சி. ஜெயபாரதன், கனடா
அன்புள்ள நண்பர்களே,
“சீதாயணம்” என்னும் எனது நாடகத்தைத் தமிழ்கூறும் வலை உலகம் படித்தறிந்திடச் சமர்ப்பணம் செய்கிறேன். முக்கியமாக இந்த நாடகத்தில் வரும் இராமன், இராவணன், அனுமான், சுக்ரீவன் போன்ற அனைவரும் மனிதராகக் காட்டப் படுகிறார்கள். இராம பிரானைத் தேவ அவதாரமாகக் கருதும் அன்பர்கள் என்னை மன்னிக்க வேண்டும். வால்மீகி முனிவருக்கு ஆசிரமத்தில் தன் முழுத் துன்பக் கதையைச் சொல்லி, பிள்ளைகளை இழந்து, கணவனால் புறக்கணிக்கப்பட்டு இறுதியில் தன் உயிரையும் போக்கிக் கொண்ட சீதாவின் பரிதாப நிகழ்ச்சி இது.
அன்புடன்,
ஜெயபாரதன், கனடா
+++++++++++++
[சென்ற வாரத் தொடர்ச்சி]
நாடகம் : சி. ஜெயபாரதன், கனடா
வடிவமைப்பு : வையவன்
ஓவியம் : ஓவித்தமிழ்
[சென்ற வாரத் தொடர்ச்சி]
காட்சி இரண்டு
வால்மீகி ஆசிரமத்தில் சீதா அடைக்கலம்
[இடம்: கங்கா நதியின் தென்கரை ஓரம்.நேரம்: பகல்.பங்கு கொள்வோர்: சீதா, இலட்சுமணன், குகன், வால்மீகி ஆசிரமத்தின் பெண் சீடர்கள்][அரங்க அமைப்பு: இரத்தில் கங்கையின் வடபுறம் வந்திறங்கிப் பின் குகன் ஓட்டி வந்த படகில் கங்கை நதியைக் கடந்து இலட்சுமணன், சீதா கரையோர தோப்பின் மரநிழலில் தங்குகின்றனர். குகன் சீதாவின் ஆடை, அலங்கார, ஆபரணப் பெட்டியைச் சுமந்து கொண்டு அவர்களுக்குப் பின் தொடர்கிறான்]
இலட்சுமணன்: (சீதாவைக் கும்பிட்டுத் திடீரெனக் காலில் விழுந்து, தழுதழுத்த குரலில் கண்ணீருடன்) அண்ணி! என்னை மன்னிக்க வேண்டும். …. இல்லை! இல்லை! … என்னை மன்னிக்க வேண்டாம். உங்களுக்கு மாபெரும் துரோகத்தைச் செய்து விட்டேன்! துரோகத்துக்கு உடந்தையாக இருந்து, துரோகச் செயலைத் தடுக்க வலுவின்றி, துரோகக் கட்டளைக்கு அடிபணிந்து, பாசமுள்ள உங்களுக்கு வஞ்சகம் செய்து விட்டேன்! … நான் கோழை! … நான் வஞ்சகன்! … என்னை மன்னிக்காதீர்கள்! .. என்னை இறைவன் தண்டிப்பான். செய்யத் தகாத செயலைத் தெரிந்தே செய்து விட்டேன்!
சீதா: (புரியாத விழிகளுடன்) நீ என்ன சொல்கிறாய் ? நீ என்ன வஞ்சகம் செய்துவிட்டாய் ? மன்னிக்கச் சொல்லிப் பிறகு மன்னிக்க வேண்டா மென்று ஏன் மன்றாடுகிறாய் ? ஏன் உடம்பு நடுங்குகிறது ?
இலட்சுமணன்: (காலைப் பிடித்து கொண்டு, மேலே திரும்பி) அண்ணி! அருமை அண்ணி! எப்படிச் சொல்வேன் உங்களுக்கு ? அண்ணனிட்ட தண்டனையை உங்களுக்கு எப்படிச் சொல்வேன் அண்ணி ?
சீதா: உன் அண்ணா, என்ன தண்டனை எனக்கு விதித்திருக்கிறார் ? புரிய வில்லையே. புரியும்படிச் சொல் இலட்சுமணா, சொல்!
இலட்சுமணன்: [நேரே பார்க்காமல் முகத்தைத் திருப்பி தடுமாற்றமுடன்] அண்ணி! உங்களை அண்ணா நாடு கடத்தியுள்ளார்! உங்கள் இதயக் கோயிலில் குடியுள்ள எங்கள் அருமை அண்ணா!
சீதா: [கூர்ந்து நோக்கி] நான் என்ன குற்றம் செய்தேன் ? சுற்றி வளைக்காமல் நேராகப் பேசு!
இலட்சுமணன்: அண்ணி! நீங்கள் எந்தக் குற்றமும் புரிய வில்லை. உங்களை இன்று காட்டில் விட்டு விட்டு வரவேண்டு மென்று எனக்கு அண்ணாவின் உத்தரவு. கட்டளையை நிறைவேற்றி விட்டேன். போன வனவாசத்தில் நிகழ்ந்த தவறுக்கு, இப்போது புது வனவாசம் உங்களுக்கு! இரண்டாம் வனவாசம்!
சீதா: கட்டளை நிறைவேற்றி விட்டாய்! முதலில் கட்டளை ஏன் பிறந்தது ? ஏதோ நடந்திருக்கிறது. ஏன் மறைத்து மறைத்துப் புதிர் போடுகிறாய் ? மறைக்காமல் நடந்ததைச் சொல் இலட்சுமணா!
இலட்சுமணன்: அன்று கைகேயி சிற்றன்னையின் வரத்தைக் காப்பாற்ற தந்தைக்கு அடிபணிந்து, காடேக ஒப்புக்கொண்டார். இப்போது குடிமக்கள் அவச்சொல்லுக்கு அடிபணிந்து, உங்களைக் காட்டுக்கு அனுப்பத் தண்டனை விதித்திருக்கிறார். அதனால் அண்ணா அவமானப் பட்டாராம்!
சீதா: அவச்சொல்லால் என் பதிக்கு அவமானமா ? குடிமக்கள் என்னைப் பற்றி என்ன அவச்சொல்லை இவருக்குச் சொன்னார்களாம் ? இந்த அவமானத்தை என் பதி எனக்கல்லவா முதலில் சொல்ல வேண்டும் ? நான் சம்பந்தப்பட்ட இந்த அவமானம் எனக்குத் தெரியாமல், முதலில் உங்களுக்குத் தெரிந்திருப்பது இப்போது எனக்கு அவமானமாகத் தோன்று கிறது. நான் அவரது மனைவியா அல்லது அந்தப்புர பெண்ணடி மையா ? மனைவி அருகில் இருந்தது தெரியாமல் போனது. மதிப்புள்ள மிதிலை நாட்டு மன்னரின் புதல்வி என்பதும் மறந்து போனது. என்னால் ஏற்பட்ட அவமானம் அவரை மட்டுமா தாக்கும்! என்னையும் தாக்கும்! என் தந்தையையும் பாதிக்கும்! என்ன அவமானம் என்னருமைப் பதிக்கு ?
இலட்சுமணன்: அசோக வனத்தில் காலம் தள்ளிய உங்கள் புனிதத்தில் அண்ணாவுக்கு எள்ளளவும் ஐயப்பாடு இல்லை! இலங்கை வேந்தன் சிறையிட்ட உங்களை உத்தமி என்று முற்றிலும் நம்புகிறார். ஆனால் குடிமக்கள் மனதில் உங்கள் மீது தப்பான சந்தேகம் எழுந்துள்ளது. இராவணன் உங்களைத் தொட்டுத் தூக்கிச் சென்றானாம். பல வருடங்கள் அவனது அரண்மனையில் நீங்கள் வைக்கப் பட்டிருந்தீர்களாம்! அண்ணா நம்பித் தன்னுடன் எப்படி அரண்மனையில் வைத்துக் கொள்ளலாம் என்று குடிமக்கள் அண்ணாவைத் தூற்றினார்களாம். இது ஒற்றர் மூலம் அண்ணாவுக்குத் தெரிய வந்தது.
சீதா: [ஆத்திரமாய்] என்ன சொன்னாய் இலட்சுமணா! நான் களங்க மற்றவள். நான் கறை அற்றவள். இராவணன் முரட்டுத்தனமாய்ப் பற்றித் தூக்கிச் சென்றது, ஆத்மாவற்ற இந்த கூடு உடம்பைத்தான். என் ஆத்மா சுத்தமானது. தூய்மையான என் மனக் கோயிலில் இருப்பவர் என் பதி ஒருவர்தான்! இதை நான் எப்படி நிரூபித்துக் காட்டுவது ? இராவணன் பிறர் மனைவியைக் களவாடிய அயோக்கியன்! ஆனால் அவன் கூட என்னைப் பலாத்காரம் செய்யவில்லை! அப்படி ஏதேனும் ஆகியிருந்தால் என்னுயிரை அன்றைக்கே மாய்த்திருப்பேன்! என் ஆத்மா ஏற்றுக் கொண்டு ஒருவரை மணந்தபின், விதியால் பிரிக்கப்பட்டு, மற்றவன் கையால் தீண்டப்பட்டு, அவன் மாளிகையில் வாழ்ந்தேன் என்று ஊரார் ஏசினாலும், உன் அண்ணா வுக்கு என்மேல் நன்னம்பிக்கை இல்லாமல் போனதா ? உண்மையாக உன் அண்ணாவுக்குத்தான் என்மீது நம்பிக்கை யில்லை! அப்படித்தான் எனக்குத் தெரிகிறது. தன் சந்தேகத்தை மறைத்து, ஊரார் புகாரைக் காரணம் காட்டி, அவரது அன்பு மனைவியை ஏன் தண்டிக்கிறார் ? நான் புனிதமானவள் என்பதை நிரூபிக்க முடியாது! நிரபராதி சீதா என்பதை நிரூபிக்கக் கூடிய ஓர் இரக்கமுள்ள அரக்கனை உன் அண்ணா போர்க் களத்தில் கொன்றுவிட்டார்! நான் புனிதமானவள் என்று முதலில் நம்பினால்தானே, அவர் ஊருக்கு நிரூபிக்க முடியும்! அன்பு மனைவியைத் தண்டித்து, அறிவு கெட்ட குடிமக்களின் அவச்சொற்களை மெய்யென்று காட்டி விட்டார்! தன்மானத்தைக் காப்பதாய்க் காட்டி என் மானத்திற்குப் பங்கம் இழைத்தார்! உன் அண்ணா எனக்குப் பதி! ஆனால் சீதா அவரது மனைவி இல்லை!
இலட்சுமணன்: அப்படி அண்ணாவைத் திட்டாதீர்கள் அண்ணி! ஊர்வாயிக்கு அண்ணா அஞ்சிமனம் நோவது உண்மையே! அதே சமயத்தில் உங்கள் புனிதத்தில் அவருக்குச் சந்தேகமில்லை என்பதும் உண்மையே! அப்படி சந்தேகம் இருந்தால், படை திரட்டிச் சென்று, கடல் கடந்து போரிட்டு உங்களை மீட்க வந்திருப்பாரா ?
[தொடரும்]
+++++++++++++++
தகவல்
1. Bharathiya Vidhya Bhavan Ramayana By C. Rajagopalachari [1958]
2. Valmiki ’s Ramayana, Dreamland Publications, By: Ved Prakash [2001] and Picture Credit to Kishan Lal Verma
3. Mahabharatha By: Rosetta William [2000]
4. The Wonder that was India By: A.L. Basham [1959]
5. The Ramayana & The Mahabharata By: Romesh C. Dutt [1969]
6. Ramayana [Torchlight Publishing] By: Krishna Dharma [2004]
**************
S. Jayabarathan [jayabarathans@gmail.com ] (October 2, 2013) [R-2]
http://jayabarathan.wordpress.
- மெல்ல மெல்ல…
- அகமுகம்
- விவேகானந்தர் 150 -ஆம் ஆண்டுப் பிறந்த நாள் விழாவும் பேராசிரியர் பெஞ்சமின் லெபோவுக்குப் பாராட்டு விழாவும்.
- மருத்துவக் கட்டுரை – குருதி நச்சூட்டு
- ஆழ் கடல்
- உலகெலாம்
- சிறுகவிதைகள்
- நய்யாண்டி
- வால்ட் விட்மன் வசனக் கவிதை – 45 ஆதாமின் பிள்ளைகள் – 3 (Children of Adam) சுதந்திரமாய் நீயும் நானும் .. !
- ஆணோ பெண்ணோ உயிரே பெரிது
- கண்ணீர் அஞ்சலிகளின் கதை
- பிரயாணம்
- லீலாதிலகத்தில் வேற்றுமைக் கோட்பாடுகள்
- பாவடி
- ஜாக்கி சான். 12 ஆஸ்திரேலிய மண்ணில்
- புகழ் பெற்ற ஏழைகள் 29.இந்தியாவை அடிமையாக்கிய ஏழை
- என்ன இது மாற்றமோ ..?
- திண்ணையின் இலக்கியத் தடம் -5
- குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 32 (இறுதிப்பகுதி)
- சீதாயணம் [3] (இரண்டாம் காட்சி)
- “காமன்சென்ஸ்” இல்லாத “காமன்வெல்த்” நாடுகள்
- ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் அத்தியாயம்-6 பகுதி-2 மதுராவிலிருந்து துவாரகை நோக்கி கம்ச வதம்
- அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ‘கலை இலக்கியம் 2013’
- பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! பால்வீதி மையப் பூதக் கருந்துளை நோக்கிப் பேரசுர அகில வாயு முகில் விரைகிறது.
- நெடுநல் மாயன்.
- Writing Competition on Tamil History, Arts and Culture (Organized by Ilankai Thamil Sangam) on Saturday November 2nd
- க்ளோஸ்-அப்
- டௌரி தராத கௌரி கல்யாணம் – 23
- வம்பை விலைக்கு வாங்கும் வனிதையர்
- பார்வையற்றோர் நலப் பணி நினவு கூர்தல்