மதுவாகினி _ தோட்டாக்கள் பாயும் வெளி _ கவிஞர் ந.பெரியசாமியின் இரண்டு கவிதைத் தொகுப்புகள் குறித்து சொல்லத் தோன்றும் சில….

This entry is part 18 of 31 in the series 11 ஜனவரி 2015

periyasamy

 

ந.பெரியசாமி(1971)

பெரம்பலூர் மாவட்டம் பசும்பலூர் கிராமத்தில் பிறந்தவர். தற்சமயம் ஓசூரில் தனியார் நிறுவனமொன்றில் பணி. 2003களிலிருந்து எழுதிவருகிற இவரது முதல் கவிதைத் தொகுப்பு ‘நதிச்சிறை’ 2004இல் வெலியானது. ஓசூர் தமுஎகச கிளைப் பணிகளில் பங்கேற்பது. ஓசூர் குறிஞ்சி ஃபிலிம் சொசைட்டி நண்பர்களுடன் இணைந்து மாற்று சினிமா திரிஅயிடுவது. புதுவிசை இதழின் நிர்வாகப் ஒறுப்பு என தனது தொடர்ந்த செயல்பாடுகளால் பரவலாக அறியப்பட்டவர்.

 

_ ‘மதுவாகினி’ தொகுப்பிலிருந்து.

 

 

“ஆசைகொண்டு வாங்கிய மூன்று சக்கர சைக்கிளை வீட்டினுள் விருப்பம்போல் ஓட்டித் திரிந்தேன். வளர்ச்சி கொள்ள சற்றே பெரிய சைக்கிள். தள்ளிப் பழகி சிறு சிறு காயங்களுடன் பெடல் அடித்துக்கொண்டிருந்தேன். விடாப்பிடியாக அதனோடு பிரியம் கொள்ள நண்பர்களின் ஆலோசனைகளோடு தொடர்ந்தேன். அதன் நுணுக்கங்கள் பிடிபட, வீதியில் நானும் எல்லோரோடும் ஓட்டினேன்.

 

இது என் கவிதைகளுக்கும் பொருந்தும்.

 

_ ‘தோட்டாக்கள் பாயும் வெளி’ தொகுப்பில் கவிஞர் ந.பெரியசாமி.

 

 

’மயிலிறகோ, மலைப்பாறையோ

உறுபாரமெதையும் இறக்கிவைக்க

திரும்பத் திரும்ப இங்கேயே வருகிறேன்.

மறுப்பேதுமின்றி தோள் தரும் பரிவுக்கு

தந்து தீராது வந்தனம்…’

_

 

_ ‘வரிகளின் கருணை’ என்று தலைப்பிட்ட என் கவிதையின் ஆரம்ப வரிகள் இவை. இந்தத் தலைப்பில் வெளியான ஏறத்தாழ 18 நவீன தமிழ்க்கவிஞர்களை முன்வைத்து நான் எழுதிய கட்டுரைகளடங்கிய தொகுப்பின் ‘சொல்லவேண்டிய சில’ பகுதியில் பின்வருமாறு கூறியிருந்தேன்:

 

“வாசிப்பனுபவத்தை வரிகளின் கருணையாகவே பாவிக்கத் தோன்றுகிறது. ஒரு கவிதைத் தொகுப்பு கையில் கிடைத்தவுடன் ஏதோ ஒரு புதிய உலகம் விரிய நான் அதற்குள் பயணிப்பதாய் ஓர் உணர்வு என்னை ஆட்கொள்ளத் தொடங்குகிறது. …..”

 

தோழர் ந.பெரியசாமியின் முதல் தொகுப்பு (நதிச்சிறை _ 2004இல் வெளியானது) எனக்கு வாசிக்கக் கிடைக்கவில்லை. அவருடைய இரண்டாவது தொகுப்பு ‘மதுவாகினி’ அகநாழிகைப் பதிப்பக வெளியீடாக 2012 டிசம்பரில் வெளியாகியுள்ளது. ஏறத்தாழ 73 கவிதைகள் இடம்பெற்றுள்ளன. மூன்றாவது கவிதைத் தொகுப்பு ‘தோட்டாக்கள் பாயும் வெளி’ 2014 ஆகஸ்டில் ‘புது எழுத்து’ மாற்றிதழ் பதிப்பகத்தால் பிரசுரிக்கப்பட்டுள்ளது. 50க்கு மேற்பட்ட கவிதைகள் இதில் இடம்பெற்றுள்ளன. இந்த இரண்டு கவிதைத்தொகுப்புகளிலும் எனக்கு மறுபடியும் வாய்த்தது ’வரிகளின் கருணை’!

 

பாரதிக்கு பராசக்தி, கண்ணம்மா, நகுலனுக்கு சுசீலா, கலாப்ரியாவுக்கு சசி, பிரம்மராஜனுக்கு சித்ரூபிணி…. போல் ந.பெரியசாமிக்கு மதுவாகினி! அவளாகவும், அவனாகவும், அவராகவும் உள்ள அவள் குழந்தையாய், குமரியாய், காதலியாய், மனைவியாய், தாயுமாகி, தானுமாகி, வானாகி, மண்ணாகி, வளியாகி ஒளியாகி இரண்டறக் கலந்திருக்கிறாள் இந்த இரு தொகுப்புகளின் வரிகளெல்லாம்! அவளாகியவள் சில கவிதைகளில் வெளிப்படையாக முகம் காட்டுகிறாள். சிலவற்றில் சூக்குமத் திருவை வெளிப்படுத்துகிறாள்.

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதாய் மதுவாகினி தொகுப்பின் முதல் கவிதை செடிமரம் கவிஞரின் நேர்மையான, நேர்த்தியான கவித்துவத்திற்கு சான்று பகர்ந்துவிடுகிறது!

 

செடிமரம்

நிலம் கீறி விதையிட்டு

பிரயத்தனங்களால் தழைத்திடாது

இறுகிக் கிடக்கும் பாறையினுள்

சுயம்புவாக முளைத்து மிளிரும்

செடிமரம் நீ

யென் செல்லமே

 

‘செல்லமே’ என்ற விளியின் அல்லது அறிவிப்பின் தளும்பல் கவிஞரின் கவிதைகளெங்கும் கனிவாகவும், தோழமையாகவும், அறச்சீற்றமாகவும், வாழ்க்கை குறித்த பிரமிப்பாகவும் வாழ்நிலை குறித்த வலியாகவும் உணரக் கிடைக்கிறது நமக்கு.

 

மிச்சமிருக்கும் நாட்களில்’ என்ற கவிதை சூழலியல் பாதிப்பு குறித்து வலியோடு சுட்டிக்காட்டிக்கொண்டே போய் இவ்வாறு முடிகிறது:

 

அவசமாக ஆயுளை விழுங்கும்

இழப்பின் பட்டியல் நீள

புகைந்து கிடக்கும் நம்மின்

நெடுங்கோபத்தை

சேகரிக்கத்தான் வேண்டியிருக்கிறது

விதைகளென.

 

பாறை என்ற கவிதையின் ஆரம்ப நான்கு வரிகளே ஒரு முழுநிறைவான தனிக்கவிதை யாவதாய் அத்தனை அடர்செறிவாய் அமைந்துள்ளது!

 

‘பேச விரும்பா துயர்களால்

கெட்டித்த பெண்ணாய் கிடக்கும்

பாறையிலமர்ந்து கவிஞன்

எழுதிக்கொண்டிருக்கிறான் தன் வலியை.

 

_ ’அமுதசுரபி’ என்ற கவிதையில் கர்ணனைப் பற்றிய கனிவு நியாயமானது. எனவே, நிறைவானது. ஆனால், ‘வனதேவதை’ கவிதையில் ராமன் என்ற பிம்பங் குறித்துக் கட்டமைக்கப்பட்டுள்ள கோபமே ‘அவன் மணமானவன் என்று தெரிந்தும் அவனைத் துரத்தும் சூர்ப்பனகையை, சீதையை அவள் விழுங்கப் போவதால், தாக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்படும்போதும், பெண் என்பதால் கொல்லாமல் விட்டு மூக்கறுத்து அனுப்பும் ராமனை கயவனாக, நடந்ததை அண்ணனிடம் திரித்துக் கூறும் பொய்யள் சூர்ப்பனகையை வனதேவதையாக்கி அவளிடம் மண்டியிட்டுத் தவழ்வதாக ராமனை எள்ளிநகையாடச் செய்கிறது என்று எண்ணத் தோன்றுகிறது.

 

‘தீட்டுறிஞ்சி’ என்ற தலைப்பிலான கவிதை, வேறு சிலருடைய கவிதைகளில் காணக்கிடைப்பதுபோல் பெண்கடவுளர்களைப் பற்றி கேலிபேசாமல், ‘நாப்கீன்கள் கிடைக்க வேண்டினாள்’ என்று செல்லியம்மன் கேட்பதாகக் கூறுவதில் ஒருவித கரிசனமே தொனிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

நிறைய கவிதைகளை அடிக்கோடிட்டுச் சுட்டிக்காட்டிக்கொண்டே போகலாம். காட்சிப்படுத் தல்கள், கதைசொல்லல்கள் இருந்தாலும் அவை கவித்துவம் குறையாமல் கட்டமைக்கப் படுவதில் தகுந்த கவனம் எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கிறது. தொகுப்பின் பெரும்பாலான கவிதைகளில் கவிஞரின் சீரிய மொழியாளுமையும், துல்லிய கவிப்பார்வையும் புலனா கின்றன. இந்தக் காரணத்தால் , சில கவிதைகளின் மொழிநடையும், கட்டமைப்பும் எளிமை யான, உரைநடைத்தன்மையோடு இருப்பது பிரக்ஞாபூர்வமான தெரிவு என்பது புரிகிறது. எடுத்துக்காட்டுகள் : ‘வேறென்ன செய்ய?, சுமைதாங்கிக் கற்களல்ல.

 

 

‘நதிச்சிறை, மதுவாகினி எனும் என் இரு தொகுப்புகளிலிருந்தும் அடுத்த பரிணாமம் கொண்டதாய் இத்தொகுப்பு இருக்கிறதென நம்புகிறேன்” என்று ‘தோட்டாக்கள் பாயும் வெளி’ தொகுப்பின் ஆரம்பத்தில் குறிப்பிட்டுள்ளார் கவிஞர். ஒரு வாசகராக என்னால் இரண்டிற்குமிடையே ஒரு தொடர்ச்சியையே உணர முடிகிறது. இதை நான் குறையாகச் சொல்லவில்லை. காலவழுவமைதி தானே வாழ்வின் சாராம்சமே! காலத்தால் முன்னோக்கி நகர்ந்திருப்பதில் ‘தோட்டாக்கள் பாயும் வெளி’யில் அகவயமாகவும், புறவயமாகவும் அதிக வலி கூடியிருப்பதாய் தோன்றுகிறது. இந்தத் தொகுப்பின் முதல் கவிதை ‘நம்பிக்கை’ என்ற தலைப்பைக் கொண்டுள்ளது:

 

நம்பிக்கை

 

துளிகளாக முகம் பட்டு

நினைவை நனைத்து ஓடினாள்

கல்குத்தி முள்கிழித்த

ரணங்களோடு தொடர்கிறேன்

என்றாவது நதி

மேல்நோக்கியும் பாயுமென்று….

                                 

தலைப்புக்கு எதிர்நிலையில், இந்தக் கவிதை ஒருவித நம்பிக்கையின்மையையே முன்னிலைப்படுத்துவதாக ஒரு வாசகராக உணர்கிறேன். இந்த வரிகளை மதுவாகினி தொகுப்பில் மஞ்சள் நிற தேவதைக்கு என்ற கவிதையின் வரிகளான

 

‘கைகோர்த்து கவிதை பேசி நடக்க

தனித்த உலகைக் கேட்குமென்

மஞ்சள் நிற தேவதையிடம்

கனவுகள் மெய்ப்படும்

செல்லமென்றேன்’

 

என்ற வரிகளின் எதிர்பார்ப்பில் ஒரு உணரக் கிடைக்கும் நம்பிக்கையோடு ஒப்பிட்டுப் பார்க்கவேண்டும். இந்த முரண்பாடு அல்லது மனப்போராட்டம் கவிதை யின் அடிப்படைக்கூறுகளுள் ஒன்று.

 

A being with no shell, open to pain,

Tormented by light, shaken by every sound

_ Rilke

 

நவீன தமிழ் இலக்கிய வெளியில் முனைப்பாகத் தொடர்ந்து இயங்கிக்கொண்டி ருக்கும் தோழர் சி.மோகன் ஒரு சமயம் தனக்குப் பிடித்த வரிகளாக அலைபேசிக் குறுஞ்செய்தியில் அனுப்பித் தந்த வரிகள் மேலே தரப்பட்டுள்ளன. அத்தகைய வலிகூடிய வரிகள் இத்தொகுப்பில் நிறையவே உள்ளன.

 

உதாரணத்திற்கு ‘இருளும் ஒளியும்’ தலைப்பிட்ட கவிதை:

 

மரம்

தன் நிழலைக் கிடத்தி

இரண்டாகக் கிழித்தது என்னை.

அம்மணச் சிறுவனாகி

மிதந்தலைந்தேன் குளத்தில்

அருகிலிருக்கும் நந்தவனத்தில்

எச்சிலாக்கினேன் புளியமரம் ஒன்றை.

தொழிகளுக்குப் பூக்களைக் கொய்தேன்.

காம்புகளில் மீந்த தேன் சுவைத்தேன்.

மயக்கத்தில் புரண்டேன்

வெய்யில் சுட்டது.

 

கூலிச் சீருடை அணிந்து

பிழைப்புக்குத் தயாரானேன்

சுருங்கியது மர நிழல்.

 

_ஒரு வகை split-personality நிலை. இந்தப் ‘பிளவு-நிலை’ _ தனிமனித அளவிலும், சமூக அளவிலும் தினந் தினம், ஒவ்வொரு தருணத்திலும் தவிர்க்க முடியாமல் கவிஞன் மீது கவிந்திறங்கியபடியே. ஒருமுறை 104 டிகிரி காய்ச்சல் அடித்துக்கொண்டிருக்கும்போது ‘தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா’ கணக்காய் ’புயல்கரையொதுங்கியபோது’ என்ற கவிதையெழுதினேன்… உள்ளும் புறமுமான அந்தக் கொதிநிலை மிகவும் அச்சுறுத்துவதாயிருந்ததில் ‘இனி இத்தகைய பரிசோத னைகளை மேற்கொள்ளவே கூடாது; ஆள் உயிரோடு இருந்தாலே, வாழ்க்கை என்னும் நெடுங்கவிதையை வாழ்ந்துபார்த்துக்கொண்டிருந்தாலே போதுமானது என்ற ஞானம் தோன்றிவிட்டது! என்றுமே நோயுமாகி, மருந்துமாகி கவிஞரை வாழ்வித்துக்கொண்டிருக்கிறது கவிதை என்பது உண்மைதான்!

 

தோழர் ந.பெரியசாமியையும் அவ்வாறே கவிதை திரும்பத்திரும்ப மீட்டெடுத்த படியே! தலையணையாக மேகத்துண்டு வாய்க்கிறது கவிஞருக்கு [தலையணை]! இன்னொரு சமயம் கவிஞன் விண்மீன்களாகிக்கொண்டிருக்கிறான்! (கவிதை: பக்கம் 49) ஏதுமறியாக் குழந்தையாக மலை மினுங்கிக் கொண்டிருக்கிறது (மூதாய்).அவருடைய கவிப்பார்வையில்); உயிரைத் துளி நீராக்கி பசிய இலையொன்றில் மிதக்கச் செய்ய முடிகிறது கவிஞரால்! புலி வால் பிடித்த கதை என்ற தலைப்பிட்ட கவிதை முழுக்க முழுக்கக் குறியீடுகளால் ஆனது! ஆதிக்கத்தில் வழிந்த எச்சில் மிக அடர்செறிவான கவிதை

 

குழந்தைகள், அவர்களின் மாய உலகம், நிராதரவான நிலை, பள்ளியில் அவர்கள் அடையும் அக, புற பாதிப்புகள் என நிறைய கவிதைகள் குழந்தைகளைக் கருப் பொருளாகக் கொண்டிருக்கின்றன.

 

இயற்கை இவருடைய கவிதைகளில் இரண்டறக் கலந்திருக்கிறது! இவருடைய கவிதைகளில் சிலவற்றின் தலைப்புகள்: பூனையாவாள் அம்மா நதி ஈந்த எறும்பு, அணிலாடுதுறை, ஓணான் உருவாக்கிய பகை, வண்ணக்கிளி, நெட்டிலிங்கப்பூ,

 

காந்தியை நுனிப்புல் மேய்வதாய் சகட்டுமேனிக்கு அடிமட்டமான வார்த்தைகளில் பழிப்பது என்றுமே சில படைப்பாளிகளின் பொழுதுபோக்காக இருந்துவருகிறது. கவிஞர் ந.பெரியசாமி அவர்களில் ஒருவர் அல்ல என்பதை அவருடைய கவிதை அக்டோபர் முதல் நாளில்… எடுத்துக்காட்டுகிறது.

 

தறுதலை என்ற தலைப்பிட்ட கவிதையில் பின்வரும் வரிகள் இடம்பெறுகின்றன:

பிழைக்க புகுந்த நவீனக் கூட்டில்

அடைந்து கிடக்கின்றேன்

வம்புதும்பற்ற

அற்பக் கூலியாக’

 

.இத்தனை அருமையாகத் தன் நிலையை ரத்தினச்சுருக்கமாக எடுத்துரைக்கும் கவிதைசொல்லி அற்பக் கூலியல்ல : அற்புதக்கூலி! என்று சொல்லத் தோன்று கிறது!

 

நினைவுகள் வசிக்க

தேவையாயிருக்கின்றன

மயிலின் தோகைத் துணுக்குகள்

 

என்று ‘நினைவில் வசிக்கும் தோகை என்ற தலைப்பிட்ட கவிதையில் இடம்பெறும் வரிகளின் கவித்துவமும், அது வரவாக்கும் நெகிழ்ச்சியும் கனமானவை. இந்த இரண்டு தொகுப்புகளிலும் மலரும் முள்ளுமாக தனக்கான மயிலின் தோகைத்துணுக்குகளை, தேர்ந்தெடுத்த, ஆழமான வார்த்தைப்பிரயோகங்கள், கருப்பொருள்கள் மூலம் தன் கவிதைவரிகளெங்கும் தூவிக்கொண்டிருக்கிறார் தோழர் ந.பெரியசாமி. அவற்றை வாசிக்கும் நமக்கும் நமக்குத் தேவையான மயிலின் தோகைத்துணுக்குகள் நிறையவே கிடைக்கின்றன!

 

 

 

 

 

 

0

Series Navigationபாயும் புதுப்புனல்!இலக்கிய வட்ட உரைகள்: 9 தேவைதானா இலக்கிய வட்டம்?
author

லதா ராமகிருஷ்ணன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *