சரித்திர நாவல் போதி மரம் பாகம் ஒன்று – யசோதரா அத்தியாயம் – 6

This entry is part 20 of 32 in the series 3 பிப்ரவரி 2013

ராஜகஹ நகரத்தில் மாலைப் பொழுது பல வண்ண நீரையும் பொடிகளையும் இளைஞர்கள் ஒருவர் மீது ஒருவர் வீச உற்சாகமாய் வண்ணமயமாயிருந்தது. சித்தார்த்தன் வந்த குழு வண்டிகளைக் கோட்டைக்கு வெளியே விட்டு விட்டு கோட்டைக்குள்ளே இருந்த பல தெருக்கள், கடை வீதிகள் அனைத்தையும் தாண்டி ராஜாவின் அரண்மனையை ஒட்டியிருந்த பெரிய மைதானத்தை அடைந்தது. சிலர் கடைவீதிகளிலேயே ஆழ்ந்து விட்டனர். வேலைப்பாடு மிகுந்த செப்புப் பாத்திரங்கள், விவசாயத்துக்குத் தேவையான கலப்பை, மண்வெட்டி, ஜரிகை வேலைப்பாடு அமைந்த துணிகள், குழந்தைகள் விளையாட மரத்தால் ஆன பொம்மைகள், கம்பளிகள், மூங்கிற் கூடைகள், தட்டிகள் என பல பொருட்களும் கடைவீதியில் நிறைந்து கிடந்தன.

ஒரு கழைக் கூத்தாடி மரச் செருப்புகளைக் கைகளில் அணிந்து கொண்டு தலைகீழாக நடந்து காட்டினான். பின்னர் அதே செருப்புக்களைக் கால்களில் அணிந்து கொண்டான். இணையாக இரண்டு கயிறுகள் பெருக்கற் குறி போல நின்றிருந்த கட்டைகளுக்கு இடையே சில அடி இடைவெளிகளில் நின்றிருந்தன. கழைக் கூத்தாடி ஒரு கயிறிலிருந்து மறு கயிற்றுக்குத் தாவினான். அங்கிருந்து இங்கு. நடுவில் நெருப்பைப் பெரியதாக மூட்டி அதையும் தாண்டிக் காட்டினான்.

ஒரு குதிரை வண்டி சித்தார்த்தன் இருந்த பக்கம் நின்றது. ஒரு சேவகனும் படைவீரனும் அதில் இருந்து இறங்கினர். “மன்னர் பிம்பிசாரரின் பிறந்த நாள் இன்று. இதை தயை கூர்ந்து ஏற்றுக் கொள்ளுங்கள்.” என்று நீண்ட காவி வேடிகளைக் கொடுத்தான். அதை சித்தார்த்தன் கப்பரையுடன் இருந்த சிறு மூட்டையில் சேர்த்துக் கட்டி முதுகில் மீண்டும் போட்டுக் கொண்டான்.

விழாவில் பல வண்ண ஆடைகள் அவற்றின் மேலே வீசப்பட்ட வண்ண திரவங்களாலும் பொடிகளாலும் விசித்திரமான நிறக்கலவைகளுடன் அணிந்தவர் மேலே தென்பட்டன. புன்னகை தவழும் முகமும், நகைகளுமாக பெண்கள் யசோதராவை நினைவு படுத்தினர்.

மணவாழ்வில் ஒவ்வொரு நாளையும் யசோதரா மகிழ்ச்சியோடும் நிறைவோடும் கழித்தாள். ஆடல், பாடல், விருந்துகள் என ஒவ்வொரு நாளும் சித்தார்த்தனை மகிழ்விக்க ஒரு கொண்டாட்டம் இருந்தது. சக பெண்களுடன் பேசும் பொழுதிலோ அல்லது குளிக்கும் போதோ உடைமாற்றும் நேரமோ இவை தவிர எந்நேரமும் அவள் சித்தார்த்தனுடனே தான் இருந்தாள். அவள் தாய்மையின் சுமையைத் தாள முடியாது தவித்த பிரவசத்து முந்திய ஒரு மாதம் முழுவதும் ராணி பஜாபதி கோதமியுடனும் தாதியருடனுமே கழித்தாள். அப்போது தான் முதன் முதலாக சித்தார்த்தன் தனியே நகர் வலம் வந்தான்.

அதற்கு முன் சித்தார்த்தன் ரதத்தில் வெளியே சென்றதெல்லாம் யசோதராவின் துணையுடன் தான். அந்தணர் அல்லது மந்திரிகள் வீட்டு சுப நிகழ்ச்சிகளுக்குப் போய் வரும்போது வணங்கும் மக்களையும் யசோதராவின் கண்ணில் பட்டவையுமே காட்சிகள் ஆயினர்.

முன் அறிவிப்பின்றித் தனியே கிளம்பிச் சென்றதால் தான் வாழ்க்கையின் நிலையின்மை கண்கூடானது. மரணமும் மூப்பும் துறவு வைராக்கியமும் மனதுள் எழுப்பிய கேள்விகள் மலைகளாய் வளர்ந்து நிற்கின்றன.

சொல்லிக் கொள்ளாமல் கிளம்பியது கண்டிப்பாக யசோதராவுக்கு ஆழ்ந்த காயத்தை, தாங்க முடியாத அதிர்ச்சியை ஏற்படுத்தத்தான் செய்திருக்கும். ஆனால் விடை பெற்றுக் கிளம்புவது என்பது சாத்தியமே இல்லாத ஒன்று. ராணி பஜாபதி கோதமியோ, மன்னரோ, மந்திரிகளோ, மக்களோ யாருமே அனுமதித்திருக்க மாட்டார்கள். காந்தகன் மட்டுமே ஒப்பியிருப்பான். ரகசியமாக வந்து விட்டதால் இனி தொடர்ந்து செல்லுவதில் தடை இருக்காது. இந்தப் பிறவியோடு மாயை அகன்று ஞானம் சித்திக்க வேண்டும்.

**************

உப்பரிகையில் ஒரு நாள் தாங்கள் சாரல் மழை தங்கள் மேல் தெறிக்க மழையை ரசித்தபடி அமர்ந்த்திருந்தீர்கள். அம்மா மகாராணி கோதமி நேரில் வந்து அறிவுரை கூறியும் கூட நீங்கள் அங்கே இருந்து நகரவில்லை. வெகு நேரம் வானிலிருந்து வீழும் மழையை அது பூமியில் பல தாரைகளாய் சிறு நீரோட்டங்களாய்ப் பிரிந்து ஒடும் அழகில் லயித்திருந்தீர்கள்.

அன்று இரவு உங்களிடம் அப்படி என்ன மழையில் ரசிக்க இருக்கிறது என்று கேட்டேன். உடனே நீங்கள் என்னிடம் ” மழை என்றால் என்ன ?” என்று எதிர்க்கேள்வி கேட்டீர்கள். நான் “மேகம்” என்றேன். நீங்கள் “எல்லா மேகமுமா?” என்று வினவினீர்கள். “இல்லை. திரண்ட மேகங்களில் சிலவே மழையாய்ப் பெய்யும்” என்றேன் நான்.

“நீர், மழை இரண்டுமே ஒன்றுதான். மேகம் என்பது நீரின் அல்லது மழையின் மறு வடிவம் என்பது பொருந்தாது. நீர் அல்லது மழையின் ஒரு நிலையே அது…. வடிவங்கள் மாறுவது அல்லது மாறுபடுவது அச்சுறுத்தலாய்த் தோன்றுவது பிரமையே. வடிவம் மாறிப் போவதோ அல்லது மாறுபட்ட இரு வடிவங்களை ஒப்பிடுவதோ எளிதானதே. நிலை மாறுவதும், ஒன்றே வெவ்வேறு நிலைகளில் பிறிதொன்றாய் வெளிப்படுவதும் ஆழ்ந்து அவதானித்துப் புரிந்து கொள்ளப் பட வேண்டியது.” என்றீர்கள்.

நீங்கள் தீர்க்கமாய்ப் பேசும் போது தங்கள் கண்கள் பிரகாசித்து சொற்கள் பெருக்கெடுத்து எண்ண ஓட்டத்துக்கு நிகராகத் திரண்டு வரும் அற்புதத்தில் என்னை நானே எத்தனை முறை மறந்திருக்கிறேன்!

இன்று அதே கேள்வியை எனக்குள் நானே எழுப்பிக் கொள்கிறேன். இன்று தாங்கள் காட்டுவது தங்களின் வேறு வடிவமா அல்லது மற்றொரு நிலையா? குடும்பம் என்னும் வேரை அறுத்து வேறு எந்தப் பிடிப்பில் இருக்கிறது தங்கள் நிலை?

என்னையும் உங்களையும் தனியாகப் பிரித்து நாம் இருவரும் ஒரு போதும் பார்த்ததில்லை. விடிந்த ஒவ்வொரு பொழுதும் நம் இருவரையும் உள்ளடக்கிய ஒரே ஜீவனுக்காகவே விடிந்தது. உங்கள் மனஓட்டத்தைத் தாங்கள் கூறாமலேயே நான் புரிந்து கொண்டேன். அதற்கேற்ப நடந்து வந்தேன்.

இந்த முறை எனக்குப் புரியவே புரியாது ஏதோ ஒன்று என்று எண்ணி என்னை விட்டு நீங்கினீர்களா?

பதிமூன்று ஆண்டுகால மணவாழ்வில் தங்கள் நிழலாய் நின்றேன். வெளிச்சம் இல்லாத பொழுதில் வெளிச்சம் இல்லாத இடத்தில் நிழல் இல்லாதிருப்பது தற்காலிகம் தானே?

நீங்கள் மீண்டும் இந்த மாளிகையில் ஒளியாகவும் உருவாகவும் வாருங்கள். உங்கள் நிழலாய் என் வாழ்வைத் தொடர்வேன்.

ராணி பஜாபதி கோதமியின் வருகை யசோதராவின் நினைவலைகளை நிறுத்தியது. பாலைக் குடித்து விட்டு ஆழ்ந்து உறங்கும் ராகுலனைப் பார்த்தபடி இருந்தாள்.

“உன் காய்ச்சல் நின்றதும் அவன் பழையபடி பால் குடிக்க ஆரம்பித்து விட்டான்”. யசோதரா பதிலேதும் சொல்லவில்லை.

“சித்தார்த்தன் பற்றி விவரமறிய அண்டை நாடுகள் அனைத்துக்கும் மன்னர் தூதுவர்களை அனுப்பி இருக்கிறார். விரைவில் நல்ல செய்தி வரும்”. தொடர்ந்து மௌனம் காத்தாள் யசோதரா.

விடைபெற்று வரும் போது ராணிக்கு யசோதராவின் நிலை மிகுந்த அச்சத்தைக் கொடுத்தது. மகனை வளர்க்கவும், கணவனைத் தேடிக் கண்டுபிடித்து மணவாழ்க்கையைத் தொடரவும் தளராத மன உறுதி தேவையாயிற்றே? ராஜ குடும்பத்துக்குப் பொருந்தாத மனச் சோர்வு எங்கிருந்து இந்தப் பெண்ணுக்கு வந்தது? உறுதியான செயல்களும், நிலைப்பாடுகளும், முடிவுகளும் ராஜ குடும்பத்தில் இருபாலாரின் பலங்கள். இதிலிருந்து அவளை மீட்கும் பொறுப்பு முழுவதும் எனதாகி விட்டது.

****************

யசோதராவின் உடலை ஆரத் தழுவிய சித்தார்த்தன் அவள் நெற்றி கன்னம் என உதடுகளால் வருடி இதழோடு இதழ் சேர்த்து முத்தமிட்டான். அவனது விரல்கள் அவளது உடலெங்கும் பரவி இருவரும் உணர்ச்சிப் பெருக்கில் பின்னிப் பிணைந்து கட்டிலே ஒரு களமானது.

சித்தார்த்தனை சற்றே செல்லமாகப் பின்னுக்குத் தள்ளித் தன் நகைகளைக் கழற்ற முயன்ற யசோதராவை மேலே இயங்க விடாமல் இறுக்கித் தழுவினான் சித்தார்த்தன். மறுபடியும் அவனை அன்போடு விலக்கி அவள் தலையிலும் கழுத்திலும் தலையிலும் உள்ள நகைகளைக் கழற்ற முயன்றாள். சித்தார்த்தன் பிற இடங்களில் அவளை முத்தமிட்டு வேகம் காடினான். அவள் புன்னகையுடன் அவன் க்ழுத்திலிருந்த பெரிய தங்க ஆரத்தைச் சுட்டிக் காட்டியதும் அதை நொடியில் கழற்றி அவளது ஒட்டியாணத்தைக் கழற்றினான்.

திடுக்கிட்டு விழித்தெழுந்த சித்தார்த்தனின் உடல் எங்கும் வியர்த்திருந்தது. இது என்ன கனவு? எப்படி என் வைராக்கியத்தைக் காமம் ஊடுருவியது? மன்னர் பிறந்த நாள் என்று பிட்சையாய் உண்ட உணவு காரணமா? குடும்பங்களையும் பெண்களையும் நிறைய ஒன்று சேரக் கண்டது யசோதராவை நினைவு படுத்தியதா? தர்ம சத்திரத்தில் அவன் படுத்திருந்த கூடத்தில் நிறைய ஆண்கள் படுத்திருந்தனர். நடைகளில் தீப்பந்தங்கள் நிலையாக சுவர்களில் பொருத்தி வைக்கப் பட்டிருந்ததால் பின்கட்டுக்குச் செல்லும் வழி தெளிவாகத் தெரிந்தது. கூப்பிடு தூரத்தில் நதி நீரோட்டத்தின் சலசலப்பு இரவின் அமைதியில் துல்லியமாகக் கேட்டது. நதிக்கரை வரையில் மெல்லிய கற்பலகைகளால் பாதை இருந்தது. பௌர்ணமிக்கு இன்னும் ஒரு வாரம் இருக்கும். மங்கிய நிலவொளியில் நதி தன் வழி தெரிந்த மிடுக்கில் பெருகி ஓடிக் கொண்டிருந்தது. உடைகளைக் கரையில் வைத்து விட்டு கோவணத்துடன் நதியில் இறங்கினான். எத்தனை முறை என்று தெரியாது, மீண்டும் மீண்டும் நதியில் முழுக்குப் போட்டுக் கரைக்கு வந்தான். குளிரில் உடல் நடுங்க நடுங்க நின்று நேரே இலக்கில்லாமல் வெறித்தான். தூரத்தில் ஏதோ படித்துறை அருகே ஒரு பிணம் எரிந்து கொண்டிருந்தது. உடலில் ஈரம் ஓரளவு காய்ந்தது. மீண்டும் நதியில் மூழ்கினான். வெளியே வந்து நின்றான். ஈரமணலில் பாதங்கள் ஓரளவு புதைந்து நிலைப் பட்டன. விடியும் வரை அப்படியே நின்றிருந்தான். விடிவெள்ளி தென்பட்டது. கீழ்வானம் மெல்ல வெளுத்தது. உடன் சிவத்தது. கதிரவன் ஒரு நெருப்புப் பந்தாக வெளியே வந்தான். கண்கள் கூசும் வரை சூரியனை நோக்கி நின்றவன் மெதுவாக சம்மணமிட்டு அமர்ந்தான். ஞானம் தேடும் என் தனிமைப் பயணம் காரிருள் தாண்டி ஒளி காண வேண்டும். என் லட்சியத்தில் மனம் பிறழாது நிற்க வேண்டும்.

பறவைகள் மேற்கிலிருந்து கிழக்காகப் பறந்து வானுக்கு அழகூட்டின. நதியில் நீராடப் போவோரும் வருவோருமாய் சந்தடி தெரிந்தது. கதிரவன் மேலே எழும்பிச் சுட்டெரிக்கத் துவங்கினான். சித்தார்த்தன் இருந்த இடத்தை விட்டு அசையவில்லை. சில அவன் முன் கிடையாக வணங்கினர். அவன் மௌனமாகவே அமர்ந்திருந்தான்.

எலும்பும் தோலுமாய் ஜடை முடிவிழுந்த, கௌபீனம் அணிந்த ஒரு வைராகி அவன் முன் அமர்ந்தான். சித்தார்த்தன் அவன் கண்களை ஆழ்ந்து உற்று நோக்கினான்.

“இது ஞான வேட்டையா ஷத்திரியனே?” என்றான் வைராகி.

“இது ஒரு தேடல். இந்த நிமிடம் நான் ஷத்திரியனுமில்லை”

“ஷ்ரமண யோகிகளுக்கும் வைராகிகளுக்கும் மறுபுறம் வைதீக மதம் போதிக்கும் அந்தணர்களுக்கும் இடையே ஊசலாடும் வரை நீ ஷத்திரியனே. நான்கு வருண பேதம் தந்த வசதிகளில் ஊறித் திளைத்த உனக்கு இது தற்காலிக விளையாட்டு அல்லது பொழுது போக்கு”

“நான் முதல் அடி எடுத்து வைத்திருக்கும் பாதையில் தாங்கள் வெகு தூரம் சென்றிருக்கலாம். என் உறுதி என்னையும் ஷ்ரமணனாக உருவாக்கும்”

“தலைமுடியை தாடியை மதிக்கலாம் என்று ஒரு நித்திய அனுஷ்டானத்தின் ஒரு நீட்சி போல உனக்குள் தோன்றி இருக்கிறது சிறுவனே”

“வேதம் சார்ந்த வைதீகத்தையே நிராகரித்த ஷ்ரமண மார்க்கத்தில் மழித்தலுக்கும் நீட்டலுக்கும் மட்டும் மகத்துவம் தரப்பட்டுள்ளதா ஐயா?”

“நீ இன்னும் எந்த குருவிடமும் பாடம் கற்கவில்லை. கல்வியில் குறை நீக்க ஐயம் வந்து கேள்வி கேட்டால் அதற்கும் மரியாதை தந்து பதில் சொல்லலாம். அறியாமையின் வினா இது…”

வைராகி எழுந்து சென்று விட்டான். உச்சி வெய்யில் சுட்ட போதும் சித்தார்த்தன் எழுந்திருக்கவில்லை. வைராகியின் கூற்றும் உண்மைதான். ஷ்ரமண மார்க்கத்தின் நுட்பங்களைக் கற்காவிட்டால், குருவைத் தேடாவிட்டால் நால் வருணம் பேசும் வைதீக மார்க்கத்திலேயே உழல வேண்டியது தான். கைகொடுத்துத் தூக்கிவிடும் யோகியைக் காண வேண்டும்.
——

Series Navigationராஜவிளையாட்டு (ஸ்டீ·பான் ஜ்ஸ்வேய்க்)வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -1 பாகம் -4
author

சத்யானந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *