டௌரி தராத கௌரி கல்யாணம்..! – 9

This entry is part 2 of 27 in the series 30 ஜூன் 2013

நெடுங்கதை:ஜெயஸ்ரீ ஷங்கர் ,புதுச்சேரி.

 

 

 

 

லாவண்யாவின் கல்யாணம் கார்த்திக்கோடு நடந்து  முடிந்ததைத் தன்  கண்களால் ஆசை தீரக் கண்டு அட்சதையும் அள்ளித் தெளித்த  ஜீவாவுக்கு மனசுக்குள் அத்தனை நாட்களாக புகைந்து கொண்டிருந்த பழிவாங்கும் வெறி வெற்றியாக முடிந்ததில் நிம்மதிப் பெருமூச்சு விட்டான். லாவண்யாவின் அப்பா ஜீவாவின் பொறுப்பைப் பாராட்டி அவரது கம்பெனியில் அவனுக்கு உயர்ந்த பதவி தருவதாகச் சொல்லி தோளைத்  தட்டிக் கொடுத்ததும் ஜீவா பெருமையில் பறந்தான்.கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்தது போல கிடைத்த இந்த சந்தர்ப்பம் ஒரே கல்லில் ரெண்டு மாங்காயாக அவனுக்குள் இனித்தது.

 

மனசெல்லாம் :ஏய்….கௌரி…உன் ஆட்டம் இத்தோட காலி..  நீ  விரும்பிய கார்த்திக்கை வெச்சே உன்  கழுத்துக்கு கத்தி   வெச்சேன் பாரு…அங்க தான்  இந்த ஜீவா ஜீவனோட இருக்கேன் … என்கிட்டே மோதினா என்னாகும்னு புரிஞ்சுக்கோ” இது ஆண்டவனாப்  பார்த்து எனக்குக் கொடுத்த வாய்ப்பு. நான் கரீட்டா யூஸ் பண்ணிட்டேன்…..உன் பதவித் திமிரை இனிமேல் நீ யார்க்கிட்டே காமிக்கும் போதும் உன்  காதுல இனிமேல்  மணி அடிக்கணும் என்று தனது பழிவாங்கும் படலம் இவ்வளவு எளிதில் நிறைவேறியதில் மகிழ்ந்து இப்ப ஐயாவுக்கு விருந்து சாப்பாடு தான் என்று சொல்லிக் கொண்டே சந்தோஷத்துடன்  சாப்பாட்டு பந்திக்கு விரைகிறான் ஜீவா.

 

கார்த்திக்கும் லாவண்யாவும் மாலையும் கழுத்துமாக வீடியோவுக்கு போஸ் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். கல்யாணி தலைகால் புரியாமல் ஆனந்தத்தில் மிதந்து கொண்டிருந்தாள். அருகில் இருந்த கணவனிடம் நான் சொன்னது பலித்தது பார்த்தேளா? என்று பெருமையில்  மார்தட்டிக் கொண்டாள் . அவள் மனது மானசீகமாக “நல்ல வேளையா அந்த அமெரிக்கா மாப்பிள்ளையின் வேஷம் கலைஞ்சது…” என்று நிம்மதி பெருமூச்சு விட்டாள் .

 

கல்யாண மண்டபத்தில் அடித்த புயலில் ஆதாயம் கிடைத்தது என்று மகிழும் கல்யாணிக்கு விரைவில் தன் வீட்டில் அடிக்கவிருக்கும் புயலுக்கான ஆரம்ப அறிகுறி தான் இப்போது நடந்த மகனின் கல்யாணம் என்று அறியாதவளாக இருந்தாள்.

 

அத்தனை சந்தோஷத்திலும் கார்த்திக்கின் உள் மனது விளக்கெல்லாம் அணைந்து கிடந்த இருட்டறை போல் இருந்தது. அதில் ஒரே கேள்வியாக “இந்த விஷயம் கௌரிக்குத் தெரிந்தால் என்று எதிரொலித்தது”. உள்மனம் கௌரியை நினைத்து அழுதது. அசட்டு தைரியம் நிமிர்ந்து நின்று சிரித்தபடி போஸ் கொடுத்துக் கொண்டிருந்தது .

 

 

 

 

துர்வாஸா  ஸீர வநிதாப்த திவ்ய மால்யம்

ஸகராய ஸ்வயம் உபதாய தத்ர பூய:

நாகேந்த்ர ப்ரதி ம்ருதிதே ஸஸாப ஸக்ரம்

கா ஷாந்தி: த்வத  இதர தேவதாம்ஸ ஜாநாம்:

 

வீடெங்கும் ஸ்ரீமந் நாராயணீயம் ஒலித்துக் கொண்டிருந்தது. சித்ராவும் அதோடு  கூடவே சொல்லிக் கொண்டே வீடே மணக்க மணக்க  வெண்பொங்கல் செய்து   கொண்டிருந்தாள். அவளது கையும் வாயும் இயந்திரப் தனமான பக்தியில் சிக்கி இருந்தாலும் மனம் அதை விட்டு விலகி, மகள் கெளரியைத் திட்டிக் கொண்டிருந்தது. திடுமென ஏற்பட்ட மின்வெட்டால் வீடே அமைதியாக ஆக, அடுக்களையை விட்டு வெளியே வந்து  ஹாலில்…. மாட்டியிருந்த தன் கணவர் ஈஸ்வரனின் போட்டோ கண்ணில் படவும் அவரைப்  பார்த்த சித்ரா வாய் விட்டே புலம்ப ஆரம்பித்தாள் .

 

ஒரே நாள்ல வந்துடறேன்னு போன பொண்ணு….இன்னியோட சேர்ந்து மூணு நாளாகப் போறது…அம்மான்னு ஒருத்தி தனியா இருப்பாளேன்னு ஒரு நினைப்பு வேண்டாமா? ஒரு  ஃபோனும் இல்லை எந்தத் தகவலும் இல்லை…..நான் பண்ணினாக் கூட அதுக்கும் பதில் இல்லை…தனியா அதுவும் டெல்லில எங்கே போய் மாட்டிண்டு நிக்கறாளோ ?

மனசு என்னெல்லாம் நினைச்சு பயப்படறது….அவளுக்காத் தெரிய வேண்டாமோ? படிச்ச திமிர்…வேலை பார்க்கற திமிர்….சம்பாதிக்கிற திமிர்…அம்மான்னா சும்மான்னு நினைச்சுண்டு இருக்கா…எல்லாம் தான் வெச்சது தான் சட்டம், ஒண்ணு  சொல்ல முடியலை.. எல்லாம் தனக்கே  தெரியும்ங்கற நாட்டாமை….வரட்டும்…வரட்டும் இனி …வேலைக்கே போகக் கூடாதுன்னு  சொன்னாத் தான் சரிப்பட்டு வருவாள். தனக்கு வந்த வரனை நல்ல படியாப் பேசி பண்ணிக்கத் துப்பில்லை. கோணா..மாணா …கோவிந்தான்னு…எங்கம்மாக்கு கல்யாணம் பண்ணி வெக்கிறேன்னு வந்தவா கிட்ட என் மானத்த வாங்கி….அவளுக்கும் எனக்கும் நடுப்பற  பெத்த பாசத்தைத் தவிர எல்லாமே இடைவெளில தான் தொங்கிண்டு இருக்கு.. எல்லாத்துக்கும் வேண்டாத்த விதண்டாவாதம் பண்றவளுக்கு, அம்மாவுக்குத் தகவல் சொல்லணும்ங்கற  அறிவில்லையா?

 

சோபாவில் அமர்ந்து கொண்டு தனக்குத் தானே புலம்பிக் கொண்டிருந்தவளுக்கு வாசலில் கேட் திறக்கும் சப்தம் கேட்டதும் உட்கார்ந்தபடியே வெளியே எட்டிப் பார்க்கிறாள்.

 

கௌரி தான் வந்து கொண்டிருந்தாள். அவள் முகத்தைக் கண்டதும் இத்தனை நேரம் திட்டிப் புலம்பிக் கொண்டிருந்தது அனைத்தும் பனி போல வழுக்கிக் கொண்டு ஓட…

சடக்கென்று எழுந்து வாசலுக்கு வந்தவள் என்னாச்சுடீ கண்ணம்மா….? உன் முகத்தைப் பார்த்ததும் தான் நேக்கு போன உயிர் வந்தது…நான் எப்படி கலங்கிப் போனேன்னு தெரியுமா? ஒரு ஃபோன் பண்ணியிருக்கப் படாதா? மூணு நாள்…..ஒரே நாள்ல வந்துடறேன்னு சொல்லிட்டுப் போனவள்…..இப்படி சொல்லாமல்….கொள்ளாமல்..என்னாச்சோ…ஏதாச்சோன்னு நான் இங்க பயந்து செத்தேன்..நல்லபடியாத் திரும்பி வரணமேன்னு நான் வேண்டாத்த தெய்வம் இல்லை….என்று உச்சச்த்தாயியில் .படபடப்புடன்  பேசியபடியே மகளைக் கட்டிக் கொள்கிறாள் சித்ரா. கண்களில் ஆனந்தக் கண்ணீர் துளிர்கிறது.

 

சாரிம்மா……வெரி சாரி…..நானும் எதிர்பார்க்கலை…போன இடத்தில் நான் பட்ட பாடு…என்னோட ஹான்ட்பாக் தொலைஞ்சு போச்சு….அதுல தான் என்னோட ரிடர்ன் டிக்கெட், 3G டேட்டா கார்ட் எல்லாம் இருந்தது..எனக்கு பயங்கர டென்ஷன்….எங்க தேடியும் கிடைக்கலையாக்கும். பின்னே அதுக்கு வேண்டி கம்ப்ளைண்ட் கொடுக்கப் போன இடத்தில் என் செல்ஃபோன் கூட தொலைஞ்சு போச்சு.எவனோ அடிச்சுட்டான்…எனக்கு எந்த நம்பரும் மைண்ட்ல இல்லை..எல்லாம் செல்ஃபோனோட கோவிந்தா என்னவாக்கும் பண்றது?..ரொம்பத் திண்டாடிப் போயிட்டேன். அது கழிஞ்சு பின்னே நல்ல வேளையா ஆபீஸ் போய்ட்டேன் . அங்கே வொர்க் ப்ரெஷர் வேற…இதோ இதோன்னு ஒவ்வொரு நாளாப் போயிடுத்து. அதான்…என்று சொல்லிக் கொண்டே ஷூவைக் கழட்டி விட்டு..என்ன ஒரே புழுக்கமா இருக்கு……என் செல்ல அம்மா…ரொம்ப பயந்துட்டியா? பார்த்தியா நான் இருந்தா ஏதாவது சொல்லி  என்னைத் திட்டிண்டே இருப்பே…  இப்பவாவது உனக்கு என் அருமை தெரிஞ்சுதா…அதோட தனியா இருக்கறது எத்தனை கொடுமைன்னு புரிஞ்சுதா?

 

போடி அசடு…..நீ இல்லாத போதும் உன்னைத் திட்டும்படியாத் தான் காரியம் பண்ணினே….எப்படி எல்லாத்தையும் தொலைச்சே…நீ தான் ஜாக்கிரதையா இருப்பியே…என்னாச்சு இப்பல்லாம் நோக்கு? கடைசீல என்னாச்சு…? கிடைச்சுதா இல்லையா? இப்படிப் போன இடத்தில் எல்லாத்தையும் தொலைச்சுட்டு திண்டாடினியா?

சீக்கிரம் கையைக் காலை அலம்பிண்டு வா. வெண்பொங்கல் பண்ணி வெச்சிருக்கேன்…இன்னிக்கு ஆபீஸ் இருக்கோ…இல்ல லீவு போடறியா? என்று கௌரியைப் பார்த்து கேட்கிறாள் சித்ரா.

 

எனக்கு எங்க லீவு…? இன்னிக்குத் தான் நான் கண்டிப்பா போயாகணும் …அம்மா எனக்கு ஏதாவது ஃபோன்கால் வந்ததா? கேட்டுக் கொண்டே லாண்ட்லைன் ஃபோனில் கார்த்திக்கின் எண்ணைத் தட்டி ரிசீவரை காதில் வைத்துக் கொண்டே இருந்தவள்…..ச்சே…இந்த ஒரு மெசேஜை மட்டும் கேட்டுக் கேட்டு காது ஓட்டையாகிப் போச்சு. கார்த்தி…வாட் ஹாப்பெண்ட் டா? என்மேலே கோவமா? நான் உனக்கொரு சர்ப்ரைஸ் கொண்டு வந்திருக்கேன்.ஆச்சரியப் படப் போறே.என்று மனதோடு பேசிக் கொண்டே தயாராகிறாள்.

 

வழக்கமான கௌரியோட ஹிந்திப் பாடல் எதுவும் காதில் விழாத சித்ரா..என்னாச்சுடி கௌரி…டெல்லிக்கு போயிட்டு நிறைய பாட்டு கத்துண்டு வந்து கத்துவேன்னு பார்த்தால் அமுக்கமா இருக்கியே..இந்த நாலு நாள்லே .உன் போக்கே மாறிப் போச்சுப் போ   நீ  ரொம்பவும் மாறிட்டே  என்று சொல்லிக் கொண்டே வெண்பொங்கலை டைனிங் டேபிள் மீது வைத்தபடி சீக்கிரமா சாப்பிடு ஆறிடப் போறது..வந்து  சாப்பிடு என்கிறாள் சித்ரா.

 

ம்மா…இன்னிக்கு நான் கொஞ்சம் லேட்டாத் தான் வருவேன்….கோச்சுக்காதே…என்று வெண்பொங்கலை வாயில் வைத்தவள் வாவ்….சூப்பர்..எப்டிம்மா…என்று ஆச்சரியத்துடன் ..நீ பண்ற டேஸ்டே தனிம்மா. நாலு நாளா நாக்கே செத்துப் போச்சு. எப்போ உன் கையால  சாப்பிடுவோம்னு ஆயிடுத்து..என்றவள் அம்மா எனக்கும் இப்படியே வெண்பொங்கல் பண்ணச் சொல்லிக் கொடும்மா… ஐ லைக் திஸ்…கூல்….என்கிறாள் சப்புக்கொட்டிக் கொண்டு.

 

உன் அப்பாவும் இப்படித் தான் ரசிச்சு சாப்பிடுவார்….என்று சொன்ன சித்ரா இந்தா இன்னும் கொஞ்சம் போட்டுக்கோ என்று கரண்டி நிறைய பொங்கலை அள்ளி எடுக்கவும்…

 

கைகளால்  மறைத்தபடி  வேண்டாம் வேண்டாம் போதும் போதும்…..நன்னா இருக்குன்னு சொன்னதுக்கு இவ்ளோ பெரிய தண்டனையா? என்ற கௌரி…மா…நீ சாப்பிடு…இந்த நாலு நாள்லே நீ ரொம்ப இளைச்சுட்டே…..என்கிற மகளை பாசத்தோடு பார்க்கிறாள் சித்ரா.

 

மகளின் தலையைக் கோதியவளாக “என் மேலே நீ வெச்சிருக்கும் பாசம் புரியறது…சீக்கிரமா உனக்கொரு கல்யாணம் பண்ணி  நீ எனக்குப் பேத்தியோ,பேரனோ பெத்துக் கொடு அதுக்குத் தான் நான் ஆவலா காத்திருக்கேன்..நான் உடல் ஆரோக்கியமா இருக்கும் போதே இந்த மாதிரி நல்லதெல்லாம் வாழ்க்கையில் நடக்கணும்….ஏன்னா…நல்ல விஷயங்கள் நடக்கற காலங்கள் ரொம்ப வேகமா நம்மை விட்டுக் காணாமல் போயிடும்.புரிஞ்சுக்கோ.

 

ஆரம்பிச்சுட்டியா… நான் ஒண்ணு நினைச்சா நீ ஒண்ணு சொல்ற ….சரிம்மா…இப்போ நாழியாச்சு…ராத்திரி வந்ததும் பேசலாமே என்று தலையை சாய்த்து கெஞ்சியபடி கிளம்பத் தயாராகிறாள் கௌரி.  டெல்லிலேர்ந்து உனக்கொரு அழகான உலன் ஷால் வாங்கினேன்.

 

நன்னாச்சு…. இன்னைக்கு நீ ஆபீஸ் போகாட்டா என்ன..?.உன்கிட்டப்  பேச  நிறைய  விஷயம் இருக்கு..பேசாம லீவு போடு.. என்று அதே கெஞ்சல் பார்வையில்  கௌரியைப் பார்க்கிறாள் சித்ரா.

 

கொஞ்சம் லேட்டா வேணாப் போறேன்…..என்ன பேசணுமோ பேசு….!  அம்மா..நாம டெல்லில ஷிப்ட் பண்ணீண்டா என்ன? உனக்குப் பிடிக்குமா?

 

ஏண்டி….பிடிக்காது. நோக்குத் தான் அங்க நல்ல வரன் வந்தது..அந்தப் பிரசாத். அவருக்கு உன்னை கல்யாணம் பண்ணிக் கொடுத்திருந்தால்  அங்கே தான் இருந்திருப்பே இந்நேரம்…என்று கண்களில் புத்தொளியோடு சொல்கிறாள் சித்ரா.  எல்லாம் விதி…..உங்கப்பா தான் வந்தவாளைத் திரும்ப வெச்சார். நல்ல மனுஷாளா இருந்தா..குரல் குழைந்தது அவளுக்கு.

 

அதை விடும்மா…நான் கார்த்தியைக் கல்யாணம் பண்ணீண்டா உனக்கு சந்தோஷம் தானே? சொல்லேன்….!

 

அதுக்கு அவாத்துல சம்மதிக்கணமே….! இனிமேல் அதுக்குச் சான்ஸே இல்லை.அன்னிக்கு அவா வந்தபோது நீ பேசின பேச்சில் அவா மனசுக்குள் சீ ன்னு துப்பீட்டு போயிருப்பா.நானா இருந்திருந்தாலும்  அதைத் தான் செய்திருப்பேன்.பொண்ணை எப்படி வளர்த்து வெச்சிருக்கா பாருன்னு என் தலையை உருட்டியிருப்பா. இன்னுமா…உனக்கு அந்த நினைப்பு….கஷ்டம்…கஷ்டம்…!

 

ஆனால்…அம்மா…கார்த்தி அப்படியில்லை…என்னைப் புரிஞ்சுண்டவனாக்கும். அவன்ட சொல்லி, அவனும் எனக்கு ஆதரவா சரின்னு தான் சொன்னான் தெரியுமா?

 

அவனும் உன்னை மாதிரி சின்னப் பையன் தானே? நீங்கள்லாம் வேலை கிடைச்சு என்ன தான் கை நிறைய சம்பாதிச்சாலும் வாழ்க்கைப் பாடம்னு வரும்போது தோத்துப் போயிடுவேளாக்கும். நல்லபடியா வாழறதுக்கும் திறமை வேணும்.   கல்யாணம்ங்கறது மனதோடு வாழற உணர்வுகள் சம்பந்தப்பட்டது. இது உனக்கு இப்போ புரியாது.

இப்ப உன் மனசுக்குப் புரியறது எல்லாம் வெறும் வெளித் தோற்றம் மட்டும் தான். நாம வாழ்ந்துண்டே இருந்தாலும் வாழ்க்கை அனுபவம் தனி தான்.கல்யாணத்துக்கு ரெண்டு பேரோட மனசு தான் முக்கியமா ஒத்துப்போகணும் .

 

அப்போ….எங்க ரெண்டு பேரோட மனசும் ஒத்துப்போறது….ஹி இஸ் ஆல்சோ சேம் லைக் மீ…!

 

சந்தோஷம் …அதே சமயத்துல நீ ரொம்ப ஜாக்கிரதையா இரு. மனசு ஒத்துப் போயிடுத்துன்னு உன் மனசு நம்ப ஆரம்பிச்சாச்சுன்னா…அப்பறம் வேறெதையுமே ஒத்துக்காது….அது வழிக்கு உன்னை இழுக்க ஆரம்பிச்சுடும். மனசு கள்ளனாக்கும். கெட்ட வழிக்கெல்லாம் கூட நல்லவிதமா வழி சொல்லும்.ஒரு மனசுக்குள்ள காதல் புகுந்துட்டால் கள்ளமும் புகுந்துடும் . உனக்குத் தெரியாததை நான் சொல்லலை..ஆனால் நான் சொல்ல வேண்டியதை நான் தானே சொல்லியாகணும். பேசிவிட்டு நிறுத்துகிறாள் சித்ரா.

 

அம்மா…உனக்கு ரொம்ப விஷயம் தெரிஞ்சிருக்கு…

 

பின்னே …உன் அம்மா என்ன மக்குன்னு நினைச்சியா?

 

சிறிது நிமிட மௌனம்…கடந்த பிறகு மீண்டும் கௌரி

 

அம்மா…என்கிறாள் தயங்கியபடியே..

 

என்ன…?

 

ஒண்ணுமில்லை!

 

அந்த  ஒண்ணுமில்லையில் ஆயிரம் இருப்பதாக மனசுக்குப் பட்டாலும் அவளே சொல்லட்டும் என்று காத்திருந்தாள் சித்ரா.

 

பிறகு…மகளைப் பார்த்து….நீ இப்போ அப்பா இல்லாத பொண்ணு…ஜாக்கிரதையா இரு….குரல் கம்ம எச்சரிக்கையாக கௌரியைப் பார்த்து சொல்கிறாள்.

 

அஜாக்கிரதையா இருந்துட்டேனேம்மா….!  எதுவோ வித்தியாசமாக தொண்டையை அடைத்தது கௌரிக்கு.

 

 

 

(தொடரும் )

 

 

Series Navigationஆகஸ்ட்15 நூலின் அறிமுக நிகழ்வுதென்மேற்கு பருவக் காற்று – புதிய முயற்சிகளில் ஒன்று
author

ஜெயஸ்ரீ ஷங்கர்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *