உன் மைத்துனன் பேர்பாட

This entry is part 1 of 21 in the series 19 அக்டோபர் 2014

வளவ. துரையன்

உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன்
நந்தகோ பாலன் மருமகளே நப்பின்னாய்
கந்தங் கமழும் குழலி கடைதிறவாய்
வந்தெங்கும் கோழி அழைத்தனகாண் மாதவிப்
பந்தல்மேல் பல்கால் குயிலினங்கள் கூவின காண்
பந்தார் விரலிஉன் மைத்துனன் பேர்பாடச்
செந்தா மரைக்கையால் சீரார் வளைஒலிப்ப
வந்து திறவாய் மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்.
இது ஆண்டாள் நாச்சியார் அருளிய திருப்பாவையின் பதினெட்டாவது பாசுரம். இதற்குமுன் பதினேழாவது பாசுரத்தில் நந்தகோபர், யசோதை, பலராமன் ஆகியோரை ஆயர்பாடிப் பெண்கள் எழுப்பினார்கள். கண்ணனை முன்னிட்டு அவர்களை எழுப்பியும் இதைக் கண்டும் காணாதது போலக் கண்ணன் எழுந்திருக்கவில்லை. கண்ணனுக்குப் பிரியமான புருஷகாரபூதையான நப்பின்னைப் பிராட்டியாரை எழுப்பாததாலே அவன் பேசாமலிருக்கிறான் என்று இவர்கள் இப்போது நப்பின்னையை எழுப்புகிறார்கள். பெரிய பிராட்டியே பிராதன புருஷகாரம் என்றாலும் கிருஷ்ணாவதாரத்தில் நப்பின்னையே புருஷகாரபூதையாவாள்.
இப்பாசுரம் தொடங்கி வரும் மூன்று பாசுரங்களும் மகாலக்ஷ்மியின் பெருமை பேசும் பாசுரங்களாகும். மிதிலாதேசத்தில் கும்பர் எனும் பெயர் கொண்ட நந்தகோபரின் மைத்துனன் ஒருவர் இருந்தார். அவர் யசோதையின் தம்பியாவார். அவருக்கும் அவரது மனைவியான தர்மதைக்கும் இரண்டு குழந்தைகள் பிறந்தன. ஸ்ரீதாமா என்று ஆண் குழந்தைக்குப் பெயரிட்டும் பெண் குழந்தைக்கு நீளை என்று பெயரிட்டும் வளர்த்து வந்தனர். நீளை என்றால் விஷ்ணுவின் தேகத்திற்கு ஏற்பத் தன் தேகத்தை ஆக்குபவள் என்பது பொருளாகும். இந்த நீளையே நப்பின்னை ஆவாள். திருமால் கண்ணனாக அவதாரம் எடுத்து ஏழு காளைகளை அடக்கி நப்பின்னையை மணம் புரிந்தார். ஏழு காளைகள் என்பன காமம், க்ரோதம், லோபம், மோகம், மதம், மாச்சரியம், அசூயை என்பனவற்றின் மறைபொருள்கள் என்பார்கள்.
அர்ச்சாவதாரத்திற்குப் பல திவ்யதேசங்களில் ருக்மணியே பட்டமகிஷியாக சேவை சாதிக்கிறார். ஆனால் கிருஷ்ணாவதாரத்தில் நப்பின்னையே பட்ட மகிஷியாவாள்.
”ஆழ்வார்கள் பாசுரங்களில் நம்மாழ்வார் ஓரிடத்திலும் பெரியாழ்வார் மூன்று இடங்களிலும் ருக்மணியைக் காட்டுகிறார்கள். ஆனால் நப்பின்னை பற்றிப் பல நூறு இடங்களில் வருகின்றன” என்று மு. இராகவையங்கார் குறிப்பிடுகிறார்.
மேலும் “யதுகுலத்தில் பிறந்ததால் கோபால குணம் கொண்டதால் அக்குலம் வாய்த்த திவ்ய மகிஷியான நப்பின்னை அவனுடைய பரம ப்ரீதிக்கு இலக்காகத் தகுந்தவள்” என்று கூரத்தாழ்வான் குறிப்பிடுகிறார். ஆழ்வார்கள் நப்பின்னையை ஆயர் மங்கை, பின்னை என்றெல்லாம் காட்டுகிறார்கள்.
”ஆயனாகி ஆயர்மங்கை வேய தோள் விரும்பினாய்” என்று திருமழிசையாழ்வார் அருளிச்செய்கிறார். ”கூந்தல் மலர்மங்கைக்கும் மண்மடந்தைக்கும் குலவாயர் கொழுந்துக்கும் கேள்வந்தன்னை” என்றும் “ குழற்கோவலர் மடப்பாவையும் மண்மகளும் திருவும் நிழல் போல்வனர்” என்றும் நம்மாழ்வார் காட்டுகிறார்.
பரத்தில் ஸ்ரீதேவி, பூதேவி என்று இரு பிராட்டிகளைப் பற்ற வேண்டும், இராமாவதாரத்தில் பெரிய பிராட்டியின் அவதாரமான சீதையைப் பற்ற வேண்டும். வராக அவதாரத்தில் பூமிதேவியைப் பற்ற வேண்டும். கண்ணனாய் ஆயர்பாடியில் வரும்போது நப்பின்னையைப் பற்ற வேண்டும்.அந்த நப்பின்னையை இப்போது எழுப்புகிறார்கள்.
ஆஞ்சநேயர் முதலில் இராமபிரானைத் தொழுது பின் இலக்குவனைப் பற்றிப் பிறகுதான் சீதாபிராட்டியைப் பற்றினாற்போல இவர்களும் ‘உம்பர் கோமானே உறங்காது எழுந்திராய்’ என்று கண்ணனெம்பிரானையும், ‘செல்வா பலதேவா’ என்று பலராமனையும் எழுப்பியவர்கள் இப்போது நப்பின்னயைப் பற்றுகிறார்கள்.
மேலும் பிராட்டியைப் புருஷகாரமாகப் பற்றினால்தான் பலன் கிடைக்கும் என்பதை இராமாயணம் மூலம் அறியலாம். சீதாபிராட்டியைக் காண்பதற்கு முன்னர் ‘வானரஹோம்’ என்ற அனுமன் பிராட்டியைப் தொழுத பின் ’தாசரோஹம்’ என்பது குறிப்பிடத்தக்கது. அனுமன் சீதையைக் கண்டபின்தான் ”இவள் செங்கமலச் செல்வியே அவன் திருமாலே” என்றுணர்ந்தான். பிராட்டியின் அருள் இல்லாததால்தான் தாடகை, சுபாகு, மாரீசன், வாலி முதலானோர் உயிர் விட்டனர். காகாசூரன் பிராட்டியின் அருளால்தான் பிழைத்தான். பிராட்டியின் அணிகலன்களைக் கண்டு அருள் பெற்று பின்னர்தான் சுக்ரீவன் இராமனிடம் சரணாகதி அடைந்தான். எனவேதான் இவர்களும் நப்பின்னையின் அருளை வேண்டுகிறார்கள்.
’நந்தகோபன் மருமகளே, என்று அழைக்கிறார்கள். ’கும்பர் திருமகளே’ என்று அழைக்காமல் நந்தகோபன் பெயரை முறை வைத்துக் கூப்பிடுகிறார்கள். பிறந்த வீட்டு சம்பந்தத்தை விட புகுந்த வீட்டு சம்பந்தம் அவளுக்கு மிக விருப்பமாம். பெண்களே அப்படித்தான். மகாலக்ஷ்மியானவள் பெருமாளின் திருமார்பை அடைந்த பிறகு தான் பிறந்த தாமரை மலரை நினைத்தே பார்க்கவில்லை. இராமபிரானை மணம் புரிந்து அயோத்தி அடைந்த பிறகு சீதா பிராட்டி தந்தையான ஜனகன் அரண்மனை அடைந்தாரில்லை. அதுபோல நப்பின்னையும் கண்ணனை மணந்த பின் கும்பரை மனத்தால் எண்ணியவள் இல்லை. எனவே அவளுக்குப் பிரியமான நந்தகோபரை முன்னிட்டு அழைக்கிறார்கள். நந்தகோபன் குமரன் என்றால் கண்ணன் மகிழ்வதைப் போல இவளும் நந்தகோபன் தொடர்பைச் சொன்னால் மகிழ்ச்சியடைவாள்.
தயரதனின் மருமகள் என்றாலே சீதைக்கு மகிழ்ச்சியாம். சீதாபிராட்டியை நீ யார் என்று யாராவது கேட்டால் “தயரதனின் மருமகள் என்றே முதலில் சொல்வாள். அப்புறம் இராமனின் தர்மபத்தினி என்பாள். பிறகே ஜனகரின் மகள் என்பாள்” என்று முக்கூர் நரசிம்மாச்சாரியார் கூறுகிறார். ’கும்பர் மகளே’ என்று அழைத்தால் இவள் ஏனென்று கேட்க மாட்டாள். ஆதலால் நப்பின்னைக்குப் பிடித்தவாறு ’நந்தகோபன் மருமகளே’ என்றழைக்கிறார்கள்.
எனவே முதலில் நந்தகோபன் பெருமையை முதல் அடியில் பாடுகிறார்கள். ‘உந்து மத களிற்றன்’ என்றழைக்கிறார்கள்.
உந்துமத களிற்றன் என்பதற்குப் பல வியாக்கியானங்கள் அருளிச் செய்யப் பட்டிருக்கின்றன. நந்தகோபன் மதம் கொண்ட யானைகளை அடக்கியவன்; இவன் மகனாயிருப்பதால் கண்ணன் குவலயாபீடம் என்ற யானையை அடக்கினானாம். நந்தகோபனே மத யானை போன்றவன் என்பதும் ஒரு பொருள்; மற்றும் நந்தகோபன் மதம் கொண்ட யானைகளை உடைமையாகக் கொண்டவனாம்.
நந்தகோபனுக்கு யானை ஏது? ஆடு, பசுக்கள், எருமைகள் உண்டு. யானைகள் உண்டா? அவன் வசுதேவருக்கு உற்ற நண்பராக இருப்பதால் அவரிடம் உள்ள யானைகளை இவருக்கு ஏறிட்டுச் சொல்கிறார்கள். ’வாரணம் ஆயிரம் சூழ’ என்று நாச்சியார் திருமொழியில் அருளிச்செய்வது இங்கு குறிப்பிடத்தக்கது. மேலும் கிருஷ்ணனாகிய யானையை உடையவன் என்றும் பொருள் சொல்லலாம்.
”உந்துமதக்களிறு” என்பதற்கு ஆசார்யர்கள் மூன்று விதமாகப் பொருள் சொல்கிறார்கள். 1. மதக்களிறு. அதாவது பகவானே மதக்களிறு போன்றவன். 2. மதம் உந்து களிறு. அதாவது மதஜலம் பெருகும் களிறு போன்றவன் நம் பகவான். 3. உந்து மதக் களிறு. அதாவது மதஜலம் பெருகி இருந்த குவலாயபீடம் எனும் களிற்றை அடக்கியவன் பகவான்.
பகவானை “தென்னானாய்! வடவானாய்! குடபாலானாய்! குணபாலமதயானாய்” என்பார் திருமங்கையாழ்வார். பட்டர் “ஸ்ரீ ரங்க கம்ர: கலபம்” என்று பெருமாளை யானையாகப் பார்ப்பார். பெரியாழ்வார்,
”தொடர் சங்கிலிகை சலார் பிலாரெனத் தூங்குபொன் மணியொலிப்பப்
படுமும் மதப்புனல் சோர வாரணம் பைய நின்றூர்வதுபோல்”
என்று அருளிச்செய்வார். பகவானுக்கும் யானைக்கும் பல ஒப்புமைகளைப் பார்க்கலாம்.
1.யானை தரிசனம் விசேஷம்; யானையை எத்தனை முறை பார்த்தாலும் அப்போதுதான் பார்ப்பதுபோல அபூர்வமாக இருக்கும்; பரமானந்தம் தரும். எம்பெருமானும் அப்படியே. தினம் தினம் புதிது புதிதாய் அழகு காட்டி நம்மை மயக்குவான். ஆதலால்தான் ஆழ்வார் “ எப்பொழுதும் நாள் திங்கள் ஆண்டு ஊழிதொறும் அப்பொழுதுக்கு அப்பொழுது என் ஆராவமுதே” என்று அருளிச் செய்வார்.
2. யானையானது தன் முதுகில் ஏறி உட்காரத் தன் காலையே மடக்கி அதன் வழி ஏற உதவி செய்யும். பகவானும் அவனை அடைய அவன் திருவடியைக் காட்டுகிறான். திருவடியைப் பற்றினல் நம்மை ஏற்றி உயர்ந்த இடத்திலே அவன் அமர வைப்பான். மேலும் எம்பெருமன், “அடிக்கீழ் அமர்ந்து புகுந்து அடியீர், வாழ்மின்” என்று அருள் கொடுக்கும் அவன் ஆசையினாலே தன் திருவடியையே காட்டிக் கொடுப்பான்.
3. யானை தன்னைக் கட்டத் தானே சங்கிலியை எடுத்துக் கொடுக்கும். பகவானும் தன்னைக்கட்ட ‘பக்தி யோகம்’ எனும் கயிறு கொடுத்துள்ளான். அவன் பக்திக்குக் கட்டுப்பட்டவன். ‘எட்டினோடு இரண்டு’ எனும் பக்தியாகிய கயிற்றினால் அவன் கட்டப்படுபவன். சகாதேவன் பக்தியினால்தான் அவனைக் கட்டினான். யசோதையும் அன்பினால், பக்தியினால் அவனைக் கட்டினாள். கண்ணி நுண் சிறுத்தாம்பில் ‘கட்டுண்ணப்பண்ணிய மாயன்’ என்று ஆழ்வார் பாடுகிறார். எல்லாவற்றையும் விட்டு விட்டு சரணாகதி எனும் கயிற்றினாலும் அவனைக் கட்டிப் போடலாம்.
4. யானை நீராட்டப் பெற்றாலும் அடுத்த கணமே மண்ணை வாரித் தன் மீது போட்டுக் கொள்ளும். அழுக்காகி விடும். பகவான் பரம பவித்திரமானவன். ஆனால் மண்ணைப் போன்ற ’பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும்’ உடைய நம் போல்வாரிடமும் கருணையினால் சேரத் திருவுள்ளம் கொண்டுள்ளான்.
5. யானை எப்பொழுதும் பாகன் சொல்வதையே கேட்கும். அவன் சொற்படிதான் நடக்கும். அவன் ’எழுந்திரு’ என்றால் எழுந்து கொள்ளும். அவன் நடக்கச் சொன்னால்நடக்கும். பகவானும் அதுபோல் ஆச்சாரியர்களும், பாகவதர்களும் சொன்னல் கட்டுப்பட்டு அதன்படி நடப்பான்.
”கணிகண்ணன் போகின்றான் காமரு பூங்கச்சி
மணிவண்ணா நீகிடக்க வேண்டா—துணிவுடைய
செந்நாப் புலவன்யான் போகின்றேன் நீயுமுன்றன்
பைந்நாகப் பாய்சுருட்டிக் கொள்”
என்று ஆழ்வார் சொன்னதற்காக அவனும் காஞ்சியையே விட்டுவிட்டு வெளியில் வந்தான் அல்லவா?
6. யானையின் பாஷை பாகனுக்கே புரியும். எம்பெருமானின் பாஷை திருக்கச்சி நம்பி போன்றவர்க்கே புரியும். இராமன் கடைக்கண் காட்ட இலக்குவன் தீ மூட்டினான் அன்றோ?
9. யானை உண்ணும்போது சிந்தும் உணவு பலகோடி நூறாயிரம் எறும்புகளுக்கு உணாவாகும்.
”வாங்கும் கவளத் தொருசிறிது வாய்தப்பின்
தூங்கும் களிறோ துயருறா —-ஆங்கதுகொண்[டு]
ஊரும் எறும்பிங்[கு] ஒருகோடி உய்யுமால்
ஆரும் கிளையோ டயின்று”
என்பது பழம்பாடல். அதுபோல எம்பெருமான் பிரசாதத்தால் பலகோடி உயிர்கள் வாழும்.
10. யானை மிக நீண்ட கையை உடையது. பகவானும் “அலம் புரிந்த நெடுந்தடக்கையன்” ஆவான்.
11. யானைக்கு ஒரே கையான தும்பிக்கை மட்டுமே உண்டு. எம்பெருமானுக்கும் ஒரே கைதான்; அதாவது கொடுக்கும் கையே ஒழிய கொள்ளும் கை அல்ல. ஆமாம்; நாம் வேண்டுவனவற்றை அள்ளித் தரும் கோதில் வள்ளல் பெருமானின் கை அல்லவா?
12. யானை தான் இறந்த பின்னும் உதவக் கூடியது. அதனால்தான் “யானை இருந்தாலும் ஆயிரம் பொன்; இறந்தாலும் ஆயிரம் பொன்” என்ற பழமொழி வழங்கி வருகிறது. பகவான் அவதாரங்கள் சென்ற பின்னும் மறந்து நின்று அருள் புரிகிறார். எம்பெருமான் தீர்த்தம் ப்ரஸாதித்துத் தன்னடிச் சோதிக்கு எழுந்தருளிய பின்பும் இதிகாச, புராணங்கள் மற்றும் அருளிச் செயல்கள் மூலமாகத் தன் சரிதைகளை உணர்த்தி வருகிறார்.
13. யானை தன் பாகனுக்கு ஜீவனங்கள் சம்பாதித்துத் தரக்கூடியது. எம்பெருமானும் அர்ச்சகர், பரிசாரகர்கள், காலட்சேபம் செய்பவர்கள் போன்றவர்களுக்கு ஜீவனங்கள் அருளிச் செய்கிறார்.
அடுத்து “ஓடாத தோள்வலியன்” என்று நந்தகோபனின் தோள்வலிமையைப் போற்றுகிறார்கள். ’ஓடாத’ என்பது புறமுதுகிட்டு ஓடாமையைக் குறிக்கும். மேலும் இவனின் தோள்வலிமையைக் குறித்துப் பயந்தன்றோ கம்சன் பூதகி, சடகாசூரன் போன்றோரை அனுப்பி வைத்தான். கீதையில் கிருஷ்ணன் கூறும் “யுத்தே சாப்ப பலாயநம்” எனும் க்ஷத்திரிய இலக்கணம் கொண்டவன் நந்தகோபன். மேலும் எந்த பகவானுடைய தோள்களின் நிழலின் கீழே இந்த உலகெல்லாம் ஒடுங்கி இருக்கிறதோ அப்படிப்பட்ட கண்ணபெருமானின் தந்தையன்றோ இவன்.
தோள்வலிமையைக் பகவானுக்கு ஏற்றி அவன் நப்பின்னையின் தோள்களில் ஈடுபடுபவன். “பின்னை நெடும்பணைத் தோள் மகிழ் பீடுடை முன்னையமரர் முழுமுதலானே” என்பதும் “பின்னைதன் காதலன்றன் பெருந்தோள் நலம் பேணினளால்” என்பதும் ஆழ்வார் அருளிச் செயல்களாகும். “தோள் கண்டார் தோளே கண்டார்” என்பது இராமபிரானின் தோள் அழகைப் போற்றும் கம்பனின் வாக்கு.
இவளோ பகவானுக்கே பல்லாண்டு பாடிய பெரியாழ்வாரின் திருமகள். எனவே அந்த பகவானையே காக்கும் நந்தகோபனின் தோள் வலிமையைப் பாடுகிறார்கள். மேலும் தோள் வலிமை மிக்க நந்தகோபனின் மகனாகப் பிறந்ததால்தான் சாணுகன், முஷ்டிரன் என்ற மல்லர்களைக் கண்ணன் தன் தோளில் அணிந்த சந்தனமும் அழியாமல், தான் சூடிய மாலையும் வாடாமல் தோற்கடித்தானாம்.
தங்கள் துன்பத்தை அவள் அறிவதற்கும் அதைப் போக்குவதற்கும் அவளுடைய பெயர் சொல்லிக் கூப்பிடுகிறார்கள். “ஹே க்ருஷ்ண! ஹே யாதவ!” என்று அருச்சுனன் கிருஷ்ணனைக் கூப்பிட்டது போல இவர்களும் ‘நப்பின்னாய்’ என்றழைக்கிறார்கள்.
ஆனால் உள்ளே உறங்கும் அவளோ ” இந்த ஆய்பாடிக்குக் கண்ணன் வந்த பின்பு நந்தகோபனுக்கு மருமகள்கள் நிறைய பேர் உண்டு. எனவே அவர்களின் அழைப்பு நமக்கன்று. மேலும் இன்னும் கொஞ்ச நேரம் அழைத்துக் கொண்டிருந்து விட்டுப் போகட்டும்” என்றேண்ணி வாளாவிருந்தாள்.
அவளின் எண்ணத்தை ஊகித்தறிந்தவர்கள் இப்பொழுது அவளைக் “கந்தம் கமழும் குழலி” என்றழைக்கிறார்கள். அதாவது ”இவ்வளவு அழைத்தும் நீ வாய் திறந்து பேசாமல் இருக்கிறாய். ஆனால் உன் குழலின் மணம் உன்னைக் காட்டிக் கொடுத்து விட்டதே!” என்கிறார்கள். அவள் கூந்தல் நறு மணம் வீசுகிறதாம். எனவேதான் அப்படி அழைக்கிறார்கள். “சர்வ கந்தன்” எனப்படும் பெருமானுக்கே வாசம் செய்யும் பூங்குழலாள் அவள். “வாசப்பூங்குழல் பின்னை தோள்கள் மணந்ததும்” என்ற நம்மாழ்வாரின் அருளிச் செயல் இங்கு நினைக்கத் தக்கது. ஆனல் அவளோ, “நாங்கள் மலரிட்டு நாம் முடியோம்; என்று நோன்பு நோற்கும் போது நீ மட்டும் மலர் மணம் வீசும்படியிருக்கிறாயே” என்று தன்னை ஏசுவதாக எண்ணிப் பேசாமல் கிடந்தாள்.
எனவே இவர்கள் மேலும் பேசுகிறார்கள். “கந்தம் கமழும் உன் கூந்தல் மணத்தை நாங்களும் அனுபவிக்க வேண்டாமோ? நல்லதோர் பொருளை எல்லாரும்தானே அனுபவிக்க வேண்டும். நீயும் அவனும் மட்டும் அனுபவித்தால் போதுமா? நீ சூடிய மாலையும் சந்தனமும் அணிந்து நாங்களும் கூடியிருக்க வேண்டாமோ? ‘அடியார் குழாங்களை—உடன் கூடுவதென்றுகொலோ?” என்று எல்லாரும் கூடி அனுபவிக்கின்ற விஷயமன்றோ இது”
அவள் எழுந்து இப்பொழுது கேட்கிறாள் “ நான் என்ன செய்ய வேண்டும்?”
“வாசல் கதவைத் திற” என்கிறார்கள். உடனே உள்ளே இருப்பவள் “இது மாதிரி நடுராத்திரிப் பொழுதில் வந்து எழுப்புகிறீர்களே? நான் கதவைத் திறக்க முடியுமோ? பொழுது விடிந்தால்தானே திறக்க முடியும்” என்கிறாள்.
அதற்கு இவர்கள் “பொழுது விடிந்ததற்கு அடையாளமாக கோழி அழைத்ததே; உன் காதில் விழவில்லையா? என்கிறார்கள்.
அவளோ ”ஒருகோழி தானே கூவியது; அது விடிந்ததற்கு அடையாளமா” என்கிறாள். ”பலகோழி அழைத்தன காண்” என்று பதில் சொன்னதும் “ஒன்றின் குரல் கேட்டதும் சில கூவியிருக்கலாம். அது அடையாளமாகாது” என்கிறாள். இவர்கள் “எங்கும் கோழி அழைத்தன காண்” என்று காட்டுகிறார்கள்.
வெளியே நின்று கொண்டிருப்பவர்கள் “இங்கே வந்து உன் வாசல் பற்றி நின்று கொண்டிருக்கும் எங்களைப் போன்றே எல்லாக் கோழிகளும் கூவுகின்றன. அது உன் காதில் விழவில்லையா? கோழி கூவென்னுமால், தோழீ, நானென் செய்கேன்? ஆழிவண்ணர் வரும்பொழுதாயிற்று; கோழி கூவென்னுமால்” என்று கண்ணனின் பிரிவைப் பொறுக்க மாட்டாத எங்களுக்கு அவன் பிரிவை உணர்த்தும் கோழி கூவுவது கேட்கிறது. ஆனால் நீ கண்ணனை எப்பொழுதும் பிரியாமல் இருக்கிறாய்; எனவே உனக்குக் கேட்கவில்லையா? கோழி கூவுமுன்னரே எழுந்து நோன்பு நோற்கச் செல்லும் எங்களைப் போலன்றி, கோழி கூவின பிறகாவது நீ எழுந்திருக்க வேண்டாமா?”என்று கேட்கிறார்கள்.
அவளோ, “அவை சாமக் கோழிகள்; சிறிது நேரத்திலே அடங்கிப் போகும்; வேறு ஏதேனும் அடையாளம் இருந்தால் சொல்லுங்கள்” என்கிறாள். உடனே இவர்கள் குயில்கள் கூவின” என்று சொன்னதும் அவளோ, “ஒரு குயில்கூவினது விடிந்ததற்கு அடையாளமாகாது” என்று சொல்கிறாள். “இல்லை, இல்லை; பல்கால் குயிலினங்கள் கூவின காண்” என்கிறார்கள். அவளோ இதற்கும் ஒரு பதில் சொல்கிறாள். “அவை இரவு முழுதும் உறக்கம் இல்லாமல் விழித்திருந்தவை. எனவே அவை கூவியிருக்கும். எனவே இது அடையாளமன்று”. வெளியே இருப்பவர்கள்.
“இல்லை பெண்ணே! அவை மாதவிப் பந்தலில் குடியிருப்பவை; மாதவி என்பது ஆண்டாளின் திருநாமம். ’மாதவஸ்ய இயம்’ மாதவி—–மாதவனைச் சேர்ந்தவள் என்று பொருள். [இன்றும் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாளின் சன்னதிக்கு முன்னர் மாதவிப் பந்தலைச் சேவிக்கலாம்] அந்தக் குருக்கத்திப் பந்தல் அவற்றிற்கு மிகவும் பிடித்தமானது.எனவே அவை உறங்காமல் இருந்திருக்காது. இவை உன்னைக் காணாமலே கூவுகின்றன. உன்பேச்சும் பார்வையுமே இவற்றிற்கு தாரகமாகும்.
எங்களுக்காக இல்லாவிட்டாலும் நீ இந்தக் குயிலினங்களுக்காகவாவது வர வேண்டாமா? குயில் பைதல்காள்! கண்ணன் நாமமே குழறிக்கொன்றீர் என்று கண்ணன் பெயர் எங்களுக்குத் துன்பம் தர நீயோ அவற்றின் கூவுதலைத் தாலாட்டாக எண்ணி உறங்குகிறாயோ? மேலே குயில்கள் கூவுகின்றன. இங்கே கீழே நாங்கள் கூவிக்கொண்டிருக்கிறோம்.நீ நடுவிலே உறங்கிக் கொண்டிருக்கிறாயே? இது தகுமா?” என்று பேசுகிறார்கள்.
ஆனால் அவள் “நீங்கள் குயில்களைப் பயமுறுத்தி இருப்பீர்கள். ஆகையால் இது பொழுது விடிந்ததற்கு அடையாளமாகாது” எண்றெண்ணிப் பேசாமல் கிடந்தாள்.
நாராயணன்பால் காதல் கொண்ட ஒரு தலைவி குயிலை அழைத்துப் பயமுறுத்துவதாக ஆழ்வார்கள் அருளிச் செய்திருப்பது இந்த இடத்தில் நினைக்கத்தக்கது.
பைங்கிளி வண்ணன் சிரிதரன்
என்பதோர் பாசத்தகப்பட்டிருந்தேன்
பொங்கொளி வண்டிரைக்கும் பொழில்
வாழ்குயிலே குறிக்கொண்டிது நீ கேள்
சங்கொடு சக்கரத்தான் வரக்கூவுதல்
பொன்வளை கொண்டு தருதல்
இங்குள்ள காவினில் வாழக்கருதில்
இரண்டத் தொன்றேல் திண்ணம் வேண்டும்”
என்றும்
என்றுமிக் காவிலிருந் தென்னைத்
ததர்த்தாதே நீயும் குயிலே
இன்று நாராயணனை வரக் கூவாயேல்
இங்குந்தை நின்றும் துரப்பன்
என்றும்
ஆழ்வார்கள் நயம்படப் பாடியுள்ளார்கள்.
இப்படிப் பலவாறு பேசியும் அவள் பேசாமல் கிடந்தாள். வெளியே இருப்பவர்கள் சொல்கின்றவற்றுக்கெல்லாம் பதில் சொல்லிக் கொண்டிருப்பது அவள் எந்தக் குறையும் இல்லாதிருப்பதனால்தான் என்று இவர்கள் நினைத்துக் கொள்கிறார்கள். அவள் உள்ளே என்னதான் செய்து கொண்டிருக்கிறாள் என்று பார்ப்போமே என்று அவள் இருக்கும் அறையின் கதவுத் துவாரத்தின் வழியே பார்க்கிறார்கள்.
உள்ளே ஒருகையில் கண்ணனையும் மற்றொரு கையில் ஒரு பந்தினையும் அணைத்துக் கொண்டிருக்கிறாள். கிருஷ்ணனும் அவளும் பந்து விளையாடுகையில் அவன் தோற்றுவிட, அவ்வெற்றிக்காக அவனை ஒருகையிலும், பந்தை மற்றொரு கையிலும்பிடித்து வைத்திருக்கிறாளாம்.
இதற்கு அருமையாக “ஒரு கையில் விபூதி; மற்றொரு கையில் விபூதிமான். ஒரு கையில் நாரம்; மற்றொரு கையில் நாராயணன். ஒருகையில் சேஷி; மற்றொரு கையில் சேஷம். ஒரு கையில் போக்யம்; மற்றொரு கையில் போக ஸ்தானம். ஒரு கையில் போகோபகரணம்; மற்றொரு கையில் லீலோபகரணம்” என்று பெரியவர்கள் வியாக்கியானம் செய்வார்கள். பிராட்டிதான் சேதனரையும் ஈஸ்வரனையும் ஒன்று சேர விடுபவள். ஆகையினாலே இரண்டு கையில் இருவரையும் பிடித்திருக்கிறாளாம்.
ஆழ்வார்கள் அருளிச் செயல்களில் பந்து விளையாட்டு சில இடங்களில் காட்டப்பட்டிருக்கிறது.
”பந்தணைந்த மெல்விரலாள்” [பெரிய திருமொழி 2-2-4]
“பந்திருக்கும் மெல்விரலாள்” [பெரிய திருமொழி 2-2-9]
“பந்தார் விரலாள் பாஞ்சாலி” [பெரிய திருமொழி 6-7-8]
”பந்தார் மெல்விரல் நல்வளைத்தோள் [பெரிய திருமொழி 7-3-2]
”பெண்ணே! உன்கையிலிருக்க அப்பந்துதான் என்ன பாக்கியம் செய்ததோ? நாங்கள் அப்பந்தாய்ப் பிறவி எடுக்காமல் போனோமே?” என்று இவர்கள் பேச, உள்ளே இருப்பவள், “சரி உங்களுக்கு என்னதான் வேண்டும்? வந்த காரியம் என்ன?” என்று கேட்கிறாள்.
”நாங்கள் உள்ளே வரவேண்டும்; வந்து உன் மைத்துனன் பேர் பாடப் போகிறோம்; உன் அன்னையாகிய யசோதையின் தம்பியாகிய கும்பரின் மகளன்றோ நீ? வந்து உன்பக்கம் நின்று அவன் தோல்விக்கு வசை பாடுகிறோம். உன்னிடம் அவன் பெற்ற தோல்விக்கு சகஸ்ர நாமம் பாடுகிறோம்; கதவைத் திற”
”சரி கண்ணா! நீ போய் கதவைத்திற” என்றாள் அவள். அவனோ “அவர்கள் உன்னுடையவர்கள்; உன் பக்கம் நிற்பவர்கள்; நான் ஏன் போய்த் திறக்க வேண்டும்?” என்று கேட்கிறான். உடனே அவள் வெளியே இருப்பவர்களிடம் ”சரி, நீங்களே கதவைத் திறந்து வாருங்கள்” என்று சொல்கிறாள்.
”இல்லை, இல்லை; நாங்கள் உன் கையைத்தான் எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்; பகவானின் கை பண்ணின பாபத்துக்கு அஞ்சேல் என்று சொல்லும். ஆனால் பிராட்டியான உன் கையோ ஈஸ்வர ஸ்வாதந்தரியத்துக்கு உகந்தது; மேலும் அவன் கைமேல் உன் கை வைக்கிறாய் அல்லவா?
”வரிசிலை வாள்முகத் தென்னைமார்தாம் வந்திட்டு
எரிமுகம் பாரித்தென்னை முன்னே நிறுத்தி
அரிமுகம் அச்சுதன் கைம்மேலென் கைவைத்து
பொரிமுகம் தட்டக் கனாக்கண்டேன்” [நாச்சியார் திருமொழி 6-9]
மேலும் உன்கை பந்தைப் பிடித்துச் சிவந்த கை; செந்தாமரை போன்ற கை;
“அணிமிகு தாமரைக் கையை யந்தோ
அடிச்சியோம் தலைமிசை நீயணியாய்” [திரு. மொழி 10-3-5]
உடனே உள்ளே இருப்பவள் வளையோசை யாருக்கும் கேட்கக் கூடாது என்றெண்ணி வளையல்களை ஒதுக்கிகொண்டு வந்தாள்.
”நீ சீரார் வளை அணிந்துள்ளாய்; அது சீர்மையானது ஏன் தெரியுமா? நாயகனை விட்டுப் பிரியாததாலே கழலாதிருக்கும் தன்மை உடையது. நாயகன் பிரிந்தால் வளையும் கழல்வளையாகிடும்
”எழிலுடைய அம்மனைமீர்! என்னரங்கத்து இன்னமுதர்
குழலகர் வாயழகர் கண்ணழகர் கொப்பூழில்
எழுகமலப் பூவழகர் எம்மானார் என்னுடைய
கழல்வளையத் தாமும் கழல்வளையே ஆக்கினரே
[நாச்சியார் திருமொழி 11-2]
”சங்குதங்கு முன்கை நங்கை”, ”ஒண்தொடியாள் திருமகள்” என்றன்றோ உனக்குப் பெயர்; எனவே வளையொலிப்ப வந்து திறக்க வேண்டும். எங்களுக்காக நாலடி நடந்து வந்துதிறக்க வேண்டும். எம் துன்பம் தீர்க்கும் எண்ணத்துடன் அல்லாமல் உன் காரியம் செய்வதாய் நினைத்து மகிழ்ச்சியாய் வா. மார்கழி நீராட மகிழ்ந்து என்று நாங்கள் நோன்பு நோற்க நீ மகிழ்ச்சியாய் வரவேண்டும்.
நீ நடந்து வரும் அழகு கண்டால் எங்கள் கண் பட்டினி தீரும்; உன் வளையோசை கேட்டால் எங்கள் செவியும் பட்டினி தீரும்; உன் செந்தாமரைக் கை பட்டால் ஸ்பரிச இன்பமும் கிடைக்கும்; கந்தம் கமழும் என்பதால் எம் நாசியும் இன்பம் அடையும். இப்படி எல்லா இந்திரியங்களும் தம் தாகம் தீர்ந்து இன்பம் அடைய வேண்டும். அதைக் கண்டு நீயும் மனம் மகிழ வேண்டும்; ஆதலால் வந்து திறவாயாக’ என்று உள்ளே இருப்பவளை அழைக்கின்றனர்.
திருப்பாவை ஜீயர் என்று ஸ்ரீ ராமானுஜருக்கு ஒரு பெயர் உண்டு. அவர் உஞ்சவிருத்தியின் போது திருப்பாவையை சேவித்துக் கொண்டே போவார். அதுவும் இந்த ‘உந்துமதகளிற்றன்’ பாசுரத்தின் மீது அவருக்கு விசேஷ ஈடுபாடு உண்டு. ஒருமுறை இந்தப் பாசுரத்தைச் சேவித்துக் கொண்டு அவர் பெரிய நம்பியின் திருமாளிகைக்கு வருகிறார்.
‘பந்தார் விரலி! உன் மைத்துனன் பேர்பாட
செந்தா மரைக்கையால் சீரார் வளையொலிப்ப
வந்து திறவாய்! மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்!
என்று பாடிக்கொண்டே வந்தார். பெரிய நம்பியின் மாளிகைக் கதவு தாளிடப்பட்டிருந்தது. அப்போது அவர் மனக்கண்ணில் மகாலக்ஷ்மியே குடிகொண்டிருந்தார். அந்த இல்லத்தினுள்ளிருந்து பெரிய நம்பியின் திருமகள் அத்துழாய் ராமானுஜருக்குப் பிக்ஷையிட கதவு திறந்து வெளியில் வந்தாள். உடையவரோ சாட்சாத் பிராட்டியே வருவதாக எண்ணி அத்துழாயின் திருவடிகளில் விழுந்து சேவிக்கிறார்.
அத்துழாயோ திடுக்கிட்டுப் போகிறாள். அபசாரம் ஆகிவிட்டதே என்று நினைத்து உள்ளே சென்று அப்பாவிடம் நடந்ததைச்சொல்கிறாள். அதைக் கேட்ட பெரிய நம்பிகள் “ராமானுஜருக்கு இன்று ‘உந்து மதகளிற்றன்’ பாசுர அனுபவம் மேலீட்டு போலும்” என்றாராம். இவ்வாறு பாசுர அனுபவத்தால் வந்து திறப்பது அத்துழாய் என எண்ணாமல் மகாலக்ஷ்மியே என்று உடையவர் நினைத்து விட்டதாக ஒரு வரலாறு உண்டு.
ஆனால் இந்நிகழ்ச்சி திருக்கோட்டியூரில் திருக்கோட்டியூர் நம்பியின் திருமாளிகையில் நடந்தது என்றும் கதவை வந்து திறந்தது திருக்கோட்டியூர் நம்பியின் மகளான தேவகி பிராட்டி என்றும் திருச்சி புத்தூர் ஸ்ரீமான் உ.வே.கி ஸ்ரீநிவாசய்யங்கார் ஸ்வாமிகள் தம் திருப்பாவை வியாக்கியானத்தில் தெரிவிக்கிறார். அவர் எழுதியிருப்பதை அப்படியே தருகிறேன்.
“உடையவரும் அதைக்கேட்டு, அதிப்ரீதராய் ஆநந்தாஸ்ருவோடே ‘பயின்றதரங்கம் திருக்கோட்டி’ என்கிறபடியே பெரிய த்வரையுடனே புறப்பட்டுத் திருக்கோட்டியூரேற எழுந்தருளிநம்பி திருமாளிகை வாசலிலே திருப்பாவை அனுஸந்தானத்துடனே தண்டன் ஸமர்ப்பித்து ‘சீரார் வளையொலிப்ப வந்து திறவாய் மகிழ்ந்து’ என்ற வநந்தரத்திலே நம்பி குமாரத்தியான தேவகிப் பிராட்டியார் திருக்காப்பை நீக்க, விஸ்மிதராய், அவரை விழுந்து ஸேவித்து, தேவகி புத்ரத்நத்தைப் பெறுகைக்கு அந்த தேவகிப் பிராட்டி புருஷகாரமாக ஸந்நிதியில் சென்று நம்பியை சேவித்து “
என்று இவ்விருத்தாந்தம் ராமானுஜார்ய திவ்யசரிதையில் சொல்லப்பட்டது.
“பந்தார் விரலியுன் மைத்துனன் பேர்பாடச்
செந்தா மரைக்கையால் சீரார் வளையொலிப்ப
வந்தா ரணங்கே திறவென்ன வாசலின் முன்
எந்தாதை நின்றார் அவ்வெல்லையினில் நம்பிதரும்
அன்னமென் னடையாள் தேவகி யென்னும்
அரும்பெய ருடையஆ ரணங்கு
தன்னொரு கரத்தால் கந்துக மொன்று
தாங்கியோர் தாமரைக் கையால்
இன்னிசை எதிகட் கிறைவனார் திறவென்
றிசைத்தசொல் இறுமுனம் திறந்தாள்
மின்னுமா மணிசேர்ந் திலங்கிய கபாடம்
விண்டுவின் தொண்டர்மெல் லியலை.

கண்டனர் பின்னைப் பிராட்டிமற் றிவளும்
கள்வனென் பொருட்டினா லலர்ந்த
புண்டரீ கச்சீர்த் திருவடி வருந்தப்
போந்திவை திறந்தன ளென்னப்
பண்தரும் பனுவல் மறந்தனர் மண்ணில்
பதைப்புற ஒடுங்கினர் விழுந்தார்
ஒண்டொடி கண்டு வெகுளியோ டேகி
உற்றதைப் பெற்றவர்க் குரைப்பாள்.

என்றிவை மகளார் இயம்பிட நம்பி
இன்பமுற் றிருந்[து]இளை யாழ்வீர்!
ஒன்றுசீர் உந்து மதகளிற் றென்ன
ஓதிய பாடலோ சந்தை
இன்றுநம் வாசல் தலையுறு மளவில்
என்றனர் ஆமென எழுந்து
சென்றுமா மாது கரம்பரி மாறத்
தேசிகக் குன்றையும் வணங்கி”
என்று வடிவழகிய நம்பிதாஸராலும் இந்த விருத்தாந்தம் மிக அழகாக வர்ணிக்கப்பட்டது. பன்னீரயிரப்படி குருபரம்பராப்ரபாவத்திலும் இப்படியே காணப்படுகிறது. வார்த்தமாலையில் 206ம் வார்த்தையிலும் இப்படியே காணப்படுகிறது. இப்படிப் பல கிரந்தங்களில் விவரிக்கப்பட்டிருக்க, அரும்பதவுரைகாரரொருவர் இவ்விருத்தாந்தம் பெரிய நம்பிகள் திருமாளிகையில் அத்துழாய் கதவைத் திறக்கும்போது நடந்தது என்று எழுதியிருப்பது ஆதரிக்கத்தக்கதல்ல என்றே தோன்றுகிறது.’
இந்நிகழ்ச்சி ஒரு பாசுரத்தைச் சேவிக்கும்போது எப்படி மனமுருகிச் சேவிக்க வேண்டுமென்பதைத் தெரிவிக்கிறது எனலாம்.

Series Navigation
author

வளவ.துரையன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *