தொட்டில்

This entry is part 15 of 25 in the series 15 மார்ச் 2015

ஜெயஸ்ரீ சங்கர் ,ஹைதராபாத்
அம்மா…வாசல்ல பரங்கிப்பூல்லாம் நட்டு வெச்சு கோலமெல்லாம் ரொம்ப அம்சமாப் போட்டிருக்கீகம்மா , என்று சொல்லிக்கொண்டே வீட்டிற்குள் நுழைந்தாள் பணிப்பெண் லெட்சுமி.

இன்னிக்கு பாருங்கம்மா, எம்புட்டு குளிருதுன்னு என்றவள், நடுங்கியபடியே இழுத்துப் போர்த்திய புடவை முந்தானையை மேலும் வேகமாக இழுத்து விட்டுக்கொண்டவளின் குரலிலும் லேசான நடுக்கம் தெரிந்தது அகிலாவுக்கு.

இன்னிலேர்ந்து மார்கழி மாசம் ஆரம்பிச்சிருச்சுல்ல …அதான் கோலமும்…குளிரும்..என்ற அகிலா தலையில் முடிந்திருந்த ஈரத்துண்டை அவிழ்த்தபடியே , ‘இரு லெட்சுமி காப்பி போட்டிட்டுருக்கேன், குளிருக்கு சூடா காப்பி குடிச்சிட்டு பெறகு பாத்திரம் தேய்க்கலாம் என்று சமையலறைக்குள் நுழைந்தாள்.

‘இன்னிக்கு ‘கற்பகம் மருத்துவமனை’க்குப் போயாகணுமே, போனவாரமே, இன்றைய தினத்துக்கு பெயரையும் பதிந்தாயிற்று. அவர் எழுந்ததும் எப்படியாச்சும் பேசி, சமாளிச்சு அழைச்சிட்டுப் போயிடணும்’, என்று எண்ணியவள் , ‘ஷெல்’பிலிருந்த தம்ளரை எடுக்கப் போக, அங்கிருந்த இன்னொரு தம்ளர் கைதட்டிக் கீழே விழுந்து ‘ரிங் ரிங் ரிங் ரிங்’ என்ற சத்தத்துடன் வட்டம் போட்டது.

அதை வேகமாகக் குனிந்து எடுத்த லெட்சுமி, அம்மா….”ஐயா முளிச்சுக்கிடப் போறாரு” என்றாள் பதற்றமான குரலில்.

மென்மையாகச் சிரித்த அகிலா, இன்னிக்கி சீக்கிரம் முழிச்சா நல்லது தான் என்றவளாக, இந்தா என்று ஆவிபறக்கும் காப்பி தம்ளரை அவளிடம் நீட்ட,

காப்பி கை மாறியது.

பூஜையறையிலிருந்து வந்த சைக்கிள் பிராண்ட் ஊதுபத்தி மணத்தை, நரசுஸ் காப்பியின் வாசனை ஜெயித்துக் கொண்டிருந்தது.

“மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளாம் ” .என்று டீவி யில் மேடை ‘களை’ கட்டிக்கொண்டிருந்தது.

காப்பியோடு வந்து சோபாவில் சாய்ந்தவளின் மனம், பாட்டில் லயிக்காமல் வேறு சிந்தனையில் வயப்பட்டு, ‘தை பிறந்தால் வழி பிறக்கும்னு’ ன்னு கல்யாணம் மட்டும் தை மாசம் கரெக்டாஆயிருச்சு, அதுக்குப் பின்னாலே பதினைந்து ‘தை மாதங்கள்’ வந்துட்டு போயிடுச்சு, அடுத்த வழி பிறக்கக் காணோம்….வழக்கம் போலவே மனசுக்குள் சலிப்புத் தட்டியது அவளுக்கு.

அங்கிருந்த டீபாயிலிருந்து , அவர்களது மருத்துவ ஃபைலை கையிலெடுக்க, அது அவளது மனத்தைப் போல கனத்து, அவர்களது ‘விதியை’ எந்நேரமும் விளம்பரப்படுத்த தயாராக இருந்தது.. கண்ணெதிரே, ஃபோட்டாவில் ராகவனோடு சிரித்துக் கொண்டிருந்தாள் அகிலா.

அவளது எண்ணங்கள் நழுவத் தொடங்கியது.

கல்யாணமாகி முதல் இரண்டு வருடங்கள் முடிந்த நிலையில், ஆபீசில்,அக்கம் பக்கத்தில், என்று தெரிந்தவர்கள் என்று யாரைப் பார்த்தாலும் ‘கல்யாண சாப்பாடு’ தான் போடாமால் ஏமாத்திட்டீங்க, ‘சீமந்தச் சாப்பாடு எப்போ..?’ சீக்கிரமா விசேஷத்தை சொல்லுங்க’ என்ற ஒரே கேள்வியைத் தான் உரிமையோடு கேட்டார்கள்.

அப்பொழுதெல்லாம் வெட்கத்தில் சிரித்து மழுப்புவாள் அகிலா.

இன்னும் சிறிது வருடங்கள் சென்ற நிலையில், இவர்களைப் பார்த்த மாத்திரத்தில், அவர்களின் பார்வையில் ஒருவித வருத்தம் கலந்த விசாரிப்பு இருந்தது. காலங்கள் செல்லச் செல்ல, அவர்களே எதுவும் கேட்காமல் மௌனமாக நகர்ந்து கொண்டார்கள். மேலும் அவர்கள் பெண்களின் ‘சீமந்த நிகழ்வின் போது துணைப் பெண்ணாக வரச்சொல்லி அழைத்தார்கள். பிறகு அதுவும் மறுக்கப்பட்டு, அழைக்கப் படுவதையே தவிர்த்த போது தான், அகிலா வேதனையின் உச்சத்திற்குச் சென்று யார் எடுத்துச் சொல்லியும் கேளாமல், தனது வங்கி வேலையை ராஜினாமா செய்தவள் வீட்டுக்குள் முடங்கிப் போனாள்.

இருபது வருடத்திற்கு முன்பு அகிலாவும், ராகவனும் தான், அந்த வங்கியில் அதிகமாக பேசப்பட்ட காதல் ஜோடி. இருவர் வீட்டிலும் மறுக்கப்பட்ட காதலுக்கு ஆதரவு காட்டி, ‘காவல் நிலையம்’ வரை சென்று அங்கேயே கல்யாணத்தை முடித்து வெற்றி பெற்றதாக மகிழ்ந்ததும் அந்த வங்கி நண்பர்களே.
வாழ்க்கையில் வந்து சேர வேண்டிய வசதிகள் ஒவ்வொன்றாக வந்த பின்பும், அவர்கள் விரும்பியது கிடைக்கப் பெறாத போது தான், அதுவே, விஸ்வரூபப் பிரச்சனையானது.

தங்களைத் துரத்தும் கவலையிலிருந்து விலகி ஓட வழி தெரியாமல் தவித்துக் கொண்டிருந்த போதெல்லாம், பணி நிமித்தம் கிடைத்த ஊர் மாற்றமும் கை கொடுத்தது. சூழ்நிலையின் மாற்றம், இருவரின் மனத்திற்கும் மருந்தானது.
“அம்மா, நான் கெளம்பறேன்…இனிமேட்டு போயி சோறாக்கி பசங்கள பள்ளியோடம் அனுப்போணும்….அதுங்க ரெண்டும் பாம்பும் கீரியுமா சீறிக்கிட்டு நிக்கப் போவுது. எல்லாம் என் தலையெளுத்து.கட்டினது புட்டியோட புரளும்..அதோட குட்டிங்க கட்டிக்கிட்டு புரளும், புலம்பியபடியே லெட்சுமி அவசரமாக சென்றாள்.
சுயநினைவுக்கு வந்த அகிலா , நேரமானதை உணர்ந்து கொண்டு எழுகிறாள்.
கண்ணாடியின் முன்பு தனது காதோர நரைமுடிக்கு ‘டை’ அடித்துக் கொண்டிருந்த கணவர் ராகவன் , ‘என்ன அகிலா…இன்னிக்கு காலங்கார்த்தாலயே மூட் அவுட்டா..?” என்கிறார்.

இன்னிக்கி நீங்க பேங்குக்கு லீவு போடுறீங்க…என்று இழுத்தவள், தனது கோரிக்கையைச் சொல்லி முடித்தாள்.
இந்த வயசுல இனி தேவையா? அதான் நாமளும் பார்க்காத வைத்தியமில்லை, ஜாதகம், ஜோசியம், பரிகாரம், கோயில் குளம்னு பார்த்துப் பார்த்து ஓய்ஞ்சு போயாச்சே. வழியே இல்லைன்னு ஆனபிறகு, விட்டுத் தள்ளு அகிலா. நம்ப குழந்தையும் எங்கியோ வெளியூர்ல படிச்சுக்கிட்டு இருக்குன்னு நெனைச்சு மனசைத் தேத்திக்கோ. இப்போல்லாம் குழந்தைகள் இருக்கறவங்களே தனியாத் தான் இருக்கும்படியா ஆகுது.

ப்ளீஸ்ங்க.இந்த ஒரு தரம் மட்டும் கடைசியா ‘ட்ரை’ பண்ணிப் பார்த்திடலாமே. இது வேற மாதிரியாம் . இந்த டாக்டர் ரொம்ப கைராசியாம். அங்கே போனா நம்ம பிரச்சனை கண்டிப்பாத் தீர்ந்து போயிரும். விளம்பரத்தைப் பார்த்து நம்ப பெயரையும் இன்னிக்கு வரதா பதிஞ்சு வெச்சிருக்கேன். அந்தக் கடவுள் நம்மைக் கைவிட மாட்டாங்க , கடைசியா ஒரு தடவைங்க, ஒரு குழந்தையைப் போலக் கெஞ்சினாள் கேட்டாள் அகிலா.
வேண்டா வெறுப்பாக ‘ம்’ என்றவர், சரி நீயும் கிளம்பு, என்றார்.

முகத்தில் மின்னலடிக்க, துள்ளலுடன் உள்ளே சென்றாள் அகிலா.. அவளது நடையில் தான் பெரிதாக எதையோ சாதித்து விட்ட திருப்தி இருந்தது.
அடுத்த சிலமணி நேரத்தில் அவர்களது கார் காம்பவுண்டு கேட்டை விட்டு வெளியேறியது. அகிலாவின் மனத்தில் இருக்கும் எதிர்பார்ப்பு அவளது முகத்தில் பிரதிபலிக்க, அன்றைய நாளிதழை விரித்து படிக்கத் தொடங்கினாள் . எதுவுமே பேசாமல், வேறு சிந்தனையில் காரை ஒட்டிக் கொண்டிருந்தார் ரமேஷ்.
‘எல்லாம் அப்பா…அம்மா போட்ட சாபமாக் கூட இருக்கலாம். காதல் தான் பிரதானம்னு நினைச்சு பெத்தவாளை உதாசீனம் பண்ணிண்டு,
எதிர்ப்பை ஜெயிக்கிற வேகத்தில் , நண்பர்கள் சொன்னதை வேதவாக்கா எடுத்துண்டு , போலீஸ் ஸ்டேஷன்ல போய் நின்னு…வில்லங்கமா ஒரு கல்யாணம் செஞ்சுண்டு….ச்சே…..அதான்….அதோடே அப்படியே நின்னுடுத்து …’
இந்தச் செய்தியைப் பாருங்க….ஒரு பசு மாடு மூணு கன்றுகள் போட்டிருக்காம். ஆச்சரியமாயில்லை…என்று கண்களை விரித்தாள் அகிலா. அத்தோட, சில இடங்கள்லே, பசு மாட்டுக்கு ஊசியைப் போட்டு ஒரே பிரசவத்துல ரெண்டு, மூணு கன்றுகளைக் கூடப் போடறா மாதிரி பண்ணுவாங்களாம். ச்சே..இவங்கல்லாம் .என்ன மனுஷங்க.. சுயநலக்காரங்க…பசுமாடுங்க பாவம்ல என்று திரும்பி ராகவனைப் பார்த்து செய்தித்தாளை காட்டிய அகிலா, அவரது முகத்தின் இறுக்கத்தை உணர்ந்து அதை மடக்கி வைக்கிறாள்.
சிக்னலின் சிவப்பு விளக்குக்கு அடங்கி நின்றது கார். அதற்காகவே காத்திருந்த ஒரு சிறுவன் கைகளில் சில தொட்டில் பொம்மைகளோடு இவர்களை நோக்கி ஓடி வருகிறான். அம்மா…அம்மா……கார்ல வாங்கி மாட்டுங்கம்மா…என்றபடி அந்த பொம்மைகளை வைத்து ஜன்னல் கண்ணாடியில் தட்டித் தட்டி கண்களால் கெஞ்சிக் கொண்டிருந்தான்.
வாங்குங்களேன்….என்றவள் தனது கைப்பையை எடுக்கப்போக.,
வேண்டாம்….என்றவர் குரலில் தீர்மானத்தோடு சிக்னலை பார்க்கலானார்.
அந்தச் சிறுவனின் முகத்தைப் பார்க்கும் திராணியற்று அவளும் சிக்னலை வெறித்தாள்.
கணவனின் எண்ண ஓட்டத்தைப் புரிந்து கொண்டவளாக, ‘அந்தச் சின்ன வயசிலே நமக்குள்ளே இருந்த வேகம், எங்கே, சாதி, அந்தஸ்துன்னு காரணம் காட்டி, நம்பள பிரிச்சுடுவாங்களோன்னு பயந்து போய்தானே அப்படி ஒரு காரியத்தை செஞ்சுட்டோம். நீங்களே சொல்லிருக்கீங்க, உங்க வீட்டுல காய்கறிக்குக் கூட ‘பேதம்’ பார்ப்பாங்கன்னு. பெறகென்ன.? கல்யாணத்தை முடிச்சுட்டு போனா சரியாகிடும்னு, ஆசீர்வாதம் வாங்க வீட்டுக்குப் போனா, அங்கென்னாச்சு..? ரெண்டு வீட்லயும் நம்பள துரோகியாத்தானே பார்த்தாங்க. ‘போலீஸ் ஸ்டேஷன்ல போய் வாழ்க்கையைத் துவங்கினவங்களுக்கு இங்கென்ன வேலையின்னு கேட்டு துரத்தி விட்டாங்களே..நாமளும் தான் என்னத்த பெரிசா சாதிசுட்டோம். இன்னும் ஆரம்பிச்ச இடத்துலேயே நின்னுக்கிட்டு இருக்கோம். அவங்க வாழ்க்கையே.. இந்த பத்துப் பதினைந்து வருஷத்துல முடிஞ்சும் போயிருச்சு. எனக்கும் புரியும்…அவங்க மனசை எல்லாம் சங்கடப் படுத்தினோம்ல, அதான்..முளைச்சு நிக்குது. தழு தழுத்தாள் அகிலா.

என்ன பண்றது, நாம கொடுத்து வெச்சது அவ்ளோ தான். சரி..சரி….அழுதுடாதே…என்றவர், இன்னும் எவ்ளோ தூரம் போகணும்?..எங்கே அந்த ‘அட்ரஸை’ காமி என்று நினைவை திசை திருப்பினார்.
கார் கற்பகம் மருத்துவமனையை நோக்கிச் சென்றது.

அங்கே…!
வரவேற்பறையில் இளவயது கர்ப்பிணிப் பெண்கள் கையில் ஃபைல்களோடும் கண்களில் ஒரு வித எதிர்பார்ப்புடனும் வரிசையில் காத்திருந்திருந்தனர்.
அறைக்குள் பயந்தபடியே உள்ளே நுழைந்தவளைப் பார்த்து அமரச் சொன்ன டாக்டர், குழப்பத்துடன், நீ யாரும்மா? என்கிறாள்.
அடுத்த கணம் அந்தப்பெண் ஓடிச்சென்று டாக்டரின் காலடியில் விழுந்து, டாக்டரம்மா, என் பெயர் ஜானகி, குமார் என்னை உயிருக்கு உயிரா காதலிச்சாரு. ரெண்டு வீட்டு எதிர்ப்பையும் மீறி நாங்க கோயில்ல கல்யாணம் செஞ்சுக்கிட்டோம். அந்தக் கோவத்துல என் கணவரை என் வீட்டுக்காரங்க ஆளை வெச்சு அடிச்சே கொன்னுபுட்டாங்க. நானும் பயந்து போய் எங்க ஊரை விட்டு இங்கே ஓடி வந்துட்டேன்…இப்போ எனக்குன்னு யாருமேயில்லை. நீங்க தான் தயவுபண்ணி எனக்குப் பிரசவம் பார்த்து விட்டுருங்க டாக்டர். உங்களுக்குப்.புண்ணியமாப் போகும்” கண்ணீரோடு சொல்லிமுடித்தாள் அவள்.
இதென்ன தர்மாஸ்பத்திரியா? எழுந்திரு…எழுந்திரு ..அரசு மருத்துவமனைக்கு ஓடு. இந்த மாதிரி கதையெல்லாம் அங்க தான் செல்லும். என்ற டாக்டர், அதே கோபத்தில்,சிஸ்டர் ,”‘இந்த மாதிரி கேஸையெல்லாம் யார் உள்ளே விட்டது?” இவங்களை அழைச்சிட்டுப் போய் வெளியே விடு, என்று கத்தினாள்.

இதைச் சற்றும் எதிர்பாராத ஜானகி, மெல்ல எழுந்து அழுதுகொண்டே அங்கிருந்து வெளியேறினாள்.
அன்றைய பதிவுகளைப் பார்வையிட்ட டாக்டர், சிஸ்டர், சோனாலி வந்திருச்சா? அவளை அனுப்பு.
அழைத்ததும், அழகாக மெல்ல வந்து நின்றாள் சோனாலி.
உனக்கு இது மூணாவது ப்ராஜெக்ட்….அப்படித்தானே?
டாக்டர்ஜி. இந்தவாட்டி ஒரு லட்சம் சம்பளமா குடுங்கஜி . இனிமேல் இந்தத் தொழிலை விட்டுட்டு நானும் ‘ஷாதி’ பண்ணிட்டு ஃலைப்ல செட்டில் ஆயிடப் போறேன். முடிவான குரலில் சொன்னாள் சோனாலி.
ம்….என்கிட்டேயே நீ .டிமாண்ட் பண்றியா? அதெல்லாம் உங்க ‘புரோக்கர்’ கிட்டே பேசிக்கோ. சரி……நீ போய் அங்கே வெயிட் பண்ணு. நான் கூப்பிடும் போது வா, என்று டாக்டர் காட்டிய நீலத்திரை மறைவில் சென்று மறைந்தாள் சோனாலி.
சற்றுநேரத்தில், மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தார்கள் அகிலாவும் ராகவனும்.
வரவேற்பறையில் காத்திருந்த இளம் கர்ப்பிணிப்பெண்களை பார்த்ததும், உள்ளுக்குள் குறுகிப் போனாள் அகிலா. கூடவே மனத்தின் ஒரு மூலையில் நம்பிக்கையும் துளிர்த்தது.
காதோர நரைத்தமுடி அப்போதுதான் அதிகமாக கவனத்துக்கு வந்தது ராகவனுக்கு. ‘எனக்கென்னவோ இதெல்லாம் சரியாத் தோணலை , ‘வாயேன் அகிலா…போயிடலாம்’ அவளுக்கு மட்டும் கேட்கும் தொனியில் பேசினார்.
ப்ளீஸ்….என்று கண்களால் கெஞ்சிய அகிலா அவரது கரத்தைப் பற்றி, ‘கொஞ்சம் பேசாமல் இருங்கள்’ என்று மெல்ல அழுத்தம் கொடுத்தவள்,
அங்கிருந்த சிஸ்டரிடம் சென்று விசாரித்ததும்..,
‘வாங்க’ என்று ராகவனையும், அவளையும் அந்த சிஸ்டர் ஒரு அறைக்கு அழைத்துச் செல்கிறாள்.
அங்கே, அவர்களுக்காகவே காத்திருந்த டாக்டரிடம் தங்களது ஃபைலை நீட்டிவிட்டு, அவளது முகத்தையே இருவரும் ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந்தனர் .
ஃபைலைத் திறந்த டாக்டர் கற்பகம், ரொம்ப மும்முரமாக ஒவ்வொரு பக்கமாக திறந்து நிதானமாகப் படித்தவள் பின் லேசாக உதட்டைப் பிதுக்கி, மெல்ல தலையை உயர்த்தி….’சான்சே இல்லை ‘ என்று ‘நல்வாக்கு’ சொல்லிவிட்டு, ‘டோன்ட் வொர்ரி….உங்களைப் போல இருக்கறவங்களுக்குத் தான் இந்த மருத்துவமனை என்றாள்.
நீங்க சம்மதித்தால் போதும், அடுத்த பத்து மாசத்துல உங்களுக்கு ‘ட்வின்ஸ்’ கூட எங்கள் மருத்துவமனை மூலமாகப் பெற்றுக் கொடுக்க முடியும். பட், உங்களோட ‘கர்ப்பப்பை’ ரொம்ப சின்ன சைஸில் ரொம்ப வீக்காக இருக்கறதால ‘டெஸ்ட் ட்யூப் பேபிக்கும் சாத்தியமில்லை. .வேணும்னா ‘வாடகைத்தாய்’ முறையில் முடிச்சுக்கலாம். எங்க ஹாஸ்பிடல் ‘அதுக்கு’ ரொம்பவே பிரசித்தம். உங்களைப் போல இருக்கறவங்களுக்கு நாங்க ஒரு வரப்பிரசாதம். என்ன, மொத்தமா ஒரு ஐந்து லட்சங்கள் வரை செலவாகும்.பேசிக் கொண்டே சென்றவள், சிஸ்டர் ‘சோனாலி’யைக் கூப்பிடுங்கள் என்று சொல்லி நிறுத்தினாள்.
திரையை விலக்கி வெளிவந்த சோனாலி, ஹிந்திப்பட ஹீரோயினை நினைவு படுத்தினாள்.
இதோ…இந்தப் பொண்ணு மூலமாகத்தான், உங்க ப்ராஜெக்டை அக்ரீமெண்ட் போட்டு ப்ராசெஸ் பண்ணுவோம்..ஒருவேளை உங்களுக்கு இவளைப் பிடிக்கலையின்னா, வெளில உட்கார்ந்திருக்காங்க பாருங்க..அவங்களைக் கூட பார்த்து நீங்களே செலக்ட் பண்ணி ‘ புக்’ செய்யலாம்.. பட், கொஞ்சம் ‘டிலே’யாகும். அப்படி நீங்க செலக்ட் பண்றவளுக்கு நாங்க உடனே ‘டெஸ்டிங்’ ஆரம்பிச்சுடுவோம். பரவாயில்லையா? என்று கச்சிதமாக ‘விற்பனை’ செய்தாள் அந்த டாக்டர்.
இதையெல்லாம் கேட்டதும் அந்த இடத்தில் மேலும் உட்காரப் பிடிக்காமல், நெளிந்தார் ராகவன். ‘இதென்ன வியாபாரம்’? ‘அடுத்தவரின் ஏழ்மையை தனக்கு சாதகமாக்கிக் கொண்டு ஒரு விற்பனை…இதற்கு வாடகைத்தாய் என்று பெயர் வேறு’..சிந்தித்தவர் சட்டென எழுந்தார்….மேஜையிலிருந்த தங்களது ஃ பைலை எடுத்துக்கொண்டு, எதுவுமே பேசாமல் கிளம்பினார். அகிலாவும் ஏமாற்றத்தில் அவரைப் பின்தொடர்ந்தாள்.

அறையை விட்டு வெளியேறியதும் பெரிய மனப்புழுக்கத்திலிருந்து மீண்டு வந்தது போலிருந்தது அகிலாவுக்கும். அங்கே காத்திருக்கும் கர்ப்பிணிப் பெண்களைக் கண்டதும் அவளின் மனத்துள் பரிதாபம் ஏற்பட்டது. கொஞ்சம் கூட அன்போ, பாசமோ இல்லாமல் வெறும் பணத்துக்காக கர்ப்பத்தை சுமக்கும் யாரோ ஒரு ஹிந்திக்காரி பெற்றுத்தரும் குழந்தையை எப்படி ஏற்றுக் கொள்வது? என்ற கேள்வி அவளுள் எழுந்தது.

அங்கிருந்து வெளியேறி காரில் ஏறப்போன அகிலாவின் காலடியில், நிறைமாத ஜானகி, ‘அம்மா’ என்று கண்ணீருடன் விழுந்தபோது, முதலில் என்ன செய்வதென்றே அறியாமல் திகைத்தாலும் சட்டென்று அவளைத் தூக்கி நிறுத்தி ஆதரவாக கட்டிக்கொண்டாள் அகிலா. அவளுக்குள் தாய்மை பொங்கி வழிந்தது.
அதைக்கண்ட ராகவன், காரின் பின் கதவைத் திறந்து விட, அங்கு ஜானகியை அமரச் செய்துவிட்டு, அவளது கதையைக் கேட்டதும், அகிலாவுக்குத் தூக்கி வாரிப் போட்டது. இதே நிலைமை தனக்கும் நடந்திருந்தால்……

மனைவியின் மனநிலையை அறிந்து கொண்ட ராகவன், அகிலா..உன் நம்பிக்கை வீண் போகலை.ஆண்டவன் மகளோடு பேரக்குழந்தையும் சேர்த்தே நமக்கு கொடுத்துட்டாங்க. ஜானகியை நல்லாப் பார்த்துக்கோ என்கிறார்.
அதைப் புரிந்து கொண்ட ஜானகி, அவரைப் பார்த்துக் கண்ணீர் மல்க, ‘அப்பா…ரொம்ப நன்றிப்பா’ என்கிறாள்.

அகிலாவின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் வழிய ஆரம்பித்தது.
மூவரின் மனம் நிறைந்த நிம்மதியோடு அங்கிருந்து கார் புறப்பட்டது.
அதே சிக்னலில், மீண்டும் அந்தச் சிறுவன் ‘தொட்டில் பொம்மையோடு’ இவர்களின் காரை நெருங்கவும், ராகவன் ஜன்னல் கதவைத் திறக்கிறார்.

Series Navigation“மதுரையின் மணிக்குரல் மங்கயர்க்கரசி”மருத்துவக் கட்டுரை சுவாசக் குழாய் அடைப்பு நோய்
author

ஜெயஸ்ரீ ஷங்கர்

Similar Posts

Comments

  1. Avatar
    இலக்கியா தேன்மொழி says:

    ஒரு விற்பனை…இதற்கு வாடகைத்தாய் என்று பெயர் வேறு’//

    பயணாளர் சேவை என்பதனை கச்சிதமாக சொல்லும் கதைக்கரு… தொடருங்கள் ஜெயஷிரி அவர்களே.. அடுத்த பகுதியை வாசிக்க ஆவல் மிகுக்கிறது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *