ரணங்கள்

This entry is part 22 of 32 in the series 3 பிப்ரவரி 2013

                                  –   தாரமங்கலம் வளவன்

 

சந்திரன் அணை போலீஸ் ஸ்டேஷனில் மூன்றாவது நாளாக இளைய தங்கை மீனாவைப் பற்றிய தகவல்-அதாவது அவள் உடல் கிடைத்த செய்திக்காக காத்திருந்தான். நேற்றே இனிமேல் அழுவதற்கான சக்தியை உடம்பு இழந்து விட்டது. இன்று அவன் அழவில்லை.

 

எதிரே நோக்கினான். பிரம்மாண்டமான வெள்ளம். ஒவ்வொரு முறை இந்த அணை வெள்ளத்தை பார்க்கும் போதெல்லாம்-அந்த அலை கரையில் மோதும் ஓசையை கேட்கும் போதெல்லாம், மனதில் உவகை பொங்கும், அதற்கு மாறாக இன்று, தங்கையை விழுங்கி விட்ட அந்த வெள்ளத்தின் மீது பயமும் கோபமும் வந்தது.

 

ஊர் அடங்க ஆரம்பித்து விட்டது. மூத்த தங்கை கல்பனா வீட்டில் தனியாக இருப்பது ஞாபகம் வர, நடக்க ஆரம்பித்தான். கால்கள் தள்ளாடின. இருட்டில் கால் தவறி விழுந்து எழுந்தான். ஊர் அடங்க ஆரம்பிக்கும் அந்த வேளையிலும் தெருவில் இருந்த சிலர் வியப்போடு பார்த்துக் கொண்டிருந்தார்கள். சிலர் குடிபோதை என்று ஏளனமாய் பார்த்தார்கள். அவன் கண்களில் ஓரிரு ஆட்டோக்கள் பட்டாலும் ஆட்டோ வைக்க வேண்டும் என்று  மனதில் படவில்லை.

 

சந்திரனுக்கு உறவு என்று இருந்ததெல்லாம் இந்த இரண்டு தங்கைகள் தான். அதில் இளைய தங்கை மீனா இப்போது இறந்து விட்டாள்.

 

மூத்த தங்கை கல்பனாவுக்கு நீண்ட நாள் காத்திருந்த ஒரு வரன், பெண் பார்க்க அடுத்த வாரம் வருவதாக முந்தா நாள் மதியம் வந்து சொன்னார் கல்யாண தரகர். அதற்கு சற்று முன்னால் தான்- காலையில்,  தன்னுடைய பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு இன்று வரப்போவதாகச் சொல்லியிருந்தாள் இளைய தங்கை மீனா. கல்பனாவுக்கு வயது முப்பது. இன்னும் வரன் அமையவில்லை.  காரணம் ஏழ்மை தான்.

 

கல்யாண தரகரிடம் பேசிக்கொண்டிருந்ததில் மீனாவைப் பற்றி மறந்து விட்டான். மீனா நல்லபடி படிப்பவள் இல்லையே, ரிசல்ட் எப்படி வந்ததோ என்று பதறிப்போய், மீனாவைத்தேடும் போது தான் அவள் எழுதி வைத்து விட்டுப் போன அந்தக் கடிதம் கிடைத்தது…….

 

“ அன்புள்ள அண்ணாவிற்கு,

 

நீ எவ்வளவோ தியாகங்களைச் செய்து, நாற்பது வயது கடந்தும், எங்களுக்காக நீ கல்யாணம் செஞ்சிக்காம, உழைத்து, உன்னை வருத்திக்கொண்டிருக்கிறாய்…… அம்மா, அப்பா போன பிறகு எங்களுக்கு அவர்கள் இல்லை என்ற  கவலையில்லாமல் வளர்த்தாய்…… என்னையும், அக்காவையும், நன்றாக படிக்க வைக்க வேண்டும், நல்ல இடத்தில் கல்யாணம் செய்து கொடுக்க வேண்டும் என்று மாடாய் உழைக்கிறாய்……ஆனால் உனக்கு தங்கையாக இருக்கும் தகுதி எனக்கு இல்லை அண்ணா !.. எவ்வளவோ, எனக்காக கண் விழித்து சொல்லிக் கொடுத்தாய்….. ஆனால் என் மண்டையில் ஏறவில்லை….முக்கியமாக கணக்கு.. நான் பெயிலாகி விட்டேன்…… நான் உனக்கு மேலும் பாரமாக இருக்க விருப்பமில்லை… நான் அணைக்கு போகிறேன்.. குதித்து என்னை மாய்த்துக் கொள்ளப் போகிறேன்…  அக்காவுக்கு கல்யாணம் செய்தவுடன் நீ சீ்க்கிரம் கல்யாணம் செஞ்சிக்கோ..

 

                                இப்படிக்கு, உன் அன்பு தங்கை

                                                      மீனா “

 

ஐயோ.. கடவுளே இப்படி ஒரு கொடுமையை எனக்கு செய்யலாமா… நான் என்ன பாவம் செய்தேன்……

 

எத்தனை சிரமங்களுக்கிடையே நான் தங்கைகளை வளர்த்துக் கொண்டிருக்கிறேன்…. எனக்கு கை கொடுக்காமல்… இப்படி ஒரு கொடுமையை எனக்கு செய்யலாமா…

 

அணையை நோக்கி ஓடினான்…..

 

மீனா ஏன் இப்படி செய்தாள்……. ஒரு வேளை அக்காவைப் பெண் பார்க்க வருகிறார்கள் என்பது தெரிந்திருந்தால்- வருடங்கள் பல ஓடி- தாமதமாகி, இப்போதாவது அக்காவுக்கு கல்யாணம் நெருங்கி வருகிறதே என்பது தெரிந்து, அதை தன்னுடைய செய்கையினால் பாழடித்து விடக் கூடாது என்பது புரிந்திருந்தால் இப்படி செய்திருக்க மாட்டாளோ….. காலையிலேயே தரகர் வந்திருந்தால் இப்படி செய்திருக்க மாட்டாளோ……….

 

அணை போலீஸ் ஸ்டேஷனில் போய் கடிதத்தை காட்டி கதறினான். புகார் எழுதிக் கொடுக்கச் சொன்னார்கள்… கொடுத்தான்…..

 

இன்ஸ்பெக்டர், அவனை உட்காரச்சொல்லி விட்டு, அணைக்கு கீழே உள்ள போலீஸ் ஸ்டேஷன்களுக்கு போன் செய்து கொண்டிருந்தார்.

 

தானும் ஓடிப் போய் அணையைச் சுற்றி தேடினான்..

 

இருட்டிக்கொண்டு வந்தது.  எந்த தகவலும் இல்லை….

 

மூன்று நாட்கள் ஓடிவிட்டன……..தினமும் இப்படித்தான் வந்து போய்க் கொண்டிருக்கிறான்…

மூச்சு இறைத்தது… மயக்கம் வரும் போல் தோன்றியது. இனி மேல் முடியாது என்று உடம்பு மறுத்தபோது…. பூட்டியிருந்த ஒரு கடை வாசலில் உட்கார்ந்தான்…

 

கொஞ்சம், கொஞ்சமாக விஷயம் எல்லோருக்கும் தெரிய வந்திருக்கும், கல்யாண தரகரருக்கு-  மாப்பிள்ளை வீட்டாருக்கு தெரிய வந்திருக்கும்….

 

அப்புறம்……..பெண் பார்க்க அடுத்த வாரம் வருவதாக இருந்தது……..நின்று போய் விடும் என்பதும் புரிந்தது……

 

மீனாவும் போய், கல்பனாவின் கல்யாணமும் நின்று போய்……

 

கடவுளே, இது என்ன கொடுமை……இரண்டு தங்கைகளுக்காக இது வரை தான்பட்ட  கஷ்டம் எல்லாம் வீணாகிப் போனதா….

 

எதிர் கடையில் கல்யாண தரகர் டீ குடித்து கொண்டிருந்தது கண்ணில் பட்டது. தரகர் சந்திரனை பார்த்துவிட அவர் எழுந்து வந்தார்.

 

“ கேள்விப் பட்டேன்……சின்ன தங்கச்சி லட்டர் எழுதி வைச்சுட்டு போய்ட்டதா….மாப்பிள்ளை வீட்டுக்கும் சொல்லிட்டேன்…. பெண் பார்க்க வரவேண்டாம்னு…. அப்புறம் பார்த்துக்கலாம்னு…..

 

அப்பும் நான் பேப்பர்ல படிச்சேன்….. இந்த மாதிரி வீட்டை விட்டு  வந்திட்ற பொண்ணுங்கள பிடிச்சிக்கிட்டு போய் பம்பாய் சிகப்பு விளக்கு ஏரியாவில வித்திட்றாங்களாம்…… அந்த மாதரி ஏதாச்சும் ஆயிடுச்சான்னு விசாரிக்கணும்……இதுக்கு போலீஸ்ல கூட சொல்லக் கூடாதாம்…… சில என் ஜி ஓஸ்க்கிட்ட சொன்னா காதும் காதும் வைச்ச மாதிரி கண்டு பிடிச்சி கொடுத்துடுவாங்களாம்….”

சந்திரன் அதிர்ந்து போனான் இதைக்கேட்டு. மீனா இறந்து போன துக்கத்திற்கு மேல் இது என்ன புதுக்கோணம்……வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிற மாதிரி……அவள்தான் அணையில் விழுந்து சாகப்போவதாக லட்டர் எழுதிவைச்சிருக்காளே…..

 

இன்னும் உடல் கிடைக்காததால் இப்படி இவர் பேசுகிறார் என்பது புரிந்தது.. மற்றவர்களின் ரணங்களைக்  கொத்தி அதில் சந்தோசப்படும் இந்த மனிதர்களைப் பற்றி நினைக்கும் போது இனிமேல் தான் மேலும் தைரியத்தோடு இனி மீதமுள்ள வாழ்க்கையை- கல்பனாவுக்காகவும்,  தனக்காகவும் எதிர் கொள்ள வேண்டும் என்பது புரிந்தது.

 

மெதுவாக எழுந்து நடந்தான்

 

கையிலிருந்த மொபைலில் இன்ஸ்பெக்டர்….

 

“உங்க தங்கச்சி உடல் கிடைச்சிடிச்சு…. வந்து பார்த்து வாங்கிட்டுப்போங்க….”

———————————————————————————————————————–

Series Navigationவேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -1 பாகம் -4மகாத்மா காந்தியின் மரணம்

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *