விதி

This entry is part 21 of 28 in the series 27 ஜனவரி 2013

 

ராவணன் மிகப்பெரிய சிவ பக்தன்

. ராவணேசுவரன் என்கிற அந்த ஈசுவர பட்டம் பெற்று விட்ட இலங்கை அரசன். எப்போதும் உடல் முழுவதும் அவன் இட்டுகொள்வதோ பட்டை பட்டையாய் அணிசெய்யும் அந்த ஆலவாயான் திரு நீறு. நம சிவாய ஐந்தெழுத்துத் திருமந்திரத்தை அவன் நா ஓயாமல் சொல்லிகொண்டே இருந்தது.

நான்கு வேதங்களில் அந்த சாமத்தை அவன் கரை கண்டவன்

. சாம கானத்தை அவன் மெய்மறந்து வீணை கொண்டு மீட்டத்தொடங்கினான் வானுயர்ந்த அந்த இமய கிரி உருகி நின்றது அவன் விரல் எழுப்பிய தந்தியின் இசைப்பிரவாக மகிமை அப்படி. அருகே இருந்த பாறை ஒன்றின் மீது தன் வீணையை வைத்துவிட்டு இரண்டு கைகள் எடுத்துச் சிரம் குவித்து நம சிவாய என்றான். இசைக்கருவியின் அடிப்பாகமோ உருகிய கற்பாறையில் மாட்டிக்கொண்டு பின் உறைந்துபோயிற்று. எப்படித்தான் இசைக்கருவியை மீண்டும் வேளியே எடுப்பது. ராவணன் திணறிப்போனான். தயாபரன் அந்த சிவ பெருமான்தான் ராவணனுக்கு ஒரு யோசனை சொன்னார். தெய்வ ஆணைப்படி மீண்டும் மீண்டும் அதே சாமகானத்தை சிறிது வெளித் தெரிந்த அந்த வீணையின் கம்பி வழி வாசித்தான்.. சாம வேதத்தை அவன் கை மீட்ட மீட்டக் கைலாய மலை இளக ஆரம்பித்தது. இசைக்கருவியை அவன் டக்கென்று லாகவமாய் எடுத்துக்கொண்டான்.

ராவணனுக்கு நீண்ட காலமாக ஒரு அய்யம்

. ஏன் இந்த கடவுள்கள் வரிசையில் அந்தச் சிவபெருமான் மட்டும் சுடலையில் குடிகொள்ள வேண்டும். அப்படி என்னதான் கட்டாயம் வந்தது. போயும் போயும் சுடலையிலா படி அளக்கும் என் பெருந்தெய்வம் சிவன் குடி இருப்பது.இது என்னப்பா கொடுமை. சுடலையில் என்ன பிணஞ்சுடு புகை. துர் நாற்றம். ஓயா நரிகள் ஊளை ஒலி. வாம பாகத்து அன்னை பராசக்தியிடம் ஒருமுறை கேட்டுப்பார்த்தான். ராவணனிடம் பராசக்தி அவள் பேச ஆரம்பித்தாள்.

கழுத்தில் பார்த்தாயா ராவணா, கொடுமையை அவருக்கு ச்சீறும் நச்சுப் பாம்பு, இடுப்பில் பார் கவிச்சை நெடி வீசும் கிழிந்துபோய்விட்ட புலித்தோல் மான் தோல், எப்போதேனும் அங்கே ஆனைத்தோல். சுடலைப்பொடி விரவிய திரு மேனி. கழுத்திலோ நீல கண்டம் என்னும் நஞ்சு. எதைச்சொல்வது நான். என் விதியின் எழுத்து அப்படி. இந்த லட்சணத்தில் யாம் எங்கு குடியிருந்தால்தான் என்ன போ

கௌரி விரதமிருந்துதானே அய்யனை மணம் முடித்தீர்கள் தாயே

பெண் தெய்வம் லேசாகப்புன்னகைத்தாள்

.

அவர் புத்தியில் கொஞ்சம் உனக்கும் இருக்காதா என்ன. அந்த நீலகண்டத்துச் சிவனை ஓயாமல் ஆராதிப்பவன் ஆயிற்றே நீ

தாயே விடை கொடுங்கள்என்றான் ராவணன்.

இது இங்குபோய் சரிப்பட்டு வருமா வராதுதான்

.சாட்சிக்கரன் காலில் வீழ்வதற்கு அந்த சண்டைக்காரன் காலில் வீழ்ந்துவிடுவது எவ்வளவோ மேல். ஆகக்கைலாசபதி சிவபெருமானிடமே சென்று இதற்கு விடையைக் கேட்டுத்தெரிந்து கொள்வது என ராவணன் முடிவு செய்தான்.

நந்தியின் அனுமதி பெற்றுக்கொண்டு சிவபெருமானைச்சென்று பார்ப்பது என முடிவாகியது

. நந்திக்கோ நிரந்தரமாக கைலாயத்தில் இடம் ஒதுக்கி இருக்க கைலாயத்தின் எஜமானன் சிவபெருமானுக்கோ பிணம் எரியும் சுடுகாட்டில் மட்டும் நிரந்தர இடம்

இது எந்த நியாயத்தில் சேர்த்தியோ அந்த ராவணனுக்கு மட்டுமென்ன யாருக்கும் விளங்கினால்தானே

.

அண்ட சராசரங்களை ரட்சித்துக்காத்து நிற்கும் தனிப்பெருங்கருணையே என் பெருந்தெய்வமே சிவபெருமானே உம்மை ஒன்று கேட்டுவிடவேண்டும் என்பதாக அடியேனுக்கு நீண்ட காலமாகவே ஒரு ஆதங்கம். இதுவே எனக்கு வாய்த்த சந்தர்ப்பம் கேட்கட்டுமா. நீர் ஏன் பூரணமாய் ஒளிரும் ரத்தின மாளிகையொன்று கட்டிகொண்டு த் தங்க சிம்மாசனத்தில் அங்கே அமர்ந்து பெருங் கம்பீரமாய் வதியக்கூடாது.சுடுகாட்டில் என்ன உமக்கு அப்படி ஒரு கீழான வாழ்க்கைராவணன் சிவ பெருமானிடம் கேட்டே விட்டான்.

நல்ல யோசனை சொன்னாய். ராவணா, என் மைத்துனன் வைகுண்ட வாசன் கரிய திருமாலுக்கும் நான் இம்மாதிரி இருப்பதில் வருத்தம் உண்டு. அவன் தங்கை பார்வதிக்குப்பார் எவ்வளவு சிரமம். ஆக நீயோ வந்து கேட்டும்விட்டய் ஆக எனக்கு ஒரு மாளிகை உன் விருப்பப்படியே கட்டு.நான் உனக்கு இக்கணமே அனுமதி தந்தேன். போ

சிவபேருமான் சொல்லிவிட்டு கடகட என ஒருமுறை நகைத்தார்

.

தெய்வமே ஏன் நகைக்கிறீர்கள்

ஒன்றும் இல்லை.எதுவோ நினைத்தேன்.அதான்

ராம அவதாரம் எடுக்கபோகும் கரிய திருமேனியான்

. எச்சரிக்கை தந்தான். ‘அய்யனே சிவபெருமானே யான் ராம அவதாரம் எடுத்து அந்த ராவணனைச்சம்காரம் செய்யப்பணிக்கப்பட்டு இருக்கிறேன். விதி அது.நீர் எதுவும் வாக்கு க்கொடுத்துவிட்டு எப்போதும் போல் மாட்டிக்கொண்டு விடாதேயும். அடியேனின் சிறு எச்சரிக்கை, என்னை மன்னியுங்கள்திருமால் முடித்துக்கொண்டார். அய்யனின் நகைப்புக்கு க்காரணம் அதுவே.

என்ன நினைத்தீர்களோ அது சொல்லிவிட்டால் என்மனம் மகிழும்

ராவணா எனக்கு என் மைத்துனன் திருமால் அளவுக்கு எப்போதும் விஷயங்கள் எட்டுவதே இல்லை. ஆகத்தான் இப்படி. சரி விடு அதை. நீ மாளிகை ஒன்று எழுப்பி விட்டுப்பின் வாயேன் பேசுவோம்

உங்களுக்கு ஒரு மாளிகை எழுப்பும் எனக்கு ஒரு சிறு விண்ணப்பம். தட்டாமல் அது அருள வேண்டும். உங்கள் தெய்வக்கையால் மட்டுமே எனக்கு மரணம் சம்பவிக்க வேண்டும்

எதிலும் இப்படி ஒரு அவசரம்தான் உனக்கு. ராவணா எனக்கு நீ கட்டப்போகும் அந்த மாளிகையை முதலில் எழுப்பி முடி. நீ கேட்கும் வரம் பற்றிப்பிறகு பேசுவோம்

சிவபெருமான் முடித்துக்கொண்டார்

.

ராவணன் இலங்காபுரியில் பரமனுக்கு ஒரு ரத்தின மாளிகை எழுப்பினான்

.தங்க சிம்மாசனம்

அமைத்து முடித்தான்

. விண்ணுலகத்து மயனும் விசுகர்மாவும் பம்பரமாய்ச்சுழன்று சுழன்று இலங்கையில் திருப் பணி முடித்தனர்.இந்திரனுக்கு த்தான் பொறுக்க முடியவில்லை.நாம் போய் சிவபெருமானிடம் இப்படி மாளிகை ஒன்று அய்யனுக்கு க்கட்டித்தருகிறேன் என்று விண்ணப்பித்தால் ஒத்துகொள்வாரா. போயும் போயும் அசுரன் ராவணனிடமா போய் இதனை எல்லாம் கேட்பது.கரிய திருமாலுக்கு தெரிந்த அளவுக்கு சிவ பெருமானுக்கும் சரி படைப்புக்கடவுள் அந்த பிரம்மனுக்கும் சரி பிரச்சனையின் அந்த க்கனம்தான் எப்போதேனும் விளங்குகிறதா.ஆனால் நாம் அவ்விடம் போய் இவை இவை இப்படி என்று சொல்லத்தான் முடியுமா. புலம்பியே தீர்த்தான் இந்திரன்.

லங்காபுரியில் ராவணன் கட்டிய பிரம்மாண்ட மாளிகையைப்பார்த்து வான் வதியும் கதிரோனும் நிலவுக்கடவுளும் அயர்ந்துதான் போனார்கள்

.

பணி முடிந்து போயிற்று

. அந்த லங்காஅசுரன் ராவணன், சிவபெருமானிடம் போய் வேண்டிக்கொண்டான்.

நான் அனுதினமும் திருப்பாதம் பணியும் என் கருணைக்கடலே பெருந்தெய்வமே. தங்கள் திரு ஆணைப்படி மாளிகை கட்டும் திருப்பணியை முடித்து நான் தங்கள் திருமுன் வந்து நிற்கிறேன். லங்காபுரி த்திருமாளிகையில் அய்யன் எழுந்தருளி அங்கே குடிகொள்ள வேண்டும். சிரம் தாழ்ந்த இந்த வணக்கத்தை ஏற்றுக்கொண்டு எனக்கு அருள் புரிய வேண்டும் இக்கணமே

மிகவும் சரி ராவணா சொல்லைக்காப்பாற்றுவாய் நீ என்பதிலெனக்கு அய்யமே இல்லை

அய்யனே என் வரம்

என்ன கேட்டாய் நீ

தங்கள் திருக்கரம் கொண்டு மட்டுமே நான் மரணிக்கவேண்டும். அய்யனே என் இந்த அசுரப் பிறவித்துயர் களைய ஒரு பேராசை இச்சிறுவன் ராவணனுக்கு

ஒன்றை மறந்துபோய் விட்டாய் ராவணா நீ. பஞ்சாட்சர மந்திரம் அல்லவா அந்த நம சிவாயம். அது சொல்வதை மட்டுமே நீ உன் உயிர் மூச்சாக்கி விட்டு என்னைக்கொல் கொல் என்கிறாய். உன் உடல் முழுவதும் மணக்கிறதே திரு ஆலவாயான் திரு நீறு. எப்படி ராவணா உன்னைக்கொல்வது. எனக்குச் சொல்லேன் பார்க்கலாம் நீ.’

அய்யனே என்ன சொல்கிறீர்கள். அவைதாம் என் வாழ்முதல். அறிவீர்கள்தானே என் தெய்வமே. பின் எப்படி அவைகளை யான் துறப்பது. அது சொல்லவும் அஞ்சி நடுங்குகிறது பாரும் இப்போதே என் நெஞ்சம்‘.

ஆக என்னால் உன்னைக்கொல்வது ஆகும் காரியமா

பேரருளே எனக்கு வழி சொல்லுங்கள். என் அசுர ப்பிறவி கடை சேர வேண்டும். தாங்கள் எனக்குத்தாரும் வரம்

நீ எனக்கு எழுப்பிய அந்த ரத்தின மாளிகையில் நீயே வாசம் செய். என் சுடலைதான் எனக்கு சாசுவதம். பெரு விதி யின் கட்டளை அது. உனக்கும் எனக்கும் மேலாக பெருவிதி எப்போதும் .’

பரம் பொருளே என் இப்பிறவிக்கதிக்கு ஒரு விமோசனம் சொல்லுங்கள்.’

எனக்குக்கட்டிய லங்காபுரி ரத்தின மாளிகையில் நீ போய் தங்க சிம்மாசனம் ஏறி அந்த உத்தமிப்பத்தினி மண்டோதரியோடு வாழ்.உன்னை இப்பிறவித்துயரிலிருந்து மீட்டு எடுக்க வேண்டிய அந்த ப்பெருங் கடமை என் பொறுப்பு. நீ அரண்மனைக்குப்போ. தெய்வம் வேறு அதனினும் உயர்ந்தது அந்த தெய்வ விதி. ‘

பிணஞ்சுடு மண் தரையில் கீழே விழுந்து வணங்கிய ராவணன்

.நம சிவாய ச்சொல்லிப்புறப்பட்டான்.

கணம் கூட அங்கே நிற்காமல் அகன்று போனான் ராவணன்

.

அயோத்திப்பெரு மன்னன் தசரதனின் பளிங்கு அரண்மனையில் தனிமையில் இருந்த அரசப் பேரழகி கைகேயின் அந்தப்புற பட்டு மஞ்சத்தில் போய் மந்தரை என்னும் கூனி அமர்ந்துகொள்கிறாள்

. லங்காபுரியில் எங்கும் திரு விழாக்கோலம். அந்தக் கடவுளுக்குக்கட்டிய கட்டிய திருமாளிகையில் ராவணக்குடும்பம் குடியேற புகு விழா ஏற்பாடுகள் உடன் தொடங்கி விட்டன.

———————————————————————————————————————————————
Series Navigationபூரண சுதந்திரம் யாருக்கு ?தாய்மை

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *