மெய்கண்டார்

This entry is part 14 of 20 in the series 21 ஜூலை 2013

“டேய் மச்சி, இன்னைக்கு அந்த கோர்ட் வாசல்ல உண்ணாவிரதம் இருக்குற பொம்பளையோட கேசு, சூடு பிடிக்குதுடா. கேமாராவோட ஓடிவா.. “
“என்னடா ஆச்சு திடீர்னு”
“என்ன.. வழக்கம் போலத்தான். மகளிர் அமைப்பும், வேறு சில பொது நலச் சங்கங்களும் வந்துட்டாங்க சப்போர்ட்டுக்கு, அப்பறம் என்ன கேக்கணுமா..”
கோர்ட் வாசலின் எதிர்ப்புறம் மரத்தடியில் உட்கார்ந்து தர்ணா செய்து கொண்டிருந்த செண்பகத்தை போலீசார் விரட்டிக் கொண்டிருந்தனர். பொது நல சங்கங்களும், மற்ற பெண்கள் நல அமைப்புகளும் விசயம் அறிந்து வந்து சேருவதற்குள் எப்படியாவது செண்பகத்தை விரட்ட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தார்கள் போலீசார். ஆனால் அவர்கள் பயந்தபடியே நடந்துவிட்டது. மூக்கில் வியர்த்தது போல எல்லோரும் ஆஜர் ஆகிவிட்டார்கள்.
நடந்ததை முழுமையாக அறிந்துகொள்ள செண்பகத்தை கேள்வி மேல் கேள்வி கேட்டு துளைத்தெடுத்தார்கள். திருடிவிட்டு, அதுவும் தனியாக இருந்த ஒரு பெண்ணை தலையில் போர்வையைப்போட்டு அழுத்தி, கைகளை கட்டிப்போட்டுவிட்டு கழுத்தில், காதில், கையில் எனக்கிடந்த 10 பவுன் நகையையும், வீட்டில் இருந்த டிவி மற்றும் மொபெட், என முன்னால் தெரிந்த அனைத்தையும் தூக்கிக் கொண்டு ஓடி வந்தவனை போலீசார் விரட்டி வந்து பிடித்த கணவனுக்காக தெருவில் உட்கார்ந்து தர்ணா செய்யும் செண்பகத்திடம் அதற்கான நியாயம் எங்கிருந்து வந்தது என்று அறியும் ஆவலில் நிறைய கூட்டமும் கூடியிருந்தது.

பெயிண்ட் அடிக்கும் தொழிலை கடந்த 15 ஆண்டுகளாக செய்து வருபவன், தினகரன். இதுவரை எந்த ஒரு பொருளையும் திருடும் வழக்கம் சுத்தமாக இல்லாதவன். தான் உண்டு தன் வேலை உண்டு என்று, குடிப்பழக்கம்கூட இல்லாதவன். கடந்த சில நாட்களாக ஏதோ ஆழ்ந்த யோசனையில் டீவி முன்னால் உட்கார்ந்து கொண்டிருக்கிறான். மகள் பெரியவள் ஆனதிலிருந்து, டிவியில் வரும் நகைக்கடை விளம்பரத்தைப் பார்க்கும் போதெல்லாம் தன் மகளுக்கு இப்படி ஒரு நகை போட்டு அழகு பார்க்க முடியவில்லையே என்ற ஏக்கம் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. 1 கிராம் தங்க நகைக் கூட வாங்கிப் போட முடியவில்லையே என்ற வெறுப்பும், கோபமும், இயலாமையும் உந்தித் தள்ள, இறுதியாக பெயிண்ட் அடிக்கச் சென்ற வீட்டில் அந்தப் பெண் தனியாக இருப்பதைத் தெரிந்து கொண்டு இந்த வேலையைச் செய்துவிட்டு வந்திருக்கிறான்.

“ஏம்மா, செண்பகம் உனக்கே இது நியாயமா இருக்கா….? உன் புருசன் செய்தது குற்றமாத் தெரியலையா உனக்கு. அவனுக்காக இப்படி வக்காலத்து வாங்கிட்டு இருக்கியே.. உனக்கே இது தப்பா தெரியலியா..?”

“ஆமாம், நீங்க சொல்றது சரிதான். எண்ட்ற ஊட்டூக்காரவிங்க செய்தது தப்புத்தாங்க.. ஆனா அதைச் செய்யத் தூண்டினவங்களுக்கும் தண்டனை கொடுத்தாத்தானே மேற்கொண்டு இது மாதிரி தப்பு நடக்காம இருக்கும். நாளைக்கு எம்பட பையனும் இதே தப்பை செய்யக்கூடாதில்லையா.. அதேன் இப்படி உக்காந்திருக்கேன்.. ஜட்ஜ் ஐயா கொடுக்கப்போற தீர்ப்புல இனிமேலைக்கு இந்த மாதரி மக்களை தப்பான பாதைக்கு கூட்டிக்கிட்டுப் போற விளம்பரமெல்லாம் கண்டிக்கப்படோணும். வெறியைத் தூண்டுற அளவிற்கு விளம்பரத்தை அத்தனை அழகா போடும்போது, இப்படி வயித்துப்பாட்டுக்கே படாத பாடும் எங்களைப்பத்தி நினைப்போரும் இல்லை.. எனக்கு தெரிஞ்ச பையன் ஒருத்தன் ஓட்டல்ல சர்வரா வேலை பாக்குறான். ஏதோ வாசனை செண்ட் விளம்பரம் போல.. அது அவன் சம்பளத்துக்கு ஏணி வச்சாலும் எட்டாது.. அதை வாங்கி போட்டுக்கிட்டு ஒரு புள்ளைகிட்ட போய் பல்லை காட்டியிருக்கான், வேலையும் போயி, செம அடியும் வாங்கிக்கிட்டு வந்திருக்கான். இப்படி எத்தனையோ நடக்குது. இது எல்லாத்துக்கும் விடிவு வரோணும் … சாமிக்கிட்டகூட யாபாரம் பேசற இந்த உலகத்துல எங்கள மாதிரி இருக்கறவங்க பிழைக்கறதே கஷ்டம்.. குடம் குடமா பாலை ஊத்தி அபிசேகம் பண்ணச் சொல்லி சாமி கேட்கலையே. பால் இல்லாம சாகிற குழந்தைங்களைப் பத்தி யாரு கவலைப் படறாங்க..”

செண்பகத்தின் கருத்தின்படி ஒழுக்கமான தன் கணவனின் இந்த மனநிலை மாற்றத்திற்கு இது போன்ற பிரமாண்டமான விளம்பரங்கள்தான் காரணம், அதனால் தன் கணவன் செய்த இந்த குற்றத்திற்கு இது போல விளம்பர நிறுவனங்களும்தான் பொறுப்பு என்பதால் அவர்களும் தண்டிக்கப்பட்டு, தன் கணவனின் தண்டனையையும் குறைக்க வேண்டும் என்பதுதான்.

வட சென்னையின் பிரபல மகளிர் நலச்சங்க அமைப்பின் தலைவி சாராதா, அன்பும், பண்பும் நிறைந்தவர். உண்மையான சேவையுணர்வுடன் தம் பெரும் பகுதி நேரமும், உழைப்பும் செலவிட்டு தம்மால் முடிந்த பணிகளைச் செய்து கொண்டிருப்பவர். சாரதா இதில் தனிப்பட்ட அக்கறை காட்டுகிறார் என்றால் அதன் முக்கியத்துவம் கட்டாயம் அதிகமாக இருக்கும் என்று உள்ளூர்வாசிகள் அறிவர். ஆனால் அதற்கான காரணம் மட்டும் விளங்கவில்லை. செண்பகத்திற்காக வாதாட இலவச சட்ட ஆலோசகரை ஏற்பாடு செய்து இந்த வழக்கை நீதி மன்றத்திற்கு எடுத்துச் சென்றார். அரசாங்க வழக்கறிஞர் இது தேவையில்லாத வழக்கு என்றும், அவரவர் பொருட்களை சந்தைப்படுத்துவதற்கு அவரவர்கள் தம் திறமையைப் பயன்படுத்தி விளம்பரம்படுத்துகிறார்கள். போட்டிகள் நிறைந்த இந்த வியாபார உலகில் இது போன்ற கவர்ச்சியான விளம்பரங்கள் மட்டுமே மக்களை வசப்படுத்தி தங்கள் பொருட்களை வாங்கச் செய்யும். அதனால் தயாரிப்பாளர்கள் இது போன்ற கவர்ச்சிகரமான விளம்பரங்களை வெளியிடுவதில் எந்தத் தவறும் இல்லை என்றும், விருப்பமில்லாதவர்கள் அது போன்ற விளம்பரங்களைக் கண்டுகொள்ளாமல் விடுவது அவரவர் விருப்பம். அதற்காக விளம்பரதாரர்களைக் குறை சொல்வது நியாயமல்ல என்று வாதிட்டார்.

செண்பகத்தின் வழக்கறிஞர் சபாநாயகம் எழுந்தபோது நீதி மன்றத்தில் ஒரு சலசலப்பு எழுந்து அடங்கியது. இவர் என்னதான் சொல்லப் போகிறார் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது. ஆனால் வக்கீல் சபாநாயகம் மிகத்தெளிவாகத் தம் வாதத்தை முன் வைத்தார். இதற்கு முன் எந்தத் திருட்டு வழக்கோ அல்லது வேறு ஏதும் குற்றப் பிண்ணனியோ இல்லாத செண்பகத்தின் கணவன் முத்து திடீரென்று இப்படி ஒரு திட்டமிட்ட குற்றத்தைச் செய்ய ஏதேனும் அடித்தளம் இல்லாமல் இருக்க முடியாது என்பதைத் தெளிவாக விளக்கியவர், மக்கள் மனதை மயக்கி, கொள்ளையடிக்கும் அளவிற்கு தூண்டிவிடுகிற விளம்பரங்கள் கட்டாயம் தடைசெய்யப்பட வேண்டும் என்று ஆணித்தரமாகக் கூறினார். செண்பகத்தை சமாதானம் செய்து உண்ணாவிரதத்தை நிறுத்தச் செய்தாலும், அவளுக்கு நியாயம் கிடைக்க வாய்ப்பிருக்குமா என்பது சந்தேகமாகவே இருந்தது. பெரும் பண முதலைகளின் மத்தியில் சிறு அணில் போல செண்பகத்தின் இந்த வழக்கு நிற்குமா என்பதே சந்தேகம்தான் என்றே பொது மக்கள் பேசிக் கொண்டார்கள்.

அன்று நீதிபதியின் தீர்ப்பு வரப்போகும் நாள் என்பதால் இந்த வழக்கில் ஆர்வம் கொண்ட பொது மக்களின் கூட்டம் நிரம்பி வழிந்தது. பலரும் பல விதத்தில் பாதிக்கப்பட்டிருப்பது தெரிந்தது. வழக்கமாக மிகச் சரியான நேரத்திற்குள் வந்து சேர்ந்துவிடும் நீதிபதி அன்று சற்றே கால தாமதமானது நீதிமன்ற பணியாளர்களுக்கும், வழக்கறிஞர்களுக்கும் பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அவர் முகத்தில் ஏதோ ஒரு கலவரத்தை சந்தித்திருப்பதன் அறிகுறி தெரிந்தது. வாத, பிரதி வாதங்களை வைத்துப் பார்த்து தீர்ப்பு சொல்ல வேண்டிய கட்டாயத்தில் தன்னுடைய சொந்த விருப்பு, வெறுப்பிற்கு இடம் கொடுக்க வாய்ப்பில்லாதலால் தன் தீர்ப்பை வாசிக்க முற்பட்டார். திடீரென பார்வையாளர்கள் மத்தியில் ஒரு சலசலப்பு ஏற்பட அனைவரும் அங்கு திரும்பிய போது, சமூக சேவகி சாரதாவின் அருகில் அமர்ந்திருந்த, நவநாகரீக உடையணிந்திருந்த ஒரு இளம் பெண் எழுந்து எதையோச் சொல்ல முற்பட, அதைத் தடுத்து நிறுத்தும் விதமாக அவர் அப்பெண்ணின் கையைப்பிடித்து இழுத்து உட்காரவைக்க முயற்சித்துக் கொண்டிருந்தார். அனைவரின் பார்வையும் தங்கள் மேல் படரவும் வேறு வழியில்லாமல் தம் கைகளை விலக்கிக் கொண்டவுடன், அந்தப்பெண் எழுந்து முன்னால் வந்து, நீதிபதியிடம், அவர்தம் தீர்ப்பை வெளியிடும் முன்பு தாம் சில விசயங்களை பகிர்ந்து கொள்ள விரும்புவதாகவும், அதற்கு அனுமதி அளிக்கும்படியும் கேட்டதால் நீதிபதியும் அனுமதி அளிக்க அந்தப் பெண் கூண்டில் நின்று பேச ஆரம்பித்தவுடன் நீதிமன்றமே அமைதியாக இருந்தது.

“சார் வணக்கம். என் பெயர் வர்ஷா. சாரதா மேடம் எனக்கு அத்தை உறவு. தன் சகோதரரின் மகளுக்கு நேர்ந்த சம்பவத்தை வெளியில் சொல்ல அவர் விரும்பவில்லை. ஆனாலும் இது போன்றதொரு பிரச்சனை இனி எந்தப் பெண்ணிற்கும் வரக்கூடாது என்பதற்காக நான் இதை சொல்ல வந்திருக்கிறேன். நான் சற்று தைரியமான பெண்ணாக இருப்பதால் இதை சமாளிக்க முடிந்தது. என் இடத்தில் பயந்த சுபாவம் கொண்ட பெண் வேறு யாராவது இருந்திருந்தால் அவள் என்ன முடிவு எடுத்திருப்பாள் என்று சொல்ல முடியாது” என்று கூறியபோது அந்தப் பெண் வர்ஷா அப்படி என்ன சொல்லப் போகிறாள் என்று ஆச்சரியமாக பார்த்துக் கொண்டிருந்தனர் அனைவரும்.

“அன்று எங்கள் கல்லூரியில் ஆண்டு விழா நடந்து கொண்டிருந்தது. பல விதமான போட்டிகள் நடந்து கொண்டிருந்தது. அதில் ரங்கோலிப் போட்டியும் ஒன்று. நானும் அந்தப் போட்டியில் கலந்து கொண்டிருந்தேன். போட்டி முடிந்து எனக்கு இரண்டாம் பரிசு கிடைத்தது. பரிசிற்காக என் பெயர் அறிவிக்கப்பட்டபோது மிகுந்த ஆர்வத்துடன், என் தோழிகளின் ஆரவாரத்துடன் மேடையேறினேன். பரிசு பெறும் அந்த வேளையில் மாணவர்கள் அமர்ந்திருந்த பகுதியிலிருந்து சத்தமாக ஒரு மாணவன் ஒரு சானிடரி நாப்கின் விளம்பரத்தை அப்படியே முழுமையாகச் சொன்னான். உடனே மற்ற மாணவர்கள் கொல்லென்று சிரித்து கைதட்டி கலாட்டா செய்ததோடு, என்னம்மா கண்ணு உனக்கும் இப்ப அது அவசரத் தேவையா என்று என் பெயரையும் குறித்து சொன்னபோதுதான் என்னையறியாமல் குனிந்து பார்த்தேன். என் லைட் கலர் சுடிதாரின் டாப்சில் ஒரு ஓரத்தில் சிவப்பு வண்ண கலர்ப்பொடி ஒட்டியிருப்பதை. அவமானத்தில் கூனிக்குறுகிப் போன எனக்கு அடுத்து என்ன செய்வது என்று புரியவில்லை. அப்போதுதான் என் பேராசிரியர் எழுந்து மாணவர்களைத் திட்டியதோடு என் உடையில் இருந்தது ரங்கோலி கலர்ப்பொடி என்பதை தெளிவுபடுத்தினார். இருந்தாலும் அடுத்து சில நாட்களுக்கு என்னால் கல்லூரியில் சகஜமாக எவர் முகத்திலும் முழிக்க முடியவில்லை. இந்த அவமானத்தை மறப்பதற்கு பல நாட்கள் ஆகிவிட்டது. இன்றும் அந்தக் குறிப்பிட்ட விளம்பரம் தொலைக்காட்சியில் வரும்போது என் குடும்பத்தினர் அனைவரும் ஒரு கணம் வேதனைப்படத்தான் செய்கிறார்கள். என் அத்தை இந்த வழக்கிற்கு முக்கியத்துவம் கொடுப்பதும் இதற்காகத்தான். என் போல வெளியில் சொல்ல முடியாத பல பிரச்சனைகளை என் சக தோழிகள் அன்றாடம் அனுபவிக்கிறார்கள். ஆகவே விளம்பரங்களுக்கு ஒரு கட்டுப்பாடு அவசியம் என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன் யுவர் ஆனர்” என்று உணர்வுப்பூர்வமாகப் பேசிவிட்டு வெளியே வந்தபோது நீதிமன்றத்தில் இருந்த அனைவரும் எழுந்து நின்று கைதட்டி அப்பெண் சொன்னதை வரவேற்றனர்.

சமீபத்திய ஒரு தினசரி செய்தியைச் சுட்டிக்காட்டிய வழக்கறிஞர், “குழந்தைகள், சிறுவர்கள் பார்க்கும் இணையதளங்களிலும் பாலுணர்வு, வன்முறையை தூண்டக் கூடிய காட்சிகள் கிராபிக்ஸ் முறையில் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. அதே போல விளம்பரங்களிலும்கூட வன்முறை காட்சிகள் இடம் பெறுகின்றன. இதைப் பார்க்கும் சிறுவர்கள், குழந்தைகள் மனதில் தவறான எண்ணங்கள் தோன்றுகின்றன. குற்றங்கள் பெருக ஆபாச இணையதளங்கள் மற்றும் ஊடகங்களில் வரும் விளம்பரங்கள்தான் முக்கிய காரணம். எனவே அவற்றை தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வாதிட்டார்.

இதற்குப் பதில் அளித்த நீதிபதி, ஆபாச இணையதளங்களை முடக்குவதோ அல்லது உடனடியாக விளம்பரங்களை நிறுத்துவதோ கடினமானது. இந்த விஷயத்தில் தகுந்த தீர்வுகாண பல்வேறு அமைச்சகங்கள் இடையே ஆலோசனை நடத்த வேண்டியுள்ளது. எனவே, இவ்விஷயத்தில் விரிவான பதில் அளிக்க கால அவகாசம் வேண்டும் எனக் கோரினார். இந்த வழக்கில் மேலும் ஆய்வு தேவைப்படுவதால் இதன் தீர்ப்பை தள்ளி வைப்பதோடு, இதற்காக ஒரு குழு அமைத்து இது பற்றி தீவிர ஆய்வு உடனடியாக மேற்கொள்ள ஆவண செய்யப்படும் என்றும் அறிவித்தார்.

வீட்டிலிருந்து கிளம்பும் போது தன் ஒரே செல்லப் பேரன் தொலைக்காட்சியில் சூப்பர்மேன் கார்ட்டூன் பார்த்து அதில் இலயித்துப் போய், அது போன்ற ஒரு உடையும் உடுத்திக்கொண்டு வீட்டின் தண்ணீர் டாங்கின் மீது ஏறி அங்கிருந்து குதிக்கப்போக, நல்ல வேளையாக வாட்ச்மேன் பார்த்ததால் சத்தமில்லாமல் மேலே ஏறிச் சென்று அச்சிறுவனை காப்பாற்றியது தெய்வச் செயல்தான். அந்த அதிர்ச்சியிலிருந்து சற்றும் மீளாமல் வந்தவருக்கு இதைத் தவிர வேறு ஏதும் தீர்ப்பு சொல்ல முடியவில்லை. பொது மக்கள் கட்டாயம் அவரிடமிருந்து நல்ல தீர்ப்பு வரும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறார்கள்!

Series Navigation‘நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து…………28 ஆ.மாதவன் – ‘மோக பல்லவி’தமிழ் ஸ்டுடியோ – லெனின் விருது – 2013 லெனின் விருது 2013 பெறுபவர் – லீனா மணிமேகலை.
author

பவள சங்கரி

Similar Posts

2 Comments

 1. Avatar
  Dr.G.Johnson says:

  பவள சங்கரியின் ” மெய்கண்டார் ” சிறுகதை வித்தியாசமான தலைப்பைக் கொண்டிருந்தாலும், மிகுந்த சமுதாய விழிப்புணர்வை உண்டுபண்ணக்கூடிய கதையாக உள்ளது .நடையில் நகைச்சுவையும் இழையோடி அழகாக படைக்கப்பட்டுள்ளது,கணவன் திருடியதற்கு காரணம் ஆசையை உண்டுபண்ணிய நகை விளம்பரமே என்று கூறி , அதுபோன்ற விளம்பரங்களையும் தடை செய்ய வேண்டும் என்று வாதிடும் செண்பகத்தின் வாதம் நல்ல வியூகம். அவளுக்கு ஆதரவாக நீதி மன்றத்தில் வழக்குத் தொடுக்கும் சாரதாவும் வர்ஷாவுக்கு கல்லூரியில் நேர்ந்த அவமானத்தால் ஓரளவு பாதிக்கப்பட்டுள்ளாள் என்பது சுவையானது. ஆனால் அன்று காலை நீதிபதியும் அவரது பேரனுக்கு நிகழவிருந்த விபத்தை எண்ணி தீர்ப்பைத் தள்ளிப் போட்டது உச்சம்!

  கட்டுப்பாடுகள் இல்லாமல், தணிக்கைகள் செய்யாமல் பொது ஊடகங்களில் வெளிவரும் விளம்பரங்கள் பல்வேறு சமூகக் கேடுகளை உண்டுபண்ணுவது உண்மையே.ஆபாசமும் வன்முறையும் பிஞ்சு உள்ளங்களைப் பெரிதும் பாதிக்கும். இவை தடை செய்யப்பட வேண்டும்.

  இதுபோன்றுதான் சில மருந்துகள் விளம்பரங்களும். அறிவியல் ஆய்வுகள் இல்லாத மருந்துகளையும், வலி நிவாரணிகளையும் இதுபோன்றே தடை செய்தாக வேண்டும் என்று ஒரு மருத்துவராக நான் கேட்டுக்கொள்கிறேன்.

  தக்க சமயத்தில் முக்கியமான ஒரு சமுதாயப் பிரச்னையை இச் சிறுகதையின் மூலமாக மிகவும் தத்ரூபமாக எழுதியுள்ள திருமதி பவள சங்கரிக்கு வாழ்த்தும் பாராட்டும்! அன்புடன் டாக்டர் ஜி.ஜான்சன்.

 2. Avatar
  பவள சங்கரி says:

  அன்பின் மரு. திரு ஜான்சன்,

  வணக்கம். ஆழ்ந்த பார்வையினூடேயான தங்களின் கருத்து மிகவும் ஊக்கமளிக்கக்கூடியது. மிக்க நன்றி. தாங்கள் கூறியுள்ளது போல பல மருந்து வகைகள் குறிப்பாக வலி நிவாரணிகள், சாதாரண பெட்டிக் கடைகளிலும் கிடைக்கிறது. கணக்கில்லாமல், காலாவதியானதற்குப் பின்பும் அது பற்றிய விழிப்புணர்வே இல்லாமல் விற்பவர்களும், வாங்கி விழுங்குபவர்களும் நிறைந்திருக்கிறார்கள். எனக்குத் தெரிந்த ஒரு பெண் வீட்டு வேலை செய்து பிழைப்பவர், அடிக்கடி ஒரு குறிப்பிட்ட வலி நிவாரணியை வாங்கி விழுங்கியதால் ஒரு நாள் திடீரென்று காது கேளாமல் போய்விட்டது. மருத்துவர் அதற்குக் காரணமாக அதிகப்படியாக உட்கொண்ட அந்த வலி நிவாரணியைத்தான் காரணம் காட்டியிருக்கிறார்கள். மிக கவர்ச்சிகரமாக எளிதாக பாமரர்களையும் சென்று அடையும் வகையில் வெகு சாமர்த்தியமாக பல விளம்பரங்கள் சமுதாயத்துனூடே புகுந்து புற்று நோயாய் ஊறு விளைவித்துக் கொண்டிருப்பது இன்னும் அறியப்படாமலே இருப்பதுதான் கொடுமை. அறிந்தவர்களும் தங்கள் வரை பாதுகாப்பு வளையத்திற்குள் கவலையில்லாமல் கண்டு கொள்ளாமல் இருப்பதும் வேதனை. நல்ல விழிப்புணர்வு ஏற்படுத்தக்கூடிய நல்லதொரு கருத்துப் பகிர்விற்கு மனமார்ந்த நன்றி ஐயா.

  அன்புடன்
  பவள சங்கரி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *