அப்பா

This entry is part 4 of 29 in the series 3 நவம்பர் 2013

 

                                                        டாக்டர் ஜி. ஜான்சன்

          அப்போது எனக்கு வயது ஆறு. எங்கள் கிராமத்துப் பள்ளியில் மணி அடித்ததும் நாங்கள் பைகளையும் சிலேட்டுகளையும் தூக்கிக்கொண்டு வெளியே ஓடினோம். வீடு திரும்ப அவ்வளவு ஆர்வம் எங்களின் பிஞ்சு உள்ளங்களுக்கு.

நான் எப்போதும் கலியபெருமாளுடன்தான் வீடு செல்வேன். அவனை கிராமத்தில் எல்லாருமே ” மண்ணாங்கட்டி ” என்றுதான் கூப்பிடுவார்கள். அப்போது அதன் காரணம் எனக்குத் தெரியாது. நானும் அவனை அப்படிதான் அழைப்பேன். அவனும் அது பற்றி கவலைப் படுவதில்லை. அவனுக்கும் அதன் அர்த்தம் தெரியாது என்றுதான் நினைக்கிறேன்.

அவன் எதிர் வீட்டில் குடியிருப்பவன். அவனுடைய தாயார் கண்ணம்மாள். அவனுடைய அப்பா காணாமல் போய்விட்டாராம்.

” டேய். ஒன்னோட அப்பா வந்திருக்கிறாருடா. ” என்றான்.

” எங்கேடா வந்திருக்கார்? எப்போ வந்தார்? ” நான் ஆவலுடன் கேட்டேன்.

அவன் ஊர் முகப்பில் நின்ற பெரிய உயரமான ஆலமரத்தைக் காட்டினான். அதன் அடியில் வழக்கத்திற்கு மாறாக ஒரு குதிரை வண்டி நின்றது. அதைப் பார்த்த எனக்கு பெரும் ஆச்சரியம்!

எங்கள் கிராமம் சிதம்பரத்திலிருந்து சுமார் பதின்மூன்று கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் தெம்மூர் எனும் குக்கிராமம். பேருந்து செல்லும் பிரதான வீதியிலிருந்து மூன்று கீலோமீட்டா தூரம் நடந்து செல்ல வேண்டும்.

கிராமத்தில் மாட்டு வண்டிகள்தான் இருந்தன. அவை கூட வெறும் கட்டை ( மொட்டை ) வண்டிகள்தான். கல் வீடுகளில் வாழ்ந்த பண்ணையார்களின் வீடுகளில்தான் ஓரிரு கூண்டு வண்டிகள் இருந்தன. அதில் அவர்கள் ஏறிக்கொண்டு சிதம்பரம்வரைகூட செல்வார்கள். நாங்கள் நடந்து சென்றுதான் பேருந்து பிடித்து சிதம்பரம் செல்வோம். அதுகூட பெரும்பாலும் நிற்காமல் போய்விடும். அதனால் பலர் வேறு வழியின்றி நடந்தே சென்றுவிடுவதுண்டு.

எப்போதாவது அபூர்வமாகத்தான் குதிரை வண்டியைப் பார்ப்போம். யாராவது வசதியானவர்கள்தான் அப்படி வாடகைக்கு சிதம்பரத்திலிருந்து குதிரை வண்டி சவாரி செய்வார்கள். அப்படி குதிரை வண்டி வந்துவிட்டால் கிராமத்துச் சிறுவர்களான நாங்கள் வண்டி பின்னாலேயே ஓடுவோம். குதிரையைப் பார்க்க ஆசையாக இருக்கும்.

நான்கூட ஒரு குதிரை சாமி சிலையை பெரிய தெருவு அம்மன் கோவிலில் பார்த்துள்ளேன் அது மரத்தால் ஆனது. ஒரு முறை அது ஏதோ ஒரு திருவிழாவின்போது ஊர்வலம் சென்றபோது கீழே விழுந்து ஒரு கால் உடைந்துவிட்டது.

அதன்பிறகு அதன் பெயர் ” நொண்டிக் குதிரை சாமி ” ஆனது. நான்கூட திருவிழாக்களின்போது மண்ணால் செய்து சுடப்பப்பட்ட சின்ன சின்ன குதிரை பொம்மைகளை வாங்கிக்கொள்வேன்.

நாங்கள் குதிரை வண்டி சமீபம் வந்துவிட்டோம்.

” டெய். நீ ஒன்னோட அப்பாவிடம் போ. நான் வீடு போறேன் .” என்று சொன்ன மண்ணாங்கட்டி ஒரே ஓட்டமாக ஓடிவிட்டான்.

நான் செய்வதறியாது ஒரு கணம் திகைத்துப்போனேன்.

நான் அப்பாவிடம் எப்படிப் போவேன்? அவரைத்தான் எனக்குத் தெரியதே! அப்பாவை இதுவரைப் பார்த்ததில்லையே. அவர் எப்படி இருப்பார் என்பதுகூட எனக்குத் தெரியாதே! அவர் படத்தைக்கூட பார்த்ததில்லை.

ஒரு வேளை அப்பாவுக்கு என்னைத் தெரியுமோ? ஆனால் நானே அவரைப் பார்த்திராதபோது அவர் மட்டும் எப்படி என்னைப் பார்த்திருப்பார்.

ஆனால் இந்த மண்ணாங்கட்டி தெரிந்த மாதிரி சொல்லிவிட்டு ஓடிவிட்டானே!

இவர்தான் அப்பாவாக இருந்தால் எனக்கு புதுச் சட்டை, மிட்டாய் வாங்கி வந்திருப்பார் என்ற ஆசையும் விடவில்லை. இதுவரை அப்பா அதுபோன்று எதையும் வாங்கி எனக்குத் தந்ததில்லை. எல்லாமே அம்மாதான்!

எதற்கும் வண்டியை நெருங்கி அவரைப் பார்த்துவிடுவோமே என்று சற்று நெருங்கினேன். குதிரை கட்டப்பட்டிருந்தது. அது நல்ல உயரம்.சாம்பல் நிறத்தில் பள பளவென்று அதன் தோல் மின்னியது. அதன் வால் நீளமாக இருந்தது. அதை சுழற்றி சுழற்றி ஆட்டியது.

வண்டிக்குள் ஒருவர் தூங்கிக்கொண்டிருந்தார். குறட்டை சத்தம் நன்றாகக் கேட்டது. தலைமாட்டில் ஒரு துணிப் பை இருந்தது. ஒருவேளை என்னுடைய சட்டையும் மிட்டாயும் அதில்தான் இருக்கும் என்று எண்ணிக்கொண்டேன்.

அவர் தூங்கி எழட்டும் என்று அங்கேயே காத்திருந்தேன். ஆலமரத்தின் வேர்கள் வளைத்து நெளிந்து பெரிய பாம்புபோல் மண்ணிலிருந்து வெளியே எழும்பி இருந்தது. நான் அதன்மேல் உட்கார்ந்துகொண்டேன்.

அரை மணி நேரம் ஆகியிருக்கும்.

குதிரைக்கு என்மீது சந்தேகம்போலும். திரும்பித் திரும்பி என்னையே பார்த்தது. அப்போது ஊர்ச் சிறுவர்கள் சிலர் அங்கு வந்து என்னுடன் சேர்ந்துகொண்டு குதிரையைப் பார்த்தனர்.

”  இங்கே என்னடா பண்ணுற? ” என்று என்னிடம் கேட்டனர்.

நான் அப்பா வந்துள்ளதை அவர்களிடம் பெருமையோடு சொன்னேன்.அவர்களுக்கு அது விளங்கவில்லை.i எங்களைப் பார்த்த குதிரை என்ன நினைத்ததோ தெரியவில்லை. உரக்க ஒருமாதிரி கனைத்தது.

குதிரையின் சத்தம் கேட்டதும் தூங்கிக்கொண்டிருந்தவர் விழித்துவிட்டார்!

நான் ஆவலுடன் அவரைப் பார்த்தேன்.

கருத்த நிறத்தில் ஆஜானுபாகுவாக தடித்த மீசையுடன் காட்சி தந்த அவரைக் காணவே அச்சமாக இருந்தது. இவரா அப்பா? அங்கிருந்து ஓடிவிடலாம் என்றே தோன்றியது.!

எங்களை ஒரு தரம் முறைத்துப் பார்த்துவிட்டு, செம்பிலிருந்த தண்ணீரால் முகத்தைக் கழுவி, தோளில் இருந்த தூண்டினால் துடைத்தபின் குதிரையைப் பூட்டி திரும்பிக்கூடப் பார்க்காமல் சென்றுவிட்டார்!

என்னுடன் இருந்த சிறுவர்கள் என்னை கேலி செய்து கைக்கோட்டிச் சிரித்தனர். எனக்கு பெரிய ஏமாற்றமும் அவமானமுமாகப் போய்விட்டது. கண்கள் கலங்கிவிட்டன.

கோபத்துடன் வீடு நூக்கி ஓடினேன்.

பதறிப்போன அம்மா என்னவென்று கேட்டார்கள். நான் நடந்தவற்றை அப்படியே ஒப்பித்தேன்.

உடன் எதிர் வீடு சென்றார். மண்ணாங்கட்டி அங்குதான் இருந்தான். விஷயம் தெரிந்த அவனுடைய தாயார் கண்ணம்மா அவனைப் பிடித்து போடு போடுவென்று  போட்டார்கள் .

( பின் குறிப்பு: நான் ஆறு வயதுவரை அப்பாவைப் பார்த்ததில்லை என்று சொன்னேன் அல்லவா? அவர் சிங்கப்பூரில் இருந்தார். நான் பிறந்தபின் ஒருமுறைகூட என்னைப் பார்க்க வரவில்லை! நான் முதன்முதலாக அவரைப் பார்த்தது எட்டு வயதில்தான் – சிங்கப்பூரில்! )

( முடிந்தது )

Series Navigationஇளைஞன்வால்ட் விட்மன் வசனக் கவிதை – 47 ஆதாமின் பிள்ளைகள் – 3 (Children of Adam) ஆத்மாவின் களிப்பு .. !

4 Comments

  1. Avatar ஷாலி

    டாக்டர்.ஸார்!
    அப்பவே கேப்பாரு பேச்சை கேட்டு அப்பா(வி)யாகவே இருந்திருக்கிறீர்கள்.இன்னும் அப்படித்தானா?

  2. நண்பர் ஷாலி அவர்களே, அப்போ அப் (பாவி ) இல்லை, குழந்தை மனம்.

    இப்பொ பாவங்கள் புரியும் இப் ( பாவி ) மனம்.

    பிஞ்சு சுவைக்க கசப்புதான்.

    பழம் இனித்தாலும் நஞ்சுதான்.

  3. Avatar புனைப்பெயரில்

    திரு ஜான் அய்யா, அற்புதம்

  4. Avatar எஸ். சிவகுமார்

    மிகச் சிறியதாக இருந்தாலும் கருத்தில் பெரியது. அருமை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *