முதிர்ந்து விட்டால்..!

This entry is part 1 of 29 in the series 25 மே 2014

தென்றலின் வீதி  உலா 

மணத்தைத் தொலைத்தது
மல்லிகை ..!
கம கமத்தது மரம்
வெட்டுப் பட்டது
சந்தனம்…!
கொடியை உயர்த்திப் பிடித்ததும்
வெற்றுக் கொடியானது
வெற்றிலை..!
தோகை முதிர்வை அறிவித்ததும்
ஆலையில் சிக்குண்டது
கரும்பு..!
கர்ப்பகிரஹத்துள் அநீதி
வெளிநடப்பு செய்தது
தெய்வம்..!
காற்றால் நகர்ந்தது
புயலால் புரண்டது
பாய்மரம் …!
வெப்பத்தால் பறந்தது
கனத்தால் விழுந்தது
மழை..!
மௌனத்தில் பேசியே
தவம் கலைத்தது
மேகங்கள்…!
அலைந்து அலைந்து
வாசம் தேடியது
தென்றல்..!
உயர்ந்து நின்றாலும்
என்ன பயன்? அறியாதிருந்தது
இமயம்…!
தாகம் தீர்க்கவும்
இயலாததை எண்ணியழுதது
கடல்…!
மண்ணோடு  கிடந்ததை
தன்னோடு  தாங்கிக் கொண்டது
மண்பானை….!
சிப்பியில் துளி விழ
வாய்மூடி உருவானது
முத்து..!
இதயத்தில் அடி
இமைகள் மூட உருண்டது
கண்ணீர்..!
ஆகாயத் தாமரைகள்
அந்தரத்து ஆனந்தங்கள்
பறவைகள்..!
ஒவ்வொரு ஜீவனின்
உன்னத எண்ணங்கள்
புத்தகங்கள்…!
அதுவும் இதுவும்
அவனும் அவளும் தான்
உலகம்..!
தடுக்கியதும் தவறியதும்
சோர்ந்ததும் தூக்கி நிறுத்தும்
நம்பிக்கை…!
கண் முன்னே
நம்மைக்  கட்டிப் போடுது
கணினி..!
உயிர்ப் பழுத்ததும்
பாசத்துடன் இழுக்கும்
மரணம்…!
திங்கள் பத்து கழிந்ததும்
புகுந்தது பூமிக்குள்
பிறப்பு..!
கரையான் கட்டி முடித்து
நெட்டி முறித்ததும் புகுந்தது
பாம்பு…!
கர்ப்பக் கிரஹத்துள்
அநீதி வெளியேறியது
தெய்வம்..!
நாற்பது வயதைக்
கடந்ததும் எட்டிப் பார்ப்பது
சக்கரை..!
பருவம் தொட்டாள் கன்னி
உரிமை கொண்டாடினான்
கணவன்…!
நிலம்  பார்த்துக் கதறியது
கால் வலிக்குதென்று
பூக்காத மரம்….!
செய்த தவறுகளை
சரியாக்கி விடும்
பரிகாரம்..!
வரவை எண்ணி
செலவை எண்ணாதவன்
மூடன்..!
இயற்கையை கன்னியாகக்
கட்டுக்குள் வைத்தான்
இறைவன்…!
ஜெயஸ்ரீ ஷங்கர்
Series Navigation
author

ஜெயஸ்ரீ ஷங்கர்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *