மலரினும் மெல்லியது!

author
3
0 minutes, 3 seconds Read
This entry is part 11 of 29 in the series 12 ஜனவரி 2014

 

ஜி.மீனாட்சி

 

சந்தனமும், சென்ட்டுமாக கல்யாண வீடு கமகமத்தது. பட்டுப் புடவை சரசரக்க, மல்லிகைச் சரமும், வளையல்களுமாக பெண்களின் வர்ணஜாலம். சுடிதாரில் துள்ளித் திரியும் வண்ணத்துப் பூச்சிகள். ஷெர்வானியிலும், பைஜாமாவிலும் கண்களால் வலைவீசும் இளைஞர்கள்.

முகூர்த்தத்துக்கு இன்னும் நேரமிருந்தது. மணவறைக்கு மாப்பிள்ளை பையன் வந்துவிட்டான். அவனுடன் இளவட்டங்கள் நான்கைந்து பேர். நண்பர்களாக இருக்கவேண்டும். சிரிப்பும், கேலியுமாக அரங்கத்தை மறந்து தனி உலகில் லயித்திருந்தனர். பெற்றவர்களின் ஒப்புதலுடன் நடக்கும் காதல் கல்யாணம் என்பதால் கூடுதல் குதூகலம்.

“ரொம்ப சின்னப் பையனா இருக்கான். மெட்ராஸ்ல ஐ.டி. கம்பெனியில வேலையாம். மாசம் ஐம்பதாயிரம் சம்பாதிக்கிறானாம்…’’

தனக்கு அருகே அமர்ந்திருந்த பெண்களின் பேச்சைக் கேட்டு நிமிர்ந்து உட்கார்ந்தாள் சித்ரா. மாப்பிள்ளைப் பையன் ஐ.டி.யில் வேலை பார்ப்பதால்தான் இந்த அளவுக்கு இளவட்டங்களின் கூட்டம் நிரம்பி வழிகிறது என்று தனக்குள் சொல்லிக் கொண்டாள்.

“நம்ம ஸ்ரீஜா மட்டுமென்ன, குறைஞ்சவளா? அவளும் மாசம் முப்பதாயிரம் சம்பாதிக்கிறாதானே…’’

பக்கத்து இருக்கைப் பெண்களின் பேச்சைக் கேட்டு, சித்ராவின் இதழ்களில் புன்னகை அரும்பியது. அதை அப்பெண்கள் கவனித்திருக்க வேண்டும்.

“நீங்க பொண்ணு வீடா… இல்ல, மாப்பிள்ளை வீடா…?’’ என்றாள் அவர்களில் ஒருத்தி.

“ஸ்ரீஜாவோட ஃப்ரெண்ட் ஜானவியோட அம்மா நான்…’’ – முத்துப் பல் தெரிய சிரித்தாள் சித்ரா.

“மெட்ராஸிலிருந்தா வாரீங்க…’’ என்றவளின் கண்களில் ஆச்சரியம்.

“மாப்பிள்ளை பையன்கூட ஸ்ரீஜாவோட ஆபீஸ்லதான் வேலை பார்க்கிறான்னு கேள்விப்பட்டோம். மாப்பிள்ளையையும் உங்களுக்குத் தெரியுமா?’’ என்றாள் மற்றொருத்தி.

“எம் பொண்ணு ஜானவி, ஸ்ரீஜா, மாப்பிள்ளை அஸ்வின் எல்லோரும் ஒரே ஆபீஸ்லதான் வேலை பார்க்கிறாங்க…’’

“பையன் எப்படி…. நல்ல குணமா…?’’ முதலில் பேசியவள் ஆவலை அடக்கமாட்டாமல் கேட்டாள்.

“ரொம்ப நல்ல பையன்.’’

சித்ராவின் பதிலில் திருப்தியடைந்தவளாய் அப்பெண் வெள்ளந்தியாய்ச் சிரித்தாள்.

“எப்படியோ நல்லாயிருந்தாச் சரி. வேற ஜாதிப் பையன்னவொடனே எங்களுக்கெல்லாம் ஒரே பயம். நான் ஸ்ரீஜாவோட அத்தை. அவங்க அப்பாகூடப் பொறந்தவ. `கட்டுனா இந்தப் பையனத்தான் கட்டுவேன்னு’ ஸ்ரீஜா ஒரே கால்ல நின்னா. வேற வழியில்லாம என் தம்பி இந்தக் கல்யாணத்துக்கு சம்மதிச்சான்… ஒரே பொண்ணு வேற. அவ விருப்பத்துக்கு மாறா வேற இடத்துல கல்யாணம் பண்ணி வெக்க முடியாது பாருங்க… ஒண்ணுகிடக்க ஒண்ணு பண்ணிகிட்டா என்ன செய்ய முடியும்…? காலம் மாறிடுச்சே! புள்ளைங்களோட சந்தோஷம்தானே நமக்கு முக்கியம்.’’

அந்த அம்மாளின் பேச்சைக்கேட்டு மெல்லச் சிரித்தாள் சித்ரா.

“நீங்க பயப்படவே வேண்டாம்… அஸ்வின் ரொம்ப நல்ல பையன். ஸ்ரீஜாவை சந்தோஷமா வெச்சுப்பான்….’’

“அதுதான் எங்களுக்கு வேணும்….’’

அத்தைக்காரி சமாதானமடைந்தவளாக சுற்றிலும் கவனிக்க  ஆரம்பித்தாள். சிரிப்புக்கும் கலகலப்புக்கும் மத்தியில் தோழிகள் புடைசூழ ஸ்ரீஜாவை மேடைக்கு அழைத்து வந்தார்கள். ரோஜா வண்ணப் பட்டில் தேவதையாய் ஜொலித்தாள் அவள். ஜானவி, தேவி, வித்யா என்று தோழிகள் பட்டாளம் அவளுடன் இணைந்து வந்தது.  அவர்களில் சின்னப் பெண்ணாய், ஒல்லியாய் சிவப்பாய் மினுங்கினாள் ஜானவி.

மகளைப் பார்த்ததும் மனம் நிறைந்து போனது சித்ராவுக்கு. ஜானவிக்கும் இருபத்தி மூன்று வயது நிரம்பிவிட்டது. சீக்கிரமே  வரன் தேட ஆரம்பிக்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டாள்.

கூடவே அந்தக் கூட்டத்தில் யமுனா இல்லாதது வருத்தமாக இருந்தது. இப்போது யமுனாவின் நிலை எப்படியிருக்குமோ என்று  சிந்தனை ஓடியது. கடந்த ஒரு மாதமாக, யமுனாவைப் பற்றிய நினைவுகள் தோன்றாத நிமிடங்கள் அரிதாகவே இருக்கின்றன. இப்போது எப்படி இருப்பாள் அவள்?

ஸ்ரீஜா, ஜானவி, யமுனா, தேவி, வித்யா என்று தோழிகள் ஐந்து பேரும் சேர்ந்தால் கலகலப்புக்குப் பஞ்சமிருக்காது. என்ஜினீயரிங் கல்லூரியிலிருந்து ஐவருக்கும் நல்ல அடர்த்தியான நட்பு. படித்து முடித்து வேலை கிடைத்தும் தொடர்கிறது.   ஸ்ரீஜாவின் காதல் இன்று திருமணத்தில் முடிந்திருக்கிறதென்றால், அதற்கு மூல காரணமே இந்தத் தோழிகளின் ஆழமான நட்புதான்.  ஸ்ரீஜா வீட்டில் இதுபற்றிப் பேசி, தோழியின் மனத்தை பெற்றோருக்குப் புரியவைத்து என்று, ராமர் பாலம் கட்ட அணில் செய்த உதவிபோல்,  தோழிக்காக இவர்கள் செய்த உதவியை நிழல் சாட்சியாய் கூடவே இருந்து பார்த்திருக்கிறாள் சித்ரா.

அதிலும் யமுனா செய்த உதவி மறக்கக்கூடிய ஒன்றா என்ன?  அஸ்வின் வீட்டில் ஜாதிப் பிரச்னை தலைகாட்டியபோது, ஸ்ரீஜாவுக்காக பெங்களூரில் இருக்கும் அஸ்வின் வீட்டுக்குத் தூது போனாள் யமுனா. அஸ்வினைப் போலவே யமுனாவுக்கும் கன்னடம்தான் தாய்மொழி என்பதால், அவனது அம்மாவிடம் மனம்விட்டுப் பேசி தோழியின் நல்ல குணங்களை எடுத்துக்கூறினாள்.

இத்தனை பேரின் முயற்சியும், உழைப்பும் ஒன்று சேர்ந்ததால் மட்டுமே இந்தத் திருமணம் சாத்தியமாயிற்று. திருமணத்தை நேரில் கண்டு மகிழ வேண்டிய யமுனா, இப்போது மருத்துவமனையில்  உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறாள்.  எந்தத் தவறும் செய்யாமல் தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கிறாள். சட்டென்று கண்களில் துளிர்த்த நீரை யாரும் அறியாமல் வேறு பக்கமாகத் திரும்பி மெல்லத் துடைத்துக் கொண்டாள் சித்ரா.

“ஆண்டி, நானும் ஜானவியும் எம்.பி.ஏ. படிக்கலாம்ட்டு இருக்கோம்.  நல்ல மார்க் கிடைச்சதுன்னா, ஐஐஎம்-ல சேர்ந்து படிப்போம். அதனால, ஜானவிக்கு இப்போதைக்கு கல்யாணம் பண்ற எண்ணத்தை விட்டுடுங்க…’’ கண்டிப்பும், கறாருமாய் தோழிக்காகப் பரிந்து பேசிய யமுனா, இன்று பேச்சுமூச்சற்றுக் கிடக்கிறாள். இதை விதியின் சதி என்பதா? இல்லை புதிதாக வேறு பேர் சொல்லி அழைப்பதா?

யமுனாவின் அப்பா, பல்லடத்தில் டெய்லர் கடை வைத்திருக்கிறார். யமுனாவையும் அவளது தம்பியையும் நல்ல நிலைக்குக் கொண்டு வரவேண்டும் என்பதற்காக தையல் இயந்திரத்தை இயக்கி இயக்கியே இயந்திரமாகிப் போனவர். அவளது அம்மா, அக்கம்பக்கத்து வீடுகளில் பத்துப் பாத்திரம் தேய்த்து ஓடாய்த் தேய்ந்து உருக்குலைந்து போனவள். கணவனும், மனைவியும் ஓயாது பாடுபட்டுச் சம்பாதித்த பணத்தை, குழந்தைகளின் படிப்புக்கும், பசியைப் போக்கவும் செலவிட்டு வந்தனர். வறுமையான சூழ்நிலையிலும், கடனோ உடனோ வாங்கி மகளை என்ஜினீயரிங் படிக்க வைத்தனர். பெற்றவர்களின் கஷ்டத்தை நன்கு உணர்ந்திருந்ததால், யமுனாவும் படிப்பில் படு கெட்டியாய் இருந்தாள். படித்து முடித்தவுடன் அவளது புத்திசாலித்தனத்துக்கு ஏற்றபடி நிறுவன வளாக நேர்காணலிலேயே வேலையும் கிடைத்தது.

சென்னையில் ஹாஸ்டலில் தங்கி வேலைக்குச் சென்று கொண்டிருந்தாள் யமுனா. அவளது சம்பளத்தால், குடும்பம்  ஓரளவுக்கு மெல்லத்  தலைநிமிர்ந்தது. வறுமையின் இருள் விலகி, வளமையின் ஒளி பரவத் தொடங்கியிருந்த நிலையில், பெற்றோரின் தலையில் பேரிடி விழுந்ததுபோல ஆனது, அந்தத் துயரச் சம்பவம்.

பொங்கலையொட்டி ஒரு வாரம் விடுமுறை எடு்த்துக்கொண்டு சொந்த ஊருக்குச் சென்றிருந்தாள் யமுனா. பல்லடம் பஸ் நிலையத்தில்   பஸ்ஸை விட்டிறங்கியதும் அவள் முன் எதிர்ப்பட்டான் மோகன். அவளது அப்பாவிடம் சட்டை தைப்பதற்காக அடிக்கடி வந்துசெல்லும் அவன், அவளைப் பார்க்கும்போதெல்லாம் நட்புடன் சிரிப்பான். அவளது படிப்புக்காக அவனிடம் அப்பா கொஞ்சம் கடன் வாங்கியிருந்தார். அதனால் அவளைப் பார்க்கும்போதெல்லாம், அவளது படிப்பு, ஹாஸ்டல் பற்றியெல்லாம் ஆர்வத்துடன் விசாரிப்பான். அப்பாவுக்குப் பழக்கமானவன் என்ற அக்கறையில் விசாரிக்கிறான் என்றுதான் நினைத்திருந்தாள் யமுனா. மோகனின் மனதில் பின்னியிருக்கும் மோக வலையைப் பற்றி அவள்  அறிந்திருக்கவில்லை. யமுனா மீதான ஒரு தலைக்காதலை தனக்குள்ளேயே வளர்த்துக்கொண்டு மருகி வந்திருக்கிறான் மோகன்.

பொங்கல் கொண்டாட ஊருக்கு வந்திருந்தவளை தனியே சந்தித்து தன் காதலைச் சொல்லியிருக்கிறான். அதைக் கேட்டதும், யமுனா அதிர்ந்து போனாள்.

“அப்படிப்பட்ட எண்ணம் ஏதும் என் மனசுல இல்ல… அதுவுமில்லாம உங்கள ஒருசில தடவைகள் மட்டுமே பார்த்திருக்கிறேன். நீங்க சொல்றதுபோல காதல், கீதல்னு எந்த நினைப்பும் எனக்குள்ள இல்ல’’ என்று மனதில் பட்டதை பளிச்செனப் பேசிவிட்டு அந்த இடத்தைவி்ட்டு நகர்ந்தவள் மீது அந்த நிமிடம் முதல் தீவிர வன்மத்தை வளர்த்திக் கொண்டிருக்கிறான் மோகன்.

இது தெரியாமல் வழக்கம்போல வேலை, குடும்பம், படிப்பு என்று யமுனா இயங்கிக் கொண்டிருந்தாள். மனதில் பற்றிய ஆசைத் தீயைத் தணித்துக்கொள்ள வேறு வழி தெரியாத நிலையில், யமுனாவின் தந்தையிடமே அவளைத் திருமணம் செய்து தரும்படி கேட்டிருக்கிறான் மோகன். பெண்ணின் சம்மதம் இல்லாமல் தான் எதுவும் செய்ய முடியாது என்று அவர் மறுத்திருக்கிறார்.

விடாக்கொண்டனான மோகன், தொடர்ந்து அவரை நச்சரிக்க, பொறுக்க முடியாமல் மகளிடமே இதுபற்றிப் பேசியிருக்கிறார்.

“அப்பா, நான் மேல படிக்கணும். கல்யாணத்தைப் பத்தி இப்போதைக்கு என்னால நினைச்சுக்கூடப் பார்க்க முடியல. தம்பியை டாக்டருக்குப் படிக்க வைக்கணும். அதுக்காக கொஞ்சம் பணம் சேர்க்கணும். அதுவுமில்லாம, மோகனைப்போல ஒரு ஆளை நிச்சயமா என்னால கல்யாணம் செய்துக்க முடியாது…’’ என்று மகள் வெட்டுஒன்று துண்டு இரண்டாகப் பேசிவிட, அத்துடன் அந்தப் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார் அப்பா.

மகளின் விருப்பமின்மையை பக்குவமாக மோகனிடம் தெரிவித்துவிட்டு, அவனிடம் வாங்கிய கடனையும் திருப்பிக் கொடுத்திருக்கிறார். `பணம் தேவையில்ல; உங்க மகளை எனக்கு கட்டிக்கொடுத்தா போதும்’ என்று பிடிவாதம் பிடித்தவனிடம், இனிமேல் வீட்டுப் பக்கமே வரக்கூடாது என்று கறாராகச் சொல்லி, திட்டி அனுப்பியிருக்கிறார்.

இவையெல்லாமே அடிபட்ட பாம்பாய் மோகனுக்குள் சீற்றத்தை ஏற்படுத்தியிருந்ததை தந்தையும், மகளும் அறிந்திருக்கவில்லை.

வழக்கம்போல் ஒரு விடுமுறையில் பல்லடத்துக்குப் போயிருந்தவள், ஏதோ வாங்குவதற்காக கடைவீதிக்குச் சென்றிருக்கிறாள். அதற்காகவே காத்திருந்தவன்போல, அவளைப் பின்தொடர்ந்து சென்ற மோகன், தனிமையான சந்தர்ப்பத்தில் அவள் மீது திராவகத்தை வீசிவிட்டு ஓடிவி்ட்டான். பட்டுப் போன்ற முகம் நொடியில் கருகிப் பொசுங்க, தரையில் விழுந்து புரண்டு கதறிய யமுனாவை, வழியில் சென்றவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையி்ல் சேர்த்துவிட்டு, பெற்றோருக்குத் தகவல் கொடுத்திருக்கிறார்கள்.

அலறியடித்துக்கொண்டு அவர்கள் மருத்துவமனைக்கு விரைவதற்குள், நிலைமை படுமோசமாகிவிட்டிருக்கிறது.

அதற்குள் விஷயம் மீடியாவரை பரவிவிட, அடுத்த நாள் காலையில் பத்திரிகைகளில் முதல் பக்கச் செய்தியானாள் யமுனா.  அரசியல் கட்சிகள் முதல் பெண்ணியவாதிகள் வரை யமுனாவுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்க, யமுனாவின் வாழ்க்கை இப்போது திறந்த புத்தகமாகியிருக்கிறது. சமூக சேவை அமைப்புகளும், பெண்ணியவாதிகளும் அவளுக்கு நடந்த கொடுமையை கடுமையாக எதிர்க்க, மோகன் இப்போது சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறான்.

அமிலத்தின் வீச்சு, யமுனாவின் முகத்தை மட்டுமல்லாமல் நுரையீரல், நெஞ்சுப் பகுதி, உணவுக்குழாய் என்று உடலின் பல முக்கியப்  பகுதிகளை அரித்துத் தின்றுவிட்டது.

`உயிர் பிழைத்ததே பெரிய விஷயம். உள் காயங்கள் குணமாக வருடக்கணக்கானாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை’ என்று டாக்டர்கள் கூற, நம்பிக்கை இழந்து நடைப்பிணமாய் மாறிப் போனார்கள்  பெற்றோர்.  தோழிகளின் உதவியுடன், யமுனாவை சென்னையிலுள்ள  பிரபல மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

சிகிச்சைக்கான எல்லா செலவுகளையும் சமூக நல அமைப்புகளே ஏற்றுக் கொண்டன.  ஆயிற்று. இன்றுடன் நாற்பது நாட்கள் ஓடிவி்ட்டன. யமுனாவின் உடல்நிலையில் எந்தவித  முன்னேற்றமில்லை. உட்காரவும் முடியாமல் படுக்கவும் முடியாமல் மரண அவஸ்தையில் அவள் படும் வேதனை சகிக்க முடியாததாக இருக்கிறது. தோழிகளைப் பார்க்கும்போதெல்லாம் அவளது துயரம் அதிகமாகிறது.

பல  நேரங்களில் சம்பந்தமே இல்லாமல் பேசுகிறாள். தனக்குத்தானே பேசி, தலையிலடித்துக்கொண்டு அழுகிறாள்.

“நான் சீக்கிரமே குணமாயிடுவேன் ஜானவி. பார்த்துட்டே இரு,  அந்த மோகனை என்ன பண்றேன்னு. சட்டத்து முன்னால அவனை நிறுத்தி, தண்டனை வாங்கித் தரலைன்னா என் பேரு யமுனா இல்லை. எந்தப் பொண்ணுக்கும் என்னைப் போல கொடுமை இனி நடக்கக்கூடாது….’’ என்று ஆத்திரமும், கோபமுமாகப் படபடப்பவள், அடுத்த நொடியே வலியிலும், வேதனையிலும் துவண்டு போகிறாள்.

“நான் சீக்கிரமே செத்துப் போறதுதான் நல்லது. எனக்காக நீங்கள்லாம் ஏன் இப்படிக் கஷ்டப்படறீங்க…? ஏன் இவ்வளவு பணத்தை செலவழிக்கறீங்க…? நான் உயிரோட இருந்தாலும், என்னோட பழைய முகம் எனக்குக் கிடைக்குமா…? எனக்கு வாழவே பிடிக்கலை ஜானவி… வலி உயிர்போகுதுப்பா….’’ என்று பைத்தியம் பிடித்தவள் போல போர்வையால் முகத்தை மூடிக்கொண்டு அவள் அழுத காட்சி இன்னமும் சித்ராவின் கண்களைவிட்டு அகல மறுக்கிறது.

ஒருமுறை சித்ரா அவளைப் பார்க்கச் சொன்றிருந்தபோது அவளது கைகளைப் பிடித்துக்கொண்டு கதறிவிட்டாள்.

“இனி நான் உயிரோடு இருந்து என்ன பிரயோஜனம் ஆண்ட்டி? ரணமாகிப் போன என்னோட முகத்தை வெச்சுக்கிட்டு நான் இனி எப்படி நடமாடுவேன்… என்னைக் கொன்னுடச் சொல்லுங்க ஆண்ட்டி…. நான் உயிர் வாழ விரும்பல…’’ என்று அரற்றியவளை எப்படி சமாதானப்படுத்துவது என்று தெரியாமல் தவித்துப் போனாள் சித்ரா.

“எல்லாம் சரியாயிடும் யமுனா. நல்ல டாக்டர்ஸ் உன்னை ட்ரீட் பண்ணிட்டு இருக்காங்க. சீக்கிரமே நீ குணமாகி, வேலைக்குப் போவே… கவலைப்படாம நிம்மதியாத் தூங்கும்மா…’’

அப்போதைக்கு யமுனாவைச் சமாதானப்படுத்திவிட்டாலும், மனதுக்குள் அவளைப் பற்றிய கவலை அதிகரித்தபடியேதான் இருக்கிறது. அழகும், படிப்பும் நிறைந்த இளம்பெண்களே தங்களின் முன்னேற்றத்திற்காகப் போராடிக் கொண்டிருக்க வேண்டியிருக்கிறது. முகம் குரூரப்பட்டு, உடலின் முக்கிய பாகங்கள் அமிலத்தால் அரிக்கப்பட்டு, நரக வேதனையை அனுபவித்துக் கொண்டிருக்கும் யமுனாவின் எதிர்காலம் எப்படியிருக்கப் போகிறது?

 

***********************

 

கெட்டி மேளம்…. கெட்டி மேளம்….!

புரோகிதரின் குரலைத் தொடர்ந்து மேளச் சத்தம் அதிகரிக்க, சட்டென்று தன் நினைவுக்கு வந்தாள் சித்ரா.

ஸ்ரீஜா கழுத்தில் மூன்று முடிச்சிட்டு நிமிர்ந்தான் அஸ்வின். மாலை மாற்றி, மேடையை வலம் வந்த மணமக்கள், பார்வையாளர்களைப் பார்த்து கைகூப்பி வணங்கினர். அதற்காகவே காத்திருந்ததுபோல,  வாழ்த்துத் தெரிவிப்பதற்காக விருந்தினர்கள் மேடையை நோக்கி விரைந்தனர். சித்ராவும் மெல்ல எழுந்தாள். அவளது கண்கள் ஜானவியைத் தேடின. அதே நேரம் ஜானவியும் அவளைத் தேடிக் கொண்டு எதிரே வந்தாள்.

“அம்மா, நீயே கிஃப்ட்டைக் கொடுத்துட்டு வா. சாப்பிடப் போகலாம். நாங்கள்லாம் டைனிங் ஹால்கிட்டே வெயிட் பண்றோம்…’’ சிட்டாகப் பறந்து தோழிகளுடன் இணைந்து கொண்டாள் ஜானவி. ள்.

பரிசுப் பொருளை ஸ்ரீஜாவிடம் கொடுத்து, மணமக்களை ஆசீர்வதித்தபின் மேடையைவிட்டுக் கீழே இறங்கிய சித்ரா, எதிர்பாராமல் யார் மீதோ மோதிக் கொண்டாள்.

“ஸாரி….’’ என்றபடியே நிமிர்ந்தவளின் கண்களில் ஒரு நொடியில் ஓராயிரம் மின்னல்கள். உடல் முழுக்க மின்சாரம் பாய்ந்ததுபோன்ற மெல்ல அதிர்ச்சி. தலை வழியே  கால்களில் வழி்ந்தாற்போன்ற பரவச  உணர்வு.  ஒரு கணம் தடுமாறிப் போனாள் சித்ரா. அவள் மீது மோதிய குமரேசனும் கிட்டத்தட்ட அதே நிலையில்தான் இருந்தான். ஏதோ பேச விரும்பிய அவனது உதடுகள், பேச மறந்து துடித்தன. இருவருக்குள் ஏற்பட்ட எதிர்பாராத ரசாயன மாற்றங்கள் மெல்லத் தணியும் வரையில் இருவரும் ஏதும் பேச முடியாமல் திகைத்து நின்றனர்.

குமரேசன் ஒருவிதம் தன்னை சுதாரித்துக் கொண்டு, “எப்படியிருக்கே சித்ரா?’’ என்றான் ஒரு பூவை வருடுவதைப் போன்ற மென்மையான குரலில். அவன் உள்ளத்தில் நிறைந்திருந்த அத்தனை மகிழ்ச்சியும் அந்தக் குரலில் வழிந்தது. முகம் முழுக்க பரவிய சந்தோஷத்தில், அவனது சிவந்த நிறம் மேலும் சிவந்தது.

“குமரேசன்… நீங்க… இங்க எப்படி குமார்…?’’

வார்த்தைகளைத் தேடிப் பிடித்து எப்படியோ பேசி விட்டாலும், சித்ராவின் உள்ளம் ஆனந்தத்தில் துடித்துக் கொண்டிருந்தது.

“மாப்பிள்ளை அஸ்வின் என்னோட அக்கா பையன்தான்… நீ எப்படி இருக்கே சித்ரூ?’’

“நல்லா இருக்கேன் குமார். என் பொண்ணு ஜானவியோட ஃப்ரெண்டுதான் ஸ்ரீஜா. ஜானவி, ஸ்ரீஜா, அஸ்வின் எல்லோரும் ஒரே ஆபீஸ்ல வேலை பார்க்கிறாங்க…’’

“வெரி நைஸ்! உன்னை இங்க பார்த்ததுல எனக்கு எவ்ளோ சந்தோஷம் தெரியுமா? தேங்க் காட்! இருபத்தி ஆறு வருஷங்களுக்குப் பிறகு உன்னை மறுபடியும் சந்திக்க வெச்ச அந்தக் கடவுளுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல. நீ எங்கிருக்கறே? என்ன பண்றேனு தெரிஞ்சுக்க நான் எவ்வளவு முயற்சி செய்தேன் தெரியுமா? இன்டர்நெட், ஃபேஸ்புக்னு உன்னைத் தேடாத இடமே கிடையாது. இப்போ, இதோ, என் கண் முன்னால உன்னைக் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிற கடவுளுக்கு நான் எப்படி நன்றி சொல்லப் போறேன்…’’

உள்ளத்தில் பொங்கி வழிகிற அன்பையெல்லாம் வார்த்தைகளால் கொட்டிவிட்ட பரவசத்தில் நெக்குருகி நின்ற குமரேசனைப் பார்த்தபோது, சித்ராவின் கண் ஓரங்களில் நீர் துளிர்த்தது. பேச்சே தேவையில்லாததுபோல அவள், அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

அன்று பார்த்ததுபோல அப்படியே இருக்கிறான் அவன். உடம்பு மட்டும் சற்றே பூசினாற்போல் இருக்கிறது. மற்றபடி அதே தேஜஸ். உயரத்துக்கேற்ற பருமன். தாமரைபோல் சிவந்த நிறம். அதைவிடச் சிவப்பான உதடுகள். உதடுகளின் அழகை எடுத்துக்காட்டும், பொருத்தமான மீசை.

அவன் மீதான தன் கவனத்தை திசைதிருப்பும் வகையி்ல் சட்டென்று தன் கண்களைத் தாழ்த்திக் கொண்டாள் அவள்.

குமரேசனுக்கும் அதே உணர்வுதான் இருந்திருக்கவேண்டும். அவனது பார்வையிலும் கனிவும், அன்பும் கலந்த நெகிழ்வு. அவள் சட்டென்று தன்னுணர்வு பெற்றவளாய், “உங்க வீட்லயிருந்து யாரும் வரலையா?’’ என்றாள்.

“என் ஒய்ப் சௌம்யா, ஐ ஸ்பெஷலிஸ்ட். லண்டன்ல நடக்கிற ஒரு மாநாட்டுக்குப் போயிருக்கறா. ஏற்கெனவே ஃபிக்ஸ் பண்ணுன புரோக்கிராம். தவிர்க்க முடியல. என்கூட என் மகள் பூர்ணா வந்திருக்கறா. ஒரே பொண்ணு. செவன்த் படிக்கிறா…’’

“ரொம்ப சின்னப் பொண்ணா இருப்பா போலிருக்குது…’’

“யெஸ். நானே லேட்டாத்தானே மேரேஜ் பண்ணிக்கிட்டேன்….’’ என்றான் குமரேசன் கூச்சத்துடன்.

“பி.காம். முடிச்சபிறகு என்ன செய்தீங்க…?’’

“டெல்லி போய் மேனேஜ்மெண்ட் கோர்ஸ் படிச்சேன். முடிச்சதும், அமெரிக்காவில ஒரு கம்பெனில அஞ்சு வருஷம் வேலை பார்த்தேன். கல்யாணமானதும்  இந்தியா திரும்பி சொந்தமா பிஸினஸ் பண்ண ஆரம்பிச்சேன். பெங்களூர்ல ஃபைனான்ஷியல் கன்சல்டன்சி வெச்சு நடத்தறேன். அங்கயே சொந்த வீடு வாங்கி செட்டில் ஆயிட்டேன்…’’

சுருக்கமாக தன்னைப் பற்றிச் சொன்னான் குமார்.

“வாட் அபௌட் யூ….?’’

“பி.காம். முடிச்சவுடனே எனக்குக் கல்யாணமாயிடுச்சுங்கற விஷயம்தான் உங்களுக்குத் தெரியுமே! அவர் ஆடிட்டரா இருக்கார். ரெண்டு பொண்ணுங்க. ஜானவி மூத்த பொண்ணு. லட்சுமி ரெண்டாவது பொண்ணு. சென்னையிலயே செட்டிலாயிட்டோம். முழுக்க முழுக்க ஹோம் மேக்கராயிட்டேன்…’’  நிறைவாகச் சிரித்தாள் சித்ரா.

“கேட்கவே ரொம்ப ஹேப்பியா இருக்குது. எப்பவும் உன்னைப்பத்திதான் எனக்கு நினைப்பு. நீ எப்படியிருப்ப, எங்க இருப்பேன்னு நினைக்காத நாளில்லை…. கடவுளோட கருணையை நினைச்சு ஆச்சரியமா இருக்குது. எதுமேல நாம ரொம்ப அன்பா இருக்கிறோமோ, அதை நம்ம கண்ணுல காட்டாம இருக்கமாட்டார் கடவுள்ங்கிறதுக்கு, இப்ப நான் உன்னை சந்திச்சதே சாட்சி….நீ சந்தோஷமா இருக்கறேதானே…?’’

“நல்லா இருக்கேன் குமார். உங்களைப்போல பாசமான ஒரு நண்பனோட ஆசீர்வாதம் எனக்கு என்னைக்கும் இருக்கும்போது, சந்தோஷத்துக்குக் குறைவேது?’’

சித்ராவின் பேச்சைக்கேட்டு கண்கள் பனித்தன குமரேசனக்கு. அவன் ஏதோ கேட்க வாயெடுப்பதற்குள், அம்மாவைத் தேடிக்கொண்டு அங்கே வந்தாள் ஜானவி.

“எங்கேம்மா போயிட்டே? எல்லோரும் சாப்பிடறதுக்காக வெயிட் பண்றாங்க… வாங்க போகலாம்…’’ என்றபடியே தாயின் கையைப் பிடித்து இழுத்தாள்.

“கொஞ்சம் இரு ஜானு. இவர் என்னோட பெஸ்ட் ஃபிரண்ட் குமரேசன்.  ரொம்ப வருஷம் கழிச்சு இப்பத்தான் பார்க்கறோம். நம்ம ஸ்ரீஜாவோட அங்கிளாம்…’’ என்றவள், குமரேசனிடம் திரும்பி, “இவதான் ஜானவி’’ என்றாள்.

“ஓ… நைஸ்! கிளாட் டு மீட் யூ. சின்ன வயசு சித்ராபோல இருக்கிறே….’’ என்று அவன் சொன்னபோது, வெட்கத்தில் சிரித்தாள் ஜானவி.

“முதல்ல சாப்பிட வாங்க. அப்புறம் பேசலாம்’’ என்றபடியே அவர்களை அழைத்துக்கொண்டு டைனிங் ரூமுக்குச்  சென்றான் குமரேசன்.

அவனைச் சந்தித்த மகிழ்ச்சியில் விருந்து சாப்பாடே தேவையிருக்கவில்லை சித்ராவுக்கு. ஏதோ சாப்பிட்டோம் என்று பேர் பண்ணிவிட்டு எழுந்துகொண்டாள். ம்

சென்னைக்குத் திரும்ப நீலகிரி எக்ஸ்பிரஸில் பதிவு செய்திருந்தார்கள். ஒன்பது மணிக்கு ரயில். அதற்குள் மருதமலைக்குச் சென்று முருகனை தரிசித்துவிட்டு வரலாம் என்று திட்டமிட்டிருந்தார்கள். அதன்படி, ஜானவியும், தோழிகள் மூன்று பேரும், சித்ராவும் புறப்பட்டார்கள். மண்டபத்தைவிட்டு வெளியே வந்தால், ஏதாவது கால் டாக்ஸி கிடைக்கும். தரிசனத்தை முடித்துவிட்டு அதே கால் டாக்ஸியில் ரூமுக்குத் திரும்பினால், இரவுச் சாப்பாட்டை முடித்துவிட்டு ரயிலேற சரியாக இருக்கும்.

மணப்பெண்ணிடமும், மாப்பிள்ளையிடமும் சொல்லிக்கொண்டு புறப்பட்டார்கள். குமரேசனிடம் விடைபெறுவதற்காக அவனைத் தேடினாள் சித்ரா. அதற்குள் குமரேசனே அவர்களைத் தேடிக்கொண்டு வந்தான். மருதமலை பயணத் திட்டம் பற்றிக் கேள்விப்பட்டவுனே அவன், “கால் டாக்ஸியெல்லாம் எதுக்கு? நம்ம கார்லயே போயிட்டு வந்துடுங்க. டிரைவரை அனுப்பறேன்…’’ என்றுகூறி தன்னுடைய டிரைவரை அழைத்தான்.

“மருதமலையில இவங்களை டிராப் பண்ணிடு. சாமி கும்பிட்டு முடிச்சதும், காந்திபுரத்துல இவங்க தங்கியிருக்கற ஹோட்டல்ல விட்டுட்டு, இங்க வந்துடு’’ என்றவன்,  சித்ராவிடம் திரும்பி, “நீலகிரி எக்ஸ்பிரஸ் ஒன்பது மணிக்குத்தானே சித்ரா? நீங்கள்லாம் எட்டே காலுக்குள்ள தயாரா இருங்க. நானே வந்து உங்களை டிராப் பண்றேன்….’’ என்றான்.

“உங்களுக்கெதுக்கு குமார் சிரமம்? நாங்களே ஆட்டோ பிடிச்சு போயிக்கறோமே…’’ தயங்கினாள் சித்ரா.

“இதுல என்ன சிரமம் சித்ரா…? எத்தனை வருஷம் கழிச்சு உன்னைப் பார்த்திருக்கிறேன். இதுகூட செய்யாட்டி எப்படி?’’ என்றபடியே மண்டப வாசல் வரை வந்து அவர்களை வழியனுப்பி வைத்தான்.

மருதமலை தரிசனத்தை முடித்துக்கொண்டு ஏழு மணிக்கெல்லாம் அறைக்குத் திரும்பினார்கள். உடனடியாக எல்லா சாமான்களையும் எடுத்துக்கொண்டு, இரவு உணவை முடித்துவிட்டுத் தயாராகக் காத்திருந்தார்கள். சரியாக எட்டு இருபதுக்கு குமரேசன் காருடன் வந்தான். அவனுடன் பூர்ணாவும் வந்திருந்தாள். எல்லோரும் ஏறிக் கொண்டார்கள். ஸ்டேஷன் வாசலில் அவர்களை இறக்கிவிட்டு காரை பார்க் செய்துவிட்டு வந்தான் அவன்.

கம்பார்ட்மெண்ட்டைக் கண்டுபிடித்து எல்லோரும் அமர்ந்தபின், ரயிலிலிருந்து கீழே இறங்கிக்கொண்டான் குமரேசன். ரயில் புறப்படும்வரை சித்ரா அமர்ந்திருந்த பெட்டிக்கு வெளியே, ஜன்னலிலிருந்து பார்த்தபடியே பேசிக் கொண்டிருந்தான்.

“குடும்பத்தோட ஒரு தடவை பெங்களூருக்கு வா சித்ரா. அடிக்கடி போன் பண்ணு. நானும் சென்னை வந்தா உங்க வீட்டுக்கு வர்றேன்….’’

எல்லாவற்றிற்கும் மௌனமாகத் தலையாட்டினாள் சித்ரா. அவனைப் பிரியப்போகிற நினைப்பே மனத்தை பாரமாக அழுத்தியது. காலை முதல் இரவுவரை அவன் காட்டிய பரிவின் ஈரத்தில் அவள் நெஞ்சம் நெகிழ்ந்துகிடந்தது.

ரயில் புறப்பட்டதும், அவன் எல்லோரிடமும் கையசைத்து விடைபெற்றான். ரயில் பார்வையைவிட்டு மறையும் வரை கையசைத்துக் கொண்டே நின்று கொண்டிருந்தான். அதைப் பார்க்க முடியாதபடி சித்ராவின் கண்களில் நீர் திரைகட்டியது. அவனைக் கடந்து வெகு தூரம் போனபின்னும் அவள் ஜன்னலுக்கு வெளியே தெரிந்த இருட்டையும், அதனூடே மின்னி மறைந்த விளக்குகளையும், ஆகாயத்து நட்சத்திரங்களையும் வெறித்துக் கொண்டிருந்தாள்.

 

*************************

 

டிடிஆர் வந்து டிக்கெட்டை பரிசோதித்தபின், எல்லோரும் அவரவருக்கான பெர்த்தில் ஏறிப் படுத்துக் கொண்டனர். சித்ராவுக்கு நடு பெர்த் ஒதுக்கப்பட்டிருந்தது. போர்வையை உடல் முழுவதும் போர்த்திக்கொண்டு படுத்தவளுக்கு, உறக்கம் வர மறுத்தது.

அன்று எதிர்பாராமல் நடந்த மகிழ்ச்சியான  சம்பவங்களால் உறக்கம் வர மறுத்தது. அளவுக்கு மீறிய மகிழ்ச்சியாக இருந்தாலும் சரி, கட்டுப்படுத்த முடியாத துக்கமாக இருந்தாலும் சரி அவளுக்கு அவ்வளவு சீக்கிரத்தில் உறக்கம் வருவதில்லை.

மனம் பழைய நினைவுகளில் மூழ்கியது. கல்லூரிக் கால நினைவுகள். திருமணம், குடும்பம், குழந்தைகள் என்று ஆன பிறகு கிட்டத்தட்ட மறந்தே போய்விட்ட கல்லூரிக் காலம். அவளது நெருங்கின தோழியாக இருந்த மரகதம்கூட இப்போது எங்கிருக்கிறாள் என்று தெரியாது. கல்லூரி முழுவதும் அவளும், மரகதமும் இணைந்தேதான் சுற்றுவார்கள். சேர்ந்தேதான் படிப்பார்கள். மரங்களும், பூச்செடிகளும் சூழ்ந்த பழங்கால அரண்மனை போன்ற கல்லூரி வளாகத்தில் அவர்கள் கால்படாத இடமே இருந்ததில்லை. வகுப்புகள் இல்லாத ஓய்வு நேரங்களை, நிழலுக்குக் குடைபிடித்தபடி பிரமாண்டமாய் வளர்ந்திருக்கும் குல்மொஹர் மரங்களின்கீழ் கதை பேசியபடியே களித்திருப்பார்கள்.

இருவருமே கட்டுப்பாடான குடும்பத்திலிருந்து வந்தவர்கள் என்பதால், கோயில், படிப்பு, சமையலறை, பெற்றோர், சகோதரிகள் என்ற வட்டத்துக்குள்ளேயே சுற்றிச் சுழலும் பேச்சு. வீடு, கல்லூரி, ஓய்வு நேரங்களில் கோயில், கடைவீதி என்று சின்னச் சின்ன விஷயங்களிலேயே நிறைவைக் கண்டிருந்த அவளது வாழ்க்கையில், புது வசந்தமாய் எட்டிப் பார்த்தான் குமரேசன்.

சித்ரா பி.காம். இரண்டாம் வருடம் படித்துக்கொண்டிருந்தபோது, அதே கல்லூரியில் எம்.காம் முதலாமாண்டில் வந்து சேர்ந்தான் குமரேசன். பெங்களூரில் பி.காம். முடித்துவிட்டு, அப்பாவின் வேலை நிமித்தம் காரணமாக திருச்சியில் எம்.காம். படிக்கச் சேர்ந்திருக்கிறான் என்ற விவரத்தை வகுப்புத் தோழிகள் மூலம் அறிந்துகொண்டாள். படிப்பில் முதலிடம். ஆங்கிலத்தில் வெளுத்துக் கட்டுவான் என்ற கூடுதல் தகவலும் காதில் விழுந்தது.

கல்லூரிக்குள் ஒரு வகுப்பிலிருந்து மறு வகுப்புக்குச் செல்லும்போதும், கேன்டீனுக்குப் போகும்போதும் குமரேசன் எப்போதாவது பார்வையில் படுவான். பார்த்தவர்களை மீண்டும் திரும்பிப் பார்க்கத் தூண்டும் உயரமும், அதற்கேற்ற பருமனும், மஞ்சள் கோதுமை நிறமும், மற்ற மாணவர்களிடமிருந்து அவனை வித்தியாசப்படுத்திக் காட்டின. பார்ப்பதுடன் சரி, பேசுவதற்கு வாய்ப்புக் கிட்டவில்லை.

எதற்கும் ஒரு நேரம் வரவேண்டுமல்லவா? பி.காம்., எம்.காம். மாணவர்கள் ஒருங்கிணைந்து நடத்திய `காமர்ஸ் டே’வில் அதற்கான வேளை கூடிவந்தது. நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் பொறுப்பு, சித்ராவிடமும், குமரேசனிடம் வந்தது. காலை முதல் மாலை வரை நடந்த நிகழ்ச்சியை தொய்வில்லாமல், சுவாரஸ்யமாக நகர்த்திச் செல்லும் பொறுப்பில் இருவரும் இருந்தனர். இருவரும் இணைந்து பேசி, ஸ்கிரிப்ட்டைத் தயாரித்தனர். ஒவ்வொரு வார்த்தைகளிலும் அவனது  புத்திசாலித்தனமும், ஆங்கிலப் புலமையும் பளிச்சிட்டன. அந்த ஸ்கிரிப்ட்டை வைத்து இருவரும் ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தனர். பல தருணங்களில் இருவர் மட்டுமே தனிமையில் இருக்கவேண்டிய சூழ்நிலை. ஒரே வாரத்தில் இருவரும் ஒருவரையொருவர் நன்கு புரிந்துகொண்டனர். குமரேசன் மீது, பனி போர்த்தியது போன்ற மெல்லிய நேசம் படர்ந்து வருவதை சித்ரா உணர்ந்து கொண்ட அற்புதத் தருணம் அது.

குமரேசனிடத்திலும் அதுபோன்ற எண்ணம் அப்போது துளிர்விட்டதா என்பதை அவள் அறிந்திருக்கவில்லை.

விழா நிகழ்ச்சிகள் முடிந்து, பேராசிரியர்கள் முதல் வகுப்புத் தோழர்கள் வரை பலரும் அவர்களது பேச்சைப் பாராட்டி வாழ்த்துத் தெரிவித்தபோது, இருவருமே தங்களை மறந்த ஓர் உலகத்தில் இருந்தனர். குமரேசனின் கனிந்த பார்வையில் அவளுக்கான காதல் மறைந்திருந்ததை அவள் ரகசியமாக அறிந்துகொண்டாள்.

அடுத்து வந்த நாட்களில் படிப்பு, புத்தகங்கள் தவிர வேறு எது குறித்தும்  இருவரும்  பேசிக் கொள்ளவில்லை. பேச்சைத் தாண்டிய மௌனத்தின் குளுமை இருவருக்குள்ளும் இழையோடிக் கொண்டிருந்தது. நேருக்கு நேர் கண்களைச் சந்திக்கும்போதெல்லாம் நெஞ்சுக்குள் உற்சாகப் பட்சி கூவிச் சென்றது. அடிவயிற்றில் பரவசமான உணர்வு பரவியது. மனத்தின் மறைவுப் பகுதியில் மெல்லியதாக ஒரு குளிர் தீண்டுவது போலிருந்தது.

மலர்ந்துவிட்ட மல்லிகையின் வாசத்தை, எத்தனை நாளுக்குத்தான் திரைபோட்டு மறைத்துவைக்க முடியும்? மனதின் காதலை முதலில் வெளிப்படுத்தியது குமரேசன்தான்.

கல்லூரி மைதானத்திற்கு அருகேயிருந்த வேப்ப மரத்துக்குக் கீழே, பாட சம்பந்தமான புத்தகத்தைக் கொடுக்கும் சாக்கில் தன் இதயத்தை திறந்து காட்டினான் அவன்.

“கொஞ்ச நாளாவே என் மனசு என்கிட்ட இல்ல சித்ரா. நீ என்கூடவே இருந்தா எப்படியிருக்கும்னு சதா எனக்குள்ள ஒரு குரல் ஒலிச்சிகிட்டே இருக்குது. நான் என்ன சொல்லவரேன்கிறது உனக்குப் புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்…’’ என்று நிறுத்தி நிதானமாகப் பேச ஆரம்பித்தவன், அவளது கண்களை நேருக்கு நேராகப் பார்க்கக் கூச்சப்பட்டவனாய், தலைகுனிந்து கொண்டான்.

ஒரு சில நிமிடங்களுக்குப் பிறகு,  “ஐ லவ் யூ சித்ரா…’’ என்றபோது, வேப்ப மரத்தின் மெல்லிய தென்றல் அவர்கள் இருவரையும் உரசிச் சென்றது.

சித்ராவுக்கு வார்த்தைகள் தொண்டைக்குள்ளேயே சிக்கிக் கொண்டன. மகிழ்ச்சியும், பயமுமான அவளது தவிப்பைப் புரிந்துகொண்டவனாய், “நீ இப்பவே உன் பதிலைச் சொல்லணும்னு அவசியமில்லை சித்ரா. நல்லா யோசிச்சு சொன்னாப் போதும்…வரட்டுமா…’’ என்று அவன் நாகரிகமாய் விடைபெற்றபோது, அவளது மனத்தில் மாபெரும் சுமை ஏறி அமர்ந்துகொண்டது.

அவளுக்கு அந்தக் காதல் பிடித்திருந்தது. குமரேசனின் அருகாமையை அவள் மனம் விரும்பவே செய்தது. எப்போதும் அவனுடனேயே சேர்ந்து வாழும் வாழ்க்கை, அவளுக்கு மகிழ்ச்சியையும், நிறைவையும் கொடுக்கும் என்பது நிச்சயம். அவளை அவன் சந்தோஷமாகவே வைத்துக்கொள்வான். அதில் எள் முனையளவும் சந்தேகமில்லை. பின் ஏன் இந்தத் தயக்கம்?

காதலை மீறிய யதார்த்தம் அவளை தடுமாற வைத்தது. அவளுக்கு கீழே இரண்டிரண்டு வயது வித்தியாசங்களில் மூன்று தங்கைகள் இருக்கும் நிஜம் அவளது நெஞ்சைக் கட்டுப்படுத்தியது. சாஸ்திர சம்பிரதாயங்களில் ஊறித் திளைத்த குடும்பத்துப் பெண் என்ற நிதர்சனம் அவளது ஆசைக்கு அணைபோட்டது. காலையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துவிட்டு, மாலையில் சித்தி விநாயகர் கோயிலில் குருக்களாய் இருக்கும் அப்பாவின் ஆசார அனுஷ்டானங்களை அவள் ஒரு கணம் சிந்தித்துப் பார்த்தாள். நிச்சயம் நிறைவேறவே சாத்தியமில்லாத ஒரு ஆசையை அவள் தனக்குள் வளர்த்துக் கொள்ள அனுமதிப்பது முறையா?

கல்லூரிப் பருவத்துக்குள் நுழையப்போகும் தருணத்தில், இருபாலார் படிக்கும் கல்லூரியில் அவளுக்கு இடம்கிடைத்தவுடன் அப்பா சொன்ன வார்த்தைகள் இப்போதும் பசுமரத்தாணிபோல் அழுந்தப் பதிந்து கிடக்கின்றவே!

“பட்டப் படிப்பு படிச்சா, அது நாளைக்கு உன் வாழ்க்கைக்கு உபயோகமா இருக்கும்கிறதாலதான் உன்னை காலேஜ்ல சேர்க்கிறேன். உனக்குக் கீழே மூணு தங்கச்சிங்க இருக்கிறாங்கங்கிற நினைப்பு உன் மனசுல என்னிக்கும் இருக்கட்டும். நம்ம குடும்ப கௌரவத்தைக் காப்பாத்த வேண்டிய பொறுப்பு உன்கிட்டதான் இருக்கு. நம்ம குடும்பத்துப் பொண்ணுக யாரும் கோ-எஜுகேஷன் காலேஜ்ல படிச்சதி்ல்ல. உன்னை நான் இந்தக் காலேஜ்ல சேர்க்கறதுக்குக் காரணம்…. உன் மேல நான் வெச்சிருக்கிற நம்பிக்கை. அதுக்கு பங்கம் வராம பார்த்துக்கறது உன் கையிலதான் இருக்கு….’’

அட்மிஷன் கிடைத்து கல்லூரியைவிட்டு வெளியே வரும்போது, அப்பா சொன்ன அறிவுரைக்கு சம்மதமாய் மெல்லத் தலையை ஆட்டினாள். அந்த வார்த்தைகளுக்கான பொருள் அப்போது விளங்கவில்லை. இப்போது விளங்கியது.

தாயின் முந்தானைக்குள் முகம் புதைத்து ஆறுதல் தேடும் சிறுமியை வலுக்கட்டாயமாகப் பிரித்து இழுத்து வருவதைப்போல, அவள் தன் மனதை குமரேசனிடமிருந்து தாட்சண்யமின்றி விலக்கிக் கொண்டாள்.

அதற்காக அவனிடம் பேசாமலோ, முகத்தை திருப்பிக்கொண்டோ போகவில்லை. எப்போதும்போல் பேசிக்கொண்டுதான் இருந்தாள். தனிமையான சந்தர்ப்பம் கிடைத்தபோது, தன் முடிவை அவனிடம்  வெளிப்படுத்தினாள்.

“என்னோட  ஃபேமிலி சிச்சுவேஷன்ல காதல் பத்தியெல்லாம் நினைச்சுக்கூடப் பார்க்க முடியாத நிலையில இருக்கேன். நிச்சயமா வீட்டுல இதுக்கு ஒத்துக்கவே மாட்டாங்க. எனக்குக் கீழே மூணு தங்கச்சிங்க இருக்காங்க. அவங்களோட ப்யூச்சர் பத்தியும் யோசிக்கணும்…. உங்கமேல எனக்கு எப்பவுமே அன்பும், மரியாதையும் உண்டு. அதை காதல்ங்கிற அடுத்தகட்டத்துக்கு நகர்த்தற துணி்ச்சல் என்கிட்ட இல்ல… ப்ளீஸ் குமார், புரிஞ்சிக்கோங்க!’’

தயங்கியபடியே தாழ்வான குரலில் அவள் தன் மறுப்பை வெளியிட்டபோது, குமாரின் நெஞ்சிலிருந்து எதுவோ கழன்று கொண்டதைப்போல் இருந்தது. தோல்வியும், ஏமாற்றமும் அவனை நெருப்பிலிட்ட மெழுகாய் உருக்கின.

கண்ணீரையும், காதலையும் யாருக்கும் தெரியாமல் நெஞ்சில் புதைத்தபடியே அவன் அந்த இடத்தைவிட்டு நகர்ந்தான்.

அதற்குப் பிறகு காதலைப் பற்றி அவளிடம் அவன் வாயே திறக்கவில்லை. வழக்கமான பாடங்கள், தேர்வுகள், கல்லூரி விழாக்கள் என்று வந்து சென்ற நிகழ்வுகளையெல்லாம் எந்தவித மாற்றமுமின்றி எப்பொழுதும்போலவே அவளுடன் எதிர்கொண்டான் அவன். தன்னுடைய ஆசையில் மண் அள்ளிப் போட்டுவிட்டாளே என்ற வெஞ்சினம் ஒரு போதும் அவனது பேச்சில் வெளிப்பட்டதில்லை. அவளைப் பார்க்கும்போதெல்லாம் வெளிப்படும் கனிவும், நேசமும் எப்போதும்போலவே நிறைந்திருந்தன.

கல்லூரி வாழ்க்கை முடிந்ததும், பெற்றோர் அமைத்துத் தந்த திருமண பந்தத்தில் தன்னை இணைத்துக் கொண்டாள் சித்ரா.

குடும்பம், குழந்தைகள் என்று முழு நேர இல்லத்தரசி ஆனபிறகு, கடந்த கால நினைவுகள், கல்லூரி வாழ்க்கை என்று எதையும் நினைத்துப் பார்க்க நேரமில்லாமல் போனது. சாரலாய்ப் பெய்யும் மழை, ஊசியாய் துளைக்கும் குளிர் என்று மனதை வருடும் இதமான சூழல்களில், மேகக் குவியல்களிலிருந்து மெல்ல நீந்தி வரும்  வெண்ணிலவாய், குமரேசனின் நினைவு அடிமனதிலிருந்து மேலெழும். யாருமற்ற ஏகாந்தத்தில் மனோரஞ்சித மலரின் அற்புத மனத்தை நுகர்வதுபோன்ற இன்பத்தில் அவள் பழைய நினைவுகளில் மூழ்கிப் போவதுண்டு.

மீண்டும் குமரேசனைச் சந்திப்போம் என்று அவள் கனவிலும் நினைக்கவில்லை. எதிர்பாராத இன்றைய சந்திப்பும், குமரேசனின் அன்பின் ஆழமும், உயிருள்ளவரை அவளுள் உறைந்திருக்கப் போவது நிச்சயம்.

பழைய நினைவுகளின் தாலாட்டில் அவள் தன்னை மறந்து உறங்கிப் போனாள்.

 

***************************

ரயில் ஒரு குலுக்கலுடன் நின்றதும் கண்களைத் திறந்து பார்த்தாள். பக்கத்து இருக்கை  காலியாக இருந்தது. ஜன்னலுக்கு வெளியே வானில் மஞ்சள் நிற சூரியப் பந்து பொங்கி எழுந்து கொண்டிருந்தது. ரயில் இரண்டு மணி நேரம் தாமதமாகச் சென்று கொண்டிருப்பதாக யாரோ பேசிக் கொண்டார்கள். சித்ரா இருக்கையிலிருந்து  எழுந்து கழிப்பறையை நோக்கிச் சென்றாள். கம்பார்ட்மெண்டின் நுழைவு  வழியை அடைத்தபடி ஜானவியும், தோழிகளும் நின்று ஏதோ பேசிக் கொண்டிருந்தார்கள். அவளைக் கண்டதும் பேச்சு சட்டெனத் தடைப்பட்டது. எல்லோரின் முகங்களும் பேயறைந்தார்ப்போல வெளிறிக் கிடந்தன.

நீண்டநேரம் அழுததற்கு அடையாளமாய் மூவரின் விழிகளிலும் இளஞ்சிவப்பு கரைகட்டியிருந்தது. ஏதோ அசம்பாவிதம் நடந்திருக்கவேண்டும்; இல்லாவிட்டால், மூவரும் இங்கு வந்து நின்று கொண்டிருக்கமாட்டார்கள் என்ற நினைப்புடன், சித்ரா அவர்களை நெருங்கி, “ஏன் இங்கே நின்னுட்டிருக்கறீங்க…. என்னாச்சு…?’’ என்றாள்.

அவளது கேள்விக்காகவே காத்திருந்தவளைப்போல ஜானவியின் தொண்டையிலிருந்து ஒரு பெருத்த கேவல் வெடித்துக் கிளம்பியது. கைக்குட்டையால் வாயைப் பொத்திக் கொண்டு உடைந்துபோய் அழத் தொடங்கினாள் அவள்.

“என்னாச்சு ஜானவி…. என்னம்மா நடந்தது….?’’ என்றாள் சித்ரா பதட்டத்துடன்.

“யமுனா விடிகாத்தால இரண்டு மணிக்கு இறந்துட்டாளாமா ஆண்டி. அவங்க அப்பா இப்பத்தான் போன் பண்ணினார்….’’ – வார்த்தைகளை முழுவதும் முடிக்க முடியாமல் தேம்பினாள் தேவி.

சித்ராவின் இதயம் ஒரு கணம் நின்று, பிறகு துடிக்க ஆரம்பித்தது. ஓ… எத்தனை பெரிய இழப்பு! ஆறு மாதங்களாக அணு அணுவாகத் துடித்துக்கொண்டிருந்தது இப்படி அடங்கிப் போகத்தானா பெண்ணே? `நான் பிழைத்துக் கொள்வேன். அம்மா, அப்பாவைக் காப்பாற்றுவேன்’ என்று நம்பிக்கையுடன் பேசியதெல்லாம் பொய்த்துப்போனதே.

உற்சாகமும், துள்ளலுமாக வளைய வந்த பெண், இப்போது உயிருடன் இல்லை என்பதே நம்ப முடியாததாய் இருந்தது. யமுனாவைப் பெற்றவர்கள் இப்போது எப்படித் துடித்துக் கொண்டிருப்பார்கள் என்று சிந்தனை ஓடியது.

பிடிக்காத காதலை மறுத்ததற்காக அவளுக்கு இவ்வளவு பெரிய தண்டனையா கடவுளே? உயர்படிப்பும், தனித்து வாழ்தலும் உண்மையிலேயே பெண்களுக்கு சுதந்திரத்தைத் தந்திருக்கிறதா? இனி எந்த முகாந்திரத்தில் அந்த ஏழைப் பெற்றோர் தங்கள் வாழ்வை எதிர்கொள்வார்கள்?

சட்டென்று வாழ்க்கை மீதே ஒரு கணம் நம்பிக்கையற்றுப் போயிற்று சித்ராவுக்கு. ஜானவியின் நிலையைச் சொல்லவே வேண்டாம். ஒரே கல்லூரியில், ஒரே வகுப்பில் படித்து, ஒரே அலுவலகத்தில் வேலை பார்த்து, ஒன்றாகவே சுற்றித் திரிந்த உயிர்த் தோழியின் இழப்பிலிருந்து அவள் அவ்வளவு சுலபத்தில் மீண்டு வரப் போவதில்லை. யார்தான் அவளுக்கு ஆறுதல் சொல்ல முடியும்?

ரயிலை விட்டிறங்கி கால் டாக்ஸி ஒன்றைப் பிடித்து எல்லோருடைய பெட்டி, படுக்கைகளையும் ஒற்றை ஆளாய் வீட்டிற்கு எடுத்துப் போனாள் சித்ரா. தோழிகள் எல்லோரும் யமுனாவின் உடலைக் காண நேரே மருத்துவமனைக்குச் சென்றுவிட்டார்கள். வீட்டிற்குச் சென்று தேவையான பணத்தை எடுத்துக்கொண்டு அவளும் மருத்துவமனைக்கு விரைந்தாள்.

மருத்துவமனையின் எல்லா சம்பிரதாயங்களும் முடிந்தபிறகு, யமுனாவில் உடல் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பெண்ணியவாதிகள், சமூக சேவை அமைப்புகள், அரசியல்வாதிகள் என்று ஊரே திரண்டு வந்து இறுதி ஊர்வலத்தை நடத்தின.

எல்லாம் முடிந்து, கசக்கிப் பிழிந்த சக்கையாய் சோர்ந்துபோய் வீடு வந்து சேர்ந்தாள் ஜானவி. எப்போதும் கலகலப்பாக இருக்கும் வீட்டில் ஒரு பூடகமான அமைதி சூழ்ந்து கொண்டது. காலையில் எழுவது, குளிப்பது, சாப்பிடுவது, வேலைக்குச் செல்வது என்று நித்ய கடமைகள் எல்லாமும் இயந்திரகதியில் நடந்துகொண்டிருந்தன. இந்த நிலையிலிருந்து மீண்டு வர நீண்டநாட்களாகலாம் என்று நினைப்பில் வளைய வந்து கொண்டிருந்தாள் சித்ரா.

யமுனா மறைந்து இருபது நாட்களுக்குப் பிறகு, ஓய்வான ஒரு  ஞாயிற்றுக்கிழமை ஏதோ புத்தகம் ஒன்றில் மூழ்கிக் கிடந்த ஜானவியின் அருகே போய் நின்றாள் சித்ரா. கையில் அவளுக்குப் பிடித்த வெங்காயப் பக்கோடா. நிமிர்ந்து தாயைப் பார்த்தவள், தட்டை வாங்கிக் கொண்டாள். தேநீர் நிரப்பிய இரண்டு கோப்பைகளுடன்   அவளுக்கு எதிரே அமர்ந்தாள் சித்ரா.

மௌனத்தின் அழுத்தத்தில், தொண்டைக்குள் இதமாக இறங்கியது தேநீர். குடித்து முடித்து தேநீர்க் கோப்பையை மேஜையின்மீது வைத்த சித்ரா, தொண்டையை மெல்லக் கனைத்துக் கொண்டாள்.

“நீ பழையபடி மாறணும் ஜானவி. உன்னோட உற்சாகம், சிரிப்பு எல்லாத்தையும் நான் திரும்பப் பார்க்கணும். யமுனாவோட இறப்பு, மறக்க முடியாததுதான். அதை நான் மறுக்கல. எதிர்பாராம நிகழ்ந்த ஒரு விபத்தா நினைச்சு, அதிலிருந்து மீளப் பார்க்கணும்…’’ – மெதுவாக  ஜானவியின் கைகளை எடுத்து தன் கைகளுக்குள் பொருத்திக் கொண்டாள்.

தாயை நிமிர்ந்து பார்த்த அவளது விழிகளில் ஈரத்தின் மினுமினுப்பு.

“நானும் மறக்கத்தான் நினைக்கிறேன் அம்மா.  அதுக்கு கொஞ்சம் நாளாகலாம். ஆனா அம்மா, யமுனா என்ன பாவம் செய்தாங்கிற கேள்விக்குத்தான் என்கிட்ட பதிலே இல்ல. அந்தப் படுபாவியோட மனசு இப்ப குளிர்ந்திருக்கும்தானே? அவனையெல்லாம் ஏம்மா இன்னமும் உயிரோட விட்டு வெச்சிருக்காங்க? தூக்குல போட்டுக் கொல்ல வேண்டியதுதானே…. யமுனாவுக்கு இவ்வளவு பெரிய சப்போர்ட் இருந்தும், அவனை எதுவுமே பண்ண முடியலையே…. ’’ குரல் உடைந்து அழ ஆரம்பித்த ஜானவி, மேஜையின் மீது கவிழ்ந்து குலுங்கினாள்.

அவளது தலையை ஆதரவாகத் தடவிக் கொடுத்த சித்ராவுக்கும் அழுகை வந்தது. உதட்டைக் கடித்து கண்ணீரை அடக்கிக் கொண்டாள்.

“சில விஷயங்களுக்கு இங்கே விடை தேடுறது கஷ்டம் ஜானு. ரோட்ல நடந்து போயிட்டிருக்கறபோது, எதிர்பாராதவிதமா ஒரு லாரி வந்து நம்ம மேல மோதற போலத்தான் இதுவும். இது நம்ம குத்தமில்ல; லாரிக்காரனோட குத்தம். ஆனா, பாதிப்பு நமக்குத்தானே… அதுபோலத்தான்… நல்லபடியா வாழ யமுனாவுக்கு கொடுத்து வைக்கலைனுதான் சொல்லணும்….’’

“காதல்ங்கிறது ரொம்பப் புனிதமானதுன்னு சொல்வாங்களே… காதலிக்க மறுத்தாங்கிற ஒரே காரணத்துக்காக ஒரு பொண்ணோட வாழ்க்கையை சிதைக்கத் துணிஞ்ச அவனை சும்மா விடலாமா அம்மா? காதல்னாவே பயமாயிருக்குதும்மா.  தன்னோட விருப்பங்களை வெளிப்படையா சொல்லக்கூட ஒரு பொண்ணுக்கு இங்கே சுதந்திரம் கிடையாதுன்னா, இவ்வளவு பெரிய படிப்பும், சம்பாத்தியமும் எதுக்கு? இங்கே பெண்களுக்கு உண்மையிலேயே சுதந்திரம் கிடைச்சிருக்குதா அம்மா? இன்னொரு பாரதி பொறந்து வந்தாலும், இந்த நிலை மாறும்னு தோணலைம்மா…’’

ஜானவியின் கண்களில் கண்ணீர் மறைந்து ஒரு தீவிரம் வெளிப்பட்டது.

“பரஸ்பரம் புரிதல்தான் காதல். யமுனாவுக்கு நடந்த விரும்பத்தகாத சம்பவத்தோட காதலை இணைச்சுப் பேசுறது தப்பு. அது ஒரு காமம்; வெறி. தனக்குக் கிடைக்காத பொண்ணு, வேற யாருக்கும் கிடைக்கக்கூடாதுங்கிற உச்சபட்ச ஆத்திரத்தோட வெளிப்பாடு… காதலையும் இதையும் நீ குழப்பிக்காதே….’’

“நீங்க என்ன சமாதானம் சொன்னாலும், காதல்னா இனி கொஞ்சம் திகிலாத்தான் இருக்கும். காதலிக்கிறேன்னு சொல்ற ஆண்களைப்  பார்க்கும்போது மனசுக்குள்ள கிளுகிளுப்பா இருக்காது;  பயம்தான் முதல்ல எட்டிப் பார்க்கும். என்னை யாரும் காதலிக்கிறேன்னு சொல்லக்கூடாதுங்கறதுதான் இனி என் பிரார்த்தனையா இருக்கும்….’’

ஜானவியின் பேச்சைக்கேட்டு ஒரு கணம் அதிர்ந்து போனாள் சித்ரா.

“அப்படி ஒட்டுமொத்தமா எல்லா ஆம்பளைங்களையும் எடைபோடறது தப்பு ஜானு. எல்லா இடத்திலும் நல்லதும், கெட்டதும் கலந்தே இருக்குது. நமக்கு நல்லதே நடக்கும்னு நம்புவோம்… மனசைத் தளரவிடாதே….’’

“இல்லம்மா. காதலிக்கிறேன்னு சொல்ற எல்லா ஆம்பளைகளுமே  சுயநலவாதிகளாகத்தான்  இருக்கறாங்க. ஒரு பொண்ணை ப்ரபோஸ் பண்ண உடனே, அவ தனக்குக் கிடைச்சிடணுங்கிற கீழ்த்தரமான புத்திதான் ஆம்பளைங்ககிட்ட இருக்குது. அந்தப் பொண்ணுக்குத் தன்னைப் பிடிச்சிருக்குதானு யோசிக்கிற சிந்தனை கிடையாது…’’ – படபடவெனப் பேசிக் கொண்டேபோன ஜானவியைக் கையமர்த்தினாள் சித்ரா.

“நீ நினைக்கிறது தப்பு ஜானு. பொம்பளைங்க மனசை புரிஞ்சுக்கிட்ட எத்தனையோ ஆம்பளைங்க நம்ம சமுதாயத்துல இருக்காங்க… நம்ம வீட்டையே எடுத்துக்கோ, உங்கப்பா எனக்கு எவ்வளவு சுதந்திரம் கொடுத்திருக்கிறார்னு உனக்கே தெரியும்…’’

“அப்பாவை விடுங்கம்மா. அவர் உங்களைக் கல்யாணம் செய்துக்கிட்டவர். காதலிக்கிற ஆண்களைப்பத்தித்தான் இப்ப பேச்சு… காதலிக்கிற, காதலிக்கிறதா சொல்ற ஆண்கள் எல்லோருமே வடிகட்டின சுயநலவாதிங்கம்மா…. பொண்ணுக்குனு ஒரு மனசு இருக்குதுன்னு புரிஞ்சுக்காதவங்க…’’

“எல்லோருமேங்கிற வார்த்தையில எனக்கு உடன்பாடில்லை… பொண்ணோட மனசைப் புரிஞ்சுகிட்டவங்க நிறையப் பேர் இருக்கறாங்க…. கல்யாண வீட்ல சந்திச்சோமே, குமரேசன்…. அவரே இதுக்கு நல்ல உதாரணம்!’’

இத்தனை நாள் பொக்கிஷமாய் தனக்குள் பூட்டிப் பாதுகாத்த ஒரு ரகசியத்தை, தன் மகளிடம் வெளிப்படுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதற்காக சித்ரா வெட்கப்படவில்லை. சில நல்ல விஷயங்களை சொல்ல வேண்டிய நேரத்தில் சொல்லித்தான் ஆக வேண்டும் என்று தோன்றியது.

“குமரேசன்!’’

ஜானவியின் விழிகளில் வியப்பின் ரேகை. குமரேசனைப் பற்றி அம்மா சொல்லப்போகும் செய்திக்காகக் காத்திருப்பதுபோல் அவளது இமைகள் படபடத்தன.

“குமரேசன் என் கிளாஸ்மேட் – நண்பர் மட்டுமில்ல. என் காலேஜ் டேஸ்ல என்னை அவர் ப்ரப்போஸ் பண்ணினார்… அவரோட காதலை ஏத்துக்க முடியாத சூழ்நிலையில நான் இருந்தேன். உனக்குத்தான் தெரியுமே, தாத்தா எவ்வளவு கண்டிப்பானவர்னு. குடும்பத்துல மூத்த பொண்ணா பிறந்தவ, தன்னோட தங்கைகளோட வாழ்க்கையைப் பத்தியும் கவலைப்பட்டாகணும். காதல் கல்யாணம்னு சுயநலமா சிந்திக்க முடியாது. குமாரோட காதலை நான் மறுத்தபோது, எந்தவித காழ்ப்புணர்ச்சியும் இல்லாம அதை அப்படியே ஏத்துக்கிட்டார் அவர். மனசுக்குள்ள அவருக்கு வருத்தமும், தோல்வியும் இருந்திருக்கலாம். ஆனாலும், என்னோட மன உணர்வுகளுக்கு ரொம்பவும் மதிப்பளிச்சு, அதுக்குப்பிறகு ஒரு வார்த்தைகூட காதலைப் பத்திப் பேசல. என்னோட நலன், என்னோட விருப்பங்கள்தான் முக்கியம்னு நினைக்கிற புனிதமான ஆத்மா அவர்….’’ – உணர்ச்சிகள் மேலிட தன் அந்தரங்கத்தை திறந்து கொட்டிய அம்மாவின் கண்களில் துளிர்த்த கண்ணீரைப் பார்த்ததும் ஜானவியின் உடல் சிலிர்த்தது.

சட்டென எழுந்து சித்ராவை நெருங்கி அவளை அப்படியே தன்னுடன் சேர்த்து அணைத்துக் கொண்டாள் ஜானவி.

“யூ ஆர் வெரி லக்கி.  உங்களைப் புரிஞ்சுகிட்ட குமார் அங்கிள் இஸ் ஸோ கிரேட்… குமார் அங்கிளோட தோற்றமும், பார்வையும் மட்டுமல்லாம, அவரோட நல்ல உள்ளமும்கூட அவர் மேல பெரிய மதிப்பை ஏற்படுத்துது அம்மா…. இப்படிப்பட்ட நல்ல நண்பர் கிடைக்க, நீங்க ரொம்பக் கொடுத்து வெச்சிருக்கணும் அம்மா…’’ என்றாள் தழுதழுப்புடன்.

அந்த இடத்தில் தாய் மகள் உறவை மீறி, அவர்களுக்கிடையே ஒரு நெருக்கமான சிநேகிதிகளின் நேசமே மிகுந்திருந்தது.

 

(நிறைந்தது)

 

Series Navigationஎனது இதயத்தின் எவ்விடத்தில் நீ ஒளிந்திருந்தாய்?வால்ட் விட்மன் வசனக் கவிதை – 57 ஆதாமின் பிள்ளைகள் – 3
author

Similar Posts

3 Comments

 1. Avatar
  IIM Ganapathi Raman says:

  Absolutely a story for ladies. இதில் நான் தலையிடக்காரணம் கதாசிரியர் ஒரு மேல்நோக்குப்பார்வையைக்கருவாக வைத்திருப்பதால்.

  இரு காதல்கள் என்பதைவிட இரு ஆண்-பெண் உறவுகளைப்பற்றியது Because according to Smt G.Meenakshi, only one is love and other is infatuation. I don’t know this conclusion was arrived at.

  ஒன்று விநோதினியின் கதை. இன்னொன்று அதற்கு மாறான கதை.

  விநோதினி – காரைக்கால பெண். சென்னையில் பொறியாளராக வேலைபார்த்தவர். அமிலவீச்சுக்கு ஆழாகி மரணித்தவர். இவர்தான் இக்கதையில் வரும் யமுனா.

  இன்னொருவர் இக்கதையின் நாயகி. சித்ரா.

  ஆசிரியர் இரு கதைகளையும் இணைத்து ஒரு முடிவைச்சொல்கிறார். அம்முடிவு சித்ரா தன் மகளுக்குச் சொல்வதாக அமைகிறது: அதாவது. தன் காதல் நிராகரிக்கப்பட்டது என்று தெரிந்தும் தன் காதலியை வெறுத்து அவளைத்துன்புறுத்தாதவனும், தன் காதல் நிராகரிக்க்பபட்டது என்று தெரிந்தவுடன், தனக்குக்கிடைக்காத பெண் பிற ஆணுக்குக்கிடைக்கக்கூடாதென்று அவளை அழிக்க நினைப்பவன்னும் என்று. இரு வகை ஆணகளும் உண்டு என்பதுதான் முடிவு.

  இம்முடிவு சரியா தவறா என்பது என் கேள்வியன்று. எனக்குத் தோன்றுவதெல்லாம், ஏனிந்த வேறுபாடு ஆணகளுக்குள்ளே ? இக்கேள்வியை எடுத்து ஆராயும்போது தெரியும் கசப்பான வாழ்க்கை எதார்த்தங்களை நான் எழுதப்புகுந்தால், ஆசிரியரும் அவரைப்போன்றவர்களின் ‘இன்ப உலகம்’ உடைந்து விடும். Let’s allow them enjoy living in their own ivory towers!

  It is for others: WE MUST HAVE THE COURAGE TO EXAMINE THE SOCIETY. Only then there can be solutions found for its problems. சராசரி மனிதர்கள் ஓடட்டும். ஏன் இந்த பொறுப்பானவர்களு ஓடுகிறார்கள் ஆராய்வதிலிருந்து எனப்புரியவில்லை.

 2. Avatar
  IIM Ganapathi Raman says:

  //…இரு வகை ஆணகளும் உண்டு என்பதுதான் முடிவு.//

  இந்த முடிவை சித்ரா தன் மகள் ஜானவிக்குச் சொன்ன தருணம் (கான்டெக்ஸ்) கவனத்துக்குரியது. யமுனாவின் துரமரணத்தைக்கேட்ட பின் ஆண்களே பயங்கரமானவர்கள். காதல் என்று சொல்லி கட்டாயப்படுத்தி பெண்ணை அழிக்கத்துடிப்பவர்கள்; எனவே காதலே தனக்கு வேண்டாமென ஜானவி சொல்ல, தாய் தன் கதையைச்சொல்லி, ஆண்களில் இருவகை என்கிறாள். சூசகமாகச் சொல்வது. காதலிப்பாயாக‌ என்பதே. இப்படி ஒரு தாயுண்டா உலகத்தில். மகளைக்காதலிக்கத் தயங்காதே என்று சொல்லும் பெற்றோரும் உண்டு; காரணம் அவர்களுக்கு வரன் பார்த்துகட்டிவைக்கமுடியாத தரித்திரம். எனவே நீயோ போய் வலைவிரி என்பவரும் மகளை வறுமையின் காரணமாக எவனிடமாவது ‘கூட்டிக்கொடுக்கும்’ அதாவது கலியாணம் பண்ண, துணியும் பெற்றோருக்கும் இந்தச்சித்ராவுக்கு என்ன வேறுபாடு என்பதை ஆசிரியர் திருமதி மீனாட்சி அடியேனுக்குச் சொல்வாரக.

  அது கிடக்க. அடுத்ததைப்பார்ப்போம்; அம்மா தாயே சித்ரா! இப்படி மகளுக்குச் சொல்லிவிட்டாய். இப்போது உன்னைக்காதலிக்கிறேன் என்று சொல்லிவருபவனை இந்த இருவகை ஆண்களில் – ஒன்று அமிலம் வீசுபவன், இன்னொன்று, எங்கிருந்தாலும் வாழ்க என்று சொல்லிப்போகுபவன் – இவன் எவ்வகை என்று உன் மகள் கண்டுபிடிப்பாள்?

  இதுவும் கிடக்க. இந்த சிறுகதை shows absolutely perverse morals to all female readers. கல்லூரியில் காதல் வயப்படுகிறாள் சித்ரா. காதலை வளரமுடியாமல் பெற்றோருக்கும் தங்கைகளுக்கும் செய்யவேண்டிய கடமை தடுக்க அதைக்காதலனிடம் வெளிப்படுத்தி காதலை இருவரும் சேர்ந்து முறியடித்துவிடுகிறார்கள். நன்று. இதுவரை சுபம். இதற்குமேல் பாபம். அதுவும் குருக்கள் பெண் செய்கிறாள் (சாதி தேவையா திருமதி மீனாட்சி. கதைக்கு எவ்வகையில் இது உதவும்? அந்தோ!) போகட்டும். என்ன செய்கிறா சித்ரா?. இன்னொருவனுக்கு வாழ்க்கைப்பட்டு அவனுடன் இருமகவுகளை ஈன்றெடுத்துவளர்த்து ஆளாக்கி அதாவது கிட்டத்தட்ட் 30 வருடங்கள் – காதலனின் நினைவாகவே வாழ்கிறாள் என்று கதாசிரியை சொல்கிறார்.

  இப்படிப்பட்ட மணவாழ்க்கை தேவையா? பிள்ளை பெறுவதற்கு ஒருவன் ? மனத்தில் வைத்துப்போற்ற இன்னொருவன்?
  ;இருட்டறையில் பிணந்தழீயற்று” என்றார் பழந்தமிழர். அதை அவர் சொல்லியது ஒரு விலைப்பெண்டிரை இரவில் தழுபுவனை அப்படிக்குறிப்பிடுகிறார். உடனே என்ன அசிங்கம் என்று அவரைத்திட்டாதீர். அவ்விலைப்பெண்டிரைவிட அவன் மோசம் என்றுதான் குறிப்பு. ஏன்? அவ்விலைபபெண்டிர் தன் மனத்தால் படுக்கையைப்பகிரவில்லை. அவன் தன்னை ஒரு உயிரில்லாப்பிணமாகத்தான் அளிக்கிறாள். அவளுக்கு இருப்பது உன்னத உணர்வு.

  இக்கதையில் வரும் நாயகி தன் கணவனுடன் படுக்கையைப்ப்கிர்ந்து இரு மகவுகளை எப்படி ஈன்றெடுத்தாள்? இன்னொருவனை மனதில் வைத்துக்கொண்டே. எந்த பிணத்தை எவர் இருட்டில் தீண்டினார் என்பதை வாசகர்களே சிந்தித்துக்கொள்க. எனக்கு மூணாறு கொலைதான் நினைவுக்கு வந்து தொலைக்கிறது.

  (இன்னும்)

 3. Avatar
  IIM Ganapathi Raman says:

  If blind leads the blind, both shall fall into the ditch. முப்பது ஆண்டுகளுக்கு முன் கல்லூரியில் வருவது crush.இருபாலருக்கும் வருவது, இயற்கை. கல்லூரிக்காலம் உணர்ச்சிகள் பக்குவப்பட்டு முடியாத காலம் அதைப்பூதாகாரமாக்குவது அவர்களில்லா மற்றவர்களும் பலபல ஊடகங்களும் இம்மாதிரி கதையாசிரியைகளுமே. இதைச்சித்ரா 30 ஆண்டுகளாகியும் புரியவில்லையென்றால் அவன் என்ன மனுஷி? குமரேசன் மேல் கொண்டது ஜஸ்ட் அ கிரஷ் என்று ஆசிரியையாவது காட்டக்கூடாதா?

  தன் பெண்ணுக்கு இதெல்லாம் crush (தமிழென்ன?) மா? தரையில் உட்கார்ந்து எழும்போது பின்புறச்சேலையில் தூசிதட்டிவிடுவோமே அதைப்போல இவை என்றல்லவா சொல்லியிருக்க வேண்டும்? இஃதவல்லவா குழந்தைகளுக்கு காட்ட வேண்டிய வழி? எனவேதான் சித்ரா ஒரு குருடி. தன் பெண்ணையும் குருடியாக்குகிறாள்.

  Deeply disgusting story. I rarely read Thinnai stories. It is my bad luck that even when I read, I get only what should not have been read. The poetic title has misled me. Let me change it. மலரினும் மெல்லியது இலக்கியக்கொலை !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *