கரிக்கட்டை

This entry is part 19 of 24 in the series 24 நவம்பர் 2013

 

’ மர கரி, கருமையான, நுண் துளைகள் கொண்ட, எளிதில் உடையக்கூடிய தன்மை கொண்ட ஒரு பொருள். இது நீரில் மிதக்கும், வெப்பம் மற்றும் மின்சாரத்தின் மோசமான கடத்தி.

நுண்துகள்களுடைய இந்த மர கரி அதன் நுண்ணிய மேற்பரப்பில் திரவங்கள் மற்றும் வாயுக்களை உறிஞ்சிக் கொள்ள முடியும்’

 

சரிகா, பள்ளியில் மாணவர்களுக்கு பாடம் எடுத்துவிட்டு வீட்டிற்கு பொடி நடையாக நடந்து வந்துகொண்டிருந்தாள். மனசெல்லாம் ஒரே பாரம் அழுத்தியபடி இருந்தது. ‘கரிக்கட்டை’ என்ற வார்த்தையை எத்தனை முறை, எத்தனை விதமான சூழ்நிலையில் கேட்டிருப்போம் என்று எண்ணிப்பார்க்கையில் அவளையறியாமல் உடல் ஒரு முறை குலுங்கி அடங்கியது. தெருவில் வண்டிகளின் ஓசையெல்லாம் நாராசமாக ஒலித்தது.

 

“சனியனே, இந்த கரிக்கட்டை மூஞ்சியை வச்சுக்கிட்டு இன்னும் எத்தனை நாளைக்குத்தான் என் உயிரை வாங்குவியோ..  வரவனெல்லாம் மூஞ்சியைப் பார்த்தவுடனே, ஒன்னும் சொல்லாம திருப்பிக்கிட்டு போறானுவ.. எதையாச்சும் கிரீமைப் பூசி கொஞ்சம் பளபளப்பானாச்சும் காட்டுடின்னு சொன்னா பாவி மக, அதையும் கேக்க மாட்றா.. கருகிப்போன எண்ணெய்ச் சட்டி கணக்கா மூஞ்சியை வச்சுக்கிட்டா எவன் திரும்பிப் பார்ப்பான்.. எப்பப் பாத்தாலும் எண்ணெய் வழியற மூஞ்சியோட, தலையிலயும் எண்ணெய் வழிய நின்னா எனக்கே கோவமால்ல வருது. உன் வயசு புள்ளைக எல்லாம் எப்புடி அழகா டிரஸ் பண்ணிக்கிட்டு மினுக்கிட்டு திரியுதுங்க.. எவ்ளோ சொன்னாலும் உனக்கு மட்டும் ஏன் இந்த மர மண்டையில ஏற மாட்டீங்குது”

 

அம்மா இப்படி திட்டறது இன்னைக்கு ஒன்னும் புதுசில்லைதான் என்றாலும், அப்படி ஒரு சிரிப்பு பொத்துக்கொண்டு வந்ததுக்குக் காரணம், மேக்கப் பண்ணிக்கொண்டு நிற்பதாக என் கற்பனைதான். ஒரு வேளை மேக்கப் பண்ணிக் கொண்டால் மட்டும் நான் ஐஸ்வர்யா ராய் போல அழகியாகி, உடனே என்னைக் கட்டிக்க 10 பேரு வந்து கியூவுல நிக்கப் போறாங்களா என்ன.. எனக்குன்னு ஒருத்தன் இனிமேலா பொறக்கப் போறான். எனக்காக அவன் என்னைத் தேடி வரும்போது வரட்டுமே.. என்ன அவசரம் என்று நினைத்த போது, ‘களுக்’ என்ற சிரிப்பு கொஞ்சம் சத்தமாகவே வந்துவிட்டது. அம்மாவிற்கு வந்ததே கோபம்,

 

“அடிக் கழுதை, கொஞ்சமாச்சும் உனக்கு வெசனம் இருக்கா, நா ஒருத்தி இங்க கடந்து புலம்பிக்கிட்டுக் கடக்கறேன். இரண்டு கழுதை வயசாச்சு. இன்னும் ஒருத்தன் கையில புடிச்சுக்கொடுக்க முடியலையேன்னு நொந்துபோய் கிடந்தாக்க, உனக்கு சிரிப்பு வேற வருதா.. உன்னைச் சொல்லி குத்தமில்லடி. எல்லாம் உங்கப்பன் கொடுக்கற செல்லம்.. மவள தலையில தூக்கி வச்சுக்கிட்டுல்ல ஆடுது அந்த மனுசன். வரட்டும் இன்னைக்கு, பாத்துக்கறேன்”

 

இப்படியே நாள் ஓடிக்கிட்டேதான் இருக்கு. ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியை வேலைக்குப் போய்க்கொண்டிருந்ததால், சிறுவர்களுடன் எந்த விகல்பமும் இல்லாமல் பழகும்போது இது பற்றிய சிந்தனையே வருவதில்லைதான். ஆனால் புரோக்கர் வந்து மாப்பிள்ளை வீட்டார் வருவதாகச் சொன்னால் போதும் அம்மா தன் பாட்டை ஆரம்பித்துவிடுவாள். அன்று மாப்பிள்ளை வீட்டார் பார்க்க வந்தபோதுகூட வழக்கமான பதில்தானே வரப்போகிறது என்ற நினைப்பில் கவலையில்லாமல்தான் இருந்தாள். ஆனால் ஆச்சரியமாக அவர்கள் ஓகே சொன்னவுடன் நம்பத்தான் முடியவில்லை. அவர்கள் சென்ற பின்புதான் ‘அடடா, மாப்பிள்ளையின் முகத்தைக்கூட சரியாகப் பார்க்கவில்லையே’ என்று தோன்றியது. ஆனால் இதெல்லாம் அம்மாவும், அப்பாவும் இந்த கரிக்கட்டைக்கு விலையாக நிறைய வரதட்சணை தருவதாக பேரம் பேசியிருப்பது தெரிய வரும்வரைதான். அப்பா வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி, லோன் போட்டு கஷ்டப்பட்டு கட்டிய வீட்டை விற்று தனக்கு சீர் செய்யப்போவதாகச் சொன்னதைத்தான் அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அன்று ஆரம்பித்த பிரச்சனைதான் வீட்டில் நிம்மதியில்லாமல் போனது.  வீட்டை வாங்க  யாரோ ஒருவர் அடிக்கடி வருவதும் போவதுமாக இருந்த அந்த நேரத்தில்தான் அப்படி ஒரு கோரமான சம்பவம் நடந்தது.  திருப்பதிக்கு யாத்திரை சென்று மகளின் நலனுக்காக பிரார்த்தனை செய்ய நினைத்தவர்கள், திருப்தியாக பிரார்த்தனைகளையெல்லாம் நிறைவேற்றிவிட்டு பேருந்தில் திரும்பும் வழியில், நடந்த கோர விபத்தில் அந்த இடத்திலேயே உயிரை விட்ட அப்பாவும், மருத்துவமனையில் பத்து நாட்கள் போராடி நினைவு திரும்பாமலே போய் சேர்ந்துவிட்ட அம்மாவும் அவளுக்கு இப்போது படங்களாக மட்டுமே வழி காட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

 

அடுத்த நாள் காலை வாசலில் போட வேண்டிய கோலத்தை  தூணில் சாய்ந்தபடியே சிலேட்டில் போட்டு பயிற்சி எடுக்கும் அம்மாவின் வழக்கமான இடமும், பகலெல்லாம் மாடாய் உழைத்துவிட்டு முன்னிரவு நேரம் சாய்வு நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு தினசரியில் மூழ்கிக் கிடக்கும் அப்பாவின் இடமும் இன்று வெறிச்சோடிப்போய்க்கிடக்கிறது. நெருங்கி உறவாடி உண்மையான அன்பை பொழியும் சொந்தம் எதுவுமில்லை. பகலெல்லாம் பள்ளிக்குழந்தைகளும், இரவெல்லாம் தனிமையும் மட்டுமே உறவாக பெரிதாக எந்த எதிர்பார்ப்பும் இல்லாததான ஒரு வாழ்க்கை.  நினைவுகளில் மூழ்கிக்கிடந்ததில் நேரம் போனதே தெரியவில்லை. வயிற்றில் லேசாக ஒரு அதிர்வு வந்தபோதுதான் இன்னும் அதற்கு உணவு போகவில்லை என்பது தெரிந்தது! கடையில் வாங்கி வைத்திருந்த பாக்கெட் மாவை எடுத்து தோசை வார்க்க நினைத்து அடுப்படிக்குச் சென்றாள். இன்றும் அதே பொடியும், தோசையும்தான் என்று நினைத்தபோது கொஞ்சம் சலிப்பு தட்டியதுதான். அம்மா இருந்தப்ப விதவிதமாக உணவு கிடைத்த போது அதன் அருமை தெரியவில்லை. இன்று பெருமூச்சு மட்டுமே அதற்கு பதிலாகக் கிடைக்கிறது.

 

வாசலில் அழைப்பு மணி ஒலிக்கவும், இந்த நேரத்தில் யாராக இருக்கும் என்ற சந்தேகத்துடனே மெல்ல தாளை நீக்கி எட்டிப்பார்த்தவள்,

 

“ என்னம்மா நல்லாயிருக்கியாம்மா? அரிசி கடையிலருந்து வந்திருக்கேம்மா.என்னமோ புதுசா பாக்கற மாதிரி முழிக்கறே.. பச்சரிசி சிப்பம் வேணுமின்னு கேட்டீங்களாமே.. எடுத்தாந்தேன். உள்ளே கொண்டாரலாமா”

 

கதவைத் திறந்து அரிசியை உள்ளே கொண்டுவர வழிவிட்டு நின்றாள். “டேய்,  சரவணா, அரிசியை கொண்டாடா.. “

 

“இந்தா, நவுந்து வழி உடமாட்டியா, அப்புடியே எருமை மாடாட்டமா நிக்கற.. மூட்டைய தூக்கியாறேன்ல.. ”

 

“டேய், வாயை மூடிக்கிட்டு வச்சிட்டுப் போவியா.. தேவையில்லாம பேசிக்கிட்டு”

 

முணுமுணுத்துக்கொண்டே நிற்பவனிடம், “போய் வெளிய நில்லு, இல்லல்ல.. இந்தா போய் டீ குடிச்சிப்போட்டு மெல்ல வா.. சரியா..”

 

சரவணன் கையில் காசை திணித்துக்கொண்டிருக்கும் அந்த ஆளையும், சரவணனையும் மாறி, மாறி பார்த்துக் கொண்டிருந்தாள் சரிகா. இவனை எங்கோ பார்த்தது போல இருக்குதே என்று. அதற்குள் அவனை கழுத்தைப் பிடித்து தள்ளாத குறையாக தள்ளினான் அந்த அரிசி கடைக்காரன். அவனை ஏன் இப்படி விரட்டியடிக்கிறான் என்று புரியாமல் பார்த்துக்கொண்டிருந்தாலும், இவனுடைய பார்வை சரியில்லாதது நன்கு புரிந்தது. கண்கள் தன் மேனியெல்லாம் மேய்வதால் ஒருவித நெடிசல், கம்பளிப் பூச்சு ஊர்வது போன்று இருந்தது. சீக்கிரமாக பணத்தைக் கொடுத்து அனுப்பிவிட நினைத்து ஹேண்ட் பேக்கை தேடியவள், படுக்கையறையில் வைத்தது நினைவிற்கு வர வேகமாகச் சென்றாள். அவனை வெளியில் அனுப்பினால் போதும் என்றிருந்தது அவளுக்கு. வேகமாக உள்ளே நுழைந்து கைப்பையை எடுத்துக்கொண்டு திரும்பியவளுக்கு திக்கென்றது. படுக்கையறைக் கதவை அடைத்துக்கொண்டு பல்லைக் காட்டியபடி நின்று கொண்டிருந்தான் அந்த ஆள்.

 

“ஹி… ஹி.. இங்கப் பாரும்மா, நான் யாரு வீட்டுக்கும் போக மாட்டேன். பசங்ககிட்ட அரிசியையும், சீட்டையும்  கொடுத்துவிட்டா அவன்கிட்டயே பணத்தைக் கொடுத்து விட்டுடுவாங்க. இங்க மட்டும் ஏன் வந்தேன்னு பாக்குறியாம்மா.. நீ நெதமும் வீட்டுக்கு சோந்து போயி வரும்போது பார்ப்பேன். மனசுக்கு சங்கடமா இருக்கும். அப்பனையும், ஆத்தாளையும் தொலைச்சுப்பிட்டு பாவம், அனாதையா நிக்குற உன்னைப் பாக்கும்போது என் ஈரக்குலையெல்லாம் நடுங்குது பாப்பா. எந்த ஆதரவும் இல்லாம இப்படி நீ தனி மரமா நிக்குறதப் பாக்க முடியல.. அதான், ஒரு முடிவோட வந்திருக்கேன்..  நாமெல்லாம் ஒரே தெருவுல இருக்கோம். உங்க அப்பா, அம்மாவும் நல்ல மனுசங்க பாவம். சின்ன புள்ளையிலருந்து உன்னைய பாத்துட்டு இருக்கேன்..  சந்தோசமா சிட்டா திரிஞ்ச உனக்கு இன்னைக்கு இப்படி ஒரு நெலம.. அதான் இனிமேல உனக்கு ஆதரவா இருக்குறதுன்னு ஒரு முடிவோட வந்திருக்கேன். நீ இனிமே எந்த கஷ்டமும் பட வேண்டாம். உனக்கு வேணுங்கற சாமானெல்லாம் மாசா மாசம் கச்சிதமா வந்து சேரும். நீ நிம்மதியா இருக்கலாம். நான் தினமும் வந்து போறேன். ஒரு பய உன்னைய திரும்பி பாக்கமாட்டான்”

 

இவன் என்ன சொல்ல வருகிறான் என்று முழுவதுமாகப் புரியாமல் சந்தேகமாகப் பார்க்கும் போதே, அவன் அவளுக்கு மிக அருகில் வந்து, தோளில் கையைப்போடப் போனான். அப்போதுதான் அவனுடைய வக்கிர புத்தி அவளுக்குப் புரிந்தது.  தன் அப்பா வயதில் இருக்கும் ஒருவன் இப்படி வந்து நிற்பான் என்று கனவிலும் நினைத்துப்பார்காத சரிகாவிற்கு அதிர்ச்சியில் நா எழவில்லை. மெல்ல சுதாரித்துக்கொண்டு,  அவனை தள்ளிவிட்டாள். “சீ, நீயெல்லாம் ஒரு மனுசனா.. போய்யா..” என்று கத்தினாள்.

 

“பாப்பா இங்க பாரும்மா, உனக்கும் ஒரு துணை இல்லை. எனக்கும் பொண்டாட்டி இல்ல.. கொஞ்சம் அனுசரிச்சுப்போனா ரெண்டு பேருக்கும் நல்லது. இல்லேனா, உனக்குத்தான் கஷ்டம் பாத்துக்க.. “

 

கெஞ்சுவது போல ஆரம்பித்தவன், அப்படியே மெல்ல மிரட்டும் நிலைக்கு வந்ததோடு, அவளை வலுக்கட்டாயமாக அடைய முயற்சி செய்யவும் துணிந்தான். எருமை மாடு போல இரட்டை நாடி உருவம் கொண்ட அந்த மிருகத்தைப் பார்க்கவே அச்சமாகவும் இருந்தது அவளுக்கு. இப்படி ஒரு நிலை வரும் என்று சற்றும் யோசிக்காதவள் அதிர்ச்சியில் அப்படியே பின்வாங்கினாள். அவனும் விடாமல் நெருங்கி வந்து, கண்ணே, பொன்னே என்று அசிங்கமாக கொஞ்சியவாறு கட்டி அணைக்க முயன்றான். பலம் கொண்ட மட்டும் தள்ள முயன்றவள், தட்டுத் தடுமாறி விழப்போனாள். இதுதான் சமயம் என்று அந்த மிருகம் அவள் மேல் பாயப்போக, அவள் மரண பயம் தாக்கியவள் போல அலறினாள். போராட முயன்றவளை, வெகு எளிதாக அடக்க முயன்றான் அவன்.  என்ன செய்வது என்று புரியாமல், அன்னை, தந்தை, தெய்வம் என அனைவரையும் நினைத்துக்கொண்டு முடிந்த அளவு பலமாக சத்தம் கொடுத்தாள். அக்கம் பக்கத்தில் மிக நெருக்கமாக வீடு இல்லாததால் காது கேட்பது சிரமம். அதற்கும் மேல் டிவி சத்தம் வேறு.  எல்லாம் முடிந்தது, இனி தப்பிக்க முடியாது என்று நம்பிக்கை இழந்த அந்த நேரம், ஆண்டவனே நேரில் வந்தது போல யாரோ உள்ளே வந்து கையில் எதையோ தூக்கி அவன் மண்டையில் தாக்கி,

 

“என்னடா நாயே பன்றே.. இதுக்குத்தான் என்னைய விரட்டி உட்டியா.. உன்னைய கொல்லனும்டா. பாவம் அந்த புள்ளைய என்னமோ பண்றே நீ.. அது கத்துதில்ல உனக்கு அறிவில்ல.. “ என்று தெளிவில்லாத வார்த்தைகளில் ஒரு சிறுவனைப் போல பேசிக்கொண்டே அவனை முரட்டுத்தனமாகத் தாக்கியவனை அலங்க, மலங்க பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள். இவனை எங்கோ சந்தித்திருக்கிறோமே என்று நினைத்துக் கொண்டேயிருக்கும் போது, கொஞ்சமும் தயங்காமல், அவனை தரதரவென்று இழுத்துக்கொண்டுபோய் வெளியில் தள்ளியவன்,

 

“இந்தாங்க, நீங்க பத்திரமா கதவைப் பூட்டிக்கங்க.. சாக்கிரதையா இருக்கோணுமில்ல.. போங்க, போங்க, பயந்துக்காம போய் தூங்குங்க, அவன் வரமாட்டான் இனிமேலக்கு.. நான் பாத்துக்கறேன்… சரியா. “

 

இரவு முழுவதும் தூக்கமில்லாமல் ஏதேதோ நினைவு வந்து வாட்டியது சரிகாவிற்கு. எதிர்காலம் ஏதோ பூதாகரமாக முன்னால் நிற்பது போல ஒருந்தது. இத்தனைக் குழப்பத்திலும் சரவணனின் முகம் இடையிடையே வந்தது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது நினைவிற்கு வந்தது. முதன் முதலில் மாப்பிள்ளை வீட்டார் பெண் பார்க்க வருவதாகச் சொல்லியிருந்ததால், வீட்டில் ஒரே கலகலப்பு, மாமா, அத்தையெல்லாம் கூட வந்திருந்தனர். அம்மா கேசரி, பஜ்ஜி, என எல்லாம் செய்து வைத்துக்கொண்டு காத்திருந்தார்கள். நல்ல இடம் என்பதால் எப்படியும் முடிக்கலாம் என்று அம்மா ஆவலாக இருந்தார்கள். மாப்பிள்ளை வீட்டார் காரில் வந்து இறங்கியவுடன் அப்படி ஒரு பெருமை எல்லோருக்கும். ஆனால் அதெல்லாம் மாப்பிள்ளையைப் பார்த்து பேசும்வரைதான். வெள்ளை வெளேரென்று, ஆறு அடி உயரமுடன், பளிச்சென்ற சிரிப்புடன் வந்து நின்றவனைப் பார்த்து ஒரு நொடியில் தானும் கவரப்பட்டது என்னவோ உண்மைதான். ஆனால் குழந்தைத்தனமான அவனுடைய பேச்சும், செயலும் அப்பாவிற்குப் பிடிக்காமல் போனதுடன், கூட்டி வந்த புரோக்கரைப் பார்த்து  கோபமாகச் சத்தம் போட்டுவிட்டார். எல்லோரும்  இறுக்கமான ஒரு சூழலில் இருக்கும் போது எந்தவிதமான பாதிப்பும் இல்லாமல் சரவணன் மட்டும் அதே புன்சிரிப்புடன், டாடா சொல்லிவிட்டுச் சென்றது இன்றும் நினைவிற்கு வந்தது. ஆனால் கார், பங்களா என்று ஓரளவிற்கு வ்சதியாக வாழ்ந்தவர்களுக்கு திடீரென்று பிரச்சனை வந்ததை இன்னொரு முறை அந்த புரோக்கர், வேறு ஒரு மாப்பிள்ளைக்காக கேட்டு வந்தபோது சொன்னார். வியாபாரத்தில் திடீரென்று நஷ்டம் ஏற்பட்டதால், அதே கவலையில் சரவணனின் அப்பாவும் இறந்துவிட, சரவணன் மெல்ல மெல்ல இப்படி கடினமான வேலையெல்லாம் செய்ய வேண்டி வந்திருக்கிறது. இந்த நிலையிலும், தன்னால் முடிந்த வேலையைச் செய்து தன் தாயைக் காப்பாற்றும் சரவணனை நினைத்து உள்ளம் பூரிப்படைந்தது. இப்படியே சரவணனைப் பற்றி நினைத்துக்கொண்டே இருந்தவளுக்கு பளிச்சென்று ஒரு யோசனை தோன்றியது. அம்மா, அப்பா இருந்து செய்ய வேண்டிய காரியத்தை தனக்குத்தானே செய்து கொள்ள வேண்டிய நிலை வந்தது கொஞ்சம் தர்ம சங்கடமாக இருந்தாலும், அவள் ஒரு தெளிவான முடிவெடுத்திருந்ததால் நிம்மதியாக தூங்கவும் முடிந்தது. தன்னைப் போலவே சரவணனுக்கும் நிச்சயம் திருமணம் ஆகியிருக்காது என்ற நம்பிக்கையில் அமைதியாக உறங்கிக் கொண்டிருக்கிறாள் சரிகா!

 

 

முற்றும்

Series Navigationதாகூரின் கீதப் பாமாலை – 90 தென்றல் நாட்டியங்கள் .. !புகழ் ​பெற்ற ஏ​ழைகள் – 34
author

பவள சங்கரி

Similar Posts

2 Comments

 1. Avatar
  Dr.G.Johnson says:

  ” கரிக்கட்டை ” யான சரிகாவுக்கு திருமணம் கைகூடும் வேலையில் திருப்பதியில் நடந்த விபத்தில் பெற்றோரை இழந்து விடுகிறாள். தனி மரமாக தனியார் பள்ளி ஆசிரியையாக கால்த்தை ஓட்டுகிறாள். அவளுடைய தனிமையை தெரிந்துகொண்ட அரிசி கடைக்காரன் அவளை அடைய முடியாம்ல் போனபோது பலாத்காரம் செய்தபோது கடவுள் மாதிரி சரவணன் வந்து காப்பாற்றுவதும், அவன் துவக்கத்திலிருந்தே சிறுபிள்ளைப் போல பேசுவதும் செயல்படுவதும் தெரிந்திருந்தும், தனக்கு இனி நல்லது நடக்கும் என்று அவள் நம்பி நிம்மதி பெருமூச்சு விடுவதாக கதைக் கொண்டுசென்றுள்ளது சுவையாகவே உள்ளது. கறிக்கட்டையின் சிறப்பியல்புகளைச் சொல்லியுள்ள விதமும் நன்று…..பாராட்டுகள் பவள சங்கரி…அன்புடன் டாக்டர் ஜி. ஜான்சன்.

 2. Avatar
  பவள சங்கரி says:

  அன்பின் திரு.மரு. ஜான்சன் அவர்களுக்கு,

  தங்களுடைய வாசிப்பிற்கும், ஊக்கமான வார்த்தைகளுக்கும், பாராட்டிற்கும் மனமார்ந்த நன்றி.

  அன்புடன்
  பவள சங்கரி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *