லங்காட் நதிக்கரையில்…

This entry is part 10 of 28 in the series 10 மார்ச் 2013

சுப்ரபாரதிமணியன்

திருப்பூருக்கு வரும் பல இலக்கிய நண்பர்கள் நொய்யல் நதியைப் பார்க்க ஆசைப்படுவதுண்டு. எனது படைப்புகளில் நொய்யலின் சீரழிவை முன் வைத்து எழுதப்பட்டிருப்பதை காட்சி ரூபமாகப் பார்க்க விரும்புவர். சிறுத்துப்போய் சாயக் கழிவுகளும், வீட்டுக் கழிவுகளும் ஓடும் ஜம்மனை பாலம், முனிசிபல் வீதி என்று பிரதான சாலைகளைக் காட்டுவேன். மறைந்து போன நதி பற்றி இரங்கலாய் சில வார்த்தைகள் சொல்வார்கள்.
மலேசியாவில் லங்காட் நதியைப் பார்க்கச் செல்ல வேண்டும் என்ற ஆசை மலேசிய எழுத்தாளர் ரங்கசாமியின் லங்காட் நதிக்கரை உட்பட பல நாவல்களைப் படித்தபோதே மேலிட்டிருந்தது. ரங்கசாமி அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது நேரில் கோலாலம்பூருக்கு வர இயலாத உடல்நலக்குறைவு பற்றிச் சொன்னார். ஆவல் குறைந்துவிட்டது. ஆனால் அடுத்த நாள் சட்டென தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் நாவல் பட்டறையின் இடைவேளையில் வந்து சந்தித்து மகிழ்ச்சி தந்தது. அதிகம் பேச இயலவில்லை. மலேசியா எழுத்தாளர் சங்கத்தினருக்கும் மகிழ்ச்சி. அவர்களும் பார்த்து ரொம்ப நாளாகியிருந்தது. தமிழ் எழுத்தாளர் சங்கம் நடத்திய முதல் நாவல் போட்டியில் (2005) அவரின் “லங்காட் நதிக்கரை” முதல் பரிசு பெற்றிருக்கிறது. அது தமிழினி பதிப்பகத்தின் ஒத்துழைப்புடன் அடுத்த ஆண்டு பதிக்கப்பட்டிருக்கிறது. அதற்கடுத்தாண்டு கோலாலம்பூரில் அந்த நூலின் வெளியீட்டு விழாவும் நடைபெற்றிருக்கிறது. அதன்பின் நாலைந்து ஆண்டுகளாய் அவரை பார்க்காத வருத்தம் அப்போது நீங்கியது அவர்களுக்கும்.
ரங்கசாமியிடம் பட்டறை இடைவேளை சூழல் என்பதால் அதிகம் பேச இயலவில்லை. அவருடனான உரையாடலுக்கு மனம் விரும்புவதைப் பற்றி அருணிடம் சொல்லிக் கொண்டிருந்தேன். அருண் 4 நூல்களின் ஆசிரியர்: ” சயாம் பர்மா ரயில் பாதை “ ஆவணப்பதிவு நூல் உட்பட.
அவர் வீட்டில் வளரும், அருண் வளர்க்கும்ம் 15 அடி நீள பாம்பு பற்றி ஒரு கதையைப் படித்திருந்தேன். நாலு நாள் கழித்து மருத்துவ விடுப்பு போட்டுவிட்டு என்னை அவர் வீட்டிற்கு அழைத்தார் அருண். பள்ளி ஆசிரியர் அவர். அவர் மனைவியும் பள்ளி ஆசிரியர். அவர் இருக்குமிடத்திலிருந்து கோலாலம்பூர் வந்து என்னைக் கூட்டிச் செல்வது கால விரயம் என்று சொல்லியிருந்தார். ஒரு மணி நேரமாகி விடும். அருணின் நண்பர் ஒருவர் என்னை அழைத்து ஹெல்மெட் மாட்டி திதிவம்க்சா என்ற எல் ஆர் டி ஸ்டேனில் விட்டார். மோனோ ரயில் பிடித்து இம்பி ஸ்டேனில் இறங்கச் சொன்னார். 10 ரயில்வே ஸ்டேன்கள் எண்ணிக் கொண்டிருந்தேன்.
ரயில்வே ஸ்டேஷனில் இறங்கியதும் குளிர் இன்னும் தாக்கியது. அதன் வேகத்தில் உள்ளே இருக்கும் போது குளிர் எக்கசக்கமாய் தாக்கியிருந்தது. ‘பெனரங்கன்’ என்ற விபரங்கள், ஆலோசனைப் பகுதியில் ஆளில்லை. பிலிக் விஐபி என்ற முக்கியஸ்தர்கள் அறை தென்பட்டது. உள்ளே போய் உட்கார்ந்து கொள்ள நினைத்தேன்.
சுரான் (பிரார்த்தனை அறை), டெலிபோன் அறை, டன்டாஸ் (கழிப்பறை), கெராய் அறைகள் தனித்தனியே தென்பட்டன. “மலேசியா ஒன் பார் ஆல்” என்ற ஒன்றாம் எண் விசுவரூபித்து பல இடங்களில் தென்பட்டது.
வெளியில் வந்து டைம் ஸ்கொயரில் கொஞ்சம் நடந்தேன். கிள்ளான் ஆற்றின் தென்கரையில் ஆயுத எழுத்து போல் அமைந்த நகரம் கிள்ளான். . அருண் வந்தார். கிளாங்கிற்கு காரில் செல்லும்போது அருண் அப்பகுதி பற்றிச் சொல்லிக் கொண்டு வந்தார். ரப்பர் தோட்டங்கள் அழிந்து வீடுகளும் சிறு தொழிற்சாலைகளும் ஆகியிருந்தன. 407 ரப்பர் தோட்டங்கள் மிஞ்சியிருந்தன. செம்பனைகள் அங்கங்கே தென்பட்டன. ஈயமும், ரப்பரும் மிகுந்திருந்த பகுதி. எந்தவீதிக் குழாய் தண்ணீரையும் தயக்கமில்லாமல் குடிக்கலாம் என்றார்.
ஒரு வகை பரபரப்பு ஒட்டிக் கொண்டது எனக்கு. ரங்கசாமி உடல்நிலை எப்படியிருக்கும். ஒத்துழைப்பாரா.. தயக்கத்துடன்தான் அவர் வீட்டு வாசலில் இறங்கினேன். எதிரில் தென்பட்ட ஒருவரின் உடுப்பும், காரும் மலேசியா டெலிகாம் என்பதை பிரகடனப்படுத்தியது. அவரிடம் சென்று இந்திய தொலைத்தொடர்பு துறை அலுவலர் நான் என்பதை அறிமுகப்படுத்திக் கொண்டேன். இந்திய தொலைபேசி துறையின் டெலிகாம் மெக்கானிக் என்ற சமமான பதவியில் இருப்பார் என்று யூகித்தேன். அவரின் உடுப்பு, கார், ஏணி இவற்றின் நேர்த்தி ஆச்சர்யப்படுத்தவே செய்தது.
கோலாலங்காட் பகுதி என்பதை பெயர்ப்பலகைகள் ஞாபகமூட்டின. ரங்கசாமி மக்கள் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தார். அவரின் அக்கறை தமிழ் தேசியவாதிகள், ஈழத்துயரம் பற்றினதாக இருந்தது. “விடிந்தது ஈழம்” என்ற அவரின் நூலைப் பற்றி விரிவாகச் சொல்லிக் கொண்டிருந்தார்.
மலேசியாவில் பிறந்து வளர்ந்து, தமிழாசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர். மலேசியாவின் பல முக்கியமான காலகட்ட பதிவுகளாக அவரின் நாவல்கள் இருந்திருக்கின்றன.
“லங்காட் நதிக்கரை” அவரின் சொந்த அனுபவக் கதை. அவர் பிறந்து வளர்ந்த சிஜங்காங் என்ற கிராம வரலாற்றின் ஒருபகுதி. தமிழர்கள் ‘எட்டாங்கட்டை’ என்றழைக்கும் பகுதியின் பதிவு அந்நாவல்.
லங்காட் நதி 160 கி.மீ ஓடும் நதி. துறைமுகம், கடைகள் என்றிருந்ததன் எச்சமாய் நிற்கிறது. ஆங்கில யூ வடிவத்தில் வளைந்து சென்று ஜாலம் காட்டுகிறது நதி.
கம்யூனிச இயக்கம் தலைமறைவு இயக்கமாக இருந்த காலம். பெரும்பாலும் மா.சே.துங்கின் சித்தாந்த வாரிசுகளாக இருந்து பொதுவுடமை சமுதாயம் பற்றிய கனவு கண்டவர்கள். அவர்களின் தாக்கத்திலிருந்து ரெங்கசாமியை தப்புவிப்பதற்காக கிராமத்திற்கு அனுப்பிவிட்டிருக்கின்றனர். பலகை சுவர். பலகை படுக்கை. சீனர்களும் ஆயுதங்களுடன் தலைமறைவாக இருந்த பகுதியில் பொழுதை கழித்திருக்கிறார். தொல்லை என்று 6 மாதத்திற்கு மேல் தமிழகத்தில் உறவினர் வீடுகளுக்கும் அனுப்பியிருந்திருக்கின்றனர்.
இந்த நாவலில் கம்யூனிஸ்ட்டுகளை பயங்கரவாதிகளாக பொது மக்கள் பார்த்த பார்வையே ஊடுருவி நிற்கிறது. அந்த கம்யூனிசவாதிகள் அந்த கிராமத்தினரை உணவு தரச் சொல்லி கட்டாயப்படுத்துகிறார்கள். முத்து என்ற தமிழ் இளைஞனை தங்கள் பக்கம் இழுக்க முயற்சிக்கிறார்கள். உளவு சொல்பவர்களையும் கட்டி வைத்து உதைக்கிறார்கள். தலைகளை கொல்கிறார்கள். உயிரோடு புதைக்கிறார்கள். ஒரு பக்கம் கம்யூனிஸ்ட்கள். மறுபக்கம் அரசாங்க படை இவர்களுக்கு இடையில் மாட்டிக் கொள்ளும் பொதுமக்கள். அப்பகுதிகள் கருப்புப் பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டு ஒடுக்கு முறைகள் இந்தியர்களின் குடியிருப்புப் பகுதிகள் சேதமாக்கப்பட்டது. சீனர்கள் கேம்ப், இந்தியர்கள் கேம்ப் என்று முள்வேலிகளுக்குள் மக்கள் அடைபட்டனர். இந்த அவலத்தை முத்து என்ற தமிழ் இளைஞனை முன் வைத்து கதையைச் சொல்கிறார். முத்துதான் ரங்கசாமி. இது ஒரு வகையில் சுயசரிதை அம்சங்களைக் கொண்டது.
இப்போது அவரின் சுயசரிதையை எழுதிக் கொண்டிருப்பதாகச் சொன்னார்.
பந்திங்கின் மகா மாரியம்மன் ஆலயத்தை காட்டினார். அக்கோவில் ரப்பர் தோட்டத்துள் இருந்தது. இப்போது தனியாய் ரப்பர் தோட்டம் அழிந்து போய் நிற்கிறது. கம்யூனிஸ்ட்டுகள் வந்து உணவு பெற்ற இடங்கள், ரப்பர் பால் காயப்போடும் பிரதேசங்கள், பாலுக்கு நெருப்பு வைத்து விரட்டப்பார்க்கும் போலீஸ், காட்டிக் கொடுக்கும் பையன்கள், கம்யூ. வந்து காட்டிக் கொடுப்பவர்களை கைகளைக்கட்டி தென்னை மரத்தில் கட்டி கத்தியால் வயிற்றைக் கீறிய இடத்தைக் காட்டுகிறார்.
அவரின் “ விடியல் “ நாவலில் வீலந் தொரை அதிகாரம் பண்ணிய இடங்களைக் காட்டுகிறார். லங்காட் நதி வளையும் இடத்தில் வசீகரம் போல் நின்று பெருமூச்சு விடுகிறார். தாய்த்தமிழ் பள்ளி ஒன்றுக்கு அழைத்து செல்கிறார். பள்ளியின் கட்டிட அமைப்பும், விஸ்தாரமும் மனதை விட்டு அகல மறுக்கிறது. தலைமை ஆசிரியர் பெயர் சிங். இந்திய வம்சாவளி என்பது தெரிகிறது. தமிழகத்தில் இருக்கும் அரசு உதவியோ, கருணையோ இல்லாமல் இயங்கும் தாய்த்தமிழ்ப் பள்ளிகள் ஞாபகம் வருகிறது.
அந்தக் காலத்தில் வங்கி இல்லாதது பற்றிச் சொல்கிறார். செட்டியார்கள் மட்டுமே தனிப்பட்ட முறையில் பணம் தந்து வந்திருக்கின்றனர். 19ம் நூற்றாண்டில் மலேசியா சுல்தான் லட்சுமண செட்டியாரிடம் தனது மகுடத்தை அடகு வைத்து பணம் பெற்றதைச் சொல்கிறார். தங்க நகை அடகுக்கடை, சீனர், வெள்ளையர் வங்கிகள் பின்னர் வந்து கொள்ளையடித்ததைச் சொல்கிறார்.
ஜலன் சுல்தான் அஸ்ஹர் சாவீதி கடற்கரையில் உலவுகிறோம். 46வது இந்தியன் படை வந்திறங்கியதன் அடையாளமாய் ஒரு நினைவுச் சின்னம் நிற்கிறது. 9 செப்டம்பர் 1945இல்.
திரும்பும் போது பழைய ரப்பர் தோட்டம் இருந்த திரவுபதி அம்மன் கோவிலைக் காட்டுகிறார். அது ரப்பர் தோட்டக்கோவில். இங்கு இருந்த 90% தோட்டத் தொழிலாளர்கள் அனாதைகள் ஆகிவிட்டனர். சரியான வேலை இல்லை. தங்க இடம் இன்றி கோலாலம்பூரில் அடைக்கலமாகி விட்டார்கள்.மலாய்காரன் வாழ்வுக்கு முன் தமிழன் தாழ்ந்து போய் விட்டான். மரம் ஓலை கொண்டு வந்து குடிசை போட்டு மலாய்காரன் வாழ்ந்தான். இன்று அது போல் வாழக் கூட இப்பகுதிகளில் தமிழனுக்கு இடமில்லை.
வில்லுப்பாட்டு நாடகம் எழுதின அனுபவங்களைச் சொல்கிறார் சிஜங்காங் கம்பத்தில் பிறந்து, கம்பர் தமிழ்ப் பள்ளியில் படித்து பிறகு அதே பிரதேசத்தில் ஆசிரியராக தொழில் ஆரம்பித்து தலைமை ஆசிரியராக உயர்ந்து ஓய்வு பெற்றவர். அருண் கேட்டுக் கொண்டதற்கிணங்கி ஒரு வில்லுப்பாட்டை உரக்கப் பாடுகிறார்.
ஆத்தங்கரை மேட்டினிலே
அத்தாய்ப்பு குடிசை கண்டாய்
ஆத்துக்குள்ள நூறு படகு.
வீட்டைச் சுற்றி பழ மரங்கள்
தென்னந்தோப்பு, கன்னுக்குட்டிகள், அண்ணர்மார்…

தமிழின் தொன்மைக்கு முன் மலாய் சாதாரண மொழி. தமிழ், ஆங்கில வார்த்தைகள் கலப்பில் மலாய் மொழி. தாம்பூலம் கூட போடக் கற்றுக் கொடுத்தவன் நான் என்கிறான் மலாய்காரன். எல்லாம் நம்மிடமிருந்து கற்றுக் கொண்டு தனதாக்கிக் கொண்ட தம்பட்டம் என்கிறார்.
கடாரம் வென்ற சோழ மன்னன் ஆட்சி குறித்த வரலாறு அழிக்கப்பட்டு வருகிறது. இது பற்றிய நிரந்தர நினைவுச் சின்னங்கள் ஏற்படுத்த வேண்டும் என்ற முயற்சிகள் நிறைவேறாத வேதனையைச் சொல்கிறார்.
அந்த கடாரம் என்பது இன்றைய மலேசியாவின் கெடா மாநில பகுதியாகும். சோழன் ஆட்சி குறித்த புராதன சின்னங்கள் காணப்படும் இடம் பூஜாங் பள்ளத்தாக்கு அதில் மெர்போக், பூஜாங், மூடா, சிம்போர், பாசீர் என்ற ஆறுகள் ஓடுகின்றன. ராஜேந்திரசோழன் கடல் வழியே படையெடுத்து வந்து வெற்றிருக்கிறான். பன்னாட்டு துறைமுகம் ஒன்றும் இருந்திருக்கிறது. பத்து காட் ஆற்றின் கரையில் ஒரு காட்டில் கண்டெடுக்கப்பட்ட ஒரு கோவில் புராதான பழமையைக் கொண்டிருக்கிறது. கருங்கல் கட்டிடம் அருகில் நீர்வீழ்ச்சியும் இயற்கையை தமிழன் வழிபட்டதற்கான அடையாளமாக இருக்கிறது. கடல் கடந்து தமிழன் வென்றதன் அடையாளத்தை பறை சாற்றும் பெரிய நினைவுச் சின்னம் எழுப்பப்பட வேண்டிய அவசியம் பற்றி அவர் பேச்சு இருந்து கொண்டே இருக்கிறது.
அ. ரெங்கசாமி மலேசியாவில் ஆங்கில ஆட்சி, ஜப்பானியர் ஆட்சி, சயாம் மரண ரயில் பாதை, நேதாஜியின் படை, கம்யூனிச பயங்கரவாதம், விடுதலை போன்றவற்றை நான்கு நாவல்களாக எழுதியிருக்கிறார். ஜப்பானியர்கள் மலேயாவை இரண்டாம் உலகப் போரின்போது கைப்பற்றிய போது தமிழர்களின் வாழ்நிலை பற்றி 1983ல் “புதியதோர் உலகம்” என்ற நாவலை எழுதினார். சயாம் மரண ரயில் பாதை பற்றின நினைவுகளை “நினைவுச் சின்னம்” என்ற நாவலாக்கினார்.
இந்திய தேசிய ராணுவத்தை நேதாஜி அமைத்து இந்திய விடுதலைக்காக பாடுபட்ட ஜப்பானியர் காலத்தில் மலேய இந்தியர்களின் அர்பணிப்பை “இமயத் தியாகம்” என்ற பெயரில் நாவலாக்கினார்.
மலாய் மக்களின் மத்தியில் தமிழர்களின் பற்றின மதிப்பு குறைந்து வரும் சூழல்கள் அ. ரெங்கசாமியை பாதிக்கவே செய்கின்றன என்பதை அவர் பேச்சின் மூலம் அறிந்து கொள்கிறேன்.
அசிரியா,
பூர்வீகக் குடிகளா,
மண்ணின் மைந்தர்களா,
வந்தேறிகளா
என்ற கேள்வி இன்னும் எழுப்பப்பட்டே வருகிறது என்கிறார்.
ஆடுற ஆட்டமும், கூடற கூட்டமும் படிப்பினை தந்தாகணும் என்பதை படைப்பிலக்கியத்திலும் அழுத்தமாக நம்புகிறவர் அ.ரெ.லங்காட் நதியின் சலசல்ப்போடே அவரின் குரலும் கேட்டுக் கொண்டிருக்கிறது.

subrabharathi@gmail.com
———————–

Series Navigation‘நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து…. 19. அ.முத்துலிங்கம் – ‘மகாராஜாவின் ரயில் வண்டி’.வம்சி புக்ஸ் ஐந்து புத்தகங்கள் வெளியிட்டு விழா அழைப்பிதழ்
author

சுப்ரபாரதிமணியன்

Similar Posts

3 Comments

 1. Avatar
  paandiyan says:

  //கடாரம் என்பது இன்றைய மலேசியாவின் கெடா மாநில பகுதியாகும். சோழன் ஆட்சி குறித்த புராதன சின்னங்கள் காணப்படும் இடம் பூஜாங் பள்ளத்தாக்கு அதில் மெர்போக், பூஜாங், மூடா, சிம்போர், பாசீர் என்ற ஆறுகள் ஓடுகின்றன. ராஜேந்திரசோழன் கடல் வழியே படையெடுத்து வந்து வெற்றிருக்கிறான். பன்னாட்டு துறைமுகம் ஒன்றும் இருந்திருக்கிறது. பத்து காட் ஆற்றின் கரையில் ஒரு காட்டில் கண்டெடுக்கப்பட்ட ஒரு கோவில் புராதான பழமையைக் கொண்டிருக்கிறது. கருங்கல் கட்டிடம் அருகில் நீர்வீழ்ச்சியும் இயற்கையை தமிழன் வழிபட்டதற்கான அடையாளமாக இருக்கிறது. கடல் கடந்து தமிழன் வென்றதன் அடையாளத்தை பறை சாற்றும் பெரிய நினைவுச் சின்னம் எழுப்பப்பட வேண்டிய அவசியம் பற்றி அவர் பேச்சு இருந்து கொண்டே இருக்கிறது.
  //

  இலங்கை பற்றி வீரம் ஆவேசம் எல்லாம் பேசுபவர்கள் மலேசியா என்றவுடன் அடங்கி விடுவார்கள் — அது ஏன் ???

 2. Avatar
  Arun Narayanan says:

  Thank you for your wonderful narration, Subrabharathimaniyan sir. The greatness of Tamils and Chola’s history is beautifully expressed thru Shri. A. Rangswami’s words. It leaves a deep impression on one’s mind on the longivity of our Tamilians wherever they are. Whatever the efforts of people all over the world to ruin the greatness and historicity of Tamils and their culture, the Tamil and her people will survive and win over all those anti-Tamil movements and politics.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *