சீஅன் நகரம் -4 டவோ மதகுரு லவோட்சு

This entry is part 16 of 22 in the series 8 மார்ச் 2015

 சீ’அன்னில் பார்க்க வேண்டிய பல இடங்கள் இருக்கின்றன.  ஹவோசான் மலைகள், நீருற்று குளியல் பகுதி, பான் போ அருங்காட்சியகம் என்று பலப்பல இருந்தன.  அதில் எங்களை சீனாவில் இருக்கும் நான்கு பெரிய பாண்டா சரணாலயங்களில் ஒன்றான லுவோ குவான் சின்லிங் மலைப்பகுதியில் இருக்கும் பாண்டா சரணாலயம் மிகவும் கவர்ந்தது.  தங்கையின் மகளுக்கு வயது ஆறு.  அவளுக்கு பாண்டா என்றால் மிகவும் பிடிக்கும்.  குங்பூ பாண்டா படத்தை எப்படியும் 50 முறையேனும் பார்த்திருப்பாள்.  அதிலிருந்து பாண்டாவை பார்க்க வேண்டும் என்ற அவளுடைய ஆர்வம் மிகவே அதிகம்.  அதனால் அன்றைய தினம் பாண்டா சரணாலயம் செல்ல முடிவு செய்தோம்.  எங்களை முன் தினம் ஊரைச் சுற்றிக் காட்டிய ஓட்டுநர் அதன் அருகே பார்க்க வேண்டிய ஒரு பெரிய கோயில் இருக்கிறது என்று சொன்னார். அப்படியென்றால் அங்கேயே செல்ல முடிவு செய்தோம்.

சீ’அன் நகரிலிருந்து ஒரு மணி நேரப் பயணம். இயற்கையை ரசித்துக் கொண்டே சென்றோம். வழி நெடுகிலும் திராட்சை ரசம் விற்கப்படும் கடைகளைப் பார்த்ததும், இந்தப் பகுதியில் திராட்சைச் தோட்டங்கள் அதிகம் என்று புரிந்தது.

பாண்டா சரணாலயம் வந்து சேர்ந்த போது, வெளியே வண்டிகள் ஓரிரண்டே இருந்தன.  சந்தேகத்துடன் சென்று விசாரித்த போது, பாண்டாக்களுக்கு உடல் நிலை சரியாக இல்லாததால், பயணிகள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று சொன்னார்கள்.  மிகவும் ஏமாற்றமாக இருந்தது.  இத்தனை தூரம் வந்ததற்கு வாசலைப் பார்க்கத்தானா?  வெளியே இருந்த பெயர் பலகைகளின் முன் நின்று படத்தை மட்டும் எடுத்துக் கொண்டு கிளம்பினோம். இணையதளத்தில் பிறகு பார்த்த போது தான் தெரிந்தது, குளிர்காலங்களில் பாண்டா சரணாலயம் பல சமயங்களில் மூடப்பட்டு இருக்கும் என்றும் செல்வதற்கு முன் அவர்களைத் தொடர்பு கொண்டு அறிந்த பின்னர் செல்வது நலம்  என்று குறிப்படப்பட்டு இருந்தது.  அது விடுதியாட்களுக்கு தெரியாததால், நாங்கள் சென்று ஏமாந்தது தான் மிச்சம்.

இது போன்ற அனுபவம் எங்களுக்குப் புதிதல்ல. நாங்கள் சில மாதங்களுக்கு முன்பு இலங்கைக்குச் சென்றிருந்த போது, அங்கே பின்னவலாவில் யானைகள் சரணாலயம் ஒன்று இருந்தது.  நான் கேரளாவில் ஆனக் கோட்டாவில் ஒரே இடத்தில் 70க்கும் மேற்பட்ட யானைகளைக் கண்டேன்.  அது போலவே இங்கும் இருக்கும், அதைக் குழந்தைகளுக்கும் உடன் வந்த பெரியவர்களுக்கும் காட்டலாம் என்ற ஆசையில் அதைச் சென்று பார்க்கலாம் என்று கிளம்பினோம்.  அத்தோடு யானையை நாமே குளிப்பாட்டலாம் என்று குறிப்பிட்டு இருந்ததால், ஆர்வத்துடன் சென்றோம்.  சில மணி நேரப் பயணத்திற்குப் பின் சரணாலயம் இருக்கும் இடத்திற்கு அருகே போகப் போக, பல யானைகள் வழி நெடுக சென்ற வண்ணம் இருந்தன.  சரணாலயத்தில் நிறைய யானைகள் இருக்கும் போல என்று எண்ணிக் கொண்டே சரணாலயத்தின் வாசலை அடைந்தோம்.  நுழைவுச் சீட்டு வாங்கச் சென்ற போது தான் தெரிந்தது, அங்கு இரு யானைகள் மட்டுமே  பயணிகள் பார்க்க முடியும், அவை குளிப்பதைப் பார்க்கலாம் என்று.  அதற்கு 2500 ரூபாய் கட்டணம் என்று.  இரு யானைகளைக் பார்க்க இத்தனைக் கட்டணமா என்று எண்ணி, நாங்கள் மகளையும் மகனையும் மட்டும் வேண்டுமென்றால் சென்று வாருங்கள் என்றோம்.  இவர்களுக்கும் ஆர்வம் இல்லை.  அத்தோடு வெளியே பல யானைகளைத் தான் பார்த்துவிட்டோமே என்றனர்.  வந்ததற்கு நினைவாக வாயிலருகே ஒரு படம் மட்டும் எடுத்துக் கொண்டு திரும்பினோம்.  இது எங்கள் நினைவிற்கு வந்து சென்றது.

இவ்வளவு தூரம் வந்தது வீணாவிட்டதே என்ற மன வருத்தத்துடன், அடுத்து எங்கே செல்லலாம் என்று கேட்டோம்.  அவர் பெரிய கோயில் ஒன்று அருகே இருக்கிறது என்று சொன்னார்.  ஆர்வம் இல்லாவிட்டாலும், வந்ததற்கு பார்க்கச் செல்வோம் என்று கிளம்பினோம்.  இது சரணாலயத்தை ஒட்டிய இடமே என்று அப்போது தெரியாது.

கோயில் டாவ் மதத்தைச் சேர்ந்தது.  மிகப் பெரிய பரப்பளவில், அரசாங்கத்தால் பராமரிக்கப்பட்டு வரும் அந்த இடம் உண்மையில் பிரமிப்பில் ஆழ்த்தியது.  பரந்து விரிந்த இடத்தில் தூண்கள் பலவும் கொண்டு, ஒரு பெரிய கோயில் போன்று காணப்பட்டது.

அதனுள் செல்லப் போகிறோம் என்று எண்ணிய போது, ஓட்டுநர் தான் அழைத்துப் போவது மற்றொரு இடம் என்று சொன்ன போது, அது எப்படி இருக்குமோ என்று எண்ணினோம்.

இருவர் எங்களுக்கு வழி காட்ட, நாங்கள் சரணாலயம் ஒட்டி இருக்கும் வீதியிலேயே மீண்டும் பயணம் செய்தோம்.  இது சற்றே பெரிய குன்றின் மேல் இருந்தது.  குன்றுகள் நிறைந்த இடமாக அது இருந்தது.  மலையும் மலை சார்ந்த இடமான குறிஞ்சிப் பகுதி மிகவும் அழகாக இருந்தது.  சில நிமிட பயணத்திற்குப் பிறகு, வாயிற்புரத்திற்கு வந்து சேர்ந்தோம்.

அங்கே நுழைவுச் சீட்டை வாங்கிக் கொண்டு படிகளில் ஏறிச் சென்றோம்.  சற்றே மேலே சென்றதும், இரண்டு பாதைகள் பிரிந்தன.  அங்கே சில வயதான மூதாட்டிகள் மலைத் தழைகளையும், சிவப்பு நிற பழங்களையும் விற்றுக் கொண்டு இருந்தனர்.  எங்களிம் அருகில் வந்து, அவற்றை கைகளில் வைத்துக் கொண்டு வாங்கச் சொல்லி சைகை செய்தார்கள்.  அவை என்னவென்று தெரியாமல் வாங்கி என்ன செய்ய? எங்கள் தயக்கத்தைப் பார்த்து, மேலும் மேலும் வற்புறுத்தும் வண்ணம், கைகளைப் பற்றினர்.  வேண்டாம் என்று நாங்களும் சைகையால் சொன்னோம்.  இரண்டு மூன்று மூதாட்டிகள்.  பார்க்க சற்றே சங்கடமாகத் தான் இருந்தது.  அங்கிருந்த எந்தப் பக்கம் செல்வது என்று முடிவானதும், அவர்கள் இருவர் கைகளில் பணத்தை மட்டும் கொடுத்து விட்டு, அங்கிருந்து நகர்ந்தோம்.

சற்று தூரம் நடந்ததும், அந்த கோயிலை அடைந்தோம்.  லுவோ குவன் தாய்யின் நுழைவாயில் என்னவோ சாதாரணமாகத் தான் தெரிந்தது.  தொலைவில் ஒரு பெரிய தங்க நிறச் சிலை இருந்தது.  அது “டவோ தே சிங்” என்ற நூலை எழுதிய டவோ மத குருவான லவோட்சுவின் உருவச்சிலை என்று அறிந்தோம்.  மற்றொரு பக்கம் அவர் உபயோகித்த மருத்துவச் சாலை இருப்பதையும் அறிந்தோம்.

ஆங்கிலம் பேசும் வழிகாட்டி யாரும் இல்லாததால் நாங்கள் கோயிலைப் பார்க்க நுழைந்தோம்.

முதலில் ஒரு வளாகம்.  மிகவும் பெரியதாக இருந்தது.  அதன் ஒரு புறம் ஒரு மண்டபத்தில் கடல் தேவனைப் போன்ற சிலை இருந்தது.  ஹாங்காங்கில் வாங் தாய் சின் கோயிலில் இருப்பதை நினைவுக்குக் கொண்டு வந்தது.  அங்கிருந்த பெண்மணி எங்களுக்குச் சின்ன ஆரஞ்சுப் பழங்களை பிரசாதமாகத் தந்தார்.  மறு புறம் ஒரு சிறு கிணறு இருந்தது. எட்டிப் பார்த்தால் ஒரு ஆமையின் சிலை அதனுள் இருந்தது.  நம்மூர் போன்றே அதன் மேலும் நாணயங்களும் பணத் தாள்களும் இருந்தன.  நாங்களும் எங்கள் அதிர்ஷடத்தை உறுதி செய்து கொள்ள, சில நாணயங்களை எறிந்து விட்டு அடுத்த வாயிலை எட்டினோம். படிகளுக்கு மேலேறி வந்தால், அதை விடவும் பெரிய வளாகம். அங்கும் பல மண்டபங்கள்.  அவற்றை பார்த்து விட்டு, அடுத்த வாயிலை எட்டினோம்.

வாயிலை அடையும் முன்னர், ஒரு பெரிய சுவர் போன்ற அமைப்பில் பெரிய வரைபடம் இருந்தது.  என்னவென்று கூர்ந்து பார்த்த போது, அது அவ்விடத்தின் வரைபடம் என்பது புரிந்தது.  அத்தனை பெரிய நிலப்பரப்பையும் அழகாக வரைந்திருந்தனர்.  நாங்கள் கீழே ஏதோ ஒரு இடத்தில் நின்றது புரிந்தது. அந்த கோயில்  மிகவும் பெரியது என்றும் புரிந்தது.  அங்கிருந்து அப்படியே இறங்கினால், கீழிருக்கும் கலாச்சார பரப்பை முழுமையாகப் பார்க்கலாம் என்ற எண்ணம் தோன்றியது.  அதனால் அடுத்த தளத்தை பார்க்கச் சென்றோம். அங்கும் பெரிய வளாகம்.  அதன் கடைசியில் மேலும் படிகள் இருந்தன.  கீழே மரங்கள் அடர்ந்து இருந்ததால், எதுவும் பார்க்க முடியவில்லை.  அங்கே மடாலயத்தின் ஒருவர் துறவி உடை அணிந்தவர் எங்களை வரவேற்றார்.  சற்று ஆங்கிலம் பேசினார்.  ஆவரிடம் அந்த இடத்தைப் பற்றிக் கேட்டோம்.  அப்போது தான் அது கோயில் மட்டுமல்ல, மடாலயம் என்பதும் புரிந்தது. 20 பேர்கள் வரை அங்கே தங்கியுள்ளனர் என்றும், கோயிலை பராமரிப்பது, டவோ கொள்கைகளைக் கற்று மற்றவர்களிடம் பரப்புவது அவர்களது வேலை என்றும் சொன்னார்.  உணவிற்கு தாங்களே விவசாயம் செய்து கொள்வதையும் கூறினார்.

சீனா முழுவதும் டவோ மதத்தை உருவாக்கிப் பரப்பிய குரு லவோட்சு.  அவரது நினைவாக அந்த இடத்தை சீன அரசு டவோ கலாச்சாரப் பகுதியாக அறிவித்து, அங்கிருக்கும் இடங்களைப் பாதுகாத்து வருகிறது.  மலைக்கு மேலேயும் பல மண்டபங்கள்.

லவோட்சு தான் அறிந்ததை மக்களுக்கு எடுத்து கூற டவோ தெ சிங் என்ற நூலை அந்த இடத்தில் தான் எழுதினார் என்றும், அதை தன் மாணவர்களுக்கு அங்கு தான் போதித்தார் என்பதையும் அங்கிருந்து திரும்பிய பின்னர் அறிந்து கொண்டோம். அந்த மலைப்பகுதி மிகுந்த இயற்கை அழகு கொண்டது என்றும் வழியே பல நீர்வீழ்ச்சிகளையும், ஓடைகளையும் காணலாம்.  கோடை காலத்தில் பயணிகள் வந்து மலையேற்றம் செய்ய ஏற்ற இடம் என்பதும் தெரிந்தது.

தா சின் பகோடா மிகவும் புராதன இடம் என்பதும், மதகுரு வாழ்ந்த இடம் என்பதும் புரிந்ததால், மனதிற்கு ஒரு திருப்தி.  ஒரு மாபெரும் மனிதர் வாழ்ந்த இடத்தைக் கண்ட திருப்தி.  இந்த சீ’அன் பயணம் எங்களுக்கு யுவான் சுவாங் மற்றும் லவோட்சு அவர்கள் தங்கி அரும் பணியாற்றிய இடங்களைக் காட்டியது மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

அந்த இடத்தைப் பார்த்த பிறகு, தங்கை மகளின் ஏமாற்றத்தைக் குறைக்கும் வகையில், ஓட்டுநர் அட்டவணையில் இல்லாத மிருகக் காட்சி சாலை ஒன்றிற்கு அழைத்துச் செல்வதாகக் கூறினார்.  அங்கு பாண்டா இருக்குமா என்று கேட்டதற்கு, தெரியாது என்று சொன்னார்.  சீன அலுவலகத்தில் இருந்த பணியாளர்களுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய போதும், சரியான தகவல் கிடைக்கவில்லை. என்னவாக இருந்தாலும் குழந்தையை மிருகக்காட்சி சாலைக்கு அழைத்துச் செல்ல முடிவு செய்து அங்கு சென்றோம். என் கணவருக்கு அதைக் காண ஆர்வம் இல்லாத காரணத்தால், எங்களை மட்டும் சென்று வரச் சொன்னார்.

நாங்கள் உள்ளே செல்ல நுழைவுச் சீட்டு வாங்கிக் கொண்டு கிளம்பினோம்.  அப்பப்பா.. எவ்வளவு பெரியது!  வாயிலுக்கு நாங்கள் செல்லவே 20 நிமிடங்கள் நடக்க வேண்டியிருந்தது. மற்ற எல்லா இடங்களிலும் இருப்பது போன்று, அங்கும் பல விலங்குகளைக் காண முடிந்தது.  பேருந்தில் ஏறி இயற்கையாக விலங்குகள் நடமாடும் இடங்களைச் சென்று பார்த்தோம்.  எல்லாவற்றையும் பார்த்து விட்டு வெளியே வந்தால், என் கணவர் ஒரு சுவையான நிகழ்வைச் சொன்னார்.

வெளியே வந்ததும், அவரைக் காணவில்லை.  கைபேசியில் தொடர்பு கொண்ட போது, வந்து கொண்டிருப்பதாகச் சொன்னார்.  அருகே வந்ததும், எங்கே போனீர்கள் என்ன செய்தீர்கள் என்று கேட்டதற்கு தன் அனுபவத்தைப் பகிர்ந்தார்.  எங்களை அனுப்பிவிட்டு, ஓட்டுநரைத் தேடிச் சென்ற போது, அவரைக் காணாமல், அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லையாம்.  என்ன செய்வது என்று தெரியாமல் காபி குடிக்கலாம் என்று கடையைத் தேடியிருக்கிறார். அருகே கடைகளில் காபி கிடைக்காததால், ஊருக்குள் சென்று பார்க்கச் சென்றிருக்கிறார்.

சிறு சிறு வீதிகள். அங்கே ஒரு வீட்டின் வாயிலில் ஒரு பெட்டிக் கடை.  காபி கிடைக்குமா என்று கேட்டிருக்கிறார்.  காபி இருக்கிறது என்றதும், தயாரிக்கும் நேரத்தில் தானறிந்த சீன மொழியில் அவர்களிடம் பேச்சு கொடுத்தாராம்.  சீன மொழியில் பேசியதும், மகிழந்த அவர்கள் வீட்டிற்குள் வந்து அமரச் சொன்னார்களாம்.  வீட்டிற்குள் சென்ற போது, அவர்கள் முஸ்லீம் மதத்தை பற்றுபவர்கள் என்பதை அறிந்து கொள்ள முடிந்தது என்றார்.  மேலும் பல விசயங்களைப் பேசியும் சிலவற்றை சைகையிலும் பேசியும் பொழுதைக் கழித்திருக்கிறார்.

ஊர் பெயர் கூட தெரியாத இடத்தில், அறியாத மனிதர்களிடம், சரியாக பேசவும் தெரியாத மொழியில் இரண்டு மணி நேரம் பேசி விட்டு வந்த அலாதியான அனுபவத்தை என்றும் மறக்க முடியாது என்று மிகுந்த மகிழ்ச்சியுடன் கூறியதைக் கேட்க நன்றாக இருந்தது.

பிறகு இங்கிருந்து கிளம்பி, ஊர் வந்து சேர ஆறு மணியாகிவிட்டது.  இரவு உணவினை உண்டு விட்டு விடுதிக்குத் திரும்பலாம் என்று டெல்லி தர்பார் என்ற இந்திய உணவகம் ஒன்றிற்குச் சென்றோம். முந்தைய இரவும் அங்கேயே உண்டோம்.  மறுபடியும் அங்கு சென்றதும், அங்கிருந்தோர் தோழமையுடன் பழகினர்.  அவர்களிடம் கேட்ட போது சீ’அன் நகரில் ஐம்பதுக்கும் குறைவான இந்தியர்களே இருப்பார்கள் என்றும், அந்த உணவகத்திற்கு சீனர்களும், மற்ற நாட்டுப் பயணிகளும் விரும்பி வருவதால் வியாபாரம் நன்கு நடப்பதாகவும் சொன்னார் விடுதியின் முதலாளி.  தொலைபேசியில் வேண்டிய உணவிற்காக ஆர்டர் செய்தால், தங்கும் விடுதிக்கு அனுப்பி வைக்கும் வசதியும் இருப்பதாகச் சொன்னார்.

அன்றைய பயணம் ஏமாற்றம் தந்தாலும் திருப்திகரமாகவே இருந்தது.

Series Navigationஎன் சடலம்யாமினி க்ருஷ்ணமூர்த்தி (6)
author

சித்ரா சிவகுமார், ஹாங்காங்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *