ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் அத்தியாயம்-24 துரோணரின் வீழ்ச்சி

This entry is part 2 of 22 in the series 2 மார்ச் 2014

 

பண்டைய பாரதத்தில் சத்திரியர்கள் என்பவர்கள் போர் வீரர்களாகவேக் கருதப் பட்டனர். இருப்பினும் வேறு வருணத்தவர் போரில் கலந்து கொண்டதில்லையா என்ற கேள்வி எழும். மகாபாரதத்தில் கூட வேறு வருணத்தவரான பிராமணர்களும், வைசியர்களும் போரில் பங்கு கொண்டதற்குக் குறிப்புகள் உள்ளன. துரியோதனின் படைத் தளபதிகளில் விரல் விட்டு எண்ணும்  அளவிற்கு பிராமணர்கள் இடம் பெற்றிருந்தனர். துரோணர், துரோணர் அவருடைய புதல்வன் அசுவத்தாமன், துரோணரின் சகோதரி கணவர் கிருபர் முதளியோர் அந்தணர்களே. அந்தக் காலத்தில் அனைத்து விதமான வித்தைகளையும் கற்றுக் கொடுப்பவர்- போர் நுணுக்கங்களையும் போர் வித்தைகளையும்- அந்தனர்களாகவே இருந்திருக்கின்றனர். எனவேதான் துரோணரும் கிருபரும் துரோணாச்சாரியார் என்றும் கிருபாச்சாரியர் என்றே அழைக்கப்பட்டனர்.

அந்தக் கால சமுதாய வழக்கப்படி ஒரு அந்தணனை ஒரு போரில் கூடக் கொல்வது பாவம் என்று கருதப் பட்டது. இந்த விதி மகாபாரதம் இயற்றிய கவிகளுக்குப் பெரிய சங்கடமாகப் போயிற்று. குருக்ஷேத்திரப் போரில் பிராமணர்கள் கொல்லப் பட்டனர் என்ற தகவலை எவ்வாறு சொல்வது என்று தடுமாறினார்கள். உதாரணத்திற்குப் பாண்டவர்களோ அவர்களைச் சார்ந்தவர்களோ யுத்தத்தில் ஒரு பிராமணனைக் கொன்றார்கள் என்று எப்படி சொல்ல முடியும்? எனவேதான் அசுவத்தாமனும், கிருபரும் போர் முடிந்த பிறகும் உயிருடன் இருந்ததாக சித்தரிக்கப்படுகிறார்கள். குருக்ஷேத்திர யுத்தம் கௌரவர்களின் மொத்தப் படையையும் மேற்சொன்ன இரண்டு அந்தணர்களையும் தவிர மற்ற அனைவரையும் அழித்து விடுகிறது. துரோணாச்சாரியாரின் முடிவு இன்னும் சிக்கல் நிறைந்தது. பீஷ்மரின் வீழ்ச்சிக்குப் பிறகு துரோணர், தான் படையின் தலைமையை ஏற்று நடத்துவதாக ஏற்கனவே முடிவு   செய்தவண்ணம்,தலைமைப் பொறுப்பை ஏற்கிறார். மிகத் தீவிரமாகப் போர் புரிகிறார். பாண்டவர்கள் வெற்றி பெற வேண்டுமானால் துரோணர் மடிய வேண்டும். இது தெரிந்திருந்தும் அர்ஜுனன் அவர் மேல் அம்பு எய்துவதற்குத் தயங்குகிறான் காரணம் அவர் ஒரு பிராமணர் என்பதால் அன்று அவர் அவனுடைய ஆச்சாரியார் என்பதால்.

எனவே மகாபாரதத்தை  இயற்றிய கவிஞன் ஒரு புதிய கதையை உருவாக்குகிறான். அந்தக் கதையின் படி துரோணர் முன்னொரு காலத்தில் துருபத மகாராஜாவை அவமானப் படுத்தி விடுகிறார். எனவே  துரோணரைக் கொல்லும் அளவிற்குப் பழியை வளர்த்துக் கொள்ளும் துருபதன் அதற்காக ஒரு யாகம் வளர்க்கிறான். அந்த யாக குண்டத்திலிருந்து ஓர் ஆண் மகவு தோன்றியது.  அதற்கு திருஷ்டத்யும்னன் என்று பெயரிட்டு துருபதன் அவனைத் தனது மகனாகவே வளர்த்து வருகிறான். துரோணரைப் பழி வாங்கும் பொருட்டே திருஷ்டத்யும்னன் ஒரு வீரனாக பயிற்சி அளிக்கப் படுகிறான்.

குருக்ஷேத்திரப் போரில் திருஷ்டத்யும்னன் பாண்டவர்களின் படைத் தளபதியாக இருக்கிறான். பாண்டவர்கள் துரோணரை வீழ்த்தும் பொறுப்பை அவனிடம் ஒப்படைக்கிறார்கள். அந்தணராகிய துரோணரை வீழ்த்துவதன் மூலம் பீடிக்க இருக்கும் பிரும்மஹத்தி தோஷம் அவனைப் பிடிக்காமல் இருக்க ஒரு பரிகார வேள்வி புரிகின்றனர். துரோணரின் வீழ்ச்சிக்குப் பாண்டவர்களுக்கு பங்கம் ஏற்படா வண்ணம் இப்படி ஒரு அடித்தளம் போடப் படுகிறது.

இருந்தாலும் மகாபாரதம் ஒரு தனி மனிதனின் ப்டைப்பன்று. பல கவிஞர்கள் அதனைக் காலம் தோறும் மாற்றி அமைத்த வண்ணம் இருக்கிறார்கள். அவரவர் வருணனைகளுக்கு ஏற்பக் கதையின் போக்கு மாறிக் கொண்டே இருக்கிறது .எனவே துரோணர் உடனே இறக்கவில்லை. வேறொரு கவிஞன் காவியத்தின் கருவைத் தன் கையில் எடுத்துக் கொள்கிறான். இந்தக் கவிஞனின் கற்பனையில் கதை இப்படிச் செல்கிறது. பதினைந்து நாட்களாக யுத்தம் தொடர்கிறது. இருப்பினும் துரோணரை திருஷ்டத்யும்மனனால் வீழ்த்த முடியவில்லை. மாறாக திருஷ்டத்யும்னனுக்கு 15ம் நாளன்று பின்னடைவு ஏற்படுகிறது. ஏதாவது செய்தால்தான் அவனால் துரோணரை வீழ்த்த முடியும்.

இப்படி ஒரு மன உளைச்சலில் பாண்டவர்கள் துரோணரைக் கொல்வதற்கு ஒரு வஞ்சக திட்டத்தை மேற்கொள்கின்றனர். துரோணரை ஊக்கமிழக்கச் செய்வதன் மூலம் அவரைத் தாக்குவதுதான் பாண்டவர்களின் வஞ்சகத் திட்டம்.இ ந்த வஞ்சகத் திட்டத்தை வேறு எவரும் வகுக்கவில்லை. ஸ்ரீகிருஷ்ணரே வகுத்ததாக இந்தக் கவி சாதிக்கிறார். இது குறித்து ஸ்ரீகிருஷ்ணரே சிலாகிக்கிறார். “ பாண்டவர்களே! மற்றவரை விடுங்கள். இந்திரனால் கூட இந்தத் துரோணரை எதிர்க்க முடியாது. ஆனால் அவர் போர்க்களத்தில் நிராயுதபாணியாக இருக்கும்பொழுது ஒரு சாதாரண மனிதன் கூட அவரைக் கொன்று விட முடியும். எனவே அவரை நிராயுதபாணியாக்க  தருமத்திற்குப் புறம்பானதாக இருந்தாலும் பரவாயில்லை அந்தச் செயலைச் செய்யுங்கள். “

சென்ற அத்தியாயங்களில்தான் ஸ்ரீகிருஷ்ணர் “ எங்கெல்லாம் பிரம்மமும் சத்தியமும், பணிவும், தூய்மையும், தர்மமும், கம்பீரமும், கண்ணியமும், கருணையும், பொறுமையும் இருக்கின்றனவோ அங்கெல்லாம் நான் இருக்கின்றேன். “ என்று  சொல்லி வாய் மூடவில்லை அதற்குள் இப்படி ஒரு சதித் திட்டம் தீட்டியதாக இரண்டாம் தளக் கவிஞன் கூறுகிறார்.

ஸ்ரீகிருஷ்ணர் யுகங்கள் தோறும் எப்பொழுதெல்லாம் தர்ம பரிபாலனம் செய்ய வேண்டி உள்ளதோ அப்பொழுதெல்லாம் தான் அவதரிப்பதாகக் கூறுகிறார். மகாபாரதம் முழுவதிலும் தர்மத்தின் வழி நடப்பவர்களில் சிறந்தவராக ஸ்ரீகிருஷ்ணரே சித்தரிக்கப் படுகிறார். அவருடைய இந்தத் தனித்தன்மையான குணாதிசயம் பகை மன்னனான திருதராஷ்ட்டிரனால் கூட பாராட்டப் படுகிறது. அப்படி ஒரு மனிதனால் தருமத்திற்கு எதிரான செய்கையைப் புரிய முடியுமா என்ற ஐயம் எழுகிறது. இவற்றையெல்லாம் பார்க்கும்பொழுது மகாபாரதம் ஒன்றுக்கு மேற்பட்ட கவிஞர்களால் இயற்றப் பட்டுகிறது என்ற என்னுடைய கூற்று நிரூபணம் ஆகிறது.

நேர்மையற்ற வழியை மேற்கொள்ளுமாறுப் பாண்டவர்களைத் தூண்டும் ஸ்ரீகிருஷ்ணர் மேலும் கூறுகிறார் , “ தனது மகன் அசுவத்தாமா இறந்துவிட்டான் என்ற செய்தியைக் கேள்விப்படும் மறுகணம் துரோணர் தான் போரிடுவதை நிறுத்தி விடுவார். அந்த அளவிற்கு

 

 

 

யுத்தத்தில் அசுவத்தாமன் இறந்து விட்டான் என்றத் தகவலைக் கூறுங்கள்” என்கிறார்.

பொய் சொல்ல அர்ஜுனன் மறுக்கிறான். யுதிஷ்டிரர் பாதி மனதுடன் பொய் சொல்ல சம்மதிக்கிறார். பீமன் எவ்விதத் தயக்கமுமின்றி போர்க்களம் சென்று அசுவத்தாமன் என்ற பெயருடைய யானையைக் கொன்று விடுகிறான். பிறகு அவன் துரோணர் அருகில் வந்து, தான் அசுவத்தாமனைக் கொன்று விட்டதாகக் கூறுகிறான். துரோணருக்குத் தெரியும் தன் மகன் பகைவரை எதிர்ப்பதில் நிகரற்றவன் ; அவன் என்றுமே பாண்டவர்களுக்கு சிம்ம சொப்பனம் என்று. எனவே துரோணர் பீமன் சொன்னதைக் காதில் வாங்கிக் கொள்ளாமல் அவர் திருஷ்டத்யும்னனை எதிர்ப்பதற்கு முனைகிறார். சிறிது நேரம் செல்லவே அந்தச் செய்தியானது அவரை உறுத்தவே அதனை உறுதி செய்து கொள்ள யுதிஷ்டிரரிடம் கேட்கிறார். அவருக்குத் தெரியும் தருமன் எந்தத் தருணத்திலும் தர்மத்திற்குப் புறம்பாகப் பொய் சொல்ல மாட்டார் என்று.  தருமன் அசுவத்தாமன் என்ற யானை இறந்தது என்று கூறுகிறான். அவ்வாறு கூறும்பொழுது யானை என்ற வார்த்தையை மிக மெலிதாகக் காதில் விழாத வண்ணம் உச்சரிக்கிறான்.

இந்தச் செய்தி அதாவது தருமரின் வாயிலிருந்து கேள்விப்பட்ட செய்தி துரோணரை நிலை குலையச் செய்கிறது. ஆனால் சிறிது நேரத்திற்குப் பின்னர் தனதுப் போர்த்திறமைக் கை வரப் பெற்ற துரோணர் மீண்டும் கடுமையாக திருஷ்டத்யும்னனைத் தாக்கி அவனை குற்றுயிரும் கொலையுயிருமாக ஆக்குகிறார். பீமன் அந்த இடத்திற்கு விரைந்து வந்து   திருஷ்டத்யும்னனைக் காப்பாற்றுகிறான். துரோணரைத் தடுத்து நிறுத்தும் பீமன் அவர் மேல் வசை மாரி பொழிகிறான். வசைமொழிகளில் மிகக் கடுமையானது துரோணரை ஒரு சண்டாளன் என்று தூற்றியதுதான். ஒரு சண்டாளனைப் போல துரோணர் ஆரியர், ஆரியர் அல்லாத மலைவாழ் மக்கள் முதலியோரை வகையின்றிக் கொன்று குவிப்பதாகக் குற்றம் சாட்டுகிறான். இப்படி ஒரு கொடூரமான செயல் ஓர் அந்தணனுக்கு உகந்ததன்று எனக் கூறுகிறான். துரோணருக்கு சொத்தின் மீதுதான் ஆசை அதிகம் என்றும் தன் பெண்டாட்டி பிள்ளையைத் தவிர வேறு சிந்தனை இல்லாதவர் என்றும் கடுமையாக ஏசுகிறான்.

பீமன் இவ்வாறு கூறியது துரோணர் மனதைப் புண்படுத்தியது. அவர் ஏற்கனவே எளிதில் உணர்ச்சி வசப்படுபவர். அந்தச் சுடுசொற்களின் கடுமைக் காரணமாக அவமானம்    மேலிட்ட துரோணர் தன் ஆயுதங்களைக் கீழே போட்டு விடுகிறார். உடனே அங்கு வந்த திருஷ்டத்யும்னன் அவர் தலையைக் கொய்து விடுகிறான்.

இப்பொழுது நமது வேலை தருமர் கூறிய தவறான வாக்கியம் நிஜமாகவேக் கூறப்பட்டதா என்பதை ஆராய்வதுதான். இந்தத் தருணத்தில் என் வாசகர்களை தயை கூர்ந்து கேட்டுக் கொள்வதெல்லாம் இதுவரை எந்த வழிமுறைகள் மூலம் ஸ்ரீகிருஷ்ணரைப் பற்றி வரும் பகுதியில் உண்மை எது, கற்பனைப் பதிவு எது என்பதனைப் பகுத்தாய்ந்து வந்தேனோ அந்த வழிமுறைகளை நினைவு கூறுவதுதான். நான் வகுத்துக் கொண்ட நெறிமுறைகளின் படி ஒரு பாத்திரப் படைப்பு இயல்பு நிலை மாறி தன்னுடைய குணாதிசியத்திற்கு முற்றிலும் பொருந்தாத முறையில் நடந்து கொள்ளுமேயானால் அப்படிப்பட்டப் பிறழ்ச்சியை முற்றிலும் நிராகரித்து விடுவது நலம். உதாரணத்திற்கு பீமனை உடல் மெலிந்தவன் என்று எங்காவதுக் குறிப்பிட்டிருந்தால் அதனை நாம் நிராகரித்து விடுவோம் அல்லவா?

அசுவத்தாமனின் மறைவைத் தன் வாயினால் தருமன் கூறினான் என்றால் அது அடிப்படையில் ஒருவருடைய இயல்பான நல்ல குணத்தைப் பங்கப் படுத்துவதாகும். அதே போல் பீமனின் பாத்திரப்படைப்புக்கு ஏற்ப பீமன் தன் கரங்களையும் கதையையும் விடுத்து வேறு எதையும் ஆயுதமாகப் பயன் படுத்துபவன் அல்லன். நான் இதுவரையில் விளக்கிக் கூறியதை எல்லாம் என் வாசகர்கள் சரியாகப் புரிந்து கொண்டு வந்திருக்கின்றனர் என்றால் ஸ்ரீகிருஷ்ணரைப் பற்றியப் பொய்யுரை அவர் இயல்புக்கு முற்றிலும் தொடர்பு இல்லாதது. இருளை ஒளி என்றும், கருமையை வெண்மை என்றும், வெப்பத்தைக் குளிர்ச்சி என்றும், கண்ணியத்தை கீழ்த்தரம் என்றும், ஆரோக்கியத்தை நோய் என்றும் அர்த்தம் கொள்வது போன்றதாகி விடும்.

அசுவத்தாமனின் மரணம் குறித்தப் பொய்யுரையை தம் இயல்புக்கு மாறாக ஒருவரல்ல மூவர் கூறும்பொழுது அது இட்டுக் கட்டப்பட்டது என்பதைத் தவிரக் கூறுவதற்கு ஒன்றுமில்லை. இதைக் கண்டிப்பாக மகாபாரதத்தை இயற்றிய ஆதி கவி செய்திருக்க வாய்ப்பில்லை.

என் வாதம் இன்னும் முற்றிலும் முடிவடையவில்லை. ஒரு உத்தியைக் கையாண்டு அசுவத்தாமனைக் கொன்றதாகக் கூறியது வெறும் கற்பனைப் புனைவு என்பதை நான் நிரூபித்து விட்டேன். நான் கையாளப் போகும் அடுத்த உத்தி என்னவென்றால் ஒரே நிகழ்சசி  இரண்டு பதிவுகளில் இடம் பெறும்பொழுது இரண்டு பதிவுகளும் முற்றிலும் ஒன்றுக்கொன்று முரண் படும்பொழுது கதையோட்டத்திற்குப் பொருந்தாத பகுதியை நீக்கி விடுவது நல்லது .துரோணரின் வீழ்ச்சிக்குக் காரணமாக ஒரு யானை இருந்ததாகக் கூறப்பட்டதைப் போல வேறு ஒரு நிகழ்ச்சிக் கூறப் படுகிறது. இந்த இரண்டாவது பதிவில் துரோணர் தீவிரமாகப் போரில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்பொழுது அவரை சந்திக்கும் ரிஷிகளின் பட்டியல் வெளியிடப் படுகிறது. விசுவாமித்திரர், ஜமதக்னி, வசிஷ்டர், அத்ரி, பிருகு, ஆங்கிரஸ், விசுதர், பிரஸனி, காரகர், காஸ்யபர் ,பரத்வாஜர், மரீசிபர் இன்னும் இது போன்ற பல ரிஷிகளும் ஒன்றாக வந்து இப்படி துரோணர் பல்லாயிரக் கணக்கானோரைக் கொன்று குவிப்பதைக் கண்டிக்கின்றனர். அவர் போர் புரிவதை நிறுத்தச் சொல்கிறார்கள்.” பிரும்மாஸ்திரம் என்றால் என்னவென்றே தெரியாத சாதாரணக் குடி மக்கள் மீது கூட அதனைப் பிரயோகிப்பது உங்களுக்கு மிகப் பெரிய அபவாதமாகத் தோன்றவில்லையா?” என்று கேட்கின்றனர்.

துரோணர் பிறகுதான் விதி முறைகளை மீறி தான் போர் மேற்கொண்டதற்கு வருத்தப்பட்டு தன் வாழ்வை முடித்துக் கொள்ள எண்ணுகிறார். இந்த நேரத்தில் சரியாக அங்கு வரும் பீமன் அவருடைய முறையற்றப் போர் நடவடிக்கைகளைப் புழுதி வாரித் தூற்றுகிறான். அவன் தூற்றுதலின் வீரியம் துரோணரை முற்றிலும் வீழ்த்தி விடுகிறது. துரோணர் யோக நிலையில் ஓம்காரத்தை உச்சாடனம் செய்தபடியே சமாதி ஆகிறார். அந்த இடத்திற்கு வரும் திருஷ்டத்யும்னன் துரோணரின் தலையை வெட்டி வீழ்த்துகிறான்.

துரோணரின் மரணம் குறித்துக் கூறப்படும் இந்த இரண்டாவது பதிவில் அசுவத்தாமன் என்ற யானையைப் பற்றியக் குறிப்பு எங்கும் இடம் பெறவில்லை.

துரோணர் முடிவு குறித்து இயற்றப் பட்டஇந்த இரண்டு பதிவுகளில் எந்தப் பதிவை நாம் நிராகரிக்க வேண்டும்? எவ்விதத் தயக்கமுமின்றி அசுவத்தாமன் என்ற யானையைப் பற்றிய குறிப்பு இடம் பெறும் பதிவைத்தான் நாம் நிராகரிக்க வேண்டும். ஏன் என்றால் இந்தப் பதிவு மூன்று முக்கிய கதாபாத்திரங்களின் இயல்பான குணத்தை மாற்றுவதாக உள்ளது. இரண்டாவது பதிவில் போர்க்களத்தில் அத்தனை ரிஷிகளும் வந்து துரோணருக்கு உபதேசம் செய்தனர் என்பது நம்பும்படியாக இல்லைதான். இது இந்தப் பகுதியை இயற்றிய கவிஞனின் உத்தியாகக் கூடா இருக்கலாம். ஏன் எனில் துரோணர் பல நேரங்களில் அந்தக் காலத்தில் நிலவி வந்த போர் விதிமுறைகளை மீறிய வண்ணம் இருந்தார். இரண்டு பதிவுகளிலும் பொதுவாக இடம் பெறும் பீமனின் குற்றச்சாட்டு இதனை உறுதிப்படுத்துகிறது.

முடிவாக தன் மகன் அசுவத்தாமன் இறந்த செய்தியை முதலில் வாங்கிக் கொள்ளும் துரோணர் அதனை உறுதி படுத்திக் கொள்ளாமலா இருந்திருப்பார்? துரோணரின் இடத்தில் வேறு யார் இருந்தாலும் அவர்களும் இதைத்தான் செய்திருப்பார்கள்.

திருஷ்டத்யும்னன் பின் துரோணர் எவ்வாறு மரணம் அடைந்திருப்பார்? ஒருவேளை அவர் சில போர் விதிகளை மீறியிருக்கலாம்.அதற்காக வருத்தப் பட்டிருக்கலாம்.அப்படி ஒரு கழிவிரக்கம் ஏற்படும் சமயம் அவர் கண்டிப்பாக போர்க்களத்தை விட்டு விலகியிருக்க முடியாது. அவருடைய தலைமை துரியோதனனுக்கு மிகவும் அவசியம் என்பதால் அவரால் போர்க்களத்தை விட்டு நீங்கியிருக்க முடியாது. மேலும் போரிலிருந்து இப்படி ஒரு கழிவிரக்கத்தினால் நீங்குவது அவருடைய பலவீனத்தைக் காட்டுவதாக இருக்கும். மரணத்தைத் தழுவுவதைத் தவிர அவருக்கு வேறு வழி கிடையாது. ஒருவேளை இது மகாபாரதம் இயற்றிய முதல் கவிஞன் செவி வழி அறிந்த செய்தியாக இருக்கலாம். அதுவே மகாபாரதத்தைக் கட்டமைக்கத் தேவையான முக்கியப் பகுதியாக இருந்திருக்கும். அல்லது துரோணர் அந்த இரண்டு விதமாகவும் மரணத்தைத் தழுவாமல் உண்மையாகவே துருபதனின் புதல்வன்  திருஷ்டத்யும்னனால் கொல்லப்பட்டிருக்கலாம். ஒரு பிராமணனைக் கொல்வதால் ஏற்படும் பிரும்மஹத்தி தோஷத்திலிருந்து பாஞ்சால நாட்டு யுவராஜனைக் காப்பாற்றுவதற்காக இது போன்றக் கற்பனைக் கதைகளைப் புனைந்திருக்கலாம்.

பிறகு ஏன் ஸ்ரீகிருஷ்ணர் இந்த நிகழ்ச்சிக்காகக் குற்றம் சாட்டபப்டுகிறார்? நான் ஏற்கனவே என் முந்தைய அத்தியாயங்களில் குறிப்பிட்டது போல சத்தியத்தைப் போல அசத்தியமும்  அந்த இறைவனிடமிருந்தே தோன்றியது என்ற வாதத்தை நிறுவுவதற்காகவே இவ்வாறு குற்றம் சாட்டுவதற்கு ஏதுவாக ஒரு நிகழ்ச்சியைப் புனைதிருக்க வேண்டும்.I

Series Navigationநெஞ்சு பொறுக்குதில்லையே…..தமிழ்த்தாத்தா உ.வே.சா. : கற்றலும் கற்பித்தலும் – 2தினம் என் பயணங்கள் – 7பொறுமையின் வளைகொம்புகாத்திருப்புதொடுவானம் 5.எங்கே நிம்மதிவால்ட் விட்மன் வசனக் கவிதை – 64 ஆதாமின் பிள்ளைகள் – 3பாலு மகேந்திராவின் சிறந்த பத்துப் படங்கள் – DVD – நன்கொடை 1000 ரூபாய்.படிமை – திரைப்பட பயிற்சி வகுப்பு – மாணவர் சேர்க்கைவரலாற்றின் தடம் தமிழ்க்கவியின் ‘ஊழிக்காலம்’”பிரெஞ்சுப் பயணியின் பிரமிக்கவைக்கும் குறிப்புகள்” [‘மொகலாயப் பேரரசில் பெர்னியரின் பயணக்குறிப்புகள்’ நூலை முன்வைத்து’]தமிழ் ஸ்டுடியோவின் சிறுவர் திரை ஆண்டு – தன்னார்வலர்கள் தேவை…திண்ணையின் இலக்கியத் தடம்- 24சீதாயணம் நாடகப் படக்கதை – 22
author

சத்தியப்பிரியன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *