சரித்திர நாவல் போதி மரம் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 29

This entry is part 12 of 20 in the series 21 ஜூலை 2013

‘மறுபிறவி பற்றிய உங்களது கேள்விகளுக்குப் புராணங்களில் நிறையவே பதில்கள் உள்ளன. மறுபிறவி எதுவாக இருக்கும் என்னும் ஒரு தனி நபரின் ஆர்வம் அல்லது அச்சத்தினை விட்டு விடுவோம். மறுபடி மனிதப் பிறவியே கிடைத்தாலும் நாம் வாழப் போகும் சமுதாயம் இதை விடவும் மோசமான துன்பத்திலும், பேராசை வலையிலும், வீழ்ந்து கிடக்கும் என்று கூறலாமில்லையா?”

மகத ராணிகளுள் ஒருவரான பசேந்தி வம்ச ராணி கேமா கவனத்துடன் ஆனந்தன் கூறுவதைக் கேட்டுக் கொண்டிருந்தார்.

“உலகம் உய்யும் என்று கூறக் கூடாதா பிட்சுவே?”

“நான் உலகில் மறுபிறவி எடுப்போருக்கு எந்த வித உத்தரவாதமும் இல்லை என்னும் பொருளிலேயே கூறினேன். ஆசையின் அலைக்கழிப்புகளிலும், அகம்பாவத்தின் சின்னங்களான செல்வம், அதிகாரம், மற்றும் புகழுக்காகவும் ஓயாத போர்களையும் காண வேண்டி இருக்கும். அநித்தியமான இவற்றிற்காகத் தான் நிரந்தரமாகப் போர் ஒன்று நிகழ்ந்து கொண்டே இருக்கிறது.

“போர் என்றால் தேசங்களுக்கு இடையே நடப்பது தானே?”

“இல்லை மகாராணி. ராஜ குடும்பமோ, சாதாரணக் குடும்பமோ – ஒரு குடும்பத்துக்கு உள்ளேயே அதிகாரப் போட்டியும் அது தொடர்பான தாக்குதல்களும் நிகழ்ந்த வண்ணமே இருக்கின்றன. கத்தியும் ஈட்டியும் குதிரையும் யானையும் மட்டும் இருப்பது தான் போர்க்களம் அல்ல. ஒரு மன்னனின் மந்திரி சபை என்றால் மந்திரிகளுக்குள்ளும் கூட அதிகாரப் போட்டி, தான் முக்கியம் பெற சதிகள் என எவ்வளவோ நிகழ்கின்றன. இவை இயல்பானவையே. ஆனால் ஒவ்வொரு தலைமுறையிலும் மேலும் குறுகிய மேலும் குரோதமான மோதல்களைக் காண்கிறோம்”

“எனக்குப் புரியும் படி சொல்லுங்கள் பிட்சு ஆனந்தரே”

“ராணியாரே, மகாபாரத கால கட்டத்தை எடுத்துக் கொள்ளுங்கள். ராமாயணத்தை ஒப்பிடும் போது எவ்வளவு மோசமான அதிகாரப் போட்டியை நாம் பார்க்கிறோம்”

“நன்னம்பிக்கை தருவதாக எதுவுமே இல்லையா யோகியாரே?”

“ஏனில்லை? புத்த பிரானும் பௌத்தமும் இல்லையா? அவருக்கு முன் மகாவீரர் நமக்கு வழி காட்டவில்லையா?”

“இப்போது புரிகிறது சுவாமி. ராணி பஜாபதி போல துறவுக்கு வராமல் என்னைப் போல குடும்பத்திலேயே இருக்கும் பெண்கள் செய்யக் கூடியது எதாவது உண்டா?”

“ஏன் இல்லை அம்மா? துறவு மட்டுமே வழி என்று சொல்ல புத்தபிரான் ஞானம் பெறவில்லை. எல்லோரும் துறவியாக வேண்டிய அவசியமும் இல்லை. தன் வாழ்க்கை முறையில், தமது குடும்பத்தில், தமது ஊரில் என எளியவரோ, ராஜ குடும்பத்தவரோ யாருமே சமூக மேன்மைக்காகப் பாடுபடலாம். உங்களது கணவரும் மகாராஜாவுமான பிம்பிசாரரே ஒரு நல்ல உதாரணம். அவர் புத்தரின் போதனைகளின் சாரத்தை உணர்ந்து தமது தேசமே அதைப் புரிந்து கொள்ளும் வாய்ப்பைக் கொடுத்திருக்கிறார்”

“உங்கள் சாக்கிய வம்சத்தின் ராஜ குடும்பமே பௌத்த வழியில் தர்ம பரிபாலனம் தானே செய்கிறார்கள்”

“எல்லா குலத்தவரும் பௌத்தில் இருக்கிறார்கள் மகாராணி”

“மறுபடி கேட்கிறேன் என கோவிக்காதீர்கள் பிட்சு மகாபுருஷரே. ஒரு மனைவியாகவும் ராணியாகவும் நான் செய்யக் கூடியது என்ன? எளிய பெண்ணுக்குப் புரியும் படி சொல்லுங்கள்”

“உங்களை குடும்பத் தலைவியாக இருக்கும் ஒரு தாய் அல்லது மனைவி எளிதில் சந்திக்க முடியுமா?”

“ஏன் முடியாது? சந்தித்துக் கொண்டு தானே சுவாமி இருக்கிறார்கள்?”

“எப்படிப் பட்ட பெண்களைத் தாங்கள் சந்திக்கிறீர்கள்?”

“குடும்பத் தலைவிகளை”

“குடும்பத் தலைவிகள் என்று தாங்கள் யாரை குறிப்பிடுகிறீர்கள் ராணி அவர்களே! மற்ற நாட்டு ராஜ குடும்பப் பெண்கள், மகத நாட்டு மந்திரி, படை தளபதி என ஷத்திரியப் பெண்கல், ராஜ குரு போன்றோரின் குடும்பத்துப் பிராமணப் பெண்கள் இவர்களைத் தானே!”

“ஆமாம். பிட்சு ஆனந்தரே”

“இவர்களை மட்டுமே தாங்கள் சந்திக்கிறீர்கள். ஒரு எளிய குடும்பத்தைச் சேர்ந்த விவசாயப் பெண், நாவிதரின் மனைவி என யாரையேனும் சந்தித்திருக்கிறீர்களா?”

“இல்லை.. சுவாமி”

“இனி சந்திக்க ஒப்புவீர்களா?”

ராணி மௌனமானார். அந்தப்புரத்தில் இது கட்டாயம் சலசலப்பையே ஏற்படுத்தும். ஆனால் பிட்சுன் அறிவுரை என்பதால் மன்னரின் ஒப்புதலை வாங்க முடியும்.”சந்திக்கிறேன் பிட்சு ஆனந்தரே”

“முதற்கட்டமாகத் தங்களை எந்த ஒரு பெண்ணும் சந்திக்கலாம் என்ற புதிய முறையை அறிவியுங்கள்.அதை நடைமுறையில் காணும் வரைப் பணியாளர்களைக் கண்காணியுங்கள். குல பேதமின்றி அனைவரும் தங்களை சந்திக்கட்டும்.”

“இதனால் என்ன பயனுண்டாகும் சுவாமி?”

“மகத நாட்டில் ஒரு சாதாரணப் பெண்ணாக இருப்பதில், குடும்பத்தை நடத்திச் செல்வதில் உள்ள சிரமங்கள் உங்களுக்குத் தெரிய வரும். அவர்கள் மிகவும் கஷ்ட ஜீவனத்தில் இருந்தால் அவர்களைப் போலவே எவ்வளவு பேர் கஷ்டப்படுகிறார்கள் என்று அறிய ஏதுவாகும். மன்னரின் பல முடிவுகள் அதன் அடிப்படையில் எடுக்கப் பட்டால் உங்கள் காலத்தில் மக்களின் இன்னல்கள் குறைந்தன என்னும் மன நிறைவு உங்களுக்குக் கிடைக்கும். மன்னரின் ராஜாங்கப் பணியில் பங்கு பெறும் ஒரு புதிய வழி முறையாக இது இருக்கும்”

“தங்கள் அறிவுரையை மன்னரிடம் கூறி உடனே நடைமுறைக்குக் கொண்டு வருகிறேன் சுவாமி. பஜாபதி போல துறவு ஏற்க வாய்க்காவிட்டாலும் இது இந்தப் பெண்ணுக்கு சாத்தியமானதே”

அரண்மனை வளாகத்திலேயே தமக்கென அமைக்கப் பட்டிருந்த குடிலில் ஆனந்தன் சிந்தனையில் இருந்தார். ராணிக்கு உபதேசம் முழுமையாக முடிய சற்றே காலம் பிடிக்கும் போல் இருந்தது. இரண்டு நாட்கள் வந்த அவர் அடுத்த இரண்டு நாட்களாக வரவில்லை. எந்த செய்தியும் இல்லை. உடல் நலக் குறைவாக இருக்கலாம். அல்லது போதும் என்று தோன்றி இருக்கலாம். எவ்வாறு இருந்தாலும் மன்னர் பிம்பிசாரரிடம் முறைப்படி விடை பெற்றுப் பிறகு கிளம்பி விடலாம் என்று பட்டது. அரண்மனையில் இருந்து சங்கம் இருக்கும் வனத்தை இரவுக்குள் அடைந்து விடலாம். ஆனந்தன் வெளியே வந்ததும் ஒரு சேவகன் ஓடி வந்தான். “நீ முன் சென்று நான் மன்னரை சந்திக்க வருகிறேன் என்று கூறு ” என்றவாறே தொடர்ந்து நடந்தார்.

பிம்பிசாரர் எழுந்து கை கூப்பி வணங்கி ஆனந்தன் அமர்ந்ததும் அவர் பாதம் பணிந்தார்.

“தங்களிடம் விடை பெறலாம் என்று வந்தேன் மாமன்னரே”

“இன்னும் தங்கள் உபதேசம் பூர்த்தி ஆகவில்லையே சுவாமி”

“மகாராணிக்கு ஏதோ அசௌகரியம் எனக் கருதுகிறேன். இன்னொரு சந்தர்ப்பத்தில் உபதேசத்தைத் தொடரலாமா?”

“சுவாமி. அசௌகரியமோ அசிரத்தையோ இல்லை. கடுமையான காவல் இருக்கும் அந்தப்புரத்தில் பசேந்தி ராணியின் நவரத்தின மாலை களவு போய் விட்டது. அது அவர்களது பிறந்த வீட்டின் சீதனமாக வந்தது. மிகவும் விலை மதிப்பானது. இது ராஜ குடும்பத்தில் ஒருவரால் செய்யப் பட்டிருக்கலாம் என்றே யூகிக்க வேண்டும். இதனால் நாங்கள் இருவருமே மிகவும் மனம் உடைந்திருக்கிறோம். ஒரு நம்பிக்கையான சூழ்நிலை இல்லை என்றால் அது மிகவும் பதட்டம் அளிக்கக் கூடியது இல்லையா?” நகை என்னும் செல்வத்தின் மீது கொண்ட பற்றையும் ஒப்புக் கொள்கிறேன். இருந்தாலும் சூழ்நிலை பற்றிய கவலை அதை விட அதிகமாக உள்ளது குருதேவரே”

” மகாராஜா, செல்வத்தின் நிலையாமை, நாம் அதன் மீது கொண்டுள்ள பற்று இவற்றைப் பற்றிப் பேசும் தருணம் இது அல்ல. ராஜ குடும்பத்துக்குள் விரிசல் இல்லாமல் இதற்கான தீர்வை நீங்கள் எட்ட வேண்டும். இல்லையென்றால் பௌத்தம் உங்கள் ராஜாங்கக் கடமைகளை நிராகரித்து , ஒரு செயலின்மையை முன் வைக்கிறது என்னும் தேவதத்தன் பிரசாரம் உண்மையாகி விடும்”

“ஆனந்தரே .. தங்கள் ஆறுதல் தரும் வார்த்தைகளுக்கு நன்றி. மாளிகைக்கு வெளியில் இது செல்லவில்லை. பணியாட்களுக்கு இந்த அளவு துணிச்சல் வரும் என்று நான் கருதவில்லை. மேலும் அது அவர்களால் அணியவோ விற்கவோ முடியாத அளவு ராஜ குடும்ப அடையாளம் உள்ளது. எனவே உறவினர்களில் யாரோ ஒருவர் தான் இதைச் செய்திருக்க வேண்டும். அவர்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்தே ஆக வேண்டும். அதே சமயம் குற்றவாளி யார் என்று யூகிக்க முடியாத போது ஒரு அப்பாவியான உறவினரின் மனம் புண் படவும் கூடாது. புண்படுத்துவது பாவமான செயல் என்பது மட்டுமல்ல குடும்பத்துக்குள் அது மிகப்பெரிய போராட்டத்தையும் தீர்க்கவே இயலாத பல சிக்கல்களையும் ஏற்படுத்தி விடும். நானே உங்களை அண்டி ஒரு சேதமில்லாத ஆனால் நிச்சயமாகப் பலனளிக்கக் கூடிய ஒரு உபாயத்தைக் கேட்க இருந்தேன். நீங்களே இங்கே வந்திருக்கிறீர்கள். எனக்கு வழிகாட்டி உதவுங்கள்”

வெகு நேரம் ஆனந்தன் யோசனையில் இருந்தார். பிறகு ” மன்னா, ஒரு வழி இருக்கிறது. சரி என்று பட்டால் முயன்று பாருங்கள்” என்றார்.

“யாரையேனும் விசாரிப்பது என்றால் எனக்கு மிகவும் தயக்கமாக இருக்கிறது ஆனந்தரே”

“இல்லை மன்னா. தாங்கள் ஒரு அறிவிப்புச் செய்யுங்கள். அந்தப்புரத்தின் நான்கு வாயிலில் உள்ள கதவுகளில் இருந்து ஒரு பகல் இரண்டு இரவுகளுக்குக் காவலாளிகள் விலக்கிக் கொள்ளப் படுவார்கள். நான்கு வாயில்களிலும் மிகப் பெரிய மட்பாண்டங்கள் வைக்கப் படும். எடுத்தவர் யாரென்று மன்னர் அறிவார். ஆனால் உறவு முறை கருதி விசாரணை தண்டனை என்னும் அளவு கொண்டு செல்ல விரும்பவில்லை. எடுத்தவரே ஏதேனும் ஒரு மட்பாண்டத்தில் போட்டு விட வேண்டும். இந்த அறிவிப்பை அந்தப் புரத்தில் உள்ள மிகவும் நம்பிக்கைகுரிய பணிப்பெண் மூலம் அந்தப்புரம் முழுவதும் கொண்டு செல்ல வேண்டும்”

“எவ்வளவு நல்ல யோசனை. கண்டிப்பாகப் பலனளிக்கும் ” என்ற மன்னர் அவ்வாறே அறிவிப்பும் செய்தார்.

ஒரு இரவு கடந்தது. அடுத்த பகலும் கடந்தது. அன்று மாலையில் மன்னரே நான்கு பானைகளையும் பார்த்து வந்தார். ஒன்றும் இல்லை உள்ளே. மறு நாள் பொழுது விடிந்ததும் காவலாளிகள் பணிக்குத் திரும்பினர். ஒரு காவலன் பின் பக்க வாயிலுக்கு அருகே இருந்த பாண்டத்தில் ரத்தின மாலையைக் கண்டெடுத்துக் கொண்டு வந்து கொடுத்தான்.

மன்னர் ஆனந்தனின் குடிலுக்கு வந்து அவரிடம் நன்றி தெரிவித்து மிகவும் பாராட்டி வணங்கினார். ஆனந்தன் சலனமேதுமில்லாமல் “இது தற்போதைக்குத் தீர்வான பிரச்சனை.ஆனால் ராஜ குடும்பத்துக்குள் ஒரு சதியின் அடையாளமாகவும் இது இருக்கலாம். தாங்கள் எச்சரிக்கையுடன் இருங்கள்” என்றார்.

“அங்க நாட்டின் தலைநகரில் இளவரசன் அஜாத சத்ருவின் மாளிகையில் தேவதத்தனுக்கு என்றே ஒரு குடில் அமைக்கப் பட்டு இருக்கிறது. பல நேரங்களில் தேவதத்தன் அங்கே தான் தங்குகிறார்” என்றார் ஆனந்தன் புத்தரிடம்.

“தேவதத்தன் பௌத்தத்தைத் தவிர வேறு எதை எண்ணி அங்கே தங்கக் கூடும் ஆனந்தா?”

“அது விளங்கினால் என் கவலைகளும் தீரும் புத்தரே”

“நீ தேவதத்தனை சந்தேகக் கண்ணுடன் பார்க்கத் துவங்கி விட்டாயா ஆனந்தா?”

“சந்தேககக் கண்ணோட்டம் என்று பொதுவாகக் கூறினால் எப்படி புத்த தேவா? அவரது நடவடிக்கைகள் கவலையளிக்கக் கூடியவையாக இருக்கின்றன”

“ஐயப்பாடு என்பது நமக்குள் நம்மைப் பற்றியே இருப்பது ஆனந்தா”

“நான் தேவதத்தன் பற்றி மிகவும் கவலையுடனும், ஒரு எச்சரிக்கை உணர்வுடனும் பேசும் போது – தாங்களோ எனக்குள் என்னைப் பற்றிய ஐயம் உள்ளது என்கிறீர்களே புத்த பெருமானே”

“நான் குறிப்பிடும் இடத்துக்கு இன்னும் நெருங்கி சிந்திக்கப் பழகு ஆனந்தா. ஐயம் என்பதைப் பற்றி மட்டுமே பேசினேன். உன்னையோ தேவதத்தனையோ குறிப்பிட்டு அல்ல”

“விளங்கவில்லை புத்தரே”

“சரி. எதற்கு ஆபத்து வரும் என்று கருதுகிறாய்? எனக்கா? உனக்கா? பௌத்தத்துக்கா?”

“உள்ளுணர்வு ஆபத்தைப் பற்றி அறிவுறுத்துகிறது. எந்த விதத்தில் எப்போது யாருக்கு என்றெல்லாம் தெளிவாகத் தெரியவில்லை”

“உலக நன்மைக்காக உழைப்பது என்னும் உறுதிப்பாட்டில் தெளிவாக இருக்கிறோமா நாம்?”

“நாம் என்று என்னையும் தங்களையும் ஒன்றாகக் கூறுவது உங்களுக்கு அவமரியாதை ஆகிவிடும்”

“சொல் ஆனந்தா. நான் உழைப்பேன் என்று நீ நம்புகிறாயா?”

“என்ன புத்த தேவா, மகத தேசம், இன்னும் பல தேசங்களில் தாங்கள் காட்டிய பௌத்தத்தை நம்பியே நாங்கள் அனைவரும் இருக்கிறோம்”

“பூரணமான நம்பிக்கையும் ஐயப்பாடும் ஒன்றாக இருக்க முடியாது ஆனந்தா. நம் வழியில் நாம் பூரண நம்பிக்கையுடன் செல்வோம். தர்மம் தனது வெற்றியைத் தானே உறுதி செய்து கொள்ளும்”

புத்தரின் கூற்றின் ஆழ்ந்த பொருளை வியந்தார் ஆனந்தன்.

Series NavigationgÖdSe presented by AGNI KOOTTHU (THEATRE OF FIRE) written & directed by Elangovan‘நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து…………28 ஆ.மாதவன் – ‘மோக பல்லவி’
author

சத்யானந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *