ஜோதிர்லதா கிரிஜா
1984 ஆம் ஆண்டில் டிசம்பர் மாதத்தின் 3 ஆம் நாள் இந்தியாவுக்கு மிக மோசமான நாளாகும். அந்நாளில்தான் போபால் நகரத்தில் இருந்த யூனியன் கார்பைட் தொழிற்சாலையில் MIC Gas எனப்படும் நச்சு வாயு கசிந்ததன் விளைவாக நூற்றுக்கணக்கானோர் இறந்தனர். ஆயிரக்கணக்கானோர் பல்வேறு உபாதைகளுக்கும் உடற்குறைபாடுகளுக்கும் ஆளாகி மருத்துவ விடுதிகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர் என்பது பலருக்கும் தெரியும். ஆனால் 4-8-1985 தேதியிட்ட ஆங்கில நாளிதழ் த ஹிந்து வில் வெளியான ஒரு கட்டுரையில் கண்டிருந்தபடி, போபாலின் அந்தத் தொழிற்சாலைக்கு மிக அருகே இருந்த போதிலும் இந்த விஷவாயுக் கசிவால் எந்தப் பாதிப்புக்கும் ஆளாகாமல் முற்றாகத் தப்பிப் பிழைத்த இரண்டு குடும்பங்கள் இருந்தன. ஒரு மைல் தொலைவில்தான் அக்குடும்பங்கள் வசித்ததாய்ச் சொல்லப்படுகிறது. அதற்கு அப்பால் பல் மைல் தொலைவில் இருந்த குடும்பங்களின் மனிதர்கள் பெரும் பாதிப்புக்கு ஆளான நிலையில், இவ்விரு குடும்பத்தார் மட்டும் எந்தச் சேதமும் இல்லாமல் தப்பிப் பிழைத்தது எப்படி என்பதைத் தான் அந்தக் கட்டுரையை எழுதியவர்கள் தெரிவித்திருந்தனர். (அந்த நறுக்கை நான் பத்திரப்படுத்தி வைத்திருந்த போதிலும், இரண்டு தடவைகள் இடமாற்றம் செய்ய நேர்ந்ததில் அது இடந்தவறி எங்கோ மாட்டிக்கொண்டு என் கண்ணில் படமாட்டேன் என்கிறது. எனவே, வலைத் தளத்தில் தேடியதில் கிடைத்த தகவலை வைத்து இக்கட்டுரை எழுதப்படுகிறது. இல்லாவிடில் அக்கட்டுரையின் சாரத்தை அப்படியே இங்கே கொடுக்க முடிந்திருக்கும்.)
அவ்வாறு எந்த விளைவுக்கும் ஆளாகாமல் தப்பிய அவ்விரு குடும்பங்களின் தலைவர்கள் முறையே திரு. சோஹன்லால் குஷ்வாலாவும் திரு எம்.எல். ரத்தோர் என்பவரும் ஆவர். இந்த இரண்டு குடும்பங்களும் இடைவிடாது அகினிஹோத்திரம் எனப்படும் ஹோமச் சடங்கைச் செய்து வந்தவர்களாம். இந்த இருவரும் எழுதிய கட்டுரைகளே த ஹிந்து நாளிதழில் வந்திருக்கவேண்டும் என்று நினைக்கிறேன்.
போபால் காஸ் ட்ராஜெடி என்று கூறப்[படும் இப்பெரு விபத்தின் விளைவாக அப்போது பாதிக்கப்பட்டவர்களின் சந்ததியினர் இன்னும் பல்வேறு உடல்நலக் குறைபாடுகளுடன் பிறந்துள்ளதாய்த் தெரிய வந்துள்ளது. அக்னி ஹோத்திரம் என்று கூறப்படும் ஓர் எளிய ஹோமச் சடங்கைத் தொடர்ந்து செய்துவந்துள்ள இரு குடும்பங்கள் மட்டுமே – அவை அந்தத் தொழிற்சாலைக்கு மிக அருகில் இருந்த போதிலும் – எந்த வகைச் சேதமும் இன்றித் தப்பியது எதனால் என்பது விஞ்ஞான அடிப்படையிலான ஆராய்ச்சியின் வாயிலாகக் கண்டறியப்பட வேண்டிய ஒன்றாகும். அறிவுஜீவிகள் இது தற்செயலாக நிகழ்ந்த ஒன்றாக இருக்கக் கூடும், அக்னிஹோத்திர ஹோமச் சடங்குக்கும் அதற்கும் தொடர்பு இருக்காது, இது அவர்களின் கற்பனை அல்லது பிரமை என்று கூறி நையாண்டி செய்யக்கூடும்தான். அதைப் பற்றி முழுமையாக ஆராய்ந்ததன் பின்னர் அவர்கள் ஆதாரத்துடன் கேலி செய்யட்டும் என்பதே நமது நிலைப்பாடு.
ஐயாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாகப் புழக்கத்தில் இருந்து வரும் இந்திய மருத்துவ முறையான ஆயுர்வேதம் பற்றிய ஆராய்ச்சியை அன்றைய சோவியத் ஒன்றியத்தைச் சேர்ந்த யுக்ரெய்ன் மாநிலம் மேற்கொண்டதாய்த் தெரிகிறது. 1986 இல் ரஷ்யாவில் நிகழ்ந்த இது போன்ற பெருவிபத்திற்கு பிறகு இது மேற்கொள்ளப்பட்டதாய்த் தெரிகிறது. எந்த அடிப்படையில் இவ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது என்பது புரியவில்லை. Sulekha.com – Agnihotra Homam saved a family from Bhopal Gas Tragedyஇல் காணப்படும் கட்டுரையை முழுவதுமாய்ப் புரிந்து கொள்ளுகிற அளவுக்குஎனக்கு விஞ்ஞான அறிவு இல்லை. ஆர்வமுள்ளவர்கள் இதனைப் படித்து அறியலாம்.
மிக மோசமான உடல் கோளாறுகளை மேநாட்டு மருத்துவம் வியக்கத்தக்க முறையில் சரிசெய்கிறது என்பது உண்மையே. ஆனால் இந்திய ஆயுர் வேதமோ அப்படி மோசமான ஆரோக்கியக் குறைவு மனிதர்க்கு ஏற்படாவண்ணம் அவர்களைக் காப்பாற்றுகிறது என்று சொல்லப்படுகிறது. இந்திய உணவு முறைகள் ஆயுவேத அடிப்படையில் அமைந்தவேயாம். உணவு சார்ந்த துறையில் சீனாவுக்கும் இந்தப் பெருமை உண்டு என்கிறார்கள்.
நரம்பியல் நிபுணர் காலஞ்சென்ற பி. ராமமூர்த்தி அவர்கள் தாம் எழுதிய கட்டுரை ஒன்றில் பின்வரும் கருத்தைத் தெரிவித்திருந்தார்.
’அந்தக் காலத்தில் நான் மருத்துவக் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த போதும், அதன் பின் மருத்துவத் தொழிலை மேற்கொண்ட பிறகும் இந்திய மருத்துவ முறைகளைக் கேலி செய்து வந்திருக்கிறேன். அந்நாளைய வெள்ளைக்காரப் பேராசிரியர்களின் பேச்சைக் கேட்டு நாங்கள் இந்திய மருத்துவ முறைகளை இழிவாக எண்ணியதால் எவ்வளவு இழந்திருக்கிறோம் என்பதை இப்போது எண்ணிப் பார்த்து வெட்கப்படுகிறேன்…’ எனும் ரீதியில் அவரது கருத்து வெளிப்பாடு அமைந்திருந்தது. (என் சொற்களில் மாற்றம் இருக்கலாம். ஆனால் அவர் வெளியிட்ட கருத்து இதுதான்.)
இன்னொரு விஷயமும் ஞாபகம் வருகிறது. பிராமணர்களிலும், செட்டியார், விசுவ பிராமணர் என்று அழைக்கப்படும் பொற்கொல்லர் இனத்தினரிலும் பூணூல் போடும் வழக்கம் உள்ளது. அந்தச் சடங்கின் போது சிறுவர்களுக்குப் பஞ்ச கவ்யம் எனும் ஒரு தயாரிப்பை உண்ணக் கொடுப்பார்கள். பசுமாட்டின் சாணம், தயிர், பால், நெய், கோமியம் (சிறுநீர்) ஆகியவை கலந்து தயாரிக்கப்படும் பொருளாகும் இது. (ஒரு வலைத்தளத்தில் இது பற்றிய கட்டுரை உள்ளது. ஆனால் பிறிதொரு வலைத் தளத்தில், பசுவின் பால், தயிர், வெல்லம், தேன், கோமியம் ஆகியவற்றின் சேர்மானம் பஞ்சகவ்யம் என்று கூறப்பட்டுள்ளாது. ஆர்வமுள்ளவர்கள் இது சார்ந்த விஷயஞானம் உள்ளவர்களைக் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்,)
ஆனால், அந்தப் பசுமாடு சுவரொட்டிகளைத் தின்னும் சென்னைப் பசுமாடுகளாக இருக்கக் கூடாது, வைக்கோல், பசும்புல், பருத்திக்கொட்டை, புண்ணாக்குப் போன்ற சரியான தீவனங்களை உண்ணும் பசுமாடாக இருக்கவேண்டும்!
பஞ்சகவ்யம் பற்றிய ஆராய்ச்சியும் சோவியத் ஒன்றிய விஞ்ஞானிகளால் சில ஆண்டுகளுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்டது. இது பற்றிய செய்தி நாளிதழ்களில் வந்தது. அணுக் கதிரியக்கத்தால் ஏற்படும் பாதிப்புகளைக் களைய இது பயன்படுகிறது என்பதை அவர்கள் கண்டறிந்துள்ளனர். இது பற்றிய கட்டுரையும் நாளிதழ்களில் வ;ந்துள்ளது. மேலும் இது பற்றிய ஆராய்ச்சியை அவர்கள் மேற்கொண்டு வருவதாய்க் கட்டுரையாளர் தெரிவித்திருந்தார்.
இந்திய மூதாதையரின் சிறப்புகள் மேல்நாடுகளில் இவ்வாறு கொடிகட்டிப் பறந்துகொண்டிருக்க, ஆங்கிலம் படித்துவிட்டு அதன் தாக்கத்தால் அவர்களை இழிவாகப் பேசியும் எழுதியும் சிலர் வருவதை எண்ணினால் சிரிப்புத்தான் வருகிறது.
.
- ஏன் என்னை வென்றாய்! அத்தியாயம்- 3
- வாழ்க்கை ஒரு வானவில் 9
- சிவமே
- இந்த இதழ்கள் இடம்பெயராதா…..
- இடையன் எறிந்த மரம்
- வால்ட் விட்மன் வசனக் கவிதை – 81 ஆதாமின் பிள்ளைகள் – 3
- பகைவனும் நண்பனே – நூல் பற்றிய கண்ணோட்டம்
- மல்லித்தழை
- சுமை துணை
- ஒரு நதி ஒரு கடல் ஒரு சில கரைகள்
- இளைப்பாறல்
- புதுச்சேரியில் 13 ஆம் உலகத்தமிழ் இணைய மாநாடு
- தொடுவானம் 22. வீட்டை விட்டு ஓடினேன்
- ப்ரதிகள்
- ஆத்ம ராகம்
- நீங்காத நினைவுகள் – 52
- தினம் என் பயணங்கள் -23 என்னைப் போன்றவர்கள்
- யானை டாக்டர்.
- முக்கோணக் கிளிகள் (பெரிதாக்கப்பட்ட நெடுங்கதை) படக்கதை – 10
- கூடங்குள ரஷ்ய அணுமின் உலை 1000 மெகாவாட் உச்சத் திறனில் இயங்குகிறது
- இருக்கிற கடவுள்களும், இனி வரப் போகும் கடவுள்களும் கை விட்ட தங்கர்பச்சானின் மனிதர்கள் – தங்கர்பச்சான் கதைகள் தொகுப்பு
- மல்லிகை ஜீவாவுக்கு எதிர்வரும் 27 ஆம் திகதி 88 வயது பிறக்கிறது
- தி.க.சி. யின் நினைவில்