பெருந்திணை- இலக்கண வளர்ச்சி

This entry is part 8 of 23 in the series 18 ஜனவரி 2015

mupaமுனைவர் மு.பழனியப்பன்
இணைப்பேராசிரியர்,
மற்றும் தமிழ்த்துறைத் தலைவர்
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
திருவாடானை
தமிழ் அக இலக்கண மரபில் பெருந்திணை வளர்த்தெடுக்கப்பெற்றுள்ளது. அகன் ஐந்திணையில் தொல்காப்பிய கால வளர்ச்சி நிலை அப்படியே இருக்க, கைக்கிளையும் பெருந்திணையும் பின்வந்த இலக்கண ஆசிரியர்களால் வளர்த்தெடுக்கப்பெற்றுள்ளன. இவ்வளர்ச்சி ஆண், பெண் இருவர் பக்கத்திலும் ஒத்த அன்பினைக் கொள்ளாத கைக்கிளையும், பெருந்திணையும் புறப்பொருள் திணைகளாகவும் கொள்ளத்தக்க அளவிற்கு வளர்ச்சி பெற்றுள்ளன.
தொல்காப்பியப் பெருந்திணை
தொல்காப்பியர் பெருந்திணைக்கான இலக்கணத்தைப் பின்வருமாறு எடுத்துரைக்கின்றார்.
~~ஏறிய மடல்திறம் இளமைதீர்திறம்
தேறுதல் ஒழிந்த காமத்து மிகுதிறம்
மிக்க காமத்து மிடலொடு தொகைஇச்
செப்பிய நான்கும் பெருந்திணைக் குறிப்பே||
என்று பெருந்திணைக்கான இலக்கணத்தை எடுத்துரைக்கிறார்.
பெருந்திணை என்பது புணர்;ந்தபின் நிகழத்தக்கது என்கிறார் இளம்ப+ரணர். ஏறிய மடல் திறம் என்பது தலைமகனுக்கே உரிய நிலைப்பாடு என்றும், இளமை தீர்திறம் என்பது ~தலைமகன் முதியனாகித் தலைமகள் இளையளாதலும், தலைமகள் முதியளாகித் தலைமகன் இளையளாதலும், இவ்விருவரும் இளமைப் பருவம் நீங்கியவழி அறத்தின் மேல் மனம் நிகழ்தலன்றி காம்தின்மேல் மணம் நிகழ்தலும் | என மூன்று வகைப்பட்டது என்றும், தேறுதல் ஒழிந்த காமத்து மிகுதிறம் என்பது தெளிவு ஒழிந்த காமத்தின் கண்ணே மிகுதல் என்றும், மிக்க காமத்து: மிடலொடு தொகைஇ என்பது பின்வரும் நிலைகளை உடையதாகவும் கொள்ளப்பெறுகின்றது.
ஐந்திணைக்கண் நிகழும் காமத்தின் மாறுபட்டு வருவது
வற்புறுத்தும் துணையின்றிச் செலவழுங்குதல்
ஆற்றருமை கூறுதல்
இழிந்திரந்து கூறுதல்
இடைய+று கிளத்தல்
அஞ்சிக் கூறுதல்
மனைவி விடுத்தலிற் பிறள் வயின் சேறல்
இன்னோரன்ன ஆண்பாற் கிளவி
முன்னுறச் செப்பல்
பின்னிலை முயறல்,
கணவனுள் வழி இரவுத் தலைச் சேறல்
பருவம் மயங்கல்
இன்னோரன்ன பெண்பாற் கிளவி
குற்றிசை
குறுங்கலி
ஒத்த அன்பின் மாறுபட்டு வருவன||
என்ற நிலைகளில் மிக்க காமத்து மிடல் அமையலாம் என்ற இளம்ப+ரணரின் உரை பின் வந்த இலக்கண ஆசிரியர்கள் பெருந்திணையை வளர்த்தெடுத்த நிலைக்கு ஒப்ப மொழிவதாக உள்ளது.
நம்பி அகப்பொருள் சுட்டும் பெருந்தியை இலக்கணம்
~~பெருந்திணை என்பது பொருந்தாக் காமம்|| என்று தேறுதல் ஒழிந்த காமத்து மிகுதிறம் என்று தொல்காப்பியர் சொன்ன பெருந்திணையின் ஒருவகையை ஒட்டு மொத்த பெருந்திணையாக நம்பியகப்பொருள் ஆக்கியுள்ளது..
பெருந்திணையை நம்பிய அகப்பொருள் இருநிலைகளில் பகுத்துக்காண்கிறது. அவை அகப்பொருள் பெருந்திணை, அகப்புறப் பெருந்திணை என்பனவாகும்.
அகப்பொருள் பெருந்திணை
~அகன்றுழி கலங்கலும் , புகன்ற மடல் கூற்றும்
குறியிடையீடும் தெளிவிடை விலக்கலும்
வெறிகோள் வகையும். விழைந்து உடன்போக்கும்
ப+ப்பு இயல் உரைத்தலும், பொய்ச்சூள் உரையும்
தீர்ப்பு இல் ஊடலும், போக்கு அழுங்கு இயல்பும்
பாசறை புலம்பலும், பருவம் மாறுபடுதலும்
வன்பொறை எதிர்ந்து மொழிதலும் அன்புஉறு
மனைவியும் தானும் வனம் அடைந்து நோற்றலும்
பிறவும் அகத்திணைப் பெருந்திணைக்கு உரிய||
என்ற நிலையில் அகப்பொருள் பெருந்திணை துறைகளைப் பெற்றுள்ளது. பெருந்திiயில் அகம் சார்ந்த வெளிப்பட அறிய இயலாத தன்மை உடையன அகப்பொருள் பெருந்திணையாகக் கருதப்பெற்றுள்ளன.
அகப்புறப் பெருந்திணை
மடலேறுதலோடு விடை தாழால் என்றா
குற்றிசை தன்னோடு குறுங்கலி என்றா
சுரநடை தன்னோடு முதுபாலை என்றா
தாபதநிலையோடு, தபுதார நிலை, எனப்
புகன்றவை இயற்பெயர் பொருந்தா ஆயின்
அகன்ற அகப்புறப் பெருந்திணைக்கு ஆகும்||
என்ற நிலையில் அகப்புறப் பெருந்திணையின் துறைகள் அமையலாம் என அகப்பொருள் குறிக்கின்றது.
நம்பியகப்பொருள் பெருந்திணையை அடுத்த கட்ட வளர்ச்சிக்குக் கொண்டு சென்றுள்ளது.
பெருந்திணையின் அடுத்த கட்ட வளர்ச்சி என்பது புறப்பொருள் வெண்பாமாலையில் தொடருகின்றது. இங்கு பெண்பால் கூற்றுக் கைக்கிறை, இருபால் பெருந்திணை என்று பெருந்திணை இருவகைப்படுத்தப்படுகின்றது.
பெண்பால் கூற்றுப் பெருந்திணை
~~வேட்கை முந்துறுத்தல் பின்னிலை முயறல்
பிரிவிடை ஆற்றல் வரவெதிர்ந்திருத்தல்
வாராமைக் கழிதலிரவுத் தலைச் சேறல்
இல்லவை நகுதல் புலவியுட் புலம்பல்
பொழுது கண்டிரங்கல் பரத்தையை ஏசல்
கண்டுகண் சிவத்தல் காதலிற் களித்தல்
கொண்டகம் புகுதல் கூட்டத்துக்குழைத்தல்
ஊடலுணெகிழ்தலூரை கேட்டு நயத்தல்
பாடகச் சீறடி பணிந்தபின் இரங்கல்
பள்ளிமிசை தொடர்தல்,செல்கென விடுத்தலென
ஒன்பதிற் றிரட்டியோ டொன்றும் உளப்பட
பெண்பாற் கூற்றுப் பெருந்திணைப்பால||
என்று பெண்பால் கூற்று நிகழ்த்தும் பெருந்திணை இடங்களை இந்நூற்பா சுட்டுகின்றது.
தலைவி காம மிகுதி காரணமாக பேசுதற்குரிய வாய்ப்புகளை இந்நூற்பா பெருந்திணைப் படுத்தியுள்ளது.
இருபாற் பெருந்திணை
~~சீர்செல வழுங்கல் செழுமட லூர்;தல்
தூதிடை யாட றுயரவற்குரைத்தல்
கண்டு கை சோர்தல் பருவ மயங்கல்
ஆண்பாற் கிளவி, பெண்பாற்கிளவி
தேங்கமழ் கூந்தற் தெரிவை வெறியாட்டு
அரிவைக் கவடுணை பாண்வரவுரைத்தல்
பரிபுரச் சீறடிப் பரத்தை கூறல்
விறலி கேட்பத் தோழி கூறல்
வெள்வலை விறலி தோழிக்கு விளம்பல்
பரத்தை வாயில் பாங்கி கண்டுரைத்தல்
பிறர்மனைத் துயின்றமை விறலி கூறல்
குற்றிசை யேனைக் குறுங்கலி உளப்பட
ஒத்தபண்பி னொன்று தலையி;ட்ட
ஈரெண் கிளவியும் பெருந்திணைப்பால||
என்ற பெருந்திணை இலக்கண நூற்பா இருபாலருக்குமான பெருந்திணைக்குரிய துறைகளை எடுத்துரைக்கின்றது.
இவ்வகையில் பெருந்திணை இலக்கணம் தொல்காப்பியத்தில் இருந்து பின்வந்த இலக்கண ஆசிரியர்களால் வளர்த்தெடுக்கப்பெற்றுள்ளன.
தொகுப்புரை
பெருந்திணை ஏழு அகத்திணைகளுள் ஒன்று என்றாலும் அது ஆண், பெண் இருபாலரித்திலும் ஒத்த அன்பு பெறாதது. பொருந்தாக் காம நிலைப்பாடுடையது.
அகப்பெருந்திணை, புறப்பெருந்திணை, அகப்புறப்பெருந்திணை என்று இதனை இலக்கண ஆசிரியர்கள் வளர்த்தெடுத்துள்ளனர். அகப்பெருந்திணையும், அகப்புறப்பெருந்திணையும் அகஇலக்கண மரபில் வளர்த்தெடுக்கப்பெற்றுள்ளன.
புறப்பெருந்திணை புற இலக்கண நூல்களில் வளர்த்தெடுக்கப்பெற்றுள்ளது. புறப்பெருந்திணை இருபாலினற்கும் பொதுவான கூற்று முறைகளைத் தெரிவித்து பெண்பால் கூற்றிற்கு பத்தொன்பது இடங்களைத் தந்துள்ளது. ஆண்பாற் கூற்றுப் பெருந்திணைக்குத் தனித்த துறைகள் வகுக்கப்படவில்லை.
அகப்பொருள் இலக்கண மரபில் கைக்கிளையும், பெருந்திணையும் பின்வந்த பிற இலக்கண ஆசிரியர்களால் விரித்தும் பகுத்தும் உரைக்கப்பெற்றுள்ளன. இது கைக்கிளை,பெருந்திணை ஆகியவற்றில் உள்ள நெகிழ் தன்மையைக் காட்டுகின்றது. மற்ற அகன் ஐந்திணைகள் மிகக் கட்டமைப்புடன் விளங்கியுள்ளன என்பதும் இங்குக் கொள்ளத்தக்கது.

Series Navigationஹாங்காங் தமிழ் மலரின் ஜனவரி 2015 மாத இதழ்கல்பனா என்கின்ற காமதேனு…!
author

முனைவர் மு. பழனியப்பன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *