சாந்தா தத்தின் “வாழ்க்கைக் காடு” ஒரு பார்வை

This entry is part 12 of 26 in the series 26 ஏப்ரல் 2015

புலம்பெயர் வாழ்வின் இருப்பையும் இருப்பின்மையையும் ஈழத்து எழுத்தாளர்கள் வலிமையுடன் பதிவு செய்திருப்பார்கள். நம் தேசத்தில் இருக்கும் ஒரு மாநிலத்தில் பிரிவு ஏற்படும்போது வர்க்கபேதம் ஜாதிபேதமின்றி மக்களுக்குள்ளே ஏற்படும் பிரிவையும் வேறுவழியின்றி யதார்த்தத்தை ஏற்றுக் கொள்ளும் வலியையும் அப்படியே தன்னுடைய எழுத்துக்களில் பதிவு செய்திருக்கிறார் எழுத்தாளர் சாந்தாதத் தன்னுடைய வாழ்க்கைக்காடு என்ற சிறுகதைத் தொகுப்பில்

35 ஆண்டுகள் ஆந்திராவிலேயே வசித்து வருவதால் ஆந்திரா தெலுங்கானா பிரிவினை பற்றியும் அதன் பின்னான வாழ்க்கை பற்றியும் கதைகளில் கூறியுள்ளார். ஐந்து மொழிகளில் புலமை பெற்றுள்ள இவர் பல சிறுகதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்பு 300 க்கும் மேலான படைப்புகளைக் கொடுத்துள்ளார். இவரது மொழியாக்க நூல்கள் பத்து வெளியாகி உள்ளன.

ஆந்திரா தெலுங்கானா பிரிவினையை ஒட்டியே பல கதைகள் அமைந்திருந்தாலும் கணவன் மனைவி புரிந்துகொள்ளல், அவர்களுக்குள் ஏற்படும் ஊடல் பிணக்கு, இணக்கம் அனைத்தையுமே அழகாக சிறுகதை ஆக்கியுள்ளார். அதுமட்டுமல்ல தான் பயணம் செய்த அனைத்து இடங்களையுமே சிறுகதைக்குள் கொண்டுவந்து விவரித்திருப்பது அழகு.

ஆந்திரா தெலுங்கானா பிரச்சனையை மையமாகப் பேசும் கதைகளில் ’நகர்வு;’ ஒரு சித்தாளும் வியாபாரியும் பரஸ்பரம் ஒருவரைப் பற்றி ஒருவர் கவலை கொள்வதும் நம்பிக்கை தெரிவிப்பதுமாக முடிகிறது. ’கேட்கப்படாத கேள்வி’யும் ’அவனு’ம் குண்டு வெடித்த அதிர்ச்சி ரகம். ’ஏரிக்கரை மேலே’ தகுதிக்கான வேலை கிடைக்காமல் அலைந்து அது கிடைக்காததால் ஜீவனம் நடத்த எந்த வேலையையும் செய்யத் தயாராய் இருக்கும் இன்றைய இளம் தலைமுறையின் எடுத்துக்காட்டு. இதுவும் ஹுசை சாகர் லேக்கில் நடப்பதை எழுதி இருப்பது அங்கே இருந்த உணர்வைத் தோற்றுவித்தது.

அதேபோல் தெலுங்கானா பிரிவினையோடு மத்தியதர வாழ்க்கையை அதன் வலியை உணர்த்தும் ‘இன்னொரு வாழ்க்கை’ தீபா’வலி’ மனைவியை மட்டம் தட்டும் ’காலக் கடிகாரம்,வெளிநாட்டு வேலையின் பாடுகளை உணர்த்தும் ’சிலந்தி’. சொந்த சகோதரனையே நக்ஸலைட் என்று பத்ரிக்கையில் காண நேர்ந்த அவலமான ‘பயணங்கள்’ கணவன், மனைவி இருவரும் தம் பெண்ணுக்கு வேறு வேறு மாப்பிள்ளையை முடிக்கச் சொல்லி வேண்டும் ‘விண்ணப்பம்’, தன் வாழ்வின் வலியை இயல்பாய் காட்டில் வசிக்கும் பங்காரு எதிர்கொள்ளும் ’வாழ்க்கைக்காடு’.எளியவர்க்கு இரங்கும் ‘மழை’ ஏழைக்கு இரங்காத ‘மணற்புயல்’, பெண்சிசுக்கொலை தடுக்கும் ‘உதிரிப்பூக்கள்’. பயணங்களில் சில சமயம் எதிர்பாராமல் அடுத்தடுத்து அமையும் சந்திப்பாய் .அநேகர்’, தன்னைப் பற்றி மட்டுமே எண்ணிவந்து தன் கணவனின் ஆசைகளும் தெரியவந்து மாற முயற்சிக்கும் சாருமதியின் ‘இலைகளும் பூக்களும்’ கல்வி மறுக்கப்பட்டு குழந்தைத் தொழிலாளியாக்கப்பட்ட ஒரு குழந்தையின் வேதனையை உணர்த்தும் ‘ஒட்டகவண்டி’ என ஆசிரியர் மனித மாண்புகளைத் தொட்டுச் செல்கிறார் ஒவ்வொரு கதையிலும்.

மிகவும் வித்யாசமான கதை புள்ளிகளும் அரைப்புள்ளிகளும். குழந்தைப் பேறைப் பற்றி இன்றைய இளம்பெண்களின் நிலையை ( இது உலகளாவிய மனவியல் ப்ரச்சனை என்றும் சொல்லலாம் ) வெளிப்படுத்தியது. அதே போல ‘மீண்டும்’ சிறிது புன்னகையைத் தோற்றுவித்த கதை என்றாலும் கணவனும் மனைவியும் மார்ஸ் & வீனஸில் இருந்து வந்தவர்கள் என்பதற்கு எடுத்துக்காட்டாய் இருக்கிறது .சில கதைகள் மனைவியின் எண்ண ஓட்டத்தை மையப்படுத்தியும் சில கதைகள் கணவனின் எண்ண ஓட்டத்தை மையப்படுத்தியும் , சில கதைகள் கணவனை அற்புதமாய்ப் புரிந்துகொண்ட மனைவியின் பார்வையிலும் சில கதைகள் மனைவியைப் புரிந்துகொள்ளவே கொள்ளாத கணவனின் பார்வையிலும் அமைந்திருக்கின்றன. மிகச் சிறப்பான கதை ’எக்கரையும் பச்சை இல்லை’. ஆந்திரா தெலுங்கானா கர்நாடகா நதிநீர் என அனைத்துப் ப்ரச்சனைகளையும் ஒரு கதைக்குள் விவரித்த விதம் அருமை.

இவரது சிறுகதைகள் எப்போதுமே அழகான வர்ணனைகளோடு ஆரம்பமாகிறது. முடிவில் அடுத்து என்ன என்பதை வாசகர்களிடமே விடுகிறார் சாந்தாதத். ஆந்திரா தெலுங்கானா பிரச்சனைகளை மட்டுமல்ல நதி நீர் தொடர்பாக கர்நாடகத்தியும் தொட்டுள்ளார். மனிதநேயமிக்க கதைகள் இவருடையவை. மொத்தத்தில் அருமையான தொகுப்பு. படித்துப் பாருங்கள்.

நூல் :- வாழ்க்கைக் காடு (சிறுகதைத் தொகுப்பு )

ஆசிரியர் :- சாந்தா தத்

பதிப்பகம் :- திண்ணை வெளியீடு

விலை :- ரூ.80/-

Series Navigation“மதத்தை விட்டு வெளியேறு அல்லது நாட்டை விட்டு வெளியேறு “ஞானக்கூத்தன் கவிதைகள் “கடற்கரையில் சில மரங்கள்” தொகுப்பை முன் வைத்து…
author

தேனம்மை லெக்ஷ்மணன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *