புகழ் ​பெற்ற ஏ​ழைகள் – 48

This entry is part 2 of 22 in the series 2 மார்ச் 2014

(முன்​னேறத் துடிக்கும் இளந்த​லைமு​றையினருக்கு ​வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்​கைத் ​தொடர் கட்டு​ரை)

மு​னைவர் சி.​சேதுராமன், தமிழாய்வுத்து​றைத்த​லைவர், மாட்சி​மை தங்கியமன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.

E. Mail: Malar.sethu@gmail.com

48.குடும்பத் த​லைவியா இருந்து புகழ் ​பெற்ற ஏ​ழை……………..

“ம​னைவி அ​மைவ​தெல்லாம்

இ​றைவன் ​கொடுத்த வரம்

மனது மயங்கி என்ன…..?

உனக்கும் வாழ்வு வரும்……

​பொருத்தம் உடலிலும் ​வேண்டும்

புரிந்தவன் து​ணையாக ​வேண்டும்”

என்னங்க பிரமாதமாப் பாட்டுப் பாடிகிட்டு வர்ரீங்க…அதுவும் ம​னைவியப் பத்திப் பாடிக்கிட்டு வர்ரீங்க….என்ன வீட்டுல ஏதாவது பிரச்ச​னையா…? என்ன இல்​லையா…? அட சும்மா ​சொல்லுங்க….ஒண்ணுமில்​லையா…? அப்பறம் ஏன் இந்தப் பாட்டப் ​போயிப் பாடுனீங்க….? காரணம் ​சொல்லுங்க….எதுக்கும் ஒரு காரணம் இருக்கும் ​தெரியும்ல…

ஓ​​​ஹோ….இப்பப் புரிஞ்சு ​போச்சு…நான் ​போனவாரம் ​கேட்ட குடும்பத்த​லைவியா இருந்து புகழ் ​பெற்ற ஏ​ழை யாருங்கன்னு நினச்சுப் பாடுனீங்களா…? அந்தப் பாக்கியவான் யாருங்கறீங்களா….? ​சொல்​றேன்…அதுக்கு முன்னால அந்த அம்மா யாருன்னு ஒங்களுக்குத் ​தெரியுமா…?என்னது ​தெரியாதா…? ​சொல்​றேன்….​சொல்​றேன்…

“ம​னைக்கு விளக்கம் மடவார் மடவார்”

(மடவார் அப்படீன்னா இல்லத்தரசி​யைக் குறிக்கும்) அப்படீன்னு ஒரு பழம் பாடல் ஒண்ணு இருக்குது…அது மட்டுமல்ல…., நம்ம வள்ளுவர் கூட,

“​ம​னைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்​கை

எ​னைமாட்சித் தாயினும் இல்”(குறள் எண்,52)

என்று குறிப்பிடுகின்றார். இவற்றிற்கு உதாரணமாகத் திகழ்ந்தவர்தான் அன்னா. ஒரு ஆணின் ​வெற்றிக்குப் பின்னால ஒரு ​பெண் இருக்கிறாள் என்பதற்கு இவ​ரே சான்றாவார். ஒரு ​பெண்ணால் அ​னைத்​தையும் சாதித்துக் காட்ட முடியும் என்பதற்கும் அன்னா​வே சான்றாகத் திகழ்கிறார்.

வறு​மையில் பிறந்த அன்னா

அறிவியல், அரசியல்,மருத்துவம், இலக்கியம், இசை, விளையாட்டு எனத் தொடங்கி, எத்தனையோதுறைகளில் பெண்கள் சாதனை படைத்திருக்கிறார்கள். ஆனால் எந்த ஒரு குறிப்பிட்ட துறையிலும் இருக்காமல் குடும்பத் தலைவியாக மட்டுமாக​வே இருந்து உலக அளவில் புகழ் பெற்ற ஒருவர்தான் அன்னா. அன்னா, 1846-ம் வருடம் சோவியத் யூனியனில் பிறந்தவர். மிகச் சாதாரண ஏ​ழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர். குடும்பத்தில் வறு​மையிருந்தாலும் மிகவும் துன்பமுற்று அன்னா தனது உயர் கல்வி​யை முடித்தார். வறு​மை அன்னாவின் குடும்பத்​தை வாட்டி வ​தைத்தது. அதனால் அன்னா தனது குடும்ப​த்​தை வறு​மையிலிருந்து க​ரை​யேற்ற ஏதாவது ஒரு ​வே​லைக்குச் ​செல்வ​தெனத் தீர்மானித்தார்.

அவர் நி​னைத்தபடி எந்த ​வே​லையும் அவருக்கு உகந்ததாகக் கி​டைக்கவில்​லை. கி​டைத்த ​வே​லைக​ளைச் ​செய்து அன்னா ​பொருளீட்டினார். அவருக்கு சுருக்கெழுத்து கற்றுக் கொண்டு விட்டால், ஒரு நல்ல ​வே​லைக்குச் ​சென்றுவிடலாம் என்ற எண்ணம் உள்ளத்தில் எழுந்தது. அதனால் அன்னா 1866-ஆம் ஆண்டு தமது இருபதாவது வயதில் பி.எம். ஆல்கின் என்ற சுருக்கெழுத்து ஆசிரியர் நடத்தி வந்த தனியார் பள்ளி ஒன்றில் சுருக்​கெழுத்துக் கற்பதற்காகச் சேர்ந்தார். சுருக்​கெழுத்​தை நன்கு கற்று அன்னா நல்ல சுருக்​கெழுத்தராகத் ​தேர்ந்​தார். அவரது வறு​மை​யைக் கண்ட ஆல்கின் அன்னாவிற்கு உதவினார்.

தாஸ்தயேவ்ஸ்கியிடம் சுருக்​கெழுத்தராகப் பணியில் ​சேர்தல்

கரமசோவ் சகோதரர்கள், குற்றமும், தண்டனையும் போன்ற உலகப்புகழ் பெற்ற நாவல்களின் ஆசிரியரான தாஸ்தயேவ்ஸ்கி, அக் காலத்தில் மிகுந்த துன்பத்திற்கு ஆளாகி இருந்தார். அத்துன்பம் எல்லாம் அவர் தனக்குத் தானே உண்டாக்கிக் கொண்ட​வையாகும். தாஸ்தயேவ்ஸ்கி ஒரு தீவிர வாதக் குழுவுக்கு ஆதரவாகச் செயல்பட்டார் என்று குற்றம் சாட்டப்பட்டு சி​றையில் அ​டைக்கப்பட்டார். ​மேலும் சைபீரியாவுக்கு நாடு கடத்தப்பட்டு, படாத பாடெல்லாம் பட்டு மீண்டு வந்தவர் தான் தாஸ்தயேவ்ஸ்கி.

அவர் சிறையில் இருந்த காலத்தில் அவரது மனைவி அவரை விட்டுப் பிரிந்து ​சென்றுவிட்டார். போதாக்குறைக்கு தாஸ்தயேவ்ஸ்கிக்கு கொடுமையான காக்காய் வலிப்பு நோய் வேறு இருந்தது. இத்தனையும் போதாதென்று அவர் துன்பத்​தை மறப்பதற்காகக் ககுடித்துக் குடித்து உடம்பை கெடுத்து வைத்துக் கொண்டிருந்தார்.

​மேலும் அவர் பணம் சம்பாதிப்பதற்காகச் சூதாடி, இருந்த சிறிதளவு பணத்தையும் அதில் இழந்து, கிட்டத்தட்ட மஞ்சள் கடுதாசி கொடுக்கிற நிலைக்கு வந்துவிட்டிருந்தார். ஆனாலும் பெரிய எழுத்தாளர் என்பதால் இறுதியாக அவருக்கு ஒரே ஒரு வாய்ப்பு மட்டும் இருந்தது.

ஸ்டெல்லோவ்ஸ்கி என்கிற ஒரு பதிப்பாளர் அவருக்குச் சிறிதளவு முன்பணம் கொடுத்து உதவினார். தாஸ்தயேவ்ஸ்கிக்கு அப்பதிப்பாளர் ஒரே ஒரு நிபந்த​னை மட்டும் விதித்து ஒப்பந்தம் ​செய்திருந்தார். ஒரு குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் தாஸ்தயேவ்ஸ்கி அவருக்கு ஒரு நாவலை எழுதி முடித்துக் கொடுத்தாக வேண்டும். குறிப்பிட்ட நாளுக்கு ஒரு நாள் தள்ளிப்போனாலும் தாஸ்தயேவ்ஸ்கியின் மற்ற அனைத்துப் புத்தகங்களின் உரிமையும் அவரை விட்டுப் போய்விடும். இப்படியொரு இசகு பிசகான ஒப்பந்தம் அது!

தாஸ்தயேவ்ஸ்கிக்கு அப்போது மிகப்பெரிய பணத்தேவை இருந்ததால் அந்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டார். எப்படியும் குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் நாவலை முடித்துவிடலாம் என்கிற நம்பிக்கை அவருக்கு இருந்தது.

அந்த நம்பிக்கை வரக் காரணம்- அவரது நண்பரான சுருக்கெழுத்து ஆசிரியர் ஆல்கின்! ஆவார். நீங்கள் ஒரு சுருக்கெழுத்தாளரை வேலைக்கு வைத்துக்கொண்டால் சுலபமாக உங்கள் நாவல் எழுதி முடிக்கப்பட்டுவிடும் என்று ஆல்கின் தாஸ்தயேவ்ஸ்கிக்கு ஒரு யோசனை கூறினார். அன்னாவை மனத்தில் வைத்தே அவர் இப்படியொரு யோசனையைத் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தாஸ்தயேவ்ஸ்கியும் அதற்கு ஒப்புக் கொண்டார். 1866-ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 4-ஆம் நாள் முதல் முதலாக அன்னா, தாஸ்தயேவ்ஸ்கியின் வீட்டுக்குப் புறப்பட்டார். ஒரு மாபெரும் எழுத்தாளருக்கு சுருக்​கெழுத்தராக இருக்கும் பணியில் அன்னா ​சேர்ந்தார்.

சரியாக ஒரு மாத காலத்துக்குள் இந்தப் புதிய நாவலை எழுதி முடித்தால் பதிப்பாளர் பணம் கொடுப்பார். கடனை அடைக்கலாம். நிம்மதியாக இருக்கலாம். ஒரு மாத காலத்துக்கு ஒருநாள் தள்ளிப்போனால்கூட, தாஸ்தயேவ்ஸ்கியின் மற்ற அனைத்துப் புத்தகங்களின் பதிப்புரிமையும் அந்த வில்லன் பதிப்பாளருக்கே போய்விடும்.

தாஸ்தயேவ்ஸ்கி இந்த நெருக்கடியை அன்னாவிடம் மனம் திறந்து சொன்னார். அவரின் நி​லை​மை அன்னாவுக்கு மிகவும் பரிதாபமாக இருந்தது. “நீங்கள் கவலைப்படாதீர்கள். நீங்கள் எதிர் பார்க்கும் வேகத்தில் நான் உழைப்பேன். நாவலை உரிய காலத்தில் பதிப்பாளரிடம் கொண்டு​போய்க் கொடுத்துவிட முடியும் என்றே நினைக்கிறேன்” என்று அன்னா தாஸ்தயேவ்ஸ்கிக்கு நம்பிக்கையூட்டினார்.

உண்மையில் தாஸ்தயேவ்ஸ்கி, அப்போது ஒரு முழு நாவலுக்கான திட்டம் எதுவுமே வைத்துக் கொண்டிருக்கவில்லை. ஆனாலும் நாவலை எழுதியே ஆகவேண்டும் என்பதால் அத்தியாயம் அத்தியாயமாக கூறத்​தொடங்கினார்.

இவ்வாறுதான் அன்னாவுக்கு தாஸ்தயேவ்ஸ்கியின் தொடர்பு உண்டானது. ஒரு மாத காலம். ஒரு நாவல். நாள்​தோறும் தாஸ்தயேவ்ஸ்கியின் வீட்டுக்கு அன்னா வருவார். ஆரம்பிக்கலாமா? என்று அவர் கேட்பார். அன்னா தன் பென்சிலைக் கூறாக்கிக்கொண்டு எழுதத் ​தொடங்குவார். தாஸ்தயேவ்ஸ்கி கூறும்ம் வேகத்தில் சுருக்கெழுத்தில் எழுதிக்கொண்டு வீட்டுக்கு எடுத்துச் ​சென்று இரவெல்லாம் உட்கார்ந்து விரித்து எழுதி மறுநாள் எடுத்து வருவார். அதில் சரி செய்ய வேண்டியதைச் செய்து ஒழுங்குபடுத்தி வைத்து விட்டு மீண்டும் அடுத்த அத்தியாயம். கடுமையான வேலைதான். ஆனால் அன்னா அதை மிகுந்த ஆர்வத்துடன் செய்தார்.

தாஸ்தயேவ்ஸ்கி ​கொண்ட காதல்

எழுதும் நேரம் போக மற்ற நேரத்தில் அன்னா, தாஸ்தயேவ்ஸ்கியின் வாழ்க்கையில் நடந்த பல சம்பவங்களைக் கேட்டு அறிந்தார். இல்லற வாழ்க்கை அவருக்குப் பொய்த்துப் போனதில் அன்னாவுக்குத் தீராத வருத்தம் ஏற்பட்டது. ஒரு நல்ல மனைவி மட்டும் அவருக்கு அமைந்திருந்தால் வாழ்வில் இத்தனை துன்பங்க​ளை அவர் அ​டைந்திருக்க மாட்டார் என்று நினைத்தார் அன்னா. தாஸ்தயேவ்ஸ்கிக்கு அப்போது நாற்பதுக்கு வயது மேல் ஆகியிருந்தது. அன்னாவுக்கோ, இளமை மிக்க இருபது! அன்னா பார்க்க அழகாகவும், கவர்ச்சியாகவும் இருப்பார் அவர்.

ஆனால் தாஸ்தயேவ்ஸ்கி ஒரு சூதாடி, குடிகாரர், மனைவியை இழந்தவர், பெரும் கடன்காரர், காக்காய் வலிப்பு நோய் உள்ளவர், வாழ்வில் எந்த ஒழுங்​கையும் பேணாதவர் – அத்தகைய ஒரு ஆள் – மாபெரும் எழுத்தாளராகவே இருந்தாலும் காதல் வருமா என்ன?

காதலுக்குக் கண்ணில்​லைன்னு வழக்கத்துல ​சொல்வாங்க……அது உண்​மைதாங்க…….இப்படிப்பட்ட ஒருத்தரா விளங்கிய தாஸ்தயேவ்ஸ்கியின் மீது அன்னாவுக்குக் காதல் ஏற்பட்டது……..

அக்காதல் நாளுக்கு நாள் வளர்ந்து ​கொண்​டே வந்தது! அவர்கள் இருவரும் சேர்ந்து அந்த நாவலைக் குறிப்பிட்ட காலத்திற்குள் எழுதி முடித்துவிட்டார்கள். ஆனாலும் பதிப்பாளர் ஊரைவிட்டு எங்கோ போய் ஒளிந்து கொண்டு, தாஸ்தயேவ்ஸ்கியை அலைக்கழிக்க ஆரம்பித்தார். எப்படியாவது அவரை உரிய காலத்தில் நாவலைக் கொடுக்கவிடாமல் ஏமாற்றி, மொத்த புத்தகங்களின் உரிமையையும் களவாடி விட வேண்டும் என்று அவர் நினைத்தார்.

ஆனால் அன்னா, தமது புத்திசாலித்தனமான நடவடிக்கைகளின் மூலம் அந்தப் பதிப்பாளரின் நண்பரைப் பிடித்து, எப்படியோ நாவல் பிரதியை உரிய நாளில் அவரிடம் சேர்த்துவிட ஏற்பாடு செய்துவிட்டார்.

மிகப்பெரிய சதிவலையிலிருந்து தன்னைக் காப்பாற்றிய அன்னாவின் மீது அப்போதுதான் தாஸ்தயேவ்ஸ்கிக்குக் காதல் பிறந்தது! அன்னாவைப் போன்ற ஒரு பொறுப்பான பெண் தனக்கு மனைவியாக வாய்த்தால் எழுத்தில் இன்னும் எத்தனை எத்தனையோ சாதிக்கலாமே என்று அவர் ஏங்கினார். தம் காதலை முதன் முதலில் அவர் அன்னாவிடம் சொன்னபோது அன்னா, யோசிக்கச் சற்று அவகாசம் கேட்டார். அன்னாவின் வீட்டார் இக்காத​லை எதிர்த்தார்கள்.​போயும் ​போயும் ஒரு கிழவனைப் போயா கல்யாணம் செய்து கொள்ளப் போகிறாய்? உனக்கென்ன பைத்தியமா என்றார்கள். அதுவரை மாபெரும் நாவலாசிரியராக இருந்தவர், காதல், கல்யாணம் என்று வந்ததும் வெறும் கிழவன் ஆகிவிட்டார்!

ஆனால் அன்னா மிக உறுதியுடன் இருந்து தாஸ்தயேவ்ஸ்கியைத் திருமணம் செய்து கொண்டார்! அன்றிலிருந்துதான் அவருடைய நிஜமான பணிகள் ஆரம்பமாயின. இங்க ஒரு ​செய்தி எனக்கு நி​னைவுக்கு வருது..அதச் ​சொல்​றேன் ​கேளுங்க….

தத்துவ மேதை பிளேட்டோ மாணவனாயிருந்த போது அவரது ஆசிரியரிடம், “காதல் என்றால் என்ன? அதை எப்படி அறிவது?” என்று கேட்டாராம்.

ஆசிரியர் எதிரே வளமாய் இருந்த கோதுமை வயலைக்காட்டி “அதில் மிக அற்புதமான, நேர்த்தியான தண்டு ஒன்றை நீ கொண்டு வா. காதலை அறிந்து கொள்ளலாம். ஆனால் பின்னால் திரும்பிப் பார்க்கக் கூடாது. ஒன்றே ஒன்றுதான் கொண்டு வரவேண்டும்” என்றாராம். பிளேட்டோ கோதுமை வயல் முழுவதும் அலைந்து நீண்ட நேரம் கழித்து வெறுங்கையோடு வந்தாராம்.

ஆசிரியர் கேட்டாராம். “ஏன் ஒன்றும் பிடுங்கி வரவில்லை?’ அதற்கு பிளேட்டோ சொல்லியிருக்கிறார்.” அற்புதமான தண்டுகளை பார்த்தேன். அதைவிடவும் பிரமாதமானது முன்னால் இருக்கும் எனத் தோன்றியது. முன்னால் செல்ல செல்ல அவ்வளவு நல்ல தண்டுகளை காண முடியவில்லை. பின்னாலும் திரும்பி வர முடியாது. இப்படியே கழிந்து விட்டது”

“இதுதான் காதல்” என்றாராம் ஆசிரியர்.

சிறிதுநாள் கழித்து பிளேட்டோ ஆசிரியரிடம் “திருமணம் என்றால் என்ன” என்றாராம்.

ஆசிரியர் “அதோ அடர்ந்த கானகம் இருக்கிறது. அதில் ஒரே ஒரு மரத்தை வெட்ட வேண்டும். பின்னால் திரும்பிப் பார்க்கக் கூடாது. நீ வெட்டியதுதான் மிக உயரமான மரம் என்றால் திருமணத்தை புரிந்து கொள்வாய்” என்றாராம்.

பிளேட்டோ கொஞ்ச நேரத்தில் ஒரு சாதாரண மரத்தை வெட்டிக்கொண்டு வந்தாராம். “ஏன் இத்தனை சாதாரண மரத்தை வெட்டினாய்” என்று ஆசிரியர் கேட்டிருக்கிறார். “என்னுடைய முந்தைய அனுபவத்தால் இந்த முடிவுக்கு வந்தேன். முதலில் இது நல்ல மரமாகவே தோன்றியது. இதை கடந்து போய் இதைவிடவும் மோசமான மரமே எதிர்ப்பட்டால், இதையும் இழக்க வேண்டியிருக்குமே என்று வெட்டிவிட்டேன்” என்று பிளேட்டோ சொல்லியிருக்கிறார்.

“இதுதான் திருமணம் என்பது என் மகனே. காதல் என்பது மனிதனுக்கு நேர்கிற அற்புதமான அனுபவம். கையில் கிடைப்பதை விட கோதுமை வயலில் தவறி விடும்போதுதான் அதன் மகத்துவம் தெரிய வருகிறது. திருமணம் என்பது வெட்டிய மரம் போன்றது. சமரசம் செய்து கொள்கிறாய்” என்று ஆசிரியர் விளக்கினாராம்.

என்னங்க புரியுதா….? ​கொஞ்சம் ​பொறு​மையா இ​தை ​யோசிச்சிப் பாத்தீங்கன்னா நல்லாப் புரியும்…………

தாஸ்தயேவ்ஸ்கி மிகுந்த மகிழ்ச்சிய​டைந்தார். அன்னாவும் தாஸ்தயேவ்ஸ்கி ​மிகுந்த மன ஒற்று​மையுடன் இல்லறம் நடத்தினார்கள்……ஆம்……!

“ஆ​சை காதல் ​கைகளில் ​சேர்ந்தால் வாழ்​வே

​சொர்க்கம் ஆகு​மே”

தாஸ்தயேவ்ஸ்கியின் வாழ்க்​கையில் வசந்தம் பிறந்தது…கவ​லை ம​றையத் ​தொடங்கியது…தான் விரும்பிய ​பெண்​ணே, அதிலும் தன்​னை விரும்பிய ​பெண்​ணே தனக்கு ம​னைவியாக வாய்த்த​தை எண்ணி எண்ணி தாஸ்தயேவ்ஸ்கி ​பெரு மகிழ்ச்சிய​டைந்தார்…. சிலருக்குத் திருமணமானா நரகம் ஆரம்பிக்கும்…..! சிலருக்குத் திருமணம் ஆனாத்தான் ​சொர்க்க​மே ஆரம்பிக்கும்….! தாஸ்தயேவ்ஸ்கிக்கு அன்னா​வோட திருமணம் ஆனதால அவ​ரோட வாழ்க்​கை ​சொர்க்கத்​தை ​நோக்கிப் பயணிக்கத் ​தொடங்குச்சி…. …..என்ன மயக்கம் வருதா…..? ​கேளுங்க…இன்னும் ​கேளுங்க..அன்னாவின் வாழ்​​வைக் ​கேட்டா இன்னும் ஆச்சரியப்படுவீங்க….

​வெற்றிக​ளைத் ​தேடித்தந்த அன்னா

அதுவ​ரை அன்னாவாக இருந்தவர் தாஸ்தயேவ்ஸ்கி​யை மணம்முடித்ததன் பின்னர் அன்னாதாஸ்தயேவ்ஸ்கி ஆனார். தாஸ்தயேவ்ஸ்கியின் சொந்தச் சிக்கல்கள் ஒவ்வொன்றாக அன்னாவின் நினைவுக்கு வந்தன. அன்னா முதலில் தாஸ்தயேவ்ஸ்கி குடிக்கும் அளவைக் குறைத்தார். பிறகு கடன்களை அடைக்க முயற்சிகள் எடுத்துக் கொண்டார். தாஸ்தயேவ்ஸ்கி எதையெதை எப்போது எழுத வேண்டும், யார் பதிப்பாளர் என்பதை யெல்லாம் அன்னாதான் தீர்மானித்தார். அவரது காக்கை வலிப்பு நோய்க்குத் தீவிர சிகிச்சை தரவும் ​தொடங்கினார். தாஸ்தயேவ்ஸ்கி​யை ரஷ்யாவில் இருந்த மிகச் சிறந்த மருத்துவர்களிடம் அழைத்துப்போய்க் காட்டினார்.

என்னங்க வாயப் பிளந்துட்டீங்க….​கொடுக்கிற ​தெய்வம் கூ​ரையப் பிச்சிக்கிட்டுக் ​கொடுத்த மாதிரி தாஸ்தயேவ்ஸ்கியின் வாழ்க்​கை அன்னா வந்த பிறகு ​சொர்க்கபுரி ​போன்று அ​மைந்தது…..

வாழ்வில் சந்தோஷம் என்றால் என்ன என்று தாஸ்தயேவ்ஸ்கி என்ற அந்த மகா கலைஞன் முதல் முறையாகத் தெரிந்து கொண்ட தினங்கள் அவை. தாஸ்தயேவ்ஸ்கியின் சந்தோஷத்துக்காகத் தன் சொந்த சந்தோஷங்கள் அத்தனையையும் அன்னா அப்போது துறந்திருந்தார்! அவர் சிறையிலிருந்த காலத்தில் எழுதிய நாட் குறிப்புகள், அரைகுறை சிறுகதைகள், நாவல்கள் எல்லாவற்றையும் தூசி தட்டி எடுத்து ஒழுங்கு பண்ணத் தொடங்கினார். என்னங்க இப்ப ஒங்களுக்கு

“தற்காத்துத் தற்​கொண்டான் ​பேணி த​கைசான்ற

​சொற்காத்து ​சோர்விலாள் ​பெண்”

அப்படீங்கற ஒரு திருக்குறள் ​நெனவுக்கு வரணு​மே…. அந்தக் குறளுக்கு உதராணமா அன்னாவின் வாழ்க்​கை அ​மைஞ்சிருக்கு இல​லையா…? இந்த உலகத்தில் தாஸ்தயேவ்ஸ்கியின் புகழ் ​நெலச்சு நிக்கறதுக்குக் காரணமாவும் பின்புலமாவும் அன்னா இருந்தாங்க…………..ஒரு தி​ரைப்படப்பாடல் ஒங்களுக்கு ​நி​னைவுக்கு வரும்னு ​நெனக்கி​றேன்… என்னது ​தெரியுமா….?

“ஒன்று ​சேர்ந்த அன்பு மாறுமா…?

உண்​மைக் காதல் மாறிப் ​போகுமா..?”

அப்படீங்கற பாட்டுத்தாங்க அது ….​பொருத்தமான பாட்டா இருக்குதுல்ல…அன்னா தாஸ்தயேவ்ஸ்கிய விட்டுட்டு விலகிப் ​போக​வே இல்​லை…அவ​ரோடு கூட​வே இருந்தாங்க… எல்லா நி​லைகளிலும் அவ​ருக்கு உறுது​ணையாக​வே இருந்தாங்க……

ம​றைந்து ​போன காதலர்கள்

அன்னா அவர்கள் தன் வாழ்நாள் முழுவதையும் கணவரின் புத்தகங்களை வெளிக்கொண்டு வருவதற்காகவே செலவழித்தார். தாஸ்தயேவ்ஸ்கி 1881-ஆம் ஆண்டு இறந்ததால் அன்னா து​ணை​யை இழந்து விதவை ஆனார். அன்னாவின் திருமண வாழ்க்கை என்பது சுமார் பதினைந்து ஆண்டுகள் மட்டு​மே நீடித்திருந்தது. அந்நாள்கள் அன்னாவிற்கு மகிழ்ச்சியானதாக​வே அ​மைந்திருந்தன..

அன்னா இறக்கும்வரை தம் கணவரின் பெருமையை உலகறியச் செய்வதற்காக அயராது உழைத்துக் கொண்டே இருந்தார். இந்தமாதிரி உன்னதமான ம​னைவி​யைப் பார்க்க முடியுமா…? இத்த​கைய உன்னதமான புகழ் ​பெற்றவராகத் திகழ்ந்த அன்னா 1918-ஆம் ஆண்டில் ம​றைந்தார். அவரது உயிர் காதல் கணவர் இருக்குமிடம் ​நோக்கிச் ​சென்றது,

அன்னா தாம் இறப்பதற்குச் சில ஆண்டுகளுக்கு முன்னதாக, தன்னுடைய மற்றும் தம் கணவருடைய டைரிக் குறிப்புகளை அடிப்படையாக வைத்துத் தம் காதல், திருமணம் ஆகிய​வை குறித்த தகவல்களை மட்டும் தொகுத்து ஒரு சிறு நூலாக எழுதி வெளியிட்டார். ஒரு வரி கூட மிகையில்லாமல் உள்ளது உள்ளவாறு விவரிக்கும் அன்னாவின் அந்த நினைவுக் குறிப்பு இன்றளவும் உலக இலக்கியங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. காதலர்கள் இறக்கலாம் ஆனால் காதல் என்றும் இறப்பதில்​லை…உருவத்​தை​யோ பகட்​டை​யோ பார்த்து வருவது காதல் இல்​லை…அது உள்ளத்திலிருந்து வருவது…ஆண்டுகள் பல ஆனாலும் அது மாறாது அப்படி​யே நி​லைச்சு நிக்குங்குற​தை அன்னாவின் வாழ்க்​கையிலிருந்து நாம ​தெரிஞ்சுக்கலாம்….அ​தோடு மட்டுமல்ல உண்​மைக் காதல் தன்​னையும் உயர்த்தும்….தன்​னைச் சார்ந்தவங்க​ளையும் உயர்த்தும்….காதலால எல்லாம் முடியுங்கறத அன்னாவின் வாழ்க்​கை நமக்கு எடுத்து​ரைக்குது இல்லீங்களா….?

வாழ்க்​கையில உண்​மையா இருங்க…எந்த நி​லையிலும் மன உறுதி​யைக் ​கைவிட்டுடாதீங்க…முடியும்னு ​நெனச்சீங்கன்னா…அது முடியும்….முடியாதுன்னு ​நெனச்சா எதுவும் முடியாது……..முடியாதுங்கறதுக்கு ஆயிரங் காரணங்களச் ​சொல்லலாம்…..ஆனா முடியுங்கறதுக்கு ஒரு காரணத்​தைக்கூடச் ​சொல்ல முடியாது………… முடியும்னா பா​றைகள்கூட பா​தையாகும்……அப்பறம் என்ன உண்​மையான மன​தோடு ஒங்க இலக்க ​நோக்கிப் பயணமாகுங்க….​வெற்றி ​மேல ​வெற்றிதான்….

ஆடுகள் ​மேய்ச்சிக்கிட்டு இருந்த ஒரு ​சாதராண குடும்பத்தில் பிறந்த ஏ​ழைப் ​பெரிய வீராங்க​னையாகி ப​டைக​ளைத் த​லை​மைதாங்கி நடத்தி ​வெற்றியும் ​பெற்றாள்…ஆனா அவங்க நாட்டுக்காரங்களா​லே​யே எதிரிகள்கிட்ட பிடிச்சுக் ​கொடுக்கப்பட்டு இறந்தாள்…அவர் புனித அன்​னையாகத் திகழ்ந்த ஏ​ழை……… யாரு ​தெரியுமா…அவங்க பிரன்சு நாட்​டைச் ​​சேந்தவங்க…முதல் ஒலகப்​போரு ​தொடங்கிய​போது பிரிட்டன் ப​டையும், பிரான்சுப் ப​டையும் அவங்க​ளோட நி​னைவிடத்துல மலர் தூவி வழிபட்ட பின்னர்தான் ​போ​​ரை​யே ​தொடங்கினாங்க..யாரு அவங்க….? என்ன கண்ண முடிகிட்டீங்க….ஓ.​ஹோ…​ஹோ……..​யோசிக்கிறீங்களா………​யோசிங்க……..​யோசிங்க…அடுத்த வாரம் பார்ப்​போம்…….(​தொடரும்……………49)

Series Navigationநெஞ்சு பொறுக்குதில்லையே…..தமிழ்த்தாத்தா உ.வே.சா. : கற்றலும் கற்பித்தலும் – 2தினம் என் பயணங்கள் – 7பொறுமையின் வளைகொம்புகாத்திருப்புதொடுவானம் 5.எங்கே நிம்மதிவால்ட் விட்மன் வசனக் கவிதை – 64 ஆதாமின் பிள்ளைகள் – 3பாலு மகேந்திராவின் சிறந்த பத்துப் படங்கள் – DVD – நன்கொடை 1000 ரூபாய்.படிமை – திரைப்பட பயிற்சி வகுப்பு – மாணவர் சேர்க்கைவரலாற்றின் தடம் தமிழ்க்கவியின் ‘ஊழிக்காலம்’”பிரெஞ்சுப் பயணியின் பிரமிக்கவைக்கும் குறிப்புகள்” [‘மொகலாயப் பேரரசில் பெர்னியரின் பயணக்குறிப்புகள்’ நூலை முன்வைத்து’]தமிழ் ஸ்டுடியோவின் சிறுவர் திரை ஆண்டு – தன்னார்வலர்கள் தேவை…திண்ணையின் இலக்கியத் தடம்- 24சீதாயணம் நாடகப் படக்கதை – 22
author

முனைவர் சி.சேதுராமன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *