(ஐ சி எஸ் ஏ மையம் சென்னை எழும்பூர் – ஜுன் 16, 2013.)
அறிவிற் சிறந்த இந்த அவையை வணங்கி மகிழ்கிறேன். சற்று கூச்சத்துடனும் மேலான தயக்கத்துடனும் தான் நான் இங்கே உங்கள்முன் நிற்கிறேன். கவிதைகளின் நல்ல ரசிகனாக என்னை நான் சொல்லிக்கொள்ள இயலவில்லை. கவிஞர்கள் மீது எனக்கு பொறாமை உண்டு. நான் கவிஞன் அல்ல, என்கிற முடிவுக்கு நான் எப்போதோ வந்துவிட்டேன். வாசிக்க என என் முதல்கட்டத் தேர்வு கவிதைகள் அல்ல. எழுதவும் எனக்கு புனைகதைகள் அதிக வசிகரம் காட்டுகின்றன. ஏன் – என நான் பலமுறை யோசித்திருக்கிறேன். கவிதைகள் உணர்ச்சித் திவலைகள் என்று தோன்றுகிறது. ஆச்சர்யமும், சட்டென உள் விழும் கிரணங்கள் வர்ணங்களாய்ச் சிதறுவதுமான ஒரு கோலம் அது, என்பதாக என்னில் ஒரு பரவச எண்ணம் உண்டு. கவிதைகள் சட்டென பற்றிக்கொள்ளும் மத்தாப்புப் பொறிகள். அதன் வேகம் அப்படி. அதன் ஆயுசும் அப்படித்தானோ தெரியவில்லை. ஆனால் எழுத்தில், அச்சில் அவை நித்தியத்துவப் படுத்தப்படுகின்றன. A thing of beauty is a joy forever – என்றான் ஒரு கவிஞன். கீட்ஸ் என நினைக்கிறேன். இதைத்தான் சொல்கிறானோ தெரியாது. மின்மினிப் பூச்சிகளை உள்ளங்கைக்குள் வைத்து மூடிக்கொள்ளும் சிமிழ்கள் கவிதைகள்.
நிஜத்தில் வாழ்க்கை சார்ந்து ஆச்சர்யங்கள் என எதுவும் எனக்குக் கிடையாது. மாற்றங்கள் ஆச்சர்யங்கள் அல்லஎனவே நான் அவதானிக்கிறேன். மாற்றங்கள் தவிர்க்க முடியாதவையும் ஆகும். ஒரு நதியின் ஓட்டம் போலவே, ஆனால் சற்று சீரற்று கழிகிறது வாழ்க்கை. இதில் திரும்புதல், பின்நோக்கிச் செல்லுதல் இல்லை. ஆனால் படைப்பிலக்கியத்தின் வேலை இதில் ஒரு சீரை, ஒழுங்கைக் காண விழைவதும், அதை முடிந்தவரை நிலை நிறுத்துவதுமாக இருக்கிறது. ஒரு வாழ்க்கை படைப்புவடிவங் கொள்கையில் அதில் ஒரு காரண அம்சம், ஒரு செயலுக்கும் நிகழ்வுக்கும் பின்னணியாய் நாம் சொல்ல உந்தப்படுகிறோம். சிதறும் ஒலிகளை ஒழுங்குபடுத்தி, சீட்டு விளையாடுகிறாப் போல…. ஸ்வரப்படுத்துகையில் இசை என்கிற கலையாக அது உருவோங்குகிறது. கோடுகளின் ஒழுங்கே சித்திரங்கள். கலை என்கிறதே முரண்களைச் சுட்டுகிற, முரண்களில் இருந்து, சீரை வரிசையை காரணங்களை, முன்னிலைப் படுத்துகிற மனித யத்தனம் என்பதாக உணர முடிகிறது. தலையில் சுமந்துசெல்லும் விறகுக்கட்டே படைப்பு.
ஆனால் …
ஆனால், Logic or reasoning … என்கிற இந்த அம்சத்தையே எள்ளி நகையாட்டம் காட்ட வல்லவை கவிதைகள். வாழ்க்கை அப்படி ஒன்றும் உன் சட்டதிட்ட வகையறைக்குள் அடங்கும் வகையறா அல்ல அப்பா, என்கிறதையே லாஜிக்காக, அல்லது எதிர்-லாஜிக்காக அவை முன் நிறுத்துகின்றன. காரணம் அவை உணர்ச்சிக் கேந்திரங்கள். மின் முனைகள் கவிதைகள். தீக்குள் வைத்த விரல் போலும் வாசகனைத் துணுக்குறச் செய்கிற வசியம் கவிதைகளுக்கே இருக்கிறது. எனக்கு கவிதை எழுத இந்த ஜென்மத்தில் வராது தான். இந்த ஆச்சர்யம், திடுக்கிடல், பரவசம் எனக்கு முடியாதது என்பதே எனது ஆச்சர்யம் அல்லது திடுக்கிடல் ஆகிறது.
வாழ லட்சியங்கள், நோக்கங்கள், இலக்குகள் தேவை என்கிறது படைப்பு. இந்தத் தேவையை நிர்ப்பந்திக்கிறது சமூக வாழ்க்கை. மண் பயனுற வேண்டும். இது நமது சமூகம் நமக்குத் திணிக்கிற அதிகார அடக்குமுறை என்றும் ஒரு கருத்துவிவாதம், அதுவும் நமக்குள் இருக்கிறது. இந்தச் சூழ்நிலையில், வாழ்க்கையை வாழ்க்கையாகவே, ஒருவேளை சற்று நேர்மையாகக் கூட, கவிதை கையில் தூக்கி எடுத்துக் காட்டுகிறது. வாழ்க்கை சார்ந்த மேலதிக நியாயத்துடன் அவை நடந்துகொள்வதாக நம்பப் படலாம். ஏனெனில் அத்தனை காரண காரியங்களையும் அபத்தமாக்கி விட்டு எள்ளி நகையாடியபடி நம்மைப் பின்தள்ளி முன் விரையும் வாழ்க்கை. எனினும் திரும்பவும் காரணங்களோடு அதைத் துரத்திச் செல்வது படைப்பாளனின் வேலையாக நாங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.
விக்கிரமாதித்த வேதாளங்கள் நாங்கள்.
நல்ல கவிதை என்பது கவிஞன் பெற்ற தரிசனத்தை திரும்ப ஒருமுறை நிகழ்த்துகிறது. சூடோ குளுமையோ உள்ளே அறிவில் நிகழ்த்துகிறது கவிதை. ஒரு ஹா என்கிற வாசனைச் சிதறல், அங்கே நமக்குக் கிடைக்கிறது. அதே தக்கணத்து காலப்பொதிவுடன் அதை வழங்கும் கவிதைகள் அசாத்தியமானவை. சில கவிதைகள், குறிப்பாக கீதாஞ்சலி பிரியதர்சினியின் கவிதைகள் அந்த நிகழ்கணத்தில் அல்ல, அதன்பின்னான ஒரு தனிமையில், மீள்பார்வையில் நமக்கு எழுதிக்காட்டப் படுகின்றன. சம்பவத்தில் சாட்சிநிலையாய் அமைந்து ஆனால் அதில் பங்குபெறாமல் அவதானியாக அவர் தன்னை விலக்கிக் கொள்கிறதாகத் தெரிகிறது, கவிதைகளில். மௌனபாரம் சுமக்கிறார் கீதாஞ்சலி.
இதில் அந்த ஹா… அரும்புவெடிப்பு இல்லை, அம்மாதிரியான சூழல் விளக்கமும் இல்லை… என்பது அவரது அடையாளமாக எனக்குத் தோன்றுகிறது. சட்டென சமதையான உவம உருவகச் சித்திரங்களை வார்த்தைவலையாய்ப் பரத்திக் காட்டுகிறார் கீதாஞ்சலி, அழகான பெரிய கண்ணுக்கு மை தீட்டிக் காட்டுகிறாப் போல. ‘நாய் கவனம்‘ – எனப் பலகைமாட்டிய வீட்டுக்குள் இருந்து சகவயதுப் பெண்களிடம் புன்னகை காட்ட முயல்வது புகுந்தவீட்டு புதுமணப் பெண்ணுக்கு அபத்தமாய்ப் படுகிறதாய் ஒரு சித்திரம் அவர் காட்டியது ஞாபகம் இருக்கிறது எனக்கு. கீதாஞ்சலி வீட்டில் நாயைப் பார்த்த நினைவு எனக்கு இல்லை. இது சுய அனுபவம் அல்ல. பார்வையில் விழுந்த ஒரு காட்சியின் குழைவாய் வந்த கற்பனையாகக் கூட இருக்கலாம். கீதாஞ்சலி பெண்மையின் மௌனப் பொதிவை சற்றே முக்காட்டைப் போல விலக்கிக் காட்ட முன்வருகிறார். இது ஆமையின் கழுத்து இழுத்துக் கொள்ளும் பதுங்கல் அல்ல… மேகத்தில் இருந்து வெளிப்படும் நிலவு. எனினும் பூடகத்தன்மை முற்றிலும் வெளிப்படாத மயக்க அழகு. சிற்றசைவு தவிர அதில் பெரும் சலனங்கள் இல்லை. ஆனால் அதில் ஒரு அடிமண் தொடவியலாத ஆழத்தை அவர் குறிப்புணர்த்தி விடுகிறார்.
பெண்மை பெரும்பாலும் ஒரு பார்வையாளினி யாகவே இருக்க முடிகிறது. வாய்விட்டு நினைத்ததை உரத்துப் பேசுதல் பெண்மைக்கு அழகாய், பாந்தமாய் இல்லை. என்பதால் பெண்மைக்கு உணர்ச்சிகள், கருத்துகள் இருக்காதா என்ன… அவைபற்றி அறிவீரா மானிடரே, என கேள்வியைப் பிரதானமாய் முன் வைக்கிறது கீதாஞ்சலி கவிதைகள். ஆனால் இவை ஆழ்ந்த பெருமூச்சுகள் அல்ல. குமுறல் அல்லது வெடிச்சிதறல்களும் அல்ல. கேள்விகளை வீசிவிட்டு அவை மீண்டும் எப்படியோ மௌனமாகி விடுகின்றன. இந்த இடைப்பட்ட நிலை ரொம்ப நுட்பமானது. காரணம் இதில் இருந்து, இதை வாசிக்கிற வாசகர் இந்தப் பக்கமும்… பெருமூச்சுக்கும், அந்தப் பக்கமும்… குமுறலுக்கும் தன் கற்பனையை விஸ்தரித்துக் கொள்ள முடியும். வாசகனின் தன் குணச்சித்திரத்துக்கு கவிதைத்தளம் விரிந்து கொடுத்து இடம்தரும் அளவில் இவை அமைகின்றன.
நேர்த்தியாய்ப் பரிமாறப்பட்ட உணவு இது. ருசியான உணவு என்றாலும் அவரவர் தேர்வு என்பது தனி அல்லவா?
தனது அனுபவங்களையே, தானே ஒரு பாத்திரம் போல அமைத்துக்கொண்டு அவர் கவிதைபாட முன்வருகிறாப் போல உணர முடிகிறது. இது முக்கியமாக, அந் நிகழ்வு சார்ந்த இவரது குரலை அடித்து விடுகிறது. வாசகனின் குரலுக்கு அது அழைப்பு விடுக்கிறது. சற்றே ஈரத்துடன் படபடக்கிற காயப்போட்ட புடவைகளாகவே… நவினயுக உடையாக… சுடிதார், நைட்டி என இதை உருவகப்படுத்த முடியாது… புடவைப் படபடப்பாகவே இவை நம்மை ஈரம் சிதறும் காற்றாய்த் தீண்டுகின்றன. அதில் கண்ணீர் இல்லை, என்பது அவரது அடையாளம்.
அப்போது நிகழ்ந்த ஒரு நிகழ்வு, தக்கணத்தில் மீண்டும் அவர் மனதில் நிழலாட்டம் காட்ட, எதிர்கால முடிச்சுகளோடு அதை அணுகிப்பார்க்க கீதாஞ்சலி முற்படுகிறார். நிகழ்காலம் போலவே காலம் அப்படியே உறைந்துவிடாது என்பதை அவர் உணர்ந்தே செயல்படுவதாகத் தெரிகிறது. ஒருவேளை சீராகி விடும் என்கிற நம்பிக்கை அதில் இருக்கிறதா என்றால், அப்படி எடுத்துக்கொள்ள முடியவில்லை. அந்த நீர் மேல்பரப்பு மௌனம், நமக்குத் தெரிவது அவ்வளவே. சீராகிவிட்டால் நல்லது, என்கிற குரலில் நிதரிசனத்தின் வலியை அவர் உணரவைத்து விடுகிறார்.
வியப்புகள், விசாரணைகள், வியங்கோள்கள், கேள்விகள்… காட்டுவழியில் உரசும் கொப்புகள்… என பல்வகைப் பயணங்களோடு அவற்றில் நாம் வளைய வருகிறோம். தனியே வீட்டில் வசிக்கிற பெண்ணுக்கு மொட்டைமாடித் தண்ணீர்த் தொட்டியில் முளைத்திருக்கிற ஆலஞ்செடி துணையாக அமைகிறது, ஊருக்குப் போகையிலும் மனசில் கூட வருகிற அளவுக்கு. புதியதாய்க் குடிவந்த வீட்டு மொட்டைமாடியில் படியடியில் ஒரு மூணு சக்கர சைக்கிள், அந்த வண்டியை ஓட்டி மகிழ்ந்திருக்கும் குழந்தையின் முகத்தைத் தேட வைக்கிறது.
நகரத்துப் பேத்தி பாட்டிக்கு நகர வாழ்க்கையில் விழிப்போடிருக்கக் கற்றுத் தருகிறாள். இந்தவயதில் இத்தனை ஜாக்கிரதை உணர்ச்சி அவளுக்கு இருப்பதை வாயடைத்துப் போய்ப் பார்க்கிறாள் பாட்டி. எனில் இதில் கண்டடைந்தது சோகமா, மகிழ்ச்சியா? மீண்டும் சொல்கிறேன்… வாசகனின் தன் குணச்சித்திரப்படி இதை அணுக அவர் அனுமதிக்கிறார்.
சிறு அடிநாக்குக் கசப்புடனேயே அநேக கவிதைகள் இவர் வாய்வழி உதிர்வதாகப் படுகிறது. தனிமை என்பது கூட சுயதனிமையாக இல்லாமல், அருகிருப்போரின் தனிமையாக மனதை வாட்டுகிறது இவருக்கு. எல்லாமே சரியாகி விடாதா என்கிற ஆதங்கம் ஒரு பக்கம். வாழ்க்கை ஓடும் நதியாக இல்லாமல், ஒவ்வொரு நிறுத்தத்திலும் நின்று செல்லும் புகைவண்டி போல அமைந்திருப்பதாக அவருக்கு பிரமைகள் கிட்டுகின்றன.
அங்கங்கே நின்று விடுகிறது வாழ்க்கை அல்ல… இவர் தானோ என்னமோ.
இந்தத் தவிப்புகள் ஒரு பெண்மைமுலாம் பூசப்பட்டு அவர் பேனாவில் இருந்து வெளிப்படுவதாலேயே இவை இப்படி கவனிக்கத் தக்கவை ஆகின்றன என்றுகூட எடுத்துக்கொள்ளலாமாய் இருக்கிறது. கவிதைகளில் பெண்ணுலகம் வேறு, ஆணுலகம் வேறுதான். பிரச்னைகளை அணுகுவதிலும், எதிர்கொள்வதிலும் இதில் வேறுபாடு இருக்கிறதா- …கிறது என்கிறார் கீதாஞ்சலி.
வலிந்து ஒரு சோகப் பார்வையோடு பார்க்கிற குணாம்சப் பெண்கள் இருக்கவே செய்கிறார்கள்… எல்லாவற்றையும் துச்சமாக, உற்சாக உச்சமாகப் பார்க்கும் பெண்கள் இருக்கிறாப் போலவே. வாழ்வின் நல்லம்சங்களை, நிஜமான வீர்ய அம்சங்களை இவர்கள் இரண்டுநிலையிலும் கோட்டை விட்டவர்களாகவே என் கணிப்பில் அமைகிறார்கள். கீதாஞ்சலி இத்தனை ‘உம்‘ முகம் காட்ட வேண்டாமோ என்றுதான் இவற்றை வாசிக்கையில் என் எண்ணவோட்டங்க்ள் அமைந்தன. நெருக்கடி நிலைகள் வெறும் பார்வையாள நிலை எடுப்பதால் என்ன பயன் விளைந்துவிடும்… கவிதை பாடுவதைத் தவிர?
கவிதைக்காரிகளை, காரர்களை அப்படியே கையள்ளிய நதி நீர் போல அடையாளங் காட்டிவிட முடியாது. அது நியாயமும் அல்ல. எந்த நிலையிலும் கவிஞர்கள் சட்டென பிடியுருவி விசிறியாய் வேறு தோற்றங் காட்ட வல்லவர்கள். அவையான கவிதைகள் இந்தத் தொகுப்பிலும் அடையாளப் படுகின்றன. கவிஞர்கள் காலந்தோறும் கணந்தோறும் வளர்கிறவர்கள். அவர்கள் கண் விரிந்தவண்ணமே உள்ளது. அவனைப்போல ஒரு கவிதை, திருமதியாகிய நான், இப்போது நிலைக் கண்ணாடி நிமிடங்கள்… என கீதாஞ்சலி கடலலை போல தன் பரப்பை விரித்தபடியே வருகிறார். அடுத்த அலையை நாம் வரவேற்கக் காத்திருக்கிறோம்.
தன்னுலகும் அந்தரங்கக் குரலுமாய் ஒலிக்கிற கீதாஞ்சலியின் பெரும்பாலான கவிதைகளை விட, வெளியுலகுக்கு உலா வந்த கவிதைகளையும் காலவோட்டத்தில் காண முடிந்ததில் எனக்கு மகிழ்ச்சியே. அவர் பரப்பு விகசித்துப் பெருகுவதை உவகையோடு நான் வழிமொழிகிறேன். வாழ்க கீதாஞ்சலி.
எஸ். ஷங்கரநாராயணன்
91 97899 87842
- நீதிக்குத் தப்பும் காவல்துறை அநீதங்கள்
- நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து…24 கிருஷ்ணன் நம்பி – ‘காலை முதல்’
- போதி மரம் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 24
- நீங்காத நினைவுகள் – 7
- தூக்கு
- செங்குருவி
- குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 14
- மனதை வருடும் பெருமாள் முருகனின் “எருமைச் சீமாட்டி” (ஆனந்தவிகடன் சிறுகதை)
- மருத்துவக் கட்டுரை துரித உணவும் ஒவ்வாமையும்
- ஒரு நாள், இன்னொரு நாள்
- மூன்று சைன விண்வெளி விமானிகள் பூமியைச் சுற்றிவரும் சைன அண்டவெளிச் சிமிழுக்குள் நுழைந்தார்.
- அந்தியிருள் மயக்கம் – கீதாஞ்சலி பிரியதர்சினியின் ‘நிலைக் கண்ணாடி நிமிடங்கள்‘ கவிதைத் தொகுதி வெளியீட்டு விழா உரை
- புகழ் பெற்ற ஏழைகள் – 11
- தாகூரின் கீதப் பாமாலை – 69 பிரிவில் புரியும் ஐக்கியம் .. !
- யதார்த்தாவின் ‘யமுனா சூத்ரா’ நாட்டிய விழா
- ஆசான் மேற்கொண்டும் சொல்லத் தொடங்கினார்……. . . . . .
- வால்ட் விட்மன் வசனக் கவிதை -28 என்னைப் பற்றிய பாடல் – 22 (Song of Myself) இருப்ப தெல்லாம் ஈவதற்கே .. !
- அக்னிப்பிரவேசம்-38
- வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -3 பாகம் -6
- நவீன அடிமைகள்
- மாய க்குகை
- தண்ணி மந்திரம்
- கற்றுக்குட்டிக் கவிதைகள்