-தாரமங்கலம் வளவன்
சென்னைக்கு வந்த கல்யாணியை பார்த்த லட்சுமி, தன் கணவரிடம்,
“ கல்யாணியை கண்டிப்பா மருமகளாக்கிக்க போறேன்…..”என்று சொல்ல,
“ என்னையும் கொஞ்சம் கவனிச்சுக்கோ…” என்றார் கிண்டலாய்…
வெங்கட் தன் ரெகார்டிங் சம்மந்தமாக, பிஸியாக இருந்ததால், லட்சுமி அம்மா கல்யாணியின் குடும்பத்தை நல்ல படியாக கவனித்து கொண்டார்கள்.
ஒரு வீடு வாடகைக்கு அமர்த்த பட்டது.
சந்தானம், கல்யாணியை தங்கள் குடும்பத்திற்கு தெரிந்த ஒரு வாய்ஸ் எக்ஸ்பர்ட்டின் வகுப்பில் சேர்த்து விட்டான்.
அவர் கல்யாணிக்கு அருமையான் குரல் வளம் இயற்கையாகவே இருப்பதாகவும், தன்னுடைய பயிற்சி இல்லாமலே அவளால் அழகாய் பாட முடியும் என்றும் சொன்னார்.
பட்டாபிக்கு ஒரு டிபன் சென்டர் ஆரம்பித்து கொடுக்க பட்டது. வசந்தி பெரியப்பாவுக்கு உதவ, டிபன் சென்டர் நல்ல படியாக நடந்தது.
சென்னையில் ஒரு வருடம் ஓடியது..
வெங்கட்டின் சிபாரிசினாலும், சந்தானத்தின் இடைவிடா முயற்சியினாலும், இவை அனைத்துக்கும் மேல் கல்யாணிக்கு இயற்கையாய் அமைந்த குரல் வளத்தினாலும், ஒரு திரைப்பட பாடலுக்கு பாட வாய்ப்பு கிடைத்தது கல்யாணிக்கு.
உடன் பாடியது வெங்கட்.
பாடல் பெரிய ஹிட் ஆனது…….
மள மள வென்று வாய்ப்புகள் குவிய, கல்யாணி பிரபல பாடகியானாள். பல பாடல்கள் பாடினாள், தனியாகவும், மற்ற பிரபல பாடகர்களுடனும்……
தனக்கு கல்யாணியோடு பாடுவதற்கு வாய்ப்பு கிடைத்தால், அவளை மறுபடியும் பார்த்து தங்கள் கல்யாணம் பற்றி பேசலாம் என்று சந்தானம் நினைத்தான்.
ஆனால் சந்தானத்திற்கு வாய்ப்புகள் வரவில்லை…
கல்யாணி சந்தானத்துடன் பேசுவதும் குறைந்தது..
சந்தானம் துவண்டு போனான்..
லட்சுமி அம்மா “ நானே கல்யாணியை கேட்கட்டுமா..” என்று கேட்க, “ வேண்டாம் நானே கேட்கிறேன்…” என்று சொன்னான் சந்தானம்.
இப்படி இருக்கும் போது, ஒரு பாடலுக்கு பாடுவதற்காக சந்தானத்தை இசை அமைப்பாளர் அழைக்க, சந்தானம் மகிழ்ந்து போனான்.
அது டூயட் பாடல் என்று தெரிய வர, உடன் பாடும் பெண் பாடகி
கல்யாணியாக இருந்தால் எப்படி இருக்கும் என்று ஆசைப் பட்டான் சந்தானம்.
ஆசைப் பட்ட படி கல்யாணி தான் என்று முடிவு ஆனது.
சந்தானத்தின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
அந்த டூயட் பாடலில், கல்யாணியுடன் இணைந்து சந்தானம் அன்று பாடியது அவன் இதுவரை பாடியதற்கு எல்லாம் மாறுபட்டது.
அப்படி ஒரு மனம் ஒன்றிய பாடல்..
பலத்த கரவொலியுடன் பாடல் பதிவானது.
கல்யாணியும் மனம் ஒன்றி பாடியதாகத்தான் தோன்றியது.
அந்த பாடல் பதிவுக்கு பின், சந்தானம் கல்யாணியிடம்,
“ கொஞ்ச பேசலாமா….” என்றான்…
“ சொல்லுங்க…..” என்றாள்..
“ இப்ப பெரிய பாடகி ஆயிட்டே……. எனக்கு கூட இவ்வளவு சான்ஸ் கெடைக்கல….” சொல்லி விட்டு நிறுத்தினான்.
கல்யாணி வேறு எங்கோ பார்த்து கொண்டிருந்தாள்.
“ அப்பாவும், அம்மாவும் உன் கிட்ட பேச சொன்னாங்க….”
“ எதைப் பத்தி……” கல்யாணி.
தெரிந்து கொண்டே, வேண்டுமென்றே புரியாது போல் நடிக்கிறாள் என்பது சந்தானத்திற்கு தெளிவாகத் தெரிந்தது.
“ உனக்கு தெரியும் கல்யாணி நான் என்ன கேட்க போறேன்னு…”
கல்யாணி மௌனமாக இருக்க…..
“ நம்ம கல்யாணத்தை பத்தி தான்…..” சந்தானம்.
அதற்கு கல்யாணி, “ எனக்கு நெறய கடமைகள் இருக்கு.. நான் கல்யாணமே செஞ்சுக்க போறதில்லை…என்னை விட வசந்தி தான் உங்களுக்கு பொருத்தம்.. ஏற்கனவே நான் சொன்னபடி வசந்தியை கல்யாணம் பண்ணிக்கோங்க……” பட பட வென்று பேசினாள்.
சந்தானத்திற்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை.
“வசந்தியும் எங்க தாத்தாவோட பேத்தியை தான்….”
“ அது தெரியும்….” சற்று கோபமாய் பதில் சொன்னான் சந்தானம்.
முதன் முறையாக கல்யாணியின் பதிலும், அவள் பேசிய விதமும் தன் மனதை காயப்படுத்துவதை சந்தானம் உணர்ந்தான்.
அவள் பதிலின் அர்த்தம்தான் என்ன…..
விட்டேத்தியாக, தன் பேச்சின் தீவிரம் தெரியாமல் பதில் சொல்லும் இவளை எந்த வகையில் சேர்ப்பது….
எதிலும் படாமல் பேசும் கல்யாணிக்காக தான் அலைக்கடிக்க படுகிறோமா……….
அவள் பிரபல பாடகியாய் விட்டதால், அவளுக்கு தான் சரி சமம் இல்லை என்கிறாளா..
அன்று இரவு அம்மாவிடம் இதைப் பற்றி சொன்னான்..
லட்சுமி வருத்தபட்டு,
“கல்யாணி உன்னை மட்டம் தட்டறதா தோணுது.. இதுதான் ஏறி வந்த ஏணியை உதைக்கறதுங்கறது..”
அப்பாவிடமும் இதைப் பற்றி சொன்னான்.
தங்கள் மகனின் திருமணம் தள்ளிப் போவதை நினைத்து வெங்கட்டும், லட்சுமியும் வருத்தபட்டார்கள்.
“ ஏங்க…. கல்யாணி சொன்னபடி ஏன் வசந்தியை சந்தானத்துக்கு
பண்ணி வைக்க கூடாது…” லட்சுமி.
“எனக்கு கூட அதுதான் சரின்னு படுது. சந்தானம் கல்யாணம் தள்ளிப் போய் கிட்டே இருக்கு…ஒரு முடிவு கட்டியாகணும்” வெங்கட்.
சந்தானத்திற்கு என்ன செய்வதென்று புரிய வில்லை.
இன்னும் ஒரு முறை இதைப் பற்றி பேசிவிடலாம் கல்யாணியிடம்..
அப்பொழுது தெரியும் அவளின் உள் மனது.
அன்றே கல்யாணியைப் பார்த்த சந்தானம்,
“ நீ வசந்தியை கல்யாணம் பண்ணிக்க சொன்னதை அப்பா அம்மாகிட்ட சொன்னேன்…..” நிறுத்தினான்.
“ சரின்னு சொன்னாங்களா..” கல்யாணி.
“ ஆமாம்….”
“ பண்ணிக்கங்க….”
“ நீ மாட்டேன்னு சொன்ன மாதரி, வசந்தியும் சொல்லிட்டா…”
“ வசந்திக்கு இஷ்டம்தான்… நான் கேட்டாச்சு….”
பட்டாபியைத் தவிர, வசந்தி உட்பட மற்ற எல்லோரும் சம்மதிக்க, சந்தானம்-வசந்தி திருமணம் சென்னையின் பிரபல கல்யாண மண்டபத்தில் நடந்தது.
திருமணத்திற்கு கல்யாணி வரவில்லை. ரெகார்டிங் என்று காரணம் சொன்னாள்.
தொடரும்
குறு நாவல்
அத்தியாயம் – 5
நன்றியுடன் என் பாட்டு…….
-தாரமங்கலம் வளவன்
திருமணத்திற்கு அடுத்த நாள்….
கல்யாணி வந்து புது மண தம்பதியருக்கு வாழ்த்து சொன்னாள்.
எப்போதும் இருக்கும் பேச்சும், சிரிப்பும் இல்லை.
“ நேத்து எந்த முயூசிக் டைரக்டர் ரெகார்டிங்…. தங்கச்சி கல்யாணத்துக்கு கூட வர முடியாம….” சந்தானம் கேட்க,
வசந்தியும் கூட இருந்தாள்.
“ நேத்து பூரா ரூம்ல தான் இருந்தேன்….” என்றாள் கல்யாணி.
கல்யாணியின் கண்கள் கலங்கியிருந்தது.
சந்தானம், வசந்தி இருவருக்கும் ஆச்சர்யமாக இருந்தது.
கல்யாணி அழ ஆரம்பித்தாள்.
சத்தம் அதிகமாய் வந்தது.
“ அக்கா…. மெதுவா… வீட்ல நெறய பேர் இருக்காங்க…”
“ எல்லாம் ஒனக்காகத் தாண்டி…” கல்யாணி.
“ என்னக்கா சொல்ற…..” வசந்தி.
சந்தானம் பேசாமல் இருந்தான்.
“ ஆமாண்டி…. உன்னோட அப்பாவுக்கு என் அப்பா செய்த துரோகத்துக்கு பிராயச்சித்தமாக தான் எனக்கு கிடைத்த சந்தானத்தை ஒனக்கு கொடுத்தேன்….”
சந்தானம், வசந்தி இருவருக்கும் அதிர்ச்சி.
“ அவரை கல்யாணம் பண்ணிக்கணும்னு உனக்கு விருப்பம் இருந்திச்சா…..” அழுது கொண்டே கேட்டாள் வசந்தி.
கல்யாணி மௌனமானாள்…
கல்யாணி மீண்டும் அழ ஆரம்பித்தவள், நிறுத்தி விட்டு,
“ ஜெயிலுக்கு போனவன் மகளை வேறு யார் கல்யாணம் செய்துப்பாங்க… சந்தானத்துக்கு நான் புரிய வைத்தேன்… மத்தவங்களுக்கு எப்படி புரிய வைப்பேன்…”
சந்தானம் பக்கம் திரும்பிய கல்யாணி,
“ சித்தப்பா ஜெயிலுக்கு போனதுக்கான காரணத்தை நான் சொன்னதை நீங்க நம்பினீங்க… அதே சமயத்தில தாத்தாவுக்காக இவள உங்க குடும்பம் கண்டிப்பா கல்யாணம் பண்ணிக்குமுன்னும் தெரியும்…”. நிறுத்தியவள், மீண்டும்
“ மத்தவங்களுக்கு எப்படி புரிய வைப்பேன்…” என்று திரும்ப, திரும்ப சொல்லிக்கொண்டிருக்க,
சந்தானம் “ உன் வாழ்க்கை…..” என்றான்.
“ என் வாழ்க்கை பாடறதுக்காக மட்டும் தான்….” கல்யாணி.
“ இல்ல கல்யாணி… நீ கல்யாணம் பண்ணிக்கணும்…” சந்தானம்.
வசந்தி அழுது கொண்டிருந்தாள்…
“ ஹனி மூன் எங்க…..” அழுகையை நிறுத்தி விட்டு கேட்டாள் கல்யாணி.
சந்தானமும், வசந்தியும் பதில் பேச வில்லை.
கல்யாணி கிளம்பினாள்.
அடுத்த வாரம் ஒரு நாள் காலை சந்தானம்-வசந்தி தேன் நிலவுக்காக சிங்கப்பூர் போவதற்காக விமான நிலையத்திற்கு வந்து சேர, வேறு ஒரு காரில் கல்யாணி வந்து இறங்கினாள்.
இவர்களை பார்த்த கல்யாணி, “ஹனி மூனா….. எங்க……” என்றாள்.
“ அக்கா….. நீ எங்க……” வசந்தி.
“ இன்னிக்கி உன் அப்பா விடுதலை ஆகறாரு…. அவர கூட்டிட்டு வரதுக்காக திருச்சிக்கி போய் கிட்டு இருக்கேன்……” கல்யாணி.
“ அக்கா…. என் அப்பாவை கூட்டிக்கிட்டு வரதுக்கு, என் கிட்ட கூட சொல்லாம போய் கிட்டு இருக்கியா….”
“ நீங்க ஹனி மூனுக்கு போங்க…. நான் பாத்துக்கிறேன்…” என்றாள்.
“ உன் கல்யாணம்…….” சந்தானம்.
“ நான் இரண்டு விஷயம் நடக்கணும்னு காத்துக் கிட்டு இருந்தேன்… ஒன்னு நேத்து முடிஞ்சுது.. இன்னோன்னு இன்னிக்கு முடியப்போகுது…” சொல்லி விட்டு நிறுத்தினாள் கல்யாணி.
“ஒன்னு நேத்து முடிஞ்சுதுடுச்சா…. என்னா அது…….” சந்தானமும், வசந்தியும் ஒருங்கே கேட்டார்கள்…
“ அது…. நானே எழுதின ஒரு பாட்டு, நானே பாடி நேத்து ரெகார்டிங் ஆயிடிச்சி….”. கல்யாணி.
“ பாட்டோட தீம் என்ன……..” என்று மறுபடியும் சந்தானமும், வசந்தியும் ஒருங்கே கேட்டார்கள்…
“கதா நாயகனுக்கு, கதா நாயகி தன்னை உருவாக்கியதற்காக நன்றி சொல்ற மாதரியான ஒரு சிட்சுவேஷன் பாட்டு….” கல்யாணி.
தொடர்ந்தாள் கல்யாணி,
“ என் சொந்த அனுபவத்தை அதில கொட்டி நானே எழுதி, பாடி இருக்கறதனால தத்ரூபமாய் வந்திருக்கு… பாட்டு ரீலீஸ் ஆனதும் பாருங்க…எப்படி ஹிட் ஆகப்போகுதுன்னு…. அதனால் தான் இசை அமைப்பாளர் கூட இந்த பாட்டை எடுத்துக்கிட்டார்… அது சந்தானத்திற்கு நான் தெரிவிக்கும் நன்றி…….” என்று கூறிவிட்டு, ஏதோ ஞாபகம் வந்தவளாக, சந்தானத்தை பார்த்து,
“ நாம ரண்டு பேரும் சேந்து பாடின பாட்டு கூட, நேத்து ரீலீஸ் ஆயி ஹிட் ஆயிக்கிட்டு இருக்கு…. புது மாப்பிள்ளைக்கு கவனிக்கிறதுக்கு நேரமில்ல போல இருக்கு….”
அது கூட தன் சொந்த அனுபவத்தை கொட்டி பாடி இருக்கிறதனால தான் தத்ரூபமாய் வந்திருக்கும், அதனால கண்டிப்பா ஹிட் ஆகும் என்று கல்யாணியிடம் சொல்ல வாய் வந்தது சந்தானத்திற்கு…….
அதே சமயத்தில் கல்யாணி தன்னை விட்டு போய், அந்த இடத்தில் வசந்தி வந்து விட்டது ஞாபகம் வர, சொல்ல வந்ததை நிறுத்தி விட்டு,
“ சரி, ரண்டாவது சாதனை….” என்றான்.
“ ரண்டாவது என் சித்தப்பாவின் விடுதலை….” என்றாள்.
“ சரி…. இரண்டும் நீ நெனச்ச மாதரி முடியப் போறதனால……. சித்தப்பாவை கூட்டி வந்திட்டு, அப்புறமாவது, நீ கல்யாணம் செய்துக்கணும்…” சந்தானம் கெஞ்சினான். வசந்தியும் கெஞ்சினாள்.
கல்யாணி வேறு பக்கம் முகத்தை வைத்து கொண்டு தலையாட்டிவிட்டு, உள் நாட்டு விமான பிரிவுக்கு, திருச்சி விமானத்தை பிடிக்க நடக்க ஆரம்பித்தாள்.
சந்தானமும் வசந்தியும் அதை நம்பிக்கொண்டு பன்னாட்டு விமான பிரிவுக்கு, தங்களின் தேன் நிலவுக்காக சிங்கப்பூர் விமானத்தை பிடிக்க நடந்தார்கள்.
– முற்றும்
- வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -2 பாகம் -5 மூன்று அங்க நாடகம்
- ஆன்மிகமோ, அன்னைத் தமிழோ- அன்பேயாகுமாம் எல்லாம்!! -தமிழறிஞர் திரு.கதிரேசனைத் தெரிந்துகொள்வோம்!
- வெளியிடமுடியாத ரகசியம்!
- மீள்பதிவு
- நாளைக்கு இருப்பாயோ நல்லுலகே…?
- பிறவிக் கடல்.
- ’ஒரு தூக்கு’ – ஜார்ஜ் ஆர்வெல்லின் கட்டுரை
- மலேசியா ரெ கார்த்திகேசுவின் “நீர் மேல் எழுத்து” சிறுகதைத் தொகுப்பை முன் வைத்து…
- சற்று நின்று சுழலும் பூமி
- புலி வருது புலி வருது
- அணுப்பிளவை முதன்முதல் வெளியிட்ட ஆஸ்டிரிய விஞ்ஞான மேதை லிஸ் மெயிட்னர்
- வால்ட் விட்மன் வசனக் கவிதை -19 என்னைப் பற்றிய பாடல் – 12 (Song of Myself) ஆத்மக் கதிர் உதயம்
- போதி மரம் பாகம் ஒன்று – யசோதரா அத்தியாயம் – 16
- மந்திரமும் தந்திரமும் – ஜப்பானிய நாடோடிக்கதை
- தாகூரின் கீதப் பாமாலை – 60 மரத் தோணியை நிரப்பு .. !
- குருஷேத்திர குடும்பங்கள் 6
- நீர்நிலையை யொத்த…
- கவிதை
- உன்னைப்போல் ஒருவன்
- கடல் நீர் எழுதிய கவிதை
- புகழ் பெற்ற ஏழைகள் 3. சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்து வள்ளலாக வாழ்ந்த ஏழை – கலைவாணர்
- நீல பத்மம் – திருவனந்தபுரம் தமிழ்ச்சங்கம் பவளவிழா கருத்தரங்கம்
- குழந்தைகளின் கல்விபெறும் உரிமை மதிக்கப்படுகிறதா? மீறப்படுகிறதா?
- குழந்தைகளின் கல்விபெறும் உரிமை மதிக்கப்படுகிறதா? மீறப்படுகிறதா? – 1
- ஆதாமும்- ஏவாளும்.
- டௌரி தராத கௌரி கல்யாணம்….! – 2
- அக்னிப்பிரவேசம்-30 தெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத்
- பதின்மூன்றாவது அவுஸ்திரேலியத் தமிழ் எழுத்தாளர்விழா
- ஒரு காதல் குறிப்பு
- இந்தியாவில் பிரேயிலின் எதிர்காலம் – வாய்ப்புகள்+சவால்கள்.
- தமிழ்நாடு முஸ்லிம் பெண்கள் ஜமாத் – ஆவணப்படம்
- விஸ்வரூபம் – விமர்சனங்களில் அரசியல் தொடர்ச்சி
- நன்றியுடன் என் பாட்டு…….குறு நாவல் அத்தியாயம் – 4 – 5