போதி மரம் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 26

This entry is part 19 of 27 in the series 30 ஜூன் 2013

“புத்தரே. ஒரு பிட்சு எப்படி நடந்து கொள்ள வேண்டுமோ அப்படி நடந்து கொள்ளவில்லை தேவதத்தன்”

“ஆனந்தா. .. தீட்சை பெற்று பிட்சுவாவதும், பௌத்த சங்கத்தில் இணைவது ஒரு முன்னுதாரணமாக இருப்பதற்கு. அவர்களை பின் பற்றி மக்கள் தம் வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்ள வேண்டும். மக்கள் நிச்சயமாக பிட்சுக்களின் நடத்தை சரியில்லாத பட்சத்தில் தாங்களே அவர்களைக் கண்டிப்பதுடன் சங்கத்தில் புகாரும் செய்வார்கள்”

“அது வரை?”

“அது வரை பொறுமை காக்க வேண்டும் ஆனந்தா”

“எந்த பிட்சுவும் மன்னர்களைத் தாமாகச் சென்று சந்திப்பதோ அல்லது ராஜ குடும்பத்துடன் உறவாடுவதோ கிடையாது. தேவதத்தன் அஜாத சத்ருவை சந்தித்தது நமக்குத் தெரிந்து இரண்டு முறைகள். முதலில் இங்கே உங்கள் உபதேசம் கேட்க அஜாத சத்ரு வந்ததற்கு அடுத்த நாள். பின்னர் மறு நாள். அவரை என் சகோதரன் என்று கூறவே வெட்கமாக இருக்கிறது”

“என்ன ஆனந்தா பிட்சு ஆன பிறகுமா ஒரே ஒருவர் சகோதராக இருக்க முடியும்? உலகில் அனைவரும் நம் சகோதர சகோதரிகள் இல்லையா?”

“மன்னியுங்கள். உங்கள் அளவு பக்குவம் எனக்கு இன்னும் வரவில்லை. நான் சொல்ல வந்ததெல்லாம் பாண்டு திரும்பி கபிலவாஸ்து சென்ற போது சங்கமோ தாங்களோ தடுக்கவில்லை. தீட்சையிலிருந்து விலகித் திரும்பிச் செல்வதை பௌத்தம் மறுக்காத போது தேவதத்தன் திட்டவட்டமாக முடிவு செய்து விலகலாமே. சங்கத்துக்கு உள்ளே இருந்த படி பௌத்தத்துக்குப் புறம்பாகச் செயற்படுவது நியாயமா புத்தரே?”

“உன் கண்ணில் தேவதத்தன் தென்படுகிறாரா? இல்லை பௌத்தத்துக்கும் சங்கத்துக்கும் ஏற்பில்லாத அவரது நடவடிக்கைகளா? எது உன் பார்வையில் படுகிறது ஆனந்தா?”

ஆனந்தன் மௌனமானார். பல சமயங்களில் புத்தரின் பதில்கள் எதிர்க்கேள்விகளாக இருந்தன. பல ஜனங்களும், பக்தர்களும் இதற்காக அவரை மிகவும் போற்றினார்கள். ஆனந்தனுக்கோ தமது சிற்றறிவை மீறிய் கேள்விகளாகவே புத்தர் கேட்டுத் தம்மை இக்கட்டில் ஆழ்த்துவதாகத் தோன்றியது.

“புத்தர்பிரானுக்கு சாக்கிய மன்னர் சுத்தோதனரின் வணக்கம்” என்று குரல் கேட்டது. ஆனந்தன் எழுந்து சென்று குடிலின் வாயிலில் நின்றிருந்த தூதுவனைக் கண்டார். கபிலவாஸ்துவிலிருந்து அவன் வந்திருப்பது அவன் அறிவிப்புடன் கூடிய வணக்கத்திலேயே தெரிந்து விட்டது.

“என்ன செய்தி தூதுவரே?”

“மகாராணி பஜாபதி கோதமி அவர்கள் ஒரு அவசரமான வேண்டுகோளை அனுப்பி இருக்கிறார்”

“கூறுங்கள் தூதுவரே”

“மாமன்னர் சுத்தோதனர் உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருக்கிறது. அந்திமக் காலத்தில் புத்தரையும் தங்கள் அனைவரையும் மன்னர் காண விழைகிறார்” தூதுவரைக் காத்திருக்க்கச் சொல்லி விடு ஆனந்தன் குடிலுக்குள் சென்றார்.

***************

“புத்தர் முதன் முதலில் கபிலவாஸ்து வந்த பிறகு ஐந்து ஆண்டுகள் கடந்து விட்டன. இருந்தாலும் இத்தனை காலமும் மாந்தோப்பில் குடில்கள் நன்றாகவே பராமரிக்கப் பட்டன. தேவதத்தன் முதலில் கபிலவாஸ்து தூதுவர்களுடன் தேரின் வந்து சேர்ந்து விட்டார்” என்றார் மஹா மந்திரி.

“புத்ததேவரும் அவ்வாறே வந்திருக்கலாமே”

“புத்தர் ராஜ போகங்களையும் வாகனங்களையும் தவிர்த்து விடுகிறார். அவர், ஆனந்தன், மேலும் பல பிட்சுக்கள் வரும் வழியில் எல்லா இடங்களிலும் நம் வீரர்கள் தடையில்லாமல் பார்த்துக் கொள்கிறார்கள் மகாராணி”

“பயணக் களைப்பு நீங்கியதும் தேவதத்தனை மாளிகைக்கு வரும்படி வேண்டுங்கள்” என்றார்,

இவர்களது உரையாடல் சுத்தோதனர் காதில் விழவில்லை. பல சமயங்களில் அவர் நினைவிழந்தவராகவே இருந்தார்.

குளிர்காலம் முடிந்து கோடைக்காலம் துவங்காத நாட்கள்.பூத்துக் குலுங்கும் மலர்களும் இதமான வெப்பமும் நடைப்பயணத்தின் சிரமத்தைப் பெருமளவு குறைத்திருந்தன.

பசுமையான பள்ளத்தாக்கும், தழுவிச் செல்லும் மேகங்களும் ஆன ஒரு ரம்மியமான சூழலில் ஒரு பாறை மீது புத்தர் மௌனமாக அமர்ந்திருந்தார்.

சலசலப்பும் பேச்சுக்களும் ஆன உலகத்திலிருந்து சங்கம் வேறுபட்டது. தியானமும் ஒழுக்கக் கட்டுப்பாடுமே அந்த வித்தியாசமான மேன்மை. புத்தரின் சாந்த ஸ்வரூபம் பிட்சுக்கள் அல்லது வெளி உலகு எங்குமே தென்படாது.

“பட்டாம் பூச்சிகளை நீ அவதானித்திருக்கிறாயா ஆனந்தா?” புத்தர் திரும்பாமலேயே கேட்டார். எப்படித் தம் வருகையை அவர் உணர்ந்தார்? சந்தடி செய்யாமல் எவ்வளவு மென்மையாகச் சென்றாலும் அவர் கண்டுபிடித்து விடுகிறார். புத்தர் சுட்டிக் காட்டியது மலைச்சரிவில் இருந்த ஏகப்பட்ட பூச்செடிகளின் மேலே பறந்து கொண்டிருந்த மலைப்புரத்து பெரிய வடிவ வண்ணதுப் பூச்சிகள்.

“கவிஞர்களைப் பெரிதும் கவர்பவை இவை புத்தரே”

“தோற்றத்தில் அது யாரையுமே கவருமே ஆனந்தா, அவற்றின் உயிர் வாழ் காலத்தை நீ அறிவாயா?”

“வாழ்நாள் என்று குறிப்பிடும் அளவு கூட இல்லாமல் ஓரிரு நாட்களில் மரிப்பவை அவை. அதனால் தான் உயிர் வாழ் காலம் என்று குறிப்பிட்டீர்களா? நுட்பமாக எதுவும் தோன்றவில்லை புத்தரே”

“பட்டாம் பூச்சிகள் எப்போதும் அவற்றின் அழகுக்காக மட்டுமே நினைவு கூரப்படும் ஆனந்தா. மனிதனும் தனது கருணைக்காகவும் மனித நேயத்துக்காகவும் மட்டுமே மக்களின் மனதில் இடம் பிடிக்க இயலும்”

“தாங்கள் இப்படிக் கூறுவதை அரசாட்சி, அதிகாரம், தேசப் பாதுகாப்பு, ராஜாங்கம் என்று ஏற்கனவே நிர்ணயமாகி உள்ளவற்றுக்கு எதிரானவை. மக்களைக் காக்கும் மன்னனின் கடமைகளைச் செய்ய விடாது தடுப்பவை என்றே தேவதத்தன் நம்புகிறார். இவ்வாறு வெளிப்படையாகப் பேசவும் செய்கிறார்”

“நீ குறிப்பிட்ட ராஜாங்க விதிமுறைகள் யாவும் ஒன்றை மட்டுமே அடிப்படையாகக் கொண்டவை. அது எது என்று யூகிக்கப் பார் ஆனந்தா?”

“ராஜ விசுவாசமா?’

“நான் கூறுவது அதற்கும் அடிப்படையானது. மூலமான ஒன்று”

“எதிரி தேசத்தின் மிகுந்த பலம், கள்வரின் நடமாட்டம் இவையா?”

“கிட்டத்தட்ட யூகித்து விட்டாய். ஒரே ஒரு சொல்லில் நீ யூகிக்க முயல்வது உனக்குப் பிடிபடும்”

“குடும்பத் தலைவன் குடுமபத்தின் பாதுகாவலன். ராஜா தேசத்தின் பாதுகாவலன் என்று சொல்லலாமா?”

“அதன் மறுபக்கம் அச்சம் என்று கூற வேண்டும் ஆனந்தா”

“என்ன அச்சம் புத்தரே?”

“ராஜாவை விட்டால் வேறு ராஜாவோ கள்வரோ, படைகளோ, படைத் தலைவனோ, நம்மை அடிமை செய்து நம் உரிமைகளைப் பறித்துக் கொள்ளுவார் என்னும் அச்சம்”

“அது ஆதாரமுள்ள அச்சம் தான் புத்தரே”

“ஆதாரமுள்ள அந்த அச்சமே அளவிட முடியாத அறிவின் தர்க்கத்துக்கு அப்பாற்பட்ட ராஜவிசுவாசம் என்னும் ஆழ்ந்த உணர்வாக மக்களுள் காலங்காலமாக ஊன்றி இருக்கிறது”

“இது என்றுமே மாறாதது புத்தரே”

புத்தர் ஆனந்தனின் கண்களை ஊடுருவி “என்றுமே மாறாதது எதாவது இருக்கிறதா ஆனந்தா?” என்றார்.

ஆனந்தன் பதில் பேசவில்லை.

“என்றுமே மாறாதது வாழ்க்கையின் நிலையாமை மட்டுமே. அந்தக் குறுகிய, நிலையாமல் மாறிக் கொண்டே போகும் சூழ்நிலைகளின் சின்னஞ்சிறிய சங்கிலி போன்றவை வாழ்நாட்கள். அவை முடியும் முன் கருணையும் நேயமும், எல்லா மனிதரும் எல்லா உயிரும் உய்ய வேண்டும் என்னும் சங்கற்பமான மனநிலையும் நிலைத்தால் எல்லாமே இடம் மாறும் ஆனந்தா”

“எப்படி இருக்கும் அந்த இடமாற்றம்?”

“மக்களின் சேவகர் என்று ஆட்சியாளர்கள் அறியப் படுவார்கள். மனித இனமே உய்யப் பாடுபடுபவர்கள் வார்த்தையை அனைவருமே ஏற்பார்கள்”

“நம்ப முடியவில்லை”

“வைதீகத்துக்கு இணையாக ஸ்ரமணம், ஸ்ரமணத்திலிருந்து அவை இரண்டுக்கும் இணையாக பௌத்தம் என்றெல்லாம் தோன்றும் என்று யாரும் எண்ணவில்லை ஆனந்தா”

ஒரு மிகப் பெரிய கூடம் என்று அழைக்குமளவு சுத்தோதனரின் படுக்கை அறை விரிந்து இருந்தது. பல நுழைவாயில்களும் திரைச்சீலைகளுமாய் இருந்தது அதன் அமைப்பு.

முதன் முறையாக ராகுலன், ஆனந்தன், தேவதத்தன், பல்லியன் ,அனிருத்தன், நந்தா இவர்கள் புத்தருடன் கபிலவாஸ்து அரண்மனையில் ஒன்றாக இருந்தார்கள். வந்து மாந்தோப்பில் தங்கத் துவங்கியது முதல் ஒரே வாரத்தில் புத்தரின் மூன்றாவது விஜயம் இது. முதல் முறை சுத்தோதனர் பிரக்ஞையில் இல்லை. இரண்டாவது முறை அவர் புத்தரிடம் பேசும் போது “மறுபடியும் வரவேண்டும்” என்று வேண்டிக் கொண்டார்.

ராணி கோதமியும் புத்தரும் சுத்தோதனரின் தலைமாட்டில் அமர்ந்திருந்தனர். அவர்கள் முகம் மன்னருக்கு நன்கு தென்படும் விதமாக .ஒரு ஆள் உயரக் கல் தூண் தீபம் ஏற்றி வைக்கப் பட்டிருந்தது.

யசோதராவால் தன் மனதில் புத்தர் இப்போது குருவாக வடிவம் பெற்றதை உணர முடிந்தது. அவரது சாந்தமும் க்ருணையும் பக்தியைக் கல் மனத்துக்கு உள்ளேயும் வரவழைத்து விடும். ராகுலனை பிட்சுக்களின் நடுவில் அவர்களுக்கு இணையான உயரத்துடன் பார்த்த போதும் பன்னிரண்டு வயது பாலமுகம் தெரிந்தது. ஆனால் அவன் தன்னைக் கை கூப்பி வனங்கிய போது அதில் பவ்யம் தெரிந்ததே ஒழிய பாசமும் தாயன்புக்கு ஏங்கிய தவிப்பும் முகத்தில் தென்படவில்லை. இது யசோதராவுக்கு மிகவுமே ஏமாற்றமாக இருந்தது. புத்தர் மௌனமாகவே அனைவரையும் மாற்றி விடும் அற்புதமானவர் தான்.

சுத்தோதனர் தமது மனைவியிடம் ஏதோ சைகை காட்டினார். ராணி பஜாபதியும் புத்தரும் அவரது தோளைப் பிடித்துத் தூக்கினர். மன்னர் மெதுவே நிமிர்ந்து படுத்த நிலையிலிருந்து அமரும் நிலைக்கு வந்தார். அவரது முதுகை இருவரும் தாங்கிப் பிடிப்பதைக் கண்ட ஆனந்தன் கால்மாட்டில் இருந்த திண்டுகளை எடுத்து அவருக்கு முதுகுக்குத் தாங்கலாக வைத்தார். மன்னர் அமர்ந்த நிலையில் கடந்த மாதங்களில் இருந்த சோர்வும் மரணக் களையும் நீங்கியவராகப் பிரகாசமாகத் தென்பட்டார்.

“தாங்கள் எப்படி உணருகிறீர்கள்? படுத்த படியே இருப்பது சிரமமாக இருக்கிறதா?”

“இல்லை. எனது உடலின் அணிகலன் ஆயுதம் எதுவுமே இப்போது கிடையாது. இது ஒரு விடுதலை போல இருக்கிறது”

“நீங்கள் இந்த விடுதலையைப் பற்றிய அனுமானமே இல்லாமல் வாழ்ந்தீர்களா? இல்லை இதற்காக ஏங்கியதுண்டா?”

“இப்படி ஒரு விடுதலை இருப்பது மூப்பு என்னை வீழ்த்திய போது தான் எனக்குப் புரிந்தது”

“மூப்பு உங்களை முடப்படுத்தியதாக எண்ணாமல் ஒரு மேலான அனுபவத்துக்கு இட்டுச் சென்றதாக உணருகிறீர்களா?”

“சரியான விளக்கத்தை ஒரே வார்த்தையில் சொல்லி விட்டீர்கள் புத்தபிரானே”. அந்த அளவு உரையாடலிலேயே சுத்தோதனருக்கு மூச்சு வாங்கியது. மீண்டும் சோர்வுற்று முதுகுக்குப் பின் இருந்த திண்டுகளில் சாய்ந்து கொண்டார். யசோதரா ஒரு தங்க லோட்டாவில் தண்ணீர் எடுத்து வர மன்னர் அதை ஓரிரு மிடறு அருந்தி விட்டு சாய்ந்த நிலையிலேயே “புத்தரே. அனுபவம் என்பது என்ன என்பது பற்றிய புரிதலுக்கு எனக்கு க் கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு கால அவகாசம் தேவைப்பட்டு விட்டது” என்றார்.

“நீங்கள் இத்தனை காலம் புரிந்து கொள்ளவில்லையே என்னும் மன வருத்தத்தில் இருக்கிறீர்களா?”

“மலையின் எதோ ஒரு முகடை சிகரம் என்று பெருமிதம் கொண்ட ஒருவன்” மூச்சு வாங்கினார். “அதன் சிகரம் இது தான் என்று கண்டறிய எவ்வளவு நாளானால் என்ன? அவன் சந்தோஷமே பட வேண்டும்”

“எல்லோருமே அனுபவங்கள் என்று பன்மையில் தானே கூறுகிறார்கள். தாங்கள் அனுபவம் என்று ஒன்றே ஒன்று மட்டுமே இருப்பதாக உணருகிறேன் என்பது போலச் சொல்லுகிறீர்கள். இனிய அனுபவம், கசப்பான அனுபவம், இன்பம் துன்பம் என்றுதானே உலகில் மக்களின் கருத்து”

“இனிப்பு… கசப்பு.. இன்பம் .. துன்பம்.. ஹ…ஹ.. ஹா..” மன்னர் வாய்விட்டுச் சிரிக்க முயன்று இருமல் குறுக்கிட மறுபடி சிரித்து எழுந்து அமரவும் முயன்றார். எச்சில் துப்பும் தங்கத்தினால் ஆன பெரிய கிண்ணத்தை ஒரு பணிப்பெண் எடுத்து வந்தாள். அவர் நிமிர்ந்த போது திண்டுகள் சரிந்தன. அவர் சாய வசதியாக புத்தரும் ராணி பஜாபதியும் அவர் முதுகுக்குப் பின் திண்டுகளை சரிவர அடுக்கினர். சிறிது தண்ணீர் அருந்திய மன்னர் “புத்தரே.. அனுபவங்கள் என்னும் குறிப்பே நல்ல ஹாஸ்யம் தான்” என்று இந்த முறை பலவீனமாகச் சிரித்து மறுபடி இருமல் வர ஒரு துண்டு வேண்டும்’ என்று சைகை செய்ய பருத்தித் துண்டு ஒன்று வந்தது. அதை வாயின் அருகில் பிடித்தபடியே இருமினார். மறுபடி திண்டுகளில் சாய்ந்து கொண்டார். அவரே தொடர்ந்து பேசட்டும் என்பது போல புத்தர் கேள்வி எதுவும் கேட்காமல் யாரையும் நோக்காமல் தன்னுள் ஆழ்ந்தவராக அமர்ந்திருந்தார்.

சில கணங்கள் கடந்தன. மன்னர் மெல்லிய குரலில் வென்னீர் வேண்டும் என்று கேட்டுப் பெற்று ஓரிரு மிடறுகள் அருந்தினார். ஆழ்ந்த குரலில் பேசத் துவங்கினார் ” உடலுக்கு அதாவது புலன்களுக்குத் தான் அனுபவங்கள் என்னும் பன்மை உண்டு. உள்ளே உள்ள ஆன்மாவுக்கு இல்லை. அந்த ஆன்மாவில் அரசனின் ஆன்மா ஆணின் ஆன்மா பெண்ணின் ஆன்மா என்பது கிடையாது. புலன்கள் விடைபெற்ற பின் இதை நான் உணர்ந்தேன். புலன்களை அடக்கி நீங்கள் இதை உலகுக்கே உபதேசித்தீர்கள்” மறுபடி வென்னீர் அருந்தினார். ” அகம்பாவம் புலன்களால் உணரப்படும் சுகங்களையும் உடமைகளையும் தொற்றிக் கொண்டிருப்பது. புலன்களைக் கடந்த அனுபவம் சித்திக்க மூப்பு வரை காத்திருப்பது வாழ்க்கையையே வீணடிப்பது” . இந்த் முறை அவருடைய இருமல் இன்னும் தொடர்ச்சியாக வந்த படியே இருந்தது. அதன் கடுமை அதிகரித்தது. மன்னர் துண்டை வாயில் அழுத்தியபடியே சாய்ந்தார். ராணி சைகை செய்ய வைத்தியர் அறைக்குள் வந்தார். சூடு செய்த த்விட்டை ஒரு துண்டில் சுற்றி அவரது நெஞ்சில் வைத்து ஒத்தடம் கொடுக்க சற்றே ஆசுவாசம் பெற்று கண்களை மூடிக் கொண்டார்.

மறு நாள் காலை வரை அவர் எழுந்திருக்கவே இல்லை. ராணி பஜாபதியும் மருத்துவரும் மணிக்கொரு முறையேனும் அவர் நாடியை சரி பார்த்துக் கொண்டிருந்தனர். காலையில் ராணி அவரது உதடு அசைவதைக் கண்டு அவரது முகத்தருகே காதை வைத்து உன்னிப்பாகக் கேட்டார் “கபில வாஸ்துவை தனது தாத்தாக்களின் சொத்தாகப் பெறவில்லை எனது முன்னோர்கள். அவர்களே உருவாக்கினார்கள். அதே போல என் வாரிசுகள் புதிய ஆன்மீக உலகை உருவாக்குவார்கள்” . இரண்டு நாட்கள் நினைவின்றி இருந்த பிறகு அவர் உயிர் பிரிந்தது.

——-

Series Navigationநா. ரகுநாதன் – சில நினைவுக் குறிப்புகள்ஸ்ரீரங்கம் சௌரிராஜன் கவிதைகள் – ஒரு பார்வை.
author

சத்யானந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *