வில்லியம் ஸ்லீமனும் இந்திய வழிப்பறிக் கொள்ளையரும் – 2

This entry is part 28 of 28 in the series 17 நவம்பர் 2013

William Sleeman1820-களில் ஸ்லீமன் தனியராக கொலைகாரத் தக்கர்களுக்கு எதிராகப் போராடிக் கொண்டிருந்தார். ஆனால் 1828-ஆம் வருடம் அவரது தனி வாழ்க்கையிலும், பொது வாழ்க்கையிலும் நிகழ்ந்த இரு நிகழ்வுகள் அதனை மாற்றியமைத்தது.

Group_of_Thugs

முதலாவதாக, 1828-ஆம் வருடம் வில்லியம கவண்டிஸ் பென்டிக் (William Cavendish Bentihck) பிரிட்டிஷ்-இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக நியமிக்கப்பட்டார். (இந்த பென்டிக் பிரபுவின் கீழ் முதன் முதலாக கிறிஸ்தவ மிஷனரிகள் இந்தியாவில் பணிபுரிவது சட்டபூர்வமாக்கப்பட்டது. அதுவரையில் இந்தியாவை ஆண்டு கொண்டிருந்த மற்ற பிரிட்டிஷ் காலனிய ஆட்சியாளர்கள் இந்தியாவின் கலாச்சார விவகாரங்களில் தலையிடுவதை மறுத்து அதுபோன்ற செயல்கள் நடைமுறைப்படுத்தப்படுவதை எதிர்த்து வந்தனர்). பென்டிக், தக்கர்களை ஒழிக்கும் ஸ்லீமனின் நடவடிக்கைகளுக்கு செவிசாய்த்து அதனை ஆதரிக்கவும் செய்தார்.

இரண்டாவது, ஸ்லீமன் 1829-ஆம் வருடம் தனது 41-ஆம் வயதில் Am Lie-De-Fontenne என்னும் ஃப்ரெஞ்சு மாதினைத் திருமணம் செய்து கொண்டது. ஸ்லீமன் அவரது மொரிசியஸ் பயணத்தின்போது Lie-De-Fontenne-இன் தகப்பனாரைச் சந்திக்கிறார். அவர் மூலமாக அவரது பெண்ணையும் திருமணம் செய்து கொள்கிறார். தம்பதிகள் இருவரும் காதல் ஒருமித்து இருந்ததாகத் தெரிகிறது. Lie-De-Fontenne, ஸ்லீமனின் தக்கர்களுக்கு எதிரான போராட்டத்தை ஆதரித்ததுடன், அவர் இது தொடர்பாக செல்லும் இடங்களுக்கெல்லாம் அவருடன் பயணம் செய்கிறார்.

இந்தியாவைப் பற்றி அதிகம் அறிந்திராத வெளி நாட்டினர் கூட அங்கிருக்கும் விஷப்பாம்புகளையும், ரத்தம் குடிக்கும் அட்டைப் பூச்சிகளையும், கொசுக்களையும், இடைவிடாத மழைப்பொழிவையும், வாரிச் சுழற்றும் தூசிப் புயல்களையும் இவையனைத்திற்கும் மேலாக அங்கு சுட்டெரிக்கும் வெய்யிலைக் குறித்தும் அறிந்து வைத்திருப்பார்கள். மிதமான தட்பவெப்பம் நிலவும் ஐரோப்பிய நாடுகளிலிருந்து வரும் வெளி நாட்டினர் இந்தியா வந்தடைந்ததும் நோய்களுக்கும், மனச் சோர்விற்கும் ஆளாவது சகஜமான ஒன்று. தனது இருபதாவது வயதில் இந்தியா வந்த ஸ்லீமன், நாற்பதாவது வயது முடியுமுன் மலேரியாவிலிருந்து அத்தனை இந்திய நோய்களுக்கும் ஆளாகியிருந்தார்.

இத்தனைக்கும் மத்தியில் 1830-ஆம் வருடம் ஸ்லீமன் தக்கர்களை ஒடுக்கும் மிகத் தீவிரமான பணியிலிருந்தார். ஏராளமான தக்கர்களைக் கைது செய்து, அவர்களின் செயல்முறைகள், நம்பிக்கைகள், அவர்களின் பரம்பரை குறித்தான தகவல்கள் என பலவற்றையும் சேகரித்து வைத்திருந்தார்.

தக்கர்களை ஒடுக்கும் ஸ்லீமனின் திட்டம் மிக எளிமையானது. தனக்களிக்கப்பட்ட அதிகாரத்தின் அடிப்படையில் அவரது சிப்பாய்களையும், போலிஸ்காரர்களையும் தக்கர்களைப் பிடித்துவர அனுப்பினார். கைது செய்யப்பட்டவர்கள் Saugor என்ற இடத்தில் அமைந்த சிறைச்சாலைக்குக் கொண்டுவரப்பட்டார்கள். அவ்வாறு பிடிக்கப்பட்ட பல தக்கர்களை “அப்ரூவர்களாக” பயன் படுத்தினார் ஸ்லீமன். அவர்களைக் கொண்டு பிற தக்கர்களை அடையாளம் கண்டுகொண்டது மட்டுமல்லாமல், அவர்களால் கொன்று புதைக்கப்பட்டவர்களின் உடல்களைக் கண்டுபிடிக்கவும் உபயோகப்படுத்தினார். அவ்வாறு ஒத்துழைக்காதவர்கள் உடனடியாக கொல்லப்படுவது உறுதி என்பதால் பெரும்பாலான தக்கர்களும் அவர்களது தலைவர்களும் தங்களின் சக தக்கர்களைக் காட்டிக் கொடுக்கத் தயங்கவில்லை.

மிக மெதுவாகத் துவங்கிய இந்த கைது செய்யும் படலம் விரைவில் வேகம் பிடித்தது. தக்கர்களின் தலைமுறை தலைமுறையிலான தகவல்களும், அவர்களது பெயர்களும் மற்ற விவரங்களும் ஸ்லீமனை நோக்கி வர ஆரம்பித்தன. அவரது இந்தப் பணி விரைவில் மொத்த இந்தியாவிலும் நடக்க ஆரம்பித்தது. தக்கர்களின் மொத்த நெட்வொர்க்கும் சிறிது சிறிதாக உடைக்கப்பட்டு அதன் உறுப்பினர்கள் சிறையிலடைக்கப்பட்டனர். தென்னிந்தியக் காடுகளிலிருந்து வடக்கே இமயமலை வரையில் தக்கர்கள் பிடிக்கப்பட்டனர்.

ஒரு நாள் ஸ்லீமனால் கைது செய்யப்பட்ட ஒரு தக்கரின் மூலம், அவர்களின் இளவரசன் ஒருவனைப் பற்றி அறிய நேருகிறது. நரசிங்காப்பூருக்கு வடகிழக்கே அமைந்த சுதந்திர நாடான குவாலியரைச் சேர்ந்த Feringeea என்பவனே அவன் எனத் தெரிய வருகிறது. அவனை உடனடியாகப் பிடித்து வரும்படி தனது சிப்பாய்களுக்குக் கட்டளையிடுகிறார் ஸ்லீமன். இதனை எப்படியோ அறிந்து கொண்ட Feringeea அந்தச் சிப்பாய்கள் வந்து சேருவதற்குச் சில மணி நேரங்களுக்கு முன் அங்கிருந்து தப்பியோடுகிறான். எரிச்சலடைந்த சிப்பாய்கள் அவனது தாய், மனைவி மற்றும் குழந்தையைக் கைது செய்கின்றனர். வேறு வழியின்றி Feringeea அவர்களிடன் சரணடைகிறான்.

தக்கர்களின் அதிகாரச் சங்கிலியின் ஒரு முக்கியமான கண்ணியைக் கைது செய்தவுடன் ஸ்லீமனின் நீண்டகாலப் போராட்டம் வெற்றியை நோக்கித் திரும்ப ஆரம்பிக்கிறது. Feringeea உடனடியாக அப்ரூவராக மாறி ஸ்லீமனுடன் முழுமையாக ஒத்துழைக்க ஆரம்பிக்கிறான்.

Feringeea ஆஜானுபாகுவான, ராஜ களை பொருந்திய, வலிமையுள்ளவனாகவும் தனது நைச்சியப் பேச்சினால் எவரையும் மயக்கும் திறனையும் கொண்டவனாக இருந்தான். ஸ்லீமனின் நம்பிக்கையைப் பெறுவதற்காக அவன் அவரைத் தான் கொன்று புதைத்த இடங்களைக் காட்டுவதற்காக செலாஹ்தா கிரமத்திற்கு வெளியே அழைத்துச் செல்கிறான் (கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்ட இடம்). அவனுடன் கைது செய்யப்பட்ட மேலும் பல தக்கர்களும் செல்கிறார்கள். Feringeea ஸ்லீமனின் கேள்விகள் அத்தனைக்கும் ஒளிவு மறைவின்றி பதில்களைச் சொல்கிறான்.

ஸ்லீமன் எடுத்த இந்தப் பேட்டிகளின் நகல்கள் மற்றும் அவரது சொந்தக் குறிப்புகள் போன்றவை இந்த ரகசிய கும்பலின் மறக்கவியலாத, அதிர்ச்சியூட்டும், குரூரமான, மானுட அறமற்ற ஒரு வாழ்க்கை முறை குறித்தான தகவல்களை நமக்கு அளிக்கின்றன.

தக்கர்கள் தங்களுக்குள் பேசிக் கொள்ள “Ramasee” என்னும் ஒரு ரகசிய மொழியை உபயோகப்படுத்தினார்கள். சங்கேத வார்த்தைகள் நிரம்பிய அந்த மொழியை அவர்கள் தங்களுடன் பயணிக்கும் சக பயணிகளுக்கு முன்பாகவும் உபயோகிக்கத் தயங்கியதில்லை. சிறிது ஹிந்தி மொழி கலந்த அந்த ரகசிய மொழியில் காணப்படும் வார்த்தைகள் வேறெந்த மொழியிலும் காணக்கிடக்காதவை.

உதாரணமாக, தங்களின் கொலை முயற்சியிலிருந்து தப்பிய ஒருவனை adhoreea என்றார்கள். சுருக்குக் கயிறு போடுபவனை bhurtote என்றழைத்தார்கள். இந்தச் சுருக்குக் கயிறு போடுபவன் மிகுந்த அனுபவசாலியாக இருக்கவேண்டுமென்பது மிக முக்கியம். பல கொலைகளில் பங்கெடுத்த பின்னரே அவர்கள் சுருக்குக் கயிறிட்டுக் கொல்வதற்கான அத்தனை திறமைகளையும் பெறுவார்கள் என்பதால் தக்கர்கள் மத்தியில் ஒரு bhurtote மிக முக்கியமான இடத்தை வகிக்கிறான்.

இதுபோல dhurdalna என்றால் “சுருக்குப் போட” என்று அர்த்தம். தக்கர்களால் எளிதில் கொல்ல முடியாத பல பயணிகள் அடங்கிய ஒரு கூட்டத்தை tonkal என்றழைத்தார்கள். Thibank என்றால் தங்களுடன் வரும் அப்பாவி சக பிரயாணியை ஏதாவது ஒரு காரணம் சொல்லி தரையில் உட்கார வைப்பது. உட்கார்ந்திருப்பவனைக் கொலை செய்வது எளிது என்கிற காரணத்தால்.

*

தக்கர்கள் இந்திய சமுதாயத்தின் தடைகளைக் கடந்து எல்லா சாதி, மதங்களிலும் இரண்டறக் கலந்திருந்தார்கள்.

ஒரு முஸ்லிம் தக்கரான சாஹிப்கான் என்பவனுக்கும், ஸ்லீமனுக்கும் நடந்த உரையாடல் இதற்கு ஒரு உதாரணம்.

ஸ்லீமன் : நீ ஒரு முஸல்மானா?

சாஹிப்கான் : ஆம்; தென்னிந்தியாவின் அனேக தக்கர்கள் முஸல்மான்களே.

“ஆக நீ கல்யாணம் செய்து கொள்வது, பிரார்த்தனை செய்வது, சாப்பிடுவது, குடிப்பது என எல்லாவற்றையும் குரான் சொல்வதுபடியே செய்கிறாய். உனது சுவனம் முகமது சொன்ன சுவனம்தானா?

“ஆம்; எல்லாமே….எல்லாமே…”

“பவானி (காளி) குரானில் எங்காவது சொல்லப்பட்டிருக்கிறாளா?”

“எங்குமில்லை”

“அப்படியானால் உனது சுவர்க்கத்தில் பவானிக்கு என்ன வேலை?”

“ஒன்றுமேயில்லை”

“உனது எதிர்காலத்தில் பவானிக்கு எந்தப் பங்குமில்லை. அப்படித்தானே?”

“ஆம்”

“உனது இறைதூதர் முகமது இந்த மாதிரியான குற்றங்களை ஆதரிக்கிறாரா? பணத்திற்காக ஒன்றுமறியா அப்பாவிகளை இப்படி ஈவு இரக்கமில்லாமல் கொல்வது பற்றி….”

“இல்லை”

“இம்மாதிரியான செயல்கள் செய்தால் அடுத்த உலகில் தண்டிக்கப்படுவார்கள் என்று அவர் சொல்லியிருக்கிறாரா?”

“ஆம்”

“அது உண்மையென்றால் உனக்கு அடுத்த உலகில் என்ன தண்டனை கிடைக்குமென்று நினைக்கிறாய்?”

“அப்படியெல்லாம் ஒரு போதும் நடக்காது…நல்ல சகுனம் கூடி வந்தால் மட்டுமே நாங்கள் கொலை செய்கிறோம்….இல்லாவிட்டால் செய்வதில்லை…அந்த நேரத்தை தெய்வம்தான் தீர்மானிக்கிறது….”

“எந்த தெய்வம்?”

“பவானி”

“ஆனால் பவானி அடுத்த உலகில் உனது நலத்திற்கோ அல்லது ஆன்மாவிற்கோ எதுவும் செய்ய மாட்டாள் என்றல்லவா சொன்னாய்…..”

“இந்த உலகில் எங்கள் வாழ்க்கையை பவானி மட்டுமே தீர்மானிக்கிறாள். நாங்கள் அவள் சொல்வதை மட்டுமே செய்கிறோம்….எனவே கடவுள் எங்களை அடுத்த உலகில் தண்டிக்க மாட்டார் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்”

*

மேகண்ட முஸ்லிம் தக்கரான சாஹிப்கான் சொல்லும் சகுனம் என்பது மிகுந்த பயபக்தியுடனும், மூட நம்பிக்கைகளுடனும் உக்கிர மாகாளிக்குச் செய்யப்படும் பூசைகள் பற்றியதாகும். தக்கர்கள் சகுனம் குறித்து மிக அதிக நம்பிக்கைகள் கொண்டவர்கள். கொள்ளைச் செயல்களுக்குச் செல்லுமுன் சகுனங்களையும், குறிகளையும் மிகக் கவனத்துடன் பரிசீலித்துச் செல்லும் வழக்கமுடையவர்கள். கொக்கு கத்துவது நல்ல சகுனமாகவும், ஆந்தையின் அகவல் கெட்ட சகுனமாகவும் புரிந்து கொள்ளப்படும். நரி இடப்பக்கமிருந்து வலப்பக்கம் செல்வது நல்ல நேரம். அதுவே வலமிருந்து இடப்பக்கம் செல்வது கெட்ட நேரம். ஊளையிடும் ஓநாய் ஒரு துர்சகுனம்….போன்றவை.

கொள்ளையடிக்கச் செல்லும் முதல் வாரத்தில் தக்கர்கள் குளிக்கவோ, முகச் சவரம் செய்யவோ, பல் விளக்கவோ, உடலுறவு கொள்வதற்கோ, துணிகளைத் துவைப்பதற்கோ அல்லது இறைச்சியை உண்பதற்கோ (மீனைத் தவிர) அல்லது உணவில் நெய் ஊற்றிச் சாப்பிடுவதற்கோ அவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. அத்துடன் சகுனங்களையும், சகுனத்தடைகளையும் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டிருப்பார்கள். தங்களுக்கு எதிரான ஒரு சகுனமோ அல்லது குறியீடோ தென்பட்டால் உடனடியாக அந்த இடத்திலிருந்து விலகிவிடுவது தக்கர்களின் வழக்கம்.

பழமையிலும் மூட நம்பிக்கைகளிலும் ஊறிப் போயிருக்கும் தக்கர்களை இயக்கும் சக்தி அவர்கள் கொள்ளையினால் பெறும் செல்வமே என்பதில் சந்தேகமில்லை. பெரும்பாலான சமயங்களில் வியாபார நகரங்களுக்கு அருகாமையில் முகாமிட்டு, வியாபாரிகளால் ஒரு நகரத்திலிருந்து இன்னொரு நகரத்திற்கு பெரும் கூட்டமாக எடுத்துச் செல்லப்படும் தங்கம், வெள்ளி மற்றும் ஆபரணங்களைக் குறிவைத்துக் கோள்ளையடித்தார்கள். இவ்வாறு பெற்ற செல்வத்தை ஊதரித்தனமான வழிகளில் செலவு செய்யாமல் சேகரிக்கும் வழக்கமுடையவர்களாக இருந்ததால் அவர்களின் செல்வம் பரம்பரைகளைக் கடந்தும் பெருகி வரலாயிற்று.

தக்கர்களில் ஒரு பகுதியினர் தாங்கள் சார்ந்த சமுதாயத்தில் மிகப் பெரும் பதவி வகிப்பவர்களாகவும், அரசாங்க ஊழியர்களாகவும் பிற மரியாதைக்குரிய பதவிகளிலும் இருந்து வந்தார்கள். பிற சாதாரண மக்களைப் போலவே தங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் அன்பும், நட்பும் பாராட்டுபவர்களாக, அவர்களிடம் தங்களின் உண்மையான சொருபத்தைக் காட்டாதவர்களாக இருந்திருக்கிறார்கள்.

முன்பே கூறியபடி தக்கர்களின் கொலைத் தொழில் பரம்பரை பரம்பரையாக நடந்து வந்த ஒன்று. அப்பரம்பரையில் பிறந்த சிறுவர்களுக்கு அவர்களின் தகப்பன்மார்கள் சிறிது சிறிதாக களவுத் தொழில் ரகசியங்களைக் கற்பித்தார்கள். சில நேரங்களில் அந்தச் சிறுவர்களுக்கும் எதுவும் தெரிவிக்காமல் அவர்களை அழைத்துச் சென்று அவர்களுக்குத் தொழிலை அறிமுகம் செய்து வைப்பதும் உண்டு. இப்படியாக அந்தச் சிறுவர்கள் களவுத் தொழிலில் ஞானஸ்நானம் பெற்றார்கள். பின்னர் ஏதோவொரு சந்தர்ப்பத்தில் தக்கர்கள் யாரையேனும் சுருக்கிட்டுக் கொல்லுகையில் அந்தச் சிறுவர்களை அழைத்துச் சென்று அவர்களை நேரடியாகப் பார்க்க வைப்பார்கள். அதன்பின்னர் அந்தக் குற்றங்களில் அவர்கள் சிறிதளவு பங்கெடுக்க அனுமதிக்கப்படுவார்கள். இப்படியே மெது மெதுவாக அவர்கள் bhurtote (சுருக்கிட்டுக் கொல்பவன்) ஆவதற்கு பயிற்சியளிப்பார்கள்.

எல்லாத் தக்கர்களும் பரம்பரைத் தக்கர்கள் அல்ல. சில சமயங்களில் வெளியாரையும் அவர்கள் சேர்த்துக் கொள்வதுண்டு, அவ்வாறு அனுமதிக்கப்படுபவர்கள் தக்கர்களின் சட்ட திட்டங்களை நன்றாக உணர்ந்தவர்களாக அவர்களின் செயல்பாடுகள் புரிந்தவர்களாக இருக்கவேண்டும் என்பது விதி. இவ்வாறு சேர்த்துக் கொள்ளப்படுவர்கள் பெரும்பாலும் அந்தந்த பகுதிகளில் இருக்கும் செல்வாக்குள்ள அரசாங்க உயர்பதவி வகிப்பவர்களின் ஆசியுடையவர்களாக இருப்பார்கள்.

*

ஸ்லீமனால் கைது செய்யப்பட்ட தக்கர்கள் எந்த விதமான குற்ற உணர்ச்சியுமின்றி அவர்கள் செய்த படுகொலைகளைப் பற்றி அவரிடம் வெளிப்படையாகப் பேசினார்கள். முதுகுத் தண்டைச் சில்லிடச் செய்யும் அந்த வன்செயல்கள் அவரகளால் உற்சாகத்துடன் விவரிக்கப்பட்டன.

ஏறக்குறைய நாற்பது வருடங்களுக்கும் மேலாக இந்தக் கொடுஞ் செயல்களைச் செய்துவந்த புஹ்ரம் (Buhram) என்பவனைப் பேட்டி காண்கிறார் ஸ்லீமன்,

“தொள்ளாயிரத்து முப்பத்து ஒன்று கொலைகளா? என்னால் நம்ப முடியவில்லை. யாரும் இதுபோன்றதொரு கொடுஞ்செயலை இத்தனை காலம் செய்திருக்க முடியாது” என்கிறார் ஸ்லீமன்.

“சாஹிப்… நான் செய்த கொலைகள் இதனைவிடவும் பல மடங்கு இருக்கும்” என பதிலளிக்கிறான் பஹ்ரம். “இதில் என்னை முழுமையாக ஆழ்த்திக் கொண்டு செய்ததால் பல கொலைகளை என்னால் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. ஒரு கட்டத்தில் எண்ணுவதை நிறுத்திவிட்டேன்”

“உன்னை தங்களின் நண்பனாக எண்ணி, தங்களின் பயணத்திற்குப் பாதுகாப்பாக இருப்பாய் என்று நினைத்துத் தங்களின் கூட்டத்தில் சேர்த்துக் கொண்ட அப்பாவி வழிப்போக்கர்களைக் கொன்றது குறித்து உனக்குக் குற்றவுணர்ச்சி எதுவும் இருக்கிறதா?”

“நிச்சயமாகக் கிடையாது சாஹிப்…நீங்கள் ஒரு பெரிய ஷிகாரியாக (வேட்டைக்காரன்) இருக்கலாம். விலங்குகளை அவை அறியாமல் பின் தொடர்ந்து, மறைந்திருந்து, எதிர்பாராத சமயத்தில் கொல்லும்போது உங்களுக்கு ஒருவிதமான சந்தோஷம் கிடைக்கும் இல்லையா? அந்த விலங்கு இறந்துபோய் உங்களின் காலடியில் கிடப்பதைக் காணும்போது கிடைக்கும் மகிழ்ச்சிக்கு அளவேது? அதுபோல தக்கர்களான எங்களுக்கும் இது போன்ற வேட்டையில் சந்தோஷம் கிடைக்கிறது. அவ்வளவுதான்…..வேட்டைக்காரனான உங்களுக்கு அறிவற்ற விலங்குகளை ஏமாற்றிக் கொல்ல வேண்டியிருக்கிறது….ஆனால் சந்தேகமும், புத்திசாலித்தனமும் நிரம்பிய மனிதர்களை, சில சமயம் ஆயுதம் தரித்தவர்களையும் ஏமாற்றிக் கொல்கிறோம்…..நினைத்துப் பாருங்கள்…இது போன்ற சந்தேகப்பிராணிகளுடனும், ஆயுதம் தாங்கியவர்களுடனும் நட்பு கொண்டு அவர்களை ஏமாற்றிக் கடைசியில் இதோ எனது கையில் இருக்கும் இந்த மென்மையான ருமாலைக் கொண்டு அவர்களின் கழுத்தை இறுக்கி வேட்டையை முடிக்கும் போது கிடைக்கும் மகிழ்ச்சியை உங்களால் கற்பனை செய்து கூடப் பார்க்க முடியாது….” என்கிறான் பஹ்ரம்.

Saugor நகரக் கோர்ட்டில் இதுபோன்ற நூற்றுக் கணக்கான கேஸ்களை விசாரித்துத் தண்டனை வழங்கிய ஜட்ஜ் கர்வன் ஸ்மித் (Curwen Smith), கவர்னர் ஜெனரல் வில்லியம் பெண்டிக்கிற்கு எழுதிய கடிதமொன்றில் இவ்வாறு குறிப்பிடுகிறார்.

“என்னுடைய இருபது வருட நீதித் துறை அனுபவத்தில் இது போன்றதொரு கொடுஞ்செயல்களை எதிர் கொண்டதே இல்லை. சிறிதும் இரக்கமேயில்லாத, மனதை உருகவைக்கும் படுகொலைகளையும், துயரத்தையும், மனிதர்கள் சக மனிதர்களுக்குச் செய்யக்கூடாத காட்டுமிராண்டித்தனமான இது போன்ற செயல்களையும் என்னால் சிறிதும் ஏற்றுக் கொள்ளவே இயலவில்லை”

*

ஸ்லீமன் அவரது தக்கர்களை தக்கர்களை ஒழிக்கும் செயல்களைச் செய்து முடிக்க முடியாத வகையில் உருவான தடைக்கற்கள், பிரிட்டிஷ்-இந்தியப் பகுதிகளின் ஆளுமைக்கு உட்படாத சுதந்திர இந்தியப் பகுதிகளில் இருந்தே வந்தது. அந்தப் பகுதியில் இருந்த அரசர்களும், அரசாங்க ஊழியர்களும் தக்கர்களைப் பாதுகாப்பதை ஒரு கடமையாகச் செய்து வந்தார்கள். பெரும்பாலான நவாப்கள் தக்கர்களைப் பாதுகாத்ததின் மூலம் பெரும் செல்வம் ஈட்டியதாகத் தெரிகிறது. காலம் காலமாக லஞ்ச லாவண்யங்களில் ஊறித் திளைத்த இந்தியாவில் இன்றும் பல தக்கர்கள் அரசியல்வாதிகளால் ஆதரிக்கப்பட்டு, ஊக்குவிக்கப்படுவதின் மூலம் பெருமளவு ஆதாயம் அடைபவர்களாக இருக்கிறார்கள்.

இதன் காரணமாக, பல சந்தர்ப்பங்களில் ஸ்லீமன் இவர்களைப் போன்ற அரசர்கள், நவாப்கள் ஆகியோருக்கு எதிராக நேரடியான மோதல்களில் ஈடுபட்டிருக்கிறார். 1831-ஆம் வருடம் ஜான்ஸி அரசன், ஸ்லீமனின் வேண்டுகோளை ஏற்று தக்கர்களை ஒப்படைக்க மறுத்தான். மலையின் மீதமைந்த ஜான்ஸி கோட்டை நான்கு புறமும் அகழிகளால் சூழப்பட்டு, ஆயிரத்திற்கும் மேற்பட்ட போர்வீரர்களுடன் இரண்டு பெரும் பீரங்கிகளை உடையாதவும் இருந்தது. எனவே வெள்ளையர்களால் தன்னை எதுவும் செய்ய இயலாது என்று எண்ணிய ஜான்ஸி அரசன், ஸ்லீமனின் கோரிக்கையை நிராகரித்ததில் ஆச்சரியமில்லை.

ஸ்லீமன் பிரிட்டிஷ் படைகளை உதவிக்கழைத்து கோட்டையைத் தாக்கினார். அப்பொது நிகழ்ந்த குழப்பத்திலும், புகையிலும் தக்கர்கள் தப்பிச் சென்றார்கள். இருப்பினும் தக்கர்களுக்குப் பாதுகாப்பளித்த ஜான்ஸி கோட்டை தரைமட்டமாக்கப்பட்டது.

இந்த அரசர்கள், நவாப்புகளை விடவும் தக்கர்களுக்குப் பெரும் ஆதரளவளித்து அவர்களுக்குத் தேவையான பண உதவி செய்து வந்தவர்கள் அக்காலத்தில் வங்கிகளை நடத்திவந்த பெரும் செல்வந்தர்களே என்னும் உண்மையைக் கண்டுபிடிக்கிறார் ஸ்லீமன்.

உதாரணமாக தன்ராஜ் சேட் என்ற பெரும் வங்கிச் சொந்தக்காரரிடமிருந்து (அந்தக் கால வழக்கப்படி, லேவாதேவி செய்பவர் அல்லது வட்டிக்கடை நடத்துபவர் என்று சொல்லலாம்) தக்கர்கள் பெருமளவு தங்கம், வெள்ளி மற்றும் ஆபரணங்களைக் கொள்ளையடித்துச் சென்றனர். தன்ராஜ் சேட் அரசு அதிகாரிகளின் உதவியுடன் அந்தத் தக்கர்களை அடையாளம் கண்டு, அவர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட தனது பொருட்களைத் திரும்பப் பெறுகிறார். அதனை ஆராயும் ஸ்லீமன், இந்த தன்ராஜ் சேட் என்பவர் தக்கர்களுடன் நெருக்கமான உறவு கொண்டிருக்கிறார் என்பதனையும், பண உதவிகள் செய்பவர் என்பதனையும், தக்கர்களின் கொள்ளைப் பொருட்களை வாங்கி விற்பவர் என்பதனையும் கண்டுபிடிக்கிறார்.

ஸ்லீமன் இது குறித்து இலண்டனில் இருக்கும் உயரதிகாரிகளுக்குக் கடிதம் எழுதுகிறார்,

“இந்தியாவின் கொலைகாரத் திருடர்களான தக்கர்களை முழுமையாக ஒழிக்க வேண்டுமென்றால், அமராவதியைச் சேர்ந்த தன்ராஜ் சேட் மற்றும் அவரின் எண்ணிலடங்கா ஏஜெண்டுகளுக்கும் தக்கர்களுடன் இருக்கும் தொடர்பு துண்டிக்கப்பட வேண்டும். தக்கர்களின் கொள்ளையில் இந்த தன்ராஜ் சேட் என்பவர் அளவில்லாத ஆதாயம் அடந்திருக்கிறார். தக்கர்கள் கைது செய்யப்படும்போது அவர்களை விடுவிப்பதற்கு அரசாங்க அதிகாரிகளுக்கு கையூட்டு அளிப்பதுடன், அந்தப் பகுதியில் இருக்கும் அரசியல் தலைவர்களையும் தூண்டிவிட்டு, அவர்களை விடுதலை செய்வதற்குக் குரல் கொடுக்க வற்புறுத்துகிறார். அவ்வாறு விடுதலையாகும் தக்கர்களுக்கு கொள்ளைகள் நடத்தத் தூண்டும் விதமாக முன் பணம் கொடுத்தும் உதவுகிறார். பிரிட்டிஷ் அரசாங்கம் இதனை உடனடியாகத் தடுத்து நிறுத்தாவிடில், லாகூரிலிருந்து கன்னியாகுமரி வரை நடந்து கொண்டிருக்கும் கொலை, கொள்ளைகளுக்கு இந்த அரசாங்கம் பொறுப்பேற்க நேரிடும் என்று கடவுள் மீது ஆணையிட்டுக் கூறுகிறேன்”

அதிர்ஷ்டவசமாக தன்ராஜ் சேட்டிற்கும், தக்கர்களுக்கும் பாலமாகச் செயல்பட்ட பியாரி லால் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்படுகிறார். தன் ராஜ் சேட்டிற்கும், தக்கர்களுக்குமான உறவுப்பாலம் இத்துடன் முடிவிற்கு வருகிறது.

*

1830-களைத் தொடர்ந்த பத்தாண்டுகளில், இந்தியச் சாலைகளை ஆக்கிரமித்து, சாலைப் பயணிகளை அச்சுறுத்திக் கொண்டிருந்த பல ஆயிரக்கணக்கான தக்கர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களின் குழுக்கள் கலைக்கப்பட்டு, சாலைகளின் பாதுகாப்பு மெல்ல மெல்ல சாதாரண நிலையை அடைந்து கொண்டிருந்தது. ஸ்லீமன் தொடர்ந்து தக்கர்களை வேட்டையாடிக்கொண்டிருந்தார். 1836-ஆம் ஆண்டின் இறுதிக்குள் ஏறக்குறைய 3,266 தக்கர்கள் கைது செய்யப்பட்டு நீதி மன்றத்தின் முன் நிறுத்தப்பட்டனர். மேலும் நூற்றுக் கணக்கானவர்கள் சிறையிலடைக்கப்பட்டனர். நீதி மன்றத்தால் தண்டனையளிக்கப்பட்ட பல கொடூரமான தக்கர்கள் கொல்லப்பட்டனர். ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுச் சிறை சென்றவர்கள் மேலும் பலர்.

அதே சமயம் இந்தியாவின் எல்லாத் தக்கர்களும் ஸ்லீமனால் பிடிக்கப்பட்டனர் என்று சொல்வதற்கில்லை. எனினும், ஸ்லீமனின் நடவடிக்கைகள் ஏற்படுத்திய அச்சம் காரணமாக பல தக்கர்கள் இந்தத் தொழிலை விட்டு வெளியேறினர். இத்தனை காலமாக தங்களைக் காத்துவந்த காளி தங்களைக் கை விட்டுவிட்டாள் என்ற அச்சத்தில் மேலும் பல தக்கர்கள் ஸ்லீமனிடம் சரணடைந்தனர்.

அதே சமயம் தக்கர்களின் மற்றொரு இனமான “ஆற்றுத் தக்கர்”களை அடக்குவது ஸ்லீமனுக்குப் பெரும் சவாலாக இருந்தது. நாட்டுத் தக்கர்களை விடவும் பல மடங்கு வன்முறை குணமும், இரக்கமற்ற நடவடிக்கைகளும் கொண்ட ஆற்றுத் தக்கர்கள், கங்கை ஆற்றில் படகுகளில் பயணம் செய்பவர்களைக் குறிவைத்துக் கொள்ளையடித்துக் கொண்டிருந்தனர். இந்த ஆற்றுத் தக்கர்கள் 12-ஆம் நூற்றாண்டில் டில்லி சுல்தான் ஜலாலுதீன் கில்ஜியால் நாடுகடத்தப்பட்டவர்களின் வாரிசுகளாக இருக்கும் வாய்ப்புள்ளது.

தரையில் வாழும் தக்கர்கள் வழிப்போக்கர்களின் பின்புறம் நின்று அவர்கள் அறியாதவகையில் கழுத்தில் சுருக்கிட்டுக் கொல்லும் வழக்கமுடையவர்கள். ஆனால் ஆற்றுத் தக்கர்களோ, கொல்லப்பட வேண்டியவனின் முன்புறமிருந்து கயிற்றைக் கழுத்திலிட்டுச் சுருக்கிக் கொன்றதுடன், அவர்களின் ஆணுறுப்புகளைச் சிதைத்துப் பின் உடலை கங்கையில் தள்ளினார்கள். இப்படியாக அவர்களின் குற்றங்களுக்கான தடையங்கள் மறைக்கப்பட்டன. ஆற்றுத் தக்கர்கள் பெண்களைக் கொல்லுவதைத் தவிர்த்தார்கள். அவர்களைக் காளியின் உருவங்களாகப் பார்த்ததுடன், அவர்களுடைய சட்ட, திட்டங்களை மிகத் தீவிரத்துடன் பின்பற்றினார்கள். தரையில் வாழும் தக்கர்களைப் போலல்லாமல், ஆற்றுத் தக்கர்கள் தங்கள் சகாக்களை எளிதில் காட்டிக் கொடுத்துவிடாததால் அவர்களை அடக்குவது ஸ்லீமனுக்குப் பெரும் சவாலாகவே இருந்தது.

இருப்பினும் இந்தத் தடைகளையெல்லாம் தாண்டி ஸ்லீமனும், அவரது சகாக்களும் 1840-41-ஆம் ஆண்டுகளில், ஆற்றுத் தக்கர்களின் நெட்வொர்க்கை உடைத்து அவர்களின் கொடுஞ்ச்செயல்களை முடிவுக்குக் கொண்டு வந்தார்கள். இது குறித்தான விபரங்கள், இந்தியாவின் பல பகுதிகளில் பணியாற்றிய பல மாஜிஸ்ட்ரேட்டுகள் எழுதிய கடிதங்களின் மூலம் தெளிவாகிறது.

1841-ஆம் வருடம், முதல் முறையாக இந்தியாவின் எந்தப் பகுதியிலுக் கழுத்து இறுக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்ட பிணங்கள் எவையும் கண்டுபிடிக்கப்படவில்லை. தக்கர்கள் வெற்றிகரமாக ஒழிக்கப்பட்டு இந்திய வரலாற்றிலிருந்து காணாமல் போனார்கள்.

*

1840-ஆம் வருடத்தைத் தொடர்ந்த பல வருடங்களுக்கு ஸ்லீமன் இந்தியாவின் பிற பகுதிகளிலிருந்த கள்ளர்களையும், கொள்ளைக் கூட்டத்தினரையும் ஒழிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார். அவரது நாற்பது வருட விடா முயற்சியின் காரணமாக, இந்திய சாலைப்பயணிகளை அச்சுறுத்திக் கொண்டிருந்த தக்கர்கள் ஒழிக்கப்பட்டு, பல்லாயிரக்கணக்கான உயிர்கள் காப்பற்றப்படுகின்றன.

உடல் நிலை காரணமாக ஸ்லீமன் 1856-ஆம் வருடம் தனது மனைவியுடன் இங்கிலாந்து திரும்ப முடிவெடுக்கிறார். அவரது கப்பல் புறப்பட்ட பத்தாவது நாளில், இலங்கைக்கு அருகே ஸ்லீமன் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைகிறார். அவரது உடலில் கடலில் புதைக்கப்படுகிறது.

இவ்வாறாக, தனது வாழ்வின் பெரும்பகுதியை இந்தியப் பயணிகளின் பாதுகாப்பிற்காகச் செலவிட்ட ஒரு மாமனிதரின் வாழ்க்கை முடிவிற்கு வருகிறது.

Series Navigation
narendran

பி எஸ் நரேந்திரன்

Similar Posts

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *