திண்ணையின் இலக்கியத் தடம் – 1

This entry is part 19 of 26 in the series 22 செப்டம்பர் 2013
saraswathiramnath
அன்புக்குரிய திண்ணை ஆசிரியருக்கு, வணக்கம்.
திண்ணை இதழ்கள் அனைத்தையும் முழுமையாக வாசிக்க வேண்டும் என்னும் ஆசை பல காலமாகவே இருந்தது. ஆனால் ஒரு கட்டாயம் இருந்தாக வேண்டும். வாசிப்பதை சுருக்கமாக வரா வாரம் வாசகருடன் பகிர்ந்தால் நான் கண்டிப்பாக வாசிப்பேன் என்று தோன்றியது. திண்ணையின் முதல் இதழ் முதல் வாசிக்கத் துவங்கி உள்ளேன். ஒவ்வொரு கட்டுரையில் இரண்டு மாதங்களின் பதிவுகளை அலச விரும்புகிறேன். இரண்டு மாதங்களில் வரும் சுமார் எட்டு பதிப்புகளை நான் வாசித்து, கட்டுரைகளின் சாராம்சத்தைத் தந்திருக்கிறேன். பிற கதை, கவிதைகளின் விவரங்க்ளைத் தந்துள்ளேன். கட்டுரைகளுக்கான சுட்டியையும் கொடுத்துள்ளேன்.
(மொழிபெயர்ப்பாளர் சரஸ்வதி ராம்நாத்)
திண்ணையின் பணியும் , வெளிப்படைத்தன்மையும் ஈடு இணையற்றவை.
எனது கட்டுரைகளில் இதில் வெளியான சிந்தனையும், ஆய்வும் விவாதக் கருவுமான சிந்தனையைத் தூண்டும் கட்டுரைகளின் சுருக்கத்தை வாசகருக்குத் தருவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்த முயற்சி தங்கள் பரிசீலனைக்கு
அன்பு
சத்யானந்தன்.
——————

தமிழ் கூறும் நல்லுலகின் இணைய இதழாக “திண்ணை” இப்போது பதினைந்தாம் ஆண்டில் அடி எடுத்து வைத்திருக்கிறது. வெளிப்படையான பாசாங்குகள் அற்ற விவாதம் நடைபெறும் ஒரே இணைய தளம் என்றே திண்ணையைக் குறிப்பிடலாம். ஒரு சில சமூக முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களில் திண்ணையில் நடந்த விவாதங்கள் மேற்கோள் காட்டப்படுமளவு இந்த மன்றம் சுதந்திரமான சிந்தனைக்கும் தெளிவுக்கும் வழிவகுப்பதாக அறியப்படுகிறது. சமகால இலக்கியத்தில் புனைவுகளான கதை, கவிதை, மற்றும் மொழிபெயர்ப்புகளை வாரா வாரம் வெளியிட்டுப் பல இலக்கியவாதிகளை படைப்பாளிகளைத் தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது.

அரசியல் சமூகத் தளத்தில் திண்ணையில் வரும் கட்டுரைகள் சமகால சமூகச் சூழல், மற்றும் அதில் வர வேண்டிய மாற்றம் குறித்த பதிவுகள். இவை விவாதிக்கப்பட்டு நாம் அதுபற்றிய தெளிவை நெருங்குகிறோம்.

திண்ணையின் இலக்கியத் தடத்தை ஆரம்பக் காலம் முதல் வாசித்து அனைவருடனும் பகிரும் எண்ணம் இருந்து வந்தது. தற்போது அந்த வாசிப்பில் ஈடுபட நேரம் கிடைத்ததால் வாசிப்பு ஒரு தொடராக வாசகருக்குக் சமர்ப்பிக்கப்படுகிறது.

இரண்டு மாதங்கள் என்றால் எட்டு இதழ்கள் திண்ணையில். இப்படி ஒவ்வொரு பகுதியிலும் இரு மாத இதழ்களில் நாம் குறிப்பாக இலக்கியக் கட்டுரைகள் மற்றும் சமூக,அரசியல் கட்டுரைகளை சுருக்கமாக அலசி வெவ்வேறு கால கட்டத்தில் திண்ணையில் வெளியான ஆழ்ந்த பொருளும் நிறைந்த விவரங்களும் உள்ள கட்டுரைகளைப் பற்றிப் பகிர்வோம். கதை, கவிதைகளைப் பற்றிய பட்டியலையும் பார்ப்போம். கட்டுரைகளின் சாராம்சத்தைப் பகிர்வதற்கு நாம் முக்கியத்துவம் தருவது, கதை கவிதைகளை அலச வேண்டியதில்லை என்பதால் அல்ல. இந்தத் தொடர் சுருக்கமாக இருந்தால் வாசிக்க எளிதாக அமையும். பழைய இதழ்களின் இணைப்பு முகவரியும் கொடுக்கப் படுவதால் எதையும் சொடுக்கி வாசிக்கலாம். (கட்டுரையில் கொடுக்கப் பட்டுள்ள சுட்டியை வெட்டி கூகுள் தேடலில் ஒட்டினால் திண்ணையின் அந்தப் பகுதியை அது தேடித் தரும். சொடுக்கி வாசிக்கலாம்)

செப்டம்பர் 1999 இதழ்கள்:

2ம் தேதியிட்ட இதழில் “ஒளிர்ந்து மறைந்த நிலா” -கட்டுரை -பாவண்ணன்: மொழிபெயர்ப்பாளர் சரஸ்வதி ராம்நாத் அவர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறார் பாவண்ணன். பல அரிய நூல்களை வாசிப்பதற்கு அம்மையார் பாவண்ணனுக்கு உதவுகிறார். ஹிந்தி வழியாக பல நூல்களை மொழி பெயர்த்த சரஸ்வதி, பாவண்ணனை ஒரு கன்னட நாடகத்தை மொழி பெயர்க்கும் படி வேண்ட அவரும் அதை நிறைவேற்றுகிறார். தாம் மொழிபெயர்த்த பல நூல்கள் அச்சுக்குப் போகவில்லையே என்னும் ஏக்கம் அம்மாவுக்கு இருந்தது. கோதான் பிரேம்சந்த் அவர்களின் இறுதி நாவல். தமது மொழிபெயர்ப்பின் கடைசி நாவலாக அது இருக்கலாம் என்று குறிப்பிட்டார் சரஸ்வதி. அவ்வாறே ஆனது சோகம். (www.thinnai.com/index.php?module=displaysection&edition_id=19990902&format=html)

13 தேதியிட்ட இதழ் – காஞ்சனா தாமோதரனின் “வழிப்பறி” சிறுகதை.

15ம் தேதியிட்ட இதழ் – கோகுலக் கண்ணனின் “நடுக்கம்” சிறுகதை.

அக்டோபர் 1999 இதழ்கள்:

11ம் தேதியிட்ட இதழ் – “மண் பிள்ளையார்” – மனுபாரதியின் சிறுகதை.

13ம் தேதியிட்ட இதழ்- சுப்ரமண்ய பாரதியார் இந்தியா இதழில் “திண்டுக்கல் சோதிடரும் மழையும்” என்னும் தலைப்பில் எழுதிய சிறுகதையின் இரு பகுதிகளை வாசிக்கிறோம். பாரதியாரின் நகைச்சுவைக்கு இவை நல்ல மாதிரிகள். (www.thinnai.com/index.php?module=displaystory&story_id=29910134&edition_id=19991013&format=html )

27ம் தேதியிட்ட இதழ்- கோகுலக் கண்ணனின் “முகம் அற்றவன்” சிறுகதை.

31ம் தேதியிட்ட இதழ்: ராம்ஜியின் “உறைந்த கணங்கள்” சிறுகதை. மற்றும் “பின் நவீனத்துவப் புனைவிலக்கியம் இறந்து விட்டதா?” என்னும் காஞ்சனா தாமோதரனின் இலக்கியக் கட்டுரை பின் நவீனத்துவம் பற்றிய புரிதலை செழுமைப் படுத்துகிறது. ரேமண்ட் ஃபெடர்மன் எழுதிய Critificationஐக் குறிப்பிட்டு பின்நவீனத்துவம் இறந்துவிட்டது என்று குறிப்பிடுகிறார் காஞ்சனா. கட்டுரையில் 20 கேள்வி பதில்கள் இத்தலைப்பில் உள்ளன. அதில் 20ம் பதில் இது: “பின்நவீனத்துவம் இறந்து விட்டது என்று கூறி விட முடியாது. ஆனால் அடையாளப் படுத்தக் கூடிய அர்த்தமுள்ள எந்த ஒரு இயக்கத்தையும் போல் – இம்ப்ரெஷனிஸம், டாடாயிஸம், ஸ்ர்ரியலிஸம், மாடர்னிஸம், அப்ஸ்ட்ராக்ட் எக்ஸ்ப்ரஷனிஸம், முதலியன போல் – பின் நவீனத்துவமும் ஒரு குறிப்பிட்ட காலம் வரை மேல் தளத்தில் பொங்கி, நுரைத்து, பின் அடித்தளத்துக்கு மூழ்கி, அங்கிருக்கும் பிறவற்றோடு சேர்ந்து, வளமான கலாசார – கலைக் கலவையின் ஒரு பகுதியாகிறது. இந்த முழுகி, அழுகும் கணமே அந்த இயக்கத்தின் மரணம் என்று அழைக்கப்படுகிறது”
பின் நவீனத்துவத்துக்கு ஒரு நல்ல விளக்கம் என்று அவர் தந்திருப்பதைக் காண்போம்: “எழுபதுகளில் மிஷெல் ஃபூக்கோ கூறியது: ” வித்தியாசத்தை விடுவிக்க நமக்கு வேறுபட்ட சிந்தனை வேண்டும். இச்சிந்தனை, தருக்கமும் மறுப்பும் அற்றது. பன்மையை வரவேற்பது. அங்கீகரிக்கப்பட்டதிலிருந்து விலகும் பாதைகளை உள்ளடக்கியது. ஒப்புதல் உள்ளது. அதே நேரத்தில் தனிப்படுத்துவதை உபகரணமாகக் கொண்டது. பாண்டித்ய விதிகளுக்குள் கட்டுப்படாதது. தீர்வில்லாத கேள்விகளை எதிர்கொண்டு மீண்டும் மீண்டும் விளையாடும் வேறுபட்ட சிந்தனை. ” பின் நவீனத்துவ புனைவிலக்கியத்துக்கு இதை விடப் பொருத்தமான விளக்க உரை இருக்க முடியாது. தன்னையே ஒரு விளையாட்டுப் பொருளாய் வாசகருக்கு சமர்பித்துக் கொள்கிறது பின் நவீனத்துவ புனைவிலக்கியம் ; வாசகரை எழுத்தினுள் பிணைத்து ஒரு கண்டுபிடிப்பு உணர்ச்சியையும் ஒரு excitementஐயும், அங்கீகரிக்கப் பட்ட கலாச்சார, அழகியல் அமைப்புகளைக் கடப்பதால் ஒரு வினோதமான சங்கடத்தையும் விளைவிக்கிறது, வாசகருக்குள்’. (www.thinnai.com/index.php?module=displaysection&edition_id=19991031&format=html)
முழுக்கட்டுரையையும் கண்டிப்பாக வாசிக்க வேண்டும். பின் நவீனத்துவ புனைவிலக்கியம் பற்றிய ஒரு ஆழமான புரிதலுக்கு இது உதவும். (திண்ணை வாசிப்பு தொடரும்)

Series Navigationநீங்களும்- நானும்விஸ்வநாதன், வேலை வேண்டாம்…..?
author

சத்யானந்தன்

Similar Posts

12 Comments

 1. Avatar
  Dr.G.Johnson says:

  திண்ணையின் இலக்கியத் தடம் எழுத வந்துள்ள சத்யானந்தன் முன்வந்துள்ளது வரவேற்கத் தக்கதாகும். அதன் மூலம் உலகளாவிய திண்ணை வாசகர்கள் பயன் பெருவார்கள் என்பது திண்ணம். இது தமிழ் இலக்கிய வளர்ச்சியில் மற்றொரு மைல் கல் என நிச்சயம் கூறலாம். அவர்களை வாழ்த்தி வரவேற்கிறேன்…. அன்புடன் டாக்டர் ஜி. ஜான்சன்.

  1. Avatar
   sathyanandhan says:

   அன்புக்குரிய திரு செல்வராஜ் ஜகதீசன், ஜான்ஸன், திருமதி. பவள சங்கரி அனைவருக்கும் வணக்கமும் நன்றியும். தங்கள் வாழ்த்துக்களுடன் இத்தொடர் முந்தைய இதழ்களை மறுவாசிப்பு செய்யும் எளிய முயற்சியாக அமையும். அன்பு சத்யானந்தன்.

 2. Avatar
  ஷாலி says:

  திண்ணையில் இடையில் புகுந்த என்னைப் போன்றோருக்கு இத் தொடர் இன்பப்புதையலே! திரு.சத்யானந்தன் அவர்களுக்கு நன்றிகள் பல!

 3. Avatar
  sathyanandhan says:

  நன்றி. பிரமிள் மொழிபெயர்த்த பௌத்தம் சம்பந்தப் பட்ட கட்டுரை, இலக்கிய ஆளுமைகளின் அரிய கட்டுரைகள் திண்ணையின் தடத்தில் காணக் கிடைக்கின்றன. நம் அனைவருக்கும் முக்கியத்துவம் மிகுந்ததாக திண்ணைப் பதிவுகள் உள்ளன.

 4. Avatar
  IIM Ganapathi Raman says:

  15 ஆண்டுகளாக இவ்விணைய இதழ் நடாத்தப்படுகிறது என்பதே எனக்கு வியப்பு. நானறியத்தொடங்கியதே ஈராண்டுகளுக்கு முன்னர்தான்.

  வாழ்த்துகள்.

  ஆயினும் ஒரு நெருடல். திண்ணை அவ்வப்போது தன்னைப்பற்றி ஒரு சர்வே நடாத்திக் கொள்ளவேண்டும். வாசகர்கள் திண்ணையைப் பற்றி என்ன நினைக்கிறார்கள்? எவ்வகையிலெல்லாம் மேம்படுத்தலாம் என ஆலோசனைகளை வரவேற்கலாம். இல்லாவிட்டால் திண்ணை தனக்குத்தானே மதிப்பெண்கள் போட்டு வியந்து கொள்ளூம் மாணாக்கனைப் போலாகிவிடும்.

  நான் பார்த்தவரை, திண்ணையின் இதழ் நோக்கம் ஒன்றே ஓன்றுதான் வெளியிடப்படுகிறது.

  //திண்ணை லாபநோக்கமற்ற வாரப்பத்திரிகை
  உங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.
  ஏற்கெனவே பிரசுரமாகியிருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.//

  இதைக்கூட திண்ணை சரியாகச் செய்யவில்லை. கட்டுரைகள் பிற இதழ்களில் வந்த பின்னர் வெட்டி ஒட்டப்படுகின்றன. வெ சாமிநாதன் கட்டுரைகள் அனைத்துமே ஒன்று தமிழ் ஹிந்து இல்லாவிட்டால் சொல்வனம் போன்ற ஒரு சார்பு நிலை இதழ்களில் வெளியிடப்பட்டு பன்னாட்கள் கழித்து இங்கு வெட்டி ஒட்டப்படுகின்றன.

  மலர்மன்னன் அப்படி செய்யும்போது இக்கட்டுரை ஏற்கனவே வெளிவந்ததுதான் என்று சொல்லி இடத்தையும் காட்டுவார். வெ சாமிநாதன் அதைக்கூடச் செய்வதில்லை.

  மற்றபடி திண்ணை இதழ் கொள்கைகள் என்ன ? எப்படிப்பட்ட கருத்துக்கள்; கட்டுரைகளை வரவேற்கிறார்கள்? தெரியவில்லை :-(

  ஏனென்றால் பிற இதழ்கள் வெளியிடும கட்டுரைகள்; பின்னூட்டங்கள் இவர்கள் தடுக்கிறார்கள்.; அவர்கள் தடுப்பவை இங்கு வருகின்றன. தி ஹிந்து ஒரு காலத்தில் கன்சேர்வடிவ் என ப்பெயர் வாங்கிய ஒன்று. இன்று அவர்கள் வெளியிடும் கட்டுரைகள்; செய்திகள் அவர்கள் அந்த ஃப்ரேமை என்றோ தூக்கியெறிந்துவிட்டார்கள் என்று புரியும். கீற்று, காலச்சுவடு போன்ற இணைய இதழ்கள் எங்கோ போய்விட்டன!!

  கொள்கைகளை வெளியிடுங்கள் சார். என்னைப் போன்றோருக்கு உதவும்.

  (திண்ணை இதை வெளியிடாவிட்டாலும் பரவாயில்லை. படித்தால் போதும். சுய பரிசோதனக்கு உதவலாம்.)

 5. Avatar
  ameethaammaal says:

  இது ஒரு நல்ல முயற்சி தொடருங்கள். உங்களின் விமர்சனம் படிக்க விட்டுப்போன படைப்புகளைத் தேடவும் படிக்கவும் உதவும்

 6. Avatar
  க்ருஷ்ணகுமார் says:

  வாழ்த்துக்கள் ஸ்ரீமான் சத்யானந்தன். அருமையாகப் பதிவாகி விவாதிக்கப்பட்ட அருமையான வ்யாசங்கள் தங்கள் மீள் வாசிப்பால் வாசகர்களின் கவனத்துக்கு வரும்.

 7. Avatar
  க்ருஷ்ணகுமார் says:

  \ வெ சாமிநாதன் கட்டுரைகள் அனைத்துமே ஒன்று தமிழ் ஹிந்து இல்லாவிட்டால் சொல்வனம் போன்ற ஒரு சார்பு நிலை இதழ்களில் வெளியிடப்பட்டு பன்னாட்கள் கழித்து இங்கு வெட்டி ஒட்டப்படுகின்றன.இதைக்கூட திண்ணை சரியாகச் செய்யவில்லை. கட்டுரைகள் பிற இதழ்களில் வந்த பின்னர் வெட்டி ஒட்டப்படுகின்றன.\

  ஒரு தளத்தில் ஒரு ஆசிரியரால் எழுதப்பட்ட ஒரு வ்யாசம் மற்றொரு தளத்தில் அவர் பெயரிலேயே அச்சு அசலாக பதிவு செய்யப்படுவது மீள் பதிப்பு. அதை வெட்டி ஒட்டி என்று நீட்டி முழக்குவது வீண் பேச்சு.

  ஒருவர் எழுதிய ஒரு விஷயத்தை வேறொருவர் கடன் வாங்கி எழுதும் போது தான் அது வெட்டி ஒட்டப்படும் அவலங்கள் நிகழ்கின்றன. அப்படி ஒரு அவலம் திண்ணை தளத்தில் அரங்கேறியதை ஸ்ரீமான் பாண்டியன் சுட்டியுள்ளார். அப்படியான ப்ளாகியரிஸம் என்பது தள நிர்வாகிகளுக்குத் தெரியாத வரை அதற்கு தளம் பொறுப்பாக முடியாது.

  ஒரே வெ.சா வின் — இரு தளங்களில் ப்ரசுரமான ஒரே வ்யாசத்திற்கு — ஒரே மாதிரியான — வ்யாசத்துடன் சம்பந்தமில்லாது — வ்யாசத்தை விட நீள நீளமான — வெறுப்புமிழும் உத்தரங்கள் —- ஒரே நபராலா என்று சந்தேகம் வரும்போது — இல்லையில்லை – வேறு பெயர் என்று — இப்படியான அவலத்தை என்ன சொல்வது. people simply crop up with issues unmindful of counters.

  \ நானறியத்தொடங்கியதே ஈராண்டுகளுக்கு முன்னர்தான். \ மலர்மன்னன் அப்படி செய்யும்போது இக்கட்டுரை ஏற்கனவே வெளிவந்ததுதான் என்று சொல்லி இடத்தையும் காட்டுவார். வெ சாமிநாதன் அதைக்கூடச் செய்வதில்லை.\

  ம்………கணக்கு இடிக்கிறது. தேவரீர் திண்ணையில் ப்ரகடனமானது இந்த சம்வத்ஸரம் பெப்ரவரியில் பதிவான என் வ்யாசத்திற்கு உத்தரம் சமர்ப்பிக்கையில் என என் நினைவு சொல்கிறது. அமரர் மலர்மன்னன் மஹாசயர் திருநாடேகிய பின் தான் தேவரீருடைய ப்ரகடனமே இந்த தளத்தில் நிகழ்ந்ததாக என் நினைவு சொல்கிறது. என் கணக்கு தவறானால் சுட்டவும் திருத்திக்கொள்கிறேன். ம்……..ஆமாம். அறிதல் என்பது வேறு என வ்யாக்யானம் சொல்ல முடியும் தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *