மருத்துவக் கட்டுரை கிள்ளிய நரம்பு

This entry is part 1 of 26 in the series 29 டிசம்பர் 2013
                                                        Pinched Nerve
                              
                              
          எந்த நரம்பும் அழுத்தத்திற்கு உட்பட்டால் அதன் செயல்பாடு பாதிப்புக்கு உள்ளாகி, வலியும், மதமதப்பும், தசைகளின் பலவீனமும் உண்டாகும். இதைத்தான் நாம் பொதுவாக நரம்பு தளர்ச்சி என்கிறோம் . இந்த அழுத்தத்தை நரம்பு கிள்ளப்படுவதாக ( pinching ) வேறு விதத்தில் கூறப்படுகிறது.

இவ்வாறு நரம்புகள் அழுத்தத்திற்கு உள்ளாவது, அல்லது கிள்ளப்படுவது பல்வேறு காரணங்களால் உண்டாகலாம். கர்ப்பம், காயம், திரும்ப திரும்ப தொடர்ந்து செய்யும் செயல், மூட்டு நோய் போன்றவை சில உதாரணங்கள்.

இதுபோன்ற நரம்பு பாதிப்பு வெளி அல்லது புற நரம்பு மண்டலத்தின் எந்த பகுதியிலும் உண்டாகலாம். புற நரம்பு மண்டலம் என்பது மூளை மற்றும் தண்டெலும்புக்கு வெளியே உள்ள நரம்புகள் கொண்டது. குறிப்பாக இத்தகைய நரம்புகள், புடைத்த எலும்புகளின்மேல் செல்லும்போது அதிகமாக பாதிக்கப்படுகின்றன.

தோள்களிலிருந்து கை விரல்கள் வரை செல்லும் மீடியன் ( Median ), அல்நார் ( Ulnar ), ரேடியல் ( Radial ) நரம்புகள்தான் மிகவும் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றன.

இதற்கு அடுத்த அளவில் பாதிக்கப்படுபவை கால் நரம்புகள். இடுப்பிலிருந்து முழங்கால்வரை செல்லும் ஃப்பெமோரல் ( Femoral ) பாதங்களில் உள்ள ப்ளான்ட்டார் ( Plantar ), கால்களின் பக்கத்தில் செல்லும் பெரோனியல் ( Peroneal ) நரம்புகள் பாதிக்கப்படுகின்றன.

இதுபோன்று தண்டெலும்பின் அடியிலிருந்து கால் விரல்கள் வரை செல்லும் பெரிய நரம்பான சையேட்டிக் ( Sciatic ) நரம்பும் பாதிக்கப்படுகிறது.இதனால் உண்டாகும் கடுமையான இடுப்பு மற்றும் கால் வலியை சையட்டிக்கா ( Sciatica ) என்று கூறுவதுண்டு.

முதுகந்தண்டில் ( spinal column ) எலும்புகளுக்கு இடையில் உள்ள தண்டு வடங்களுக்கு ( discs ) இடையில் உள்ள பகுதியிலிருந்து தோன்றும் தண்டுவட நரம்புகளும் ( spinal nerves ) பாதிப்புக்கு உள்ளாகலாம்.

முறையான சிகிச்சையும் ஓய்வும் தந்தால் சில வாரங்களில்

பூரண குணம் பெறலாம்.

ஆனால் நரம்புகள் நீண்ட நாட்களாக தொடர்ந்து அழுத்தத்திற்கு உண்டானால் அவை நிரந்தரமாக பாதிக்கப்பட்டு செயலிழக்கலாம். .

கிள்ளிய நரம்புகளுக்கான காரணங்கள்

புற நரம்புகளில் அழுத்தம் உண்டானால் நரம்பு அழற்சி உண்டாகி வீக்கத்தையும், வலியையும் உண்டுபண்ணுகிறது.

இந்த அழுத்தம் காயம், விபத்து, நோய் அல்லது மரபணு கோளாறு போன்றவற்றால் ஏற்பாடலாம். சில வேலைகள் செய்வதின் காரணமாக கையோ அல்லது காலோ திரும்பத் திரும்ப ஒரே மாதிரியாகப் பயன்படுத்தப் படுவதால் நரம்பு அழுத்தத்திற்கு உட்பட்டு வீக்கம் அடையலாம். விசைப் பலகை பயன்படுத்துபவர், கார் இயந்திரங்கள் பொருத்துவோர் சில உதாரணங்கள்.

இன்னொரு முக்கிய காரணம் முதுகுத் தண்டு வடத்தில் ( spinal disc ) உண்டான மாற்றங்கள் காரணமாக நரம்புகள் அழுத்தத்திற்கு உட்படுவது. தண்டு வடம் விபத்தின் காரணமாகவோ அல்லது நோயின் காரணமாகவோ கிழிய நேர்ந்தால், அதனுள் உள்ள குழகுழவென்ற பிசின் போன்றது வெளியேறி நரம்புகளில் அழுத்த நேரலாம். இதுவே இப்போது அதிகமாகப் பேசப்படும் ” ஸ்லிப் டிஸ்க் ” ( ஸ்லிப்ட் Disc ) என்பதாகும். இதை தமிழில் வட்டச் சில்லுச் சரிவு என்று கூறுவர் உளர்

இது மாதிரியான பிரச்னை அதிக அசைவு தரும் இடுப்புப் பகுதியின் எலும்புகளிலும் ( Lumbar Spine ) கழுத்துப் பகுதி எலும்புகளிலும் ( Cervical Spine ) அதிகமாக தோன்றுகிறது. பாரம் தூக்குவது, அதிகமான உடல் பருமன் , சில விளையாட்டுகள் போன்றவை இதை உண்டுபண்ணலாம்.

           பரிசோதனைகள்

மருத்தவர் பரிசோதனை செய்தபின்பு எக்ஸ்ரே, எம்.ஆர்.ஐ, ஈ.எம்.ஜி. போன்ற சிறப்பு பரிசோதனைகள் செய்வார்.

                        சிகிச்சை

நரம்புக்கு அழுத்தத்தை உண்டுபண்ணும் வேலையைத் தவிர்ப்பது அல்லது நிறுத்துவது நல்லது. உறுப்புக் கவ்வி ( Brace ), தசை இறுக்கத்தை உண்டுபண்ணும் சிம்பு ( Splint ), இயல் மருத்துவம் ( Physiotherapy ) போன்றவை பயன் தரும்.

அழற்சியைக் குறைக்கும் மருந்துகள் ( Anti- inflammatory drugs ) பயன் தரும். Arcoxia, Brufen , Volteran போன்றவை சில மருந்துகள். கார்ட்டிக்கோஸ்ட்டீராய்ட்ஸ் ( Corticosteroids ) மருந்துகள் அழற்சியைக் குறைக்கும்.

அமிட்ரிப்ட்டிலின் ( Amitriptyline ) என்ற மருந்தும் வலி குறைக்கும்.

( முடிந்தது )

 

.

Series Navigationமருமகளின் மர்மம் 9சீதாயணம் நாடகப் பின்னுரை – படக்கதை – 13கண்ணீர் விட்டோம் வளர்த்தோம்பெண்மனதின் அரூப யுத்தம் ‘அம்மாவின் ரகசியம்’இடையனின் கால்நடை
author

டாக்டர் ஜி. ஜான்சன்

Similar Posts

4 Comments

 1. Avatar
  புனைப்பெயரில் says:

  உபயோகமான, அருமையான கட்டுரை. திண்ணையின் மூலையில் இருந்தாலும், தேடி வந்து படிக்கத் தூண்டும் டாக்டர் திரு ஜான்சன் படைப்புகள். ஒரு விண்ணப்பம்: மருந்து விவரங்களைத் தவிர்க்கலாமே? நம்ம ஆளுங்க ஏற்கனவே சிம்ப்டம்ஸ் சொல்லி ஃபார்மசியில் மருந்து வாங்கிச் சாப்பிடுறவங்க. எத்துனை நாள், எத்துனை முறை, அளவு, உடன் சாப்பிட வேண்டிய மாத்திரை என பலவற்றையும் ஆராய்ந்து சாப்பிடுதல் சரி தானே…. பல மருத்துவர்கள் “டாக்டர் வித் டார்கட்ஸ்” என்றாகி விட்டாலும் நிறைய நல் மருத்துவர்களும் உண்டு. அப்படியொருவரை தேடி மருத்துவர் ஆலோசனை பெற்று மருந்து எடுப்பதே நல்லது என்று நினைக்கிறேன்… டாக்டர் திரு. ஜான்சன் அது பற்றி சொல்ல வேண்டும்.

 2. Avatar
  ஜெயஸ்ரீ ஷங்கர். says:

  அன்பின் டாக்டர்.ஜி.ஜான்சன் அவர்களுக்கு,

  ‘நரம்பு’ பற்றிய முக்கிய விஷயங்களையும், முதுகுத் தண்டுவட நரம்பு பற்றிய விளக்கத்தையும்
  ஒரு சேர விளக்கி இருக்கிறீர்கள். மிக்க நன்றி. mild neuropathy பற்றி விளக்கம் இருக்குமோ என்ற
  ஆவல் இருந்தது. முடியும் போது அதைப் பற்றியும் விளக்கம் சொல்லுங்களேன். அத்தோடு
  ‘பாத எரிச்சல்’ லுக்கும் நரம்புகளுக்கும் சம்பந்தம் உண்டா? தங்களின் கட்டுரைகளில் பல
  விஷயங்கள் எளிதாக மனதில் பதிகிறது. (தங்களின் கதைகளைப் போலவே) மிக்க நன்றி.
  இனியப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

  அன்புடன்
  ஜெயஸ்ரீ ஷங்கர்.

 3. Avatar
  Dr.G.Johnson says:

  அன்புள்ள நண்பர் புனைப்பெயரில் அவர்களே, நீங்கள் கூறியுள்ளது உண்மையே. நான் ஒரு நோய் பற்றி எழுதும்போது கட்டுரையின் இறுதியில் சிகிச்சை முறையையும் எழுதினால்தான் முழுமை பெரும் என்று கருதி சில மருந்துகளின் பெயர்களையும் எழுதினேன். ஒவ்வொரு மருந்துக்கும் ஏதாவது பக்கவிளைவும் இருக்கலாம். வேறு மருந்துக்களுடன் சேர்த்து உண்டால் வேறு விளைவுகளும் உண்டாகலாம். இதனால் மருந்துகளை எப்போதுமே மருத்துவரின் ஆலோசனையின்பேரில் உட்கொள்வதே நல்லது. பெயரை மட்டும் தெரிந்துகொண்டு பார்மசியில் சொந்தமாக வாங்கி பயன்படுத்துவது ஆபத்தை உண்டு பண்ணலாம்.சில சாதாரண வலி நிவாரணிகள் வாங்கி உட்கொள்வதில் தவறில்லை. ஆனால் Antiboitics போன்றவற்றை விருப்பம்போல் வாங்கி பயன்படுத்துவது தவறு. இனிமேல் கூடுமானவரை மருந்துகளின் பெயர்களைத் தவிர்க்க முயல்கிறேன். நன்றி..அன்புடன் டாக்டர் ஜி. ஜான்சன்.

 4. Avatar
  Dr.G.Johnson says:

  அன்பின் ஜெயஸ்ரீ ஷங்கர் அவர்களே, மருத்துவக் கட்டுரைகள் தங்களைக் கவர்ந்துள்ளன என்பது அறிந்து மிக்க மகிழ்ச்சி.. பொதுவாகவே பலர் இதுபோன்றவற்றை விரும்பிப் படிப்பதில்லை.

  Mild Neuropathy பற்றி கேட்டிருந்தீர்கள். அதுவும் இந்த வகையைச் சேர்ந்ததுதான். அதுபற்றி பின்னர் விளக்கமாக தனிக் கட்டுரை எழுதுகிறேன்.

  பாத எரிச்சல் ( Burning sensation foot ) பற்றி கேட்டுள்ளீர்கள். இதுவும் நரம்புகள் தொடர்புடையதே. இது பெரும்பாலும் நீரிழிவு நோயில் உண்டாகும் பின்விளைவுகளில் ஒன்றாகும். இந்த நோயினால் பாதிக்கப்படும் நரம்புகள் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பாது. இதை Diabetic Neuropathy என்று அழைக்கிறோம். இது உண்டானால் பாதிக்கப்பட்டுள்ள கால்களில் மதமதப்பு, கூசுதல், அல்லது எரிச்சல் போன்ற அறிகுறிகள் உண்டாகும். இதுபற்றியும் பின்பு விளக்கம் தருவேன். நன்றி … அன்புடன் டாக்டர் ஜி. ஜான்சன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *