோட பொறுப்பாயிடுச்சி.

 

பலரோட கடன்களை நம்ம கதைத்தலைவி தன்னோட நகைகளை வித்தும், தனக்கு தாய்வீட்டுல இருந்து சீதனமா வந்த கால் காணி பூமியை வித்தும் அடச்சுப்புட்டாளாம். ஆனாலும்  முழுக் கடனையும் அடைக்கமுடியலை யாம்.  அவங்களுக்கு கடன் கொடுத்தவங்கள்ள இரங்கநாதன் செட்டின்னு ஒருத்தரும் இருந்தாராம். அவருக்கு ஐம்பது ஏக்கர் நஞ்சையும் நாற்பது ஏக்கர் புஞ்சையும் உண்டாம்.  அந்த ஆசாமி இடம் நம்ம தலைவரு தொழில்ல மொதல் பொட பணம்  இல்லன்னு வீட்டுப் பத்திரத்த அடகு வச்சி ரூவா 50000  கடன் வாங்கி இருந்தாராம். விஷயம் தெரிந்த கண்ணம்மா குறித்த நாளில் உரிய கடன்  பணத்தை வட்டியோடு கொடுத்துவிட்டிருக்கிறாள். நம்ம இரங்கநாதன் தனக்கு அவசரமா வெளி வேலை   இருக்குன்னும் வேறு ஒரு நாளுல வீட்டுப் பத்திரத்தை திருப்பித்  தறுவதாகவும் கூறிச் சென்றாராம்.
குறித்த நாளில்  பாலுக்கார அம்மா தன் வீட்டுப் பத்திரத்தைக் கேட்க நம்ம ரங்கநாதன் ”நீ பத்திரமும் தரலை, என் கடனையும் தரலை”னு சொல்லிட்டாராம். அன்று முதல் பாலுக்கார அம்மா மாசக்கணக்கில் வருத்தப் பட்டு  பத்திரம் போனது இல்லாம பணமும்  போச்சே. அவன் குடி நல்லா இருக்குமானு சொல்லி சபித்திருக்கிறாங்க.

 

அட என்ன கொடுமை,  பாலுக்கார அம்மாமாதிரி பலரிடம் வாங்கிக்கொண்ட பத்திரங்களையும் நகைகளையும் திருப்பித் தராமல் ஏமாற்றிய பணத்தை எல்லாம் முதலீடா வச்சி செட்டியாரு ஒரு சக்கரையாலை தொடங்க திட்டமிட்டு அந்த திட்டத்துக்கு ஏத்தாப்புல உரிய எடத்தையும் தேர்ந்தெடுத்து கட்டடம் கட்டி,  எந்திரங்களும் வாங்கி, உரிய நாளில் பூசையெல்லாம் பொட்டு சக்கரை ஆலைய நடத்த ஏற்பாடெல்லாம் செஞ்சிப்புட்டாராம். அப்புறம், எல்லாம் சரியாத்தான் நடந்துக்கிட்டு வந்தது. ஆனா, அது அப்படி நடக்குமுன்னு படச்ச பிரம்மன்கூட நெனச்சானான்னு தெரியலடா சாமி. அதான் இவரு சக்கரை ஆலையத் தொடங்குற நாளுக்கு முந்தின நாளுதான் அப்படி நடந்துச்சாம். செட்டியாரு தன்னோட கரும்புகொல்லைல காவலிருக்க ஆளு போட்டா செலவு ஆவுதின்னும், இரண்டு கால்ஜீவன்களோ நாலு காலு ஜீவன்களோ தன்னோட கொல்லைல நொழையக்கூடாதுன்னும் நொழஞ்சுப் புட்டா கரும்புல ஒண்ணு ரண்டுக் கொறஞ்சுப்புடுமேன்னும்  நெனச்சி கரண்டு வேலி அமைச்சிவச்சிருந்திருக்கிறாரு. இதப்பத்தி ஊருல யாருக்கிட்டையும் மூச்சி விடல அந்த புத்திசாலியான செட்டிக்காரரு. இல்ல இல்ல, கெட்டிக் காரரு.

அடி ஆத்தி! இப்படி கூட நடக்குமானு நெனைக்காதிங்கடா சாமிகளா. எதுவும் நடக்கும். யாருக்கும் நடக்கும். எப்போ வேணும்னாலும் நடக்கும். இதுல சந்தேகமே வேணாம். சரி என்னதான் நடந்துச்சி? ஆருமே நெனைக் காதமாதிரிதான் நடந்துபோச்சி அது. ஊரே மில்லு தொறாக்குறாதப்பத்தி பேச்சா இருக்க, பெரியவரு பூசாரிய கூட்டியார வெளியூருக்கு போய் திரும்பு றப்போ அவருக்கு காத்திருந்துச்சி அந்த அதிர்ச்சி. அவரோட ஒரே மகன், அது தாங்க ஏக புத்திரனான தமிழ்ச் செல்வன் அவரு கண் எதிரிலேயே ரப்பராட்டம் கருகிப்போயி கரும்புக்கொல்ல வரப்புமேல விழுந்து கெடந்திருக்கான்.

 

எப்படி ஆச்சின்னா? என்னத்த சொல்லறது? ஜலவாதிக்கு போய்ட்டு வரலாம்னு போயிருக்கான். போயி ஒக்காரப்போ ஒண்ணும் தெரியல. அட அதுதான் நம்ம ஊருலதான் எப்போ கரண்டு போவுது? எப்போ வருதுன்னு கரண்டத் தவிர, இல்லைனா கரண்டாபிஸ்காரங்களத் தவிர யாருக்குத்தான் தெரியும்?

 

நடந்தது நடந்ததுதான். காசாசை கண்ண மறைச்சது. கரண்ட் ஆசை ஒரே வாரிசான புள்ளைய மறைச்சது. போன உசுர எப்படி திருப்ப முடியும்? எந்த வாரிசுக்காக சொத்து சேத்தாரோ செட்டியாரு அந்த வாரிசையே அள்ளிக் குடுத்துப்புட்டு அழுவுறாரு.  ஊர அடிச்சி ஒலைல போடறவன் கதி எல்லாம் இப்படித்தானாம்.   இந்த தன் வாழ்க்கை சம்பவத்தை தன் குழந்தைகளுக்குச் சொல்லி “எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் குறுக்கு வழிக்கு போகக் கூடாதைய்யா.  உப்பைத் திண்ணவன் தண்ணி குடிப்பான். தப்பு செஞ்சவந் தண்டனை பெறுவான்”, என்று கூறி தன் பிள்ளைகள் நேர்மையாகவே வாழவேண்டும் என அறிவுறை கூறினாளாம் நம்ம கதாநாயகி கண்ணம்மா.

 

அட நவீன கதைக்காரர்களே,  இந்த கதைல எதோ நீதி கீதின்னு இருக்கு. இப்படி எல்லாம் கதை எழுதாதன்ணனு சொல்லி சத்தம் கித்தம் போட்டு காத கிழிச்சிப்புடாதிங்க. எவனோ எழுதச் சொன்னான்.   எவளோ  ஒருத்தி தன்னோட கதைய செவனேன்னு இருக்கிற என்கிட்ட இதையும் பதிஞ்சு வைய்யி சாமீன்னா. நானும் மத்தவங்களோட ஆசைக்கு நாம தடையா இருக்கக்கூடாதுன்னு எழுதிவச்சிப்புட்டேன். எப்பா சாமி, வேதாளம்மாரி விமர்சன மரத்துல ஏறாம இருந்தாப் போதுமடா சாமி.

——————————-

Series Navigationபுத்தாக்கம்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *