பயணச்சுவை 1 . சென்னையிலிருந்து சேலம் !

author
1
0 minutes, 0 seconds Read
This entry is part 8 of 19 in the series 13 ஏப்ரல் 2014

வில்லவன் கோதை

தமிழ்நாடு மின்வாரியத்தில் பணியாற்றி அவர்கள் எப்போதோ  ஓய்வு பெற்றிருந்தார்கள்.  இருவருமே ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டவர்கள்  ஒரே ஒரு வித்தியாசம்.

நண்பர் தங்கவேலு இந்துமத சம்பிரதாயங்களை பின்தொடர்பவர். இன்னொருவர் நண்பர் வேதசிரோன்மணி

கிருத்துவத்தை ஏற்று ஊழியம் செய்பவர்.

இரண்டுமே ஒய்வுக்குப்பிறகு கைகூடியிருக்கிறது என்று சொல்லலாம்.

விரைவுப்பேரூந்தில்  வந்தால் நல்லதென்கிறார்  ஒருவர்.  ரயில் வண்டித்தொடர்தான் வசதியானது என்கிறார் இன்னொருவர்

என்னைப்பொருத்தவரை சேரும் இடம் இருவருக்கும் ஒன்று என்று கருதுகிறவன்.

இருந்தாலும் இருவரும் நல்ல நண்பர்களே  !

இந்த இரண்டு நண்பர்களுக்கும்   கும்பகோணத்துக்குப் பக்கத்தில் இருக்கும்  வன்னியடியில் நண்பர் ஜெகன்நாதனை  சந்திக்க வேண்டுமென்று தோன்றுகிறது..

அதேசமயம் அறுபத்தியெட்டுகளில் அவர்களோடு  இணைந்து தமிழ்நாடு மின் வாரியத்தில் ஒன்றாக  பணியாற்றிய நண்பர்கள் நினைவும் குறுக்கிடுகிறது. அதன் விளைவாக   ஜூன்  2010 ல் நிகழ்ந்ததுதான்    வன்னியடியில் ஏற்பட்ட முதல்  சந்திப்பு.

அந்த மகிழ்வுக்குறிய சந்திப்பில் அறுவர் கலந்துகொண்டு  அவரவர் நினைவுகளை பின்னோக்கிச் செலுத்தி மகிழ்வுற்றோம்.  நிகழ்வுகள் ஒருவாறு  முடிவுற்றபோது   அடுத்த ஆண்டிலும் இப்படியொரு கூடலை ஏர்ப்படுத்தி மகிழவேண்டுமென்று சாதாரணமாக பேசி விடை பெற்றோம்.

பரபரப்பான இன்றைய சூழலில்  இப்படியெல்லாம் திரும்பிப் பார்த்து ஒருவருக்கொருவர் உரையாடி மகிழ்வது பெரிதும் மன  இறுக்கத்தை தளர்த்தி மேலும் சொச்சபயணத்தை எளிதாக்கக்கூடும் என்றும் தோன்றிற்று.

மின் வாரியப்பணிகளிலிருந்து முழுமையாக விடுபட்டாலும்  மீண்டுமொரு சந்திப்பை குறிப்பிட்ட தேதிகளில் ஏர்ப்படுத்த அவரவர் சூழல்கள் தயங்கிற்று. நம்மை நாமே பின்னிக் கொண்டிருக்கிற சிக்கல்களும் அதர்க்கேர்ப்ப சளைக்காமல் ஓடியோடி உறுதியிழந்த உடற்பகுதிகளும் ஒத்துழைக்கத் தயங்கின.

இருந்தபோதிலும் முன்னதாக முன்நின்ற மூவரின் முயற்சியால் வன்னியடியில் தூவப்பட்ட விதை  மெல்லமெல்ல துளிர்விடத் துவங்கிற்று.

ஏதோவொரு நாள் எதேச்சையாக 2014 மார்ச் 15 , 16  தேதிகளில் சேலம் மாவட்டத்தின்  குளிர்ப்பிரதேசமாக திகழும் ஏற்காட்டில் கூடுவதென்று  கைபேசியில்  முடிவெடுத்தோம். அதற்கான முழு பொறுப்பையும் குறுக்கிடுகிற செலவினங்களையும் தான் ஏற்கப்போவதாக அப்போதே தங்கவேலு  சொன்னார். மகிழ்வோடு பகிர்ந்து கொள்ள விரும்பிய எங்களது விருப்பம் பின்வாங்கிற்று.

இப்போதெல்லாம் இதுபோல பசுமை நிறைந்த நினைவுகளை பாடித்திரிந்த பறவைகள் ஆங்காங்கே  கூடித்திரிகின்ற காட்சிகள்  அரங்கேறிக்கொண்டுதான் இருக்கின்றன. அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் எப்போதோ படித்தவர்கள் …பச்சையப்பன் கல்லூரியில்  பயாலஜி பயின்றவர்கள்   என்று பல்வேறு சந்திப்புகள்  நிகழ்வது அவ்வப்போது   செய்தித்தாள்களில் காணமுடிகிறது.

இன்னும்  ஒரு படி மேலேறி தங்கள் தங்கள் துணைவியாரையும் கூட  இதுமாதிரியான நிகழ்வுகளில் சேர்த்துக்கொள்கிறார்கள். போகப்போக எல்கேஜி படித்த பசுமையான நினைவுகள் கூட திரும்பிப் பார்க்கப்பட்டாலும் வியப்பதற்கு ஒன்றுமில்லை  .

இந்த ஏற்காட்டு சந்திப்பின் மூலம்  ஏறத்தாழ ஐம்பது வருட நினைவுகளைத்தான் எங்களால் கொண்டாட முடிந்தது. அறுபத்தியெட்டுகளில் மின் வாரியத்தில் முதன் முதலாக தனித்தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட பத்து பதினைந்து பேர்கள் ஒரே பிரிவில் ஈரோட்டில் இணைந்தோம்.அவர்களில்  இதற்கு முன்னதாக ஏர்ப்பட்ட வன்னியடி சந்திப்பில் ஆறு பேர்கள் மட்டுமே  இணைய நேர்ந்தது. இந்த முறை அந்த அறுவறோடு மேலும் மூவர் இணைந்து ஒன்பது பேரானோம்.

திட்டமிட்டபடி மார்ச்  14 ஆம் தேதி இரவே திருவாரூர் குமாரசாமியும் வன்னியடி ஜெகநாதனும் ஈரோடு தங்கவேலுவுடன்  இணைந்து கொண்டனர். சென்னை புறநகரில் வாழும் நான் அதிகாலை கோவை விரைவுவண்டியை கைப்பற்ற தோதுவாக 14 ஆம் தேதி இரவே நூங்கம்பாக்கத்திலிருக்கும்  நண்பர் வேதசிரோன்மணி வீட்டுக்கு சென்று விட்டேன்.

15 ஆம் தேதி அதி காலை

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வழக்கம்போலவே பரபரப்பாக காணப்பட்டது. வெவ்வேறு நடைமேடைகளில்  வண்டித்தொடர்கள்  நெடும்பயணத்துக்கு தயாராயிருந்தன. அவசரம் அவசரமாக கூட்ட நெருக்கடியில் இந்து பத்திரிக்கை ஒன்றை வாங்கிக்கொண்டோம் . உணவகங்களில் மிகுதியான  நெருக்கடி காணப்பட்டதால் காலை உணவை வண்டியிலேயே ஏற்கலாம் என்று முடிவெடுத்தோம். .

நான்காவது நடை மேடையில்  இந்த சந்திப்பில் புதிதாக கலந்து கொள்ளும் ஐனாவரத்தைச்சேர்ந்த  நண்பர்  வீ  .மணியைக்காணமுடிந்தது

மாநிறம் , சராசரிக்கு சற்று குறைவான உயரம் , ஆனால் உயரத்துக்கேற்ற பருமன் , கண்ணாடி அணிந்து பழகிப்போன  உருண்டையான முகம் ,  பரபரப்பாக சுழலும் விழிகள். .நண்பர் ஜெகநாதன் முன்னதாக சொன்னது போலவே கழுத்துப்பட்டையோடு காணப்பட்டார். கழுத்துவலி நிவாரணியாக இருக்கக்கூடும்..

எதிர்காலத்தையும் இறந்த காலத்தையும் பட்டாசுக்கட்டாக எடுத்தெரிந்து பேசும்  பேச்சு , பணியிலும் சுயவாழ்விலும் இயல்பாக பெற்றிருந்த  வாய்மை , நட்புக்கு நெடுந்தூரம் கைநீட்டும் பாங்கு , அபாயத்திலிருப்போர்க்கு எப்போதும்  அவசர உதவி 108 ஆக இயங்கிய அழகு

இவர்தான்  இந்த வி. மணி.

68  களில் எனக்கு அறிமுகமான நட்பு.   ஐனாவரத்தில் வாழும் ஒரிஜினல் அக் மார்க்   மதராசி.

கோவை எக்ஸ்பிரஸ் குறிப்பிட்டிருந்த அட்டவணை நேரத்தில் நகரத்தொடங்கி வேகம் எடுத்தது. எங்களுக்கான இருக்கைகளைத்தேடி அமர்ந்தோம் .கைச்சுமைகளை மேலேயிருந்த தடுப்பு  அறைகளில் திணித்தோம்.

குளிர்வசதி  செய்யப்பட்டிருந்த பெட்டி. காலை நேரத்துக்கு மனதுக்கும் உடலுக்கும் இதமாக இருந்தது. இருக்கைகள் மட்டும் ஒரு காலத்திய தந்தைபெரியார் போக்குவரத்துகழகங்களின் இருக்கைகள் போல சற்று சிக்கனமாக இருந்தன.

மற்றபடி குறையொன்றுமில்லை.

காலை உணவை வண்டியிலே வலம் வந்த இட்லி வடா.. வை உண்டு              ( அப்படித்தான் அந்த விற்பனையாளர் கூவினார் )   முடித்துக் கொண்டோம்.  தேனீரும் காய்கறிச்சாறும் விற்பனைக்கு வந்தது.

எட்டுமணி சுமாருக்கு வண்டி காட்பாடியை தொட்டபோது  சென்றமுறை  வன்னியடிக்கு வரத்தவறிய நண்பர் திருவலம் ராஜேந்திரன் கைப்பெட்டியோடு வண்டியில் ஏறினார்.

இவரும் நல்ல நிறம்  , சராசரிக்கு சற்று குறைவான  உயரம்  அதற்கேற்ற பருமனைவிட ஒருசுற்று  கூடுதல்  .

பல்வேறு செய்திகளை பகிர்ந்து கொண்டாலும் எப்போதும் அதிர்ந்து பேசாதவர் . பெரும்பாலான விஷயங்களில் ஒருவகை கட்டுப்பாட்டை நேசிப்பவர் .  அவர்க்கு மாறான கருத்துக்களுக்கு   எப்போதும் மெல்லிய   புன்னகையோடு நழுவுபவர்  .

காஞ்சிபுரத்தை சேர்ந்த நண்பர் இராஜேந்திரன்  வாரியப்பணியில் பெரும்பகுதி வேலூரைச்சேர்ந்த திருவலத்தில் கழித்தவர். அவர்  துணைவியார்  திருமதி பார்வதி பி . ஏ   துவக்கிய ஒரு எல்கேஜி கல்விக்கூடம் இன்று ப்ளஸ் டூ வரை உயர்ந்து வேலூர் விஐடியை நினைவூட்டிற்று. அதற்காக அவர்கள் செலுத்திய உழைப்பு  இன்றும் நினைவு கூரத்தக்கது .

வாரியபணிக்காக திருவலம் சென்ற ராஜேந்திரன் அங்கேயே ஒரு வாழ்க்கையை  அமைத்துக்கொண்டது   சுவாரசியம் . முயன்றால் ஒரு நாவலாக கூட  எழுதலாம்.

(  அடுத்தவாரம் பார்க்கலாம் !  )

Series Navigationநீங்காத நினைவுகள் – 42
author

Similar Posts

Comments

  1. Avatar
    அசோகன் says:

    நன்றாக உள்ளது உங்களின் கட்டுரை. உங்களின் வன்னியடி பயணம்பற்றி தெரிந்தாலும், அதன் தொடர்கதை மிகவும் போற்றகூடியது. வாழ்த்துக்கள்.

    தொடர்ச்சியை எதிநோக்கியுள்ளேன்…….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *