காசு வாங்கியும் வாங்காமலும் ஓட்டுப் போட்ட விவசாயிகளுக்கு பெப்பே

author
1
0 minutes, 3 seconds Read
This entry is part 2 of 26 in the series 26 ஏப்ரல் 2015

farmerசோமா

நண்பர்களுக்கு வணக்கம்.

அலைபேசி அறிமுகமான பின்பு உறவினர்களுக்கு காகிதக்கடிதம் எழுதுவது நின்று போனது. சமூக வலைதளங்கள் விரித்த வலையில் மின்னஞ்சல்கள் எழுதுவது வீண் என்று தோன்றி எழுதுவதை மறந்துவிட்டேன். இன்று நான் இந்தக் கடிதம் எழுதுவது ஒரு அனிச்சையான செயல். அங்கே தொட்டு இங்கே தொட்டு இறுதியில் பிச்சைக்காரனின் தட்டில் விழும் சில்லரைகளைத் திருடுவதில் இந்த மோடி அரசாங்கம் காட்டும் அக்கறையை எண்ணி இந்தக் கடிதம் பிறந்திருக்கிறது. “மோடி” மந்திரத்தில் பாரதம் சேமம் பெறாதா? என எண்ணி ஓட்டுப் போட்டவன், பாரதம் சேதமுறுவதைக் கண்டு வெளியுறும் கண்ணீர்த்துளிகளே இந்த வார்த்தைகளாக.

ஆர்.பி.ஐ நேற்று இரவு அனுப்பிய வேளாண் வங்கிக்கடன் பற்றிய சுற்றறிக்கையை படித்துவிட்டு இன்றைக்கு வங்கிகள் அனைத்தும் இனிப்பு வழங்கிக் கொண்டாடவில்லை அவ்வளவே. வங்கி உயரதிகாரிகள் அனைவரின் முகத்திலும் புதிப்பொலிவு. கடந்த இருபதாண்டு காலமாக வங்கிகளுக்குக் கடிவாளமாக இருந்த வேளாண்கடன் பற்றிய கொள்கையில் மிகப்பெரிய மாற்றம். கடந்த மாதம் ரெபோ ரேட்டில் 0.50%மும் எஸ்.எல்.ஆரில் 0.50%மும் குறைத்து அறிக்கை விடுத்த ஆர்.பி.ஐக்கு வங்கிகள் தங்களுடைய பேஸ் ரேட்டைக் குறைக்காமல் அல்வா கொடுத்துவந்தன. கடந்தவாரம் ஆர்.பி.ஐ எச்சரிக்கைக் கொடுத்த பின்னால்தான் 0.25% முதல் 0.15% வரைக்கும் தங்களுடைய பேஸ் ரேட்டை வங்கிகள் குறைத்தன. ஒருமாத காலம் இந்த 0.25% வட்டியைக் குறைக்காததன் மூலம் குறைந்தபட்சம் ரூபாய் 250 கோடி முதல் ரூபாய் ஆயிரம் கோடி வரை வங்கிகள் அவற்றின் சக்திக்கேற்றவாறு இலாபக்கணக்கு எழுதின. ஆர்.பி.ஐ-ன் எச்சரிக்கைக்கு சலாம் போட்டு வாரம் ஒன்று முடியவில்லை, அதற்குள் நேற்று இரவு ஒரு பேரதிர்ச்சியை விவசாயிகளுக்கு அள்ளி வழங்கி, புதுடில்லி-ஜந்தர் மந்தரில் தற்கொலைசெய்து கொண்ட கஜேந்திரசிங்குக்கு அர்ப்பணித்துள்ளது.

https://www.rbi.org.in/Scripts/BS_CircularIndexDisplay.aspx?Id=9688

நம்மில் வங்கியில் பணிபுரியாதவர்களுக்கு சிறு விளக்கம்:

1. முந்தைய இருபாதாண்டுகால ஆர்.பி.ஐ அறிவுறுத்தல்படி வங்கிவழங்குகிற மொத்தக்கடனில் 18% விவசாயிகளுக்குக் கடன் வழங்க வேண்டும். அப்படி 18% வழங்காதபட்சத்தில் எத்தனை சதவீதம் குறைவாக இருக்கிறதோ அதை மத்திய அரசின் ஊரக வளர்ச்சித் திட்டங்களுக்கு 5% முதல் 6% வரையிலான குறைவான வட்டிக்கு வழங்க வேண்டும். ஆனால் அதையே விவசாயிகளுக்கு 11% முதல் 15% வரை வழங்கும்போது வங்கியின் இலாபம் அதிகரிக்கும். எனவே வங்கிகள் அரசின் முதலீடுகளில் பணம் செலுத்தாமல் விவசாயிகளுக்கு 18% கட்டாயமாக வங்கிக்கடன் வழங்கிவந்தது. ஆனால் வங்கிகள் 18%ஐ குப்பனுக்கும் சுப்பனுக்கும் வழங்கியதாக கணக்குக்காட்டி பெரும் விவசாயிகளுக்கும் வணிகர்களுக்கும் மட்டுமே வழங்கிவந்தது.

2. விளைபொருட்களை கச்சாப் பொருளாகக் கொண்டு செயல்படும் நிறுவனங்களை விவசாயிகளாக வங்கிகள் சித்தரித்து கணக்குக்காட்டின. எடுத்துக்காட்டு: எம்.ஆர்.எஃப் டயரின் மூலப்பொருள் இரப்பர் ஆதலால் அந்நிறுவனத்திற்கு வழங்கும் கடனை விவசாயக்கடன் எனக் கொள்ளலாம். பத்து ஆண்டுகள் கடந்து விழித்துக்கொண்ட ஆர்.பி.ஐ விவசாயக்கடனை நெறிமுறைப்படுத்தி நேரடியாக விவசாயிகளுக்கு 14%மும் மறைமுகமாக விளைபொருளைக் கொண்டு செயல்படும் நிறுவனங்களுக்கு 4%மும் என எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் அறிவித்தது.

3. பின்னர் வங்கிகள் பெரும் விவசாயிகள், உணவுப்பதனிடும் ஆலைகள், அரிசி/எண்ணைய்/மாவு ஆலைகளுக்கு மொத்தம் மொத்தமாய் வழங்கி தங்களுடைய 18% ஐக் கணக்குக்காட்டின. பின்னர் விழித்துக் கொண்ட ஆர்பிஐ ஆலைகளுக்கு வழங்கும் வேளாண்கடன் அளவைக் குறைத்து அதிகபட்சமாய் ரூபாய் இரண்டு கோடி மற்றும் ஐந்து கோடி எனத் தரம் பிரித்து வழங்கச்சொன்னது. பின்னர் ஆலைகளுக்கு வழங்கும் கடன்களை மறைமுக வேளாண்கடன் (4%) என அறிவித்தது. வங்கிகள் 14% கடனை விவசாயிகளுக்கு மட்டுமே வழங்கவேண்டும் எனும் நிலை 2011 ல் வந்தது. வங்கிகள் கண் பிதுங்கின. விவசாயிகளும் அவர்களைச் சமாளிக்கும் திறன் படைத்த வேளாண் வங்கி அலுவலர்களும் சிறப்புக் கவனம் பெற்றார்கள். வங்கிகளுக்கு வேளாண் அலுவலர்கள் அதிகம் தேவைப்பட்டார்கள்.

4. தொடந்து விவசாயிகளின் அவலக்குரல் ஒழிக்கவே 2013ல் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவை ஆர்பிஐ எடுத்தது. உணவுப்பதனிடும் ஆலைகள், அரிசி/எண்ணைய்/மாவு ஆலைகளுக்கு வழங்கும் கடன்களை விவசாயக்கடனாக ஏற்றுக் கொள்ளமுடியாது என அறிவித்தது. சிட்டா, பட்டா, அடங்கல் என அனைத்துச் சான்றுகளும் கட்டாயம் ஆக்கப்பட்டன. வங்கிகள் மேலும் விழிபிதுங்கின. நேரடியாக விவசாயிகளுக்கு மட்டுமே கடன் வழங்க வேண்டிய கட்டாயம். ஆனாலும் சாமர்த்தியசாலிகள் நிறைந்த வங்கிகள் பெரும் முதலாளிகளுக்கு அவர்களது விவசாயம் சாராத இதர வியாபாரங்களுக்கு போலியான சிட்டா, பட்டா, அடங்கல் மூலம் தனிநபர்க்கடனாக வாரி இறைத்து தங்களைத் தற்காத்துக் கொண்டன. 2014ல் சிறு/குறு விவசாயிகளுக்குக் கடன் போய்ச்சேரவே இல்லை.

5. அதனால் சிறு/குறு விவசாயிகளின் நலம் கருதி ஆர்பிஐ நேற்று ஒரு முடிவு எடுத்துள்ளது. நேரடி (14%) மறைமுக (4%) விவசாயக்கடன்கள் என்பதை நீக்கிவிட்டு சிறு/குறு விவசாயிகளுக்கு 8%மும் மற்றவைகளுக்கு 10%மும் என அறிவிப்பு அளித்திருக்கிறது. ஆக வங்கிகள் தற்போது மற்றொருக் கணக்குக் காட்ட வேண்டியுள்ளது. தாங்கள் அளித்துள்ள 8%க் கடன் ஐந்து ஏக்கருக்கும் குறைவான விவசாயிகளுக்கு மட்டுமே வழங்கப்பட்டது என உறுதிப்படுத்த வேண்டும். எமகாதக வங்கி அலுவலர்களுக்கு இது ஒரு பெரியவிசயம் இல்லை. கிராமங்களில் வழங்கியிருக்கும் நகைக்கடன்களை முறைப்படுத்தினாலே 8%க்கும் அதிகமாக வரும்.

6. மீதம் 10% ம் கடனை எப்படி வழங்க வேண்டும்? எந்த வருத்தமும் இல்லை. எந்த கடன் வழங்கினாலும் அதை இந்த 10%க்குள் கொண்டு வந்துவிடலாம். உணவுப்பதனிடும் ஆலைகள், அரிசி/எண்ணைய்/மாவு ஆலைகளுக்கு அதிகபட்சமாய் ரூபாய் நூறு கோடி வரைக்கும் வழங்கலாம். வேளாண் இடுபொருள் நிறுவனங்களுக்கு ரூபாய் நூறு கோடி வழங்கலாம். விவசாயிகளின் இரத்தம் உறிஞ்சி அவர்களிடம் அடிமாட்டு விலைக்கு வாங்கி குடோனில் பத்திரமாய் பதுக்கிவைத்து பின்னர் விலை வைத்து விற்கும் கார்ப்பரேட்/அரசியல்வாதி/பெரும்செல்வந்தர்/சினிமா&கிரிக்கெட்நட்சத்திரங்களுக்கு அதிகபட்சமாய் ரூபாய் நூறு கோடி வரை வழங்கலாம். இதன்மூலமாய் விவசாயக் கடனாக தனிநபருக்கு ரூபாய் நூறு கோடி வரைக்கும் வழங்க சாத்தியங்கள் உள்ளன.

7. கார்ப்பரேட்டின் வருமான வரியை 30%ல் இருந்து 25%ஆகக் குறைத்த மத்திய அரசு, விவசாயிகளுக்கு அளித்து வந்த 3% வட்டி மானியத்தை நிறுத்திக் கொள்வதாக இரண்டு நாட்களுக்கு முன்னர் சுற்றறிக்கை விடுத்திருக்கிறது. விவசாயி செத்தா நமக்கென்ன? பொழச்சா நமக்கென்ன? கார்ப்பரேட்கள் கடித்துக் கொடுக்கும் நாற்பது பெர்சண்டு கட்சிக்கும், வெறும் அறுபது பெர்சண்ட் நிறுவனங்களுக்கும் போய்ச்சேரட்டும். எனக்கு என் சம்பளம் முக்கியம். மொத்தத்திற்கு 8% விவசாயக்கடன் கணக்குக் காட்டினால் போதுமென வங்கிகளின் பழுவைக் குறைத்திருக்கும் மோடி கட்சி வாழ்க. வங்கிகளுக்கு இது ஒரு பொற்காலம்.

காசு வாங்கியும் வாங்காமலும் ஓட்டுப் போட்ட விவசாயிகளுக்கு பெப்பே. ரூபாய் மூன்று கோடி கொடுத்து வேளாண் கல்லூரி அனுமதி வாங்கி நடத்தும் கல்வி வள்ளல்களுக்கும் அந்தக் கல்லூரியில் பத்து இலட்சம் கொடுத்து சேர்ந்த மாணவ மாணவிகளுக்கும் பெப்பே. இனி எந்த வங்கியும் உங்கள் சேவை கருதி கல்லூரியின் முன்னால் வந்து நிற்காது தோழா! வயல்காட்டில் நீங்கள் கால் வைத்துத்தான் ஆக வேண்டும்.

எமகாதக வங்கி அலுவலன்
சோமா

Series Navigationஹரணியின் ‘பேருந்து’ – ஒரு சன்னலோரப் பயணம்.அபிநயம்
author

Similar Posts

Comments

  1. Avatar
    ஷாலி says:

    //அங்கே தொட்டு இங்கே தொட்டு இறுதியில் பிச்சைக்காரனின் தட்டில் விழும் சில்லரைகளைத் திருடுவதில் இந்த மோடி அரசாங்கம் காட்டும் அக்கறையை எண்ணி இந்தக் கடிதம் பிறந்திருக்கிறது. “மோடி” மந்திரத்தில் பாரதம் சேமம் பெறாதா? என எண்ணி ஓட்டுப் போட்டவன், பாரதம் சேதமுறுவதைக் கண்டு வெளியுறும் கண்ணீர்த்துளிகளே இந்த வார்த்தைகளாக.//

    காமா,சோமா என்று கண்டமாதிரி எழுதாதிங்கே! நம்ம பிரதமர் மோடி, நாட்டு வளர்ச்சியை உயர்த்தவேண்டும் என்று நாடு நாடாக அலைகிறார்.நம்ம பிரதமருக்கு அம்பானியும் ஒண்ணுதான் அப்பாவி குடியானவனும் ஒன்னுதான்.ஆனா வெளி நாட்டுக்கு போகும்போது மட்டும் அதானியும்,அம்பானியும்தான் கூட போக முடியும்.ஏனெனில் வளர்ச்சியை அவர்கள்தானே திட்டமிடுகிறார்கள்.வெவரமில்லாமே வெவசாயியைப்பற்றி கண்ணீர் விடாதீர்கள்.வெவசாயிக்குத்துத்தான் டெல்லியில் ஏகப்பட்ட மரம் வளத்து வச்சுருக்கம்ல்ல…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *