டெல்லியில் மோத இருக்கும் இரண்டு கருப்பு ஆடுகள்

This entry is part 17 of 23 in the series 18 ஜனவரி 2015

Anna-Hazare-movementஅன்னா ஹஸாரே 30 ஆண்டுகளுக்கும் முன்பாக ரானேஜி காவ் சிந்தி என்னும் தனது கிராமத்தை மேம்படுத்துவதில் இயற்கை விவசாயம், சிறு நீர்த்தேக்கங்கள் எனத் தம் பொது வாழ்க்கையைத் துவங்கினார். மகாராஷ்டிர அரசில் ஊழலைக் களைய பல போராட்டங்களை அவர் முன்னெடுத்தார்.

அகில இந்திய அளவில் ஊழல் ஒழிப்புக்கான லோக்பால் மசோதாவை பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவது மிகப் பெரிய சவாலாக இருந்தது. அவர் ஏற்படுத்திய மக்கள் விழிப்புணர்வு மற்றும் அதற்கு இந்தியாவில் மட்டுமல்லாமல் புலம் பெயர்ந்த இந்தியரிடையேயும் கிடைத்த வரவேற்பு அரசியல்வாதிகளை சிந்திக்க வைத்தது.

இந்தச் சூழலில் தான் கருப்பு ஆடு 1 விழித்துக் கொண்டார். ஊழல் எதிர்ப்பு இயக்கத்தை இணைய தளம் மூலமாக உலகெங்கும் எடுத்துச் செல்வதில் முக்கியப் பங்களிப்பு செய்து அவரின் சீடர் போல அவரிடம் ஒட்டிக் கொண்டிருந்த கேஜரிவால்தான் அது. இவ்வளவு ஆதரவா? இதை வைத்து அரசியல் செய்தால் எங்கேயோ போய்விடலாமே என்று அவர் “உள்ளுவதெல்லாம் உயர் உள்ளல்” என்று பிரதம மந்திரியே ஆகிவிடும் ஒரு கணக்கைப் போட்டார். புலம்பெயர்ந்த இந்தியர்களைக் குறிவைத்தார். பாவம். அவர்கள் ஒரு பிரதம மந்திரியை உருவாக்கும் ‘பிராஜெக்ட்’டைக் கையில் எடுத்தனர். எவ்வளவு நன்கொடை வசூல் ஆனது என்பது யாருமே இது வரை சரியாக கவனிக்காத ஒன்று. நல்ல வசூல்.

அவர் கையில் மின்சாரப் பழுது பார்ப்பு சாதனங்களுடன் கிளம்பினார். அன்னா ஹஸாரே என்னும் ஏணியால் ஊழலை எதிர்க்கும் படையின் முக்கிய தளபதியாயிருந்த பிம்பத்துடன் ஏழைகளுக்கு இலவச மின்சாரம்- மின் கட்டணக் குறைப்பு என்னும் நாடகங்களை நடத்திக் காட்டினார்.

ஒரு பத்திரிக்கை இவர் அரசியலின் போக்கையை மாற்றப் போகிறார் என்று எழுதியது. ஒரு தனி மனிதன் அரசியலின் போக்கையே மாற்றினார். உண்மைதான் ஆனால் அது ராஜபார்ட் கேஜ்ரிவால் இல்லை.

ஒரு அசுரன் தன் தலையில் தானே கையை வைத்துக் கொண்டு (வாங்கிய வரத்தால்) தன் முடிவைத் தானே தேடிக் கொண்ட புராணக் கதையை கேஜ்ரிவால் படிக்கவில்லை. அவர் அம்மாவும் அவருக்குச் சப்பாத்தி ஊட்டும் போது சொல்லித் தரவில்லை. நாடகங்களை அரங்கேற்றி ஊடகங்களின் வெளிச்சத்தில் மட்டுமே வலம் வந்த அவர் ஒரு படி மேலே போய் டெல்லி முதலமைச்சர் டெல்லியின் உரிமைக்காகத் தெருவில் போராடும் ஒரு நாடகத்தில் தம் அரசியல்வாழ்வின் உச்சத்தைத் தொட்டார். தமது நடிப்பு மற்றும் இயக்குனர் திறமையில் புளகாங்கிதம் அடைந்து ஒரு மண்டலம் முதலமைச்சராக இருந்தேன் – இப்போது ராஜினாமா செய்து மக்களுக்குச் சேவை செய்வேன் என்று ஒரு பெரிய நாடகமாக ஒன்று போட்டுப் பார்த்தார். அது ‘புமெராங்க்’ போல அவரது ராஜபார்ட் வேஷத்தைக் கோமாளி வேஷமாக்கி விட்டது. (வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல ஜெயமோகன் தாம் படித்த கடிதங்களில் அது தான் இதயத்தைத் தொடுவது என்று பாராட்டி எழுதினார். ஜெயமோகன் – சோ இருவருக்கும் தவறான பரிந்துரைகள் கொடுப்பதில் ஆர்வம் அதிகம்.)

கருப்பு ஆடு 2 கிரண் பேடி. அவர் கேஜ்ரிவாலை எதிர்த்த போது எல்லோருமே அன்னா ஹஸாரேயின் அரசியல் ஆதாயம் தேடாத வேள்வியில் தாக்குப் பிடித்து நிற்கும் கொள்கைக் குன்று என்றே நினைத்தார்கள். விதி வலியது. அவருக்கும் கேஜ்ரிவாலைப் போலவே அரசியல் அபிலாஷைகள் இருந்தன. ஆனால் ‘முதலில் வா. முதல் கரண்டி உனக்கு” என்னும் முறையில் அன்னா ஹஸாரே பெயரைச் சொல்லிப் பெரிய ஆதாயம் தேடி விட்டார் கேஜ்ரிவால். தாமதமாக வந்தாலும் தடாலடியாக வர விரும்பிய பேடிக்கு ஒரு அரசியல் கட்சி சிவப்புக் கம்பளம் தயார் செய்தது. சரியான தருணத்தில் அதை விரிப்போம் என்று சமிக்ஞை செய்தது. இப்போது புது டெல்லித் தேர்தல் களத்தில் இரண்டு ஆடுகளும் மோதத் தயார்.

அன்னா ஹஸாரே கிராமப்புறத்தவர். அவருக்குப் படித்த மக்களின் சூதும் வாதும் தெரியாது. அவருக்கு எந்த நஷ்டமும் இல்லை. அவர் இந்திய மக்கள் எல்லோரையும் நேசிக்கும் நல்ல உள்ளம் கொண்டவர். அரசியல் ஆதாயம் தேடுவோர் தம்மை ஏணியாகப் பயன்படுத்திக் கொண்டதால் அவருக்கு ஏமாளிப் பட்டம் கிடைக்கலாம். ஊழலை ஒழிக்க ஏமாளிக்குத் தகுதி உண்டு. சமாதானமே செய்து கொள்ளாத நேர்மையும் உலகமே வணங்க வேண்டிய நெஞ்சுரமும் உள்ளவர் அவர்.

அன்னா ஹஸாரே இந்தியாவுக்கும் உலகுக்கும் உணர்த்திய தெளிவான செய்தி “ஊழலை அமைப்பின் உள்ளே இருப்பவர்கள் சரி செய்ய முடியாது- அது மக்கள் இயக்கத்தாலேயே சாத்தியம்” என்பதாகும்.

அரசியலில் ஈடுபடுவது குற்றமா? அதிகார ஆசை தவறா? கண்டிப்பாக இல்லை. அது தந்திரமான, குறுகிய கால நடவடிக்கைகளால் அடையப் படக் கூடாது. அன்னா ஹஸாரே அரசியலில் ஈடுபடக் கூடாது என்கிறார் – இதில் கருத்து வேறுபாடு உள்ளது என்பதோடு நிற்காமல் அவர் பெயரைச் சொல்லிக் கிடைத்த பெரிய ஆதரவாளர் பட்டியலை அப்படியே கடத்திக் கொண்டு போனார் கேஜ்ரிவால்.

12 13 ஆண்டுகளுக்கு முன் நான் டெல்லியில் பணி புரிந்த காலம். அப்போது ஒரு நாள் மாலை கரோல்பாக் பதம் சிங் சாலை ஓரத்தில் ஒரு தேனீர் விற்பவரிடம் தேனீர் பருகிக் கொண்டிருந்தேன். உயரமான (சாதாரண உடை அணிந்த) ஒரு அம்மாள் எங்களைக் கடந்து போனார். இவர் யார் தெரியுமா என்றார் தேனீர்க்கடைக்காரர். எனக்குத் தெரியவில்லை. “கிரண் பேடி அம்மாள். நேர்மையும் வீரமுமான போலீஸ் ஆபீஸர்” என்று பெருமையுடன் கூறினார் அவர். இன்று அவர் ஒரு அரசியல்வாதியாகவே அறியப் படுவார். இனி டெல்லி மக்கள் தம் ஊரின் பெருமையாக அவரைக் காண்பது இயலாது.

டெல்லி மக்களின் இந்திய மக்களின் இதயத்தில் ஆட்சி செய்யும் அரிய வாய்ப்பை இரண்டு கருப்பு ஆடுகளும் நழுவ விட்டுவிட்டார்கள். அதை விட சோகமானது ஊழலை ஒழிப்பதில் வரலாறு என்றும் போற்றப் போகிற பெரியவர் அன்னா ஹஸாரேயுடன் பணிபுரியும் அரிய வாய்ப்பை நழுவ விட்டது.

இருவரும் ஏணியில் ஏறி அதிகாரத்தை எட்டிப் பிடிக்கும் ஆசை மட்டுமே உடையவர்கள். அன்னா ஹஸாரே மக்கள் தம் வாழ்க்கையில் இன்னும் மேலான இடத்துக்குப் போக ஆசைப்பட்டவர். இவர்கள் வரலாற்றால் மறக்கப் படுவார்கள். அன்னா ஹஸாரே வரலாறு படைத்துக் கொண்டிருப்பவர்.

Series Navigationஷங்கரின் ‘ஐ’ – திரைப்பட விமர்சனம்ஹாங்காங் இலக்கிய வட்டக் கூட்டம்
author

சத்யானந்தன்

Similar Posts

7 Comments

 1. Avatar
  paandiyan says:

  //(வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல ஜெயமோகன் தாம் படித்த கடிதங்களில் அது தான் இதயத்தைத் தொடுவது என்று பாராட்டி எழுதினார். ஜெயமோகன் – சோ இருவருக்கும் தவறான பரிந்துரைகள் கொடுப்பதில் ஆர்வம் அதிகம்.)///

  Bedi has just joined politics two days before and then I can see this article? now who has so fast and concluding?
  cho or je mo? or??

 2. Avatar
  sathyanandhan says:

  திரு பாண்டியன் ஆங்கிலத்தில் விரைவான கண்ணோட்டம் என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள். அவசரமான என்று அல்ல. நன்றி. இரண்டு நாட்களுக்குள் கருத்துச் சொல்லக் கூடாதா? ஜெயமோகன் அவசரப்பட்டார் என்று நான் பொருட்படுத்தவில்லையே. ஆழ்ந்து நோக்காமல் மேலோட்டமாகச் சொல்லி விட்டார் என்பதே பொருள். இரண்டு நாட்களில் எதிர்வினையாற்றக் கருத்துரிமை உண்டு என்றே கருதுகிறேன். அன்னா ஹஸாரேயின் மேன்மையின் நிழலில் குளிர்காய்ந்ததாலேயே இருவர் பற்றிய இந்தக் கருத்து. தனது சொந்த செல்வாக்கை வைத்து எம்ப முடிந்த அளவு எம்பிப் பார்த்திருந்தால் இருவருக்கும் கண்டனமே தேவையில்லை.

  எஸ்ஸார்ஸி அவர்களின் குறிப்புக்கு நன்றி.

 3. Avatar
  BS says:

  முடிவு என்பது அரசியலில் கிடையாது. ஒருவரின் உடல் நலம் மட்டுமே முடிவை நிலைக்குக் கொண்டுவரும். அன்னா ஹாசாரேயின் பொது வாழ்க்கை முறை அரசியல் அறிஞர்களால் அலசப்பட்டு விட்டது. அவர் முறை ஒரு விழிப்பை மட்டுமே ஏற்படுத்த முடியும்; மற்றபடி செல்லாது. ஊழல் மட்டுமே இந்தியாவின் பிரச்சினையன்று. அதைத்தாண்டி ஏகப்பட்ட உள்ளாட்டு, வெளிநாட்டு, பிரச்சினைகள் உள. அவற்றைப்பற்றியெல்லாம் சிந்தித்தறிய‌ அன்னா ஹஜராவுக்கு போதுமான கல்வியறிவு இல்லை. (ஒரு உ-ம்: குடிப்பழக்கத்தை நிறுத்த குடிகாரர்களை தூணில் கட்டிவைத்து அடிக்கவேண்டும். அவர்கள் திருந்திவிடுவார்கள் என்றார். இப்படி பல தாலிபான் டைப் முட்டாள்தனமான சிந்தனைகள் உடையவர்.) கல்வியறிவு இல்லாவிட்டாலும் பரவாயில்லை. இருப்பவரை தம்மருககில் இருத்திக்கொண்டு கேட்டறியும் விழைவு இருக்கவேண்டும் காமராஜரைப்போல‌. அன்னா ஹாசாரேக்கு இருப்பதெல்லாம் தன்னைப்பற்றிய ஒரு மெக‌லனோமேனியா. ஜெ.பி என்றொரு தலைவர் இருந்தார். அவர்தான் ஒரு பெரிய இயக்கத்தை வெற்றிகரமாக நடாத்தி இந்திராவையே வீழ்த்தியவர். அவருக்கு ஈகோ இல்லை. இந்தியாவில் இந்திராவுக்குப் பதிலாக ஒரு மாற்றத்தை உருவாக்க வேண்டுமென்ற உண்மை அவாவே இருந்தது. அன்னா ஹசாரே ஒரு சலசலப்பு ஆசாமி மட்டுமே.

  ஹெஜிரவால் அன்னா ஹசாரேவைக் கடாசியது மிகச்சரியே. எப்படி அண்ணா, பெரியாரை விட்டு விலகி தம்போக்கில் போனாரோ அதே காரணமே இங்கும். அரசியல் வழியாகத்தான் இந்தியாவில் எதையும் சாதிக்க முடியும் பெரியளவில் என்ற கண்ட அண்ணா, பெரியார் அதற்கு இடைஞ்சலென்று கருதி விலகினார். ஹெஜிரவாலும் அப்படியே.

  தான் மக்களுக்கு நல்லவை செய்து அவர்கள் வாழ்க்கையில் பெரும் மாற்றங்களை கொண்டுவரவேண்டுமென்ற அவா இருந்தால், அதற்கு இடையூறாக இருப்பவரை நீக்கிவிடுதல், அது குற்றமாகாது.

  ஹெஜிரவால் கருப்பு ஆடும் கிடையாது. சிவப்பு ஆடும் கிடையாது. காலைச்சுற்றிய வேலியை உதறி விட்டு விட்டு தன் வழி சென்ற சுதந்திர ஆடு. அவருக்குப் பதவி ஆசை உண்டா இல்லையா என்பது பற்றி தில்லி மக்கள் கவலைப்படவில்லை. அவர் என்ன செய்வார் நமக்கு ஐந்தாண்டுகள் என்பதுதான் அவர்கள் பார்க்கிறார்கள். தில்லியின் பிரச்சினைகள் பலபல. ஹெஜிரவால் அவற்றை முடிந்தவரை தீர்ப்பார் என்ற ஒரு நம்பிக்கை பரவலாக காணப்படுகிறது.

 4. Avatar
  BS says:

  கிரண் பேடியைப்பற்றித் தில்லி மக்களுக்கு மட்டுமன்று, இந்தியர்கள் அனைவருக்குமே நன்கு தெரியும். ஹெஜிரவால் பாரளுமன்ற தேர்தலுக்குப் பின் தன் நிலையை மாற்றிக்கொண்டார். அதாவது, இனி தில்லி யூனியன்பிரதேச ஆட்சி மட்டுமே தன் கவனம். பேடி அப்படியெல்லாம் தில்லி மக்களுக்கு செய்யவேண்டுமென்ற அவாவைக்கொள்ளவில்லை. எப்படியாவது ஏதாவது ஒரு பதவி – அதுவும் பெரிதினும் பெரிது கேள் என்று சொல்வதைப் போல கேட்டுக்கேட்டுப் பெற்றுவிட்டார். எதைத் தின்னால் பித்தம் தெளியும் என்ற நிலையைப்போல எவரைப்போட்டால் நம்மால் கெஜிரவாலைச் சந்திக்க முடியுமென்று பிஜேபி போட்ட தப்புக்கணக்கு பேடியின் நாமினேசன். பேடி ஒரு காவல் அதிகாரியாக இருந்த போதும் கூட அவரின் நடவடிக்கைகளில் தன்னை முன்னிருத்திக்கொள்ளவேண்டும் எனற ஆசையே இருந்தது என்று தில்லி மக்களுக்கு நன்கு தெரியும். இப்படிப்பட்டவரிடம் எப்படி ஆட்சியைக் கொடுப்பார்கள்? இவருக்குப் பதிலாக கெஜிரவால் பெட்டர் எனபதே இங்கு கணிப்பு. தில்லி மக்களுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் உள்ள வேறுபாடு என்னவென்றால், பேடியின் ஆரவார அரசியல் தமிழ்நாட்டு மக்களிடம் பேராதவரைத் தரும். தில்லிமக்கள் ஆரவாரத்தை ஐயங்கொள்வர்.பேடி தில்லிமக்களின் நம்பிக்கையைப் பெறவில்லை என்பதே என் கணிப்பு.

  அவரும் ஒரு கருப்பு ஆடு என்பதற்கு என் பதில் கெஜரவாலைப்பற்றி எழுதியதே இங்கும். அன்னா ஹஜாரே ஒரு உதவாக்கரையென்று தெரிந்தே இவரும் விலகினார். இறுதியில் அன்னாவின் பின் நிற்பவர்கள் மஹாராஷ்ட்ரா மக்கள் கூட இல்லை. அவர் கிராமத்தினர் மட்டுமே. Anna Hazare lacks the ability and qualification to become a leader of national level, even a state level. He is just a village level leader.

  It is good that he was thrown away by both Bedi and Kejirwal.

  1. Avatar
   sathyanandhan says:

   இந்தியாவின் வளர்ச்சியை உள்ளிருந்தே வீழ்த்திக் கொண்டிருப்பது ஊழலே. இதை தீர்க்க தரிசனத்துடன் அணுகி மக்களியடையே மிகப் பெரிய விழிபுணர்வை ஏற்பத்தியவர் அன்னா ஹஸாரே. இது பல பிரச்சனைகளில் ஒன்று தான் என்று தாங்கள் கருதும் போது விவாதிக்க எதுவுமில்லை. அன்னா ஹஸாரே இயக்கத்தில் இணைந்த ‘மெத்தப் படித்தோருக்கு’ அவரின் வழி முறைகள் தெரியாதா? அவரை ஏணியாகப் பயன்படுத்தியது பற்றித்தான் இந்தக் கட்டுரை. அண்ணாவையும் கேஜ்ரிவாலையும் ஒப்பிடுவது முன்னவருக்கு இழைக்கப்படும் மிகப் பெரிய அவமதிப்பு. அரசியலால் தான் இந்தியாவில் பெரிய அளவில் எதையும் சாதிக்க முடியும் என்கிறீர்கள். 67 ஆண்டுகளில் அரசியல் கட்சிகள் சாதித்தது என்ன? மக்களுக்கு அவர்கள் தந்தது என்ன? மக்களுக்குத் தர இருப்பது என்ன?

 5. Avatar
  BS says:

  அரசியலைத் தவிர பின் எதன் மூலம் டாஞ்சிபிள் விளைவை நாட்டு மக்கள் முழுவதும் பெரும்படி செய்ய முடியும்? ஒரு சுதந்திரப்போராட்டம் போன்ற விழிப்புணர்வை எழுப்பும் இயக்கத்தை அரசியல்வாதி அல்லாதவரும் செய்யலாம். ஆனால், அரசியலில் நுழைந்து அரசுக்கட்டிலில் அமர்ந்து தான் சொன்னவற்றைச் செயல் படுத்தமுடியும் என்பது பொலிட்டிகல் சயன்ஸ். உண்மையில் அப்படி அரசியல்வாதிகள் செய்கின்றனரா இந்தியாவில் என்பது என் வாதமில்லை. செய்யவேண்டுமென்றால் அரசியலே. அண்ணாத்துரையை இங்கு எடுத்துக்காட்டியது, அவரை ஹெஜ்ரவாலிடம் ஒப்பீடு செய்யன்று. ஒரு பொலிட்டிகல் சயன்ஸ் தியரியை எடுத்துச்சொல்லவே.

  ஊழல் மட்டுமே இந்தியாவின் பிரச்சினையன்று. அதை நாம் பூதாகரமாக ஆக்கிப்பார்ப்பதால் அதும் மட்டுமே பிர்ச்சினை என்ற மாயத்தோற்றம் ஏற்படுகிறது.. அதைப்பூதாகரமாக்க அது மிகவும் சென்சேஷனலான விஷயமெனவே. அரசியல்வாதிகள் தேர்தலில் வெற்றி பெற மக்களைக்கவர பயன்படுத்தும் இயந்திரம். மற்ற விஷயங்களில் பொதுஜனங்களுக்கு ஆர்வம் கிடையாது. புரியவும் செய்யாது. பெட்ரோல் விலை ஏன் குறையுது கூடுது என்று பொதுஜனத்துக்குப்புரியாது. நல்ல சினிமாவைப்பற்றி அதுக்குத் தெரியாது. ஆனால் மாஸ் பாப்புலர் ஹீரோக்கள் மட்டுமே தெரியும். எனவே பொதுஜனங்களை ஏமாற்ற அன்னா ஹஜாரேவின் இயக்கத்தால் இலகுவாக முடிகிறது.

  அதே வேளையில், எவை தெரியவில்லையோ, அவற்றின் பாதிப்புக்கள் — நன்மையோ, தீமையோ — நாட்டின் கடைக்கோடியில் ஒரு குடிசையில் வாழும் இந்தியனையும் தொடும் என்பது அவனுக்கே தெரியாது.

  கொஞ்சம் எகனாமிக்ஸ், கொஞ்சம் பொலிட்டிக்கல் சயன்ஸ், கொஞ்சம் சோஷியாலஜி தெரிந்தால் போதும் நான் சொவதைப்புரிய. அன்னா ஹஜாரேவுக்குத் தெரிந்ததெல்லாம் அரசியல்வாதிகளும் அரசு அதிகாரிகளும் தாலுகா ஆபிஸ் கிளார்க்கும் லஞ்சம் வாங்குகிறார்கள். அதை நிறுத்தவேண்டுமென்ற கோரிக்கை மட்டுமே. அதை நிறுத்திவிட்டால், இந்தியாவில் நான் சொன்ன கடைக்கோடி குடிசை வாசிக்கு ஒரு நல்ல வாழ்க்கை கிடைக்குமென்ற கணிப்பு. He is an idiot if he believes that. But an idiot can be a mass leader, like Hitler.

  There is a very interesting paper on corruption by Prof Sebastian of IIM Ahemdabad. He argues exactly what is written above. In fact, the above is a sort of plagiarism from him. If you can get the paper, give it a close perusal.

  இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் முக்கால்வாசிக்கும் மேலாக சர்ச்சைக்குள்ளாகும் விஷயங்கள் வேஸ்ட். அவை நம் பொன்னான நேரத்தை வீணடித்து உதவும் விசயங்களிலிருந்து நம் கவனத்தைச் சிதறடித்து விடுகின்றன. அதிலொன்றுதான் ஊழல்.

  அன்னா ஹஜாரே மூலமாக பெற்ற பாப்புலாரிட்டை இருவரும் பயன்படுத்துகிறார்கள் என்பது சரி. ஆனால், ring out the old, ring in the new lest one good custom should corrupt the world.

  Anna Hazare will corrupt :-) It is correct that the old man was sent home to his comfortable village paradise.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *