அந்நிய மோகத்தால் அழிந்து வரும் நாட்டுப்புறக்கலைகள்

author
0 minutes, 0 seconds Read
This entry is part 4 of 24 in the series 8 பெப்ருவரி 2015
???????????????????????????????வைகை அனிஷ்
தேனிப் பகுதியில் நாட்டுப்புறக்கலைகளை கோயில் விழாக்களில் கொண்டாடுவதும் மூலம் மீண்டும் புத்துயிர் பெற்று வருகிறது. பண்பாட்டு கலைகளின் வளர்ச்சிக்கு நாட்டுப்புறக்கோயில்கள் தாய்வீடாக விளங்கிவருகிறது. நாட்டுப்புறக்கலைகள் மனிதனின் உள்ளத்தில் ஊற்றாக எழும் உண்மையான உணர்ச்சிகளின் வடிவமாக அமைந்துள்ளன. சமயஉணர்வு, அச்சஉணர்வு, பேயோட்டம், வலிமை, பொழுதுபோக்கு என்று பலவிதமாகக் கலைகளின் நோக்கத்தைப் பெருக்கிக்கொண்டே இருக்கலாம். தேவதானப்பட்டி பகுதியில் நடைபெறும் கோயில் திருவிழாக்களில் ஊஞ்சலாட்டம், புலிவேடம், கோமாளி ஆட்டம், காவடியாட்டம், கரகாட்டம், சிலம்பாட்டம், ஒயிலாட்டம், பச்சை குத்தும் கலை,கும்மியாட்டம், உறியடித்தல், வழுக்குமரம் ஏறுதல் போன்றவை இன்றும் நடத்தப்படுகின்றன.
உறியடித்தல்
உறியடித்தல் அல்லது உறிச்சட்டி அடித்தல் என்பது சிறந்த நாட்டுப்புறக் கலையாக இன்றும் அமைந்துள்ளது. இது அம்மன் கோயில் திருவிழாக்களில் சிறந்த நிகழ்ச்சியாக சித்தரிக்கப்படுகிறது. கோயில் முன்பு உள்ள பெரிய மரத்தில் மண்ணால் செய்த ஒரு பானை உறியாகக் கட்டி தொங்க விடப்படும். பின்னர் ஒருவரின் கண்ணைத் துண்டால் கட்டிவிட்டுக் கையில் கம்பு ஒன்றைக் கொடுத்து மரத்தில் உள்ள பானையை அடிக்கச் சொல்லுவர். கண்ணைக் கட்டிக்கொண்டு இருப்பவர் திசைமாறியும் செல்வதுண்டு. சரியான திசையில் சென்று பானையை கம்பால் அடித்து உடைக்கவேண்டும். ஒருவர் பின் ஒருவராக சென்று உறியில் உள்ள பானையை உடைக்க முயற்சி செய்கின்றனர். பானையை உடைப்பவரே உறியடித்தலில் வெற்றிபெற்றவர் என அறிவிக்கப்படுகிறார். அவருக்கு பரிசுப்பொருளும் உண்டு.
வழுக்குமரம்
இதே போல வழுக்குமரம் ஏறும்போட்டியும் நடைபெறுகிறது. ஒரு பெரிய மரத்தை கோயிலின் முன்பாக வைத்து வழவழப்பாக வைத்து அதில் வழுக்க கூடிய பொருட்களை தேய்த்து நட்டுவைக்கப்படும். மரத்தின் மறுமுனையில் பணமுடிப்பு கட்டி வைக்கப்படும். குழுக்களாக ஒருவர் தோள்மீது ஒருவர் ஒருவராக ஏறுவார்கள். அப்போது சுற்றியிருந்து அவர்கள் மரத்தின்மேல் ஏறாவண்ணம் தொடர்ந்து தண்ணீர் அடிக்கப்படும். பலமணிநேரம் போராட்;டத்திற்கு பின்னர் யாராவது ஒருவர் பணத்தை தட்டிச்செல்வார். உடல்வலிமைக்கும், மரம் ஏறும் பயிற்சிக்கும் சிறந்த விளையாட்டாக திகழ்கிறது.
பச்சை குத்தும் கலை
நாட்டுப்புறக் கோயில் திருவிழா நடைபெறும் காலங்களில் மலைப்பகுதியில் வாழும் குறவர் கிராமப்புற மக்களிடம் நெருங்கிப் பழகிக் குறிசொல்லியும் பச்சைக்குத்தியும் தங்கள் திறமைகளை வெளிப்படுத்துவர். மக்கள் எப்படி பச்சைக் குத்திக்கொள்ள நினைக்கிறார்களோ அதுபோலப் பச்சைக் குத்திவிடுகின்றனர். சிலர் தெய்வத்தின் பெயரையும், வேறுசிலர் முன்னோர்களின் பெயரையும் கையில் பச்சைக் குத்திக்கொள்வர். ஒரு சிலர் தங்கள் குடும்பங்களின் முதல் எழுத்துக்களை பச்சைக்குத்திக்கொள்வர். கிராமப்புறச் ச+ழ்நிலை, மரபுமுறைகள், பழக்கவழக்கம் அனைத்தும் காலத்துடன் இணைத்துப் புலப்படுத்தும் அளவுக்கு மக்கள் வளர்ந்து இருக்கின்றனர். நாட்டுப்புறக் கலைகளைப் பல கலைக்குடும்பங்கள் இன்றும் போற்றி நடத்தி வருகின்றன. இப்படிப்பட்ட கலாச்சாரமிக்க நாட்டுப்புறக்கலையான பச்சைக்குத்தும் கலை பிய+ட்டி பார்லர் வருகையால் மெல்ல மெல்ல நசிந்து வருகிறது.
கரகாட்டம்
கரகம் என்பது குடத்தைக் குறிக்கும். மலர்களைக் கொண்டு அழகாக ஒப்பனை செய்யப்பட்ட குடத்தை தலையில் வைத்து ஆடும் ஆடலுக்குக் கரக ஆட்டம் என்று பெயர். மாரியம்மன் மற்றும் காளியம்மன் கோயில் விழாக்களில் மிகப்பரவலாக கரகாட்டம் நடைபெறுகிறது. இறைவழிபாட்டு நிகழ்ச்சியுடன் கரகம் தொடர்புடையதாக கருதப்படுகிறது. கரகம் அல்லது குடம் நீரால் நிரப்பப் பெற்றிருக்கும். இந்த நீரை மாரியம்மனுக்கும் மற்ற தெய்வங்களுக்கும் அதன் சிலைகளில் ஊற்றிப் பின்னர் அவரவர் குடங்களில் பிடித்துக்கொண்டு செல்கின்றனர். அப்பொழுது மாரியம்மனையும் ஏழு புண்ணிய நதிகளையும் வழிபடுவதாக மக்கள் நம்புகின்றனர். அம்மனுக்காக ஆட்டக்காரர்கள் குடம் எடுத்து ஊர்முழுவதும் சுற்றி ஆடி வருவர். கரகாட்டக்கார்களை பற்றுடன் வரவேற்று மஞ்சள் அரைத்துப் ப+சியும் அவர்கள் காலில் மஞ்சள் நீர் ஊற்றியும் மழை வேண்டும் காட்சி சிறந்த கலையழகு மிகுந்த காட்சியாகும். இவ்வளவு பெருமை வாய்ந்த கரகாட்டம் தற்பொழுது அரசியல்வாதிகளின் வருகையின்போதும், தேர்தலில் வாக்கு சேகரிப்பின்போதும், ஆபசமான பாடல்களை ஒலிபரப்பி பாலியல் உணர்வுகளை தோன்றும் அருவருக்கத்தக்க கலையாக மாறிவருகிறது. பிரேக் டான்ஸ், ரிகார்டு டான்ஸ் போன்றவற்றிற்கும், துணை நடிகைகளின் காம ஆட்டத்திற்கும் தடை விதிக்காத காவல்துறை தற்பொழுது கரகாட்டம் நடத்துவதற்கு சில இடங்களில் அனுமதி மறுக்கப்பட்டும் வருகிறது என்பது கவலைக்குரியது.
புலிவேடம்
புலிவேடம் போடுவோர் புலிமுகம் அணிந்து கொண்டு தன் உடம்பு முழுவதும் புள்ளிகள் பொறித்துக்கொண்டு தன்னை புலியாக மாற்றிக் கொள்கின்றனர். வாயில் கோரைப் பல்லும் பின்புறம் புலி வாலும் அணிகின்றனர். தப்பு, மேளம் கொட்டப்பட்டு அதன் தாளத்துக்குக் தக்கவாறு அவன் தெருவில் நின்று ஆடுவான். இந்த ஆட்டத்தில் சிறுவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காண்பார்கள்.
இதுபோன்ற எண்ணற்ற கலைகள் உள்ளது. அந்தக்கலைகளை ஊக்கப்படுத்துவதை விட்டு அண்டை மாநிலங்களில் இருந்து செண்டமேளம், ஆடல்பாடல் நிகழ்ச்சிகள் என பல கலைகளை இறக்குமதி செய்து தமிழனின் பாரம்பரியக்கலைகள் அழிக்கப்பட்டு வருகிறது. இதனால் வருடத்தில் பாதி நாள் வறுமையிலும், சில கலைஞர்கள் பாதை மாறி தங்கள் வாழ்வை சீரழித்துக்கொண்டும் வருகின்றனர். தமிழகக் கலைகளை காப்பாற்ற அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் அதே வேளையில் நலிவுற்ற கலைஞர்களை ஊக்கப்படுத்த திருவிழாக்கள் நடத்துபவர்கள் கலைஞர்களை முன்னிலைப்படுத்தவேண்டும். இல்லையெனில் வருங்கால சந்ததியினர் சினிமாவில் மட்டும் இக்கலையை பார்க்கும் அவலநிலை ஏற்படும் காலம் வெகுதொலைவில் இல்லை.
வைகை அனிஷ்
3.பள்ளிவாசல் தெரு
தேவதானப்பட்டி
தேனி மாவட்டம்
Series Navigationசோசியம் பாக்கலையோ சோசியம்.வைரமணிக் கதைகள் – 2 ஆண்மை
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *