தெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத்
yandamoori@hotmail.com
தமிழாக்கம்: கௌரி கிருபானந்தன்
tkgowri@gmail.com
சாஹிதிக்கு முதலில் அது ருசிக்கவில்லை. வயிற்றைப் பிரட்டியது. இரண்டாவது தடவை கொஞ்சம் நன்றாக இருப்பது போல் தோன்றியது. சிநேகிதி அவளை ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள். தான் கண்டுபிடித்த ஆனந்தம் அடுத்தவளுக்கு எப்படிப்பட்ட சந்தோஷத்தைத் தருகிறது என்று பார்க்க வேண்டும் என்ற துடிப்புடன் கூடிய ஆர்வம் அது.
“நன்றாய் இருக்கு” என்றாள் சாஹிதி. “எனக்கு எந்த வருத்தங்களும் நினைவுக்கு வரவில்லை. காற்றில் பறந்து போய்க் கொண்டிருப்பது போல் இருக்கு. உனக்கு என் நன்றியை எப்படி சொல்லுவேன்?”
சிநேகிதி பெருமையுடன் சிரித்தாள்.
கொஞ்ச நேரம் ஆனந்தமாய் இருந்தது உண்மைதான். ஆனால் வீட்டிற்கு வந்து படுததுமே எரிச்சலாக இருந்தது. இதயம் பற்றி எறிவது போல் இருந்தது. தூக்கம் வரவில்லை. இன்னும் கஞ்சா வேண்டும் என்று தோன்றியதால் அப்படியும் இப்படியுமாக ரொம்ப நேரம் புரண்டுத் தவித்துக் கொண்டிருந்தாள். அதற்குப் பிறகு புத்தகத்தை வைத்துக் கொண்டு படிக்க முயன்றாள். மனம் அதில் லயிக்கவில்லை. இன்னொரு டோஸ் கஞ்சா கிடைத்தால் நன்றாக இருக்கும் என்ற உணர்வு! நோட் புத்தகத்தில் எழுதிக்கொண்டாள், கஞ்சாவைப் பற்றி.
‘எனக்கு ஏதோ வேண்டும் போல் இருக்கிறது. அது இல்லாவிட்டால் என்னால் உயிர் வாழ முடியாது.
இன்று இரவு எனக்கு என்ன வேண்டும் என்று தெரிந்தால் அம்மா உயிரோடு இருப்பாளா?”
அன்று இரவு அவள் ரொம்ப நேரம் கழித்து உறக்கத்தில் ஆழ்ந்தாள்.
மறுநாள் அவள் கல்லூரிக்குப் போன பிறகு ஏதோ வேலையாய் பரமஹம்சா அவள் அறைக்குள் போனான். நோட் புத்தகத்தின் பக்கங்கள் காற்றுக்குப் படபடத்துக் கொண்டிருந்தத்தைக் கண்டான்.
எடுத்துப் படித்தான். (இது தனிமையைப் பற்றி) “எனக்கு அன்பு வேண்டும். தன்னலமில்லாத அன்புக்காக என் மனம் தவித்துக் கொண்டிருக்கிறது. எனக்கு யாருமே இல்லை.
(இது கஞ்சாவைப் பற்றி) “எனக்கு ஏதோ வேண்டும்போல் இருக்கிறது. அது இல்லாமல் என்னால் உயிர் வாழமுடியாது. இன்றிரவு எனக்கு என்ன வேண்டும் என்று தெரிந்தால், அம்மா உயிருடன் இருப்பாளா?”
பரமஹம்சாவின் புருவங்கள் முடிச்சிட்டுக் கொண்டன. கடவுள் தனக்கு இந்த விஷயத்தை இவ்வளவு நாளாய் சொல்லாமல் போனதற்கு வருத்தம் அடைந்தான். இரண்டுமே தன்னைப் பற்றித்தான் என்று எண்ணிக்கொண்டான்.
*****
“எனக்கு ரொம்ப தெரிந்தவர்கள். ரொம்ப நல்ல குடும்பம். எல்லோருமே நன்றாய்ப் படித்தவர்கள்தான். நாகரிகம் தெரிந்தவர்கள். பையன் லாயர். பார்க்க லட்சணமாய் இருப்பான். சாஹிதிக்கு நல்ல பொருத்தம். போனமுறை வந்த போது இந்த மாதிரி என் தங்கையின் மகள் இருக்கிறாள் என்று விவரங்களைச் சொன்னேன். பையன் ஏதோ கல்யாணத்தில் சாஹிதியைப் பார்த்திருக்கிறானாம். பிடித்திருக்கு என்று சொன்னான். வீட்டில் பையனின் விருப்பத்துக்கு மறுப்புச் சொல்ல மாட்டார்கள். நீயும் சரி என்றால், வரச் சொல்கிறேன். சாஹிதிக்குப் பிடித்துவிட்டால் உடனே முகூர்த்தத்தை வைத்து விடலாம்.” நிர்மலாவின் அண்ணா உற்சாகமாய்ச் சொல்லிக்கொண்டே போனார்.
‘சரி அண்ணா! வரச் சொல்லுவோம். முதலில் பரமஹம்சாவிடம் சொல்ல வேண்டாமா?” என்றாள் நிர்மலா.
அன்று மாலையில் பரமஹம்சா வந்தான். நிர்மலாவின் அண்ணாவைச் சுருக்கமாக விசாரித்தான்.
“நிர்மலா! இன்று ஏகாதசி. நாம் பூஜையில் உட்கார வேண்டாமா? வா” என்றான். நிர்மலா உடனே சுவாமி அறைக்குப் போய்விட்டாள். அவனும் பின் தொடர்ந்தான். இரண்டு மணி நேரம் உள்ளே பூஜை நடந்தது.
சாஹிதி கோபத்தோடும், வருத்தத்தோடும் உதட்டை பற்களால் அழுத்திக் கொண்டாள். உறவினர் யார் வந்தாலும் பரமஹம்சா இதே சடங்கைத்தான் அனுசரிப்பான். அவனுடைய ஈகோவை இந்த விதமாக திருப்திப் படுத்திக் கொள்வான்.
சாப்பாடு வேளைக்கு இருவரும் வெளியே வந்தார்கள். நிர்மலாவின் முகத்தில் களைப்பு. கண்களில் மட்டும் திருப்தி. பெரிய மாமா அவளைக் கொஞ்சம் சந்தேகமாய்ப் பார்த்ததைக் கவனித்தாள் சாஹிதி. வெட்கத்தால் அவள் முகம் சிவந்துவிட்டது.
சாப்பிடும் போது அவர் திரும்பவும் அதைப் பற்றிப் பேச்செடுத்தார்.
“அப்படியா? நல்ல இடம் என்று சொல்றீங்க. ஜாதகம் பார்க்காமல் எப்படிச் சொல்வது? வரவழைத்துக் கொடுங்கள். பார்த்துவிட்டுச் சொல்கிறேன்” என்றான் பரமஹம்சா.
“ஜாதகமா? எங்க வீட்டில் இவ்வளவு நாளாய் அந்த மாதிரிப் பழக்கம் எதுவும் இல்லையே?”
“இவ்வளவு நாளாய் நடந்ததைப் பற்றி நான் பேசவில்லை. உங்களுக்கு நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம். என் அபிப்பிராயத்தைக் கேட்டதால் சொல்கிறேன். ஜாதகப் பொருத்தம் இல்லாமல் கல்யாணம் பண்ணினால் அனர்த்தம்தான் ஏற்படும். இது அவர்கள் இரண்டு பேருக்கு மட்டுமே சம்பந்தப்பட்டது இல்லை. பிறக்கப் போகும் குழந்தைகளுக்குக் கூட. அதற்குப் பிறகு உங்கள் விருப்பம்” என்றான்.
நிர்மலா இடையில் புகுந்து “அப்படிச் சொல்லாதீங்க. நீங்க சொல்லிவிட்டால் இல்லை என்ற கேள்விக்கே இடமில்லை. உங்க அபிப்பிராயத்திற்கு மாறாக இந்த வீட்டில் எந்த காரியமும் நடக்காது. அண்ணா! அவர்களிடமிருந்து ஜாதகத்தைக் கேட்டு வாங்கிக்கொண்டு வா” என்றாள்.
“சரிம்மா. இருக்கா என்று கேட்டுப் பார்க்கிறேன்” என்றார் அவர். அவருடைய உற்சாகம் முழுவதும் வற்றி விட்டது. அந்த வீட்டில் தன்னுடைய இடம் என்ன என்று தெரிந்துகொண்டு விட்டார். ஆனாலும் அவர் அதை அவ்வளவாய் போருட்படுத்தவில்லை. நல்ல வரன் என்பதால் விட்டுவிடக் கூடாது என்ற எண்ணத்தில் இருந்தார். மறுநாள் ஜாதகத்தைக் கேட்டு வாங்கி வந்தார்.
ஆனால் பரமஹம்சா ஜாதகத்தைப் பார்த்துவிட்டு ஒதுக்கிவிட்டான். “இந்தப் பையனின் ஜாதகம் பெண்ணுக்குப் பொருந்தவே பொருந்தாது. தோஷம் கூட இருக்கு. முக்கியமாய் தாய் மாமாவுக்கு தீங்கு நேரும்” என்று சொல்லிவிட்டான்.
“எனக்கு ஒன்றும் நேராது. அந்த மாதிரி நம்பிக்கையே எனக்கு இல்லை.” துணிந்து. சொன்னார் அவர்.
“என்ன அண்ணா! அப்படிச் சொல்லிவிட்டாய்? இந்த வரன் வேண்டாம். வேறு இடம் பார்த்துக்கொள்ளச் சொல்லி அவர்களிடம் சொல்லிவிடு” என்றாள் நிர்மலா.
அவர் அதிருப்தி அடைந்தவராய் போய்விட்டார்.
“சாஹிதியின் ஜாதகத்தைப் பார்த்தேன் நிர்மலா. இன்னும் இரண்டு மூன்று வருஷம் வரையில் கல்யாண வேளை வரவில்லை. நாம் சிரமப்பட வேண்டிய அவசியம் இல்லை. இந்த விஷயத்தை உன் அண்ணாவிடமும் சொல்லிவிடு.”
“அப்படியா? அப்படி என்றால் படிக்க வைப்போம். இப்போதைக்கு எந்த வரனும் பார்க்க வேண்டாம் என்று அண்ணாவிடம் சொல்லி விடுகிறேன்” என்றாள் நிர்மலா.
“அதுமட்டுமில்லை. சாஹிதியின் கல்யாண விஷயத்தை என்னிடமே விட்டுவிடச் சொல்லு. நான் இருக்கும்போது மற்றவர்கள் எதற்காக வரன் பார்க்க வேண்டும்?” என்றான். சாஹிதி நோட்டுப் புத்தகத்தில் எழுதியிருந்ததை அவன் மறக்கவில்லை.
அன்று இரவே நிர்மலா தன் அண்ணாவிடம் சொன்னாள். ஆனால் அவர் இந்த விஷயத்தை அவ்வளவு சுலபமாக விட்டுவிட விரும்பவில்லை. சாஹிதியிடம் நேராகவே இதைப்பற்றிப் பேசிவிட்டு, “அந்தப் பையனை உனக்குக் காண்பிக்கிறேன்?” என்றார்.
என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் அவள் தலையை அசைத்தாள். இந்த உரையாடலை பரமஹம்சா கேட்டுவிட்டான் என்று அவர்களுக்குத் தெரியாது.
மாமா அடுத்த வாரமே அந்தப் பையனிடம் பேசினார். ஆனால் அவர்களுக்கு இதற்கு முன்னால் இருந்த ஆர்வம் இப்போது இல்லை. “அந்த சம்பந்தமா? வேண்டாம் விடுங்கள்” என்று மறுத்துவிட்டார்கள், மரியாதையுடனே.
மாமாவின் முகம் தொய்ந்து விட்டது. அதற்கு மேல் இந்த விஷயத்தை யாரிடமும் பிரஸ்தாபிக்கவில்லை. முதலில் அத்தனை உற்சாகம் காட்டியவர்கள் இப்போது ஏன் அவ்வாறு சொன்னார்கள் என்றும் அவருக்குப் புரியவில்லை.
இது நடந்த ஒருவாரம் கழித்து சாஹிதிக்கு ஒரு கடிதம் வந்தது. அதில் இவ்வாறு இருந்தது.
சாஹிதி அவர்களுக்கு,
வணக்கம் என் பெயர் குணசேகர். நினைவு இருக்கும் இல்லையா? நானும், பரத்வாஜும் உங்கள் வீட்டிற்கு வந்திருந்தோம். உங்கள் அங்கிள் வைத்த மாப்பிள்ளைப் பார்க்கும் பரீட்சைக்கு.
இந்தக் கடிதம் எழுதுவதற்கு ஒரு முக்கியமான காரணம் இருக்கிறது. உங்களுக்கு சமீபத்தில் ஒரு வரன் வந்தது. பையன் லாயர். அந்தப் பையனும் நானும் நண்பர்கள். இருவரும் ஒரே பெண்ணை பெண்பார்க்க போக இருந்ததைப் பற்றி யதேச்சையாக பேச்சுக்கிடையே தெரிந்துகொண்டு வியப்படந்தோம்.
அந்தப் பையன் வீட்டில் உங்கள் சம்பந்தம் வேண்டாம் என்று மறுத்ததற்கு ஒரு காரணம் இருக்கிறது. சில நாட்களுக்கு முன்னால் அவர்களுக்கு வந்த ஒரு கடிதத்தை எனக்குக் காட்டினான். பண்பு நிறைந்தவர்கள் என்பதால் இந்தக் கடிதத்தைப் பற்றி வெளியில் யாரிடமும் சொல்லவில்லை. உங்களுக்குப் பின்னால் நடக்கும் விஷயங்கள் உங்களுக்குத் தெரியவேண்டும் என்ற உத்தேசத்தில்தான் அந்த கடிதத்தின் நகலை உங்களுக்கு அனுப்பி இருக்கிறேன். இந்தக் கடிதத்தை அனுப்பியது உங்களுடன் மேலும் அறிமுகத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தோடு மட்டும் இல்லை.
இப்படிக்கு குணசேகர்
அவள் நடுங்கும் விரல்களுடன் இன்னொரு கடித்தத்தைப் பிரித்தாள். யாரோ இடது கையால் எழுதி இருப்பது போல் கோணல் மாணலாய் இருந்தது கையெழுத்து.
“உண்மை விளம்பி எழுதுவது. சமீபத்தில் நீங்கள் பார்த்த நிர்மலா வீட்டு சம்பந்தம் அத்தனை நல்லது இல்லை. அவர்கள் வீட்டுப் பெண் சாஹிதியின் நடத்தையை பற்றி அக்கம் பக்கத்திலும் சரி, கல்லூரியிலும் சரி, யாரைக் கேட்டாலும் சொல்லுவார்கள்., காந்திநகர் குவாலிடி ஐஸ்கிரீம் கடைக்காரனைக் கேட்டாலும் போதும்.”
சாஹிதியின் முகம் களையிழந்தது
நினைவுதப்பி போகாமல் இருக்க பெரும் முயற்சி தேவைப்பட்டது.
பெரிதாக கத்த வேண்டும் போல் இருந்தது. அப்படியே சரிந்து விழுந்தாள்.
பரமஹம்சா அவளை காந்திநகர் குவாலிட்டி ஐஸ்க்ரீம் ஷாப்பிற்கு நிறைய தடவை அழைத்துச் சென்று இருக்கிறான்.
*******
“நான் ரொம்ப அதிர்ஷ்டசாலி. கடவுள் என்னைக் கருளையுடன் அருள்பாலித்து வருகிறார். எனக்கு ஏற்படும் பிரச்சனைகள் தானாகவே விலகிப் போய் விடுகின்றன. மற்றவர்களிடம் இல்லாத சிறப்பு ஏதோ என்னிடம் இருக்கு” என்று சொல்லிக்கொள்வார்கள் சிலர்.
‘நான் மிகவும் துரதிர்ஷ்டசாலி. எனக்கு இருக்கும் பிரச்சனைகள் இந்த உலகத்தில் வேறு யாருக்குமே இருக்காது” என்று சொல்லிக் கொள்வார்கள் வேறு சிலர்.
இருவரின் கருத்துகளும் அர்த்தமற்றவை. எதற்குமே பயன்படாத கருத்துகள் இவை இதை உதாரணம் காட்டுவதற்கு ஒரு நல்ல கதை இருக்கிறது.
ஒரு அரசனுக்கு இரு மகன்கள். அரசனுக்கு குணப்படுத்த முடியாத நோய் வந்து சஞ்சீவினி மூலிகை தேவைப்பட்டது. இரு மகன்களும் கிளம்பினார்கள். புறாவை பறக்கவிட்டு ஆளுக்கு ஒரு திசையாய்ப் புறப்பட்டார்கள். மூத்த மகனின் புறா ஒரு மலைமேல் போய் உட்கார்ந்து கொள்கிறது. “இவ்வளவு பெரிய மலையை எப்படி ஏறுவேன்? துரதிர்ஷ்டம் என்னை துரத்துகிறது” என்று அவன் கீழேயே வருத்தத்துடன் நின்றுவிட்டான். மற்றொரு புறா ஒரு புற்றின் மேல் உடகார்ந்தது. அதிர்ஷ்டம் புற்றுக்குள் மூலிகை உருவத்தில் உள்ளதோ என்னவோ என்று இரண்டாவது மகன் புற்றுக்குள் கையை விட்டான். உள்ளே இருந்த பாம்பு கொத்திவிட்டது.
நல்ல நீதி பாடம் கற்பிக்கும் கதை இது.
சாஹிதி… பாவானா..
இன்னும் உலகத்தில் நிறைய பேர் தெரிந்துகொள்ள வேண்டிய கதை இது.
******
‘சாஹிதி!”
கல்லூரிக்குப் புறப்படத் தயாரான சாஹிதி திரும்பிப் பார்த்தாள்.
“ஒன்றும் இல்லை. அங்கிளிடம் போய்ப் பணம் வாங்கிக்கொண்டு வா.
“என்னம்மா இது? உன்னிடம் பணம் இல்லையா?”
“ஊஹும் இல்லை. சமீபத்தில் இரண்டாயிரம் தந்தார். உன் பீசு கட்ட வேண்டும் என்று சொன்னாய் இல்லையா? வேலைக்காரர்களுக்கு சம்பளம் தர வேண்டும். என்னிடம் கைவசம் பணம் இல்லை. போய்விட்டு வா.”
“எனக்கு அந்த வீட்டுக்குப் போக பிடிக்கவில்லை வேறு யாரையாவது அனுப்பு. டிரைவருக்கு வீடு தெரியும் இல்லையா. போகச் சொல்லு.”
“அது நன்றாக இருக்காது சாஹிதி! அங்கிளுக்கு இப்போதுதான் போன் பண்ணினேன். உன்னை அனுப்பச் சொன்னார். போகாவிட்டால் கேட்கிற கேள்விகளுக்கு எல்லாம் என்னால் பதில் சொல்ல முடியாது. போய்விட்டு வாம்மா.”
“சரி.” விருப்பம் இல்லாமலேயே ஒப்புக்கொண்டாள் சாஹிதி. இப்படிப் பணத்திற்காக இன்னொருவரிடம் போக வேண்டிய தேவை அந்த வீட்டில் இதுவரையில் ஏற்பட்டதில்லை. எல்லா பணத்தையும் அவன் தன் கணக்கில் வங்கியில் போட்டு வைத்துக் கொண்டிருந்தான்.
சாஹிதி போனபொழுது பரமஹம்சா பூஜையில் இருந்தான். ராஜலக்ஷ்மி நேரில் வந்து வரவேற்றாள். குசலம் விசாரித்தாள். வேண்டாம் என்றாலும் வலுக்கட்டாயமாய் காபி கொண்டு வந்து கொடுத்தாள்.
“ஏதாவது காரியமாய் வந்தாயா? இல்லாவிட்டால் வரமாட்டாயே?”
“ஆமாம். மம்மி செக் வாங்கிக்கொண்டு வங்கியிலிருந்து பணத்தை எடுத்துக்கொண்டு வரச் சொன்னாள்.”
‘எவ்வளவு வேணும்? என்னிடம் இருந்தால் தருகிறேன். அவருடைய பூஜை இப்போது முடியும் போல் தோன்றவில்லை.”
“ஐந்தாயிரம் வேண்டும்.”
“ஐந்தாயிரமா? அவ்வளவு செலவு பண்ணுவீங்களா உங்கள் வீட்டில்? என்ன பண்ணுவீங்க?” ஆச்காரியமடைந்தவளாய் கேட்டாள்.
‘எனக்குத் தெரியாது. மம்மி கொண்டு வரச் சொன்னாள்.” சங்கடத்துடன் நெளிந்தாள் சாஹிதி.
‘செலவைக் கொஞ்சம் குறைத்துக்கொள்வது நல்லது என்று தோன்றுகிறது. இருப்பது இரண்டு பேர். அத்தனை வேலைக்காரர்கள் எதுக்கு? நான் மாதத்துக்கு இரண்டாயிரத்துக்கு மேல் செலவு பண்ண மாட்டேன். ஆனாலும் உங்க அங்கிள் கொபித்துக் கொண்டேதான் இருப்பார். உங்க மம்மி கேட்டால் மட்டும் ஐந்தாயிரம் பத்தாயிரம் என்று கொடுப்பாரோ என்னவோ? எனக்கென்ன வந்தது? போய் எதையோ சொல்லுவாய். அவள் இவரிடம் சொல்லுவாள். எல்லாம் கிடக்க இவர் வந்து என்னை வசைபாடுவார்.” பழிப்பது போல் சொன்னாள் அவள்.
சாஹிதி திகைத்துப் போய்விட்டாள். யார் யார்மீது சார்ந்து இருக்கிறார்கள் என்று அவளுக்குப் புரியவில்லை.
‘அவரிடம் கேட்பது எங்களுடைய பணத்தைத்தான். லட்சக்கணக்கான் சொத்து! எல்லாம் அவர் கையில் தாரைவார்த்துத் தந்துவிட்டோம். அதிலிருந்து கொஞ்சம் தரச் சொல்லிக் கேட்கிறோம்’ என்று சொல்ல நினைத்தவள் அரும்பாடுபட்டுத் தன்னை அடக்கிக் கொண்டாள்.
“என்னவோப்பா. நாளெல்லாம் கஷ்டப்படுகிறார்.ஒரு ஆயிரம் ரூபாய் தனக்காக செலவழித்துக் கொள்ளச் சொன்னால் கேட்டுக்கொள்ள மாட்டார். தினமும் ஐந்து மணி நேரம் பூஜையில் இருக்கிறார் இல்லையா? அந்த அறையை ஏ.ஸி. பண்ணிக்கொள்ளுங்கள் என்றால் காதில் வாங்க மாட்டார். உங்க மம்மியையாவது சொல்லச் சொல்லு. அவள் சொன்னால் மறுக்க மாட்டார். அவள் சொன்னால் பணத்தைக்கூட தாராளமாக செலவழிப்பார்.”
சாஹிதிக்கு துக்கம் பொங்கிக்கொண்டு வந்தது. ஈரத்துணியால் கழுத்தை இறுக்குவது என்றால் இதுதான் போலும்.
“உனக்குக் கல்யாணம் வேறு பண்ணவேண்டும். கொஞ்சம் சிக்கனமாக இருந்தால் நல்லது. ஆனாலும் பயம் இல்லை. உங்க மம்மி கேட்டால் யாரும் மறுக்க மாட்டார்கள். உங்க அங்கிள் உனக்காக லட்சம் லட்சமாய் செலவழிப்பார்.”
சாஹிதி அதற்குமேல் தாங்க முடியாதவளாய் சொல்லாமல் எழுந்து வந்து காரில் உட்கார்ந்துக் கொண்டாள். விஷயம் புரிந்துகொண்டாற்போல் டிரைவர் காரை வீட்டை நோக்கிச் செலுத்தினான்.
சாஹிதி திரும்பி வருவதற்குள் வீட்டிற்குப் போன் வந்து விட்டது போலும்.
“ஏன் சாஹிதி, அவ்வளவு தூரம் போய்விட்டு அங்கிளைச் சந்திக்காமலேயே திரும்பி வந்துவிட்டாயா? இதற்கு முன்னால் நடந்த ரகளையை மறந்துவிட்டாயா? ஏன் இப்படி செய்தாய்? என்ன பதில் சொல்வேன் நான்?” நிர்மலா விசும்பி விசும்பி அழத் தொடங்கினாள்.
“மம்மி! நீ எதுக்கு அழணும்? அவள் எப்படியெல்லாம் திட்டினாள் என்று தெரியுமா?”
“அங்கே போன போதெல்லாம் எதற்காக அவளுடன் வாதம் வளர்க்கிறாய்?”
“நான் ஒன்றும் வாதம் வளர்க்கவில்லை. வாயைத் திறக்கவே இல்லை. அவள்தான் அவளுடைய சொத்தை எல்லாம் நாம் செலவழித்து வருவது போல் பேசினாள். கேட்க முடியாமல் திரும்பி வந்துவிட்டேன்.”
“அவள் அப்படிச் சொல்லியிருக்க மாட்டாள். நீதான் தவறாகப் புரிந்துகொண்ட இருப்பாய். முன்பு கூட அப்படித்தான் செய்தாய். திரும்பவும் போ சாஹிதி! என்மீது கொஞ்சமாவது அன்பு இருந்தால் போய்விட்டு வா. இல்லா விட்டால் என் பிணத்தைதான் காண்பாய்.” அவள் அழுது கொண்டே அறைக்குள் போய்த் தாளிட்டுக்கொண்டு விட்டாள். சாஹிதி தூக்கத்தில் நடப்பவள் போல் திரும்பி வந்து காரில் உட்கார்ந்து கொண்டாள். சக்களத்திகள் இருவரும் இவ்வளவு அன்னியோன்யமாய் தன்னைப் போன்ற அற்ப ஜீவனை பந்தாடுவது அவளைக் குழப்பத்தில் ஆழ்த்திவிட்டது.
இந்த முறை ராஜலக்ஷ்மி தென்படவில்லை. பரமஹம்சா முன் அறையிலேயே இருந்தான்.
“ஏம்மா, பூஜையிலிருந்து எழுந்து வருவதற்கு தாமதம் ஆகிவிட்டால் அதற்குப் போய் கோபம் கொள்ளலாமா?” சிரித்துக்கொண்டே அருகில் வந்து பணத்தை எடுத்துக் கொடுத்தான். “கேஷ் இருக்கு. எடுத்துக் கொண்டு போ. கல்லூரிக்கு நேரமாகிவிட்டது.”
பணத்தை வாங்கிக் கொண்டு வந்து நிர்மலாவிடம் கொடுத்தாள். அதற்குள் செய்தி எட்டியது போலும். அவள் முகம் சந்தோஷத்தால் மலர்ந்து இருந்தது.
சாஹிதி சாப்பிடாமலேயே கல்லூரிக்குப் போய்விட்டாள். முதல் வகுப்பு ப்ராக்டிகல்ஸ். என்ன பண்ண வேண்டும் என்றோ, என்ன பண்ணினாள் என்றோ எதுவும் தெரியவில்லை. பிப்பெட்டில் கான்ஸன்ட்ரேடட் சல்ஃபூரிக் ஆசிட் எடுத்தாள். பீகரில் ஊற்றப் போனவள் நின்றாள். அதைக் கையில் வைத்துக்கொண்டு மேலே இருந்த விரலை எடுத்துவிட்டாள். புஸ் என்ற சத்தம். அதைத் தொடர்ந்து சதை பொசுங்கிய நாற்றம் வந்த போதிலும் சாஹிதி வாயிலிருந்து கத்தல் எதுவும் வெளியில் வரவில்லை. அந்த காயத்தையே பார்த்தபடி வீட்டுக்கு வந்தாள். தன் அறைக்குப் போய் அழுதுகொண்டே உட்கார்ந்திருந்தாள்.
எப்பொழுது வந்தானோ தெரியாது. “அழுகிறாயா? சீ.. தவறு இல்லையா?” என்று பரமஹம்சா அவளிடம் வந்தான். தோளில் கையை வைத்து அவளை இழுத்து அணைத்துக் கொண்டான். “உன்னைப் பற்றி எனக்குத் தெரியும் குழந்தாய். இன்னும் கல்யாணத்தின் மேல் உன் கவனம் திரும்பவில்லை. அது தவறு இல்லை. இயற்கைதான்.” அவள் கன்னத்தில் வழிந்த கண்ணீரைத் துடைத்தான். “என் தங்கம் இல்லையா? இப்படி அழக்கூடாது. இனிமேல் எதுவானாலும் சரி, என்னிடம் சொல்லணும். தயங்கக் கூடாது” என்று கையை அவள் முதுகில் வைத்து தேற்றுவது போல் தடவிக் கொடுத்தபடி தாழ்ந்த குரலில் மேலும் சொன்னான்.
“சாஹிதி! நீ என்னைக் காதலிக்கிறாய் இல்லையா?” லட்சம் ஓல்ட் எலெக்ட்ரிக் ஷாக் அடித்தாற்போல், அத்தனை வேதனையிலும் அவள் நிமிர்ந்து பார்த்தாள். அவன் அவளைப் பார்க்கவில்லை. சூனியத்தைப் பார்த்தபடி “நான் உன் நோட்டுப் புத்தகத்தில் படித்தேன். உன் எண்ணம் புரிந்தது. அதுக்கும் முன்னாடியே கடவுள் என்னிடம் சொல்லிவிட்டார். உன்னைச் சரியாகப் புரிந்துகொள்ளக் கூடியவனும், உன்னைக் கொண்டாடக் கூடியவனும் நான்தான். நிர்மலாவிடம் இந்த விஷயத்தைச் சொல்லாதே. நானே சொல்கிறேன். அவள் மறுக்க மாட்டாள்/ கடவுளின் தீர்மானம் அப்படி இருந்தாள் அவள் மட்டும் ஏன் மறுக்கப் போகிறாள்?” என்று குனிந்து அவள் நெற்றியில் முத்தமிட்டான். தடுக்கவும் திராணியற்றவளாய் அவள் சிலையாய் அப்படியே உட்கார்ந்து இருந்தாள்.
(தொடரும்)
- மணலும் (வாலிகையும்) நுரையும் (10)
- கற்பனை என்றொரு மாளிகை : நிலா ரசிகனின் ‘மீன்கள் துள்ளும் நிசி’
- சி.சு. செல்லப்பா – தமிழகம் உணராத ஒரு வாமனாவதார நிகழ்வு -2
- கல் மனிதர்கள்
- மன்னிப்பு
- வானிலை அறிவிப்பு
- எங்கள் கடவுளை நாங்கள் சிலுவையில் அறைவதில்லை
- வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் – 43
- நிழற்படங்கள்
- முஸ்லீம் -ஆர்வலர்களின் -கூட்டறிக்கை மீதான சில மறுப்புரைகள்
- சுஜாதா நினைவுப் புனைவு 2009 எனது பார்வையில்
- தீர்வு
- ‘நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து………15. ஜஸ்டிஸ் எஸ்.மகராஜன் – ‘டி.கே.சியின் கடிதங்கள்’.
- ஜெயாவின் விஸ்வரூபம்…
- கைரேகையும் குற்றவாளியும்
- 5 வயது மகளை பாலுறவு பலாத்காரம் செய்து சித்ரவதை செய்த சவுதி இஸ்லாமிய பிரச்சாரகர் விடுதலை
- செவ்விலக்கியங்களில் உழவும் உழவரும்
- விஸ்பரூபம் : புரியத்தான் இல்லை
- ராஜவிளையாட்டு (ஸ்டீ·பான் ஜ்ஸ்வேய்க்)
- சரித்திர நாவல் போதி மரம் பாகம் ஒன்று – யசோதரா அத்தியாயம் – 6
- வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -1 பாகம் -4
- ரணங்கள்
- மகாத்மா காந்தியின் மரணம்
- அதிர்ஷ்டம்!!
- பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் : பதினேழு பில்லியன் பரிதிகள் பளுவில் உள்ள பூதப்பெரும் கருந்துளை கண்டுபிடிப்பு
- வால்ட் விட்மன் வசன கவிதை -9 என்னைப் பற்றிய பாடல் -2 (Song of Myself)
- விழுது
- அக்னிப்பிரவேசம்-21
- மதுரையில் மக்கள் கலை விழா
- அரபு நிலத்தின் தாழ்த்தப்பட்டவர்கள் – அல் அக்தம்
- இலக்கிய மாநாடு , அழைப்பிதழ்
- தாகூரின் கீதப் பாமாலை – 50 துயர்க் கடலில் ஓடும் படகு