வைரமணிக் கதைகள் – 10 ஓட்டங்களும் இலக்குகளும்

2
0 minutes, 40 seconds Read
This entry is part 7 of 14 in the series 5 ஏப்ரல் 2015

மூன்று பேர் மட்டும்தான் உட்கார்ந்திருந்தோம். நான், ஒரு வயது முதிர்ந்த மெடிகல் ரெப்ரஸென்டேடிவ். ஸ்டூலின் மீது உட்கார்ந்திருந்த அட்டெண்டர் பையன். மற்றபடி விஸிட்டர் பெஞ்ச் காலி.

 

நான் இங்கே வரும்போது மணி பன்னிரண்டரை. அப்போதே மெடிகல் ரெப்ரெஸன்டேடிவ் உட்கார்ந்திருந்தார்.

 

நுழைகிற சமயத்தில் நாலைந்து நோயாளிகள்தான் இருந்தார்கள். கடைசி நோயாளி டாக்டர் அறைக்குள் நுழையும் போது சரியாக மணி 12.55 ஏறக்குறைய நாற்பது நிமிஷம்.

 

என் வேலை மணி பார்ப்பதல்ல. ஸர்ஜிகல் இன்ஸ்ட்ருமெண்ட்ஸ், புதிதாக அறிமுகம் செய்யப்பட்டிருக்கிற ஆஸ்பத்திரி சாமான்களை டாக்டர்களுக்கு ஐஸ் வைத்து, சோப் போட்டுத் தள்ளப்பட வேண்டிய பொருள்களின் ஏரியா ஸேல்ஸ்மேன் வேலை.

 

எனினும் காலம் ஒரு முக்கியமான யூனிட். இந்த டாக்டர் பெரிய புள்ளி என்றார்கள். அஞ்சாறு நோட்டுக்கு ஆர்டர் வாங்கி விடலாம் என்ற ஆசையில்தான் நாற்பது நிமிஷமாகக் காத்துக் கொண்டிருக்கிறேன்.

 

டாக்டர் இரண்டு மணிக்கு விட்டால் இரண்டே கால் இரண்டரைக்குள் ‘லஞ்ச்’ முடித்துக் கொண்டு டாக்ஸி பிடித்து பஸ் ஸ்டாண்ட் போய்விடலாம் என்ற நப்பாசையோடு உட்கார்ந்திருக்கிறேன்

.

இந்த வார ஷெட்யூல்படி டி.வி. மலை, வேலூர் முடித்தாக வேண்டும். போன சனிக்கிழமை கடலூர்.

 

ஹெல் ஆஃப் எ ஜாப். பெரிசா போணியாகவில்லை. என்னுடைய ஏரியா பெரிசு, நார்த் சௌத் என்று இரண்டு ஆற்காடும் பார்க்க வேண்டும்.

 

நான் ‘மெடிகல் ரெப்’பைப் பார்த்தேன். பொறாமையாக இருந்தது. அவர்களுக்கெல்லாம் அவ்வளவு பெரிய ஏரியா இருக்காது. என் மாதிரி இராட்சஸப் பாய்ச்சல் பாய்கிற மாதிரி ஓடத் தேவையில்லை.

 

நான் பார்ப்பதை அவர் கவனித்து விட்டார்.

 

சினேகிதமில்லாமல் ஒரு புன்முறுவல் செய்தார். ‘மெகானிகல்’ வரும்போது கவனித்தேன். என் வருகையை அவர் ரசிக்கவில்லை. மனத்திற்குள் தோள்களை உலுக்கிக் கொண்டேன்.

 

ஒரு ஸேல்ஸ்மேனின் வருகையை இன்றைய பொருளாதாரத்தில் யார் ரசிக்கப் போகிறார்கள்? குறிப்பாக இன்னொரு ஸேல்ஸ்மேன்! ஒய் ஷுட் ஐ கேர்?

 

ஜூலை பதினேழில் எனது கால் நூற்றாண்டு முடிந்துவிட்டது. பாரத தேசத்திலுள்ள சகல பாங்குகளும் என் சேவையை நிராகரித்து விட்டன.

 

இரண்டு முறை க்ரூப் ஒன். இரண்டு முறை ஐ.ஏ.எஸ் எழுதிப் பார்த்து விட்டேன். எனது அன்பான முதிய மருத்துவப் பிரதிநிதி அவர்களே, இன்னும் ஒரு வருஷம் கழிந்து விட்டால் நீங்கள் என்னை ரசிக்காததைக் கண்டு கொள்ள மாட்டேன்.

 

பையன் ஊர் ஊராக லாட்ஜ்களில் தங்கிக் கொண்டிருக்கிறான் என்று வீட்டில் பெண் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த தைக்கு மேல் தாங்காது.

 

அப்புறம்… உங்கள் மாதிரியே சாயம் மங்கிய பாண்ட்… தொந்தி, சந்தேகப் பார்வை… கொஞ்சம் வயசானால் இதே மாதிரி சோடா பாட்டில் மூக்குக் கண்ணாடி.

 

இதே மாதிரி இரைக்கு அலைகின்ற சந்தேகமிக்க தீவிரம். எல்லாம் வந்துவிடும்.

 

பை காட்ஸ் க்ரேஸ்… ஓ. என்.ஜி.சி. தேர்வு எழுதியிருக்கிறேனே அதில் என் ‘ஸ்டார்’ ஜொலித்து விட்டால் இந்த ரெப்ரஸென்டேடிவ் பையை மவுண்ட் ரோட் அண்ணா ஸ்கொயரில் ஆகாசத்தில் தூக்கித் தூக்கிப் போட்டுக் காட்ச் பிடித்துவிட்டு எங்கள் எஸ்.பி.டி. (சேல்ஸ் ப்ரமோஷன் டைரக்டர்)யிடம் கன கம்பீரமாக நடந்து சென்று கை குலுக்கிவிட்டு விடை பெறுவேன்.

 

“மிஸ்டர் மெடி ரெப்! ஐ வில் ஃப்ளை இன் தி ஸ்கை. ஹலோ பை த பை… உமக்கு எத்தனை பொண்ணு?”

 

கடைசி பேஷண்ட் போன முதல் பத்து நிமிஷம் என் மனசு பாட்டுக்கு இப்படி ‘ஸ்கிப்பிங்’ ஆடிக் கொண்டிருந்தது.

 

மெடி – ரெப், ‘எப்ஸம்ஸால்ட்’ சாப்பிட்ட மாதிரி என்னை ஒரு முறைப் பார்த்தார்.

 

அட்டெண்டர் பையனை ஒருமுறை பார்த்தார்.

 

“ரொம்ப நேரமாறதே!” என்று இருவருக்கும் பொதுவாக முனகினார்.

 

நான் அந்தப் புகார் அட்டெண்டருக்காக என்று ஒதுங்கிக் கொண்டேன். அந்த அட்டெண்டரும் அதை ஏற்றுக் கொண்டான்.

 

“உள்ளே போனவர் முனிசிபல் சேர்மன்.”

 

“வர நேரமாகும்னு சொல்லு.”

 

“சொல்ல முடியாது.”

 

“டாக்டர் எத்தனை மணிக்கு சாப்பிடப் போவார்?”

 

டாக்டர் சாப்பாட்டு நேரத்தில் இவர் வந்து மாட்டியது இதுதான் முதல் முறை என்பதை ஊர்ஜிதம் செய்து கொண்டேன்.

 

அடுத்த ஊர்ஜிதம் இவரும் இன்னும் சாப்பிட வில்லை என்பது. பாவம், வயசானவர். வீட்டிலே இருந்திருந்தால் இந்நேரம் சாப்பிட்டு விட்டு சின்னதாக ஒரு குட்டித் தூக்கம் போட்டிருப்பார்.

 

“கரெக்டா ரெண்டுக்குக் கௌம்பிடுவார்!”

 

“ரெண்டு வரையிலும் இருப்பாரா?”

 

கேட்கிற கேள்வியைப் பார்த்தால் வெளியே போய் லஞ்ச் முடித்துக் கொண்டு வருவார் போல் தோன்றியது. எனக்கு மனசு இளகிவிட்டது.

 

எவ்வளவு பசியோ? மனுஷன் என்னைப் பார்த்துச் சினேகிதமாகப் புன்னகை செய்யா விட்டால் போகிறார்.

 

இந்த வயசான காலத்திலே ஸாம்பிள் சுமை தூக்கிக் கொண்டு அலையற சிரமத்துக்கு டயத்திலே சாப்பிட வேண்டாமோ!

 

மெடிகல் ரெப் என்னை மீண்டும் திரும்பிப் பார்த்தார். என் பரிவை மனத்திற்குள் ஒரு ஜிப் போட்டு மூடிவிட்டு விஸிட்டர்ஸ் பெஞ்ச் கடந்து நீண்ட ஆளோடிக்கப்புறம் தெரிகிற, இந்த டிஸ்பென்ஸரியை ஒட்டிய, ஸைட் விண்டோ திறந்த வெற்றிலைப் பாக்குக் கடையைக் கவனித்தேன்.

 

கலர் கலராக பானங்கள் நிரம்பிய புட்டிகள் தெரிந்தன. எனக்கு தாகமெடுத்தது.

 

“நீங்களும் மெடிக்கலா?” என்றார் அவர்.

 

நான் திரும்பினேன். “இல்லே… ஸர்ஜிகல் இன்ஸ்ட்ருமெண்ட்ஸ்.”

 

என் பதில் அவர் முக இறுக்கத்தைத் தளர்த்திப் புன்னகையைச் சினேக பூர்வமாக்கியது. நான் போட்டி அல்ல.

 

“எந்தக் கம்பெனி?”

 

“ஸ்மித் டேல். நீங்க?”

 

“ப்ளாக் ஷீப்.”

 

“க்ளாட் டு மீட் யூ… ஐ ஆம் சுரேஷ்”

 

“நான் சுதர்சனம்” என்றார் அவர்.

 

பரஸ்பரம் கைகுலுக்கினோம்.

 

“ரொம்ப சர்வீஸ் போலேருக்கே?” என்றேன்.

 

“ஸில்வர் ஜூபிளி ஆயிடுத்து.”

 

ஒரு மனிதன் தனக்குப் போட்டியல்ல என்று தீர்மானமாகும்போது தான் இப்போதெல்லாம் மற்றொரு மனிதனின் பூட்டுகள் திறக்கின்றன.

 

சுதர்சனம் வெள்ளையாகச் சிரித்தார். ஹவ் நைஸ்! ஒரு நிமிஷத்துக்கு முன்னாடி இவரால் இவ்வளவு ஆத்மார்த்தமாக நிர்மலமாகச் சிரிக்க முடியும் என்று நான் எதிர்பார்க்க வில்லை.

 

‘சேர்மன் உள்ளே போயிருக்கார்! எப்ப வர்றாரோ?”

 

“போன கவுன்சில்லே நடந்ததையெல்லாம் விளக்கமாக வர்ணித்துக் கொண்டிருப்பார்” அட்டெண்டர் பையனுக்காக நான் ஆங்கிலத்துக்குத் தாவினேன்.

 

சுதர்சனம் ரொம்ப ‘ரிஸப்டிவ்’ ஆன மனுஷன்தான், அனுபவித்துச் சிரித்தார். பசி நேரத்தில் அவரைச் சிரிக்க வைக்க முடிந்ததற்காக நான் சந்தோஷப்பட்டேன்.

 

இது போதும். பிஸினஸில் தொடர்ந்து ஜோக் அடிப்பது தகாது.

 

“அவர் எப்போ வந்தா என்ன? நீங்க மொதல். ஐ வில் வெய்ட், டேக் யுவர் ஓன் டைம்” என்று அவருக்கு ஒரு சலுகை ‘வெய்ட்டேஜ்’ கொடுத்தேன்.

 

சுதர்சனம் பரிபூரணமாக நிம்மதி யுற்றார்.

 

“ரொம்ப தாகமா இருக்கு.”

 

“எனக்கும் தான்!”

 

அட்டெண்டர் பையன் தண்ணீர் வேண்டும் என்று நாங்கள் கேட்போம் என எதிர்பார்த்த பாணியில் பார்த்தான்.

 

நான் சுதர்சனத்திடம் ஒரு மாற்று யோசனை சொன்னேன்.

 

“தோ, வெளியிலே ஒரு பங்க் கடை இருக்கே. போய் ஏதாவது ஒரு ‘டிரிங்க்’ குடிச்சுட்டு வருவோமா?”

 

“அதுக்குள்ளாற சேர்மன் வந்துட்டா?” என்று சந்தேகப்பட்டார்.

 

“டவ்ட்ஃபுல். இப்பத்தான் பாதி கவுன்சில் மீட்டிங் ஆயிருக்கும்.”

 

அவர் சிரிப்பை அடக்கிக் கொண்டு எழுந்தார். அவர் தான் முதலில் நடந்தார்.

 

கூடுமான வரை வேகம். மீண்டும் எனக்கு அந்த வேகம் மனத்தை நெருடிற்று.

 

இரண்டு கோல்ட் ஸ்பாட்.

 

நான்தான் சில்லறை கொடுத்தேன். அவர் முயற்சி பலிக்கவில்லை.

 

குடித்து முடித்த பிறகுதான் அது ஆரம்பமாகியிருக்க வேண்டும். அவர் அப்போதே மார்பை லேசாகத் தடவிக் கொண்டார்.

 

நான் அதை ஸீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை.

 

“ப்ளாக் ஷீப்ல சமீபத்திலே ஒரு இண்டர்வியூ நடந்ததில்லை?”

 

“ஆமாம்.”

 

“என் ப்ரண்ட் ஒருத்தன் அதிலே கலந்துண்டான்!”

 

டைப்ரைட்டிங் மெஷினுக்குக் ‘கவர்’ போட்டு மூடிய மாதிரி சுதர்சனம் முகம் மாறிவிட்டது. மனுஷன் மறுபடியும் பூட்டிக் கொண்டு விட்டார்.

 

“என்ன பேரு?”

 

“நிர்மல்குமார்.”

 

“சேப்பா… ஒரு ஸ்போர்ட்ஸ்மன் பாடியோட சுருட்டை முடியா.”

 

“எக்ஸாக்ட்லி. அவனேதான்!”

 

அவர் முகம் ஸ்பஷ்டமாக மாறி விட்டது. கொஞ்சம் திருதிருவென்று முழி.

 

“ஒங்க ஏரியா நார்த் ஆற்காட்டா ஸார்?” என்றேன்.

 

“ஏன்… ஏன்… ஏன் கேக்கறீங்க?” என்று அவர் பதறினார்.

 

“ஒண்ணுமில்லே. அவன் நார்த் ஆற்காட் தான் கெடைக்கும்கிற மாதிரி சொன்னான்.”

 

“அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் வந்துடுத்தா?” என்று பதற்றம் தணியாமல் கேட்டார் சுதர்சனம்.

 

“ரெண்டு மூணு மாசம் ஆகும்னான். வெயிட்டிங் லிஸ்டில வச்சிருக்காங்களாம்.”

 

சுதர்சனம் இப்போது என் தோள்மேல் கை போட்டார்.

 

“மிஸ்டர் சுரேஷ்! ஒங்க ‘ப்ரெண்ட்’ ரொம்ப சூட்டிகையான ஆள். இதில வந்து ஏன் மாட்டறார். நெறைய ஸ்போர்ட்ஸ் அண்ட்கேம்ஸ் சர்ட்டிபிகேட்டெல்லாம் வச்சிருந்தாரே.”

 

“ஆமாம்… எங்கெங்கேயோ அப்ளை பண்ணியிருக்கான். சார்… சும்மா ஒரு ‘டைம் கேப்’புக்காகத்தான் வர்றான்.”

 

சுதர்சனத்தின் கை என் தோள் மேலிருந்து நகர்ந்து என் இடது கையை மெதுவாகப் பற்றியது.

 

“இந்த வேலை லோலோன்னு வெயில் மழையின்னு பார்க்காமே, நாய் மாதிரி ஊர் ஊரா அலையற வேலை.“மோர் ஓவர், ஆல் தி டாக்டர்ஸ் ஆர் ஸ்ட்ரேன்ஜ். எவ்வளவு கமிஷன் கொடுத்தாலும் திருப்தியில்லே; இந்தக் கம்பெனிக்கு இதயமே கெடையாது சார்.”

 

என் நாக்கு துறுதுறுத்து விட்டது.

 

“கம்பெனிக்கு எப்படி சார் இதயம் இருக்கும்?”

 

சுதர்சன் நான் கொடுத்த ‘கட்’டைச் சாதகமாக்கிக் கொண்டு தொடர்ந்தார்.

 

“கரெக்ட்… யூஸீ… இருபத்தி அஞ்சு வருஷம் ரத்தத்தையும் வேர்வையையும் ஊத்தி ஒழைச்சுருக்கேன். தே ஹவ் நாட் ப்ரமோட்டட் மீ. இன்னும் ரிடயர்மெண்டுக்கு ரெண்டு வருஷம் இருக்கு. இப்பவே வாலண்டரி ரிடயர்மெண்டுக்குச் சொல்லி ப்ரஷர்ஸ்…”

 

நான் அவரது அங்கலாய்ப்பைப் பரிதாபத்தோடு கேட்டேன். அவர் ஒரு முறையும் நான் ஒருமுறையும் சேர்மன் வெளியே வந்துவிட்டாரா என்று உள்ளே எட்டிப் பார்த்துக் கொண்டோம்.

 

“நான் குடுத்துடுவேன் ஸார்! இன்னும் ஒரு பொண்ணு இருக்கு. மத்ததெல்லாம் ‘டிஸ்போஸ்’ ஆய்ட்டது. ஒண்ணே ஒண்ணு. வேலையிலே இருக்கிறச்சேயே வர்ற வரன்லாம் கீழ்ப்பார்வை பார்த்துண்டு வர்றது! ‘ரிடயர்’ ஆய்ட்டா கேக்கவே வேண்டாம். ஜஸ்ட் பல்லைக் கடிச்சுண்டு அந்தப் பொண்ணு போற வரைக்கும் இருந்துடணும்னு பார்க்கறேன்.”

 

இவர் கம்பெனி – அந்த ‘ப்ளாக் ஷீப்’ இவரை மூட்டை கட்டத் துடிப்பது நியாயம் என்று பட்டது. “யூ ஸீ… கம்பெனி எதற்கு சார் வச்சிருக்கான்? சுறுசுறுன்னு அவன் ‘ப்ராடெக்ட்’ விக்கத்தான். அதுவும் மெடிகல் கம்பெனிகளிலேயோ… மை காட்… போட்டி ஜெட் வேகத்திலே போயிண்டிருக்கு.”

 

ஹெல் வித் யூ மிஸ்டர் சுதர்சனம்! உம்ம கடைசிப் பொண்ணுக்குக் கல்யாணம் ஆகிற வரைக்கும் நார்த் ஆற்காட் ஸேல்ஸ் காத்திருக்கணும்னு ‘ப்ளாக்-ஷீப்’ பொறுத்திருக்குமா?

ராட் ரேஸ் ஸார்… ராட் ரேஸ்!

 

கொஞ்சம் நிர்மல்குமாரிடம் சொல்லி ஊடுருவி விடாமல் ஒதுங்கிக் கொள்ளுமாறு எங்கே என்னைக் கேட்டு விடுவாரோ என்று எனக்குக் கவலையாக வந்தது.

 

இப்போது அவர் முகத்தில் லேசாக வியர்வை.

 

அந்த வியர்வையைப் பார்க்கும் போது என் பயம் கவலை எல்லாம் பின் வாங்கிவிட்டது. கொஞ்சம் இரக்கம் வந்தது.

 

மிஸ்டர் சுதர்சனம் கூட ஒரு ‘ராட்ரேஸில்’ ஈடுபட்டிருக்கிறார்.

 

இவருடைய வின்னிங் போஸ்ட் கடைசிப் பெண் கல்யாணம், கையில் ஒரு ரெப்ரஸென்டேடிவ் பையுடன் அதற்குத்தான் இவர் இந்த ஓட்டம் ஓடி இப்படி வியர்த்துக் கொண்டு நிற்கிறார்.

 

“தோ சேர்மன் வந்துட்டார் சார்!” என்று இரண்டாவது முறை எட்டிப் பார்த்த சுதர்சனம் ஒரு துடிப்போடு சொல்லிவிட்டு வேகமாக உள்ளே ஓட்டமும் நடையுமாக நுழைந்தார்.

 

அவர் சுயசரிதையை நான் சற்றும் எதிர்பார்க்க வில்லை. இது ஏன் என்னிடம் சொல்லப் படுகிறது என்று சந்தேகப்படும் போது, அவர் இரண்டாம் முறை மார்பைத் தடவினார். அப்போது அது தீவிரமடைந்திருக்கக் கூடும். அங்கும் அதை நான் ஊகிக்கத் தவறி விட்டேன். “எதுக்குச் சொல்றேன்னா…?” என்று மிஸ்டர் சுதர்சனம் ஒருமுறை இழுத்ததும் பளிச்சென்று விஷயம் புரிந்தது.

 

எனது நண்பன் நிர்மல்குமாரை இவர் வேறு வேலை தேடிக் கொள்ளச் சொல்கிறார். குறைந்த பட்சம் இவர் கடைசிப் பெண்ணுக்குக் கல்யாணம் ஆகும் வரை இவர் ஸ்தானத்தில் ஊடுருவ வேண்டாமென்று கேட்டுக் கொள்கிறார்.

 

“நீங்களும் ஸேல்ஸ்மேன்! உங்க கம்பெனி ஸ்மித்டேல். அற்புதமான கம்பெனி சார்! ஜெனரஸ் பீப்பிள் கேள்விப்பட்டிருக்கேன்!”

 

நான் உள்ளுக்குள் சிரித்துக் கொண்டேன். நிர்மல் குமாரை இவர் ஸ்மித்டேலுக்கு விண்ணப்பிக்கச் சொல்கிறாரா?

 

இவரைப் பார்க்க எனக்கு கூச்சமாக வந்தது. இருபத்தைந்து வருஷம் ஓடியாடி மருந்து விற்கிற இந்த மனிதருக்குத் தம் அச்சத்தை இப்படி வெளிப்படையாக ஒரு கூச்சம் இல்லாமல் எப்படி வெளிப்படுத்த முடிகிறது.

 

ஸேல்மென்ஷிப் எவ்வளவு நவீனமாகி விட்டிருக்கிறது. இப்போது! பிஸினஸ் சைக்காலஜியே இவருக்குத் தெரியாது என்று தோன்றியது.

 

நான் நிதானமாகப் பின் தொடர்ந்தேன்.

 

டாக்டர் அறையின் ‘புஷ்டோரை’ மிஸ்டர் சுதர்சனம் தள்ளிய போதோ அல்லது அதற்கு முன்பாகவோ எப்போது அது நடந்தது என்பதை என்னால் இன்னும் நிதானிக்க முடிய வில்லை.

 

ஸ்டூலில் உட்கார்ந்திருந்த அட்டெண்டர் பையன் திடுக்கிட்டு எழுந்து நின்று விட்டான்.

 

மிஸ்டர் சுதர்சனம் ஒரு கையில் தமது ரெப்ரஸென்டேடிவ் பேக்காடு, ஒரு கை டாக்டரின் அறைக் கதவைத் தள்ளியபடி நிற்க, நெடுஞ்சாண் கிடையாகக் குப்புற விழுந்து விட்டார்.

 

அவர் விழுந்த சத்தம் கேட்டுவிட்டு “என்ன… என்ன…?” என்று பதறிக் கொண்டு வெளியே வந்த டாக்டர் நமது அறைக் கதவை முழுக்கத் திறக்க உள்ளே இழுத்த போதுதான் கதவின் கைப்பிடியைப் பிடித்திருந்த சுதர்சனத்தின் கை தரையில் விழுந்தது.

 

வெளியே வந்த டாக்டர் கதவை உள்ளே மூட விடாமல் தள்ளிக் கொண்டு “அந்தக் கையை மடக்கு மேன்!” என்று அட்டெண்டர் பையனைப் பார்த்துச் சீறினார்.

 

ஐந்து நிமிஷத்திற்குள் நானும் அட்டெண்டரும் சுதர்சனத்தைப் புரட்டி டாக்டர் அறைக்குள்ளிருந்த ‘கன்ஸல்டிங் பெட்’டில் கொண்டு போய்க் கிடத்தினோம்.

 

“இவர் ஷர்ட்டையெல்லாம் லூஸ் பண்ணுங்க. கேசவா, அந்த ஃபேனைப் போடு. என்னமா வியர்த்திருக்கு… ஐ திங்க் திஸ் ஈஸ் எ ஸ்ட்ரோக்!”

 

டாக்டர் விறுவிறுவென்று தம் நாற்காலியருகே போய் ஸ்டெத்தை மாட்டிக் கொண்டு வந்து அவரைப் பரிசோதித்தார்.

 

ரப்பர்ப் பட்டையை சுதர்சனம் கையில் சுற்றிவிட்டு ‘ப்ரஷர்’ பார்த்தார்.

 

“லோ பி.பி… மை குட்னஸ் ஃபிஃப்டிதான் இருக்கு… மிஸ்டர்…?” என்று என்னைப் பார்த்தார் டாக்டர்.

 

“ஐ ஆம் சுரேஷ் ஃப்ரம் ஸ்மித் டேல் ஸர்ஜிகல் இன்ஸ்ட்ருமெண்ட்ஸ் அண்ட் ஹாஸ்பிடல் அக்ஸெஸரீஸ்.”

 

“ஓ.கே… இவர் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ஏதாவது ‘ஹெல்த் கம்ப்ளெயிண்ட்ஸ்’ சொன்னாரா?”

 

“ஒண்ணும் சொல்லலே ஸார்! ரெண்டு பேரும் இப்பத்தான் ஒரு கூல் ட்ரிங்க் சாப்பிட்டோம். தென்… தென்…” என்ற பிறகு தான் எனக்குச் சட்டென்று ஞாபகம் வந்தது.

 

“அவர் மார்பை ரெண்டு தரம் தடவி விட்டார் சார்.”

 

“தேர் இட் ஈஸ்… புவர் ஓல்ட் சாப்! இந்த வயசிலே இவருக்கு என்னத்துக்கு இந்த ஓவர் ‘ஸ்ட்ரெய்ன்’ எல்லாம்?”

 

டாக்டரின் ஸிரிஞ்சில் இரண்டு முறை வெவ்வேறு வண்ணமுள்ள இரண்டு திரவங்கள் ஏறின.

 

மிஸ்டர் சுதர்சனத்தின் வலது புஜத்தில் ஒன்றும் இடது புஜத்தில் ஒன்றுமாக இரண்டு இஞ்செக்ஷன்.

 

சுதர்சனம் தம் சுய நினைவிற்குப் பூரணமாகத் திரும்பி விட்டார். என்னையும் டாக்டரையும் மாறி மாறிப் பார்த்தார்.

 

அவர் பார்வையில் ஏதோ ஒரு தவிதவிப்பு. ஒரு குற்ற உணர்வு. என்னைக் காட்டிக் கொடுத்து விடாதீர்கள் என்ற கெஞ்சல்.

 

“டாக்டர்… ப்ளீஸ்… இப்ப நான் மயங்கி விழுந்த விஷயத்த யார்ட்டயும் சொல்லிடாதீங்க. விஷயம் கம்பெனிக்குப் போயிடும். யூ ஸீ என் ரிடயர்மெண்டுக்கு இன்னும் ரெண்டு வருஷம் இருக்கு” என்று கெஞ்சத் தொடங்கினார் சுதர்சனம்.

 

டாக்டரின் முகம் சுருங்கிற்று.

 

 

+++++++++++++++++++++++++++

 

Series Navigationமிதவை மனிதர்கள்‘சார்த்தானின் மைந்தன்’
author

வையவன்

Similar Posts

2 Comments

  1. Avatar
    Dr.G.Johnson says:

    கதையைக் கொண்டு செல்லும் விதம் நன்று. கதைக் கரு கலையாமல் கதையை முடித்துள்ள விதமும் சிறப்பாக உள்ளது. வாழ்த்துகள் வையவன் அவர்களே…… டாக்டர் ஜி. ஜான்சன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *