நம் நிலை?

author
0 minutes, 1 second Read
This entry is part 1 of 26 in the series 1 ஜூன் 2014

மீனாள் தேவராஜன்

தமிழர்கள் நாம் ஆங்கில நாட்டுப் பழக்க வழக்கங்களைப் பின்பற்றவே விரும்புகிறோம். ஆங்கில ஆதிக்கத்தின் கீழ் நம் நாடு பல ஆண்டுகளாக இருந்ததன் பலனாகும். மேலைநாட்டுப் பழக்கவழக்கங்கள் நமக்குத் தேவையா?’ என்பதை நம்மில் யாரும் சிந்திப்பதே இல்லை. அவன் பேசுகிறான் ,நான் பின்பற்றுகிறேன். இது நாகரிகம் என்று நினைத்து நடைபோடுகிறது, தமிழகம்.
ஆடை அலங்காரம்; ஆங்கிலேயர்களைப் போல் ஆடை அணியதான் விரும்புகிறோம். வெளியே ஓரிடத்திற்குப் போக வேண்டுமென்றால் பாண்ட் சட்டை போட்டு ஆண்கள் கிளம்புகிறார்கள். அதுவும் நவீன காலத்தில் பெண்களும் அப்படித்தான் போகிறார்கள். அதை தப்பு என்று சொல்லவில்லை. நமக்கு முன்மாதிரியாக இன்றும் நாம் மேலைநாட்டாரையே எடுத்துக் கொள்கிறோம் என்பது உண்மைதானே? தொலைக் காட்சி, திரைப்படங்களும் இப்படிதான் காட்டுகின்றன. ஏன் இவ்வளவு விஜய் டி.வி. நீயா?நானா? புகழ் கோபு எப்போப் பார்த்தாலும் ஏன் கோட்டு சூட்டிலே வரவேண்டும்.
பெண்கள் மிக குறைவான ஆடைகளை அணிகிறார்கள். கண்ணாடி மாதிரி துணிகளையும் அணிகிறார்கள். வண்ண வண்ண முக அலங்காரம் வேறே? இதெல்லாம் எங்கிருந்து கற்றுக் கொண்டோம். அப்படி வந்தால்தான் நாகரீகம் என்று பலர் கருதுவதுதான் இதற்குக் காரணம்.
அடுத்து மொழி. ஆங்கில கலப்பு இல்லாத தமிழில் பேசினால் மற்றவர்கள் நம்மைப் படிக்காத பட்டிக்காடு என்று நினைத்துக் கொள்வார்கள் என்ற நினைப்புதான் ஆங்கிலத்தையும் தமிழையும் கலந்து கொஞ்சிக் குழப்பும் தமிழில் பேச வைக்கிறது. இதுக்கு தொலைக்காட்சியையே எடுத்துக் காட்டாகக் கொள்ளலாம். ஏன்னா அதுதான் நம்மில் பலரின் பொழுதுபோக்காக இருக்கிறது. ஒரு நிகழ்ச்சியை நடத்துபவர் அந்நிகழ்ச்சியின் தொடக்கத்தில் இங்கு வந்திருப்போரை வரவேற்று நிகழ்வைத் தொடங்குகிறேன் என்று சொன்னால் குறைந்தா போய்விடுவாங்க. அவுகளே படிக்காதவங்கன்னு சொல்லிடுவாங்க என்ற பயம்தான் ‘லெட் அஸ் வெல்கம் ‘ (Let us welcome) என்று சொல்லவைக்குது.
இதையெல்லாம் விட்டுவிடலாம். ஆனால் பள்ளிச் சீருடை மிக யோசிக்க வேண்டிய ஒன்று.
பள்ளிச் சீருடை என்றால் எல்லா மாணவர்களும் ஒன்று போல் நினைக்கப்பட வேண்டும் என்பதற்காக நடைமுறைக்கு வந்தது இது பாராட்டப்பட வேண்டிய ஒன்றாகும். ஏற்ற தாழ்வு அற்ற சமுதாயம் உருவாக வித்திட்டது, பள்ளிச்சீருடை என்பதில் சிறிதும் ஐயமில்லை. ஆனால் என்ன நடக்குது? கனத்த அல்லது பாதத்தை அழுத்திப் பிடித்த காலணி, மேலும் காலணிக்குள் காலுறை வேறு. புல்வெளியில் பந்து விளையாடி விட்டு வந்தால் காலணியையும் காலுறையையும் கழற்றும் போது எவ்வளவு நாற்றம் அடிகிறது என்று எத்தணை பேர் உணர்கிறார்கள். மேலும்கழுத்தை நெருக்கிக் கட்டும் ‘டை’ இதெல்லாம் நமக்குத் தேவையா?
ஆண் பெண்களின் உள்ளாடைகள் பெரும்பாலும் நவீன காலத்தில் எந்த துணியால் தாயாரிக்கப்படுகின்றன. பாலிஸ்டர், நைலான் துணிகளால் தயாரிக்கப்படுகின்றன. இவை நமக்கு உகந்ததா என்று பலருக்குத் தெரியாது. இதில் இன்னொரு விசயம் என்னவென்றால் விளம்பர்ங்களின் மகிமை. ‘துவைக்க துவைக்க நீண்ட நாள் உழைக்கக் கூடியது’ என்று விளம்பரம்செய்து ஏழை எளியவர்களை மயக்கும் திறன் அவற்றை பயன்படுத்தும் நிலையை உருவாக்கியுள்ளது.
இறுதி உணவு; விரைவு உணவு வேண்டிய உணவா? திடீர் உணவு தேவையா? ரொட்டி வேண்டுமா? ஆங்கில மோகத்தில் நவீன மோகத்தில் (fashionable) தேவையில்லாதவற்றைத் தேவையானதாக நினைத்துச் செய்கிறோம். நமக்கு ஒவ்வாதைச் செய்து கொண்டிருக்கிறோம். அதனால் ஏற்படும் பின் விளைவுகளை யோசித்துப் பார்க்கவில்லை.
ஒரு நாட்டின் பழக்க வழக்கங்கள், அந்நாட்டின் வானிலையைப் பொருத்துதான் மேற்கொள்ளப்படுகின்றன. இதை எல்லாரும் மறுக்கமாட்டார்கள்.
பழக்க வழக்கங்கள் என்பவை நாம் உணவு உட்கொள்ளும் முறை, ஆடை அணியும் முறைகள், நாள் தோறும் நாம் பின்பற்றும் அன்றாட வழக்கஙுகள் ஆகியவையாகும்.
நாம் ஆடைகளை அணிகிறோம்? குளிர் வெப்பம் ஆகியவை நம்மைப் பாதிக்காமல் இருப்பதற்காகும். ஆனால் நம் நாடு வெப்பம் மிகுந்த நாடு. இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகள் குளிர் மிகுந்த நாடுகள். அங்கே காலுறை, கையுறை, டை எல்லாம் குளிர் அவர்களைத் தாக்கமல் இருக்க அணிகிறார்கள். நாம் சிந்திக்காமல் மேற்கொள்கிறோம். அவர்களுக்குக் குளிருக்கேற்ற உணவு தேவை. குளிர் நாட்டில் சமைப்பதற்கும் அடுப்பில் பொருள் சூடேருவதற்கும் அதிக நேரமாகும். எனவே, அவர்கள் ரொட்டியை (bread) தயாரித்துச் சாப்பிடுகிறார்கள். திடீர் உணவுகளை உட்கொள்கிறார்கள். குளிர் நாட்டில் சாப்பிடுவது போல் அதிக கொழுப்பு உணவுகள் நமக்குத் தேவையில்லை
அங்குள்ள வானிலைக்கு அவர்களுக்கு அதிகம் வியர்க்காது. எனவே அவர்கள் நைலான் போன்றவற்றால் தயாரிக்கப்பட்ட ஆடைகளை அணிவதில் பாதிப்பு அதிகமில்லை. மேலும் அவ்வாடைகள் குளிர்க்கு ஏற்றவை என்று கூடச் சொல்லலாம்.
உள்ளாடைகள் கூட மார்பகத்தைக் குளிர் தாக்காமலிருக்க அணியப்படுகிறது. அது அந்நாடுகளுக்குக் கனமானதாக இருந்தால் பாதிப்பு ஒன்றும் இல்லை. ஆனால் நம் நாட்டுக்கு பருத்தியாடைகளே சாலச் சிறந்தன.
முக அலங்காரப் பூச்சும் குளிரிலால் ஏற்படும் தோல் வெடிப்புகளைத் தடுப்பதற்கேயாகும். உதட்டுச் சாயமும் அப்படித்தான். உதடுகள் வெடித்துப் போகாமலிருக்கத்தான்.
நம்நாடு வெப்பம் மிகுந்தது. அதற்கேற்ற ஆடைகளை நாம் அணிய வேண்டும். பருத்தி ஆடைகள் நமக்கு உகந்தவை. காலணிகள் மட்டும் நமக்குப் போதும், காலுறைகளும் டையும் கோட்டும் சூட்டும் தேவையில்லாதவைதான். சற்று தளர்வான முழு கால் சட்டைகளும் சட்டைகளும் நமக்கு ஆரோக்கியத்தைத் தரும்.காற்று உடலில் படிவதற்கும் அவை ஏதுவாய் இருக்கின்றன. பருத்தியாடைகள் வியர்வை வெளியேற்றித் தோலைப் பாதுகாக்கும்.
பள்ளிச்சீருடைகள் வேண்டும் ஆனால் காலுறைகள் தேவையா? மேலும் இவை தேவை இல்லாச் செலவுகள்.
பெண்களே! அரைகுறை ஆடை, வெப்பம் நம்மைத் தாக்க வழிவிடுகிறது. பெண்கள் காலத்திற்கு ஏற்ப நவீன ஆடைகளை அணிந்தாலும் வானிலைக்கு ஏற்றவாறு அணிந்தால் உடலுக்கு நல்லது, அவர்கள் பாதுகாப்பிற்கும் நல்லது.
இக்கருத்துகள் இந்தியாவில் வாழ்பவர்களுக்குத்தான். அமெரிக்கா இங்கிலாந்து வாழ் இந்தியர் அங்குள்ள வானிலை ஏற்ற உணவையும் உடையையும் பயன்படுத்த வேண்டும்.
ஆங்கில மொழி இன்று உலக மொழியாகி விட்டது. ஆங்கில அறிவு மிகத்தேவை. தமிழர்கள் தமிழைப் பேசா விட்டால் யார் பேசுவார்கள்? தமிழ் மொழி வழக்கிலிருக்க வேண்டும். குறிப்பாக தமிழ் நாட்டில் ஆங்கிலத்தையும் தமிழையும் கலந்து பேசும் வழக்கம் ஓழிய வேண்டும். தமிழைத் தமிழாகப் பேச வேண்டும், ஆங்கிலத்தை ஆங்கிலமாகப் பேச வேண்டும். அப்படிப் பேசினால்தான் இரு மொழித்திறனும் மேம்படும் என்பது உண்மை. இரண்டையும் கொட்டிக் கலந்தால் உருப்படியாக இருமொழிகளிலும் சிறந்து விளங்கமுடியாது.
கலந்த மொழியும் ஒவ்வாத பழக்க வழக்கங்களுமிருந்தால் நாம் எப்படிப்பட்டவர்கள்? நம் நிலை என்ன?
‘காக்கா தன் நடையை மறந்து அன்ன நடையையும் மறந்த கதைதான்’

Series Navigation
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *