ஆத்ம ராகம்

This entry is part 1 of 23 in the series 29 ஜூன் 2014

”அப்பா.. அப்பா, பேப்பர் படிக்கறீங்களா. சாப்பிட்டாச்சாப்பா”

‘இல்லப்பா. உனக்காகத்தான் வெயிட்டிங். நிம்மியும் இன்னும் சாப்பிடலை. அவளோட ரூமில் படிச்சிட்டிருக்கா பாரு. சப்பாத்தியும், சன்னாவும் செய்திருக்கேன். வாங்க சாப்பிடலாம்”

“சாரிப்பா, இன்னைக்கு நான் உங்களுக்கு டின்னர் தயார் பண்ண ஹெல்ப் பன்ணமுடியாமப் போச்சு. பை த வே, அப்பா ஷி ஈஸ் சுமனா, என்னோட ஃபிரண்ட். இன்னைக்கு நம்மளோட டின்னர் சாப்பிடப் போறாங்க”

“வணக்கம் அப்பா”

அவள் உடுத்தியிருந்த ஜீன்ஸ் பேண்ட், டி ஷர்ட், பாய் கட் முடி போன்றவற்றிற்கும் அவளுடைய பேச்சிற்கும் சம்பந்தமே இல்லாதது போல இருந்தது.

“வணக்கம்மா. என்ன செய்யறீங்க. படிச்சிட்டிருக்கீங்களா?”

“இல்லைப்பா, நான் பாட்டு ஆசிரியராக ஒரு தமிழ் பள்ளியில் பணியில் இருக்கறன். உங்கள் மகன் வழமையாக வரும் பள்ளிதான் அது. அங்குதான் என்ர தலைமை ஆசிரியை மூலம் இவர் அறிமுகமானார். நான் தான் இவருக்கு கர்நாடக இசை கற்றுத் தருகிறன்”

வித்தியாசமான அழகு தமிழ் பேச்சு அவளை இலங்கைப்பெண் என்று காட்டியது. அப்போதுதான் அவளுடைய கையைப் பார்த்தார் சங்கர ராமன். இடது கையில் மணிக்கட்டு வரை வெட்டுப்பட்டிருந்தது. செயற்கை கை என்பது நன்றாகவேத் தெரிந்தது. அதிர்ச்சியில் ‘என்னம்மா இது.. என்ன ஆச்சு?’ என்று தன்னையறியாமல் கொஞ்சம் சத்தமாகவேக் கேட்டுவிட்டார்.

அழகிய அவளுடைய வதனம் சட்டென்று சோகமாக மாறியது. கயல் விழிகள் இரண்டும் மருட்சியில் ஒரு முறை உருண்டு நிலைபெற்றன. அவள் அதை எதிர்பார்த்த ஒன்றுதான். அவளைச் சந்திக்கும் ஒவ்வொருவரும் வாடிக்கையாகக் கேட்கும் கேள்விதானே இது என்றாலும் இன்று இந்தப் பெரியவரிடம் அதன் காரணத்தை முழுமையாகச் சொல்லக் கடமைப்பட்டவள் என்பதை உணர்ந்தாள். செயற்கைக் கரம் பொருத்தியிருந்தாலும் அது இழந்த இயற்கை உருப்பை மறைக்க வழிகாட்டவில்லை. என்றாலும் மிக வெளிப்படையாகப் பேசும் வழமை கொண்டவள் சுமனா.இயன்றவரை முகத்தில் புன்னகை மறையாமல் பார்த்துக் கொள்ள முயன்றாள்.

“இலங்கையில், நான் பள்ளியில் இறுதியாண்டு படிச்சிட்டிருந்தனன். அன்று பள்ளியில் ஆண்டு விழா. எனக்கு பாட்டு, நடனம் எண்டால் நல்ல விருப்பம் எண்டதால அந்த நிகழ்ச்சியப் பாத்தன். அவர்கள் சந்தோஷமாக ஆடிப்பாடி கைதட்டி மகிழ்ந்திருக்கினம். எல்லாரும் எங்கட வயசுப் பிள்ளையள்தானே!
பள்ளிக்கூடத்தில கலைவிழா எண்டால் கட்டாயம் என்ர நடனமும் இருக்கும். விளையாட்டுப் போட்டியில எத்தின ‘கப்’ எடுத்தனான் தெரியுமே! தமிழ்த்தினப் போட்டியிலேயும் எத்தின பரிசு பெற்றனான். அன்று வீட்டிற்கு வந்து கொஞ்ச நேரம்தான் ஆகியிருந்தது.

போர் நடந்துகொண்டிருந்த சமயம் அது, மாங்குளத்தில் இருந்து கிளிநொச்சி அங்க இருந்து புதுக்குடியிருப்பு என ஒவ்வொரு இடமா விமானக் குண்டு வீச்சுக்கிளாலேயும் பல்குழல், செல் வீச்சுக்குள்ளாலேயும் உயிரைப் பிடிச்சுக் கொண்டு ஓடிப் போகேக்கையும் நாள் கணக்காய் பதுங்கு குழிக்குள்ள இருக்கேக்கையும் ’காக்க, காக்க கனகவேல் காக்க’ எண்டு, கந்தன் கவசத்தைத்தானே வாயோயாமல் சொல்லிக்கொண்டிருந்தனாங்கள். அண்டைக்கும் அப்பிடித்தானே! எண்ர இரண்டு சகோதரமார்களும் தந்தையும் அதற்குப் பலியானதும் அன்றுதான். செல்லடி தொடங்கியதும் பதுங்கு குழிக்குள்ள ஓடுவம் எண்டு வெளிக்கிட மேல ‘சுப்பசொனிக்’ பெரிய இரைச்சலோட பறந்து வந்து குண்டு போட, வீட்டுக்குள்ள இருக்க முடியாமலும் பதுங்கு குழிக்குள்ள போக முடியாமலும் அந்தரிச்சுக்கொண்டு, தேவாரப் பாடலை ஓதிக்கொண்டே, அம்மா என்னையும் தம்பியையும் நிலத்தில படுக்க வைத்து எங்களை அணைத்தபடி எங்களுக்கு மேல அம்மாவும் படுத்துக்கொண்டா. அப்பாவும் அண்ணைய அணைச்சபடி குப்புறப்படுத்தார். பெரிய சத்தத்தோட பக்கத்தில விழுந்து வெடித்த குண்டால் உயிரே போனதுபோல இருந்தது. அதுக்குப் பிறகு என்ன நடந்ததெண்டு எனக்குத் தெரியேல்ல. மயங்கிட்டேன் போல. கண்ண முழிச்சுப் பாக்கேக்க நிலத்தில விரிக்கப்பட்ட உரைப்பையில மரத்துக்குக் கீழ கிடந்தன். மரத்தின்ர கிளை ஒண்டில உயர்த்திக் கட்டப்பட்ட குளுக்கோஸ் என்ர இடக்கையில ஏறிக்கொண்டிருந்தது. இப்போதைக்கு இதுதான் எங்கட ஆஸ்பத்திரி எண்டதை அறிஞ்சு கொண்டன். அம்மா, அப்பா, தம்பி, அண்ணை யாரையும் காணலை. பேசவும் முடியல. வலது கை மணிக்கட்டோட இல்லை.

அதோடு தோள் மூட்டோட ஒரு பெரிய காயம். நான் மட்டுமில்ல என்னோட நூற்றுக்கணக்கான பேர் கால் கை இல்லாமலும் பெரிய பெரிய காயங்களோடயும் இருக்கினம். என்னவிட சின்னச் சின்னக் குழந்தையள், வயசு போனவை, பொம்பிளையள், ஆம்பிளையள் எண்டு அந்த இடமே காயக்காறரால நிறைஞ்சு வழிஞ்சுது. சிலர் செத்துப்போனவையின்ர உடம்பை வைச்சு அழுது கொண்டிருந்திச்சினம். டாக்குத்தர், நேஸ்மார் ஓடி, ஓடி காயக்காறரை கவனிச்சுக் கொண்டிருந்திச்சினம். அண்டைக்கு திடீரெண்டு ஆரோ வந்தினம். என்னையும் இன்னும் காயக்காரரையும் வாகனத்தில ஏத்திக்கொண்டு வவுனியா ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்திச்சினம். அம்மா, அப்பா, சகோதரங்கள் எல்லாரையும் விட்டிட்டு நான் மட்டும் அநாதையா இஞ்ச இருக்கினம்னு நினைச்சேன். பிற்பாடுதான் தெரிஞ்சது. அப்பா, இரண்டு சகோதரங்க எல்லோரும் செத்துப்போனவையின்ர விசயம். அம்மா மட்டும்தான் எனக்கு கிடைச்சவிங்க.”

அதற்குமேல் ஆற்றாமல் அழ அரம்பித்துவிட்டாள். பிழைப்பிற்காகத் தான் மட்டும் அமெரிக்காவில் வந்து வேலை பார்ப்பதையும், அம்மா தன் தாய் நாட்டைவிட்டு எங்கும் வர விரும்பவில்லை என்றும் கூறினாள். தன் வருமானத்தை நம்பி இலங்கையில் ஒரு அனாதை ஆசிரமமே இருப்பதையும் சொன்னாள். இதையெல்லாம் கேட்டு சங்கர ராமனின் கண்களிலும் தாரை, தாரையாகக் கண்ணீர் வடிந்தது. பத்திரிகைகளில் பல செய்திகள் வாசித்திருந்தாலும், நேருக்கு நேர் இப்படி பாதிகப்பட்டவரைச் சந்தித்தபோது ஏற்பட்ட வலி சொல்லி முடியாது.

சுமனா இரவு உணவு முடித்தவுடன் மகன் மணிவண்ணன் அவளை அவள் தங்கியிருக்கும் அறையில் கொண்டுபோய் விட்டு வந்தான். இதுவரை இப்படி எந்த நண்பரையும் வீடு வரை அழைத்து வந்திராதவன் இன்று ஒரு பெண்ணை அழைத்து வந்ததும், அதுவும் அவளைப் பார்க்கும் அவனுடைய ஒவ்வொரு பார்வையும் ஆயிரம் மின்னலை வெட்டியதிலிருந்து ஏதோ கொஞ்சம் புரிய ஆரம்பித்தது. இசையின் மீது தீராக் காதல் கொண்ட தம் மகன் இசை நாயகியின் காதல் வலையிலும் சிக்கிவிட்டானோ என்ற அதிர்ச்சி இடியெனத் தாக்கியது. தன் அம்மா, மனைவி போல வருகிற மருமகளும் குடும்ப பாரம்பரியம் காப்பவளாக இருக்க வேண்டும் என்று தான் கட்டி வைத்திருந்த கற்பனைக் கோட்டை இடிந்து தரை மட்டம் ஆகிவிட்டதோ என்று தோன்ற ஆரம்பித்தது. மகனை நம்பி, தம் பால்ய சிநேகிதன் சண்முகவேலனின் மகளை இந்தியாவிலிருந்து திருமணம் செய்து கொண்டு வருவதாகத் தீர்மானம் செய்து வைத்திருந்தது வீணாகிவிடுமோ. சண்முகவேலிடம் இதை எப்படி சொல்லப் போகிறோம் என்றும் மனம் வெதும்ப ஆரம்பித்துவிட்டாலும், ஏதோ ஒரு நப்பாசை மகன் இப்படியெல்லாம் முடிவு எடுக்க மாட்டான் என்று.

ஆனால் பயந்தது போலவேதான் நடந்தது. மகன் காலையில் எழுந்தவுடன் போட்ட முதல் குண்டே அதுதான். அவனிடம் விவாதம் செய்வதால் பலன் ஏதும் இருக்காது என்பது அவன் குணத்தை ஆதியோடு அந்தமாக அறிந்த தகப்பனுக்குத் தெரியாதா என்ன…

”அப்பா.. அப்பா.. என்ன ஆச்சு. இப்படி மூச்சு திணறுகிறதே” வெளியுலகத் தொடர்பே சற்றும் இல்லாதது போல ஆன்மாவுடன் ஆலிங்கனம் செய்துகொண்டிருப்பது போலத் தெரிந்தது, இந்த 70 அகவையில் இருக்கும் சங்கர ராமனுக்கு. சென்ற ஓராண்டாகவே நுரையீரலில் ஏற்பட்டுள்ள சில பிரச்சனைகளுக்காக, எளிதாக சுவாசிக்கும் வகையில் அன்றாடம் இரவு நேரங்களில் மட்டும் போட்டுக் கொள்ளும் CPAP மிஷினை எடுத்து, அதன் மாஸ்கை, சுத்தமான டிஷ்யூவினால் துடைத்துவிட்டு அவருடைய மூக்கு மற்றும் வாயிற்குமாக சரியாக உட்காரும்படி மாட்டிவிட்டாள். சுத்தமான ஆக்ஸிஜன் அவருடைய மூச்சுத் திணறலை சற்று நேரத்திலேயே கட்டுப்படுத்தி, இயல்பாக மூச்சு வரும்வரை அவர் அருகிலேயே தலையைக் கோதியவாறு ஆதரவாக நின்று கொண்டிருந்தாள் சுமனா. அவர் எதுவும் பேச விரும்பாதவர் போல கையைத் தூக்கி தான் நன்றாக இருப்பதாக சைகை செய்து விட்டு கண்களை மூடிக் கொண்டார். அவர் பழைய நினைவுகளிலிருந்து மீண்டு வர விரும்பவில்லை என்பதைத் தெளிவாகவேக் காட்டியது அது. மூச்சு விடுவது சீரானவுடன், நினைவுகள் மீண்டும் பின்னோக்கிச் செல்ல ஆரம்பித்துவிட்டது.

‘பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப்
பரிந்து நீ பாவியேனுடாய
ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி…’

ஏனோ இதற்கு மேல் வார்த்தைகளும், மனமும் எழவில்லை. அன்றாடம் ஆயிரம் முறை ஓதுவேனோ இந்த மந்திரத்தை? இன்று மட்டும் அடுத்த அட்சரம் வர மறுப்பதோடு எண்ண அலைகள் எங்கோ பின்னிழுத்துச் செல்கிறதே! கடல் அலையின் ஆர்ப்பரிப்பிற்கும், ஆணவத்திற்கும் ஈடு கொடுக்க சாமான்யனால் ஆகுமோ? அந்த இழுப்பின் ஆதிக்கத்திற்கு அடிபணிந்தாகிவிடுவதைக் காட்டிலும் வேறு உபாயம் இல்லை. கட்டிலை வசதிக்கேற்றவாறு உயர்த்தியோ, தாழ்த்தியோ வைத்துக்கொண்டு, கைக்கு எட்டும் தூரத்தில் மேசையின் மீது புத்தகங்கள், நாளிதழ், தண்ணீர் பிஸ்கட் என தேவையான அனைத்தும் இருந்தாலும், முதுமையின் இரணம் ஒரு புறமும், தோழியாய், காதலியாய், தாயாய் இருந்த அன்பு மனைவியை இழந்து கிட்டத்தட்ட ஒரு மாமாங்கமாக ஈடு செய்ய முடியாத இழப்பில் உறவெல்லாம் உடனிருந்தும் சொல்ல முடியாத தனிமைத் தீயில் வெந்து கிடந்த வேதனை ஒரு புறமுமாக வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது சங்கர ராமனுக்கு. இந்த எழுபது வருட வாழ்க்கையில் எத்தனை விதமான அனுபவங்கள்.

“பிள்ளையின் பசியுணர்ந்து அன்புடன் பால் கொடுக்கும் அன்னையைக் காட்டிலும் என்னிடம் மிகவும் பரிவு கொண்டு என் உடம்பை உருகச் செய்தாய். உள்ளத்தே அறிவை வளர்த்துச் சிவானந்தத் தேனூட்டினாய். உன்னை நான் விரும்பியேற்றேன், என்னை விலக்கிவிடாதே.” என்ற தேடலில் மட்டுமே கடந்த காலங்கள் பரிதியைக் கண்ட பனியாய்க் கரைந்தது.

பள்ளிப் பருவத்தில் பளபளவென உடுத்திக்கொண்டு பட்டாம்பூச்சியாய் சிறகு விரிக்கத்தான் அந்த பதின்மப் பருவம் விழையும். ஆனால் ஒரு சாதாரண இடைநிலைப்பள்ளி ஆசிரியரின் மகனாக கோவைக்கு அருகில் நரசிம்மநாயக்கன்பாளையம் என்னும் ஒரு சிறிய கிராமத்தில் மிக எளிமையான வாழ்க்கையில், மூன்று நேரமும் நல்ல உணவும், சாதாரண உடையும் கூட கேள்விக்குறியாகவே இருந்தது. இதில் இசையின் மீது இருந்த அளவிட முடியாத காதலில் எப்படியும் அந்த தெய்வீக கர்நாடக இசையை கற்றுக்கொண்டே ஆகவேண்டும் என்ற வெறி அல்லும் பகலும் அலைக்கழித்ததை உணர்ந்த அந்த ஏழை ஆசிரியர் தம் மகனின் நியாயமான ஆசையை நிறைவேற்றுவதற்காக, தன்னுடைய முன்னாள் மாணவர் ஒருவரின் உதவியை நாடினார். ஆசிரியரின் மீது இருந்த நல்ல அபிப்ராயத்தில் அவருடைய மகனை கோவையில் ஒரு குருவிடம் கூட்டிச் சென்று விவரம் சொல்லி சேர்த்துவிட்டார். வசதியில்லாவிட்டாலும், இசையைக் கற்க வேண்டும் என்ற ஆர்வம் அவன் கண்களில் மின்னுவதை எளிதாகக் கண்டறிந்துகொண்ட குரு, தட்சணை ஏதும் இல்லாமலே கற்பிக்க சம்மதித்தார். ஆனாலும் பதினைந்து வயது சிறுவனாக, அரை நிஜார் போட்டுக்கொண்டு வெண்மையான பருத்த தொடைகள் தெரிய வகுப்பிற்கு வருவதை அவர் விரும்பவில்லை. ஒத்த வயது பெண் பிள்ளைகள் படிக்கும் இடத்தில் முழு பேண்ட் அணிந்து வரவேண்டும் என்று கட்டளையிட்டது, கர்நாடக இசையைக் கற்க வேண்டும் என்ற தன் ஆசைக்கு உலை வைத்துவிட்டதாக எண்ணி நொந்து போனது நிஜம். காரணம் முழுக்கால் சட்டை வாங்கித் தரும் அளவிற்கு அப்பாவின் நிலை இல்லை என்பது அவன் அறிந்ததுதான். அவரிடம் சொன்னால் மனது சங்கடப்படுவாரே என்று சமாளிக்க முயன்றாலும், இரண்டொரு நாளில் சேர்த்துவிட்ட புண்ணியவான் தன் ஆசிரியரிடம் வந்து சங்கர் ஏன் வரவில்லை என்று கேட்கப்போக தயங்கித் தயங்கி உண்மையைச் சொல்ல வேண்டி வந்தபோது கூனி குறுகி நின்றதை நினைத்தால் இன்றும் உடல் பதறத்தான் செய்தது. அடுத்த நாள் வகுப்பில் சேர்த்துவிட்ட அந்தப் புண்ணியவான் தன்னுடைய சில பத்தாமல் போன கால் சட்டைகளைக் கொடுத்து உதவியது தன் இசைப்பயணத்திற்கு வழி காட்டியது. இசையில் அளவு கடந்த விருப்பம் இருந்தாலும், வாழ்க்கைப் பயணத்தைத் தொடர வயிற்றுப் பிழைப்பிற்காக படிப்பும் வேண்டுமே. பள்ளியிறுதி வரை அப்பாவின் புண்ணியத்தில் அவர் பணிபுரிந்த பள்ளியில் இலவசமாகப் படிக்க முடிந்தது. வாரத்தில் மூன்று நாட்கள் கோவைக்குச் சென்று இசைப்பயிற்சியும் எடுத்துக் கொண்டது இன்றும் பசுமையாக இருந்தது. கையில் காசு இருந்தால் பேருந்து பயணம், இல்லையென்றால் கிட்டத்தட்ட 15 கி.மீ. சைக்கிளில் மிதித்துக் கொண்டு சென்றுவர வேண்டும். அப்பாவைப் பற்றி நினைத்தவுடன் தன்னையறியாமல் கண்களில் தாரைத் தாரையாக வழியும் கண்ணீரைத் தடுக்க விரும்பவும் இல்லை.

தேஜஸ் நிறைந்த முகத்தில் பட்டையாக இட்ட திருநீரும், வெள்ளை வேட்டியும், துவைத்து மடித்த கதர் சட்டையும் பல முறை தைத்து தேய்ந்து போன செருப்பும், என நினைவில் நின்றாலும் அந்த ஊரில் அப்பாவுக்கு இருந்த மரியாதை அவருடைய நடவடிக்கை மற்றும் நல்ல பண்பாட்டினால் மட்டும்தான் என்பது அந்த வயதிலேயே பதிந்துபோன விசயம்தான். முட்டி மோதி, சிறு குழந்தைகளுக்கு டியூசன் சொல்லிக் கொடுத்து, தான் கற்றுக்கொண்ட அனைத்தையும் அந்த வயதிலேயே கடை விரித்து அதில் கிடைத்த சொற்ப வருமானம் என அனைத்தையும் சேர்த்துதான் தானும் தன் செல்லத் தங்கையும் முன்னேறிக் கொண்டிருந்தனர். தன்னைவிட 7, 8 வயது இளையவளான மஞ்சரி தந்தைக்கு அடுத்த இடத்தில் தன்னை வைத்து நேசிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி சங்கர ராமனுக்கு. மிகக் கடினமாக ஓடிய காலத்தின் பிடியில் சிக்கியிருந்தாலும், உண்டி சுருங்குதல் அனைவருக்குமே அழகு என்ற அடிப்படையில் கடைக்குட்டி மஞ்சு தவிர அனைவரும் மிக அளவான உணவே உண்ணும் நிலையிலும், அடுத்த வீட்டிற்குக் கூட தங்கள் வறுமை தெரியாமல், வருகிற விருந்தாளிகள் முகம் மலர்ச்சியுடன் திரும்பும்படி பார்த்துக்கொண்ட அம்மாவை நினைத்தால் இன்றும் பெருமை பிடிபடாது. அம்மாவின் வழி அப்படியே மனைவி வாய்த்ததும் வரம்தான். மெக்கானிகல் டிப்ளமோ படித்து முடித்தவுடன் அப்பாவின் மாணவர் ஒருவரின் புண்ணியத்தில் 500 ரூபாய் சம்பளத்தில் வேலை கிடைத்தது. அந்த நாளில் 500 ரூபாய் சம்பளம் என்பது ஆபீசர் சம்பளம். அப்பாவைவிட அதிகம் சம்பாதித்ததில் என்னைவிட அப்பாவிற்குதான் அத்தனை பெருமை. முதல் சம்பளம் அப்பா கையில் கொண்டுவந்து கொடுத்தபோது, அவர் முகத்தில் தெரிந்த பிரகாசம் இன்றும் கண் முன்னால் தெரிகிறது. சாமி படத்தின் அருகில் வைத்தவர் அதிலிருந்து ஒரு ரூபாய் கூட எடுக்க மறுத்துவிட்டார். அந்த உணர்வுப்பூர்வமான நேரத்தில், கட்டித் தழுவியபடி,

“ இன்னைக்குத்தான் என் மனசு முழுமையா நிறைஞ்சிருக்குப்பா. நீ இன்னும் பல படிகளைக் கடக்க வேண்டும். இதுதான் ஆரம்பம். இன்றைய இளைஞர்கள் நாலு எழுத்து படித்து நல்ல வேலைக்குச் செல்ல ஆரம்பித்தால் பின் நாம் வாழ்ந்த வாழ்க்கை, முன்னோர் சொன்ன சொல், எல்லாம் மறந்து கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என்று வாழ ஆரம்பித்துவிடுகிறார்கள். என் மகன் நீ அப்படி இருக்கமாட்டாய் என்று தெரியும். ஆனாலும், அடிக்கிற அலைகள் சில நேரம் நம் கட்டுப்பாட்டையும் மீறி எங்கோ இழுத்துச் செல்லக்கூடும். அப்போது நிதானித்து நீந்தி மீண்டு வரும் வகையறிய வேண்டும் நீ. ஞானம் விஞ்ஞானம் அஞ்ஞானம் மூன்றுமே வாழ்க்கைக்குத் தேவை. கடவுளைக் கண்டறிய ஞானம் வேண்டும். கடவுளின் இருப்பை உணர விஞ்ஞானம் வழி நடத்தும். மூளையின் வழியே பல கோடி ஒளியாண்டு தூரம் கூட
மனோ வெலாசிடி மூலம் மெய் விதிர்த்தல் அதாவது பக்தி என்பதன் மூலம் மாற்று வழியை தெரிவு செய்துகொண்டு கடந்து போய்விடாலாம் . இந்த மூன்றையும் தனித்தனியே மதில்களிட்டு பிரிப்பது எளிதல்ல. நாமனைவரும் இந்த மூன்று இதயங்களுடன்தான் துடித்துக்கொண்டிருக்கிறோம். இதற்கான நங்கூரம் மூளையில்தான் இருக்கிறது. நங்கூரத்தில் இதயங்களை வைப்பதுதான் பக்தி. இந்த பக்தி நம்மை நல்வழிப்படுத்தும் ஒரு கருவி என்பதைக்காட்டிலும் நாம் நம்பிக்கையுடன் இன்ப துன்பங்களை எதிர்கொண்டு வாழத் தோணியாய் இருப்பது என்பதுதான் சத்தியம். இதை மட்டும் என்றும் மறவாதே”

அவர் பேசும் போது அவருடைய அணைப்பிற்குள் இருந்த சங்கரனின் உடலில் ஏதோ மின்சாரம் பாய்ந்ததுபோல ஒரு உதறல் ஏற்பட்டதை இன்றும் உணர முடிந்தது. அதன் பிறகுதான் நாட்கள் எப்படி அசுர வேகத்தில் ஓடிப்போனது. மெல்ல மெல்ல அன்புப் பெற்றோரை விட்டு விலகும் சூழல் தவிர்க்க முடியாமல் போய்விட்டது. தம் வருமானம் சேரும் போது தந்தையின் பாரம் குறையும் என்ற ஆர்வமும் பயனற்றுப்போனது. எவ்வளவோ வாதாடியும் அந்தப் பணத்தை அப்படியே சேர்த்து வைக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தியதோடு அடுத்து 6 மாதங்களில் சங்கர் ராமனுக்கு பூனாவிற்கு வேலை மாற்றல் ஆனபோது திருமணம் செய்துகொண்டுதான் செல்ல வேண்டும் என்று, தம் சகோதரியின் மகள் பார்வதியை மணமுடித்து வைத்தார், கிராமத்தில் கட்டுப்பாடாக வாழ்ந்த ஒரு குடும்பத்தில் பிறந்து வளர்ந்த அவள் எல்லா விதத்திலும் தம்முடன் ஒத்துப்போகக் கூடியவளாக இருப்பாள் என்ற நம்பிக்கை வீண் போகவில்லை. தங்கைக்கு வேண்டிய சீர், செனத்திகளை, தன் பங்கிற்குச் செய்ய வேண்டிய கடமையைக்கூட மிகவும் கட்டாயப்படுத்தியே செய்ய முடிந்தது.

அடுத்த இரண்டு ஆண்டுகளில் அமெரிக்கப் பயணம். மகன் மணிவண்ணன் பிறந்த 30 நாட்களில் செல்ல வேண்டிய தேவை ஏற்பட்டபோது, மருமகளை ஒட்டுக் குழந்தையுடன் அனுப்ப மனமில்லாமல் ஓராண்டு தங்களுடனே வைத்திருந்தார்கள். அடுத்த முறை விடுமுறைக்கு வந்த நேரம். செல்ல மகன் பிறந்த 10 நாட்களில் அன்பு மனைவியைப் பிரிந்து சென்றது வேதனை என்றாலும் பெற்றோருடன் பாதுகாப்பாக இருப்பதில் மனம் எளிதாக சமாதானம் ஆனதும் உண்மை. அம்மா, அப்பா, அன்புத் தங்கை என எல்லோருடன் சேர்ந்து பகல் பொழுது கழிந்து இரவு தனிமையில் ஓராண்டிற்குப் பிறகு சந்தித்த தங்க விக்கிரகம் போன்ற அன்பு மனைவி, தாய்மை கொடுத்த அதிக வனப்புடன் பளபளவென மின்னும் மேனியுடன் அருகில் வந்தவளை அள்ளி அணைக்கத் துடித்த மனம், அவள் கண்களில் தெரிந்த அமைதியால் சற்றே அடக்கி வாசிக்க எண்ணி, தண்ணீரை எடுத்து நிதானமாகக் குடித்தவன்,

“எப்படிம்மா இருக்கே.. உங்களையெல்லாம் பிரிந்து தனியா வாழறது எவ்வளவு கொடுமைன்னு அனுபவப்பட்டால்தான் தெரியும்… ஆனால் உன் முகத்தைப் பார்த்தால் அந்த பிரிவுத் துயரே துளியும் இல்லையே , உனக்கு மட்டும் இது எப்படி முடியுது”

மெல்லிய புன்னகையைத் தவழவிட்ட அவள் முகத்தில் இருந்த அமைதி சங்கரனுக்கு ஒருவித நிம்மதியைக் கொடுத்தது.

“அத்தான், வாழ்க்கையில எத்தனைதான் சுகம் இருந்தாலும், கட்டிய புருசன் பக்கத்துல இல்லைன்னா அதுல என்ன சந்தோசம் இருக்கும் சொல்லுங்க…… பகலெல்லாம் வேலை என பொழுது கரைந்து போனாலும், இரவானால் நீங்க என்ன சாப்பிட்டீங்களோ, எப்படி தனியா இருந்து கஷ்டப்படுறீங்களோன்னு நினைக்காத நாள் இல்லை தெரியுமா அத்தான்”

மார்பில் முகம் புதைத்து மனதோடு உறவாடும் அன்பு மனைவியை இறுக அணைத்தவன் அடுத்த சில மணித்துளிகள்….. நாம் அங்கிருந்தால் அது இங்கிதமாக இருக்காது… முத்து முத்தாய் நெற்றியை அலங்கரித்த வியர்வைத் துளிகளை தன் பனியனை எடுத்து மெல்ல ஒற்றி எடுத்து, அவளை இழுத்து மார்பின் மீது படுக்க வைத்துக்கொண்டவன்,

“சரிடா, இப்ப சொல்லு. என்ன செய்யலாம்னு முடிவு பண்ணியிருகே.. என் கூட அமெரிக்கா வறப்போற இல்லையா”

“ம்ம்… நான் என்ன முடிவு பண்ணப் போறேன். எனக்கும் தனியா இருக்க முடியலைதான் அத்தான். ஆனால்….”

“என்னடா.. அப்பறம் என்ன பிரச்சனை.. ஏன் இந்த யோசனை?”

“இல்லைங்க , அத்தை, மாமாவை தனியா விட்டுப்போட்டு உங்க கூட வர சங்கடமா இருக்கு..”

“ ஏய்… என்ன இப்படி சொல்ற. அப்பாவே உன்னை கூட்டிட்டுப் போகத்தான் சொன்னாரு. நீ வேண்டாம்னு சொன்னாலும் அவுரு ஒத்துக்க மாட்டாரு. எனக்கும் தனியா இருக்க ரொம்ப சிரமமா இருக்கும்மா. ஒரு தலைவலின்னா கூட காபி போட்டுத்தரவும் ஆளில்லாம ரொம்ப சிரமமா இருக்கும்மா.. தனிமை ரொம்ப கொடுமை!”

“ஆகா, இந்த 2 வருஷம் முன்னால ஐயா என்ன பண்ணினாராம்.. இப்ப மட்டும் தனிமையோ…”

“ஏய்.. குறும்புக்காரி.. ஒன்னும் தெரியாத பாப்பாவாட்டம் இருந்துகிட்டு, என்ன கிண்டலா.. கள்ளி.. ”

ஆ… என செல்லச் சிணுங்கல் வெளியில் கேட்டுவிடப் போகிறது என்று வேகமாக வாயைப் பொத்தியவனின் விரலை நறுக்கென்று கடித்துவைக்க அவன் உடனே அலறப் போக அவள் கணவனின் வாயைப் பொத்த.. இப்படியே இரவு கழிந்தது. இந்தக் கூத்து நடக்கும் என்பது தெரிந்துதானே குழந்தையை தாத்தா, பாட்டி தங்களிடமே வைத்துக் கொண்டார்கள்.

அமெரிக்காவிலிருந்து மூன்று ஆண்டுகளில் திரும்பிவிடலாம் என்று நினைத்துதான் வந்தாலும், கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் ஒடிவிட்டது இப்போது. அப்பா, அம்மா ஒரு சில முறைகள் வந்து சென்றார்கள். தவறாமல் ஆண்டிற்கு ஒருமுறை நேரில் சென்று பார்த்துவர முடிந்தது. அமெரிக்க டாலர் வருமானம் இந்தியாவில் தம் பெற்றோரையும், சகோதரியையும் வளமாக வாழ வைத்தது. ஒன்றை இழந்தால்தான் ஒன்றைப் பெற முடியும் என்ற தெளிவுடன் வாழ்க்கை வேகமாக ஓடிவிட்டது. பெற்றோரை ஒருவர் பின் ஒருவராக இழந்த வேதனை சகோதரியை மிக அதிகமாகப் பாதித்தது. கணவன் வீட்டில் சகல வசதிகளுடன் இருந்தாலும் தாய் வீடு ஒன்று அவ்வப்போது மன பாரத்தை இறக்கி வைக்கும் சுமைதாங்கிக் கல்லாக இல்லாவிட்டால் மனதின் ஒரு மூலையில் தாம் அனாதையாகிவிட்ட வருத்தம் இல்லாமல் இருக்காது. ஆசைக்கு ஒரு மகளும், ஆஸ்திக்கு ஒரு மகனும் என பெற்றோரைப் போலவே தனக்கும் அமைந்ததில் பெரும் மகிழ்ச்சிதான். மனைவி பார்வதி புண்ணியத்தில் குடும்பம், குழந்தைகள் பற்றிய எந்த கவலையும் இல்லாமல் தெளிந்த நீரோடையாகத்தான் வாழ்க்கை ஓடிக்கொண்டிருந்தது. கிராமத்தில் வளர்ந்த பெண் என்று சத்தியம் செய்தால்கூட நம்ப முடியாத அளவிற்கு, வாழ வந்த இடத்திற்குத் தகுந்தவாறு தன்னை எளிதாக மாற்றிக் கொண்டது ஆச்சரியமாக இருந்தது சங்கர ராமனுக்கு. குழந்தைகளுக்காகவும், வீட்டிற்குத் தேவையான பொருட்கள் வாங்குவதற்கும் கணவனை தொந்திரவு செய்யாமல் இருப்பதற்காகவும் கார் ஓட்டப் பழக ஆரம்பித்தவள் மெல்ல மெல்ல கணவனின் சுமைகளை பெருமளவில் குறைத்துவிட்டிருந்தாள். மூத்தவன் மணிவண்ணன் பிறந்து 5 வருடங்கள் கழித்துப் பிறந்தவள் நிம்மி என்கிற நிர்மலா. மணிக்கு இருபது வயதும், நிம்மிக்கு பதினைந்து வயதும் இருக்கும்போது, ஒரு மோசமான நாளில் நடந்தது இன்றும் நினைத்தாலும் உடல் பதறத்தான் செய்கிறது. வழக்கமாக காலை ஆறு மணிக்கெல்லாம் எழுந்துவிடுபவள் அன்று ஏழு மணி ஆகியும் பார்வதி படுக்கையைவிட்டு எழுந்திருக்கவில்லையே என்று அருகில் சென்று தொட்டுப் பார்த்தபோதுதான் தெரிந்தது, காய்ச்சல் நெருப்பாகக் காய்ந்தது.

“பாரு.. என்னம்மா உடம்பு சரியில்லையா.. அடடே, உடம்பு அனலாய் காய்ச்சுதே. சரி நீ படுத்துக்கோ. நான் காபி எடுத்துட்டு வறேன். குடிச்சுட்டு மாத்திரை போட்டால் சரியாயிடும். நான் வேணா இன்னைக்கு ஆபீஸிற்கு லீவ் போடவா.. “

“அதெல்லாம் ஒன்னும் வேண்டாங்க, மாத்திரை போட்டு கொஞ்சம் ரெஸ்ட் எடுத்தா சரியாயிடும்”

சொன்னவள் தானே எதிர்பார்க்கவில்லை எழுந்திருக்க முடியாத அளவிற்கு உடம்பு இப்படி வேதனைப்படுத்தும் என்று.. பிறகு பெரும்பாலும் மருத்துவமனை, சோதனைகள், மாற்று மருந்துகள் என்று கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் அலைந்தும், புற்று நோய் முற்றிய நிலை, ஒரேயடியாக அள்ளிச்சென்று விட்டது. பதின்மப்பருவ மகளையும், வளர்ந்து நிற்கும் மகனையும் வைத்துக்கொண்டு துடுப்பிழந்த படகு நட்டாற்றில் தத்தளித்து நிற்பது போல செய்வதறியாது திகைத்து நின்ற அந்தத் தருணத்தைக் கடந்த போதுதான் தான் வாழ்ந்த வாழ்க்கையின் அர்த்தம் புரிந்தது. தனக்கான நல்லியதங்களைக் கண்டுணர முடிந்தது. பள்ளி நண்பன் சண்முகவேல் இடையில் பல காலம் தொடர்பில் இல்லாமல் இருந்தவன் தன் சகோதரி மூலமாக சங்கரனின் நிலையை அறிந்தவன் மீண்டும் தபால் மற்றும் தொலைபேசி வழியாக நட்பு மலர ஆரம்பித்தது. தனக்கு ஆறுதல் சொல்லி அவன் எழுதிய அந்த முதல் கடிதத்தை நூறு முறையேனும் படித்திருப்பான். ஒவ்வொரு வார்த்தைகளும் ஆறுதல் எனும் களிம்பு பூசப்பட்ட நிதர்சனங்கள்.

மனபாரம் பெருமளவில் குறைந்திருந்தாலும், வீட்டிற்கு வரப்போகும் மருமகள் நல்லபடியாக அமைந்துவிட்டால் மகளின் எதிர்காலமும் நன்றாக இருக்குமே என்பதைவிட, தன்னுடைய இறுதிக் காலத்தை இந்தியாவில் தம் சொந்தக் கிராமத்தில் சென்று கழிக்க வேண்டும் என்ற ஆசை நிறைவேறவும் இது மட்டுமே சரியான உபாயமாக இருக்கும் என்றும் கணக்கு போட்டது. சண்முகவேலின் மகளையே மகனுக்கு மணமுடித்துவிட்டால் இந்த அமெரிக்க நாகரீகம் தாக்காத ஒரு பெண் மட்டுமே தன் வீட்டிற்கு வரவேண்டும் என்ற ஆவல் நிறைவேறும் என்று தீவிரமாகத் திட்டம் போட்டுக் கொண்டிருந்த வேளையில்தான் கொஞ்சமும் எதிர்பார்க்காத நேரத்தில் மகன் இப்படி ஒரு பெண்ணை கூட்டிவந்து நிற்கிறானே என்று அதிர்ச்சியாக இருந்தது. எதுவும் பேசாமல் வழக்கம்போல அந்த அதிர்ச்சியையும் மென்று முழுங்கிவிட்டார்.

நாட்கள் செல்லச் செல்ல பல மாற்றங்கள். மிக எளிமையாக நடந்த மகனின் திருமணத்திற்கு சண்முகவேலை அழைக்க வேண்டும் என்ற எண்ணம்கூட வரவில்லை சங்கர ராமனுக்கு. ஆனால் திருமணத்திற்கு முதல் நாள் தான் சற்றும் எதிர்பாராமல் சண்முகவேல் மட்டுமல்லாது தம் தங்கை மற்றும் அவர் கணவரும் வந்து நின்றபோது தன் கண்களையே நம்ப முடியாதவராக வாயடைத்து நின்றார். மருமகளாக வரப் போகிறவள் செய்த முதல் நல்ல காரியமாக, மணியிடம் சொல்லி அப்பாவின் உயிர் சிநேகிதரையும், சகோதரி மற்றும் அவர் கணவருக்கும் டிக்கெட் எடுத்து அனுப்பி வரவழைத்திருந்தது நம்ப முடியாத ஆச்சரியமாக இருந்தது.

ஆனாலும் ஒரு மாதத்தில் வந்தவர்கள் ஊர் திரும்பியவுடன் அன்றாட வாழ்க்கை எப்படிப் போகுமோ என்ற அச்சம் இல்லாமல் இல்லை. ஆனால் தான் அச்சப்பட்டதற்கு நேர்மாறாக சலனமற்ற நீரோடையாகவே போய்க்கொண்டிருந்தது. நிம்மி கூட சுமனாவுடன் மிக நெருங்கிவிட்ட போதும் தன்னால் மட்டும் ஏனோ அவளுடன் ஒட்டவே முடியவில்லை. இடது கை மணிக்கட்டு வரை வெட்டுப்பட்ட நிலையில் செயற்கை கை பொருத்தியிருந்தபோதும் எந்த வேலையிலும் குறை வைக்காமல் நேர்த்தியாக அவள் செய்த விதம் அவளுடைய பொறுப்புணர்ச்சியைக் காட்டியது. இவையனைத்திற்கும் மேலாக தன்னுடைய இசைப் பணியையும் தொய்வில்லாமல் தொடர்ந்துகொண்டு ஆசிரமத்திற்கும் பணம் அனுப்பிக் கொண்டிருந்தாள். சுமனாவின் அம்மா திருமணத்திற்கு வந்து போனதோடு சரி. அதன் பிறகு சுமனாவும், மணியும் போய் வருடம் ஒரு முறை பார்த்துவிட்டு வந்துகொண்டிருந்தார்கள். மணியும், சங்கர் ராமனும் எவ்வளவோ சொல்லியும் அவர் மகள் வீட்டில் தங்க மறுத்துவிட்டார்.

மனைவி இறந்தவுடன் இழந்த பல விசயங்களில் பண்டிகைக் கொண்டாட்டம் மற்றும் குடும்ப விழாக்கள் போன்றவையும் அடக்கம். குறிப்பாக பெற்றோருக்கும், மனைவிக்கும் செய்யும் சிரார்த்தம் என்கிற திதி கொடுக்கும் சடங்கைக் கூட சரிவர செய்ய முடியவில்லையே என்ற பெருங்குறை இருக்கத்தான் செய்தது. அடுத்த நாள் அன்பு மனைவியின் நினைவு நாள் என்பது நினைவிற்கு வந்தும், மருமகளிடம் சொல்வதற்கோ அல்லது மகனிடம் சொல்லி அதற்கான ஏற்பாடு செய்யச் சொல்வதற்கோ ஏனோ மனம் இடம் கொடுக்கவில்லை. இரவு முழுவதும் மனைவியின் நினைவுடனேயே உறக்கம் இல்லாமல் புரண்டு கொண்டிருந்த சங்கர ராமன் காலை 7 மணி ஆகியும் அசந்து உறங்கிக் கொண்டிருந்தார். வீட்டில் பரபரப்பாக ஏதோ நடந்து கொண்டிருப்பது தெரிந்து, மெல்ல எழுந்து கொள்ளலாமா என்று யோசித்தபோது, மகள் நிம்மி, வந்து ,

“அப்பா, என்னப்பா இன்னும் எழுந்திருக்கவில்லையா. நேரமாகிவிட்டதே. நாங்களெல்லாம் கிளம்ப வேண்டுமே. ”

எல்லோரும் காலை உணவு ஒன்றாக சாப்பிடுவது வழக்கம் என்பதால் மகள் அதற்குத்தான் அழைக்கிறாள் என்று நினைத்து அவசரமாகக் குளித்து தானும் அலுவலகம் செல்லத் தயாராகி வந்தபோது, பூஜையறையில் ஊதுவத்தி மணத்துடன், இலை போட்டு சாப்பாடு, பலகாரங்கள் என்று பரிமாறப்பட்டு, நைவேத்தியத்திற்குத் தயாராக இருந்தது. பார்வதி இருந்தபோது, தம் பெற்றோரின் திதிக்குப் படையல் போடும் அதே நினைவு வர, கண்கள் கலங்கி பார்வை மங்கியது. மணியைப் பார்த்தபோது, அப்பா கேட்க நினைப்பதைப் புரிந்துகொண்ட மகன்,

“ஆமாப்பா, சுமனா இந்தியாவில் அத்தைக்குப் போன் செய்து செய்ய வேண்டிய முறைகளை ஒவ்வொன்றாகக் கேட்டுத் தெரிந்துகொண்டு பூஜைக்கு ஏற்பாடு செய்திருக்கிறாள். எனக்கே ஆச்சரியமாகத்தான் இருந்தது….” என்றான்.

அதற்கு மேல் பேசவோ, உள்ளத்தில் குறைபட்டுக்கொள்ளவோ எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. மனைவியின் ஆத்ம ராகம் அங்கு இனிமையாக ஒலிப்பதை உணர முடிந்தது.

நினைவலைகளிலிருந்து மெல்ல மீண்டு வந்த சங்கர ராமன் இரண்டாவது பேத்தி பாவைக்குட்டி பள்ளிவிட்டு வந்து, ‘தாத்தா, தாத்தா.. எழுந்து வா, நாம விளையாடலாம்” என்று மழலை மாறாத குரலில் அழைத்தபோது எழுந்து கொண்டிருந்த நேரத்தில் தொலைபேசி சிணுங்க ஆரம்பிக்க, பாவைக்குட்டி சிட்டாகப் பறந்து அதை எடுத்து வந்து ‘இந்தா தாத்தா நீ பேசு” என்று கொடுத்தாள். அந்த நேரத்தில் அது சண்முகவேலின் அழைப்பாகத்தான் இருக்கும் என்று ஆர்வம் பொங்க சற்றும் யோசிக்காமல், “என்னப்பா சண்முகா, நானே இன்னைக்கு உன்கிட்ட பேசனுன்ணு நினச்சேன். நீ வச்சுடு ஒரு பத்து நிமிசத்துல நானே கூப்பிடுறேன்” என்று சொல்லிவிட்டு பாவைக்குட்டிக்கு விளையாடுவதற்கு ஏற்பாடு செய்துவிட்டு ரெஸ்ட் ரூம் சென்றுவிட்டு வந்து போனை எடுத்து பேச ஆரம்பித்தார். வழமையான விசாரிப்புகளுக்குப் பிறகு,

“என்னப்பா சங்கரா, நீ ஏதோ பேச நினைச்சிருந்ததாச் சொன்னியே, அது என்னது. நான் பாட்டுக்கு ஏதேதோ பேசிட்டிருக்கேன்.. “

“இல்லப்பா, நீயும் பாயிண்ட்டுக்கு வந்திருக்கே… நீயே பேசு. நீதான் முதல்ல பேசோணும்”

“அப்படியா, சரி, என் கடைக்குட்டி மோகனுக்கு கல்யாணம் பண்ணலாம்னு முடிவு பண்ணியிருக்கேன். ஒரு நல்ல பொண்ணா பார்க்கணும். உனக்குத் தெரிந்த ஏதும் பெண் நம்ம குரூப்புல இருந்தா சொல்லுப்பா..”

“ஏண்டாப்பா.. இது நியாயமா உனக்கு. பொண்ணைப் பெத்து, கல்யாணத்திற்கு தயாரா நிற்கிற அவளோட அப்பாகிட்ட கேக்குற கேள்வியாப்பா இது. ஏதோ உன் பெண்ணைத்தான் கட்ட வாய்ப்பில்லாமல் போச்சு. என் பெண்ணாவது உன் வீட்டில் வாழலாமே”

“என்னப்பா உனக்கொரு நியாயம், எனக்கொரு நியாயமா? நான் மட்டும் அமெரிக்கப் பெண்ணைக் கட்டணுமா? சொல்லு…”

“டேய்.. என்ன கிண்டலா. என்னோட மனவோட்டத்தை பல முறை உனக்குத் தெரியப்படுத்தியிருக்கேன். இப்ப என்ன புதுசா ஆரம்பிக்கற.. இந்த எட்டு ஆண்டுகளில் சுமனா எங்களுக்கெல்லாம் தாய்க்குத் தாயாகவும், மகளுக்கு மகளாகவும் இருந்து இந்தக் குடும்பத்தின் அத்துனை காரியங்களையும் எத்துனை அழகாக நிறைவேற்றிக் கொண்டிருக்கிறாள். பண்பாடும், கலாச்சாரமும் காப்பது வாழுகிற இடத்தைப் பொருத்தது அல்ல, வாழ்கிறவர்களின் மனதைப் பொருத்தது என்று நான் அனுபவத்தில் கண்டு உணர்ந்தாச்சுப்பா.. நான் என் பொண்ணை கொடுப்பதற்காகச் சொல்றேன்னு எடுத்துக்காத. நான் இதைப்புரிஞ்சிக்க எடுத்துக்கிட்ட அவகாசம் உனக்குத் தேவையில்லை. அதைத்தான் சொல்ல வந்தேன். அப்புறம் உன் விருப்பம்”

“அடடே.. என்னப்பா நீ.. நான் நல்ல நாள், நேரம் பார்த்து உன்கிட்ட பேச வந்த விசயமே உன் பெண்ணைக் கேட்பதற்காகத்தான்.. சும்மா நீ என்ன சொல்லப்போறேன்னு பார்த்தேன்..”

“டேய் உன் குறும்பு இன்னும் குறையலியா.. அப்படியே இருக்கியேடா இன்னும்…”

“ஹ.. ஹா.. பிறவிக் குணமப்பா அது. பொங்கலிட்டாலும் போகாதுல்ல.. என்ன சொல்ற?”

Series Navigation
author

பவள சங்கரி

Similar Posts

4 Comments

  1. Avatar
    Dr.G.Johnson says:

    பவள சங்கரியின் ” ஆத்ம ராகம் ” ஒரு சிறுகதை எனினும் இது சற்று நீளமாகவே உள்ளது. துவக்கத்‌தில் கதாபாத்திரங்களை யார் யார் என்று புரிந்து கொள்வதில் சிரமம் உள்ளது. இவற்றை மேற்கொண்டு தொடர்ந்து படித்தபோது இது ஓர் அருமையான குடும்ப கதை என்பது பிரதிபலித்தது. கதையின் பின்னணியில் நல்ல தத்துவமும் அடங்கியுள்ளது. ஒருவரின் கலாச்சாரமும் பழக்க வழக்கமும் அவர் வாழும் நாட்டை விட அவரையே அதிகம் சார்ந்துள்ளது என்ற கருத்து புலம் பெயர்ந்து வாழும் இந்தியர்களுக்கு ஏற்புடையதாகும். கதை இறுதியில் முதியவர்களான சங்கர ராமனும் சண்முகவேலும் சம்மந்தம் பேசிக்கொள்வதோடு கதையை சுபமாக முடித்துள்ள பாணியும் மனத்தில் நிற்கிறது. பாராட்டுகள் பவள சங்கரி. அன்புடன் டாக்டர் ஜி. ஜான்சன்.

  2. Avatar
    பவள சங்கரி says:

    அன்பின் மரு. திரு ஜான்சன்,

    தங்களுடைய கருத்திற்கு மிக்க நன்றி. அவசியம் கவனம் கொள்வேன்.

    அன்புடன்
    பவளா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *