பங்காளிகளின் குலதெய்வ வழிபாடு

This entry is part 2 of 23 in the series 16 மார்ச் 2014

 

 

நாளுக்கு ஒரே ஒரு பாசஞ்சர் ரயில் மட்டும்தான் நிற்கும் அந்த ஸ்டேஷனில்.

 

நேரம் காலை எட்டு மணி இருக்கும். பத்து மணிக்கு வர வேண்டிய அந்த ரயிலுக்காக மூன்று பேர் மட்டும் காத்து கொண்டு இருந்தார்கள், வெறிச்சோடிக் கிடந்த அந்த ஸ்டேஷனில்.

 

ஒருவர் பேண்ட் சர்ட், மூக்கு கண்ணாடியுடன் ஐம்பது வயது மதிக்க தக்க மனிதர். கையில் ஒரு புத்தகத்தை வைத்து படித்துக் கொண்டு இருந்தார்.

 

மற்ற இரண்டு பேர் கணவன் மனைவி போல் இருந்தது. அந்த கணவன் பக்க வாதத்தால்  வலது காலும், வலது கையும் பாதிக்க பட்டவன் போலிருந்தான். வாய் கூட கோணலாக இருந்தது. கணவன் நடப்பதற்கு மனைவி உதவி செய்து கொண்டிருந்தாள்.

 

அந்த பெண் தன் கணவனிடம் சொன்னாள்.

 

“ இங்கேயே உட்காருங்க..  உங்களால அங்கிட்டு இங்கிட்டு நடக்க முடியாது.. ரயில் வர்ரதுக்கு ரண்டு மணி நேரம் இருக்கு…. அங்க உட்கார்ந்து இருக்காரே அவரு மனோதத்துவ டாக்டராம்.. அந்த பைத்தியக்கார பொண்ணு செங்கமலத்துக்கு வைத்தியம் பார்த்து சரி பண்ணினாராம்,  இன்னிக்கு அந்த பொண்ணுக்கு கல்யாணம் நடக்குதுன்னா அதுக்கு அவருதான் காரணமாம்.. போய் பாத்து பேசிட்டு வர்ரேன்…” என்றாள்.

 

அதற்கு அவன் தன் கோணல் வாயோடு சிரமப் பட்டு ஏதோ சொன்னான். மற்றவர்களுக்கு அது புரிந்திருக்காது. ஆனால் அதைக் கேட்டு பழகிப் போன அவன் மனைவி அதை புரிந்து கொண்டாள். அவள் புரிந்து கொண்டது இதுதான்.

 

“ அது சரி சரோஜா… இப்பதான் எட்டு மணி… முகூர்த்த நேரம்…  அந்த டாக்டரு கல்யாண வீட்ல இருந்து, முகூர்த்தம் பார்த்திட்டு வந்திருக்கலாம் இல்லியா.. எதுக்கு முகூர்த்த நேரத்துக்கு முன்னாடியே  பொட்டி படுக்கையோட இங்க வந்து பத்து மணி ரயிலுக்காக உட்கார்ந்திருக்காரு..”

 

“ நாம மட்டும் என்ன, இருந்து தாலி கட்டறதை பாத்து அட்சதை போட்டு, கல்யாண விருந்து சாப்பிட்டு முடிச்சா வந்தோம்..” என்று அந்த சரோஜா சொல்ல,

 

“ நம்ம கதை வேற…” என்றான் அவன்.

 

“ நீ கேட்டதை அந்த டாக்டருகிட்ட சொல்லி, காரணம் கேட்டுட்டு வர்ரேன்.. நீ இங்கேயே இரு..”  என்று கிண்டலாய் சொல்லி விட்டு, சரோஜா  அந்த டாக்டரை நோக்கி நடந்தாள்.

 

அந்த டாக்டரின் பக்கத்தில் நின்று, சற்று தயங்கி,

 

“ என் பேரு  சரோஜா… நீங்கதான்  செங்கமலத்துக்கு வைத்தியம் பார்த்து சரி பண்ணினதா சொன்னாங்க… அங்கிட்டு உட்கார்ந்து இருக்காறே அவரு தான் என் புருஷன்.. அவரு குணமாகணும்.. அது  சம்மந்தமா ஒரு விஷயம் கேக்கலாம்னு வந்தேன்..” என்று நிறுத்தினாள் சரோஜா.

 

மூக்கு கண்ணாடியை தூக்கிவிட்டு அவளைப் பார்த்த அந்த டாக்டர்,

 

“ சொல்லு…” என்றார் படித்துக் கொண்டிருந்த புத்தகத்தை மூடாமலே..

 

“ ராத்திரி தூங்கும் போது, எதையோ நெனச்சி, நெனச்சி, பயந்து போறாரு.. உடம்பு அதிருது… அப்படி அவரு பயப்படறதுக்கு நான் தான் காரணம்… அதுல ஒரு உண்மை இருக்குது… அதை நான் சொல்லிட்டா, அவரு உடம்பு குணமாகும்னு தோணுது… அதை அவருகிட்ட சொல்லிடலாமான்னு உங்ககிட்ட  கேக்கதான் வந்தேன்…” என்றாள்.

 

டாக்டரின் பதிலுக்காக காத்திருந்தாள்…

 

கையிலிருந்த புத்தகத்தை மூடி, தன் சூட்கேசில் வைத்து விட்டு கால்களை மடக்கி, உட்கார்ந்தார் அந்த டாக்டர்..

 

 

ருக்கு பொம்மலாட்டக் குழு வந்து இறங்கியிருப்பதை அல்லக்கை அம்பாயிரம் வந்து சொன்னதும், தன்ராசு கேட்ட முதல் கேள்வி, “ டே.. அதில ஏதாவது பொண்ணு வந்து இருக்கா…”

 

“ அண்ணே.. நீங்க இப்படி ஏதாவது விபரம் கேப்பீங்கன்னு, நான்  அவங்க கூடாரத்துக்கு உள்ளே போய் பாத்துட்டு வந்திட்டேன்..” என்றான் அம்பாயிரம்.

 

“ சொல்லு.. சொல்லு…” என்று அவசர படுத்தினான் தன்ராசு.

 

“ பேரு  சரோஜா…. பொம்பள அது ஒன்னு தான்.. அதோட அப்பனும் கூட வந்து இருக்கு..” அம்பாயிரம் சொல்ல, அதற்குள் தன்ராசு சட்டையை போட ஆரம்பித்தான்.

 

“ அண்ணே.. எங்க கெளம்பிட்டீங்க..”

 

“ அங்க தான்.. நா யாருன்னு காட்டுனும்ல..”

 

“ நானும் வர்ரேன் அண்ணே… சும்மா போனா எப்படி.. கொஞ்சம் ஏத்திக்கிட்டு போவனும்ல… அப்பதானே சவுண்டு தூக்கும்..” என்றான் ஓசியில் சாராயம் குடிக்க ஆசைப்பட்ட அம்பாயிரம்.

 

அவர்கள் போய் சேரும் போது, கூடாரம் அடிக்க ஆரம்பித்து இருந்தார்கள்.. ஆட்டத்துக்கான டிக்கெட் விற்பனை ஆரம்பிக்க இன்னும் இரண்டு நாட்கள் ஆகும் போல தோன்றியது..

 

தன்ராசுவின் கண்கள் சரோஜாவைத் தேடியது..

 

சமையலுக்கு காய்கறி நறுக்கிக் கொண்டிருந்தாள் சரோஜா..

 

சரோஜாவின் அப்பா மூங்கில்  மீது உட்கார்ந்து, கயிறு இழுத்து கட்டி கொண்டிருப்பதை பார்த்த தன்ராசு,

 

“யோவ் பெருசு… நா ஒரு பெரிய மனுஷன் ஊர்ல இருக்கிறேன்… என் கிட்ட ஒரு வார்த்தை கேட்காம, நீ எப்படி ஆட்டத்தை ஆரம்பிக்கலாம்…”

 

“ இல்ல சாமி… ஊர் நாட்டாமையை கேட்டுட்டோம்…”

 

இந்த பதிலை தன்ராசு எதிர்பார்க்கவில்லை.

 

இருந்தாலும் சரோஜாவுக்கு முன்னால் அடங்கிப் போக முடியாமல், மேலும் சத்தம் போட, சரோஜாவின் அப்பா,

 

“ வாங்க, நாட்டாமை வூட்டுக்கு போய் பைசல் பண்ணிட்டு வந்திடலாம்..” என்று துண்டை உதறி தோளில் போட்டுக் கொண்டு அவர் கிளம்ப,

 

“ அப்பா, நானும் கூட வர்ரேன்..” என்று சரோஜாவும் உடன் கிளம்பினாள்.

 

நாட்டாமை தன்ராசுவின் மாமன்தான். குடித்து விட்டு கலாட்டா செய்தது தெரிந்தால், தன் மரியாதை இன்னும் போய், செங்கமலத்தை கல்யாணம் செய்து கொண்டு, அந்த திரண்ட சொத்தை அனுபவிக்க வேண்டும் என்ற  தன் எண்ணம் பாழ் பட்டு போய்விடுமே என்று நினைத்தான் தன்ராசு. ஆனால் வேறு வழியில்லாமல் தன்ராசுவும் அவர்களுடன் நடந்தான். அம்பாயிரம் வராமல் நழுவிக் கொண்டான்.

 

நாட்டாமை மாமன் வீட்டில் தன்ராசுவுக்கு அவரிடமிருந்து கிடைத்த வசவுகளைக் கேட்டு, செங்கமலம் புரியாமல் சிரித்தாள். சரோஜா புரிந்து சிரித்தாள்.

 

 

பெரிய சாத்தாள் கோயிலுக்கு பக்கத்தில்தான் அந்த சிதிலமடைந்த கல் மண்டபம்.

 

ஒரு கல் மண்டபம் கட்டுவதற்காக யாரோ எந்த காலத்திலோ போட்ட கற்தூண்கள், பாதியிலேயே  நின்று போய் இருந்தது. அதை தன்ராசு உபயோகப்ப்டுத்திக் கொண்டு இருந்தான்..

 

“ அண்ணே.. உன்னோட நாட்டாமை மாமன், நாளைக்கு, அமாவாசை நடு ராத்திரிக்கு அவங்க குலதெய்வத்துக்கு, பங்காளிகளோட சேர்ந்து பூஜை பண்ணப் போறாராம்..  அன்னிக்கு அந்த ஆட்டக்காரியினால உங்க மரியாதை போச்சு… இப்ப வாட்டி நல்லபடியா இதுல கலந்துகிட்டு அவங்க பங்காளிங்களுக்கு பிடிச்சு மாதரி நடந்தீங்கன்னா, அவங்க செங்கமலத்தை உங்களுக்கு கட்டி வைப்பாங்க..” என்றான் அம்பாயிரம்.

 

“ எப்படிடா நான் கலந்துக்க முடியும்.. பங்காளிங்கதான் அழைப்பு இல்லாம கலந்துக்கணும்…நான் மாமன் மச்சினன் வகையரா..  அழைச்சாதான் நான் கலந்துக்கணும்..” தன்ராசு.

 

“ உன்ன அழைப்பாங்கன்னு நெனக்கிற..?”

 

இதற்கு பதில் சொல்ல விரும்பாமல், பேச்சை மாற்றுவதற்காக,

 

“ அது சரி.. எதுக்குடா பெரிய சாத்தாளுக்கு பூஜை..”

 

“ எதுக்கு.? அந்த பைத்தியக்காரப் பொண்ணு செங்கமலத்துக்கு கல்யாணம் ஆகணும்னுதான்..”

 

“ நான் முறைமாமன், அந்த பைத்தியக்கார பொண்ணை கட்டிக்க தயாரா இருக்கும்போது, எனக்கு கல்யாணம் பண்ணிக் கொடுக்காம எதுக்கு பூஜ செய்யறான்..”

 

“ பைத்தியக்காரப் பொண்ணையே உனக்கு கொடுக்க மாட்டேங்கறார்னா, உன்ன பத்தி என்ன அபிப்பிராயம் அவரு வைச்சிருக்கார்னு தெரிஞ்சிக்கலாம்..”

 

இதற்கும் தன்ராசு பதில் சொல்லாமல் பேசாமல் இருந்தான்.

 

அம்பாயிரம் மீண்டும் பேசினான்..

 

“ அண்ணே, பைத்தியக்காரின்னு தெரிஞ்சும்,  செங்கமலத்தை கட்டிக்க, ஏன் ஆசைப்படறீங்கன்னு எனக்கு தெரியும்.. பெரிய சொத்து கெடைக்க போவுது, பேருக்கு செங்கமலத்துக்கு தாலி கட்டிட்டு, அப்புறம் இஷ்டபடி இருந்துகிட்டு, சொத்தை அனுபவிக்கலாம்னு தானே..”

 

தன்ராசுவிடம் இருந்து இதற்கும் பதில் வரவில்லை. அம்பாயிரம் அவன் முகத்தை பார்த்தான்.

 

தன்ராசு ஏதோ யோசித்துக் கொண்டு இருந்தான். முகம் கடுகடுவென்று இருந்தது.

 

“ நாளைக்கு அந்த அமாவாசை நடுராத்திரி பூஜ நடக்கட்டும்.. அந்த அமாவாசை இருட்டுல, எப்படியாவது அந்த செங்கமலத்தை தூக்கிக்கிட்டு போய்….”

 

“ அண்ணே.. செங்கமலத்தை நீ தொட்டா, அந்த புள்ளைக்கு காக்கா வலிப்பு வந்துடும், அதுக்கு சின்ன வயசிலே இருந்து அந்த நோய் இருக்குது, உனக்கு தெரியாதா..” என்றான் அம்பாயிரம்.

 

“ வரட்டும்டா… அப்படி காக்கா வலிப்பு வந்து, வாயில நுரை தள்ளி அவ என் கிட்ட வந்து விழுந்து கெடக்கிறத பாத்தா, மாமனுக்கு அவமானம் தானே.. என் கால்ல விழுந்து செங்கமலத்த கட்டிக்கோன்னு கெஞ்சுவான் பாரு…” என்றான் தன்ராசு.

 

அந்த கல் மண்டபத்தில் இவர்களின் இந்த பேச்சை மற்றும் இரண்டு காதுகள் கேட்டுக் கொண்டு இருந்தன..

 

அது சரோஜா..

 

அவளுடைய ஆட்டத்துக்கு வர வர கூட்டம் குறைவாகிக் கொண்டு இருந்தது.

 

ஏற்கனவே சரோஜா முடிவு செய்திருந்தாள்…

 

அமாவாசைக்கு முதல் நாளே ஆட்டத்தை நிறுத்தி விட வேண்டும்.. அமாவாசை அன்று, நாட்டாமையின் பூஜையில் கலந்து கொண்டு, தானும் அந்த செங்கமலத்துக்கு சீக்கிரம் கல்யாணம் ஆக வேணும் என்று ஆத்தாவிடம் வேண்டிக் கொள்ள வேண்டும்…..

 

பூஜை முடிந்தவுடன், அடுத்த ஊரை நோக்கி புறப்படவும் முடிவு செய்திருந்தாள்.

 

அடுத்த நாள்..

 

நாட்டாமையின் பூஜை ஆரம்பிக்கும் சத்தம் கேட்டது..

 

சரோஜாவின் அப்பா கூடாரத்தை கலைத்து விட்டு,  மாட்டு வண்டியில் தன் சாமான்களை அடுக்கிக் கொண்டு இருந்தார்..

 

“ அப்பா நா போய் நாட்டாமை நடத்தற பூஜையை பாத்துட்டு வர்ரேன்.. எல்லாம் கட்டி வைங்க.. விடிஞ்சதும் கெளம்பலாம்..” என்று சொல்லிவிட்டு கிளம்பினாள்.

 

மக்கள் அங்குமிங்கும் நடமாடிக் கொண்டிருந்தார்கள்.

 

அமாவாசை இருட்டில் சரியாக ஏதும் தெரியவில்லை.

 

இரண்டு பெட்ரோமாக்ஸ் விளக்குகள், பூஜைக்கான இடத்தில் எரிந்து கொண்டிருந்தது.

 

செங்கமலம் கல் மண்டபத்தை நோக்கி நடப்பது தெரிந்தது, சரோஜாவுக்கு..

 

ஓடிப் போய் அவளை வழிமறித்த சரோஜா,

 

“ ஏ லூசு… இந்த இருட்ல எங்க போற..” என்று கேட்டாள்…

 

“ அப்பா கூப்பிட்டதா அந்த அம்பாயிரம் சொன்னான்..” செங்கமலம்.

 

“ உன் அப்பா அங்க இருக்கிறாரு பாரு…” என்று கை காட்டினாள்

சரோஜா.

 

“ ஆமா இல்ல.. எதுக்கு அந்த அம்பாயிரம் அப்படி சொன்னான்…?” செங்கமலம் திரும்பி நடந்தாள் பெரிய சாத்தாள் கோவிலை நோக்கி..

 

செங்கமலத்தை திருப்பி அனுப்பிய சரோஜா, அந்த கல் மண்டபத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்…

 

செங்கமலம் தலையை ஆட்டுவது போல் அவளும் தன் தலையை ஆட்டிக்கொண்டு நடக்க ஆரம்பித்தாள் …

 

கல்மண்டபம் இருட்டில் மூழ்கி இருந்தது…

 

தூரத்தில் இருந்து அடிக்கும்  பெட்ரோமாக்ஸ் விளக்கு வெளிச்சத்தில் தன்ராசு அங்கு நின்று கொண்டு இருப்பது தெரிந்தது சரோஜாவுக்கு.

 

தன்ராசு தன்னை தொடுவதற்காக காத்து இருந்தாள் சரோஜா…

 

தன்ராசு தொட்டவுடன் தன் வாயில் எச்சிலை குவித்து ஒரு புறமாய் தள்ளினாள்…. அது நுரையாய் வழிந்து ஓடியது..

 

வாயை ஒரு பக்கமாய் இழுத்துக் கொண்டு, புடைவையை கலைத்து கொண்டாள்…..

 

காக்கா வலிப்பு வந்தது போல் கைகளையும், கால்களையும் இழுக்க ஆரம்பித்தாள்..

 

அதைப் பார்த்த தன்ராசுவின் முகத்தில் புன்முறுவல்..

 

அவளை அப்படியே விட்டு விட்டு, நாட்டாமையை கூட்டி வந்து காட்டலாம் என்று சத்தம் போட்டு கொண்டு பெரிய சாத்தாள் கோயிலுக்கு ஓடினான் தன்ராசு..

 

அப்போது உச்ச கட்ட பூஜைக்கான மணி அடிக்க ஆரம்பித்தது. பூஜை முடியும் வரை காத்திருந்தான்.

 

பூசாரி கற்பூர தட்டை நாட்டாமையிடம் கொண்டு செல்ல, அவர்,

“ செங்கமலத்துகிட்ட காமிங்க..” என்றார்.

 

செங்கமலம் எந்த கதியில் இருக்கிறாள் என்று தெரியாமல் நாட்டாமை இப்படி சொல்கிறார் என்று தனக்குள் சிரித்து கொண்டான்.

 

செங்கமலம் காணவில்லை என்று யாராவது சொல்வார்கள்…, அதைக் கேட்டு நாட்டாமைக்கு ஏற்பட போகும் அந்த அதிர்ச்சியை காண தன்ராசு காத்துக் கொண்டிருந்தான்.

 

ஆனால் என்ன ஆச்சர்யம்..

 

தன்ராசுவால் அந்த காட்சியை நம்ப முடியவில்லை….

 

பூசாரி காட்டிய கற்பூரத் தட்டின் வெளிச்சத்தில் தெரிந்த அந்த முகம்.. ஆமாம் அது செங்கமலம்தான்..

 

பைத்தியக்கார பெண் என்று நினைத்த அந்த செங்கமலத்தின் முகம் அந்த கற்பூர வெளிச்சத்தில் கம்பீரமாய் இருப்பதாக அப்போது தோன்றியது அவனுக்கு.

 

செங்கமலம் அமைதியாய் பூசாரி காட்டிய கற்பூர தீபத்தை தொட்டு கும்பிட்டாள். பிறகு பூசாரி கொடுத்த  திருமஞ்சனம், சிகப்பை தன் நெற்றியில் இட்டுக் கொண்டாள்..

 

அவளைப் பார்க்கும் போது, படுத்துக் கொண்டிருந்த அந்த பெரிய சாத்தாள், எழுந்து நின்றது போன்று இருந்தது தன்ராசுவுக்கு.

 

செங்கமலம் இங்கு எப்படி..?

 

செங்கமலம் இங்கு இருக்கிறாள் என்றால் அங்கு கல் மண்டபத்தில் அலங்கோலமாய் கிடப்பது யார்..

 

தான் தொட்டவுடன், வாயில் நுரை தள்ளி, வலிப்பில் கை கால்களை இழுத்துக் கொண்டு இருப்பது யார்..

 

தன்ராசு ஓடினான் அந்த கல் மண்டபத்துக்கு..

 

அங்கு செங்கமலம் இல்லை..

 

குழம்பிப் போன அவன், பெரிய சாத்தாள் கோயிலின் அரை வெளிச்சத்தில்  இங்கும் அங்கும் ஓடி தேடினான் செங்கமலத்தை..

 

எங்கும் இல்லை அவள்..

 

அப்படியானால் தான் தொட்டது யார்….

 

கோயில் மணி மீண்டும் அடித்தது…

 

தான் தொட்டது செங்கமலமா, இல்லை, அந்த ஆத்தாளா..?

 

தன்ராசுவுக்கு கைகால்கள் நடுங்கின.. நெஞ்சு அடைத்தது. பயத்தில் தன்ராசின் வாயிலிருந்து நுரை தள்ளியது.

 

பின் மண்டையில் விண் விண் என்று தெரித்தது… வலி தாங்க முடியாமல் கத்தினான்…

 

கை கால்கள் இழுக்க ஆரம்பிக்க, கீழே சாய்ந்தான்.

 

கல் மண்டபத்தின் தூண் மறைவில் இருந்து இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த சரோஜா, பற்களை நற நற வென்று கடித்துக் கொண்டாள்.

 

தன்ராசுவின் சத்தத்தை கேட்டு கூட்டம் சேர்ந்தது.. ஊர்க்காரர்கள் நான்கு பேர் அவனைத் தூக்கிக் கொண்டார்கள். உள்ளூர் டாக்டர்  வீட்டுக்கு ஓடினார்கள்.

 

தன்ராசுவின் வலிப்பு நிற்கவில்லை.

 

“ அதிகமா குடிச்சதினால மூளை பாதிக்க பட்டு, ஸ்டிரோக் வந்திருக்குன்னு நெனக்கிறேன்..  டவுன் ஆஸ்பத்திரிக்கு எடுத்துகிட்டு போயிடுங்க..” என்று டாக்டர் சொன்னார்.

 

விடிந்தது…..

 

இரட்டை மாடுகளை வண்டியில் பூட்டினார் சரோஜாவின் அப்பா..

 

காலி செய்யப் பட்ட கூடாரம், மாட்டு வண்டியில் அடைக்கப் பட்டது. வண்டி கிளம்பியது…

 

“ அக்கா… அக்கா..” என்ற குரல் கேட்டு திரும்பினாள்.

 

அது செங்கமலம்..

 

“ நீ எப்பக்கா திரும்பவும் வருவே..” என்று வெகுளித்தனமாய் கேட்க, அதற்கு, “ உன் கல்யாண பத்திரிக்கையை அனுப்பு.. அப்ப நா வருவேன்..” என்றாள் சரோஜா.

 

செங்கமலம் வெட்கப் பட்டுக்கொண்டு நிற்க, சரோஜாவின் மாட்டு வண்டி அந்த ஊரை விட்டு கிளம்பியது.

 

மாட்டு வண்டி ஊர் எல்லையை தாண்டும் போது, தன்ராசுவை ஆஸ்பத்திரிக்கு ஏற்றிக் கொண்டு வந்த வாடகைக்கார் ரிப்பேர் ஆகி நின்று கொண்டு இருப்பதைப் பார்த்தாள் சரோஜா.

 

“ அப்பா வண்டியை நிறுத்துங்க…”

 

மாட்டு வண்டியை விட்டு இறங்கினாள் சரோஜா…

 

அந்த காருக்குள் இருந்த தன்ராசுவை பார்த்தாள்.

 

அவன் கல் மண்டபத்தில் இருந்த அதே நிலையில் இருந்தான்… வாயில் நுரை தள்ளிக் கொண்டு, கை கால்கள் இழுத்துக் கொண்டிருந்தது.

 

தான் இதற்கு காரணமா என்று மனம் நினைத்தது….

 

“ எங்க வண்டியிலே ஏத்தி அனுப்பறீங்களா…” என்று உடன் வந்த ஊர்க்காரர்களிடம் கேட்டாள்.

 

அவர்கள் தன்ராசுவை அவளின் மாட்டு வண்டிக்கு மாற்ற, தன்ராசுவை ஏற்றிக் கொண்டு சரோஜாவின் மாட்டு வண்டி புறப்பட்டது.

 

 

துக்கு அப்புறம், தன்ராசு இப்பதான் இந்த ஊருக்குள்ள காலடி வைக்கிறாரு, இல்லையா…” டாக்டர் கேட்டார்..

 

“ அது கரைக்ட் தான்.. அவரோட சொத்தில, மீதி இருந்த அந்த ஓட்டு வீட்டை விக்கறதுக்கு பக்கத்து டவுன் ரிஜிஸ்டர் ஆபீசுக்கு சக்கர நாற்காலியில வந்து கையெழுத்து போட்டாரு.. அவரோட வைத்திய செலவுக்கு தான் அது செலவு ஆச்சு.. நான் தான் கூட்டி வந்தேன்.. ஆனா நான் அவரை கல்யாணம் பண்ணிகிட்டது ஊர்க்காரங்களுக்கு தெரிய கூடாதுன்னு சொன்னாரு..அதே மாதரி நானும் நடந்துகிட்டேன்..”

 

நிறுத்தி விட்டு தொடர்ந்தாள் சரோஜா,

 

“ அது சரிங்க சாமி.. நீங்க வீட்டோடு தங்கி இருந்து செங்கமலத்தை சரி செஞ்சதா சொன்னாங்க.. பின்ன எதுக்கு  முகூர்த்தம் பார்க்காம முன்னாடியே கெளம்பி வந்திட்டீங்க..”

 

“ நான் எதுக்கு இந்த ஊருக்கு வந்தேன்ங்கிறது மத்தவங்களுக்கு ஞாபகம் வரக்கூடாதுன்னா, நான் அங்க இருக்க கூடாது இல்லியா.. அதனாலதான் முகூர்த்த நேரத்துக்கு முன்னமே கிளம்பி வந்திட்டேன்… அது சரி.. நீ என் கிட்ட கேட்ட  அதே கேள்வியை உன்கிட்ட திருப்பி கேக்கிறேன், எதுக்கு இருந்து முகூர்த்தம் பார்க்காம முன்னாடியே கெளம்பி வந்திட்டீங்க ரண்டு பேரும்….”  டாக்டர் கேட்டார்..

 

“ ஊர்க் காரங்களை பார்க்க பிடிக்காம முன்னாடி கிளம்பிடலாம்னு அவருதான் சொன்னாரு..” சொல்லிவிட்டு கொஞ்சம் நேரம் மௌனமாக இருந்த சரோஜா, மீண்டும் கேட்டாள்.

 

“ அன்னிக்கு அவரு தொட்டது அந்த ஆத்தா இல்ல… இந்த சரோஜா தான்ங்கிற உண்மையை நான் அவருகிட்ட சொன்னா, அவரு மனசில இருக்கிற பயமும், குற்ற உணர்ச்சியும் போய், அவரு சரியா ஆயிடுவாருன்னு தோணுதுங்க சாமி..  நா அந்த உண்மையை சொல்லிடட்டுமா சாமி..” சரோஜா.

 

சற்று யோசித்த டாக்டர்,

 

“ அப்புறம் உன் மேல கோபப்பட்டு, உன்ன துரத்திட்டு, உன் புருஷன் வேற ஒரு பொண்ண கல்யாணம் பண்ணிக்கிட்டா என்ன பண்ணுவே..” டாக்டர்..

 

“ அது பரவாயில்ல சாமி…. எனக்கு பொழப்புக்கு கூத்து இருக்குது… அது எனக்கு கஞ்சி ஊத்தும்..” என்றாள் சரோஜா.

 

“ அப்படின்னா சொல்லிடு…” என்று டாக்டர் சொல்ல…

 

அதற்கு சரோஜா,

 

“ கூத்து பாட்டு மறக்காம இருக்கான்னு பாடி பாத்துக்கிறேன்.. கஞ்சி குடிக்கணும்ல…” என்று சொல்லி விட்டு பாடி பார்க்க ஆரம்பித்தாள்..

 

 

வந்தனம்… வந்தனம்.. வந்தனம்..

 வந்தனமே… வந்தனமே…. வந்தனமே….

 வந்த சனங்களுக்கு வந்தனமே…

 

 

ஏற்ற இறக்கத்துடன் இரண்டு மூன்று நான்கு முறை பாடி பார்த்துக் கொண்டிருந்தாள் சரோஜா.

 

ரயில் வரும் சத்தம் கேட்டது..

 

“ உன்னோட வந்தனத்தை கேட்டு, ரயில் அஞ்சு நிமிஷம் முன்னாடியே வந்திடிச்சு பாரு…” என்றார் டாக்டர்.

 

தன்ராசு ரயில் படிக்கட்டில் ஏற சிரமப் பட, “ சாமி, அந்த பக்கம் கொஞ்சம் புடிங்க..” என்றாள் சரோஜா.

 

சரோஜாவும், டாக்டரும் ஆளுக்கு ஒரு பக்கமாய் பிடித்து தன்ராசுவை ரயிலில் ஏற்றினார்கள்.

 

மூன்று பேரையும் சுமந்து கொண்டு பாசஞ்சர் ரயில் புறப்பட்டது.

 

———————————————————————————————————————

Series Navigation“மார்பு எழுத்தாளர்கள்”-ஒரு பின்னூட்டக் கட்டுரை.குப்பையாகிவிடவேண்டாம் நாம்!தொடுவானம் 7. தமிழ் மீது காதல்தினம் என் பயணங்கள் – 8 (மேல் செங்கத்தில் மான் வேட்டை)வால்ட் விட்மன் வசனக் கவிதை – 66 ஆதாமின் பிள்ளைகள் – 3கைந்நிலை காட்டும் இல்லத்தலைவிசாட்சி யார் ?நீங்காத நினைவுகள் – 38புகழ் ​பெற்ற ஏ​ழைகள் – 49ஜெயந்தன் நினைவு இலக்கியப் பரிசுப் போட்டி-2014திண்ணையின் இலக்கியத் தடம் -26அத்தியாயம்-26 துரியோதனனின் வீழ்ச்சியும், போர் முடிவும்.ஓவிய காட்சிநினைவில் பதிந்த காட்சிகள் – கதிர்பாரதியின் ‘மெசியாவுக்கு மூன்று மச்சங்கள்’குப்பை சேகரிப்பவன்மருத்துவக் கட்டுரை ஆஸ்த்மா
author

தாரமங்கலம் வளவன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *