நிழல்

This entry is part 1 of 26 in the series 17 ஆகஸ்ட் 2014

அவன் நண்பன்தான் அவ்னுக்குச்சொன்னான்.ஆக அவன் அருகில் உள்ள நெய்வேலி நகரம் செல்லவேண்டும். காவலர்கள் ஒரு நூறு பேருக்கு மத்தியில் ‘கிரிமினாலாஜி’ பற்றி பாடம் எடுக்க வேண்டும். இப்படிச்சொல்லி அவனை நெய்வேலிக்குப்போகச்சொன்ன அந்த நண்பனுக்கு சென்னையில் ஒரு நண்பன். அந்தச் சென்னை நண்பனுக்குக் காவல் துறையில் ஆகப்பெரிய பதவி. தமிழ் இலக்கியத்திலும் மிகுந்த ஈடுபாடு. அங்கிருந்து பிறந்து வந்திருக்கிறது இந்தக் கட்டளை.

‘என்ன சொல்கிறாயப்பா நீ நான் நெய்வேலிக்குப்போய் கிரிமினாலஜி பாடம் எடுப்பதா அதுவும் காவல் துறையில் பணி ஆற்றும் அந்த காவர்களுக்கு மத்தியிலா’
‘ஆமாம் நீதான் போகணும் போய் கிரிமினாலஜி பாடம் எடுக்கணும்’
‘கிரிமினாலாஜி பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. இப்போதுதான் அந்த ஆங்கில வார்த்தையையே கேள்விப்படுகிறேன் . இப்போதே என்னை அந்த வகுப்பு எடுக்கப் போக வேண்டும் என்கிறாய் நீ’
‘ அந்த பாடம் எடுப்பதாய் ஒப்புக்கொண்ட பேராசிரியர் இன்று நெய்வேலிக்கு வரமுடியவில்லை. சென்னையில் இருந்து வருவதாய் ஏற்பாடு. அவரால் வரமுடியாதபடிக்கு ஏதோ பிரச்சனை நெய்வேலியில் காவலர்களுக்கு ஒரு வாரம் பயிற்சி வகுப்பு ‘ மக்களோடு மக்களுக்காகவே நாம்’. அதனில் கிரிமினாலஜி என்கிற பாடம் மட்டும் பாக்கி இருக்கிறது.அதனை நீ போய் எடு’
‘ நீ யே நெய்வேலிக்குப் போய் அந்த பாடம் எடுக்கலாம்தானே என்னை ஏன் போகச்சொல்கிறாய்’
‘ நான் நேற்று அந்த நெய்வேலி காவலர் பயிற்சி வகுப்புக்குப் போய் வந்தேன். நானும் பாடம் எடுத்தேன். இன்று எனக்கு ப்பள்ளி நிர்வாகத்தோடு புதிய மாணவர் சேர்க்கை பற்றி ஒரு அவசர கூட்டம் இருக்கிறது. அதனை விடமுடியாது. வயிற்றுப்பாடு பெரிய விஷயம் இல்லையா’
‘ நீ காவலர்களுக்கு என்ன பாடம் எடுத்தாய்’
‘ நானா’ ‘ புத்தகங்கள் படி- குற்றங்கள் குறையும்’
‘பரவாயில்லை நல்ல தலைப்பு. உனக்கு எப்போதும் இப்படித்தான் அமைந்து போகிறது.எனக்குத்தான் ஏதோ கிரிமினாலஜி அது இது என்கிறாய் நான் என்ன செய்வேன். உனக்கு நண்பன் இட்டது இந்தக் கட்டளை ஆக ஆபத்துக்கு உதவித்தான் ஆகவேண்டும். நீயும் சொல்லி விட்டாய் சரியப்பா நான் சென்று வருகிறேன்’.
இருவரும் தொலைபேசியில் பேசி முடித்துக்கொண்டார்கள்.
மஞ்சகுப்பத்திலிருந்து நெய்வேலிக்கு ஒரு நகரப்பேருந்து பிடித்தான்.வழியெல்லாம் இதே கிரிமினாலஜி பற்றிய யோசனை.க்ரைம் என்றால் குற்றம் லாஜி என்றால் அறிவு. ஆக கிரிமினாலஜி என்றால் சமூகத்தில் குற்றங்கள் ஏன் தொடர்கின்றன என்பது வாக சற்று நீட்டிச்சிந்திக்க ஆரம்பித்தான்.சிந்தனை எங்கோ சென்றுகொண்டிருந்தது.நூலகங்களை

த்திறக்க திறக்க சிறைச்சாலைகள் மூடப்படும் என்கிற கன வாசகங்கள் எல்லாம் மனத்திரையில் ஓடின.
வள்ளுவரை நினைத்துப்பார்த்தான்’.குற்றமே காக்க பொருளாக க்குற்றமே அற்றம் தரூஉம் பகை.எத்தனை அழகாக அந்த வான் புகழ் கொண்ட வள்ளல் சொல்லி ச்சென்றிருக்கிறார்..இந்த குறள் நினைவுக்கு வந்ததுமே மனம் நெகிழ்ந்துபோனது.குற்றம் தன்னிடம் வராமல் ஒருவன் காத்துக்கொள்ளவேண்டும். குற்றம் வராமல் காத்துக்கொள்வதும் தன்னிடம் உள்ள பொருட்செல்வத்தைப்பாதுக்காப்பதும் ஒன்றே,.பிறகென்ன,இப்படியே ஒவ்வொரு விஷயமாகச்சிந்தித்துக்கொண்டுபோனான். விஷயம் வசப்பட த்தொடங்கியது. பேருந்து நெய்வேலி மார்க்கத்தில் சென்று கொண்டே இருந்தது.
வங்ககக்கடலோரத்து மஞ்சகுப்பம் சொல்லவா வேண்டும் காற்று அப்படியே ஜில் ஜில் என்று வீச வீச எத்தனை அக மகிழ்ச்சி. பேருந்தின் நடத்துனர் பேருந்தினுள் இப்படியும் அப்படியும் நடந்து ஏதோ சத்தம் போட்டுக்கொண்டே தன் வேலையைச்செய்துகொண்டிருந்தார்.
செய்யாத களவுக் குற்றத்திற்கு சிலப்பதிகாரக்கோவலன் செத்துப்போனது எல்லாம் நினைவுக்கு வந்தது. அந்தக்காலத்து பாண்டிய நெடுஞ்செழியன் அவன் மனைவி கோப்பெருந்தேவி தம்மை மாய்த்துக்கொண்டது எண்ணி சிரித்துக்கொண்டான் தனக்கு எழுந்த ஆத்திரத்தில்.மதுரையை எரித்த பூம்புகார்க்காரி கண்ணகி பற்றியும் எண்ணினான்.சிந்தனை வேகமாகச் சிறகடித்துப் பறந்துகொண்டே இருந்தது.
நவீன எழுத்துலகில் இலக்கிய வரவான புதுமைப்பித்தனை மனத்திரையில் யோசித்தான்.தனக்குத் தாலி கட்டிய கணவன் உயிர் காக்க அவள் சோரம் போனதில் என்ன தவறு எனத் தான் வாழ்ந்த சமூகத்தை ச்சிந்திக்கவைத்த எழுத்தக்களின் வீர்யத்தை நினைத்து மகிழ்ந்துகொண்டான். சன்னலோரம் இருக்கை அத்தனை சவுகரியம். எந்த ஊரில் என்ன என்ன விளைச்சல் என்ன கூடையில் தூக்கிக்கொண்டு விற்கிறார்கள் என்பது கவனித்துக்கொண்டே போனான். அது அரசுப்பேருந்து என்பதால் ஓட்டுனரின் அருகே ஒரு திருக்குறள் எழுதி வைத்திருந்தது. அது படித்தான். ‘இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன் கண் விடல்’.
அவன் மனம் கிரிமினாலஜி பற்றி எதுவோ யோசித்த வண்ணம் இருந்தது.
பேருந்தை ஓட்டுனர் சடக் என்று வண்டியை நிறுத்தினார். காக்கி முழுக்கால் சட்டையும் வெள்ளை. நிற அரைக்கை மேல்சட்டையும் போட்டுக்கொண்ட மூவர் விரைத்துக்கொண்டு. வண்டியுள் ஏறினார்கள்.
‘எல்லாரும் அவங்க அவுங்க கையில டிக்கட் எடுத்து வச்சிகிங்க’ கட்டளை தந்தனர். அப்போதுதான் அவன் விழித்துக்கொண்டு தன் டிக்கட்டை த்தேடினான். டிக்கட் வாங்கினால்தானே இருப்பதற்கு. அவன் மறந்துபோனது உண்மை.’அய்யோ நான் இன்னும் டிக்கட் வாங்குல’
‘ஏன் வாங்குல’ மூவரில் மீசை இல்லாத வெள்ளை சட்டைக்கேட்டது.
‘கண்டக்டர் இவ்ரு டிக்கட் வாங்கலயாம் என்ன சேதி காசு ஏதும் கொடுத்தாரா’
கண்டக்டர் திகைத்துக்கொண்டிருந்தார்.’ அப்பவும் கரடியா கத்தினேன். வேற, வேற யாரு, டிக்கட் வாங்குணும்னு’
கண்டக்டர் அவனை ஒரு முறை முறைத்தார்.
‘ ஏன் தூக்கமா சாருக்கு’
‘இல்லைங்க ஏதோ ஒரு யோசனை அப்படியே மறந்து போயிட்டேன்’
‘உங்க மேல குத்தம் இல்ல. அந்தக்கெரகம் பண்ணுற வேல. போடுற அபராதத்தை கட்டிடுங்க போயிகிட்டே இருங்க நாங்க வேற ஒண்ணும். கேக்குல’
அவன் திரி திரி என்று விழித்தான்.
‘திருட்டு முழி முழிக்கிறத பாத்தா தெரிஞ்சி போயிடுது’ மீண்டும் மீசை இல்லாத வெள்ளைசட்டை. பேசிற்று.
மற்ற இருவரும் அபராத ரசீது ரூபாய் ஐ நூறுக்கு போட்டு முடித்தனர்.
‘ இந்தாரும் ஒரு ஐநூறு ரூபா எடுத்து இங்க கொடும்’
‘ நான் எங்க ஐ நூறு ரூபாயுக்கு இப்ப போவேன்’
‘ அப்ப சரி என் பின்னாடி வாரும் போலிஸ் ஸ்டேஷன்ல பாக்கி கதய பேசிக்குவம்’
‘ எந்த ஊரு ஸ்டேஷனுக்கு போவுணும் சார்’
‘ நெய்வேலிக்குதான் தோ ஊரு வந்தாச்சே’ என்றது மீசையில்லாத வெள்ளை சட்டை.
‘வேற எதனா வழி சொல்லுங்க சார்’
‘ வேற என்ன சொல்லுவ நீரு சீட்டு வாங்குல. நாங்க அபராதம் போடுறம். நீரு பணத்தை இப்ப கட்டுணும் இல்லன்னா போலிஸ் ஸ்டேஷனுக்குத்தான் தான் வருணும்’
.பேருந்து சென்று கொண்டே இருந்தது. கண்டக்டர் தன் வேலையை மட்டும் பார்த்துக்கொண்டு அவ்வப்போது அவனை பார்த்து முறைத்த வண்ணமாக இருந்தார். நெய்வேலி நகரம் நெருங்கியது.அவன் தன் சட்டைப்பையில் ஒளித்துவைத்திருந்த ஒரு ஐ நூறு ரூபாய் நோட்டை எடுத்து நீட்டினான். வீட்டுக்குத்தெரியாமல் புதிய புத்தகம் ஏதும் வாங்க அவன் ஒளித்து வைத்திருக்கும் சிறியதொகை அது.
‘ இத மொதல்லயே செஞ்சி இருக்கலாம்ல இப்ப எங்கிருந்து வந்தது பணம்’
அவன் எதுவும் பேசாமல் இருந்தான்.அபராத ரசீது பெற்றுக்கொண்டான். பணம் ஐநூறும் அவனை விட்டுச்சென்றது.
‘ஸ்டேஷன் முன்னாடி நிறுத்துங்க’ ஆய்வுக்கு வந்த மூவரும் ஒரு சேர டிரைவருக்கு க்கட்டளை இட்டனர். பேருந்து ஸ்டேஷன் முன்பாக நின்றது.அவனுக்கும் அந்த நெய்வேலி ஸ்டேஷனில் தான் அந்த கிரிமினாலஜி பாடம் எடுக்கும் வேலை. அவனுக்குப்பேருந்தைவிட்டு இறங்க மனம் வரவில்லை.
‘நீங்க இங்க இறங்குணுமா’ கண்டக்டர் அவனைப்பார்த்துக்கேட்டார்.
‘இல்ல நான் பஸ் ஸ்டேண்டுக்குத்தான் போறேன்’ அவன் பதில் சொன்னான். நெய்வேலி பேருந்து நிலையம் வந்தது. பேருந்தை விட்டு இறங்கி நடந்தான். ஒரு உதவி ஆய்வாளர் அவன் அருகே வந்து தான் ஓட்டி வந்த இரு சக்கர வாகனத்தை நிறுத்தினார்.
‘ஐய்யா கடலூர்லேந்து வர்ரீங்களா. காவலர் வகுப்புக்கு கிளாஸ் எடுக்கத்தானே வர்ரிங்க’
”ஆமாம் சார் ‘ அவன் தன் நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு பதில் சொன்னான். ‘நான் இந்தப்பேருந்தில் வந்து இங்கே இறங்குவது இவருக்கு எப்படித்தெரிய வரும்;. இதனைக்கேட்டுவிடுவது சரியாக வருமா’ யோசித்தான். மீண்டும் கிரிமினாலஜி பாடம் எடுப்பது பற்றி கொஞ்சம் ஆழமாய் யோசிக்க ஆரம்பித்தான். தொடர்ந்து ஏதோ சிந்தனை.
நெய்வேலி ஸ்டேஷன் முன தன் வண்டியை நிறுத்தி அவனை பின்பக்கமாக இருந்த காவலர் வகுப்பறைக்கு ஆய்வாளர் அழைத்துச்சென்றார்.வகுப்பறையில் காவலர்கள் அமைதியாக அமர்ந்து கொண்டிருந்தனர்.அவன் உள்ளே நுழைந்ததும். காவலர்கள் அனைவரும் எழுந்து ‘வணக்கம்’ என்றனர்.
‘ பாடம் கேட்க உத்தரவு பெற்றவர்கள் மட்டும் இங்க உக்காருங்க மற்றவங்க யாரும் இங்க இருக்கக்கூடாது. தெரியுதா’
ஆய்வாளர் உத்தர்விட்டார்.
வெள்ளை சட்டை அணிந்து அங்கே அமர்ந்திருந்த அந்த பேருந்து ஆய்வாளர்கள் மூவரும் எழுந்து வகுப்புக்கு வெளியே போனார்கள்
‘சாரு நீங்க பஸ்சுல புடிச்ச உங்க வித் அவுட் டிக்கட்ட் கேசுன்னா முன்னால இருக்குற என் ஆபிசுலதான வெயிட் பண்ணிகிட்டு இருக்குணும் இங்க எதுக்கு அனாவசியமா.வர்ரீங்க இதுவே எங்க பெரிய அதிகாரி பாத்து இருந்தா பிரச்சனை ஆயிடும்ல’ எச்சரித்தார்.
‘சாரி’ சொல்லிய மீசை இல்லாத வெள்ளை சட்டை என்னை ப்பார்த்துக்குழம்பிக்கொண்டே இடத்தைக்காலி செய்தது.
‘சாரு கிரிமினாலஜி சப்ஜெக்டுல ஆராய்ச்சி பண்ணி டாக்டரேட் வாங்கியிருக்கிறாரு. நல்லா பயன் படுத்திக்க வேண்டியது உங்க பொறுப்பு வகுப்பு ஒரு மூணு மணி நேரம். அந்த நேரம் போவுறதே தெரியாம கிரிமினாலஜி கிளாசு எடுப்பாருன்னு. தகவல் வந்திருக்கு’ சொல்லிய காவல் அதிகாரி ‘அய்யா நீங்க தொடங்கலாம் நானு போயி அந்த பேருந்து அதிகாரிங்கள பாத்துட்டு பிறகு வர்ரன்’ என்றார் அவனிடம்.
அவன் அவனுக்கு எட்டிய மட்டும் குற்றங்கள் இச்சமூகத்தில் எப்படி முளைவிடுகின்றன என்பது பற்றி ப்பேசிக்கொண்டே போனான்.ராமாயணத்தில் வரும் குரங்கின வாலியின் குற்றம் என்ன என்று ஆரம்பித்தான். இலங்கை அரசன் ராவணன் செய்த பிழை என்ன என்று பேசினான்.இலக்குவனை சீதை பேசிய சுடுசொல் பற்றி விளக்கியுரைத்தான். இலக்குவன் போட்ட கோடு பற்றி ஒரு விளக்கம் தந்தான்.பின்னர் மகா பாரதக்கதைக்குப் போனான். தருமனின் க்ஷ்த்ரிய நியாம் பற்றிப்பேசினான்.திரௌபதியின் சாபம் பற்றிப்பேசினான். கண்ணனின் தூது பற்றிப்பேசினான். சிலப்பதிகாரத்துக்குள் நுழைந்தான்.சிலம்பு விற்க க்கணவனை அடுத்தவன் நாட்டுத்தலை நகரில் தனியே அனுப்பிய கண்ணகியின் சிந்தனை பற்றிப்பேசினான்.. மதுரை எரித்தது நியாயமா என்று பேசினான்.காவலர்கள் வகுப்பை மெய்மறந்து கேட்டுக்கொண்டிருந்தார்கள். காவலர் வகுப்பில் அத்தனை அமைதி நிலவியது.
‘வகுப்புன்னா இப்படித்த்தான் இருக்கணும் இது வரைக்கும் என்னா நடத்துனாங்க’ அவன் காது படவே பேசிக்கொண்டார்கள். அவனுக்கும் தான் ஏதோ உயர்ந்த நிலைக்குப்போய்விட்டமாதிரி உணர்வு. எல்லோருக்கும் ஒரு தே நீர், இரண்டு சமுசா மட்டும் வந்தது. அவனும் சாப்பிட்டு பசியாற்றிக்கொண்டான். அவனுக்கு காசு ஒன்றும் பெயரவில்லை.அவன் அதனைக் கேட்கத்தான் முடியுமா என்ன.
‘ அய்யாவை ஒரு பிரைவேட்ட் பஸ் பாத்து ஏத்திவுடுங்க. சாரு மஞ்சகுப்பம் போவுணும்.’ ஆய்வாளர் சொல்லி முடித்தார்.
நெய்வேலி காவல் நிலையம் முன்பாக நின்றுகொண்டிருந்த பேருந்தில் அவனை ஏற்றிவிட்ட காவலர் அந்த கண்டக்டரிடம் ஏதோ செய்தி சொன்னார்.
‘சாருக்கு நீங்க சீட்டு கீட்டு போட்டு காசு ஏதும் வாங்கிடாதிங்க இந்த நெய்வேலி ஸ்டேஷன்லேந்து அய்யாவ அனுப்பி வச்சி இருக்கம் ‘ என்றார் நிலைய வாயிலில் நின்றிருந்த ஆய்வாளர்.
அவன் ஐநூறு ரூபாய் பேருந்தில் தண்டமாக .க்கட்டியது மனதில் சுள்ளென்றது. ஆனால் பாருங்களேன் மஞ்சகுப்பத்தில் பேருந்தை அவன் வீட்டு வாயிலிலே பிரத்யேகமாக நிறுத்தி அவனை இறக்கிவிட்டிருக்கிறார்கள். அவன் மனைவிக்கு இது கண்ணில் பட்டிருக்கலாம்.
——————————————
Series Navigationவால்ட் விட்மன் வசனக் கவிதை – 88பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! அண்டக் கோளின் சுழற்சியே உயிரினத் தோற்ற வாய்ப்புக்கு ஏற்றதாய்ப் பேரளவு தூண்டுகிறது.
author

எஸ்ஸார்சி

Similar Posts

Comments

  1. Avatar
    vaLava. duraiyan says:

    முதலில் எழுத்துப்பிழைகள் இருப்பதைச் சொல்லித்தானாக வேண்டும். இதுவும் எஸ்ஸார்சியின் வழக்கமான யதார்த்தமான கதைதான். அப்பாவி இலக்கியவாதி தெரியாமல் மாட்டிக் கொண்டு விழிக்கும் கதை. உண்மையில் இலக்கியவாதிகளின் உலகமே வேறு என்று தெரிகிறது. பாரதம் ராமாயணம் மற்றும் சிலம்பு குறித்த வினாக்கள் படிக்கச் சுவையாக இருக்கின்றன. அவற்றைக்கதையில் இணைக்கும் தொழில் நுட்பம் அருமை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *