மனத்துக்கினியான்

This entry is part 1 of 24 in the series 9 மார்ச் 2014

 

கனைத்திளங் கற்றெருமை கன்றுக் கிரங்கி

நினைத்து முலைவழியே நின்றுபால் சோர

நனைத்தில்லஞ் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்

பனித்தலை வீழநின் வாசற்கடை பற்றிச்

சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற

மனத்துக் கினியானைப் பாடவும்நீ வாய்திறவாய்

இனித்தா னெழுந்திராய் ஈதென்ன பேருறக்கம்

அனைத்தில்லத் தாரு மறிந்தேலோ ரெம்பாவாய்.

ஆண்டாள் நாச்சியார் அருளிச் செய்த திருப்பாவையின் பன்னிரண்டாம் பாசுரமான இதில் இராமபிரானுக்கு இளையபெருமாளைப் போலே கிருஷ்ணனுக்கு இடைவிடாமல் கைங்கர்யம் செய்து வருபவனின் தங்கையை எழுப்புகிறார்கள். அவன் எப்பொழுதும் கண்ணனுடனேயே சுற்றிக் கொண்டிருப்பதால் தன் இல்லத்து எருமைகளிடம் பால் கறப்பதையே விட்டுவிடுகிறான்.கண்ணன் அவனுடைய தோளின் மீது கை போட்டுப் பழகும் அளவிற்கு அவன் கண்ணனுக்கு மிகவும் நெருக்கமானவன்.

,சரிகையும் தெறிவில்லும் செண்டுகோலும்

மேலாடையும் தோழன்மார் கொண்டோ

ஒருகையால் ஒருவன் தோளூன்றி’

என்பது பெரியாழ்வார் பாசுரம். பெருமாளின் திரு நாமம் சொல்வதையே தன் தொழிலாகக் கொண்டிருந்தான். எனவே அவன் தன் குலத் தொழிலான பால் கறப்பதையே மறந்து விட்டான்.

தொழிலெனக்குத் தொல்லைமால்தன் நாமம் ஏத்த

பொழுதெனக்கு மற்றதுவே போதும்—-கழிசினத்த

வல்லாளன் வானரக்கோன் வாலி மதனழித்த

வில்லாளன் நெஞ்சத்து ளன்

எனும் திருமழிசையாழ்வாரின் நான்முகன் திருவந்தாதி [85] பாசுரம் இங்கே நினைக்கத் தக்கது.

கிருஷ்ணனையே எப்பொழுதும் நினைத்திருந்ததால் தன் சுய கர்மத்தையே விட்டாலும் குற்றமில்லை.  கிருஷ்ணன் காட்டின்வழி ரதத்தில் சென்றபோது அதைப் பார்த்துக் கொண்டிருந்த ரிஷிகள் எல்லாரும் தங்களுடைய ஹோமம், ஜபம், விரதம் முதலானவற்றை நிறுத்தி விட்டார்களாம். அவனையே பார்த்தபின் இவையெல்லாம் எதற்கு? சாத்யம் கைவந்தபின் சாதனம் தேவையில்லையன்றோ?

அப்படி அவன் கறக்காததால் அவற்றின் மடியிலே பால் கட்டிக் கொள்கிறது. அவற்றுக்கு முலைக்கடுப்பு ஏற்பட்டு கனைத்துக் கதறுகிறது.  இளங்கற்றெருமை என்று கூறப்படுவதால் இளங்கன்றாயிருக்கும் எருமை அல்லது இளங்கன்றையுடைய எருமை என்று பொருள் கொள்ளலாம்.  அவை தங்கள் முலைக்கடுப்பைப் பொறுத்துக் கொண்டாலும் ‘தம் கன்றுகள் பால் பெறாமல் வருந்துகின்றனவோ?’ என நினைக்கின்றன. கன்றுகள் என்ன பாடுபடுகின்றனவோ என்று ஏங்குகின்றன.

திருமங்கையாழ்வார் தன்னை இளம் பசுவாகவும் திருநறையூரில் எழுந்தருளியிருக்கும் பெருமாளைக் கன்றாகவும் நினைத்து  நான் எப்போதும் உன்னையே எண்ணி ஏங்குகின்றேன் என்று பாடுகிறார்.

கறவா மடநாகு தன் கன்று உள்ளினாற்போல்

மறவாது அடியேன் உன்னையே அழைக்கின்றேன்

நறவார் பொழில் சூழ் நறையூர் நின்ற நம்பி

பிற்வாமை எனைப்பணி எந்தை பிரானே     [7-1-1]

’உன்வீட்டு எருமை கூட தன் கன்றுக்கு இரங்குகிறதே; நீ எங்களுக்காக இரங்கி வரக் கூடாதோ? அவற்றின் அன்பு கூட உன்னிடம் இல்லையா?”

என்று வெளியே இருப்பவர்கள் எழுப்புகிறார்கள்.

எருமைகள் எப்பொழுதும் தன் கன்றை நினைத்தவுடன் மடி வழியே பால் சொரியும் இயல்பு உடையன. அந்நினைவின் முதிர்ச்சியாலே அவை கறப்பவன் கை வழி அன்றியும், கன்றுகளின் வாய் வழி அன்றியும், முலை வழி பால் சொரிகின்றன.

கம்பர் அயோத்தியை வர்ணிக்கும்போது அந்நகரத்தில் எருமைகள் தம் கன்றுகளை என்ணி வயலில் பால் சொரிகின்றன. அதனால் அங்கே பயிர் விளைகிறது எனப்பாடுவார்.

ஈரநீர் படிந்து இந்நிலத்தே சில

கார்கள் என்ன வரும் கருமேதிகள்

ஊரில் நின்ற கன்று உள்ளிட

தாரை கொள்ள தழைப்பன சாலியே

இன்னும் கூட சேற்றிலே திளைத்த எருமை தன் கன்றை நினைத்துப் பால் சொரிய அந்தப்பாலைக் குடித்து அன்னத்தின் குஞ்சு பச்சைத்தேரை தாலாட்டத் தூங்குகிறது என்றும் அவர் பாடுவார்.

சேலுண்ட ஒண்கணாரில் திரிகின்ற செங்காலன்னம்

மாலுண்ட நளினப்பள்ளி வளர்த்திய மழலைப்பிள்ளை

காலுண்ட சேற்றுமேதிக் கன்றுள்ளிக் கனைப்பச்சோர்ந்த

பாலுண்டு துயிலப் பச்சைத்தேரை தாலாட்டும் பண்ணை

மேகங்களாவது ஆழியுட் புக்கு முகந்துகொடு ஆர்த்தேறி பெய்ய வேண்டும்.  ஆனால் இந்த எருமைகளுக்கு அவ்வாறில்லை. அவை தன் கன்றுகளை நினத்தவுடன் இடைவிடாமல் சொரிகின்றன.

அதைப் பார்த்த இவர்கள் “உன் வீட்டு எருமைகள் இடைவிடாமல் பால் சொரிகின்றனவே; நீ மட்டும் எங்களுக்கு முகம் காட்டாமல் இருக்கிறாயே” என்கின்றனர்.

அப்படி அவை கொட்டுகின்ற பாலாலே அந்த இடம் முழுதும் சேறாகி விடுகிறது. இப்படிச் சேறாகியிருப்பதாலே எங்களால் உள்ளே வர முடியவில்லை என்பதும் பொருளாகும்.

அந்த அளவு பால் சுரக்கும் ’நற்செல்வனின் தங்கையே’ என அழைக்கின்றனர். அவன் நற்செல்வனாம்.

‘லக்ஷ்மணோ லக்ஷ்மிஸம்பந்ந’ என்பது போல் அவன் கிருஷ்ண கைங்கர்யமே செல்வமாகப் பெற்றவன்   . மாடு என்றாலே செல்வம் என்பது பொருள் எனவே அவன் நற்செல்வனாகிறான். மேலும் இவர்கள்,

”அவன் எருமைகளை நோக்கினால்லவா நீ எங்களைப் பார்க்கப் போகிறாய்?” என்கிறார்கள். அண்ணனுடைய பெருமை சொல்லித் தங்கையை அழைக்கிறார்கள். வீடணன் கூட இராவணன் தம்பி என்று சொல்லிக் கொண்டான் இல்லையா?

“பெண்ணே! விபீஷணன் இராமனுக்குக் கைங்கர்யம் செய்தபோது அவள் மகள் திரிஜடை சீதாபிராட்டிக்கு ஆறுதல் சொன்னாளே! அதுபோல உன் அண்ணன் கண்ணனுக்குக் கைங்கர்யம் செய்யும்போது நீ எங்கள் நிலையைப் பார்க்க வேண்டாமா?  எழுந்து வா! நாங்கள் மேலே பனி வெள்ளம்; கீழ் பால் வெள்ளம்; எங்கள் நெஞ்சில் மால் வெள்ளம் என்று உன் வாசலில் கிடக்கிறோமே எங்கள் பாட்டை நீ அறிய வில்லையா?” என்கிறார்கள்.

அவளோ தனக்காக இவர்கள் படும் பாட்டை இன்னும் சிறிது காணவேண்டும் என எண்ணிப் பேசாமல் கிடந்தாள். பெண்களைப் படுத்துதலையே போக்யமாய் நினைக்கும் கிருஷ்ணனுடன் சேர்ந்ததால் இவள் இப்படிக்கிடக்கிறாள். பெண்களை எப்பொழுதும் தஞ்சமாய் எண்ணும் இராமனைப் பாடுவோம் என்று எண்ணி  ”சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற மனத்துக்கினியான்” என்று அவன் புகழ் கூறுகிறார்கள்.

பொறுமையின் சிகரமான இராமபிரானுக்கும் சினம் வருமோ என்றால் அவரை நிந்தித்தாலோ அவருக்கு அபசாரம் செய்தாலோ அவருக்குக் கோபம் வருவதில்லை. ஆனால் அவருடைய பக்தர்களுக்கு யாராவது துன்பம் விளைவித்தால் அவர் சினவயப் படுகிறார்.

இலங்கைப் போர்களத்தில் தன்  மீது இராவணனின் அம்பு பட்டபோது கோபப்படாத இராமபிரான் பக்தன் ஆஞ்சநேயர் மேல் அம்பு பட்டபோது கோபப்பட்டார்.

தண்டகாரணிய ரிஷிகள், பிராட்டி, ஜடாயு, விபீஷணன், ஆஞ்சநேயர் போன்ற பாகவதர்களிடத்தில் அபசாரப்பட்டதனாலேதான் இராவணன் அழிக்கப்பட்டான். ’செற்ற’ என்பதால் அவனுடைய குதிரைகள், தேர், ஆயுதங்கள் எல்லாம்  முழுதுமாக அழிந்தது இங்கு சொல்லப்படுகிறது.

அத்தகைய சினம் கொண்டு அழித்தாலும் இராமன் மனத்துக்கினியன். எவனுக்குப் பிறர் செய்த தவறை மன்னித்துக் கொள்ளும் குணம் இருக்கிறதோ அவனே மனத்துக்கினியவன் ஆகிறான். தன்னைக் காடேகச் சொன்ன கைகேயியைப் பொறுத்துக் கொண்டு அவளை மீண்டும் மனைவியாகவும், தன் தம்பி பரதனை மீண்டும் மகனாகவும் ஏற்க வேண்டுமென தயரதனிடம் இராமன் வேண்டுகிறான். இதோ கம்பரின் பாடல் :

”தீயள் என்று நீ துறந்த எந்தெய்வமும் மகனும்

தாயும் தம்பியும் ஆம்வரம் தருக எனத் தாழ்ந்த

வாய்திறந்து எழுந்து ஆர்த்தன உயிரெலாம் வழுத்தி—-”

இராமன் பகைவரும் போற்றும் அழகினன்; பண்பினன் அதனால் அவன் மனத்துக்கினியன் ஆகிறான். சத்துருக்களுக்க்கும் கண்ண நீர் பாயவைப்பவன் அவன்.

அவனைப்பார்க்கும் சூர்ப்பனகை ‘மன்மதனை ஒப்பர்’ என்கிறாள்.

 

வாலி ‘
மூவர் நீ, முதல்வன் நீ, முற்றும் நீ, மற்றும் நீ

பாவம் நீ, தரும்ம் நீ, பகையும்நீ, உறவும் நீ”   என்கிறான்

கும்பகருணன்

’ஆதியாய்’ என்பதோடு ‘அய்யன் வில்தொழிற்கு ஆயிரம்          இராவணர் அமைவிலர்’ என்கிறான்.

மண்டோதரி

’அவனை ஆராமுதாய், அலைகடலில் கண் வளரும் நாராயணன்’ என்று போற்றுகிறாள்.

எனவே அவன் மனத்துக்கினியன் ஆகிறான்.

இப்படிச் சொல்லியும் அவள் எழுந்திருக்கவில்லை.

உடனே எழுப்ப வந்தவர்கள் கேட்கிறார்கள்,

“என்ன நீ இன்னும் எழுந்திருக்க வில்லை? நாங்கள் யார் பேரைப்பாடினோம் தெரியுமா? ’கண்ணன் நாமமே குழறிக் கொன்றீர்’ என்று ஆழ்வார்கள் பாடின கண்ணன் திருநாமத்தையா பாடினோம், இல்லையே? இறந்து போனவரையும் உயிர்ப்பிக்கக் கூடிய தாரக மந்திரமான இராம பிரானின் புகழையை அன்றோ பாடினோம். நம்மைக் கொண்டு தன் காரியத்தையே முடித்துக் கொள்பவனின் பெயரையா சொன்னோம்? இல்லையே, நம் காரியத்தைத் தன் பேறாகச் செய்பவனின் செயல்களை அன்றோ பாடினோம்? பெற்ற தாய் வேம்பாக வளர்த்தாளே என்று தன்னைப் பெற்ற தாய்க்குப் பழி வாங்கி வைத்தவனையா பாடினோம் இல்லையே? ‘கௌசல்யா சுப்ரஜா ராம’ என்று தன்னைப் பெற்ற வயிற்றுப் பட்டங் கட்டிய பெருமகனைத் தானே பாடினோம்? இவற்றையெல்லாம் கேட்டும் இன்னும் நீ எழுந்திருக்க வில்லையே?

அவள் எழுந்து வரவில்லை. இவர்களுக்கு வருத்தம் வருகிறது.

“நாங்கள் வெளியில் நிற்கிறோம் என்று தெரிந்தும் நீ இன்னும் வரவில்லையே? எங்களுடைய வருத்த்திற்காக வராவிட்டாலும் உன் பெருமைக்காகவாவது நீ வர வேண்டாமா? பேருறக்கமாக உறங்குகிறாயே? ’உன்னுடைய வேகத்திற்கு நமஸ்காரம்’ என்று போற்றும்படி கஜேந்திர ஆழ்வாவை ரட்சிக்க அரை குலைய ஓடோடி வந்தானே; அவனோடு பழகியும் இப்படி பேருறக்கம் கொள்ளலாமா” ஏனெனில் கண்ணன் உறங்குவது பிறருக்காகப் பேருறக்கம்; சம்சாரிகள் உறங்குவது தங்களுக்கான சாதரணமான உறக்கம்; ஆனால் நீ எதிலும் சேராத பேருறக்கமாக உறங்குகிற்யே?”

என்று கேட்க அவள் இப்போது வாய் திறந்து கேட்கிறாள்.

”இந்த ஆயர்பாடியில் உள்ள எல்லா இல்லத்திலும் உள்ளவர்கள் எழுந்து வது விட்டார்களா?

இவர்கள் அவள் கேள்விக்குப் பதில் சொல்கிறார்கள்.

“எல்லாரும் எழுந்து வந்து விட்டார்கள். அனைவரும் கன்ணனை அறிந்து வந்து விட்டார்கள்”. என்று சொன்னவர்கள் மேலும்,

இகழ்ச்சியாக ”நீ எழாததை அறிந்து எல்லாரும் வந்துள்ளனர்;” என்றும், “உன் பெருமை அறிந்து எல்லாரும் வந்துள்ளனர்” என்று புகழ்ச்சியாகவும் கூறி அவளை எழுப்புவதாக இப்பாசுரம் எடுத்துரைக்கிறது.

”இப்பாசுரத்தில் ‘எருமை’ பேசப்படுவதால் இங்கே திவ்ய மஹிஷியான பிராட்டி சொல்லப்படுகிறாள். நாமெல்லோரும் அறிவில்லாத கன்றுகளைப் போன்றவர்கள். அவள் வைகுண்டத்தில் இருந்துகொண்டு நம்மை நினத்து மனதில் நினைவு கொண்டு கவலைப்பட்டு இரக்கம் கொண்டு நம்மைக் காப்பாற்றுகிறவள்’

என்பது முக்கூர் லக்ஷ்மி நரஸிம்மச்சாரியாரின் வியாக்கியானம்.

இப்பாசுரத்தில் முதல் ஆழ்வாரான பொய்கையாழ்வர் எழுப்பப் படுகிறார்.

இப்பாசுரத்தில் வரும் ’தங்காய்’ என்பது பிராட்டியைக் குறிக்கும். பிராட்டியான லட்சுமி எப்பொழுதும் தாமரைப்பூவில் வாசம் செய்பவள்; பொய்கைவாழ்வாரும் தாமரை மலரில் தோன்றியவர்.

”வாச மலர்க் கருவதனில் வந்துதித்தான் வாழியே” என்பது அவர் வாழித்திருநாமம்’

’சேறாக்கும் என்பதும் இவரைத்தான் குறிக்கும். ஏனெனில் இவர் பெருமாளின்பால் அன்பு கொண்டு அழுது அழுது கண்ணீர் விட்டுச் சேறாக்கியவர்.

“பழுதே பல பகலும் போயினவென்று அஞ்சி அழுதேன்” என்பது அவர் அருளிச்செய்த பாசுர அடி.

இவர் பொய்கையில் தோன்றியவர். பொய்கை எப்பொழுதும் பனி விழுந்து குளிர்ச்சியாக இருக்கும். எனவே பனித் தலைய என்பது இவர்க்குப் பொருத்தமாகும்.

திவ்யப் பிரபந்த்திற்கு முதல் பாசுரம் பொய்கை ஆழ்வாரின் பாசுரமாகும். முதல் முதலில் பேசும் போது தொண்டையைக் கனைத்துப் பேசுவது உலக வழக்கம். எனவே கனைத்து என்பது இவரையே குறிக்கும்.

இவர் ஆழ்வார்களில் முதல்வராய் இருப்பதால் இளமையானவர். எனவே இளங்கற்றெருமை என்பதும் இவரையே குறிப்பதாவும் கொள்ளலாம்.

எனவே இப்பாசுரம் பொய்கை ஆழ்வாருக்கு மிகவும் பொருத்தமாகும் என்பது முன்னோர்களின் கருத்தாகும்.

Series Navigationஇயக்கமும் மயக்கமும்மருமகளின் மர்மம் – 19ஜெயந்தி சங்கர் சிறுகதைகள் – ஆய்வரங்குநீங்காத நினைவுகள் – 37செயலற்றவன்செவ்வாய்க் கோளில் பல மில்லியன் ஆண்டுகட்கு முன்னே உயிரினத் தோற்றம் உருவானதற்கு நாசாவின் புது ஆதாரம்
author

வளவ.துரையன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *