வெளி

author
0 minutes, 2 seconds Read
This entry is part 1 of 23 in the series 23 மார்ச் 2014

ஹரி

இருள் அவர் மீது வகைப்படுத்த முடியாத கோரத் தாக்குதலை தொடுத்துக் கொண்டிருந்தது….அதை சிறிதும் மதிக்காதவர் போல சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொள்கிறார்.கடைசி சிகரெட்…கடைக்குப் போய் வாங்கி வர வேண்டும் என நினைத்த போது சோம்பலாக இருந்தது.

பக்கத்துக் கடையில் கோல்டு பில்டர் தான் கிடைக்கும்.அவரது லைட்ஸ் சிகரெட் வாங்க மெயின் ரோட்டுக்குத் தான் செல்ல வேண்டும்.அவசரத்துக்கு அரைப்பாக்கெட் கோல்டு பில்டர் வாங்கிக் கொள்கிறார்.

தானே தனக்கு நிர்பந்தப்படுத்திக் கொள்கிற “அவசரத்”தை நினைக்கும் போது தனக்குள் மிகப் பெரிய மாற்றம் நிகழ்ந்திருப்பதை உணர்கிறார்.தனக்கு இதை வெளிப்படுத்துவதில் கொஞ்சமும் வருத்தமோ கூச்சமோ இல்லை என்பதை தனது ஒரே மகனான “அவன்” என்ன நினைப்பான் என்பதை அவரால் ஊகிக்க முடியவில்லை.

எதுவாயினும் சரி,இன்று சொல்லி விடுவது என்று அவர் முடிவு செய்து பல மணி நேரங்கள் ஆகிவிட்டன.சிகரெட்டை பற்ற வைத்த கையோடு லேப்டாப்பையும் ஆன் செய்கிறார்.

தன் உணர்வுகளை வேகமாகவும் நேர்த்தியாகவும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கத் துவங்குகிறார்:

“அன்புள்ள மகனுக்கு,

உனக்கு என் மேலே அன்பு இருக்குதுன்னு நம்பறேன்.அதை இழக்கவும் நான் விரும்பலை.

இன்னைக்கி எல்லாத்தையும் உனக்குத் தெளிவு படுத்தறதுன்னு முடிவு பண்ணித்தான் எழுதறேன்.

இதையெல்லாம் நாம “சாட்” பண்றப்பையோ இல்ல போன்லேயோ சொல்லலாம்.ஆனா நான் இதை சொல்லும் போது உன்னோட எந்த ரியாக்‌ஷனையும் தெரிஞ்சுக்க விரும்பாததுனால தான் மெயில் பண்றேன்.மோஸ்ட் இம்ப்பார்ட்டண்ட்லி,யூ ஷுட் நாட் திங் தட் ஐ டோண்ட் ஹாவ் கரேஜ் டூ எக்ஸ்ப்ளைன் திஸ் இன் மொபைல் ஆர் த்ரூ சாட்.

பெங்களூர் வாழ்க்கை இந்த அளவுக்கு உனக்கு பிடிச்சிப் போனது சந்தோஷமா இருந்தாலும் உன்னோட பிரிவை தாங்கிக்க முடியலை.எப்பவாவது தான் உன்னால வர முடியுது.அங்கே நீ இல்லன்னா ஒரு வேலையும் உருப்படியா நடக்காதுன்னு எனக்கு நல்லாத் தெரியிறதாலே தான்   உன்னை அடிக்கடி வான்னு நச்சரிக்கறதில்லை….

தனிமை என்னை அப்படி ஒன்னும் வதைக்கறது இல்லை. சொல்லப் போனா அதை நான் உணரவே இல்லை.இனி எப்பவுமே உணரப் போறதும் இல்லைங்கறதை சொல்லத்தான் இப்ப எழுதறேன்.

உன் அம்மாவும் நானும் பிரிஞ்சிடலாம்னு முடிவெடுத்தப்போ உன்னை நினைச்சி ரொம்ப பயந்தோம்.ஆனா பதினாறு வயசிலேயும் எவ்வளவு தெளிவா பேசினே. நீ சொன்னியே,”தாமதமான முடிவாயிருந்தாலும் சரியான முடிவு”ன்னு,எங்களுக்கு ஆச்சரியமா இருந்த்து.வாட் எ மெச்யூரிட்டி!

ஒன்பது வருஷங்கள் போனதே தெரியலை.என்கூடவே இருந்துக்கறேன்னு நீ சொன்னப்போ உன் அம்மாவும் அதை பெருசா எடுத்துக்கலை.யூ நோ தட் வீ டோண்ட் அண்டர்ஸ்டாண்ட் ஈச் அதர் அஸ் எ ஹஸ்பண்ட் அண்டு வொய்ப்,பட் வீ ஆர் குட் பிரண்ட்ஸ் ஈவன் நவ்.

நீ  போனதுக்கு அப்பறம் இந்த நாலு வருஷம்……..உன் இடத்தை யாரும் நிரப்ப முடியாது.

இதையெல்லாம் ஏன் சொல்றேன்னு உனக்குக் குழப்பமா இருக்கலாம்…வாழ்க்கையை சேர்ந்து வாழலாம்னு ஒரு ஆணும் பெண்ணும் முடிவெடுத்துட்டா  எல்லாத்தையும் விட பரஸ்பரம் புரிதல் ரொம்ப முக்கியம்.ஒன் ஷூட் ரெஸ்பெக்ட் ஹிஸ்/ஹெர் பார்ட்னர்’ஸ் லிபெர்டி அண்டு பீலிங்க்ஸ்.

 

ஒரு வருஷத்துக்கு முன்னாலே என் கல்லூரித் தோழி நிர்மலாவை தற்செயலாக இரயிவே ஸ்டேஷன்லே சந்திச்சேன்.அவங்களைப் பத்தி உன்கிட்ட சொன்னது இல்லை.அதுக்கு ஒரே காரணம் அவங்க என் நினைவிலேயே இல்லைங்கறது தான்.

எனக்கு அவங்களை அடையாளம் கண்டு பிடிக்க ரொம்ப நேரம் ஆகலை.அதே சிரிப்பு,அதே குறுகுறுப்பு- நரைமுடியைத் தவிர.

எவ்வளவு நேரம் பேசிட்டு இருந்தோம்னு தெரியாது.ரொம்ப காலத்துக்கு முன்னாடி தொலைஞ்சி போன ஏதோ ஒன்னு மறுபடியும் கிடைச்ச மாதிரி ஒரு சந்தோஷ்ம்-ரெண்டு பேருக்குமே.

நேரமாயிடுச்சேனு நான் பதறுறேன்,அவங்க ரொம்பக் கூலா நான் ஒரு சுதந்திரப் பறவைன்னு சொல்றாங்க. அப்போ தான் தெரிஞ்சது-அவங்களுக்கு கல்யாணம் பண்ணிக்கனும்னே தோணலையாம்.அப்பா சின்ன வயசிலேயே போய்ச் சேர்ந்துட்டார்.இவங்க கல்யாணம் பண்ணிக்காத கவலையிலே தான் அம்மா இறந்துட்டாங்கன்னு பேசிக்கிட்டாங்களாம்.ஆயிரம் பேசித் தொலையட்டுமே.

நானும் என் கதையைச் சொன்னேன்.ஆச்சரியப்பட்டாங்க உன்னோட முதிர்ச்சியை நினைச்சு.கெளம்பறப்போ அவங்க நம்பரை மறக்காம வாங்கி வச்சிக்கிட்டேன்.

 

 

நாங்க அடிக்கடி சந்திக்க ஆரம்பிச்சோம்.ஒரு சந்திப்புக்கும் அடுத்த சந்திப்புக்கும் இடையிலிருந்த தூரம் குறைஞ்சிக்கிட்டே வந்த்து. நான் தான் அவங்க கிட்ட நாம காதலிச்சிருந்தா நல்லா இருந்திருக்குமோன்னு சொன்னேன்.அட ஆமாம் இதைப் பத்தி நாம யோசிக்காமையே போயிட்டோமேன்னு சொன்னாங்க.இப்போ யோசிக்கலாமான்னு கேட்டேன்.அவங்க கொஞ்சம் ஷாக் ஆகிட்டாங்க.

எங்களுக்குள்ளே நல்ல புரிதல் இருந்தது…அது எங்களோட நெருக்கத்துக்குக் காரணாமாயிடுச்சு. யோசிச்சோம்- நாள் கணக்கா யோசிச்சோம்.கொஞ்ச நாளைக்கு முன்னாடி தான் ஒரு முடிவுக்கு வந்தோம்.

யெஸ்,வீ டிஸைடட் டூ லெட் தி லைப் டூகெதர்.இதையெல்லாம் நான் உன்கிட்டே இத்தனை நாட்கள் சொல்லாம இருந்த்துக்கு மறைச்சுட்டேன்னு பொருளில்லை.அவங்க மறுபடியும் எனக்குக் கிடைச்சப்போ சந்தோஷம் இருந்தாலும் உன்கிட்ட பகிர்ந்துக்கற அளவுக்கு விஷேஷமான செய்தின்னு தோணலை.இப்பத்தான் சொல்லனும்னு தோணுது.

இதுல ஒரு முக்கியமான விஷயம் என்னன்னா,எனக்கு மறுபடியும் கல்யாணம் பண்ணிக்கிற எண்ணமில்லை.அவங்களுக்கு கல்யாணமே பண்ணிக்கிற எண்ணமில்லை.எங்களைப் பொறுத்தவரைக்கும் ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழறதுதான் கல்யாணம்.அதுக்கு மேல ஊரைக்கூட்டி சொல்லனும்னு எங்களுக்கு விருப்பமில்லை.இப்போ எங்க உலகம் நீ தான்.ஸோ ஐ யாம் ஸ்பீக்கிங்க் வித் யூ.உன் கிட்ட பிரகடனப்படுத்திட்டா வீ வில் பீல் ரிலாக்ஸ்டு.

நான் ரொம்ப அதிர்ஷ்டசாலின்னு தோணுது.என்னோட மனிதர்கள்கிட்ட மனுசுல பட்ட எல்லாத்தையும் சொல்ற வெளி எனக்கு இருக்கு.அதனாலே தான் இப்போ உன்கிட்ட பேசிட்டு இருக்கேன்.

உன் அம்மா(என் முன்னாள் மனைவி) இதுல உன் ஒப்பீனியன் என்னன்னு தெரிஞ்சிக்க ஆவலா இருக்காங்க.அவங்களும்தான்.அதை நான் தான் ரெண்டு பேர்கிட்டேயும் பகிர்ந்துக்கனும்னு ஆசைப்படறேன்.ஸோ ரிப்ளை மீ குயிக்லீ”

மெயில் வெற்றிகரமாக அனுப்பப்பட்டதும் விண்டோஸ் தனது செயல்பாட்டை அவரது கட்டளைக்கு இணங்கி நிறுத்திக் கொண்டது.

தன் மகனது நம்பருக்கு ப்ளீஸ் செக் மெயில் என்று குறுந்தகவல் தட்டிவிட்டு காலியான கோல்டு பில்டர் பாக்கெடை குப்பைத் தொட்டியில் போட்டு விட்டு லைட்ஸ் சிகரெட் வாங்க புறப்படுகிறார்,எந்த சலனமும் இல்லாமல்.

—————————————————————————————————————–

Series Navigationஉறைந்த சித்திரங்கள் – கேரள சர்வதேசத் திரைப்பட விழாசீதாயணம் நாடகப் படக்கதை – ​2 ​5​
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *