சோழ மன்னன் உலா வருகிறான். அவன் மீது காதல் கொண்ட ஒரு தலைவி அதைக் கேள்விப்பட்டாள். அவன் ஒவ்வொரு தெருவாக வந்து போவதற்குள் நடு இரவு வந்து விடும். எனவே அவன் தன் வீட்டுக்குப் பக்கத்தில் வரும்போதே அவனைக் கண்டு விட தலைவி எண்ணுகிறாள். இதோ வீட்டுக்கு அருகில் மன்னன் வரும் ஒலிகள் கேட்கின்றன. மனமானது அந்த மன்னனைக் காணும் ஆசையால் தெரு வாசலுக்கு விரைகின்றது.
ஆனால் நாணமானது அந்த மனத்தைப் பின்னுக்கு இழுத்து வீட்டுக்குள் கொண்டு வந்து விடுகிறது. மீண்டும் அவன் மீது கொண்ட காதலானது மனத்தை முன்னே செல்லத் தூண்டுகிறது. அத்துடன் கண்களும் அந்த சோழ அரசனைக் காட்டு என்று வேண்ட மறுபடியும் மனம் வாசலுக்குச் செல்கிறது. நாணமோ மறுபடியும் உள்ளே இழுக்கிறது. இப்படியே உள்ளே போவதும் வருவதுமாக இரு பக்கமும் நெருப்பு உள்ள கட்டையில் மாட்டிக் கொண்ட எறும்பு போல என் மனம் தவிக்கிறதே என்று அத் தலைவி எண்ணுகிறாள். முத்தொள்ளாயிரம் காட்டும் காட்சி இது.
நாணொருபால் வாங்க நலனொருபால் உள்நெகிழ்ப்பக்
காமருதோள் கிள்ளிக்கென் கண்கவற்ற —- யாமத்[து
இருதலைக் கொள்ளியின் உள்எறும்பு போலத்
திரிதரும் பேரும்என் நெஞ்சு.
{ முத்தொள்ளாயிரம்—100 }
திருவாசகத்திலும் இதே உவமை
”இருதலைக் கொள்ளியின் உள்எறும்[பு] ஒத்து நினைப்பிரிந்த
விரிதலையேனை விடுதி கண்டாய்”
என்று வருவதும்,
“இருபாடெரி கொள்ளியினுள் எறும்பேபோல்
உருகா நிற்கும் என்னுள்ளம் ஊழிமுதல்வா”
என்று நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தில் இதே உவமையைப் பயன்படுத்தி திருமங்கையாழ்வார் பாடுவதும் நினைக்கத்தக்கது.
இதுபோன்ற நிலையில் தலைவனைக் காட்டும் ஒரு காட்சி அகநானூற்றிலும் காட்சி வருகிறது. அங்கே பொருள் தேடும் முயற்சியின் பொருட்டு எழுந்த தலைவனின் ஆண்மை “பொருள் தேடப் போவோம்; வா” என்று முன்னே இழுக்கின்றது. ஆனால் தலைவியின் மீது கொண்டுள்ள காதலோ “போகாதே; வா இல்லத்திற்கு” என்று இழுக்கின்றது. அவன் மனமோ இப்போது அவ்விடத்திற்கும் இவ்விடத்திற்கும் போவதும் வருவதுமாக ஊசலாடுகிறது. நரைமுடி நெட்டையார் எனும் புலவர் இதைப்பாடி உள்ளார்.
“ஆண்மை வாங்கக் காமம் தட்பக்
கவைபடும் நெஞ்சம் கட்க ணகைய
இருதலைக் கொள்ளி இடைநின்று வருந்தி” என்பன அப்பாடல் அடிகளாகும்.
”இரு தலைக்கொள்ளி எறும்பென்னும்” என்னும் உவமை எல்லாப் புலவர்களையும் கவர்ந்து எடுத்தாளச் செய்திருக்கிறது என்று நாமும் மகிழ்வோம்.
- மிதிலாவிலாஸ்-3
- சுப்ரபாரதிமணியனின் ’மேகவெடிப்பு ’
- நடுவுல கொஞ்சம் “பட்ஜெட்டை”க்காணோம்.
- மணமுறிவைச் சந்திக்கும் ஒரு பெண்ணின் அவஸ்தை ஆத்மதாகம்- இடைமருதூர் கி.மஞ்சுளா நாவல்
- விளக்கு விருது அழைப்பிதழ்
- பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் : கரும் பிண்டத்தின் ஊடே பரிதி மண்டலம் சுழல்வதால் பூமியில் நேரிடை உயிரினப் பாதிப்பு, மாறுதல் நேர்கிறது
- சீஅன் நகரம் -3 உலகின் எட்டாம் அதிசயம்
- செம்மொழிச் சிந்தனையாளர் பேரவை புதுக்கோட்டை செய்திக்குறிப்பு
- அதிர்வுப் பயணம்
- உதிராதபூக்கள் – அத்தியாயம் -3
- நினைவுகளைக் கூட்டுவது
- ஹாங்காங் தமிழ் மலரின் பிப்ரவரி 2015
- பிறவி மறதி
- பலி
- வைரமணிக் கதைகள் -4 அழகி வீட்டு நிழல்
- சிறந்த சிறுகதைகள் – ஒரு பார்வை-1
- தொடுவானம் 56. மணியோசை
- இலக்கியச் சோலை,கூத்தப்பாக்கம் நாள் : 1-3-2015 ஞாயிறு காலை 10 மணி
- இருதலைக் கொள்ளியில் அகப்பட்ட எறும்பு
- விதைபோடும் மரங்கள்
- மனிதக்கழிவுகளை மனிதனே அகற்றும் அவலம்
- மண்ணில் புதைந்து கிடக்கும் வரலாற்று ஆவணங்கள்
- ரௌடி செய்த உதவி
- ஊர்வலம்
- மருத்துவக் கட்டுரை- ரூமேட்டாய்ட் எலும்பு அழற்சி நோய் ( Rheumatoid Arthritis )
- ஆத்ம கீதங்கள் –17 காத்ரீனா காதலனுக்கு எழுதியது.. ! வாழ்வினி இல்லை எனக்கு