ஜாக்கி சான் 16. தத்துப் பிள்ளையாய்

This entry is part 1 of 28 in the series 17 நவம்பர் 2013

16. தத்துப் பிள்ளையாய்

 

Jackie-Chan-jackie-chan-5468506-553-800

கழகத்தில் இருந்த போது மாணவர்களுக்கு வெளி உலக விசயங்கள் மேல் கவனம் செலுத்த வாய்ப்பே இல்லாமல் போனது. தினப்படி காரியங்கள், பயிற்சிகள், வகுப்புகள் என்று தினம் போவதேத்தெரியாது.

ஆசிரியர்களை மகிழ்விக்க மட்டுமே இந்தப் பயிற்சிகள் நடத்தப்படவில்லை. உலகப் புகழ்பெற்ற சீன நாடகம் ஒபராவில் பங்கேற்கவே இத்தனைக் கடினமான பயிற்சிகள் செய்ய வேண்டியிருந்தன. வித்தைகள், மேடை சாகசங்கள், நடிப்பு, பாட்டு என்று அனைத்து விசயங்களையும் கற்க வேண்டியிருந்தது. அதை உணரும் வகையில் சானும் அவனது உடன் பயிலும் மாணவர்களும் சீன நாடகம்நடைபெறும் இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். முதன்முதல் சென்ற போது ஏற்பட்ட அனுபவமே அலாதியாக இருந்தது.

லாய் யூன் கேளிக்கைப் பூங்கா.

ஒபரா அரங்கம்.

பல ஆர்ப்பாட்டங்களுடன் மாணவர் குழு வந்து சேர்ந்தது. இருட்டில் இடம் பார்த்து உட்கார்ந்தனர்.

நிகழ்ச்சி ஆரம்பமானது.

இசை வாசிக்கப்பட்ட பின், நடிகர்கள் மேடையை ஆக்கிரமித்து காண்போரை பிரமிக்க வைத்தனர்.

அவர்கள் செய்ததெல்லாம் கழகத்தில் மாணவர்கள் செய்த போதும், அது எதற்காக என்பதை அவர்கள் உணர்ந்த போது, மகிழ்ச்சியால் துள்ளினர். சானுக்கு தானும் ஒரு நாள் இப்படி அரங்கத்தின்மத்தியில் நடிக்க, பார்வையாளர்கள் வைத்த கண் வாங்காமல் தன் நடிப்பைக் கண்டு பாராட்ட வேண்டும் என்று அடிமனம் சொல்லிக்கொண்டே இருந்தது.

கழகத்திற்கு முதன்முதலில் வந்த போது, பெரியண்ணா சொன்னது நினைவுக்கு வந்தது. இதற்காகவே உண்டு, அருந்தி, கனவு காண்கிறோம் என்று சொன்னது தெளிவாகப் புரிந்தது.

இது தான் தன் வாழ்க்கையாகப் போகிறது என்ற அறிந்து கொண்டான்.

அடுத்து வந்த சில வருடங்கள் அமைதியாகவே இருந்தன. தொடர்ந்து பயிற்சி. திறனில் வளர்ச்சி. எப்போதாவது ஒரு முறை லாய் யூன் கேளிக்கை பூங்காவில் சீன நாடகத்தைக் காணும் வாய்ப்பு. பலவான்களாகவும், உயரமாகவும் மாணவர்கள் வளர்ந்தனர். பல புதிய மாணவ மாணவியரும் வந்து சேர்ந்தனர்.

குரு எப்போதும் போல இரும்புக் கை கொண்டு பிரம்படிகளைத் தந்து பயிற்சியைக் கொடுத்தார். யூன் லுங்கும், யூன் தாயும் சர்வாதிகாரம் செய்தனர்.

சானின் தாயார் எப்போதும் போல வாரம் ஒரு முறை சானைக் காண வந்து சென்றார். சான் தந்தையைப் பார்த்து வருடங்களாயின. ஆனால் தொடர்ந்து அவரைப் பற்றிய செய்தியினை தாய் சொல்லிவந்தார். பல முறை அவரது குரலைப் பதிவு செய்த நாடாக்களைக் கொண்டு வந்து தந்தார். அதில் ஒரு மணி நேரம் சானின் தந்தை அறிவுரைகளை வரிசையாகப் பொழிந்தார். எப்படி சான் தன்திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும், தவறுகளை எப்படித் தவிர்க்க வேண்டும், வெளி உலகம் சென்றால் என்ன ஆபத்துக்கள் காத்திருக்கின்றன என்பன போன்ற பல விசயங்களைப் பற்றி அதில்பேசியிருந்தார். ஆரம்ப நாள்களில் அதைக் கேட்க நேரம் ஒதுக்கிக் கேட்டான். பிறகு நேரம் கிடைக்காது போனது. நாடாக்களுடன் எப்போதும் கசங்கிய பணத்தாள்கள் இருக்கும். அதை மட்டும் எடுத்துக்கொண்டு நாடாக்களை எறிந்து விடுவான் சான்.

இப்படி இருந்து கொண்டிருந்த நாள்களில், ஒரு நாள் அவனது தாயார் தந்தையுடன் வருவதாகக் குரு சொன்னார். சானுக்கு ஆச்சரியம்.

கழகத்தில் இருப்பது எளிதானதல்ல என்று முதன்முதலில் தோன்றிய போது சான் தன் தந்தையை கோபித்தது என்னவோ உண்மை. அடிக்கடி அங்கு கூட்டி வந்து ஆசை காட்டி மோசம் செய்துவிட்டாரே என்று எண்ணுவான்.

ஆனால் வளர வளர அவரைப் புரிந்து கொள்ள ஆரம்பித்தான். தந்தையால் அவனை அந்த அளவிற்கு பயிற்சி கொடுத்து வளர்த்திருக்க முடிந்திருக்காது. அதனால் இந்தக் கழகமே அவனுக்கு ஏற்றஇடம் என்று தந்தை எண்ணியதில் தவறேதுமில்லை என்று தோன்றியது.

தந்தை வந்து தன்னை அழைத்துச் சென்ற விடுவாரோ? அந்த நரகத்திலிருந்து தப்ப கனவு கண்ட போதிலும், அங்கேயே இருந்து தான் விரும்பிய ஒபராவில் நடிக்க முடியாமல் போய் விடுமோ?

பெற்றோரைக் கண்டதில் மகிழ்ச்சி ஒரு புறம் இருந்தாலும், அந்த இடத்தை விட்டு செல்ல வேண்டுமோ என்ற அச்சமும் இருந்தது.

சார்லஸ் தன் மகனைக் கண்டதும் மகிழ்ச்சி மிகக் கொண்டார். தாயார் அவனிடம், “கொங் சாங் எப்படிப் படிக்கிறாய்?” என்று கேட்டார்.

தாய் முதன்முதலாக தன் முழுப்பெயரை உச்சரித்துக் கூப்பிட்டது கண்டு, சான் அதிர்ந்து நின்றிருந்த போது, குரு, “நன்றாகவேச் செய்கிறான். அவன் சிறந்த வித்தைக்காரனாக இல்லாவிட்டாலும்,சிறந்த பாடகனாக இல்லாவிட்டாலும், சண்டையில் சிறந்தவனாக இல்லாவிட்டாலும்..” என்று அடுக்கிக் கொண்டே போக, சான் பயந்து நின்றிருந்தான். அவரே தொடர்ந்து, “எல்லா விசயங்களையும்ஓரளவுக்குக் கற்றிருக்கிறான் என்றே சொல்லலாம். கிட்டத்தட்ட மேடையேறும் அளவிற்குத் தயாராகி விட்டான். உங்கள் மகனைக் கண்டு நிச்சயம் பெருமை கொள்ளலாம்” என்று சானுக்குச்சாதகமான விசயத்தைச் சொன்னதும் தான் அவனுக்கு உயிரே வந்தது.

குரு யாரையும் புகழ்ந்து அவன் பார்த்ததேயில்லை. தான் மேடையேறத் தகுதி பெற்றிருப்பதாக அவர் சொன்னதே சானுக்கு வரம் கிடைத்தது போல் தோன்றியது. கழகத்தில் இருந்த பலரும்ஒவ்வொரு விதத்தில் சிறந்தவர்களாக இருந்தனர். சான் எதிலுமே சிறந்து விளங்கவில்லை. ஆனால் அதற்காக சான் வருந்தவில்லை. ஏனென்றால் பாடுவதில் சிறப்பாக இருந்திருந்தால்,பாட்டிலேயே அதிக கவனம் செலுத்த வைத்திருப்பார்கள். சண்டையில் சிறப்பாக இருந்திருந்தால், அதில் கவனம் காட்டச் சொல்லியிருப்பார்கள். எதிலும் சிறப்பாக இல்லாத காரணத்தால்,எல்லாவற்றையும் கற்க முடிந்தது. அவற்றில் ஓரளவு தேர்ச்சியும் பெற முடிந்தது என்று நினைவு கூர்வார் சான்.

தந்தைக்கோ மகனின் வெற்றியைக் கண்டு ஆச்சரியம்.

“கொங் சாங்.. எங்களுக்கு பெருமையாக இருக்கிறது” என்று தாய் மகிழ்ச்சியுடன் சொன்னார்.

பெற்றோர் ஏன் வந்தனர்? பெற்றோருடன் செல்ல வேண்டுமோ? தன் கனவை விட்டுவிட்டுப் போக வேண்டுமா? அது தன்னால் முடியுமா?

இவை மட்டுமே அவன் மனத்தில் ஓடிய வண்ணம் இருந்தன.

சார்லஸ் சான் கழகத்தில் இருப்பவர்கள் அனைவருக்கும் அன்றைய மதிய உணவினைக் கொண்டு வந்திருந்தார். உணவு மேசையில் பரிமாறப்பட்டிருந்தது. சான் எப்போதும் போல் தன் இடத்திற்குச்சென்றான். சார்லஸ் அவனை அழைத்துச் சென்று குருவிற்கு அருகே தங்களுக்கு எதிராக அமர வைத்தார். முதல் பத்து நாள்கள் தேனிலவு காலத்தின் போது மட்டுமே கிடைத்த இடம் இப்போதுமறுபடியும்? என்ன நடக்கப்போகிறதோ?

பலவிதமான உணவுகளைக் கண்டதும் மாணவர்கள் ஆவலுடன் உண்ணக் காத்திருந்தனர். எல்லோரும் தயாரானதும், குரு, “இந்த இனிய உணவினை நமக்குத் தந்த சார்லஸ் தம்பதியினருக்கு நன்றி..”என்று கூறிவிட்டு, “நம்முடைய தம்பி யூன் லோவைப் பற்றிய சிறப்புச் செய்தியும் உண்டு” என்று கூறி, சார்லஸை பேசுமாறு சைகை காட்டினார்.

சார்லஸ் உடனே, “குருவே.. கழகத்தின் நல்ல மாணவர்களே.. இது வரை என் மகனை நல்ல முறையில் பார்த்துக் கொண்டதற்கு நன்றி” என்று ஆரம்பித்தார்.

சார்லஸ் தன் மனைவியின் தோளில் கை வைத்து, “நான் பல வருடங்களாக எண்ணியதைச் செய்யவே இப்போது வந்தேன்..” என்று நிறுத்தினார்.

சான் என்னவாயிருக்கும் என்று எண்ணினான். அம்மாவையும் தன்னையும் அழைத்துச் செல்வதன்றி வேறென்ன இருக்கப் போகிறது?

“என் மனைவி லீ லீயை என்னுடன் ஆஸ்திரேலியா அழைத்துச் செல்லப் போகிறேன்” என்று முடித்தார்.

குரு தலையை ஆட்டி ஆமோதித்தார். மாணவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். சானுக்கு மூச்சே நின்றுவிடும் போலிருந்தது.

தாய்.. தன் தாய் போகப் போகிறாள். தானும் போகப் போகிறோமா?

மாணவர்களுக்கு எதுவும் புரியவில்லை. அதற்காகக் கழகத்திற்கு என்ன வரப் போகிறது?

சார்லஸ் தன் பேச்சைத் தொடர்ந்தார்.

“அதனால்.. குரு யூ அவர்களே.. எங்களுக்கு ஒரு உதவி செய்ய வேண்டும். நானும் என் மனைவியும் இனி ஹாங்காங்கில் இருக்கப் போவதில்லை என்பதால், எங்களுடைய மகன் சானை, தங்கள்மகனாக தத்து எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்று கூறியதைக் கேட்டதும் சான் அதிர்ந்து போனான்.

மற்ற மாணவர்களும் அதிர்ச்சியுடன் குருவைப் பார்த்தனர். தத்து எடுப்பதா?

குரு முதலில் சார்லஸ் தம்பதியினரைப் பார்த்து விட்டு, சானைப் பார்த்தார். “யூன் லோ மிகச் சிறப்பான முறையில் நடந்து கொள்ளாவிட்டாலும், அவனிடம் திறமை மறைந்துள்ளது என்றுஎண்ணுகிறேன். அதனால் அவனை தத்து எடுத்துக் கொள்ள சம்மதிக்கிறேன்” என்றார்.

யூன் லுங், யூன் தாய் இருவரும் கோபத்துடன் சானைப் பார்த்தனர். சான் இனி குருவின் மகனா?

சானுக்கு முதலில் அதிர்ச்சி ஏற்பட்ட போதும், தான் அங்கிருந்து போகப் போவதில்லை என்பது ஆறுதலளித்தது.

ஆனால் தாய் தன்னை விட்டுப் போகிறாள். முதன் முறையாக தனியாக விடப்படப் போகிறான். வாரம் ஒரு முறை தாயின் வருகை இனி இருக்கப் போவதில்லை. அவர் வந்து சென்றது எவ்வளவுஆறுதலைக் கொடுத்தது என்பது அப்போது புரிந்தது.

பல எண்ணவோட்டத்துடன் அமர்ந்திருந்த சானைப் பார்த்து, “யூன் லோ.. இங்கே வா..” என்று கூறி, தன் அங்கியிலிருந்து ஒரு சிறு பெட்டியைத் திறந்து, உள்ளிருந்த தங்க ஆரம் ஒன்றை எடுத்துஅவனுக்குப் போட்டு விட்டார். “இன்றிலிருந்து நீ எனக்கு மகனைப் போல..” என்றார்.

பெற்றோர் அதைப் பெருமிதத்துடன் பார்த்தனர்.

பெற்றோரை விமான நிலையம் சென்று வழியனுப்பிவிட்டு கழகத்திற்குத் திரும்பினான். இனி தன் வாழ்க்கை கழகத்தோடு மட்டுமே. வாராவாரம் வரும் தாயை இனி எதிர்பார்க்க முடியாது.

சான் திரும்பி வந்ததுமே, குரு அவனிடம் வந்து “உன்னுடைய ஓட்டத்தில் இந்த ஆரத்தைத் தொலைத்து விடப் போகிறாய். நானே பத்திரமாக வைத்து இருக்கிறேன்” என்று அதை கழற்றி எடுத்துக்கொண்டார்.

குரு அதை மறுமுறை காணவே முடியாதபடி பத்திரப்படுத்தி விட்டார் என்று சான் நகைச்சுவையுடன் சொல்வார்.

கழகத்தில் காலடி வைத்த நேரத்திலிருந்து சான் முற்றிலும் வேறொரு வகையில் நடத்தப்பட்டான். குருவின் மகனாக இருப்பதால் எல்லாவிதச் சலுகையும் கிடைக்கும் என்று நம்பினான்.

இரவு உணவு உண்ணும் நேரம் எப்போதும் போல் சான் தன் இடத்தில் அமரச் சென்ற போது, குரு அவனிடம், “யூன் லோ.. எங்கே போகிறாய்? இனி மேல் உன் இடம் அங்கல்ல. என் அருகிலேஉட்காரலாம்” என்று தனக்கடுத்திருந்த இடத்தில் உட்காரச் சொன்னார்.

இந்தச் சலுகையே பெரிய சலுகை. இனிமேல் தனக்குப் பிடித்த கோழி மீன் துண்டுகளை முதலில் எடுத்துக் கொள்ளலாம். மிச்ச மீதிகளைக் கொரிக்க வேண்டியிருக்காது என்று மகிழ்ந்தான்.

இனி சான் கழகத்தின் இளவரசன்.

குருவின் தத்துப் பிள்ளையாய் இருந்தால் இன்னும் பல சலுகைகள் கிடைக்குமா? கடினமான வாழ்க்கை மாறுமா?

Series Navigation
author

சித்ரா சிவகுமார், ஹாங்காங்

Similar Posts

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *