நீங்காத நினைவுகள் 47

This entry is part 1 of 29 in the series 25 மே 2014

ஜோதிர்லதா கிரிஜா

நான் பெரியவர்களுக்கான எழுத்தாளராக அறிமுகம் ஆன புதிதில் எழுத்தாளர் தொடர்புள்ள கூட்டங்களுக்கும் இலக்கியக் கூட்டங்களுக்கும் மிகுந்த ஆர்வத்துடன் போவதை வழக்கமாய்க் கொள்ளலானேன். ஆனால் சில கூட்டங்களுக்குப் போனதன் பின் அலுத்துப்போகத் தொடங்கிவிட்டது. காரணம் உருப்படியாக இலக்கியம் பற்றி எதுவும் பேசாமல் பேச்சாளர்கள் – பெரும்பாலும் எழுத்தாளர்கள் – தங்களுக்குப் பிடிக்காத எழுத்தாளர்களை மட்டந்தட்டிப் பேசுவதையோ அல்லது கேலிசெய்வதையோ, தாக்குவதையோ பொறாமையின் விளைவாகச் செய்துகொண்டிருந்ததுதான். அப்போதே எழுத்தாளர்களில் “கோஷ்டிகள்” இருந்தன. (இப்போது அவை இன்னும் அதிக எண்ணிக்கையில் பெருகிவிட்டன.)
ஒத்த கருத்துடைய காரணத்தாலோ, நட்பின் விளைவாகவோ சில எழுத்தாளர்கள் ஒன்று கூடி ஓர் இலக்கிய அமைப்பைத் தொடங்க வேண்டியது; பிற அமைப்புகளைத் தாக்கிப் பேச வேண்டியது. ‘என்னைப் போல உண்டா?’ என்று தற்பெருமை பேசுவது கூடச் சிலரின் இயல்பாக இருந்தது. அல்லது தங்களை மதிக்கும் எழுத்தாளர்களை மட்டுமே அங்கீகரிப்பதை இவர்கள் செய்து வந்தார்கள். இதையெல்லாம் பார்த்து வெறுத்த சலிப்பில்தான் இது போன்ற கூட்டங்களுக்குப் போவதை நிறுத்தலானேன்.
விமரிசனம் என்பதை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை அமரர் கொத்தமங்கலம் சுப்பு அவர்களிடமிருந்து கற்றுக்கொண்டேன். (பொதுவாக, நான் பிற எழுத்தாளர்களை விமர்சிப்பதில்லை யானாலும்.) பல ஆண்டுகளுக்கு முன்னால், எழுத்தாளர்கள் தொடர்புள்ள ஒரு பெரிய கூட்டத்தில் சில எழுத்தாளர்களின் நூல்கள் விமர்சனத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. அமரர் கவிஞர் சுரதா அவர்களின் ஒரு நூலை விமர்சிக்கும் பணி கொத்தமங்கலம் சுப்பு அவர்களிடம் கொடுக்கப்பட்டிருந்தது. சுரதா ஒரு நாத்திகர் என்பதை யாவரும் அறிவர். கொத்தமங்கலம் சுப்புவோ பழுத்த ஆத்திகர். சுரதாவின் அந்த நூல் நாத்திகத்தைத் தன்னுள் அதிகம் அடக்கியிருந்த ஒரு கவிதை நூல். (தேன்மழை என்பதாக நினைவு.) நாத்திகம் கொப்பளித்த அந்தக் கவிதைகளை வரி வரியாக வாசித்துக் கொத்தமங்கலம் சுப்பு விமர்சித்தார். அதன் கவிதை நயம், கட்டுக்கோப்பு, சொல்நயம் ஆகியவற்றை வெகுவாகப் புகழ்ந்துரைத்தார். கூட்டத்தினர்க்குப் பெரு வியப்பு. ஆத்திகராக இருந்து கொண்டு சுரதாவின் நாத்திகம் ததும்பும் கவிதை நூலை இந்த அளவுக்குச் சிலாகித்து இவர் பேசுகிறாரே என்று. சுரதாவைத் தாக்கி ஏதேனும் சொல்லுவார் என்று நினைத்திருந்தவர்களுக்கெல்லாம் சற்றே அதிர்ச்சி. அவர் பேசி முடித்ததுமே கூட்டத்தில் இருந்த ஒரு நபர் அது பற்றி அவரைக் கேள்வி கேட்டார். கூட்டத்தினரில் பலர் மனங்களிலும் எழுந்த கேள்வியைத்தான் அவர் கேட்டார் என்பதில் ஐயமில்லை.
கொத்தமங்கலம் சுப்பு சொன்னார்: “நான் ஆத்திகன்தான். சுரதா நாத்திகர்தான். ஆனால் நான் ஒன்றும் அவருடைய நாத்திகத்தை விமர்சிக்க வரவில்லை! அவர் எழுதிய நூலை விமர்சிக்கத்தானே வந்தேன்? அதில் ததும்பும் கவிதை நயம், சொல் நயம் போன்றவற்றை விமர்சிப்பதுதானே என் வேலை? அவருடைய கருத்தும் என் கருத்தும் வெவ்வேறானவையாக இருக்கலாம். அதற்காக நான் அவரை எதிர்க்கலாகுமா? எனக்குக் கொடுத்த பணி அவரது எழுத்தை விமர்சிப்பதுதானே யல்லாது, அவரை விமர்சிப்பது அன்றே? விமர்சனம் என்பது எழுத்தைச் சார்ந்ததே தவிர, அதை எழுதியவரின் இயல்பைச் சார்ந்த ஒன்றன்று!” என்று பதில் சொல்லிக் கூட்டத்தினர் பலரின் பலத்த கைதட்டலைப் பெற்றார். நாகரிகமான விமரிசனம் எவ்வாறு செய்யப்பட வேண்டும் என்பதை அன்று பலரும் கொத்தமங்கலம் சுப்புவிடமிருந்து தெரிந்து கொண்டிருந்திருப்பார்கள்.
இலக்கிய சாம்ராட் கோவி. மணிசேகரன் அவர்கள் எழுதியுள்ள கோவி ராமாயணம் எனும் மூன்று பகுதிகள் கொண்ட பெரிய ராமாயணக் கவிதை நூலைக் கலைஞர் கருணாநிதி அவர்கள் இதே பாணியில் பெரிதும் புகழ்ந்து விமர்சித்துள்ளார். அவர் ஒன்றும் ராமபக்தர் அல்லரே!
இந்த இரு பெரியவர்களின் கருத்துகளும் பசுமரத்தாணி போல் மனத்தில் பதிந்தன. பிற எழுத்தாளர்களின் எழுத்துகளை விமர்சிப்பதை விடுத்துக் “கண்டமேனிக்கு”த் தனிப்பட்ட முறையில் அவர்களைத் தாக்கும் சிலருக்கு இது உதவக் கூடும் என்கிற கருத்தில் இது எழுதப்படுகிறது.
………

Series Navigation
author

ஜோதிர்லதா கிரிஜா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *