அருளிச்செயல்களில்வாலியும்சுக்ரீவனும்

This entry is part 1 of 28 in the series 17 நவம்பர் 2013

 

வளவ. துரையன்

 

தாயுரை கொண்டு தாதை உதவிய தரணிதன்னைத் தீவினை என்று நீத்துக் கானகம் சென்றான் இராமன். அங்கே ஏழை வேடன் குகனைச் சகோதரனாக ஏற்றான். சூர்ப்பனகை வந்து தகாத வார்த்தைகள் பேச அவளை மூக்கறுத்து அனுப்புகிறான் இலக்குவன். அவள் இலங்கை வேந்தன் இராவணனிடம் முறையிட்டு அவன் மனத்தில் சீதையைப் பற்றி வர்ணித்து ஆசையை மூட்டுகிறாள். இராவணன் மாரீசனை மாயமானாக அனுப்பி அதன் மூலம் இராம இலக்குவர்களைப் பிரித்துத் தனியாக இருந்த சீதையைச் சிறை எடுக்கிறான். வழியில் இராவணனைத் தடுக்க வந்த கழுகரசன் சடாயு போரிட்டு மயக்கமாகிறான். திரும்பி வந்த இராமனும் இலக்குவனும் சீதையைச் தேடிச் செல்கின்றனர்.

வழியில் கவந்தன் எதிர்ப்படுகிறான். கவந்தன் வயிற்றினுள்ளேயே வாயை வைத்திருப்பவன். அவன் தன் இரு கைகளையும் நீட்டி அகலமாக விரித்து அவற்றுக்கு இடையே அகப்படும் விலங்கினங்களை உண்ணக்கூடியவன். இதைக் கம்பர்

“கையின் வளைத்து வயிற்று அடக்கும் கவந்தன் வனத்தைக் கன்ணுற்றார்” என்று கூறுகிறார்.

அக்கவந்தனை இராமன் வதம் செய்ய அவன் சாபம் நீங்கிப் போனான். கவந்தன் வதையினைத் திருச்சந்தவிருத்தத்தில் திருமழிசை ஆழ்வார் அனுபவித்துப் பாடுகிறார்.

“கடுங்கவந்தன் வக்கரன் கரன்முரன்சி ரம்மவை

இடந்துகூறு செய்தபல் படைத்தடக்கை மாயனே

கிடந்திருந்து நின்றியங்கு போதும், நின்ன பொற்கழல்

தொடர்ந்துவிள்வி லாலதோர்தொ டர்ச்சிநல்க வேண்டுமே”

இதில், திருமழிசையாழ்வார்,”கொடிய கவந்தன், தந்த வக்கிரன், கரன், முரன் முதலிய அசுரர்களின் தலைகளைப் பிளந்து, உடல்களைத் துண்டாகியவனே. பலவகைப்பட்ட ஆயுதங்களைப் பெரிய திருக்கைகளில் உடையவனே. ஆச்சரியமானவனே. படுத்தும், அமர்ந்தும், நின்றும் இயங்கியும் செல்லும் காலங்களிலே, உன்னுடைய பொன்போன்ற விரும்பத்தக்க திருவடிகளை ஆசைப் பட்டு இடைவிடாதபடியான ஒரு தியான நிலையை எனக்குப் பணிந்தருள வேண்டும்” என்று வேண்டுகிறார்.

கவந்தனை வதம் செய்த பின்னர் அனுமன் மூலமாக வானர வேந்தன் சுக்ரீவனுடன் இராமன் நட்பு கொள்கிறான். இராமன் கொண்ட நட்பின் மேன்மையைக் கம்பர்,

‘மற்றுஇனி உரைப்பது என்னே வானிடை மண்ணில் நின்னைச்

செற்றவர் என்னைச் செற்றார் தீயரே எனினும் உன்னோடு

உற்றவர் எனக்கும் உற்றார் உன்கிளை எனது என்காதல்

சுற்றம் உன்சுற்றம் நீஎன்னுயிர்த் துணைவன் என்றான்

என்று பாடுவார்.

ஆழ்வார் பெருமக்களில் இராமனிடம் மிகவும் ஈடுபாடு கொண்ட குலசேகர ஆழ்வார் தில்லைநகர்த் திருச்சித்திர கூடத்தில் தொல் லிராமனாய்த் தோன்றிய கதைமுறையைப் பாடும்போது,

’தனமருவு வைதேகி பிரிய லுற்றுத்

தளர்வெய்திச் சடாயுவைவை குந்தத் தேற்றி

வனமருவு கவியரசன் காதல் கொண்டு——-’

என்று பாடுவார்.

இராமனின்  ஆற்றலைக் காண சுக்ரீவன் அங்கிருக்கும் ஏழு மரமரங்களை அம்பினால் துளைக்க வேண்டுகிறான். ”இராமன் தொடுத்த அம்பு ஏழு மரமரங்களையும் உருவித் துளைத்துச் சென்று கீழ் உலகம் என்று சொல்லப்படும் ஏழையும் உள்ளே புகுந்து துளைத்துச் சென்று, பின் அவற்றைத் தொடர்ந்துள்ள ஏழு என்னும் தொகையை உடைய பொருள் வேறு இல்லாததால் திரும்பி விட்டது. மேலும் ஏழு என்ற தொகையை உடைய பொருளைக் கண்டபின் துளைத்துவிடும்; அவ்வாறு செய்யாமல் விடாது”. எனும் பொருளில் கம்பர் பாடுகிறார்.

ஏழுமா மரம்உருவி கீழ்உலகம் என்று இசைக்கும்

ஏழும் ஊடுபுக்கு உருவிப் பின் உடன் அடுத்து இயன்ற

ஏழ் இலாமையான் மீண்டதுஅவ் இராகவன் பகழி

ஏழு கண்டபின் உருவுமால் ஒழிவது அன்று இன்னும்

மாயனைக் கண்ட சுவடு உரைத்ததைப் பாசுரத்தில் வடிக்கும் பெரியாழ்வார் இராமனின் இச் செயலைப் பாடுகிறார்

கொலையானைக் கொம்புபறித்துக்

கூடலர்சேனை பொருதழிய

சிலையால் மரமர மெய்ததேவனை

சிக்கென நாடுதிரேல்

தலையால் குரக்கினம் தாங்கிச் சென்று

தடவரை கொண்டடைப்ப

அலையார் கடற்கரை வீற்றிருந்தானை

அங்குத்தைக் கண்டாருளர்

பெரியாழ்வார் இராமனை எங்கு பார்க்கலாம் தெரியுமா? என்று கேட்டு விடை கூறுகிறார். “குவலயாபீடம் என்ற யானையினது தந்தங்களைப் பிடுங்கிப் பகைவர் சேனையை அழித்து ஏழு மரமரங்களைத் துளைத்த கடவுளாகிய ஸ்ரீராமனைத் தேடுவீர்களானல் குரங்களின் கூட்டம் பெரிய மலைகளைச் சுமந்து கொண்டு அணைகட்ட அக் கடற்கரையிலே தமது பெருமை தோன்ற எழுந்தருளி இருப்பவனைக் காணலாம்” என்கிறார்      .

மரமரம் துளைத்ததைத் திருமங்கை மன்னனும் பாடுகிறார்.

திருக்கண்ணபுரம் திவ்யதேசத்தை மங்களாசாசனம் செய்ய வருகிறார் திருமங்கை ஆழ்வார். ஒரு தலைவி தன் தோழியிடம் பேசுவதுபோல இப் பாசுரம் அமைந்துள்ளது. அவள் கூறுகிறாள்

“தோழீ, ஏழு மராமரங்களைத் துளைத்த இராமன் நம் விஷயத்தில் செய்த அருளோடு கூடப் பகல்பொழுதும் முடிந்து விட்டது. நாம் என்ன செய்வோம்? துணை நிற்பார் யாருமில்லை. சூரியனும் மறைந்துபோகப் போகிறான். உயிரை முடிப்பதான அந்திப் பொழுது வந்து சேர்கின்றதே’

இதோ பாசுரம்

ஏழு மாமரம் துளைபடச் சிலைவளைத்

திலங்கையை மலங்குவித்த

ஆழியான் நமக்கருளிய அருளோடும்

பகலெல்லை கழிகின்றதால்

தோழி, நாமிதற் கென்செய்தும்? துணையில்லை

சுடர்படு முதுநீரில்

ஆழ ஆழ்கின்ற ஆவியை அடுவதோர்

அந்திவந் தடைகின்றதே

பிறகு இராமன் சுக்ரீவனுக்குக் கொடுத்த வாக்கிற்கிணங்க வாலியக் கொல்கிறார். வாலி வதத்தைப் பல ஆழ்வார்களும் அருளிச் செய்திருக்கின்றனர்.                 குறிப்பாகதிருமழிசையாழ்வார்

திருச்சந்த விருத்தத்தில் ‘வாலி வீழ முன்னொர் நாள் உரம் பொதச் சரந்துரந்த உம்பராளி’ என்று பாடுகிறார்.

திருவதரியாச்சிராமம் திவ்ய தேசத்தைப் பாடும் திருமங்கையாழ்வார் ,

கானிடை உருவச் சுடுசரம் துரந்து, கண்டு முன்

கொடுந்தொழில் உரவோன்

ஊனுடை அகலத் தடுகணை குளிப்ப, உயிர்

கவர்ந்து உகந்த எம் ஒருவன்”

என்று இராமனை வர்ணிக்கிறார். ”காட்டில் பொய்மானைக் கண்டு அம்பை அதன்மேல் ஏவி முன்பு கொடிய செயலையும் மிடுக்கினையும் உடைய வாலியினது தசை நிறைந்த மார்பினிலே கொலை அம்பானது அழுந்துமாறு செய்து அவன் உயிரைக் கவர்ந்த ஒப்பற்ற தலைவனாகிய என் தலைவன்” என்கிறார் அவர்.

நான்முகன் திருவந்தாதி யில் திருமழிசை ஆழ்வார் “எனக்கு ஸ்ரீராம சங்கீர்த்தனத்தினாலேயே பொழுதுபோகும். எனக்குத் தொழிலே இராமனின் குணங்களை வாயாரப் புகழ்வதுதான். எப்படிப்பட்ட இராமன் தெரியுமா? மிக்க கோபத்தையும், வலிமையும் உடைய குரங்குகளுக்கு அரசனாகிய வாலியினுடைய மதத்தைத் தொலைத்த வில்லாளனாகிய இராமன்” என்று அருளுகிறார்.

தொழிலெனக்குத் தொல்லைமால் தன்னாமம் ஏத்த

பொழுதெனக்கு மர்றதுவே போதும்——கழிசினத்த

வல்லாளன் வானரக்கோன் வாலி மதனழித்த

வில்லாளன் நெஞ்சத் துளன்

என்பது அவர் அருளிய பாசுரம்.

வாலியைக் கொன்ற பிறகு சுக்ரீவனை கிஷ்கிந்தை அரசுக்கு மன்னனாக இராமன் முடிசூட்டுகிறார். இதை பெருமாள் திருமொழியில் குலசேகரப் பெருமாள் அருளிச் செய்கிறார்.

கன்ணனுக்குத் தாலாட்டு பாடும் அவர் இராமனின் குணங்களையும் கண்ணனின்மேல் ஏற்றிப் பாடுகிறார். “ஆல இலையில் குழந்தையாய் உலகங்களை எல்லாம் வயிற்றில் அடக்கியவனே, வாலியைக் கொன்று அவன் தம்பி சுக்ரீவனுக்கு அரசைக் கொடுத்தவனே, திருக்கண்ணபுரத்தில் எழுந்தருளி இருப்பவனே, திருவாலி திருநகரிக்குத் தலைவனே, அயோத்திக்கு அரசே, தாலேலோ” என்கிறார்.

ஆலினிலைப் பாலகனாய் அன்றுலக முண்டவனே

வாலியைக் கொன்று அரசிளைய வானரத்துக் களித்தவனே

காலின்மணி கரையலைக்கும் கணபுரத்தென் கருமணியே

ஆலிநகர்க் கதிபதியே, அயோத்திமனே, தாலேலோ

திருமங்கை ஆழ்வார் திருநாங்கூர்க் காவளம்பாடி திவ்யதேசத்தை மங்களாசாசனம் செய்யவருகிறார்.

அந்த திவ்யதேசத்திலே மிகப் பெரிய பலா மரங்களின், மாமரங்களின் பழங்களானவை கீழே விழுந்து தேனொழுகிக் கொண்டிருக்குமாம். அங்கு எழுந்தருளி உள்ள பெருமாளிடம், ”கோபம் கொண்டு கிளம்பி வந்த வாலியினுடைய மார்பினிலே தைக்கும்படி ஓர் அம்பினால் அவனைக் கொன்று தன் திருவுள்ளத்துக்குப் பொருந்தியவனான சுக்ரீவனாகிய அவன் தம்பிக்கு இனிய முடியையும், அரசையும் அளித்து அருளியவனே நீயே எம்மைப் பாதுகாப்பாயாக’ என்று வேண்டுகிறார்.

இவ்வாறு ஆழ்வார் பெருமக்கள் தங்கள் அருளிச் செயல்களில் ஆங்காங்கே வாலியையும் சுக்ரீவனையும் சுட்டிக் காட்டியதை நாம் அனுபவித்து மகிழலாம்.

Series Navigation
author

வளவ.துரையன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *