4 கேங்ஸ்டர்ஸ்

This entry is part 16 of 26 in the series 8 டிசம்பர் 2013

நான் கண்ணீர் விட்டதை யாருமே கவனிக்கவில்லை. இனிமேல் இந்த மலைகளை, மரங்களை, மனிதர்களை எப்பொழுது பார்க்கப்போகிறோம். இந்தக் காற்றை, இந்த ஊரின் சுவாசத்தை எப்போது சுவாசிக்கப் போகிறோம். இந்த சாலைகளையும், தெருக்களையும் எப்பொழுது தரிசிக்கப் போகிறோம். வீட்டில் இருந்ததைவிட இந்த ஊர் கோயில்களில்தான் நான் அதிக நாட்கள் தங்கியிருக்கிறேன். அதனாலேயே நான் நாத்திகன் என்பது பலபேருக்கு தெரியாமல் போய்விட்டது. கோவிலில் உட்கார்ந்துகொண்டு கடவுளை கிண்டல் செய்ததால் யாருக்கும் எந்த பிரச்னையும் ஏற்படவில்லை. அவ்வளவு சுதந்திரத்தைக் கொடுத்த ஊர் இது. சுதந்திரத்திற்கு இலக்கணம் வகுத்த ஊர். இந்த ஊரை விட்டு நான் கிளம்புகிறேன். ஏதோ ஒன்றை இழப்பது போல் இருக்கிறது. நான் நாடு கடத்தப்படுவதைப் போல் உணர்ந்தேன். ஆம்………. நிஜமாகவே என் கண்கள் கலங்கியிருந்தன.

 

அது ஒரு மழைக்காலம் மதுரை வாசமேறியிருந்தது. ரம்மியம் என்ற வார்த்தைக்கு பொருள் தேடி அகராதியை நாட வேண்டிய அவசியமில்லை. அதன் அதிகாலை ஒரு பேராச்சர்யம். நான் சொர்க்கத்தை விட்டு இன்று வெளியேறுகிறேன்.

இங்கு ஒரு 4 பேருக்கு என்னைப் பிடிக்கவில்லை. அந்த நான்கு பேருக்கு ஒரு தலைவர் இருக்கிறார். அவர் மிக மோசமானவர். பெரிய அளவில் மீசை வைத்திருப்பார். அதில்தான் ஏதோ அவரது பரம்பரை வீரம் நிறைந்திருப்பதைப் போல நன்கு உரமிட்டு பராமரித்திருப்பார். அந்த கடா மீசைக்கு நடுவே அவர் அவ்வப்பொழுது சிரித்திருப்பார்போல. நான்கு பேர் சேர்ந்து அந்த மீசையை விளக்கிப் பார்த்தால் ஒழிய அவர் சிரிப்பது இந்த உலகத்தில் பதிவு செய்யப்படாமலேயே போய்விடும். அவர் தினசரி பல்துலக்கும் காட்சியை நான் உட்பட யாரும் கற்பனை செய்து பார்க்க விரும்பவில்லை. பல்வேறு விபரீதங்கள் 4 சுவர்களுக்குள் நடப்பதைப் போல, அவர் பல்துலக்கும் விபரீதத்தையும் நினைத்துக் கொள்ள வேண்டும்.

 

அந்த கொத்து மீசைக்கு நடுவே அந்த கேங் தலைவர் அவ்வப்போது தரமான திண்டுக்கல் அங்குவிலாஸ் புகையிலைச் சுருட்டை பிடித்து புகை விடுவது வழக்கம். அந்த விரும்பத்தகாத செயலால் ஒரு நன்மை ஏற்படுவது உண்டு. அந்த பகுதியில் இரவில் கொசுத் தொல்லையால் குழந்தைகள் அவதிப்படுவது இல்லை. அதற்கு அவர் ஒவ்வொரு இரவும் சிரத்தையுடன் துவைத்துக் காயப்போடும் பட்டாபட்டி ட்ரவுசரும் ஒரு காரணமாக இருக்கக்கூடும் என பலரால் நம்பப்படுகிறது.

ஊருக்கு வெளியே அரசாங்கத்தின் உதவியின்றி, சுயதொழில் முறையில், உயர் தொழில்நுட்பத்துடன், இயற்கை முறையில் தயாரிக்கப்படும் பானமான சாராயத்தை அவ்வப்போது அருந்திவிட்டு அவர் செய்யும் அலப்பறையால் அவர் புகழ் மதுரையின் எட்டுத்திக்கும் பரவியுள்ளது. அவனியாபுரத்தில் ஒலிக்கும் அவரது வசைப்பாடல், மாட்டுத்தாவணியில் படுத்துறங்குபவரை மயிர்கூச்செரியச் செய்யும். அவரால் அந்தப்பகுதியில் வசிக்கும் நாய்களுக்கு பெரும் தொல்லை. இரவில் ஒரு மனிதன் ஊளையிடுவதை அவைகள் விரும்பவில்லை.

அந்த கேங்க லீடருக்கு என்னைக் கண்டால் சுத்தமாக பிடிப்பதில்லை. என்னை ஒவ்வொரு நிமிடமும் துரத்திக் கொண்டே இருப்பார். அவரது பார்வையில் படாமல் இன்றுவரை ஒரே பகுதியில் ஒளிந்து வாழ்கிறேன். என்னை ஒரு கோலையாக்கிவிட்டார் அவர். இந்திய ஐக்கிய ஜனநாயக நாட்டில் எங்கு வேண்டுமானாலும் சுதந்திரமாக வசிக்கலாம் என இந்நாடு எனக்கு வழங்கிய சுதந்திரத்தில் அவர் தினசரி கதக்களி ஆடிக் கொண்டிருந்தார். பேசாமல் பீகாருக்குச் சென்று சிறு,குறு மற்றும் நடுத்தர தொழிலில் ஈடுபட்டு வரும் தொழிலாளியிடமிருந்து ஒரு நாட்டுத்துப்பாக்கியை வாங்கிக் கொண்டு வந்து என்னை நானே சுட்டுக் கொள்ளலாம் போல் தோன்றியது.

இந்த ஊரைப் பொறுத்தவரை 4 விதமான மக்கள் மட்டுமே நிரந்தரமாக பிழைக்க முடியும். ஒன்று, அரசாங்க ஊழியர், இரண்டு வியாபாரி, மூன்று விவசாயி, நான்கு தனியார் மில்களில் கூலித் தொழில் புரிவோர். என்னைப்போல் பி.ஏ. தமிழ் இலக்கியம் படித்த இளைஞனுக்கு கவுரவமான வேலை ஒன்றும் கிடைப்பதில்லை. அதனால் நான் இந்த ஊரை விட்டு கிளம்பியே ஆக வேண்டும். பூமி இவ்வளவு மோசமான கிரகமாக இருக்கும் என்று நான் நினைக்கவேயில்லை. அடுத்த முறை கண்டிப்பாக பூமியில் மட்டும் பிறக்கக் கூடாது.

நான் இந்த அழகிய மதுரையில் இருப்பது பிடிக்காத அந்த 4 பேரில் இரண்டாமவர் ஒரு பெண்மணி. அவரால் பலமுறை நான் காயமடைந்ததுண்டு. ஒவ்வொரு வாரமும், ஈயம், பித்தளைக்கு பேரிச்சம்பளம் போடும் தொழிலாளி அந்தப் பெண்மணியிடம் வியாபாரம் செய்வதுண்டு. வியாபாரம் செய்யப்படும் நெளிந்த பாத்திரங்கள் ஒவ்வொன்றுக்கும் பின்னும் ஒரு சோகக் கதை உண்டு. கல்வாரி மலையை நோக்கி முகமெல்லாம் ரத்தம் சொட்ட சொட்ட, சிலுவையை சுமந்து கொண்டு ஜீசஸ் சென்று கொண்டிருந்தபோது, ஒரு பெண்மணி அவரது முகத்தை ஒரு தூய வெண்ணிற ஆடையால் ஒற்றி எடுத்தபோது, ஜீசஸின் உருவம் அதில் பதிந்தது. அதைப்போல, இந்த கேங்ஸ்டர் பெண்மணி பழைய பாத்திரம் வாங்குபவனிடம் பண்டம் மாற்றும் முறையில் விற்பனை செய்யும் ஒவ்வொரு பாத்திரத்திலும் சற்று உற்றுப் பார்த்தால் எனது உருவம் தெரியும்.

 

அந்தப் பெண்மணி அந்த மீசைக்காரரின் அஸிஸ்டெண்ட். அவரைப்போலவே குரூர எண்ணம் கொண்டவர். சில சமயங்களில் அந்த மீசைக்காரரே கூட அப்பெண்மணியின் தாக்குதலுக்கு உள்ளாவதுண்டு. அவர் சோமபானம் அருந்தியிருக்கும் சமயங்களில் பயங்கரவாதத் தாக்குதல்கள் நிகழ்ந்துவிடுவதால் தன்னை தாக்கியது யார் என்பதை அவரால் உணர முடிவதில்லை. என்னை எப்படியாவது இந்த ஊரைவிட்டு துரத்திவிட வேண்டும் என கங்கணம் கட்டிக் கொண்டு திரிகிறார்.

 

எவ்வளவு ஜாக்கிரதையாக இருந்தாலும் சில சமயங்களில் தாக்குதல் நடைபெற்று விடுவதுண்டு. அது ஏன் அவ்வாறு நடைபெறுகிறது என்றால், அப்பெண்மணியின் மூதாதையர்கள் கல்வி கற்பதை ஒரு அவமானகரமான, அருவெறுப்பான, தேவையற்ற, வாழ்க்கைக்கு உதவாத விஷயமாக  நினைத்ததால், அவர்கள் எந்த ஒரு விஷயத்தையும் பேசித் தீர்ப்பதில்லை. முதலில் தீர்த்துவிட்டுத்தான் பின்னர் பேச ஆரம்பிப்பார்கள். ஆனால் அதுவும் நடைபெறுவதில்லை. ஆகையால், அவர்களது பரம்பரை வகையறாக்கள் எப்பொழுதும் ஆக் ஷன் கிங் அர்ஜுனைப் போல கொதிப்பான மனநிலையுடனேயே காணப்படுவார்கள்.

ஆகையால் வீரப்பெண்மணி வேலுநாச்சியாரைப் போல காணப்படும் அப்பெண்மணி என்னை இந்த ஊரை விட்டுக் கிளப்ப பல்வேறு வன்முறைச் செயல்களில் ஈடுபட்டுள்ளார். கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்தப் பனிப்போரில், லாபடைந்த நபர், பழைய ஈயம், பித்தளைக்கு பேரிச்சம்பழம் விற்கும் வியாபாரி. நஷ்டமடைந்தது நான். லாபமா, நஷ்டமா என்று தெரியாமல், புரியாமல் இருப்பவர் கேங் லீடரான அந்த மீசைக்காரர்.

 

அந்தப் பெண்மணியே சும்மா இருந்தாலும் அவரது கடமையை சுட்டிக்காட்டி அவரது ரத்தக் கொதிப்பை அதிகரிக்கச் செய்து என்மீது தாக்குதல் தொடுக்க செய்வதில் கண்ணும் கருத்துமாக இருக்கும் பல்வேறு பெண்மணிகள் அந்தப் பகுதியில் உண்டு. அவர்கள் அனைவருமாக சேர்ந்து எனக்கு மதுரையிலிருந்து செண்ட் ஆஃப் பார்ட்டி நடத்த திட்டமிட்டு காத்திருந்தார்கள்.

எந்தவொரு இளைஞனுக்கும் சொந்த ஊரில் பிழைப்பு என்பது பொரும்பாலும் எட்டாக்கனியாகவே போய்விடுகிறது. அவன் பிறந்த ஊரைவிட்டு, வேறு ஒரு ஊருக்கு பிழைப்புக்காக போக வேண்டிய கட்டாயமாகிவிடுகிறது. சொந்த ஊரில் வேலை செய்து பிழைப்பதை எது தடுக்கிறது என்றுதான் புரியவில்லை. ஒருவன் திக்கற்று விடப்படும் போதுதான் பிழைத்துக் கொள்வதற்கு எதையேனும் பற்றிக் கொள்வான் போல. ஆகையால்தான் எந்தவொரு இளைஞனும் திக்கற்ற ஊரில் எவ்வாறேனும் பிழைத்துக் கொள்கிறான்.

 

நானும் அரசாங்க வேலைக்கு முயற்சித்தேன். அவ்வப்போது சத்தம்போட்டு படிப்பதை அனைவரும் வியப்புடன் பார்த்துச் சென்றனர். அமெரிக்கர்கள், அல்கைதா தீவிரவாதியைப் பார்ப்பதுபோல் பார்த்துச் சென்றார்கள். அது என்னவோ, என்ன மாயமோ புரியவில்லை. புத்தகத்தைப் பார்த்தாலே தூக்கம் தலையை சுற்ற ஆரம்பித்து விடுகிறது. மேலும் கேங் லீடரின் இரவு 8 மணி பிதற்றல்களுக்கு நடுவே படிப்பது என்பது பிரம்ம பிரயத்தனமாக இருந்தது.

 

பொதுவாக புத்தகத்தை கையில் எடுத்து வைத்துக் கொண்டு, படித்துக் கொண்டிருப்பதை தேச துரோகத்துக்கு இணையான செயலாகக் கருதும் எனது நண்பர்கள் சூழ்ந்த தெருவில், படிப்பது என்பது இயலாத காரியம் என்பதால், போர்வையைப் போர்த்திக் கொண்டு டார்ச் வெளிச்சத்தில் படித்துக் கொண்டிருந்தேன்.

 

அதற்கும் ஆப்பு வைத்தார் சி.பி.ஐ. துப்பறிவாளர் நைனா…… அவர்தான் அந்த கேங்லீடர் பட்டியலில் மூன்றாமவர். எனக்கு வயிறு சரியில்லை என்றால் கூட மருந்துடன் வந்து நிற்பார். “அதெப்படி எனக்கு வயிறு சரியில்லை என்பது உங்களுக்குத் தெரியும்” என்று கேட்டால், “நீ நடப்பதை பார்த்தே கண்டுபிடிச்சுட்டேன்” என்று சாகவாசமாகவும், சகஜமாகவும் கூறுவார். அந்த அளவுக்கு நுண்மையாக துப்பறியும் மூளை படைத்தவர். சி.பி.ஐ., அமெரிக்க எஃப்.பி.ஐ. இந்திய “ரா” துப்பறியும் உளவுப் பிரிவு, ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்பு, இஸ்ரேலின் மொசாட் உளவுப் பிரிவு, ஜேம்ஸ்பாண்ட், விஸ்வரூபம் கமல், இவர்களெல்லாம் நைனாவுக்கு முன் ஒன்றுமேயில்லை. ஒரு கூட்டத்தில் யாரேனும் வயிற்றைப் பிடித்துக் கொண்டு சற்று அவஸ்தையாக அசைந்தால் கூட போதும், நடக்கப்போவதை முன்கூட்டியே உணர்ந்து அந்த இடத்தை விட்டு எழுந்து சென்றுவிடுவார். அப்படியொரு நாஸ்ட்ரடேமஸ் மூளை அவருடையது.

நைனா சொந்தமாக ஒரு வெத்தலை ஃபேக்டரி வைத்திருக்கிறார். அந்த ஃபேக்டரிக்காக 24 மணி நேரமும் உழைப்பவர் அவர் மட்டுமே. உழைத்து, உழைத்து அவரது வாயெல்லாம் சிவந்து போயிருந்தது. அவருக்கு வாயில் பற்கள் இருக்க வேண்டிய இடத்தில் ஏதோ இருந்தது. அது என்னவென்று தெரியவில்லை.

அவரது வாய்தான் அவருடைய வெத்தலை ஃபேக்டரி. “தூங்கும்போது கூட விழித்திருக்கும் ஆன்மாவைப்பெற்றிருப்பவனே, உண்மையான ஞானி” என்ற புத்தரின் புரியாத வாசகத்தை, நைனா தான் எனக்கு புரியவைத்தார். ஆம் அவர் தூங்கும்போது கூட அவரது வாய் அரைத்துக் கொண்டுதான் இருக்கும்.

அவர் இன்னமும் இப்படித்தான் நினைத்துக் கொண்டிருக்கிறார். அதாவது, வெத்தலை சாறுதான் உடம்பில் ரத்தமாக மாறி ஓடிக் கொண்டிருக்கிறது என்று.

ஒரு டெண்டிஸ்ட்டிடம் சென்று அவர் தன் பற்களைக் காண்பித்தால் மருத்துவர் குழப்பத்தில் ஆழ்ந்து விடுவார். மனித குலம் தோன்றியதிலிருந்து வழக்கமாக வாயில்தான் பற்கள் முளைக்கின்றன. ஆனால் இவருக்கு பற்கள் இருக்க வேண்டிய இட்ததில் வேறு ஏதோ கண்டறியமுடியாத பொருள் ஒன்று இருக்கின்றதே என்கிற யோசனையில் ஆழ்ந்து விடுவார். இவையெல்லாம் அந்த மருத்துவர் மயக்கமடையாத பட்சத்தில் கண்டிப்பாக நடக்கும் . அந்த சிவந்த குகை(வாய்)க்குள் மீத்தேன் வாயு உற்பத்தியாகக்கூடிய வாய்ப்புகள் பிரகாசமாக இருப்பதால் ஒரு டெண்டிஸ்ட் தற்காப்புக் கவசமாகிய ஆக்ஸிஜன் மாஸ்கை உபயோகிக்கவில்லை எனில், அவரது கடைசி மூச்சை அனாவசியமாக இழக்க நேரிடும்.

 

அப்படிப்பட்ட துப்பறியும் சாம்புவாகிய நைனா, நான் போர்வைக்குள் ஒழிந்து கொண்டு, அரசாங்க உத்தியோகத்திற்காக வைராக்கியத்துடன் படிப்பதை வேறு விதமாக பிரகடனப்படுத்திவிட்டார். அவரது கண்டுபிடிப்பின்படி ஒரு இளைஞன் போர்வைக்குள் ஒழிந்திருந்து படித்தால் அது பாடப்புத்தகமாக இருக்காதாம். அது அந்த பழைய, சுமார் ஒரு சென்டிமீட்டர் அடர்த்திக்கு மேக்கப் போடக்கூடிய திரைப்பட நடிகையின் பெயர் கொண்ட புத்தகமாம். நேராக கேங்லீடரிடம் சென்று சுமார் 50 கிலோ வெடிமருந்தை உள்ளடக்கிய பைப் வெடி குண்டை பற்ற வைத்துவிட்டு சாகவாசமாகவும், சகஜமாகவும் சென்றுவிட்டார் நைனா. எனது நிலைமை சிங்கத்திடம் மாட்டிக் கொண்ட முயலைப் போல்ஆகிப்போனது.

 

அந்த கேங்லீடருக்கு 7 வயது இருக்கும்பொழுது அவரது அப்பா, நீ பள்ளிக் கூடம் சென்று படிக்கின்றாயா அல்லது இந்த நிலவேம்பு கஷாயத்தைக் குடிக்கின்றாயா என்று கேட்டதற்கு, நிலவேம்பு கஷாயத்தை லிட்டர் கணக்கில் குடித்தவர். இப்பொழுதுகூட ஆனா, ஆவன்னா மொத்தம் 56 எழுத்துதானே என்று கேட்டால் “இல்லையா பின்ன” என்று ஆணித்தரமாக ஒப்புக் கொள்வார். அப்படிப்பட்ட எழுத்தறிவுச் செம்மலாகிய அந்த கேங் லீடர், சி.பி.ஐ. துப்பறிவாளர் நைனாவின் சாகாவாசமான மற்றும் சகஜமான பேச்சை முழுமையாக நம்பி, நான் படித்துக் கொண்டிருந்த புத்தகத்தை பிடுங்கி சுக்கல் நூறாக கிளித்துப் போட்டார். அந்தப் புத்தகத்தை கிழித்தெறிந்த லாவகத்தைப் பார்க்கும்போது, ரஜினி படத்திற்கு முதல்நாள் சென்று பழைய பேப்பரை கிழித்து சூறை வீசும் கைப்பக்குவம்  வெளிப்பட்டதைக் காண முடிந்தது. எனக்குத் தெரியாமல் கடா மீசை படத்திற்கெல்லாம் போய் வருகிறார் போல. கண்மாயில் சென்று குளித்துவிட்டு சிலுப்பி விட்டுக் கொண்டு தலைவாரும் போதே  லேசாக சந்தேகம் வந்தது. காற்றில் பறந்த அந்தக் காகிதங்களைப் போல எனது அரசாங்க உத்தியோகக் கனவும் பறந்து போனது.

 

நைனாவின் திருவிளையாடலில் நைந்து போன நான், இந்த ஊரிலிருந்து என்னதான் செய்ய முடியும். அதனால் இந்த அழகான ஊரைவிட்டு இன்று கிளம்புகிறேன். கண்கள் கலங்கித்தான் போயிருந்தன. அந்த வாசம் மிகுந்த ஈரமண்ணை விட்டு பிரிய மனம் வரவில்லை. யாரேனும் ஓடிவந்து தடுத்துவிட மாட்டார்களா என மனம் ஏங்கியது.

 

என்னுடன் மூக்கில் சளி வடிய ஊளைமூக்கனாக சுற்றிக்கொண்டிருந்தவன் எல்லாம் துபாய்க்கு சென்று விட்டானாம். கால்ச்சட்டைக்கு ஜிப்போடாமல் சுற்றியவனெல்லாம் குவைத்துக்குச் சென்றுவிட்டானாம். அவ்வளவு ஏன் பால்பாண்டி வாத்தியாரின் பல்லை உடைத்துவிட்டு சின்ன வயதிலேயே ஊரைவிட்டு ஓடிப்போன செந்தில் இலங்கையில் டீக்கடை வைத்திருக்கிறானாம். அப்பா இல்லாத  கைலாசம், சவுத் ஆப்பரிக்கா சென்று அங்குள்ள இந்தியர்களிடம் பனாரஸ் சேலை விற்றுக் கொண்டிரு்ககிறானாம். அவன் தங்கை கல்யாணத்தைக் கூட அவன்தான் ஜாம், ஜாம் என செலவு செய்து முடித்து வைத்தானாம்.

 

அனைவரும் என்னை காரித் துப்புகிறார்கள். நேரத்திற்கு கொட்டிக் கொண்டு உள்ளூருக்குள்ளேயே ஊரைச் சுற்றிக் கொண்டிருக்கிறேனாம். உடம்பை கோயில்மாடு மாதிரி வளர்த்து வைத்திருக்கிறேனாம். மீனாட்சியம்மன் 4 வீதிகளில் கோயில் மாடுகளை பார்க்கும்போதெல்லாம் எனக்கு அந்த வாசகம்தான் ஞாபகத்திற்கு வருகின்றன. நான் என்ன செய்வது எல்லோரையும் போல 3 வேளைகள் மட்டுமே சாப்பிடுகிறேன். ஒல்லியாக இல்லாமல் என் உடல்வாகு திடகாத்திரமாக இருப்பதற்கு காரணம். அறிவியல் முறைப்படி அந்த கேங்லீடரின் ஜீன்தான் காரணம். இதைச் சொன்னால் நம்பவா போகிறார்கள்.

எனக்கு இந்த ஊர் மிகவும் பிடித்திருக்கிறது. ஆனால், இந்த சூழ்நிலை சுத்தமாக பிடிக்கவில்லை. நான் இந்த சூழ்நிலையிலிருந்து வெளியேற வேண்டும். ஆனால் இந்த ஊரிலிருந்து வெளியேறக் கூடாது. ஆனால் எனக்குரிய வாய்ப்போ இரண்டில் ஒன்றுதான்.

நீ மட்டும் இந்த ஊரை விட்டு செல்வதாக இருந்தால் உனக்கு பத்தாயிரம் ரூபாய் இனாமாகத் தருகிறேன் என்று ஒருவன் என்னைப் பார்த்துக் கூறினான். ஒரு முக்கியத் தகவல் என்னவென்றால் அவன் 90 கிலோ எடை…. நான்  80 கிலோ எடை…. அவன்தான் அந்த கேங்ஸ்டர் குழுவில் நான்காமவன்.

சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் இவைகளே ஒரு நாட்டை வளர்ச்சிப்பாதையில் அழைத்துச் செல்லும் என்று, பிரெஞ்சுப் புரட்சியாளன் ரூசோ சொன்னதாக புத்தகத்தில் படித்த ஞாபகம் இருக்கிறது. ரூசோ மட்டும் உயிரோடிருந்திருந்தால் அவர் சட்டையைப் பிடித்து மிரட்டியிருப்பேன். நீ இரண்டாவதோடு நிறுத்தியிருக்க வேண்டும்… மூன்றாவதைச் சொல்லியிருக்கக் கூடாது என்று. என்னைப் பொறுத்தவரை மூன்றாவது ஒரு பொய். இல்லையென்றால் அவன் அவ்வாறு சொல்லியிருப்பானா…

“நீ இந்த ஊரைவிட்டுச் சென்றால் 10 ஆயிரம் ரூபாய் இனாமாகத் தருகிறேன்” என்று.

என்னை அசிங்கமாக விலைபேசிவிட்டான் அவன். அவனுக்கு அந்தத் திமிரைக் கொடுத்தது அவன் செய்து வருகின்ற அரசாங்க வேலைதான். அவனது ஒரே தகுதி அவன் செய்து வந்த கான்ஸ்டபிள் வேலை மட்டும்தான்.

எனக்கும் அவனுக்கும் ஏகப்பட்ட ஏற்றத்தாழ்வுகள் உள்ளன. அவனைவிட நான்தான் பெஸ்ட் தெரியுமா?

அவன் 10வது மட்டுமே பாஸ்

நான் பி.ஏ. தமிழ் லிட்ரேச்சர் முடித்திருக்கிறேன்.

எனக்கு அதிகபட்சமாக 10 திருக்குறள் பொழிப்புரையுடன் தெரியும்.

அவனை திருக்குறள் சொல்லச் சொன்னால், எனக்கு “மிமிக்கிரி” எல்லாம் சரியாக வராது என்பான்.

அவன் கறுப்பு அல்லது அடர் நீலநிறம். கருப்புச் சட்டை அணிந்து கொண்டு வெளியே சென்றால், “வெத்து ஒடம்போட எங்க ராசா போற” என்று கண்ணில் பூ விழுந்த ஓல்டு கிளவி (கேங் லீடரைப் பெற்றத் தெய்வத் தாய்) வீட்டுத்திண்ணையில் அமர்ந்து கொண்டு கேட்பாள். அவனைப்பார்த்து அமெரிக்கன் கல்லூரியில் படிக்கும் ரோஸ்மேரி லவ்லெட்டர் கொடுக்கின்றாள். ஏன் எனக்கென்ன கொறச்சல்….

நான் ஒன்றும் அவனைப் போல் அட்டைக் கறுப்பில்லை. சற்று மாநிறமாக இருப்பேன். வெங்கடேஷ் அப்பா இறந்தபோது, அவரைப் புதைக்கச் சென்ற இடத்தில் வெட்டியான் என்னைப் பார்த்து எப்படிக் கூறினார் தெரியுமா.

“ஜெயம் ரவி மாதிரி இருக்குதே அந்த தம்பியக் கூப்பிடு” என்று கூறினார்.

போலீசில் 3 வருடம் ட்ரெய்னிங் கொடுத்திருக்கிறார்கள் என்று கூறுகிறான் ஆனால், அவன் 90 கிலோ எடை இருக்கிறான்.

அவனைப் பார்த்து, “ஏன் ராசா எளச்சு போயிட்ட” என கன்னத்தைத் தடவி விட்டு, டபுள் ஆம்லேட் போட்டு கொடுக்கிறார் கேங்ஸ்டர் நம்பர் 2.

நானோ 80 கிலோ எடை மட்டும்தான் இருக்கிறேன். சமீபத்தில் நானும், ரமேசும் தென்னந்தோப்பில் யாருக்கும் தெரியாமல் சிக்ஸ் பேக் ட்ரை பண்ணிக் கொண்டிருக்கிறோம்.

எல்லாவற்றுக்கும் மேலாக கடந்த தீபாவளியன்று, அவனுக்கு 2 ஆயிரம் ரூபாய்க்கு பேண்ட் சர்ட் எடுத்துக் கொடுத்திருக்கிறார் கேங் லீடர். என்னிடம் 200 ரூபாயைக் கொடுத்து, தெண்டமாக எந்த செலவும் செய்து விடாதே என்று முறைப்புடன் கூறினார். நான் அந்த 200 ரூபாயை எடுத்துச் சென்று (கோபத்தில்) கோயில் உண்டியலில் போட்டுவிட்டேன். அதுதான் என்னுடைய சேஃப் லாக்கர் என்பது யாருக்கும் தெரியாது. எப்பொழுது வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம்.

மனதிற்குள் கேப்டன் பிரபாகரன் என்கிற நினைப்பில் இருக்கும் அவன் அணிவதற்கு ரீபோக் ஷு….

நான் அணிவதற்கு பேரகான் செப்பல்….

அவன் அணிவதற்கு விலை உயர்ந்த ஜாக்கி ஜட்டி….

நான் அணிவதற்கு ……. நான் அதைப் பற்றி சொல்ல விரும்பவில்லை….

அவன் ஓட்டிச் செல்வதற்கு ஹீரோஹோண்டா ஸ்பிளெண்டர் பைக்…

நான் ஓட்டிச் செல்லும் “விலையில்லா அம்மா சைக்கிளுக்கு” கடந்த ஒரு வாரமாக பஞ்சர் ஒட்ட கூட காசில்லை.

அவனுக்கு மட்டும் இரவு சுகமாக தூங்குவதற்கு உஷா டேபிள் ஃபேன்.

நான் மட்டும் வேப்பமரத்தடியில் போய் படுத்துக் கொள்ள வேண்டுமாம்.

அவனுக்கு மட்டும் தலைக்கு ஒரு தலையணை, காலுக்கு ஒரு தலையணை… அந்த தலையணையில் அவன் பேரை எழுதி வைத்திருக்கிறான் பொடிப்பயல். நான் அவன் தலையணையை எடுத்துக் கொண்டு விடுவேனாம்.

எனக்கோ கைதான் தலையணை…

அவன் சாப்பிடுவதற்கு மட்டும் பளபளவென சில்வர் தட்டு….

எனக்கு எங்கே தட்டு….நான் பலகாலமாக சாப்பிடுவது ஒரு திருடனைப் போலதான். அடுப்படியில் பூனை பாத்திரத்தை உருட்டினால் கூட, கேங்ஸ்டர் நம்பர் டூ என்னைத் திட்டுகிறார்.

இவையெல்லாவற்றையும் விட சகிக்க முடியாத ஒரு விஷயம் தினசரி நடைபெறுவதுண்டு. அந்த கேங் லீடர், அவன் தினமும் வேலைக்குச்செல்லும் முன், தன் மீசையை விளக்கி (அப்பொழுது அவர் புன்முறுவலுடன் இருப்பது உற்றுப்பார்த்தால் தெரியும்) அவனுக்கு ஒரு முத்தம் கொடுப்பார். தந்தை பாசமாம். அப்பொழுதெல்லாம், ஒருவேளை பிள்ளையார் பால் குடித்த அதிசயம் உண்மையாக இருக்கும்போல  என்று தோன்றும்.

நான் ஏன் ரூசோவின் சட்டையைப் பிடிக்கக் கூடாது. அனுபவமில்லாத அவரது வார்த்தைகளை வாபஸ் வாங்கவில்லை என்றால் சொர்க்கத்திற்குச் சென்று அவரது சட்டையைப் பிடிக்கத் தயங்கமாட்டேன்.

உண்மையில் எனக்குத்தான் இந்த மதுரையில் பிழைக்கத் தெரியவில்லையோ… என்னவோ… ஒரு காலத்தில், நாட்டுக்கோழி முட்டையை உடைத்து குடித்துவிட்டு எங்கே தெருத்தெருவாக ஓடுகிறான் என்று நான் அவனைப் பார்த்து ஆச்சரியப்பட்டதுண்டு. ஒரு கட்டத்தில் அவன் காவல் பணியில் சேர்ந்திருந்தான். எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. நான் அப்பொழுது திருநகர் 5வது பேருந்து நிறுத்தத்தில் கங்கா என்ற பெண்ணை சைட் அடித்துக் கொண்டிருந்தேன். அங்குள்ள தேநீர் கடையில் அடுத்தடுத்து 3 முறை டீ குடிப்பேன். அவள் வரும்வரை டீ குடிக்காமல் சும்மா உட்கார்ந்திருந்தால் கேள்வி கேட்க ஆரம்பித்துவிடுவான் அந்த கடைக்காரன்.

நான் காதலில் மயங்கிக் கிடந்த நேரத்தில் அவன் விழித்துக் கொண்டிருந்தான். நான் அசமந்தமாக இருந்துவிட்டேன். எனக்கு  சரியாகச் சொல்ல வேண்டுமென்றால் “நயாகரா சிண்ட்ரோம்” என்கிற வியாதி பீடித்திருந்தது அப்போது. நீர்வீழ்ச்சி வரும்வரை நான் காதல் கவிதை பாடிக்கொண்டிருந்திருக்கிறேன். இது நான் தோல்வியை ஒப்புக் கொண்டு நீர்வீழ்ச்சியில் குதிக்க வேண்டிய நேரம். கடந்தபோன பொன்னான நேரங்களைப் பற்றி கவலைப்பட்டு பிரயோஜனம் இல்லை. அழுது புலம்பி ஆகப்போவது ஒன்றும் இல்லை. நான் இன்று ஊரை விட்டு கிளம்பியாக வேண்டும்.

 

கேங்ஸ்ட்டர்ஸ் அனைவரும் போலியான சோகத்தைக் கண்களில் தேக்கி வைத்துக் கொண்டு வரிசையாக நின்றிருந்தார்கள். கேங்ஸ்டர் நம்பர் 2 ஒரு எடைமிகுந்த தூக்குவாளியை சேலைத்தலைப்பில் துடைத்தபடி என் கையில் கொடுத்தார். அதில் 2 மாதங்களுக்குத் தேவையான முறுக்கு, சீடை, அதிரசம் உள்ளிட்ட பதார்த்தங்கள் இருந்தன. சுமார் 15 கிலோ எடை இருந்தது. ஒருவேளை முறுக்கு வியாபாரம் செய்து பிழைத்துக் கொள் என சிம்பாலிக்காக சொல்கிறாரோ என்கிற சந்தேகம் எனக்கு இல்லாமல் இல்லை. அவர் வேறு அடிக்கடி பாலச்சந்தர் படத்தை கே டி.வி. யில்  பார்ப்பவர்.

கேங்ஸ்டர் நம்பர் 4 என் கைகளில் கத்தையாக பணக்கட்டு ஒன்றை திணித்தான். அத்தனையும் நூறு ரூபாய் சலவை நோட்டுக்கள். “இதில் 15 ஆயிரம் ரூபாய் இருக்கிறது” என்று என் காதருகே வந்து யாருக்கும் கேட்காதவாறு கூறினான்.

 

எனக்கு லேசாக பொறிதட்டியது. “இனி எந்த ஒரு காரணத்துக்காகவும் இந்த ஊர்பக்கம் தலைவைத்து படுக்கக் கூடாது என்பதற்காகத்தான் கூடுதலாக 5 ஆயிரம் ரூபாய் கொடுக்கிறானோ” என்று சந்தேகம் வலுத்தது.

கயிற்றுக் கட்டிலில் உட்கார்ந்திருந்த கேங்லீடர், தனது வேட்டியில் மடித்து வைத்திருந்த 2 ஆயிரம் ரூபாயை எடுத்து என் கைகளில் திணித்தார். பின் தன் மீசையை விலக்கிக் கொண்டு புன்முறுவலுடன் அருகே வந்து அந்த ……செயலைச் செய்தார். புளித்தவாடை அடித்தது. பின் வெளியே நின்று கொண்டிருந்த சி.பி.ஐ. துப்பறியும் நிபுணர் நைனா, தனது சுருக்குப் பையிலிருந்து கொத்தாக அந்தப் பவுடரை (திருநீறு) எடுத்தார். ஒரு சிலுப்பு சிலுப்பியபடி எனது நெற்றியில் பட்டையைத் தீட்டினார். கந்தனோ…. கருப்பனோ…. உன்னோடு எப்பொழுதும் துணையிருப்பார் என்று கூறினார்.

 

வெகுநாட்களாக ஓட்டுவதற்கு கேட்டும் கொடுக்காத பைக்கை இன்று என்னை ஓட்டுமாறு கூறினான் அவன். நான் கிளம்புவதற்கு முன் திரும்பிப் பார்த்தேன். கேங்ஸ்டர் நம்பர் 2வின் கண்களில் கண்ணீர் வடிந்திருப்பதை போல் தெரிந்தது. அதை அவர் தன் சேலைத்தலைப்பால் துடைத்துக் கொண்டிருந்தார்.

 

ஆரப்பாளையம் பேருந்து நிலையம் வரை நான் அந்த ஸ்பிளெண்டரை ஓட்டிச் சென்றேன். அவன் பின்னே அமர்ந்திருந்தான். அங்கிருந்து திருச்சி – திருச்சியிலிருந்து சென்னை. திருச்சி பேருந்தில் ஏறும் முன் அவன் என் கையில் ஒரு பொருளைத் திணித்தான். அது ஒரு மொபைல் ஃபோன். நான் சென்னை சென்று வேலை தேடி, முதல் மாத சம்பளத்தை யாருக்கும் கொடுக்காமல் ஒரு மைக்ரோமேக்ஸ் மொபைல் வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால் சென்னை கிளம்புவதற்கு முன்னரே அந்த மொபைல் எனக்கு கிடைத்தது சற்று அதிகப்படியாகத் தோன்றியது. இறுதியாக பேருந்து ஜன்னல் பக்கமாக வந்து அவன் கூறினான். ஏதேனும் பணம் தேவையென்றால் தனக்கு உடனடியாக ஃபோன் செய்யுமாறு….. என்னால் நம்பவே முடியவில்லை….. ஒருவேளை ரூசோ புத்திசாலியோ…..என்று சந்தேகம் தோன்றியது. பேருந்து கிளம்பியது. இரண்டு மணிநேரத்திற்குப் பிறகு லேசாக பசித்தது. ஒரு முறுக்கு சாப்பிடலாம் என்று தூக்குவாளியின் மூடியை திறந்தேன். உள்ளே ஒரு காகிதத்தில் சுற்றப்பட்டு கொத்தாக கிடந்தது பணக்கட்டு. எண்ணிப்பார்த்ததில், 7,255 ரூபாய் இருந்தது. தனது மொத்த சேமிப்பையும் கொடுத்துவிட்டார் போல கேங்ஸ்டர் நம்பர் 2….

 

……எனக்கு வேறு விதமாக வலித்தது இந்த ஊரைவிட்டுப் போக……

 

 

surya lakshminarayanan

Series Navigationஉனக்காக மலரும் தாமரைஜாக்கி சான் 19. ஆஸ்திரேலிய வாழ்க்கை
author

சூர்யா

Similar Posts

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *