ஒரு செய்தியின் குறுக்கு வெட்டுத் தோற்றம்

This entry is part 13 of 23 in the series 30 நவம்பர் 2014

 

 E.mail: engrsubburaj@yahoo.co.in

முருகானந்தம் மறுபடியும் தினசரிகளில் செய்தியாகி இருந்தான். ஆனால் இம்முறை அவன் செய்தியான விதம் சந்தோஷப் படும் படியாக இல்லை. முதல் முறையாக அவன் ஊழல் ஒழிப்பு இயக்கத்தில் முழு மூச்சாய் ஈடுபட்டு அதற்காக அவர்கள் நடத்திய மெழுகுவர்த்தி ஊர்வலத்தில் கலந்து கொண்டு, அதை ஊடகங்கள் பிரதானப் படுத்தி வெளியிட்டபோது அவனுடைய புகைப்படம் தினசரிகளில் வெளியானது. ஒரு செய்திச் சேனலில் ஊழலுக்கு எதிரான இவனது இரண்டு நிமிஷப் பேச்சுக் கூட ஒளிபரப்பானது.

முருகானந்தத்தைப் பொறுத்த வரை இந்தியாவில் இலஞ்சமும் ஊழலும் தான் பிரதான பிரச்னை என்றும் ஒவ்வொரு தனி மனிதனும் மனது வைத்தால் அவற்றை வேரோடு கிள்ளி எறிந்து விடலாம் என்றும் சுயநலமும் பேராசையும், குறுக்கு வழியில் முன்னேறி விட வேண்டுமென்கிற முனைப்புமே ஊழலின் ஊற்றுக் கண் என்றும் தன்னளவிலாவது அதற்கு இடம் கொடுக்கக் கூடாது என்பதிலும் அவன் பிடிவாதமாகவே இருந்தான். அரசாங்க அலுவலகங்களில் எவ்வளவு தான் அலைக்கழிக்கப் பட்டாலும் யாருக்கும் எந்த சந்தர்ப்பங்களிலும் அவன் லஞ்சம் கொடுத்து காரியம் சாதித்துக் கொண்டதே இல்லை.

முருகானந்தம் ரேசன் கார்டு வாங்கிய கதையை அவன் சொல்லக் கேட்பது மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும். அவன் அலுவலகத்தில் பலரும் சிவில் சப்ளைஸ் அலுவலகத்திற்குப் போய் பெரிய க்யூவில் நின்று அப்ளிக்கேஷன் நிரப்பிக் கொடுத்து, அப்புறமும் நடையாய் நடந்து யார் யாருக்கோ கையூட்டுக் கொடுத்து, ரேசன் கார்டு வாங்கிய போது, இவன் அப்ளிக்கேசனை நிரப்பி, சாதாரண தபாலில் அனுப்பி வைத்து விட்டு, ரேசன் கார்டு வரும் போது வரட்டுமென்று தேமே என்று இருந்து விட்டான்.

சிவில் சப்ளைஸ் அலுவலகத்திலிருந்து செக்கிங் வந்த போதும், அப்படி வந்த அலுவலர்களும், செக்கிங் முடிந்ததும் போகாமல் தலையைச் சொறிந்து கொண்டு நின்ற போதும், அவர்கள் தலையில் ஏதோ பொடுகுப் பிரச்னை என்பது போல் அதைக் கவனிக்காதது போல் நின்று கொண்டிருந்தான். இவனிடம் ஏதும் பேராது என்பதைத் தெரிந்து கொண்டவர்கள் விருட்டென்று வெளியேறிப் போய் விட்டார்கள்.

ஆனாலும் கொஞ்சம் காலம் கடந்தாலும், கார்டு அவன் பகுதி ரேசன் கடைக்கு அனுப்பப் பட்டு விட்டது என்பது தான் முதல் ஆச்சர்யம். ரேசன் கடையின் ஊழியரோ கார்டைப் பதிந்து கொண்டு தருவதற்கு பணம் கொடுத்தால் தான் முடியுமென்றிருக்கிறார்; பணம் கொடுக்காத பட்சத்தில் கார்டுதாரர் வேறு பகுதிக்குக் குடி போய்விட்டார் என்று குறிப்பெழுதி கார்டை சிவில் சப்ளைஸ் அலுவலகத்திற்கே திருப்பி அனுப்பி விடுவதாய்ப் பயமுறுத்தியும் இருக்கிறார். முருகானந்தமோ ’முடிந்தால் அப்படியே செய்து கொள்ளுங்கள்; அதற்கப்புறம் நீங்கள் இந்தக் கடையில் வேலை செய்கிறீர்களா என்று பார்த்து விடலாம்…’ என்று சவால் விட்டு விட்டு வீட்டிற்குப் போய் விட்டான். மூன்றாவது நாள் வேறு வழி இல்லாமல் கடைக்காரன் முருகானந்தத்தின் வீட்டிற்கே தேடிப் போய் கார்டை ஒப்படைத்தது இரண்டாவது ஆச்சர்யம்!

அவன் பாஸ்போர்ட்டையும் பத்துப் பைசா கூட குறுக்கு வழியில் செலவழிக்காமல் தான் வாங்கி இருக்கிறான். அது பதினைந்து வருஷங்களுக்கு முந்திய கதை. அப்போதெல்லாம் பாஸ்போர்ட் வாங்குவது அத்தனை சுலபமான காரியமில்லை. டிராவல் ஏஜெண்டுகளிடம் கொள்ளையாய் பணம் கட்டித்தான் பாஸ்போர்ட் வாங்க வேண்டும். முருகானந்தம் பாஸ்போர்ட் வாங்க முயற்சித்த போது அவனது நண்பர்கள் அவனிடம் பந்தயமே கட்டினார்கள் – அவன் இலஞ்சங் கொடுக்காமல் பாஸ்போர்ட் வாங்க முடியாது என்று.

முருகானந்தமோ பாஸ்போர்ட் விண்ணப்பத்தையும் தேவையான சான்றிதழ் நகல்களுடன் தபாலில் அனுப்பி விட்டு அதைப் பற்றிய எந்த அக்கறையும் இல்லாமல் பேசாமல் இருந்து விட்டான். நாற்பது நாட்களுக்கப்புறம் பதிவுத் தபாலில் பாஸ்போர்ட் வந்து விட்டது. பாஸ்போர்ட் வந்து சேர்ந்த சில நாட்களுக்கப்புறம் தான் போலீஸ் விசாரணைக்கு வரும்படி காவல் நிலையத்திலிருந்து ஒரு கார்டு வந்தது.

இவன் காவல் நிலையம் போனபோது, இரண்டு பெரிய மனிதர்களிடம் நன்னடத்தைச் சான்றிதழ் வாங்கி வரும்படி சொன்னார்கள். அப்படியே வாங்கிக் கொண்டு போனபோது ரைட்டர் காபிச் செலவுக்கு ஏதாவது கொடுத்து விட்டுப் போ என்றார். இவன் எதுவும் கொண்டு வரவில்லை என்று சொல்லியிருக்கிறான். அப்படியென்றால் இன்ஸ்பெக்டர் வந்தவுடன் அவரைப் பார்த்து விட்டுப் போ என்று காத்திருக்க சொல்லி விட்டு அவரின் எழூத்து வேலையில் மூழ்கிப் போய் விட்டார்.

ரொம்ப நேரங் கழித்துத் தான் இன்ஸ்பெக்டர் வந்தார். அவர் வந்ததும் வராததுமாய் முருகானந்தம் அவருக்கு முன்னால் போய் நின்று பாஸ்போர்ட் என்கொயரிக்கு வந்திருப்பதாகச் சொன்னான். நன்னடத்தைச் சான்றிதழ் எங்கே என்று அவர் எரிச்சலுடன் கேட்கவும் ரைட்டரிடம் ஏற்கெனவே கொடுத்து விட்டதாக இவன் சொல்லவும், ரைட்டரைக் கூப்பிட்டு சத்தம் போட்டிருக்கிறார். அப்புறம் இவனிடம் இன்னும் எதற்கு நிற்கிறாய்; போய்த் தொலை என்று அனுப்பி வைத்து விட்டார். போலீஸ் ஸ்டேசனுக்குப் போய், காசு செலவழிக்காமல் காரியம் சாதித்து வந்தவன் நீ ஒருத்தனாகத் தான் இருக்கும் என்று இவன் நண்பர்கள் ரொம்ப நாட்களுக்கு இவனைக் கிண்டல் பண்ணிக் கொண்டிருந்தார்கள்.

இவனுடைய இலட்சியத்திற்கு முதல் சோதணை அவன் மனைவின் மூலம் வந்தது. அவள் ஒரு தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளியில் அடிமாட்டுச் சம்பளத்திற்கு ஆசிரியையாக வேலை பார்த்துக் கொண்டிருந்தாள். இவனுக்கும் இவனுடைய கம்பெனியில் பெரிதாய் சம்பளமில்லையாதலால் அவளின் சொற்ப வருமானமும் குடும்பத்தை ஓட்ட தேவையாகவே இருந்தது. திடீரென்று ஒருநாள் முருகானந்தத்தின் மனைவி, அவளின் தூரத்து சொந்தக்காரர் ஒருத்தரின் மூலம் ஒரு புரப்போசலைக் கொண்டு வந்தாள்.

முருகானந்தம் வசித்த பகுதியிலேயே இருக்கும் மிகப் பிரபலமான அரசாங்க உதவி பெறும் ஒரு தனியார் மேனிலைப் பள்ளியில் ஒரு ஆசிரியை வேலை காலி இருப்பதாகவும், பள்ளியின் மேனேஷ்மெண்ட்டுக்கு இரண்டு லட்சம் ரூபாய் இலஞ்சமாகக் கொடுத்தால் அந்த வேலையை அவர்கள் முருகானந்தத்தின் மனைவிக்குத் தரத் தயாராய் இருப்பதாகவும் தகவல் சொல்லி, முருகானந்தம் எப்படியாவது அந்தத் தொகையைப் புரட்டி தனக்கு அந்த வேலையை வாங்கித் தரும்படியும் முரண்டு பிடித்தாள்.

இரண்டு லட்ச ரூபாய் புரட்டுவது சிரமம் தானென்றாலும் கொஞ்சம் முயற்சி செய்தால் அவனால் புரட்டி விட முடியும்; என்றாலும் இலஞ்சம் கொடுத்து வேலை வாங்குவதில் அவனுக்கு உடன்பாடில்லை என்பதால் அதற்கு அவன் சம்மதிக்க மறுத்து விட்டான். இரண்டு பேருக்கும் பெரும் சண்டையும் வாக்குவாதமுமாய் தொடர்ந்து அவனுடன் பேசுவதையே நிறுத்தி விட்டாள் முருகானந்தத்தின் மனைவி. சில மாதங்களுக்கு அப்புறம் தான் வீட்டில் இயல்பு நிலையே திரும்பியது.

முருகானந்தம் சொந்த வீடு கட்டும் முயற்சியின் போது தான் இரண்டாம் முறையாக முருகானந்தம் செய்தியில் இடம் பிடித்தான். வங்கியில் கடன் வாங்கித் தான் வீடு கட்ட வேண்டி இருந்தது. வங்கியியில் கடன் வாங்க வேண்டுமென்றால் வீட்டு பிளான் நகராட்சியால் அப்ரூவல் பண்ணி இருக்க வேண்டு மென்றார்கள்.பிளான் போட்டு அப்ரூவல் வாங்கித் தருவதற்காக அவன் ஒரு தனியார் கம்பெனி சர்வேயரை அணுகிய போது அவர் பிளான் போடுவதற்கு மிகக் குறைந்த கட்டணத்தையும், ஆனால் அப்ரூவல் பெற்றுத் தருவதற்கு ஒரு பெருந் தொகையையும் கேட்டார்.

”ஏன் இவ்வளவு பணம்?” என்று இவன் கேட்கவும், ”நகராட்சியில நெறையப் பேர ‘கவனிக்கனும்’…ஸார்; அப்பத்தான் உடனே அப்ரூவல் பண்ணுவாங்க; இல்லைன்னா உப்புச்சப்பில்லாத காரணம் சொல்லி பிளான திருப்பி அனுப்பிக் கிட்டே இருப்பாங்க ஸார்….” என்றார்.

”நாம எல்லா பேப்பர்களையும் ஒழுங்கா வச்சு அப்ளை பண்ணா, அவங்களால எப்படி திருப்பி அனுப்ப முடியும்…?” என்று இவன் அப்பாவியாய்க் கேட்டான்.

”நீங்க என்ன ஸார் இவ்வளவு அப்பாவியா இருக்கீங்க…! எந்த உலகத்துல இருக்கீங்க நீங்கன்னு தெரியல….. அதெல்லாம் ஏகப்பட்ட லூப்கோல்ஸ் இருக்கு ஸார்; அதை பயன்படுத்தி திருப்பி அனுப்புவாங்க…! நீங்க இப்படி இந்தியன் தாத்தா மாதிரி பேசிக்கிட்டிருந்தீங்கன்னா எந்த ஜென்மத்துலயும் உங்களால வீடு கட்ட முடியாதுங்குறத மட்டும் தெரிஞ்சுக்குங்க….!

இப்ப தீர்த்த யாத்திரை போனீங்கன்னா, பிச்சைக்காரங்களுக்குப் போடுறதுக்குன்னு கொஞ்சம் சில்லரை கொண்டு போறதில்லையா, அதுபோல வீடு கட்டனுமின்னா அரசாங்க ஆபீசர்களுக்கும் கொஞ்சம் பிச்சை போடணும்னு நெனச்சுக்குங்க; அந்தச் செலவையும் சேர்த்துத் தான் வீட்டுக்கு பட்ஜெட் போடணும் சார்… பணம் குடுக்காம நம்ம அரசாங்க ஆபீஸுல ஒரு குண்டூசியக் கூட நகர்த்த முடியாது ஸார்….” என்றார் முடிவாக. முருகானந்தத்திற்குத் தான் இந்த மாதிரி சவால்கள் பிடிக்குமே!

சரி அதையும் தான் பார்க்கலாமே…. என்று எண்ணமிட்டபடி, “நீங்க பிளான் மட்டும் போட்டு, கூட வைக்க வேண்டிய பேப்பர்களை எல்லாம் ரெடி பண்ணிக் குடுங்க; மத்தத நானே பார்த்துக்கிறேன்…..” என்றான். அதன்படி அவர் எல்லாவற்றையும் தயாரித்துக் கொடுத்து ஒதுங்கிக் கொண்டார்.

முருகானந்தம் ஒரு நல்ல நாளில் நகராட்சி அலுவலகம் போய் பிளான் அப்ரூவலுக்கு விண்ணப்பித்து, தேவையான பணம் கட்டி மறக்காமல் ரசீதும் பெற்றுக் கொண்டு வந்தான். காலங்கள் தன் போக்கில் கரைந்தும் அவர்களிடமிருந்து எந்த விதமான எதிர்வினையும் இல்லாமல் கிணற்றில் போட்ட கல் மாதிரிக் கிடந்த்து அவனுடைய விண்ணப்பம். ஒருமுறை நகராட்சியிலிருந்து பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் நடத்திய போது ஆணையரைப் போய்ப் பார்த்து மனுக் கொடுத்தான்.

அடுத்த சில நாட்களில் நகராட்சி சர்வேயர் இவனுடைய இடத்தைப் பார்வையிட வந்தார். அது சரியில்லை; இது சரியில்லை என்று ஏகப்பட்ட நொண்டிக் காரணங்கள் சொல்லி, சுற்றி வளைத்து விட்டு “ஒரு ஐயாயிரம் ரூபாய் பணம் குடுங்க; எல்லாத்தையும் சுமுகமா முடிச்சுத் தர்றேன்…” என்றார் காதோடு காதாக. முருகானந்தத்தின் மனதிற்குள் வன்மம் பெருகியது.

”பணம் ஏற்பாடு பண்ணீட்டு போன் பண்றேன்……” என்று சொல்லி அவனுடைய கைத் தொலைபேசி நம்பரைப் பெற்றுக் கொண்டான். அவனை அனுப்பிய கையோடு இலஞ்ச ஒழிப்புத் துறைக்கு போன் பண்ணி விஷயத்தைச் சொல்லவும் அவனை தங்களின் அலுவலகத்திற்கு வரச் சொன்னார்கள். இவன் போகவும் எழுத்து பூர்வமாக இவனிடமிருந்து புகாரை எழுதி வாங்கிக் கொண்டு, முருகானந்தம் கொண்டு போயிருந்த ரூபாய் நோட்டுக்களில் கைரேகை படிவதற்கான இரசாயனத்தைப் பூசி, அவனிடம் தந்து இந்தப் பணத்தை இலஞ்சமாகக் கொடுக்கும் படி அறிவுறுத்தினார்கள். அப்புறம் அங்கிருந்தே சர்வேயருக்கு போன் பண்ணச் சொல்லி, இருவரின் பேச்சையும் பதிந்து கொண்டு அவனை அனுப்பி வைத்தார்கள்.

பணத்தைப் பெற்றுக் கொள்வதற்கு சர்வேயர் ஒரு அதி காலையில் அவருடைய வீட்டிற்கே வரச் சொல்லி இருந்தார். அதன்படி இவன் போய் பணம் கொடுத்து முடிக்கவும், உள்ளே நுழைந்த இலஞ்ச ஒழிப்புத் துறையினர் சர்வேயரைக் கைது பண்ணினார்கள். அவர்கள் கூடவே செய்தியாளர்களையும் அழைத்து வந்திருந்ததால் அடுத்தநாள் வெளிவந்த அனேக தினசரிகளில் ஒரு பெரிய ஹீரோவாகி இலஞ்சத்திற்கு எதிராக முருகானந்தம் சொல்லியிருந்த கருத்துக்களெல்லாம் அவனுடைய போட்டோவுடன் பிரசுரமாகி இருந்தது.

ஒருவழியாய் முருகானந்தம் வீடுகட்டி முடித்ததும் வரி கணக்கீட்டிற்கு வந்த அதிகாரி எதுவுமே பேசாமல் இவன் கட்டியிருந்த 800 சதுர அடி வீட்டிற்கும் எக்குத் தப்பாய் வரி விதித்து விட்டுப் போனதும் அதே அளவு வீடு கட்டியிருக்கும் அக்கம் பக்கத்து வீட்டுக்காரகள் இவன் கட்டுவதில் பாதித் தொகை தான் வரியாகக் கட்டுகிறார்கள் என்பதும் தனிக்கதை.

முருகானந்தத்தின் வாழ்க்கையில் ஊழலுக் கெதிரான அவனுடைய போராட்டத்தின் இரண்டாவது சோதணையும் அவனின் மனைவியின் மூலமே வந்தது. ஐந்து வருஷங்களுக்கு முன்பு அவளுக்கு அரசு மேல் நிலைப் பள்ளியில் ஆசிரியையாக வேலை கிடைத்தது. கவுன்சிலிங்கில் சென்னையிலோ அதன் புறநக்ர்ப் பகுதியிலோ காலி இடம் எதுவும் இல்லை என்று அவளுக்கு திருப்பத்தூரில் தான் போஸ்டிங் ஆனது. அடுத்த வருஷ கவுன்சிலிங்கில் இடம் மாறிக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் அங்கு போய்ச் சேர்ந்தாள்.

ஆனால் ஒவ்வொரு வருஷ கவுன்சிங்கிலும் முயற்சி செய்து கொண்டு தான் இருக்கிறாள். திருப்பத்தூர் மற்றும் வேலூர் கல்வி மாவட்டங்களுக்குள் தான் சுற்றி சுற்றி வர வேண்டி இருக்கிறது. திருவள்ளூர் மாவட்டத்திற்குள் கூட மாற முடியவில்லை. சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டத்திற்குள் அனேகமாய் காலி இடங்களே வருவதில்லை.

அபூர்வமாய் வரும் ஒன்றிரண்டு காலி இடங்களும் முதல் நாள் கவுன்சிலிங்கில் அந்தந்த மாவட்டத்தில் இப்போது வேலை பார்ப்பவர்களே கொஞ்சம் பக்கம் என்று மாறிக் கொள்வதால் இவள் அடுத்த நாள் போகும் போது வேகன்சியே இருப்பதில்லை. அப்படியே கொஞ்சம் தூரமான பள்ளிகளில் இடமிருந்தாலும் இவளை விட சீனியர்கள் அந்த இடத்தைப் பிடித்துக் கொள்வார்கள்.

இவளுடன் வேலை பார்க்கும் அலமேலு கல்யாணமானதும் அவளுடைய கணவன் கன்னியாகுமரியில் இருப்பதால் கவுன்சிலிங் எதுவும் இல்லாமல் நடுவாந்திரமாக கன்யாகுமரிக்கே மாற்றலாகிப் போனதும் ஆச்சர்யமாக இருந்தது. அவள் தான் சொன்னாள்; ஒவ்வொரு வருஷமும் பள்ளிகளில் விழும் எல்லாக் காலி இடங்களும் வெளியில் தெரிவிக்கப் படுவதில்லை என்றும் சில முக்கியமான இடங்களை மினிஸ்டர் கோட்டா என்று ஒதுக்கி விடுவார்கள்; அப்படி விழும் இடங்களுக்கு அமைச்சர்கள் அல்லது அரசியல் செல்வாக்கு மிக்கவர்கள் விரும்பும் நபர்களை நியமித்துக் கொள்ளலாம் என்றும் விளக்கமளித்தவள், அவளும் ஒரு அரசியல் புள்ளி மூலம் மோதி முயற்சித்துத் தான் தற்போது கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மாற்றல் வாங்கியிருப்பதாக சொன்னாள் வெற்றிக் களிப்புடன்.

அவளிடம் திருவள்ளூர் அல்லது சென்னை மாவட்டத்தில் அவளின் பாடத்திற்கு ஏதாவது வேகன்ஸி விழுந்தால் அவரின் எஷுக்கேசன் டிபார்ட்மெண்ட் நண்பர் மூலம் விசாரித்துச் சொல்லும்படி சொல்லி வைத்திருந்தாள் சுப்புலட்சுமி. அலமேலு இரண்டு நாட்களுக்கு முன்பு சுப்புலட்சுமிக்கு போன் பண்ணி திருவள்ளுவர் மாவட்டத்தில் சுமார் ஐந்து பள்ளிகள் வருகிற கல்வி ஆண்டிலிருந்து மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப் பட போவதாகவும், அதனால் யாராவது பெரும் புள்ளியின் மூலம் மோதி ஏதாவதொரு பள்ளியில் பி.ஜி. போஸ்ட்டை மடக்கிப் போடும் படியும் தகவல் சொல்லி விட்டாள்.

அன்றைக்கிலிருந்து அவள் முருகானந்தத்தை விடாமல் நச்சரிக்கத் தொடங்கி விட்டாள். “உங்க ஊர்க்காரர் ஒருத்தர் தான் மினிஸ்டரா இருக்குறாருன்னு அப்பப்ப பெருமையா சொல்றீங்கள்ல….. அவரப்   போய்ப் பார்த்து எனக்கு திருவள்ளுவர் மாவட்டத்துல ஏதாவதொரு ஸ்கூலுக்கு டிரான்ஸ்பர் வாங்க முயற்சி பண்ணுங்களேன்…… நீங்க எதுவும் பண்ணாம நேர்மை, நியாயம்னுட்டு இன்னும் பேசீட்டு இருந்தீங்கன்னா நாம இப்படியே காலமெல்லாம் ஆளுக்கொரு பக்கமா அல்லாட வேண்டியது தான்…..” என்றாள்.

கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையுமாம்; மனைவிகளால் கரைக்க முடியாத மனிதர்களும் இருக்கிறார்களா என்ன? முருகானந்தமும் முதல் முறையாக அவன் பிடிவாதத்தைக் கொஞ்சம் தளர்த்திக் கொள்ள முடிவு செய்தான். மனைவி வேலை நிமித்தமாய் வெளியூரிலேயே தங்கியிருப்பதால் பல வகையான சிரமங்களை அவனும் அனுபவித்துக் கொண்டிருப்பதாலும், அவர்களின் ஆறு வயதுக் குழந்தையும் வருஷம் ஒரு பள்ளியாக அலைக்கழிந்து கொண்டிருப்பதாலும் கொஞ்சம் செலவழித்தாலும் பரவாயில்லை; மனைவிக்கு இந்த வருஷம் எப்படியாவது மாற்றல் வாங்கி விடுவதென்று தீர்மானித்தான்.

அமைச்சர் ஆதிமூலத்தை சென்னையில் வைத்து சந்தித்து விட அவன் எடுத்துக் கொண்ட முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை. அவரை நெருங்கவே முடியாத அளவிற்கு எப்போதும் அவரைச் சுற்றி அல்லக்கைகளின் கூட்டம். ஏகப்பட்ட கேள்விகள்; அமைச்சரின் ஊர்க்காரன் என்று சொல்லியும் கூட அவர்கள் அவரின் அருகில் கூட இவனை நெருங்க விடவில்லை. அவர் சொந்த ஊருக்கு – முருகானந்தத்திற்கும் அதுதான் சொந்த ஊர் – போயிருக்கும் செய்தி கேள்விப்பட்டு அவரை எப்படியும் சந்தித்து விடுவெதென்று அலுவலகத்திற்கு இரண்டுநாள் விடுப்பு எழுதிக் கொடுத்து விட்டு புறப்பட்டுப் போனான். அதிகாலையிலேயே அமைச்சரின் வீட்டிற்குப் போயிருந்தான் முருகானந்தம்.

இப்பொழுதெல்லாம் அவர் அதிகம் ஊர்ப்பக்கம் தலையைக் காட்டுவதுமில்லை. இந்தமுறையும் அவர் வந்திருப்பது அனேகம் பேருக்குத் தெரியாது என்றும் இது மிகவும் ரகசியமான வருகை என்றும் அவர் பேத்தியின் திருமண விஷயமாக வந்திருப்பதாகவும் முருகானந்தத்தின் நண்பன் சொல்லியிருந்தான். அமைச்சரின் சொந்தக்காரர்களிடம் அவனுக்கு நெருக்கமான உறவிருப்பதால் அவன் சொல்வது நம்பத் தகுந்ததாய் இருந்தது.                        அப்படியும் அந்த அதிகாலையிலேயே அமச்சரின் வீட்டிற்கு முன் நிறையவே கூட்டமிருந்தது. அப்போது அமைச்சர் தூங்கி விழித்திருக்கவில்லை. அவர் இரவு நெடு நேரங் கழித்துத் தான் வீட்டிற்கு வந்ததால் இன்னும் தூங்கிக் கொண்டிருப்பதாக அங்கிருப்பவர்கள் சொன்னார்கள்.

முருகானந்தம், அமைச்சரை இதற்கு முன்பும் ஒரே ஒருமுறை சந்தித்திருக்கிறான். அவன் படித்து முடித்து வேலையில்லாமலிருந்த ஆரம்ப நாட்களில் அவனுடைய அப்பா அவனை வற்புறுத்தி அழைத்துக் கொண்டு போயிருந்தார். அப்போதெல்லாம் அமைச்சர் இத்தனை பிஸியாய் இருக்கவில்லை. சொந்த ஊருக்கும் அடிக்கடி வந்து போய்க் கொண்டிருந்தார்.

அமைச்சரை அப்பா தன்னுடைய பால்ய நண்பன் என்றும் தாங்கள் ஐந்தாம் வகுப்பு வரை சேர்ந்து படித்ததாகவும் (இரண்டு பேருமே அதற்கு மேல் படிக்கவில்லை) பலதடவைகள் பெருமை பொங்க சொல்லி இருக்கிறார். இவன் அதை எல்லாம் நம்பியதில்லை. சும்மா கதை விடுகிறார் என்று அவரிடமே கலாய்த்திருக்கிறான். அமைச்சரைப் பார்த்து வரலாமென்று இவனை அவர் அழைத்த போதெல்லாம் அவருடன் போக அவன் சம்மதிக்கவில்லை. இப்போதும் வலுக்கட்டாயமாகத்தான் அவனை அழைத்து வந்திருந்தார்.

அமைச்சர் அவருடைய மில்லில் இருப்பதாக்க் கேள்விப் பட்டு அப்பா அங்கு அழைத்துப் போனார். இவனுடைய அப்பாவைப் பார்த்ததும் அவரே கேட்டிற்கு ஓடோடி வந்து விட்டார். ”வா….வா…. வேலாயுதம்…..” என்று அப்பாவை பெயர் சொல்லி அழைத்து, உரிமையாய் கையைப் பிடித்து அழைத்துப் போனார். வீட்டிற்குள் போனதும் சோபாவைக் காட்டி உட்காரச் சொல்லி, வேலைக்காரனை அழைத்து இளநீர் வெட்டித்தரப் பணித்தார். அவரின் தொண்டர்கள் எல்லாம் வேறொரு கட்டிடத்தில் இருந்தார்கள்.

முருகானந்தத்திற்கு நம்பவே முடியவில்லை. அமைச்சர் இவனைக் காட்டி, “உன் பையனா வேலாயுதம்?” என்றார். ”ஆமாம்ப்பா….. காலேசுக்கெல்லாம் போய் படிச்சுட்டான்; இன்னும் வேலை எதுவும் கிடைக்காததால வெட்டியா ஊர் சுத்திக் கிட்டிருக்கான்; அதான் உன் கிட்ட கூட்டியாந்தேன்; நீ தான் இவனுக்கு ஏதாவது வழி பண்ணனும்…..” என்றார்.

அமைச்சர் இவனிடம் “என்னப்பா படிச்சிருக்குற?” என்றார். இவன் “எம்.காம்ங்க….” என்றான். “அரசாங்க வேலைக்கு இண்டர்வியூ எதுவும் வந்துருக்குதா…..?” என்று கேட்டார். இவன் இல்லை என்றதும், இண்டர்வியூ ஏதாச்சும் வந்தால் தன்னை வந்து சந்திக்கும் படியும் அந்த வேலை கிடைக்க ஆவண செய்வதாகவும் சொன்னார்.

”வேலை கிடைக்குறது வரைக்கும் வேணும்னா நம்ம மில்லுல, இல்லைன்னா தியேட்டர்ல ஏதாச்சும் வேலை போட்டுத் தரட்டுமா……?” என்ற கேள்வியுடன் அமைச்சர் முருகானந்தத்தைப் பார்த்தார். அவன் தயங்குவதைப் புரிந்து கொண்டு “நல்லா யோசிச்சு அப்புறம் கூட பதில் சொல்லு….” என்று பெருந்தன்மையாக பேசி அனுப்பி வைத்தார்.

வீட்டிற்கு வந்ததும் அவனுடைய அப்பா கொஞ்சம் வற்புறுத்தினார்; அமைச்சரின் ஏதாவது நிறுவனத்தில் வேலையில் சேர்ந்து கொள்ளும்படி. அவனுக்கு அதில் கொஞ்சமும் ஆர்வமில்லை. அரசியல்வாதிகளிடம் வேலை செய்வதை அவன் விரும்பவும் இல்லை. ஊரிலிருந்தால் எங்கே தன்னை வற்புறுத்தி அவரின் பால்ய நண்பனின் அலுவலகத்தில் அப்பா வேலையில் சேர்த்து விடுவாரோ என்று பயந்து சென்னைக்கு ரயிலேறி விட்டான்.

சென்னையில் அவனாகவே முட்டி மோதி இப்போது ஓரளவிற்கு நல்ல நிலைமைக்கு வந்து விட்டான். ஆரம்ப காலத்தில் ஒருசில அரசாங்க வேலைகளுக்கு நேர்முகத் தேர்வு வந்த போதும் இவனுக்கு அமைச்சரைப் போய் பார்க்க வேண்டுமென்று தோன்றவில்லை.

அவனுடைய அப்பா உயிரோடு இருந்திருந்தால் அவனை கண்டிப்பாக அமைச்சரிடம் அழைத்துப் போய், ஒருவேளை அவனுக்கு அரசாங்க வேலைக்கும் ஏற்பாடு பண்ணியிருந்தாலும் பண்ணியிருப்பார். ஆனால் அவர் ஒரு நள்ளிரவில் இதயவலி வந்து தூக்கத்திலேயே இறந்த பின்பு அவனுக்கு அமைச்சரைப் பற்றியெல்லாம் நினைக்க நேரமில்லாமல் போய்விட்ட்து.

அமைச்சரின் காலை என்பது ஒன்பது மணிக்குத் துவங்கியது. ஒவ்வொருத்தராக அழைத்து பேசத் தொடங்கினார். முருகானந்த்த்தின் முறை வந்த போது தன்னுடைய அப்பாவின் பெயரைச் சொல்லி அறிமுகப் படுத்திக் கொண்டான்.

வேலாயுதம் என்ற பெயர் அவர் முகத்தில் எந்த சலனத்தையும் ஏற்படுத்தாதது இவனுக்கு முதல் அதிர்ச்சியாக இருந்தது. தன்னுடைய அப்பாவின் பெயரை அமைச்சரின் நினைவடுக்குகளிலிருந்து தேட வைப்பதற்காக இவன் மேலும் கொஞ்சம் நீட்டி முழக்க முற்பட்டபோது “சீக்கிரம் விஷயத்தச் சொல்லுப்பா…..” என்று சிடுசிடுத்தார்.

முருகானந்தம் தன்னுடைய மனைவி பற்றிய விபரங்களைச் சொல்லி அவளை வருகிற கல்வி ஆண்டில் மேல் நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்படும் சென்னை அல்லது அதன் புறநகர்ப் பகுதியிலுள்ள ஏதாவதொரு பள்ளிக்கு மாற்றலாகி வருவதற்கு உதவி செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொண்டான். அமைச்சர் கொஞ்ச நேரம் யோசணையிலிருந்தார். அப்புறம் அவருடைய பி.ஏ. வை அழைத்து ஏதோ விவரங்கள் கேட்டார்.

முருகானந்தத்திடம் கல்வித்துறை அதிகாரி ஒருவரின் பெயரைக் குறிப்பிட்டு “நீங்க சென்னைக்குப் போய் அவரைப் பார்த்து நான் அனுப்புனதா சொல்லி, மேல்நிலைப் பள்ளியா தரம் உயர்த்தப்படப் போற ஸ்கூல் லிஸ்ட்ட வாங்கிகிட்டு அதுல எந்த எடம் உங்க மனைவிக்கு சரியா வரும்னுட்டு முடிவு பண்ணீட்டு என்னை சென்னையிலயே வந்து பாருங்க…..” என்றார். முருகானந்த்திற்கு மிதப்பது போலிருந்தது. கண்டிப்பாக அமைச்சர் தன்னுடைய மனைவியின் மாற்றலுக்கு ஏதாவது உருப்படியாய் செய்வார் என்ற நம்பிக்கை துளிர்த்தது.

எல்லாம் நல்ல படியாகவே நடந்தது. கல்வி அதிகாரி அமைச்சரின் பெயரைக் கேட்டதும், அவரிடம் போனில் பேசி முருகானந்தம் அவர் அனுப்பிய ஆள் தான் என்பதை உறுதிப் படுத்திக் கொண்டு, மினிஸ்டர் கோட்டா உட்பட எங்கெல்லாம் வேகன்சி வருகிறது என்கிற விவரங்களைத் தந்தார்.

அதில் முருகானந்தத்தின் வீட்டிலிருந்து ஐந்து கிலோமீட்டருக்கும் குறைவான தூரத்தில் ஒரு பள்ளி, வருகிற கல்வி ஆண்டில் மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப் படப் போவதாகவும் அதில் அவனின் மனைவியின் பாடப் பிரிவிலேயே காலி இடம் வருகிறது என்றும் தெரிந்தது.

அந்தப் பள்ளியில் மட்டும் வேலை கிடைத்தால் அவள் வீட்டிலிருந்து தினசரி வேலைக்குப் போய் வந்து விடலாம். உடனே அமைச்சரைப் போய்ப் பார்த்தான். இந்த முறை அவரைச் சந்திப்பதில் பெரிய சிரமங்கள் எதுவும் இருக்கவில்லை. இவன் பி.ஏ.வைப் போய்ப் பார்த்த்தும் அவர் எந்த வழி மறிப்பையும் செய்யாமல் அமைச்சரை சந்திக்க உடனே அனுமதித்தார். அமைச்சரும் இந்தமுறை இறுக்கம் தளர்ந்து மிகவும் இயல்பாகப் பேசிப்னார்.

அவர் இவன் சொன்ன பள்ளியின் பெயரையும் இவனுடைய மனைவி பற்றிய விவரங்களையும் தன்னுடைய குறிப்பேட்டில் குறித்துக் கொண்டு, “ஒண்ணும் பிரச்னையில்ல தம்பி…. அந்த ஸ்கூல்லயே உங்க மனைவிக்கு மாற்றல் வாங்கிக் குடுத்துடலாம்…. நான் அந்தத் துறைக்கான மினிஸ்டர்கிட்டப் பேசுறேன்…..” என்றார்.

அப்புறம் “வேலாயுதம் பையனுக்கு பண்ணாம நான் வேற யாருக்குப் பண்ணப் போறேன்? அதுக்கு முன்னால நீங்க இப்ப வேலை பார்க்குற கம்பெனியிலருந்து ஒரு லெட்டரும், நீங்க உங்க மனைவிய பிரிஞ்சிருக்கதால படுகிற சிரமங்களையும் வேதணைகளையும் கொஞ்சம் உருக்கமா எழுதிக் குடுக்கனும்; நீங்க நம்ம பி.ஏ.வப் பாருங்க…. அவர் எப்படி எழுதுறதுங்குறது பற்றியும் மேற்கொண்டு எல்லா விவரங்களும் சொல்வார்…..” என்று கை கூப்பி அனுப்பி வைத்தார்.

அமைச்சரின் பி.ஏ. மெதுவாக ஆரம்பித்தார். “டிரான்ஸ்பெருக்கு கொஞ்சம் செலவாகுங்கிற விவரமெல்லாம் தெரியுமில்ல…..?” என்றார். இவனும் தெரியும் என்பதைத் தெரிவிக்கும் முகமாக தலையாட்டினான்.

”டீச்சர் டிரான்ஸ்பருக்கு பொதுவான ரேட் அஞ்சு ரூபா; ஆனா நீங்க நம்ம மினிஸ்டரோட ஊர்க்காரரா இருக்குறதால உங்ககிட்ட ஒண்ணு குறைவா நாலு ரூபா வாங்க சொல்லி இருக்குறார். நிறையப் பேருக்கு தர வேண்டி இருக்குறதால இதைவிட குறையா வாங்க முடியாது……” என்றார் பி.ஏ.

முருகானந்தத்திற்கு நாலு ரூபாய், ஐந்து ரூபாய் என்றால் எவ்வளவு என்று புரியவில்லை. நான்காயிரம், ஐந்தாயிரமா? எதற்கும் கேட்டு உறுதிப் படுத்திக் கொள்ளலாம் என்று பி.ஏ.விடம் கேட்டான். அவர் சிரித்துக் கொண்டே ”நீங்க எந்தக் காலத்துல இருக்கீங்க? எல்லாம் லட்சம்ங்க…..” என்று சொல்லவும் சிலீரென்றிருந்தது. ஒரு டிரான்ஸ்பருக்கு இவ்வளவு தொகையா என்று ஆச்சர்யமாகவும் இருந்த்து.

”அட்வான்ஸா முதல்ல ஒரு லட்ச ரூபாய் உடனே குடுத்துடணும்; மீதிப் பணத்த டிரான்ஸ்பர் ஆர்டரக் கையில வாங்கீட்டுக் குடுத்தாப் போதும்…. பணத்துக்கு ஏற்பாடு பண்ணீட்டு எனக்கு போன் பண்றீங்களா?” என்று அவரின் கைத்தொலைபேசி எண்ணைக் கொடுத்து முருகானந்தத்தை அனுப்பி வைத்தார்.

அவன் முதலில் இதெல்லாம் நமக்கு சரிப்பட்டு வராது என்று பேசாமல் ஒதுங்கி விடத்தான் நினைத்தான். அவன் மனைவியிடம் தன்னுடைய இயலாமையைச் சொன்ன போது, ”என் தலைவிதி வேலூர் மாவட்டத்திலேயே கெடந்து சாவறேன்; வேற என்ன செய்றது? நீங்க இங்கயே வேற எவளையாவது சேர்த்துக்கிட்டு குடித்தனம் பண்ணுங்க…..” என்றாள் கோபமும் விரக்தியுமாய்.

”என்னம்மா இப்படிப் பேசுற! திடீர்னு அவ்வளவு பணத்துக்கு நாம எங்கம்மா போறது? வீடு கட்டாம இருந்தாலாவது கையில பணம் இருந்துருக்கும்; வர்ற கவுன்சிலிங்குல இப்ப அப்கிரேடாயிருக்கிற ஏதாவது ஸ்கூலுக்கு மாறி வந்துட முடியாதா? ” என்றான் முருகானந்தம்.

”என் வயித்தெரிச்சலக் கிளறாதீங்க…. அப்புறம் என் வாயில அசிங்கமா ஏதாவது வந்துரும்; போன வருஷம் தமிழ்நாடு முழுக்க நூறு ஸ்கூல் அப்கிரேடாச்சு; அதுல ஒரு ஸ்கூலக் கூட கவுன்சிங்குல காமிக்கல…. எல்லா ஸ்கூலுக்கும் புழக்கடை வழியாத்தான் போஸ்ட்டிங் போட்டாங்க….. உங்களுக்கு துப்புல்ல அவ்வளவு தான்…..”

ஆயிரம் ஐயாயிரம் என்று இலஞ்சம் வாங்குகிற கீழ்நிலை ஊழியர்களெல்லாம் இலஞ்ச ஒழிப்புத் துறையிடம் மாட்டிக் கொண்டு அவமானப்பட்டு தங்களின் வேலையையும் இழந்து கஷ்டங்களை அனுபவிக்கும் போது இலட்ச இலட்சமாய் லஞ்சம் வாங்கும் திமிங்கலங்கள் எப்படி தெனாவட்டாக அலைகிறார்கள் என்பதை நினைக்கும் போது அவனுக்கு ஆயாசமாக இருந்தது.

”பேசாம இலஞ்ச ஒழிப்புத் துறைக்கு போன் பண்ணி இவங்கள மாட்டி உட்டுடடுமா?” என்றான்.

”முட்டாள்த் தனமா எதுவும் பண்ணித் தொலைக்காதீங்க… என் நகைகள் கொஞ்சம் இருக்குல்ல; தாலிக் கொடி தவிர மத்த எல்லாத்தையும் அடமானம் வச்சு அல்லது வித்து பணம் கொண்டு போய் அந்த மினிஸ்டர் கிட்டக் குடுத்து எப்படியாவது பக்கத்துல போஸ்டிங் வாங்குங்க…. இந்த சந்தர்ப்பத்தை விட்டா நமக்கு வேற வாய்ப்புக் கிடைக்காது…..” என்றாள் சுப்புலட்சுமி.

முருகானந்தமும் அப்படியே அவளின் நகைகள் கொஞ்சத்தை விற்று ஒரு லட்ச ரூபாய் எடுத்துக் கொண்டு, அமைச்சரின் பி.ஏ.விடம் போனில் தொடர்பு கொண்டபோது அவர் அதிகம் பேச மறுத்து விட்டார். எது வென்றாலும் நேரில் வரும்படி சொன்னார். இவன் அமைச்சரின் அலுவலகத்திற்குப் போன போது அவரின் பி.ஏ. பணம் விஷயமெல்லாம் அமைச்சரிடமே நேரில் பேசிக் கொள்ளுங்கள் என்று உள்ளே அனுப்பி வைத்தார்.

இவன் உள்ளே நுழைந்த போது, அமைச்சர் யாரிடமோ போனில் தீவிரமாய்ப் பேசிக் கொண்டிருந்தார். ரிசீவரின் வாயைக் கையால் மூடியபடி இவனை உட்காரும் படி சைகையில் சொல்லி விட்டு பேசுவதைத் தொடர்ந்தார்.

”அப்படியா சங்கதி; நம்ம பி.ஏ.வும் விசாரிச்சுப் பார்த்துட்டு கொஞ்சம் வில்லங்கமான ஆளுதேன்னு சொன்னாரு… பேப்பர்ல யெல்லாம் வந்துருந்ததா, நான் கவனிக்கலையே! அதுக்கென்ன? ஒரு ஷாக் டீரிட்மெண்ட்டோட நல்லதா ஒரு பாடம் கத்துக் குடுத்துடலாம்….சரியான நேரத்துல தகவல் தந்ததுக்கு ரொம்ப நன்றி…..” என்று சொல்லி போனை வைத்தார். அவர் வலுக்கட்டாயமாய் சிரிப்பது போலிருந்தது.

இவனிடம் ”வாங்க தம்பி நல்லாயிருக்கீங்களா….!” என்று நலம் விசாரித்தார். அப்புறம் “என்ன விஷயம்னு சொல்லுங்க தம்பி….” என்றார் இப்போது தான் முதல் முறையாகப் பார்க்கிற தோரணையில்.

முருகானந்தம் இவனின் மனைவியின் மாற்றல் பற்றி ஞாபகப்படுத்தி விட்டு, “ஒரு இலட்சம் ரூபாய் கொண்டாந்துருக்கேன்; அட்வான்ஸா வச்சுக்குட்டு இடத்தை ரிசர்வ் பண்ணீடுங்க….. மிச்சத்த ஆர்டர் வாங்குனதும் தந்துர்றேன்…..” எனறபடி பணத்தை எடுத்து மேஜையின் மீது பரத்தி வைக்கவும் அமைச்சர் பதறி எழுந்தார். அவரின் முகபாவம் முற்றிலுமாக மாறியது.

”என்ன இது! இலஞ்சமா? நானா…. ஓ கடவுளே! போலீஸ்; போலீஸ்…” என்றபடி அவசரத்திற்கான பஸ்ஸரை அழுத்தி கூச்சல் போட்டார். பாதுகாப்பு அதிகாரிகள் உள்ளே வந்து ”என்ன ஸார் பிரச்னை….?” என்றபடி முருகானந்தத்தைச் சுற்றி வளைத்தார்கள்.

”என்னைப் பற்றி ஏதும் தெரியாமல் இவர் எனக்கு லஞ்சம் கொடுக்க முயற்சிக்குறார்…..” என்றபடி முருகானந்தத்தைக் காட்டினார். அவர்கள் அவனை கைது பண்ணினார்கள்.

 

அடுத்தநாள் எல்லா தினசரிகளிலும் தலைப்புச் செய்தி இப்படி இருந்தது.

 

இலஞ்ச லாவண்யத்திற்கு எதிராக அமைச்சர் ஆதிமூலம் சமர்! அவருக்கு

இலஞ்சம் தர முயன்ற இளைஞர் கையும் களவுமாய் பிடிபட்டு கைதானார்

  • முற்றும்
Series Navigationசாபக்கற்கள்எனது கதைகளின் கதை – 1.எங்கள் வாத்தியார்
author

சோ சுப்புராஜ்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *