சீஅன் நகரம் – வாங்க.. சாப்பிடலாம் வாங்க

This entry is part 11 of 23 in the series 18 ஜனவரி 2015

1-111-12நாங்கள் சீஅன் நகரம் செல்லப் புறப்பட்டது மிகவும் எதேட்சயாக நடந்தது. பல வருடங்களாக செல்ல வேண்டும் செல்ல வேண்டும் என்று ஏற்பாடுகள் செய்த போதெல்லாம், அதை சாத்தியப்படுத்த முடியவில்லை. ஆனால் இந்த வருடம் பல மாதங்களாக, கிருஸ்துமஸ் விடுமுறை நாட்களில் எங்காவது செல்ல வேண்டும் என்ற எண்ணம் இருந்த போதும், இந்த இடத்தைப் பற்றி எண்ணவில்லை. எந்தத் திட்டமும் டிசம்பர் 22ஆம் தேதி வரையிலும் தீட்டவுமில்லை. அன்று தான் திடீரென்று பயணம் மேற் கொள்ள வேண்டும் என்ற வேகம் ஏற்பட விழித்துக் கொண்டோம். பல ஊர்கள் பட்டியலில் இறுதியில் சீ’அன்னைத் தேர்ந்தெடுத்தோம். டெரகோட்டா வீரர்களைப் பார்க்க வேண்டும் என்பது மட்டுமே குறி. 24ஆம் தேதியே கிளம்பத் தயாரானோம். சீனப் பயணம் மேற்கொள்ளத் தேவையான நுழைவு அனுமதி என் மகளுக்கும் என் தங்கையின் மகளுக்கும் இருக்கவில்லை. திங்களன்று காலையே சென்று பதிவு செய்து விட்டு, செவ்வாய் வாங்கிக் கொண்டு, புதனன்று கிளம்பியே விட்டோம். எங்கள் குடும்பமும் என் தங்கையின் குடும்பமும் சேர்ந்த ஆறுவர்.
நான் முனைவர் பட்டப் படிப்பிற்காக பல்கலைக்கழகத்தில் இவ்வருடம் சேர்ந்திருக்கிறேன். எங்கள் வகுப்பில் நான்கைந்து பேர்கள் தவிர, மற்ற அனைவருமே சீனாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்தவர்கள். அறிமுக நாளன்று ஒரு மாணவி, தான் சீ’அன் நகரத்தவள் என்றும், யாரேனும் அங்கு செல்ல விரும்பினால், உதவி செய்யத் தயார் என்று கூறியது நினைவிற்கு வந்தது. உடன் அவரை விடுமுறை நாளென்றும் பாராமல், வி சாட் மூலம் தொடர்பு கொண்டேன். மறு நொடியே, எந்த இடம் பார்க்க வேண்டும் என்று கேட்டார். “டெரகோட்டா வீரர்கள் தான் முக்கியம். பிறகு என்ன இடமெல்லாம் பாhக்கலாம்” என்று அவரிடமே கேட்டேன். குறுகிய காலத்தில் இணையத்தில் ஆராய நேரம் இருக்கவில்லை.
சீ’அன் நகரத்திலிருந்து காக்கும் வீரர்களான டெரகோட்டா வீரர்கள் இருக்கும் இடம் இரண்டு மணி நேரப் பயணத்தில் லின் டொங் என்ற இடத்தில் இருக்கிறது என்று சொன்னார். இது வரையிலும் வீரர்கள் இருப்பது சீஅன் நகர் என்றே எங்கள் எண்ணத்தில் பதிந்திருந்தது. சென்று வந்தோர் கூறியது நினைவிற்கும் வரவேயில்லை. இப்போது எங்களுக்கு ஐயமின்றி லின் டொங் என்ற இடத்திற்கு நாங்கள் போக வேண்டும் என்று புரிந்தது. அப்படியென்றால் தங்குவது எங்கே? சீ’அன் நகரிலா? லின் டொங்கிலா? சீ’அன் நகரம் ஷான்சீ மாகாணத்தின் தலைநகர் என்ற காரணத்தினால், அங்கேயே தங்க முடிவு செய்தோம். விடுதிகளை விசாரித்து ஓரிடத்தைத் தேர்ந்தெடுத்தோம்.
என் சக மாணவி செல்ல வேண்டிய மற்ற இடங்களை பற்றிய விவரங்களையும் தந்தார். டாக்ஸி கட்டணங்கள் மிகவும் அதிகம். டிசம்பர் மாதமென்பதால் குளிரும் அதிகமாக இருக்கும். அதனால் பார்த்துப் பயணம் செய்யுங்கள் என்ற அறிவுரையையும் தந்தார். அனைத்தையும் மனதில் வாங்கிக் கொண்டு கிளம்பினோம்.
24ஆம் தேதி மதியம் கிளம்பி, மாலையில் அங்கு விமானத்தில் தரையிறங்கத் தயாரான போது, அறிவிப்பில் அப்போதைய சீதோஷணம் 0சி என்று சொன்னார்கள்.
நாங்கள் கிளம்பும் முன் பார்த்த விவரத்தின் படி இங்கு 3-8சி வரை இருக்கும் என்று எண்ணியிருந்தோம். பனியில் தான் இடங்களைப் பார்க்க வேண்டி இருக்குமோ என்று எண்ண ஆரம்பித்தோம். ஆனால் 0சி பனி இல்லாது இருந்தது ஆச்சரியமாகவும் ஆறுதலாகவும் இருந்தது. விடுதிக்கு வந்து சேர்ந்ததும், மாலையிலேயே எங்காவது சென்று வர வேண்டும் என்று தயாரானோம்.
தோழி சொன்ன ஹ_ய் மிங் ஜியே என்ற இடம் தங்கும் விடுதிக்கு அருகே இருந்ததால், விடுதியில் வழிகாட்டி மையத்தில் இருந்தோர், அந்த இடம் பார்க்க வேண்டிய இடம் என்று கருத்து தெரிவித்ததால், அங்கேயே சென்று இரவு உணவினையும் உண்டு வரலாம் என்று முடிவு செய்துக் கொண்டு கிளம்பினோம். அந்த வீதிக்கு இன்னொரு பெயர் முஸ்லிம் வீதி என்றும், உணவு நன்றாக கிடைக்கும் என்றும் கூறினார்கள். விடுதியிலிருந்து 10 நிமிட நடையில் இருக்கிறது என்றும் சொன்னார்கள். வெளியே வந்தும் குளிர் அதிகமாக இருக்கவே, -3சி என்று எண்ணுகிறேன், நடப்பதை விட டாக்ஸியில் செல்லலாம் என்று எண்ணம் கொண்டோம். சில அடிகள் தான் வீதியில் சென்றிருப்போம். நம்மூர் ஆட்டோ போன்ற ஒரு வண்டி செல்வதைக் கண்டோம். அது செல்வது மட்டும் ஆட்டோ போன்றது. ஆனால் நம்மூர் நாய்களைப் பிடித்துச் செல்லப் பயன்படுத்தும் சிறு அடைக்கப்பட்ட வண்டிதான் அது. குளிர் என்பதால் அது அப்படி அமைக்கப்பட்டு இருந்தது. எவ்வளவு என்று கேட்ட போது, 40 யுவான் என்றனர். 10 நிமிட நடையில் இருக்கும் இடத்திற்கு அத்தனையா என்ற கேள்வி எழுந்தது. இருந்தாலும், இந்த வண்டியில் செல்ல ஆசைப்பட்டதால், 15 யுவான்க்கு வந்தால் செல்வோம் என்று பேரம் பேசினோம். எங்களுக்குத் தெரிந்த கொஞ்ச சீனம் அங்கு எங்களுக்கு நன்றாகவே பயன்பட்டது. அவர்கள் பேரத்திற்குச் சம்மதித்து, வண்டியில் ஏறினோம். ஒரு வண்டியில் நான்கு பேர்கள் மட்டுமே செல்ல முடியும். இரண்டு வண்டிகள் பேசினோம். அந்தச் சவாரியும் சற்றே வித்தியாசமாகத் தான் இருந்தது. இறங்கும் போது, அந்த வண்டிக்கு என்ன பெயர் என்று கேட்டோம். அதற்கு “மோதி” என்று பெயராம். எங்கேயும் மோதிக் கொண்டே இருக்குமோ என்னவோ? இல்லை நம்ம நரேந்திர மோடி ஞாபகமாக வைக்கப்பட்டதோ என்னவோ?

குறிப்பிட்ட இடம் வந்ததும், அதற்கு மேல் வண்டி செல்லாது, நடந்து தான் செல்ல வேண்டும் என்று கூறி நிறுத்தினார்கள் மோதியை. இறங்கியதும் அவர்கள் காட்டிய வழியில் நடக்க ஆரம்பித்தோம். அது பெரிய சாலை. எதிரில் ஒரு ஓரத்தில் பல கடைகள் தெரிந்தன. சாலையைக் கடந்தோம். அந்த வீதிகளில் மக்கள் நடமாட்டம் அதிகமாகவே இருந்தது. அகலமான சாலையாக இருந்ததால், மெல்ல கடைகளை பார்த்த வண்ணம் சென்றோம்.
விதவிதமான உணவுப் பண்டங்கள். கறி வகைகள், காய் வகைகள், பழ வகைகள் என்று பல விதமான தின்பண்டங்கள். அட நம்மூர் தோசை கூட. ஒரு இடத்தில் தோசை சுட்டு விற்றுக் கொண்டிருந்தார் ஒரு பெண்மணி. உடனே சுவைக்கத் தோன்றியது. ஒரு தோசை வேண்டும் என்று சொன்னோம். நம்மூர் அரிசி மாவு போல எதோ ஒன்று. சற்றே மஞ்சள் நிறத்துடன் இருந்தது. பெரிய சட்டியில் மாவினை விட்டு, பெரிய தோசை சுட்டார். அதற்கு மேல் எதோ ஒரு வித திரவியத்தைத் தடவினார். துருவிய காரட், வெள்ளரி, வெங்காயம் தூவினார். பெங்களுரிலிலே ஒரு கடையில் 99 வகை தோசைகள் செய்து விற்கிறார் ஒருவர் என்று கேள்விப்பட்டு, விடுமுறைக்குச் சென்ற போது, அங்கு சென்று வாங்கி உண்டது ஞாபகத்திற்கு வந்தது. தோசை மாவு ஒன்று தான். அதன் மேல் போட்ட பொருட்களைப் பொறுத்து, வௌ;வேறு பெயரிடப்பட்டு, தோசைக் கடையை நன்றாக நடத்தினார் அந்த மனிதர். அதேப் போன்று இங்கு காய் தோசை செய்து கொடுத்தார் அந்தப் பெண்மணி. உண்டு பார்த்த போது நன்றாகவே இருந்தது.
பழரசக் கடைகள். தயிர் கடைகள். நீள நீள குச்சிகளில் கறி வகைகள். இடை இடையே குழந்தைகள் விரும்பி வாங்கும் விளையாட்டுப் பொருட்களின் கடைகளும் இருந்தன. சரி இது தான் நாங்கள் வர வேண்டிய வீதி போலும் என்று எண்ணினோம். உணவு விடுதிகள் ஒன்றையும் காணவில்லையே என்று எண்ணிய நேரத்தில், சாலையின் கடைசியில் நின்றிருந்தோம். இடது புறமாக ஒரு சிறு வீதி. பெரிய நுழைவு விதானம். மக்களின் தலைகளை மட்டுமே காண முடிந்தது. ஆம், அது தான் நாங்கள் பார்க்க வேண்டிய ஹ_ய் மிங் வீதி. முஸ்லிம் கடை வீதி. ஜியே என்றால் சிறு வீதியாம். லு என்றால் பெரிய சாலையாம். அந்த வித்தியாசத்தையும் அன்று நாங்கள் கற்றுக் கொண்டோம்.
வீதிக்கு நுழைவாயிலில் விதானத்தைத் தாண்டி நடக்க மேடை ஒன்று இருந்தது. அதன் மேல் ஏறி நின்றால் முன்னால் நிற்கும் மக்கள் நிறைந்த வீதியைக் காணலாம். அந்த வீதியிலும் நாங்கள் கடந்து வந்த வீதியிலும், கடைகளை நடத்துவோர் முஸ்லிம்கள். வீதியின் பெயர் காரணத்தைப் புரிந்து கொண்டோம். கடை நடத்தும் பெண்கள் அனைவரும் தலையில் அங்கியை அணிந்திருந்தனர். ஆண்கள் பலரும் குல்லாயுடன் இருந்தனர். அன்று கிருஸ்துமஸ் நாளின் முந்தைய இரவு என்பதால், கூட்டமும் அதிகமாகவே இருந்தது. கூடவே ஒரு சந்தேகம் எழுந்தது. இருக்கும் இடமோ மதம் சாரா சீனாவின் ஒரு மாகாணத்தின் தலைநகரில் இருக்கும் முஸ்லிம் வீதியில். தினமோ கிருஸ்துமஸ் நாளின் முந்தைய இரவு. சீனாவில் கிருஸ்துமஸ் விழாவா? பரவாயில்லையே. எம்மதமும் சம்மதமான இடத்தில் இருக்கிறோம் என்ற மகிழ்ச்சி ஏற்பட்டது.
தின்பண்டங்கள், மாமிச உணவுகள், கடலை மிட்டாய் வகைகள், பஞ்சு மிட்டாய் வகைகள், தோபு உணவு வகைகள், உருளைக்கிழங்கு வருவல்கள், வேக வைத்த சக்கரைவள்ளிக் கிழங்கு வகைகள், தயிர் வகைகள், கேக் வகைகள், சீன நூடுல்ஸ் வகைகள், திம்சம் என்று அழைக்கப்படும் நம்மூர் கொழுக்கட்டைகள் என்று வீதியின் இரு மருங்கிலும் எண்ணிறந்த கடைகள். ஒரு ஒரு அடிக்கும் ஒரு கடை. வீதியிலும் கடைகள். வீதிக்கு ஓரத்தின் கட்டிடங்களிலும் கடைகள்.

நம்மூர் திருவிழா வீதியை நினைவிற்குக் கொண்டு வந்தது. கடைகளில் சீ’அன் நகரைப் பற்றி கட்டியங் கூறும் நினைவுப் பொருட்களும்> சீன அலங்காரப் பொருட்களும்> அங்கிகளும்> குளிருக்காகப் பயன்படும் மேல் துணிகளும் இருந்தன. பல உணவு விடுதிகளும் இருந்தன. வழியெல்லாம் விற்ற பண்டங்களில் கண்களுக்கு நன்றாக இருந்த> நாக்கில் எச்சில் ஊற வைத்த> சிலவற்றை வாங்கிச் சாப்பிட்டுப் பார்த்தோம். உருளைக்கிழங்கு வருவல் காரசாரமாக ஜோராக இருந்தது. அதேப் போல் நம்மூர் புட்டைப் போன்று சிறு சிறு மரப் பாண்டங்களில் வேக வைத்து> குச்சியில் அமைத்து> இனிப்பான ஜெல்லி இட்டு கொடுத்தது மற்றொரு சுவையான பண்டம்.

இரவு உணவினை அங்கேயே சாப்பிட்டுச் செல்லவோம் என்று முடிவு செய்து> சற்றே பெரிய விடுதி ஒன்றினைத் தேர்ந்தெடுத்து உள்ளே நுழைந்தோம். நம்மூர்களில் இருப்பது போன்று கடையின் நுழைவாயிலேயே பீத்தா ரொட்டி> நூடுல்ஸ் நிறைந்த பெரிய பெரிய வட்டமான பாத்திரங்களைக் காண முடிந்தது. அதையெல்லாம் கடந்து உள்ளே சென்றோம். விடுதியின் மாடிப் பகுதிக்குச் சென்றோம். அகன்ற விடுதி. மரத்தாலான பென்சுகள். மர நாற்காலிகள். அதிஷ்டவசமாக உணவு அட்டவணையில் ஆங்கிலமும் இருந்தது. அதனால் சாதாரணமாக உண்ணும் கோழிக் கறியும்> காய்கறிகள் மட்டுமே போட்ட கலவைச் சாதமும்> கோழிக்கறி கலவைச் சாதமும் வாங்கினோம். பீத்தா ரொட்டி இட்ட ஆட்டிறைச்சி நூடுலஸ் சீ’அன்னின் சிறப்பு உணவு என்று தோழி சொல்லியிருந்ததால்> அதை உண்டு பார்க்கலாம் என்று அதையும் வாங்கினோம். உணவு சுவையாவே இருந்தது. அங்கிருந்த சீனர்களுடன் எங்களுக்குத் தெரிந்த சீனத்தை பேசிப் பயிற்சி செய்தோம்.

பிறகு மக்கள் கூட்டத்துனூடே நடந்துச் செல்ல ஆரம்பித்தோம். சீ’அன்னின் சிறப்பு கூறும் சில நினைவுப் பொருட்களை வாங்கினோம். தம் பண்டங்களைப் பலரும் கூவிக் கூவி விற்றார்கள். சில இடங்களில் இழையிழையாக நூடுல்ஸ் செய்த காட்டி> வரும் மக்களின் கண்களைக் கவர்ந்தனர். வேர்க்கடலை மிட்டாய் மற்றும் எள்ளு மிட்டாய்கள் செய்ய> பெரிய பெரிய மரத்தாலான சுத்தியல் கொண்டு மாவினை இடிப்பது ஒரு புறம். வீதியின் கடைசிக்கு அப்படியே வந்தோம். அங்கிருந்த சிறு சிறு சிமெண்டு உருளை அமைப்பின் மேல் ஏறி வீதியைப் பார்த்தோம். தலைகளை மட்டுமே காண முடிந்தது. வீதியைப் பார்க்கவே முடியவில்லை. பரவாயில்லை… சீனாவிலும் கிருஸ்துமஸ் விழாவினை உண்டு கழிக்கின்றனர் என்று தெரிந்து கொண்டோம். ஹ_ய் மிங் வீதி எங்களுக்குச் சற்றே வித்தியாசமான வீதியாகத் தெரிந்தது.
வீதியின் முடிவில் பிரம்மாண்டமான ஒரு கட்டிடம் விளக்கினொளியில் பளபளவென்று இருந்தது. அது தான் அவ்வூரின் சிறப்பு மிக்க பறை கோபுரம் என்று அதன் அருகே சென்ற போது தெரிந்தது. அதைப் பார்த்து விட்டு> இரவு 11:00 மணி இருக்கும்> விடுதிக்குத் திரும்ப எத்தனித்தோம். மக்கள் வெள்ளம் அப்போதும் குறையக் காணோம். அதற்கு அங்கு அன்றும் அதற்கு அடுத்த நாளும் விடுமுறை நாளும் கிடையாது.
விடுதிக்குத் திரும்ப நடக்க வேண்டுமா என்று குழந்தைகள் கேட்டதும்> மோதியிலேயே சென்று விடலாம் என்று முடிவு செய்தோம். ஆறு பேர் கொண்ட வண்டியும் இருப்பது அப்போது தான் தெரிந்தது. 30 யுவானுக்கு பேரம் பேசி> ஆறுவரும் ஒரே வண்டியில் ஏறி விடுதிக்குத் திரும்பினோம்.

Series Navigationதொடுவானம் 51. கிராமத்து பைங்கிளிசங்க இலக்கியத்தில் நாய்களுக்கும் மனிதனுக்கும் உள்ள உறவு
author

சித்ரா சிவகுமார், ஹாங்காங்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *