ஸ்ரீரங்கம் சௌரிராஜன் கவிதைகள் – ஒரு பார்வை.

author
0 minutes, 3 seconds Read
This entry is part 20 of 27 in the series 30 ஜூன் 2013
   Scan1
– சூர்யநிலா.எழுதப்படும் கவிதைகள் மிகையாகவும் படிக்கப்படும் கவிதைகள் குறைவாகமிருக்கும் காலச் சூழல் இது. எப்படியாவது படித்துவிட வேண்டுமென்ற கட்டாயத்தில் சில தொகுப்புகள் வந்து கொண்டுதானிருக்கின்றன.

ஸ்ரீரங்கம் சௌரிராஜன் அவா;களின் ‘உரிய நேரம்’ படித்துவிட கட்டாயப்படுத்தும் தொகுப்புதான். 1971-ஆம் ஆண்டிலிருந்து கவிதைத் தளத்தில் இயங்கி வரும் இவா;-தமது 66-ஆம் வயதினில் ‘உரிய நேரம்’ தொகுப்பினைத் தந்துள்ளார்.

தனது முதல் தொகுதியான ‘கவசம்’ நூலிலிருந்த கவிதைகளும் இத்தொகுப்பில் இடம் பெற்றிருப்பதால் சற்றொப்ப, இவரின் ஒட்டுமொத்தக் கவிதைத் தொகுப்பாகவும் இதைக் கொள்ளலாம்.

தன் வாழ்நாளையெல்லாம் தின்றுவிட்டு 91-கவிதைகளை இத்தொகுப்பில் தந்திருக்கும் சௌரிராஜன், கவிதைக்கான பாடுபொருளில் ஏறத்தாழ எல்லா இடங்களையும் தொட்டிருக்கிறார்.

பல சிற்றிதழ்களிலும் இவரது கவிதைகள் வெளியாயிருக்கின்றன. குறிப்பாக,கணையாழி, புதுப்புனல், வெற்றிநடை ஆகியவைகளில் தொடர்ந்து எழுதி வருகிறாh;.

1971-முதல்-2012 வரையிலான காலகட்டத்தில் 91-கவிதைகள் என்பது குறைவுதான் என்றாலும், நிறைவான கவிதைகளாகயிருப்பது தொகுப்பின் பலம்.

ஒரு கவிஞன் தன் வாழ்நாளில் இருபது சிறந்த கவிதைகளைத் தர முடியுமென்று கவிஞர் விக்கிரமாதித்யன் சொல்லுவார். அந்த இருபது நல்ல கவிதைகள் இத் தொகுப்பிலிருக்கின்றன.

பெரும்பாலான இவரது கவிதைகள் எளிமையைப் போ4த்திக் கொண்டு, எல்லா பக்கங்களிலும் உலாவுகின்றன. கவிதைகளில் தத்துவ விசாரம, ஆழ்ந்தப் பொருட் சேர்க்கையைத் தருகிறது. தேவதேவனின் பல கவிதைகள் இதைப் போன்று தத்துவத்தைப் போர்த்திக் கொண்டு நம்மை கேள்விக் கேட்கும்.

‘ஆடு’ கவிதையில்,
‘விட்டமாய் அமைந்த கோடு இரு விழிகளிலும் எத்தனை கேள்விகளை முன் வைக்கிறது?’
என்ற வரிகளில் வினாவை முன்வைக்கும் இவர், இறுதியாக ஞானப் பொக்கிஷம்! என்று அதை ஆச்சரியக் குறியால் முன் நிறுத்துவது அற்புதம்.

முகம் சொரிந்த கண்ணீர் – இக் கவிதையில் ஓர் ஓவியனின் மன விசாரத்தை நம் உள்ளத்தில் வரைந்துப் போகிறது. அனுமன் படம் சாலையில் மிகுதியான நேரம் செலவில் வரைந்த ஒரு கலைப் படைப்பாளி, மாலையில் அனுமன் ஓவியம் எவர் காலிலும் மிதிபடக் கூடாதென்ற நோக்கில் அழித்தவுடன் அவன் விழிகளில் நீர் சொரிகின்றது.

‘கவசம்’ மன ஊசலாட்டத்தினால் பின்னப்பட்ட அருமையான கவிதை. நம் எல்லோருக்கும் கவசம் வேண்டும் என்று ஆரம்பிக்கும் கவிதை, நம்மைச் சூழ்ந்துள்ள மனித வட்டத்தின் எந்தப் புள்ளியிலிருந்தும் கல் எறியப்படலாம் என்று எச்சரிக்கிறார். அந்தக் கல் தாய், தந்தை, மனைவி, பிள்ளைகள், நண்பன் என்று எங்கிருந்தும் வரலாம். அந்தச் சொல் அம்பு தட்டில் வைத்த உணவைப் பறித்தாலும் பறிக்கலாம் என்றபோது மனதை அதிரச் செய்கிறது; மனத்தைப் பிசைந்து போகிறது வாழ்வின் சோகம்.

பல நேரம் மௌனமாயிரு தேவையெனில், சொற்களைச் சிறிதாக்கு.. என்று ஞான மார்க்கம் கூறுகிறது. ஆனால் இன்று சொற்கள் சீறும் பாம்பாய் நம் மீது வீசப்படுகிறது. அது சீறுகிறது, பாய்கிறது,நிறைவில் நஞ்சைத் துப்பி நம்மை மாளவும் செய்கிறது. கவசம் வீசப்படுபவர்களுக்கு மட்டுமல்ல, வார்த்தையை வீசும் வாய்களுக்கும் வேண்டும் என்று சொல்லாமல் சொல்கிறது இக்கவிதை. விதைக்குள் மரம் திணித்த மாயாஜாலம் மானையும், புலியையும் படைத்த அழகான முரண்பாடு

‘முதல் கவிஞன்’ எனும் தலைப்பில் இடம்பெற்ற இக்கவி, மனத்தை இரம்மியப் படுத்துகிறது. இயற்கையின் முரண்பாட்டை வகுத்தவனே முதல் கவிஞன் எனும் பொருட்செறிவு, அர்த்தமுள்ள கவிதையாக மாற்றுகிறது.

‘பட்டாசுக் குப்பை’ தொகுப்பில், ஆகச் சிறந்த கவிதைகளில் ஒன்றாக மின்னுகின்றது. பட்டாசுகளை வெடித்து குப்பைகளாக்கி மகிழ்ச்சியடைந்தன பல மனங்கள். வெடித்த பட்டாசுக் குப்பைகளைக் கொளுத்தி தனது பண்டிகை ஏக்கங்களை தீர்த்துக் கொள்ள ஒரு சிறுவன் வரத்தான் போகிறான் என்ற இறுதி வரிகளின் அழுத்தம் ஒரு தேர்ந்த கவிச் சூத்திரக் கைகளுக்கு மட்டுமே உரித்தானது. இக் கவிதையில் இல்லாமையின் கொடூரங்கள் எப்படியெல்லாம் ஏழைகளை வதைக்கிறது என்பதை அழகான கவிப்பாணியில் நமக்குச் சொல்கிறது.

‘போகிற போக்கில்…’ தலைப்பிட்ட கவிதையில்,

சிட்டுக் குருவி தளர்வான மௌனத்தில் என் பக்கம் திரும்பாமலே என்னைப் பரிகாசிக்கிறது. தளர்வான மௌனத்தில் என்ற வரிகள் சற்று அழுத்தத்தின் மேற்பக்கமாக நின்று கொண்டு நம்மை தளரச் செய்கிறது. மௌனத்தில் தளரச் செய்வது சிட்டுக் குருவி மட்டுமல்ல…    சில சினேகக் குருவிகளாகவும் இருக்கலாம் என்பதே கவிதையின் திரிபு.
திரும்பாமலே பரிகாசிக்கிறது என்றால், திரும்பினாலும் பரிகாசிக்கத்தானே செய்யும்?

உற்றுப் பார்த்து பரிகாசிக்கும்
உன்னைப் பார்த்து சினந்தேன் – என்பது ஒரு சைவப் பாடல்.

காலிப் பாத்திரம் மனத்தை பாதித்த கவிதைகளில் ஒன்றாகயிருக்கிறது.
காலி என்பது வெறுமை: ஒன்றுமில்லாமல் போகும் ஒரு மோன நிலை. திக்கற்ற வெளி.

வெயிலில் காய்ந்து கொண்டிருந்த டிபன் பாக்ஸைப் பார்த்ததும் அம்மாவின் நினைவு இங்கு கவிதையாகியிருக்கிறது.

‘இப்போது அம்மா இல்லை. அந்தக் காலிப் பாத்திரத்தில் தயிர் சாதமும் சோகமும் மாறி மாறி நிரம்புகின்றன.’

இறுதி இரண்டு வரிகளில் அழுத்தத்தில் மனதில் திம்மென்று ஒரு பெரும் பாரம் அழுத்துகிறது.

‘மாறி மாறி ஊசலாடும் மனமே…’ என்பார் சுந்தரர்;. இங்கு வெறுமையில் மனம் ஊஞ்சலாடுகின்றது. அதுவும் அம்மா இல்லாத வெறுமை வெறுமையின் அத்துணைப் பக்கங்களிலும் கவிதையின் கடைசி இரு வரிகளைப் பொருத்திக் கொள்ளலாம். மிகையுணர்ச்சியற்ற நேர்த்தியான கவிதை இது. கவிதையின் ஆகச் சிறந்த அடுக்கு.

‘எலிகளைக் கொல்லுதல்’ என்ற போக்கு எங்கும் நிலவி வருகிறது. உயிரை அழிப்பது நமக்கான வேலையா? அந்த அதிகாரத்தை நமக்குக் கொடுத்தது யார்? வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடிய வள்ளலார் பெருமானின் உள்ளம் ஏன் நமக்கில்லை? இப்படியான கேள்விகளுடன் எழுதப்பட்டுள்ளது அழகின் மரணம் கவிதை மனதில் தைக்கும் படியான அழகியப் படைப்பு.

பதினேழு ஆண்டுகள் ஆர்.டி.பால் தெரு(சேலம்)வில் ஒரே வீட்டில் வசித்து வருகிறோம். ஒரு எலியையும் அடித்ததில்லை. முழுக்க எலிகள் சூழ்ந்த வீடு அது. விஷம் வைக்கும் முயற்சிகளையும் தடுத்துள்ளேன். இவ்வுணர்வோடு இதே மனநிலை பொருந்திய வகையில் எழுதப்பட்ட இக்கவிதை, நிறைவான கவிதைகளில் ஒன்றாக பரிணாமிக்கிறது.

கரிய விஷப்பொடி கலந்த சோற்றுக்
கவளத்தின் சிதறிய பருக்கைகள்
எதையோ முணுமுணுத்தன!

அழகான அந்தப் பிராணிகள் மல்லாந்து
கிடந்து தம் கால்களையே கரங்களாக்கிக்
கடவுளிடம் எனக்கான தண்டனையை யாசிக்கின்றனவா?

என்ற கேள்வியில் ஒளிந்து கிடக்கிறது குற்றத்தின் வீரியம். எலிகளாகப் பிறந்தாலும் குற்றம்தானே? சாவின் அத்தனைக் கரங்களும் அதை நோக்கித்தானே?

இதைப் போன்ற கேள்விகள் நமக்குள்ளிலிருந்து தேன்றும் படியாக இதிலுள்ள கவிதைகளிருப்பது தொகுப்பின் வெற்றி. எளிமையூம், மறைபொருளும் கொண்ட கவிதைகள் தொகுப்பு முழுதும் விரவிக் கிடக்கின்றன.

கவிதையின் கலைத்தந்திரம் என்றழைக்கப்படும் ஹிபலெஜி முறையிலான பல கவிதைகள் இத்தொகுப்பில் காணக் கிடைக்கின்றன.

தனித்த சிந்தனையில் விளைந்த பழைய நினைவுகளின் அடுக்குகளின் வழியாக இந்த கவிதைகள் நமக்கு வார்த்துத் தரப்பட்டுள்ளன.

பளபளப்புத்தாளில் கவிதைகள் அச்சிடப்பட்டுள்ளது. வடிவமைப்பின் புதிய உத்திகளை கையாண்டிருந்தால் தொகுப்பு மேலும் பொலிவு பெற்றிருக்குமென்பது எமதெண்ணம். ஆனாலும் முகப்பூச்சற்ற முகங்கள் இரசிக்க ஏதுவானவை தானே?

(நூல் வெளியீடு: எஸ்.ராஜேஷ். 12பி, சரஸ்வதி தோட்டம், மூன்றாம் தெரு, ராகவேந்திரபுரம், ஸ்ரீரங்கம் – 620006. தமிழ்நாடு, இந்தியா. பக்கம்: 100 விலை: ரூ.95.(உயர் ரக பதிப்பு)

Series Navigationபோதி மரம் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 26வால்ட் விட்மன் வசனக் கவிதை – 30 என்னைப் பற்றிய பாடல் – 24 (Song of Myself) உன்னத நிலை அடையும் காலம்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *